ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, April 17, 2020

#28 - போஜனரசவிபாக சந்தி

#28 - போஜனரசவிபாக சந்தி


பேளலேனு சமீரதேவனு
காலகூடவனுண்டு லோகவ
பா1லிஸித தத்தா3சனோர்வனு அம்ருதனெனிஸித3 |
ஸ்ரீலகுமிவல்ல4 ஷுபாஷுப4
ஜாலக1ர்மக3ளும் பனுபசய
தே3ளிகெ13ளவகி3ல்ல வெந்திகு3 ஸ்வரஸக3ள பி3ட்டு1 ||28


சமீரதேவனு = வாயுதேவர்
காலகூடவனு = காலகூட என்னும் விஷத்தை
உண்டு = குடித்து
லோக = உலகங்களை
பாலிஸிதனு = காப்பாற்றினான்
தத்தாஸனோர்வனு = இப்படி பகவத் தாசர்களில் ஒருவரான வாயுதேவர் விஷத்தைக் குடித்து
அம்ருதனெனிஸித = அமிர்த என்னும் பெயரினைப் பெற்றான்
பேளலேனு = இப்படியிருக்கையில், பரமாத்மனின் விஷயத்தில் சொல்வதற்கு என்ன இருக்கிறது?
ஸ்ரீலகுமிவல்லப = ஸ்ரீலட்சுமிபதி
ஷுபாஷுப ஜாலகர்மகள = மக்கள் செய்யும் பாவ புண்ணிய கர்மங்களை
உம்பனு = அவர்களுக்கு பலன்களைக் கொடுப்பதற்காக ஏற்றுக் கொள்கிறான்
அவகெ = அந்த பரமாத்மனுக்கு
உபசய = தேகமானது வளர்வதோ
ஏளகெ = தேகமானது குறைவதோ, என்றும் இல்லை
ஸ்வரஸகள பிட்டு = ஸ்வரூப சம்பந்தமான ஆனந்தரூபமான சுவைகளை விட்டு வேறெந்த பதார்த்தங்களையும், தான் வளர்வதற்கோ, குறைவதற்கோ, அவன் ஏற்றுக்கொள்வதில்லை. 
பரமாத்மனை பூஜித்து, அவனுக்காக சமர்ப்பிக்கப்படும் பதார்த்தங்களை அந்த பரமாத்மன் ஏற்றுக்கொள்வது, பக்தர்களின் நலனுக்காகவே தவிர அதனால் அவனுடைய தேகம் வளர்வதோ, குறைவதோ ஆவதில்லை என்கிறார். 

தேவதைத்யர்கள் சேர்ந்து, அமிர்தத்திற்காக பாற்கடலை 
கடைந்தபோது, காலகூட என்னும் விஷம் வெளிவந்து, உலகத்தையே தன் சக்தியால் எரித்துக் கொண்டிருக்க, தேவதைகள் பயந்து ருத்ரதேவரை வணங்கி, அந்த விஷத்தை அவரே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று வேண்டினர். ருத்ரரும் அந்த விஷத்தைக் குடிக்க வந்து கொண்டிருந்தார். ஸ்ரீபரமாத்மன், பாற்கடலைக் கடையும் விஷயத்தில் உதவுவதற்காக அங்கேயே இருந்தாலும், அவர் ஏன் அதைக் குடிக்கவில்லை என்றால், பாகவத 8ம் ஸ்கந்த தாத்பர்யத்தில்:

ருத்ரஸ்யயஷஸோர்த்தாய ஸ்வயம் விஷ்ணுர்விஷம்விபு: |
நஸஞ்சஹ்ரே சமர்த்தோபிவாயும் சோசி ப்ரஷாந்தயே ||

ஸ்ரீபரமாத்மனுக்கு விஷத்தை முறியடிக்கும் சக்தி இருந்தாலும், ருத்ரருக்கு நீலகண்டன் என்னும் பெயரைக் கொடுப்பதற்காகவும், ருத்ரருக்கும், வாயுதேவருக்கும் இருக்கும் தாரதம்யத்தைக் காட்டுவதற்காகவும் தான் விஷத்தைக் குடிக்கவில்லை. 

