ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, February 29, 2020

#23 - கருணா சந்தி

#23 - கருணா சந்தி

சேதனாசேதன விலக்‌ஷண
நூத1ன பதார்த்த23ளொளகெ33லு
நூத1னதி1 சுந்த3ரகெ1 சுந்தர ரசக்கெ1 ரசரூப |
ஜாத1ரூபோத3ர ப4வாத்யரோ
ளாததப்ரதி1ம ப்ரபா4வ த4
ராத1தொ3 ளெம்மொடனெ ஆடுத1லிப்ப1 நம்மப்ப1 ||23

சேதனாசேதன விலக்‌ஷண = ஜீவர்கள், ஜட பதார்த்தங்கள் இவற்றிலிருந்து வேறுபட்டும், 
நூதன பதார்த்ததளொளகெ = புதிதாகத் தோன்றும் பொருட்களில்
பலு நூதன = புத்தம் புதிதானவன்
சுந்தரகெ = அழகான பதார்த்தங்களுக்கு
சுந்தர = அழகானவன்
ரஸகெ = பொருட்களுக்கு
ரஸரூப = அந்த பொருட்களின் ரூபம் கொண்டவன்
ஜாத ரூபோதர = பிரம்மன், தங்கத்தை வயிறாகக் கொண்டவன்
பவாத்யரொளு = ருத்ரதேவர் ஆகியோரில்
அதத = நிலைத்திருப்பவன்
அப்ரதிமப்ரபாவ = அபாரமான மகிமையுள்ளவன்
தராதளதொளு = பூமண்டலத்தில்
நம்மப்ப = நம்மைப் படைத்த ஸ்ரீபரமாத்மன்
எம்மொடனெ = நம்முடன்
ஆடுதலிப்ப = ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பான்

பொருள்:

நம்மைப் படைத்தவனான ஸ்ரீபரமாத்மன், ஜீவ ஜட பதார்த்தங்களிலிருந்து வேறுபட்டவன். புதிய பதார்த்தங்களில் புதிதாக இருப்பவன். அழகான பதார்த்தங்களில் அழகாக இருப்பவன். திரவ பதார்த்தங்களில் திரவமாக இருப்பவன். பிரம்ம ருத்ரர்களில் நிலைத்திருப்பவன். அபாரமான மகிமையுள்ளவன். ஆனாலும், அவன் எப்போதும் நம்முடன் ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பவன். 

சிறப்புப் பொருள்:
சேதன, அசேதன பதார்த்தங்களிலிருந்து பரமாத்மன் வேறுபட்டவன் என்றபிறகு, அவன் எந்த குழுவில் சேர்ந்திருப்பவன் என்னும் சந்தேகம் வரலாம். பரமாத்மனுக்கு சேதனத்வம், பாவத்வம், நித்யத்வம் ஆகியவை தன்னுடைய ஸ்வாதந்த்ர்யத்தாலேயே வருகிறது. அந்த ஸ்வாதந்த்ர்யத்தினாலேயே, ஜீவ ஜட பதார்த்தங்களிலிருந்து வேறுபட்டவனாக இருக்கிறான். பாகவத 8ம் ஸ்கந்தத்தில் :

ஸவைனதேவாஸுரமர்த்ய திர்யக்னஸ்த்ரி நஷண்டோன புமான்யஜந்து: |
நாயம் குண: கர்மன ஸன்னவானன்னிஷேத சேஷோஜயதாதசேஷ: ||

அந்த பரமாத்மன் தேவதையும் அல்ல, அசுரனும் அல்ல, மனுஷ்யனும் அல்ல, ஜந்துவும் அல்ல, ஸ்த்ரியும் அல்ல, புருஷனும் அல்ல, நபும்சகனும் அல்ல, எந்த பிராணியும் அல்ல. அவன் பிராக்ருத குணரூபங்களைக் கொண்டவன் அல்ல. கர்மரூபனும் அல்ல. ஸத்-வஸ்துவும் அல்ல, அ-ஸத்-வஸ்துவும் அல்ல. அப்படியெனில் அவனது ஸ்வரூபத்தை என்னவென்று சொல்வது? என்று கேட்டால் மேலே சொன்னவற்றைத் தவிர வேறு என்ன பொருள் உள்ளதோ, அதுவே பகவத் ஸ்வரூபம். அதாவது, அப்ராக்ருத ஸ்வரூபமானவன் என்று பொருள். பரமாத்மன் எல்லா பொருட்களிலும் இருப்பவனாகையால் ‘அஸேஷன்’ என்று பரமாத்மனுக்கு பெயர் உண்டு என்கிறார் தாசராயர். இதனாலேயே, 'சேதனாசேதன விலக்‌ஷணனு' என்கிறார் தாசராயர். 

