#11 - விபூதி சந்தி
பா4வ த்3ரவ்ய க்1ரியெக3ளெனிசுவ
ஈ வித3த்வைதத்ரயங்க3ள
பா4விஸுத சத்ப4க்தியலி ஸர்வத்ர மரெயத3லெ |
தா1வக1னு தா1னெந்து3 பிரதிதி3ன
ஸேவிஸுவ ப4குதரிகெ3 தன்னனெ
ஈவ கா1வ க்ருபாளு கரிவரகொ3லித3 தெரனந்தெ ||11
பாவ த்ரவ்ய க்ரியெகளெனிஸுவ = பாவாத்வைத, த்ரவ்யாத்வைத, க்ரியாத்வைத என்று புகழ்பெற்றிருக்கும்
ஈ வித = இந்த விதமான
அத்வைதத்ரயங்கள = மூன்று அத்வைதங்களை
பாவிஸுத = சிந்தித்தவாறு
ஸத்பக்தியலி = சாத்விக பக்தியினால் (எதையும் எதிர்பார்க்காத பக்தியால்)
சர்வத்ர = அனைத்து தேச, காலங்களிலும்
மரெயதலெ = மறக்காமல்
தாவகனு நானெந்து = உன்னவன் நான் என்று
ப்ரதிதிவஸவு ஸேவிஸுவ பக்தரிகெ = தினமும் வணங்கும் பக்தனுக்கு
தன்னன்னு = தன் நிஜரூபத்தை
ஈவ = அபரோக்ஷத்தில் காட்டுவான்
கரிவரகெ = கஜேந்திரனுக்கு
ஒலித தெரதந்தெ = தக்க சமயத்தில் காப்பாற்ற வந்ததைப் போல
க்ருபாளு = கருணாசமுத்திரனான ஸ்ரீஹரி
காவ = காப்பாற்றுவான்
முந்தைய பத்யத்தில் சொல்லியிருப்பதையே இங்கு விவரிக்கிறார்.
பாவாத்வைத, த்ரவ்யாத்வைத, க்ரியாத்வைத என்னும் மூன்று அத்வைதங்களை சிந்திக்க வேண்டும். நூல்களை நெய்ந்து எப்படி ஆடையாக செய்கிறார்களோ, அது தனித்தனியாக இருந்தால் நூல் எனவும், ஆடையான பிறகு அந்த நூல்களே குறுக்கும் நெடுக்குமாக இருந்தாலும், அதை நூல் என்று சொல்லாமல், ஆடை என்று சொல்வதைப் போல, இங்கு ஆடைக்கும் நூலுக்கும் எப்படி வித்தியாசம் இருக்கிறதோ, அதுபோலவே விஸ்வரூபனான ஸ்ரீபரமாத்மன் உலகத்தை நூல்களைப் போல, கண்டரூபியாக வியாபித்து, அகண்ட ரூபத்தினால் பிரபஞ்சமாக தோன்றுகிறான். ஆகையாலேயே, பரமாத்மனுக்கு விஸ்வ என்று பெயர். ஜீவருக்கும், பரமாத்மனுக்கும், நூலுக்கும் ஆடைக்கும் பேதம் இருப்பதைப் போல, பேதம் இருக்கிறது என்று நினைப்பதே பாவாத்வைத.
தான், தன் மனைவி மக்கள் ஆகியோர் செய்வது, பார்ப்பது என அனைத்து செயல்களும், ஒருவருக்கொருவர் செய்யும் உதவிகள் என்று நினைத்தவாறு, அவற்றை ஸ்ரீபரமாத்மனே செய்விக்கிறான் என்று, அனைத்து இடங்களிலும் இருக்கும் பகவத்ரூபங்களை ஒன்றாக சிந்திப்பதற்கு த்ரவ்யாத்வைத என்று பெயர்.
தான் செய்யும் அனைத்து கர்மங்களையும், தன்னில் இருந்து பரமாத்மனே செய்கிறான், செய்விக்கிறான் என்று சிந்தித்து, தன் ஸ்வாதந்த்ர்ய கர்மத்தை விட்டு, அனைத்தையும் பரமாத்மனுக்கே அர்ப்பிப்பதை க்ரியாத்வைத என்கிறோம்.
இது போல, மூன்றுவித அத்வைதங்களை சிந்தித்தவாறு, நிஷ்காமமான மற்றும் திடமான பக்தியினால், அனைத்து காலங்களிலும் (எப்போதும்) பரமாத்மனை மறக்காமல், ’ஸ்வாமி, நான் உன் தாசர்களில் ஒருவன்’ என்று பரமாத்மனை வணங்கினால், பரமாத்மன் அவருக்கு அபரோக்ஷத்தில் தரிசனம் அளிக்கிறான். ரூபாந்தரத்தில் பிரத்யட்சமாக வந்து, ஜகன்னாததாசர் ஆகியோருக்கு தரிசனம் அளித்ததைப் போல தரிசனம் அளிப்பான். முதலையைக் கொன்று யானையைக் காப்பாற்றியதைப் போல, ஆபத்துக் காலத்தில் மேற்சொன்ன பக்தர்களை காப்பாற்றுவான். ஆகையாலேயே, பரமாத்மனை கருணாளு என்கிறார்.
***
No comments:
Post a Comment