இதே விஷயத்தில், பாரத தாத்பர்ய நிர்ணய 10ம் அத்தியாயம் 14ம் ஸ்லோகம்:

கலே:ஸ்வரூபந்தததீவது: ஸஹம்வராத்விதாது: ஸகலைஸ்ச துஸ்ப்ருஷம் |
கரேவிதுத்யாஸ்தபலம் விதாயததௌஸ கிஞ்சித்கரிஷாயவாயு: ||
ஹரே:கரஸ்பர்ஷ பலாத்ஸ சஞ்ஞாமவாப நீலோஸ்யகலஸ்ததாஸீத் ||

அமிர்த மதன காலத்தில் வெளிவந்த விஷம் எப்படிப்பட்டது என்று தெரிவிக்கிறார். 

அது கலியின் ஸ்வரூபத்தைக் கொண்டிருக்கிறது. யாராலும் தடுக்க முடியாததாக இருந்தது. பிரம்மதேவரின் வரம் இருந்தாலும்கூட அதை தொடக்கூட முடியாததாக இருந்தது. இத்தகைய விஷத்தை வாயுதேவர், மிகச்சிறிதளவு தன் கையில் போட்டுக்கொண்டு, நன்றாக உறிஞ்சி, அதன் வேகத்தைக் (வீர்யத்தைக்) குறைத்து பின், ருத்ரதேவரின் கையில் கொடுத்தார். ருத்ரதேவர் அதைக் குடித்த உடனேயே, அது அவர் கழுத்திலேயே தங்கி, அவர் மூர்ச்சையாகி விட்டார். ஸ்ரீபரமாத்மன், ருத்ரரை தன் கையால் தடவிக்கொடுக்க, அவர் சுயநினைவை அடைந்தார். அந்த விஷத்தால் அவர் கழுத்து கருப்பாகிவிட, நீலகண்டன் என்ற பெயர் வரக் காரணமானது. 

அத த்வதாக்ஞாம் புரதோ நிதாய நிதாயபாத்ரே தபனீயரூபே |
ஸ்வயம்தவனிர்மத்ய பலோபபன்னம் பபௌஸவாயுஸ்ததுதாஸ்ய ஜீர்ணம் ||

பிறகு, ஸ்ரீபரமாத்மனின் ஆணைப்படி, அந்த விஷம் முழுவதையும் ஒரு தங்கப் பாத்திரத்தில் போட்டுக் கொண்டு, அப்படியே குடித்து விட்டார். அது அவருக்கு ஜீர்ணம் ஆனது. மிகச்சிறிய அளவிலான விஷத்திற்காக ஸ்ரீபரமாத்மன் ருத்ரரை காப்பாற்ற வேண்டியிருந்தது. மிச்சமிருந்த அனைத்து விஷத்தையும் குடித்த வாயுதேவர், எந்த பிரச்னைக்கும் ஆளாகாமல், அமிர்த என்னும் பெயரைப் பெற்றார். 

இதே விஷயத்தையே, தாசராயர், இங்கு உதாரணம் கொடுத்திருக்கிறார். இப்படியாக, வாயுதேவர் காலகூட என்னும் விஷத்தை உண்டு, உலகத்தைக் காப்பாற்றினார். பரமாத்மனின் தாசர்களில் ஒருவரான வாயுதேவரே விஷத்தை குடித்ததால் ‘அமிர்த’ என்னும் பெயரைப் பெற்றபிறகு, லட்சுமிவல்லபனான ஸ்ரீபரமாத்மனின் விஷயத்தில் சொல்வதற்கு என்ன இருக்கிறது? 

மக்களின் பாவ புண்ணியாதி கர்மங்களை தான் ஏற்றுக்கொண்டு, த்வேஷிகளுக்கு த்வேஷ பலன்களைக் கொடுத்து, பக்தர்களுக்கு புண்ய பலன்களைக் கொடுக்கிறார். ‘ஷுபம் பவத்யஸௌ நித்யம் னாஷுபம் ஸஹரி: பிபேத்’ என்னும் பிரம்மசூத்ர பாஷ்யத்தின் வாக்கியத்திற்கேற்ப பாபிகளின் பாப கர்மங்களுக்கேற்ப அவர்களுக்கு பலன்களைக் கொடுக்கிறார். பக்தர்கள் செய்யும் பாப கர்மங்களை பஸ்மம் ஆக்குகிறார். புண்ய பலன்களை தான் உண்டு, அவர்களுக்கும் கொடுக்கிறார். ஆனால், நிஜ பக்தர்கள் பூஜைகளை செய்து, அறுசுவைகளுடன் அன்ன, பக்‌ஷ்ய, பழங்களைக் கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்கிறார். ஆனால் அவை தனது இந்திரிய ப்ரீதிக்காக அல்ல. 