நூதன பதார்த்தகளொளகெ பலு நூதனதி
சுந்தரகெ சுந்தர ரஸகெ ரஸரூப

ஸ்ரீபரமாத்மன் அணுரேணு த்ருணகாஷ்டாதிகளில் அந்தந்த ரூபமாக, அந்தந்த உருவமாக, அதற்கு சம்பந்தப்படாமல் இருக்கிறான். ஆனால், அனைத்து பதார்த்தங்களின் முக்கிய குணங்கள் என்னவாக இருக்கிறதோ, அதுவே பகவத் ஸ்வரூபம் என்று நினைக்க வேண்டும். கீதை 7ம் அத்தியாயத்தில் :

ரஸோஹ மப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷி ஸூர்யயோ: |
புண்யோகந்த: ப்ருதிவ்யாஞ்ச தேஜஸ்சாஸ்மி விபாவஸௌ ||

ஹே அர்ஜுனா! நீரில் இருக்கும் சுவையை நான் என்று அறி. சூர்ய சந்திரரில் இருக்கும் ஒளியினை நான் என்று அறி. பூமியிலிருக்கும் மணத்தை நான் என்று அறி. நெருப்பில் இருக்கும் தேஜஸ் நானே. பலசாலிகளில் இருக்கும் பலமும் நானே என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன். இனிப்பு பொருட்களில் இருக்கும் இனிப்பு, அழகான பெண்களில் இருக்கும் அழகு அனைத்தும் பரமாத்மனே. அந்தந்த பதார்த்தங்களில் இருந்து, அவற்றின் ரூபாதிகளை அவற்றிற்குக் கொடுப்பதால், அந்த ரூப குணாதிகள் அனைத்தும் பரமாத்மனின் விபூதி என்று அறியவேண்டும் என்பதே இதன் பொருள்.

ஜாதரூபோதர பவாத்யதொள் ஆததப்ரதிம ப்ரபாவ - பிரம்ம ருத்ராதி அனைத்து தேவதைகளிலும் அந்தந்த ரூபமான வியாபித்திருக்கிறான். பாகவத 3ம் ஸ்கந்த தாத்பர்யத்தில் :

ஸ்வாயம்புவோ மனஸ்சைவ ப்ருதுஸ்சைவ அர்ஜுனாவபி |
பிரம்மசேஷாவிபா ருத்ர இந்த்ர ருஷ்யாதயஸ்ததா ||
விஷ்ண்வாவேஷயாதாஸ் ஸர்வேனது விஷ்ணு ஸ்வரூபகா இதி தத்வ நிர்ணயே ||

ஸ்வாயம்புவமனு, ப்ருது சக்ரவர்த்தி, கார்த்தவீர்யார்ஜுன, அர்ஜுன, பிரம்ம, சேஷ, கருட, ருத்ர, இந்திர, ரிஷி ஆகியோர் அனைவரும் விஷ்ணுவின் விசேஷமான அம்சத்தைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள் விஷ்ணு ஸ்வரூபர்கள் அல்லர். இப்படி தத்வ நிர்ணய வாக்கியம் இருக்கிறது. என்று ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கிறார். இதனால் தாசராயர் சொல்லிய ‘பவாத்யரொளு’ என்ற 'ஆதி' சொல்லினால் மன்வாதிகளை அறிந்துகொள்ள வேண்டும். 


நம்மொடனெ ஆடுதலிப்ப நம்மப்ப - ஸ்ரீபரமாத்மன் நம்மை ஸ்ருஷ்டித்து, நம் குழந்தைகளில் இருந்து, பாலலீலைகளைக் காட்டி, நமக்குள் இருந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறான். இதனால், பரமாத்மனுக்கு பிரயோஜனம் எதுவும் இல்லை. இப்படி விளையாடுவதே அவனின் ஸ்வபாவமாக இருக்கிறது. ஆகையாலேயே, தாசராயர் பரமாத்மனை ‘நம்மப்ப’ என்கிறார்.

***


Friday, February 28, 2020

#22 - கருணா சந்தி

#22 - கருணா சந்தி

மனதொ3ளகெ3 சுந்தர பதார்த்த2
நெனெது3கொ1டெ3 கைகொ1ண்டு33லு நூ
தன சுஷோபி41 கந்த4 சுரஸோபே43 பலராசி |
த்யுனதி னிவஹகளந்தெ1 கொட்டவ
ரனு சதா சந்தயிசுவனு ச
த்கு3ணவ க1த்த3வரக4வ க1தி3வனு அனக4னெந்தெ3னிஸி ||22

