#12 - விபூதி சந்தி
பா3ந்த3ளவெ மொத3லாது3த3ரொளொ
ந்தொந்த3ரலி பூஜா ஸுசாத3ன
வெந்தெ3னிசுவ பதார்த்த2க3ளு ப3கெ3ப3கெ3ய நூதனதி3 |
ஸந்தணிஸி கொண்டி3ஹவு த்யானகெ
தந்தி3னிது சிந்திஸி சதா கோ3
விந்தனர்ச்சிஸி நோடு3 நலிநலிதா3டு கொண்டாடு ||12
பாந்தளவே = ஆகாயமே
மொதலாதுதரொளு = முதலான பஞ்சபூதங்களில்
ஒந்தொந்தரலி = ஆகாயம், வாயு, தேஜஸ், தண்ணீர், ப்ருத்வி இந்த ஐவரிலும்
பூஜா சுசாதன வெந்தெனிஸுவ = தேவரபூஜைக்கு சிறந்த சாதனங்கள் / பதார்த்தங்கள்
பகெபகெய = விதவிதமான
நூதனதி = புதிதாக
ஸந்தணிஸி கொண்டிஹவு = நிரம்பியிருக்கும்
த்யானகெ தந்து = அந்த பதார்த்தங்களை தியானித்து
இனிது சிந்திஸி = இந்த விதமாக சிந்தித்து
ஸதா = அனைத்து காலங்களிலும்
கோவிந்தன = வேதங்களால் புகழப்படும் ஸ்ரீபரமாத்மனை
அர்ச்சிஸி = பூஜித்து
நோடுதலி = கண்டு
நலிதாடு = நர்த்தனம் செய்
கொண்டாடு = ஸ்தோத்திரம் செய்
10ம் பத்யத்திலிருந்து, த்ரவ்யம், தேகம் ஆகியவற்றில் அகண்ட விபூதியை சிந்திக்க வேண்டுமென்றும், சித்த புத்தி ஆகியவற்றில், ஞானேந்திரிய கர்மேந்திரியங்களிலும்கூட பகவத் விபூதியை அறிந்து பூஜிக்க வேண்டும் என்று சொல்லி, 11ம் பத்யத்தில் பாவாத்வைத, க்ரியாத்வைத, த்ரவ்யாத்வைத என்று 10ம் பத்யத்தின் அர்த்தத்தை மேலும் விளக்கினார். இப்போது 10ம் பத்யத்தில் விடப்பட்ட பஞ்சமஹாபூதங்களில் அறியவேண்டிய விபூதியை விளக்குகிறார்.
பாந்தள என்றால் ஆகாயம் எனத் தொடங்கும் ஐந்து பஞ்சபூதங்கள். வாயு, அக்னி, நீர், பூமி இந்த ஐந்தினையும் சிந்திக்க வேண்டும். இவற்றில், ஒவ்வொன்றிலும் பற்பல விதமான புதுப்புது பூஜாசாதன பதார்த்தங்கள் இருக்கின்றன என்று நினைக்க வேண்டும். பூஜை என்றால், பிரதிமைகளை முன்னால் வைத்துக்கொண்டு, பூக்களால் அர்ச்சித்து பூஜிப்பது மட்டும் அல்ல. பூஜாசாதன த்ரவ்யம் என்றால், கந்த, புஷ்ப, நைவேத்தியம் என்று பொருள் அல்ல. மனதில் ஆகாயாதி பஞ்சபூதங்களின் உதவியுடன் கிடைக்கும் பூஜாசாதன பதார்த்தங்கள் பற்பல உண்டு. அவை புதிதுபுதிதாக கற்பனைக்கு வரும்.
அது எப்படியெனில்: ஆகாச தத்வம் நம் ஸ்ரோத்ர இந்திரியத்திற்கு சம்பந்தப்பட்டது. இதன் மாத்ரா குணம் கேட்பது (ஸ்ரவணம்). காதால் நாம் கேட்கும்போது சிறந்த உபன்யாசம், பெரியவர்கள் செய்திருக்கும் கன்னட கீர்த்தனைகள் ஆகியவற்றால் கர்ணானந்தம் கிடைக்கும்போது, இவை அனைத்தும் பகவத்பூஜை என்று நினைக்கவேண்டும். வாயு ஸ்தானம், நம் த்வக் இந்திரியம். அதன் குணம் ஸ்பரிசம். இதில் பெண்களின் ஸ்பரிசத்தையே சுகம் என்று நினைப்பவர்கள், இப்போது அல்ப சுகத்தை அனுபவித்து, பின்னர் கஷ்டப்படுவார்கள். ஆகவே, இதனை விரும்பாமல், த்வக் இந்திரியமானது, அவனின் பக்தர்களின் ஆலிங்கனத்திற்கே என்று சிந்திப்பது, அல்லது கிருஹஸ்தர்கள் தங்கள் துணைகளுடன் கூடுவது இந்திரிய சுகத்திற்கு என்று நினைக்காமல், பகவத் ப்ரீத்யர்த்தம் என்றும், சந்தான பிராப்தி என்பது பித்ரு ருணத்தை பரிகரித்துக் கொள்வதற்கும் என்று அறிந்து, இதுவும்கூட பூஜா சாதனை என்று சிந்திக்க வேண்டும்.