‘யதா தரோர்மூல நிஷேசனேன த்ருப்யந்தி தத்ஸ்கந்த புஜோப ஷாகா:’ என்னும் பாகவத 14ம் ஸ்கந்த வாக்கியத்தின்படி, மரத்தின் வேரில் நீர் ஊற்றினால் எப்படி கிளைகள் வலிமை பெறுகிறதோ, அப்படியே நமக்கு ஆதாரனான பரமாத்மன், நம் தேகத்தில் இருந்து உணவினை உட்கொண்டால் மட்டுமே நமக்கு திருப்தி ஆகிறது. ஆகையால், நம் நலனுக்காகவே பரமாத்மன் உணவினை ஏற்றுக்கொள்கிறான். அவனே ஸ்வயம் அன்னமயன். அன்னத்தின் ரூபத்தில் தானே இருந்து, அதே அன்னத்தினால் தானே திருப்தியாகும் பரமாத்மனுக்கு நம் அன்னத்தினால் ஆவதுதான் என்ன? 

பாகவத 1ம் ஸ்கந்த 10ம் அத்தியாயத்தில்:
ப்ரத்யுத்யயு: ப்ரஜாஸ்ஸர்வா: பத்ருதர்ஷன லாலஸா: ||40
நதோப நீதபலயோரவேர்தீப மிவாத்ருதா: ||
ஆத்மாராமம் பூர்ணகாமம் நிஜலாபேன நித்யதா ||41

ஸ்ரீகிருஷ்ணன், ஹஸ்தினாபுரத்திலிருந்து புறப்பட்டு, தன் தேசமான ஆனர்த்த தேசத்திற்கு வந்து சங்க நாதத்தை செய்தான் என்னும் கதையின் விவரம்). ஸ்ரீகிருஷ்ணனின் வருகையை அறிந்த மக்கள் அனைவரும், தம் ஸ்வாமியைப் பார்க்கவேண்டும் என்னும் ஆசையினால், தேவையான பக்‌ஷ்ய போஜ்யாதிகளுடன், பூ பழங்களுடன் புறப்பட்டு, ஸ்ரீகிருஷ்ணன் இருக்கும் இடத்திற்கு வந்து அவனை வணங்கினர். அனைத்தையும் அவனுக்கு சமர்ப்பித்தனர். ஸ்ரீபரமாத்மன் ஸ்வரமணன். பூர்ணகாமன். தனக்கு எது வேண்டுமோ, அந்த வஸ்துவாக அவனே ஆகிறான். இப்படி, தன்னாலேயே தான் சுகம் அடையக்கூடிய பரமாத்மனுக்கு, இவர்கள் கொடுத்த பதார்த்தங்களால் ஆகும் பிரயோஜனம் என்னவென்று கேட்கவேண்டும். 

அதாவது, ‘ரவேர்தீபமிவ’ - சூர்ய நமஸ்காரம் செய்பவர்கள், ஜகத்பிரகாசனான சூரியனுக்கு ஒரு தீபத்தை ஏற்றுகின்றனர். அந்த தீபத்தால் சூரியனுக்கு எவ்வளவு பிரயோஜமோ, அவ்வளவே பலன், இவர்கள் கொடுத்த பதார்த்தங்களால் பரமாத்மனுக்கு ஆகிறது என்று சொல்கிறார். ஆகையால், ஸ்ரீபரமாத்மன், தன் பக்தர்கள் மகிழ்வதற்காகவே, எப்படி பெற்றோர் தன் குழந்தையின் கையில் வெற்றிலை பாக்கினைக் கொடுத்து, அதை தன் வாயில் போடுமாறு சொல்லி, அதன்மூலம் குழந்தையை மகிழ்விப்பரோ அது போல, நாம் கொடுத்ததை தான் ஸ்வீகரித்து, நம்மை மகிழ்விக்கிறான் என்று அறியவேண்டும். 

***

No comments:

Post a Comment