மனதொளகெ = (பக்தன்) தன் மனதில்
சுந்தர பதார்த்தவ = அழகான பூஜைக்குப் பயன்படும் பதார்த்தங்களை
நெனெது = நினைத்து
கொடெ = கொடுக்க
கைகொண்டு = அதனை ஏற்றி
பலு நூதன = மிகவும் புதியதான
சுஷோபித = மிகவும் மங்களகரமான
கந்த = நறுமணத்தாலும்
ஸுரஸ = நல்ல சுவையையும்
உபேத = கொண்ட
பலராஷி = பழங்களை
த்யுனதி = கங்கையின்
நிவஹகளந்தெ = நீரினைப் போல
கொட்டு அவரன்னு சதா = எப்போதும்
சந்தெயிஸுவனு = சமாதானம் செய்கிறான் (மகிழ்விக்கிறான்)
சத்குணவ = பரமாத்மனின் ஆனந்தாதி குணங்களை
கத்தவர = அபகரித்தவர்களை (சித்தத்தில் வைத்திருப்பவர்களை, அதாவது, மனதில் அவனின் குணங்களை தியானித்திருப்பவர்கள் என்று பொருள்)
அகவ = பாவங்களை
கதிவனு = போக்குவான்
அனகனெந்தெனிஸி = தான் பாவங்கள் அற்றவன் என்று சொல்லிக்கொண்டு

பொருள்:
பரமாத்மனை பூஜிக்க வேண்டுமெனில் பாக்யவந்தர்களே ஆகவேண்டும். பூஜை சாமான்கள் இருந்தால் மட்டுமே பூஜை செய்யவேண்டும் என்று இல்லை. யாரேயாயினும் பரமாத்மனை பக்தியுடன் தன் மனதில் சிந்தித்து, தியான ஆவாஹனாதி ஷோடஷோபசார பூஜைகளை, வெளியில் காணும் பிரதிமைகளை பூஜிப்பதைப் போலவே, தம் மனதிலும் பூஜித்து, பக்‌ஷ்ய போஜ்யாதி பதார்த்தங்கள் போன்ற பூஜைப் பொருட்களை மனதிலேயே சிந்தித்து, சமர்ப்பித்து மானஸ பூஜையை செய்தால், பரமாத்மன் அதனை ஸ்வீகரித்து, நாம் இதுவரை எங்கும் காணாத புதிதான அதிஅற்புதமான நறுமணம் மற்றும் சுவையைக் கொண்ட பழங்களை, கங்கையில் நீர்த்துளிகளை எண்ணினால் எவ்வளவு வருமோ அவ்வளவு, அதாவது அபரிமிதமான அளவிற்குக் கொடுத்து, நம்மை அனைத்து காலங்களிலும் மகிழ்ச்சிப்படுத்துவான். தன் ஆனந்தாதி குணங்களை மனதில் அடக்கிக்கொண்டு தியானம் செய்பவர்களின் பாவங்களை போக்குகிறான். ஸ்வயம் தானும் எப்போதும் பாவங்கள் (தோஷங்கள்) அற்றவன் என்னும் பெயரைப் பெற்றிருக்கிறான் என்பது பொருள்.

சிறப்புப் பொருள்:
’மனதொளகெ சுந்தர பதார்த்தவ நெனெது கொடெ’, ‘சஞ்சிந்தயேத் பகவதச்சரணாரவிந்தம் வஜ்ராங்குச த்வஜசரோருஹ ராஞ்சனாட்யம்’, ‘த்யாயேத்தரின்மணி நிபம் ஜகதேகவந்த்யம்’, ‘த்யேயஸ்ஸதா சவித்ருமண்டல மத்யவர்த்தி’ - ஆகிய ஸ்தோத்திரங்களால், எந்த ரூபியான பகவந்தனை தான் (பகவந்தன்) ஆராதிக்க வேண்டுமென்று ஆசை உண்டாகிறதோ, அந்த ரூபத்தை மனதில் நினைத்து, தியான ஆவாஹனாதிகளால், மானசிகமான பதார்த்தங்களால் பூஜிக்கவேண்டும். அல்லது தனது உபாஸ்ய மூர்த்தியான ராம கிருஷ்ணாதிகளை, தன் பிம்பமூர்த்தியான பரமாத்மனில் ஐக்கிய சிந்தனை செய்து, அந்த ரூபத்தை பாதம் முதல் சிரம் வரைக்கும் நினைத்து, மனதிலேயே மண்டபங்களை, பக்‌ஷ்ய போஜ்யாதி உபகரணங்களை சிந்தித்து, துளசி, புஷ்பங்களை மனதில் நினைத்து, கந்த புஷ்ப நைவேத்தியங்களால், மனதிலேயே பூஜிக்கவேண்டும். இந்த விஷயம் தந்த்ரசாரத்தின்படி சொல்லப்பட்ட பூஜாவிதிகளில் இப்படியாக சொல்லப்பட்டிருக்கிறது. 