தேஜஸ் தத்வத்தின் ஸ்தானம் கண்கள். அதன் குணரூபம், பகவந்தனின் சலாசல பிரதிமைகளை பார்ப்பது, பகவத் பக்தர்களை பார்ப்பது. இவற்றிற்கு கண்களை பயன்படுத்துவதால், தேஜஸ்தத்வம் (அக்னி) பூஜாசாதனம் ஆகிறது. உதக தத்வத்தின் ஸ்தானம் நாக்கு. இதன் குணம் ரசம் (சுவை). பகவந்தனுக்கு நிவேதனம் செய்யப்பட்ட பதார்த்தங்களை உண்பதே பூஜாரூபம். ப்ருத்வி தத்வத்தின் ஸ்தானம் மூக்கு. இதன் குணரூபம், கந்த (முகர்வது). பகவந்தனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நிர்மால்யாதிகளை முகர்வது என்பது பகவத்பூஜை. இதற்கு சாதனம் பூ (Bhu) தத்வம். இன்னும் சொல்வதற்கு என்ன இருக்கிறது? இங்கு சிறிதே விளக்கியிருக்கிறோம். இதைப் போலவே, ஆகாசாதி ஒவ்வொன்று தத்வங்களும், அனேக வித பூஜாசாதனங்களையும், தத்தம் தகுதிக்கேற்ப (யோக்யதானுசார) புதிதுபுதிதாக விஷயங்களை அறிந்துகொண்டு, தியானம் செய்ய வேண்டும் என்று பாகவத 9ம் ஸ்கந்தம், அம்பரீஷோபாக்யானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஸவைமன: க்ருஷ்ணபதாரவிந்தயோர் வஜாம்ஸி வைகுண்ட குணானுவர்ணனே |
கரைஹரேர்மந்திர மார்ஜனாதிஷுஸ்ருதே சகாராச்யுத ஸத்யதோதயே ||
முகுந்த லிங்கலயதர்ஷனே த்ருஷௌதத்ப்ருத்ய காத்ரஸ்பர்ஷேங்கஸங்கம் |
ப்ராணஞ்ச தத்பாதஸரோஜஸௌரப ஸ்ரீமத்துலஸ்யாம் ரஸனாந்த தர்பிதே ||
பாதௌஹரே: க்ஷேத்ரபதானுஸர்பணி ஷிரோஹ்ருஷீகேஷ பதாபிவந்தனே |
காமந்து தாஸ்யே நது காமகாம்யயா ததோத்தம ஸ்லோகஜனாஸ்ரயாம்ரதிம் ||
அம்பரீஷன் தன்
மனதினை பகவந்தனின் பாதாரவிந்தங்களிலும்,
வாக்குகளை வைகுண்டபிரதனான ஸ்ரீஹரியின் குணங்களை வர்ணிப்பதற்கும்,
கைகளை ஹரியின் வீட்டில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்வதற்கும்,
காதுகளை பகவத் கதைகளைக் கேட்பதற்கும்,
கண்களை பகவந்தனின் பிரதிமாதிகளை பார்ப்பதற்கும்,
தேகத்தை பக்தர்களை ஆலிங்கனம் செய்வதற்கும்,
மூக்கினை ஸ்ரீபரமாத்மனின் பாத கமலங்களுக்கு அர்ப்பித்த ஸ்ரீதுளசி ஆகியவற்றை முகர்வதற்கும்,
நாக்கினை பரமாத்மனின் நைவேத்தியைத்தை உண்பதற்கும்,
பாதங்களை தீர்த்த க்ஷேத்திர சஞ்சாரத்திற்கும்,
தலையை பரமாத்மனை நமஸ்கரிப்பதற்கும்,
பயன்படுத்திக் கொண்டிருந்தான்.
காம என்றால் ஆசை. தான் பகவந்தனின் தாசன் ஆகவேண்டுமென்ற காமம் மட்டும் வைத்திருந்தான். ரதி என்றால், உத்தம பக்தர்களின் சங்கமே சுகம் என்று நினைப்பது. ஆகையாலேயே ஸ்ரீஹரி, அம்பரீஷனின் பாதுகாப்பிற்காக, யாருக்கும் கொடுக்காத சக்ராயுதத்தை அவனுக்குக் கொடுத்தான்.
இதைவிட பூஜை என்றால் வேறு என்ன? பூஜா சாதனங்களாக இதைவிட பயன்படுத்தக்கூடியவை வேறு என்ன உள்ளது? ஆகையாலேயே தாசராயர், ஆகாசாதிகளில் புதிதுபுதிதான பூஜாசாதனங்களை சிந்திக்க வேண்டும் என்றார். இப்படியாக, அனைத்து காலங்களிலும் சிந்தித்தவாறு, பரமாத்மனை பூஜித்தால், அதிலிருந்து கிடைக்கக்கூடிய மகிழ்ச்சி எப்படி இருக்கும் என்பதை அனுபவத்திற்குக் கொண்டு வந்தவர்களுக்கு மட்டுமே தெரியுமே தவிர, அனைவருக்கும் இது சாத்தியமில்லை. ஆகையால், தாசராயர் அர்ச்சித்துப் பாருங்கள் என்றார். மகிழ்ச்சியுடன் குதித்து ஆடு. ஸ்தோத்திரம் செய். இதைவிட பெரிய சாதனை வேறு எதுவும் இல்லை.
***
No comments:
Post a Comment