ஸௌவர்ணை: ஸ்தாலிவர்ணை: மணிகண ரசிதை: கோக்ருதா சுபக்வா
பக்‌ஷ்யான் போஜ்யான்ஸ்ச லேஹ்யானபி பரமஹசோஷ்யமன்னம் நிதாய 
நானாஷாகைருபேதந்ததிமது சு க்ருதம் க்‌ஷீர பானீய யுக்தம் 
தாம்பூலஞ்சாபி விஷ்ணோ: ப்ரதி திவஸமஹம் மானஸே சிந்தயாமி ||

வீட்டில் தேவரபூஜை செய்யும்போது அனைவரும் இந்த ஸ்லோகத்தை சொல்வதுண்டு. ஆனால் நாம் மனதை வேறொரு இடத்தில் வைத்துவிட்டு, வாயில் ஸ்லோகத்தைமட்டும் சொல்லிவிட்டால் அது பலன்களைத் தருவதில்லை. பசிக்கிறது. சீக்கிரம் சாப்பிடவேண்டும் என்று சொன்ன மாத்திரத்திலேயே வயிறு நிரம்பிவிடுகிறதா? சாப்பாட்டை சாப்பிட்டே ஆகவேண்டும். நான் சாப்பிடப் போகிறேன் என்று மட்டும் சொன்னால் நிரம்பாத வயிறு, சாப்பிட்டபிறகுதான் நிரம்புகிறது. அதைப்போலவே இந்த ஸ்லோகமும் மனப்பாடமாக தெரிந்தாலும் தெரியாவிட்டாலும், அதில் சொல்லியிருப்பதைப் போல, மனதினை பரமாத்மனின் பாதாரவிந்தங்களில் வைத்து, தியானத்தில் இருந்து, அந்த பதார்த்தங்களை நினைக்கவேண்டும். 

அது ஏனென்றால்: நவரத்னங்களாலான தங்கத் தட்டு, கிண்ணங்களில், உத்தமனான பசுவின் நெய்யால் செய்ப்பட்ட பக்‌ஷ்ய போஜ்யங்களை, சாம்பார், ரசம், கூட்டு, பால், தயிர், நெய், தேன் ஆகியவற்றை வைத்திருக்கிறேன் என்று மனதால் அந்த பாத்திரங்களில் இந்த பதார்த்தங்களை வைத்திருப்பதாக நினைக்கவேண்டும். நாம் கண்களை மூடிக்கொண்டு அப்படி அவற்றை சிந்திக்கும்போது, அந்த பாத்திர பதார்த்தங்கள் அப்படியே நம் திருஷ்டிக்கு தென்படவேண்டும். அதாவது, ஒரு கிண்ணத்தில் நாம் நெய் வைத்திருக்கிறோம் என்று நினைக்கவேண்டுமெனில் அந்த பாத்திரத்தை, பதார்த்தத்தை அப்படியே நினைக்கவேண்டும். இப்படி சிந்திப்போம். ஒரு கிலோ அளவிற்கு உள்ள ஒரு பாத்திரம் எப்படி இருக்கவேண்டும் என்பதை நாம் மனதில் நினைத்தால் அது அப்படியே நம் கண்களுக்குத் தெரியவேண்டும். தங்கத்தால் செய்யப்பட்ட அந்த கிண்ணத்தில், வைரத்தால் இழைக்கப்பட்டால் எப்படி இருக்கும் என்று எண்ணி, அதையே நம் மனதில் நினைக்கவேண்டும். அதில் நெய் ஊற்றினால் எப்படி இருக்கும் என்பதை நினைக்கவேண்டும். இப்படியே சிரோடி முதலான பக்‌ஷ்ய போஜ்யாதிகளை, அதன் உருவங்களை அந்த பாத்திரங்களில் சிந்தித்து, ஒவ்வொரு பதார்த்தத்தையும் தனித்தனியாக பரிமாறுவதைப் போல, பரமாத்மனுக்கு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு தாம்பூலங்களை சிந்திக்க வேண்டும். இப்படியே தினந்தோறும் செய்யவேண்டும் என்பதே அந்த ஸ்லோகத்தின் அர்த்தம். 

இப்படியாக சிந்திக்க வேண்டுமே தவிர, வெறும் ஸ்லோகத்தை சொல்லிவிட்டால் எந்தவித பிரயோஜமும் இல்லை. வெளிப்புற பூஜாதி ஆடம்பரத்தைவிட மானசிக பூஜைக்கு பலன் அதிகம் என்பதே தாசராயர் அபிப்பிராயம். அதற்காக வெளியே செய்யும் பூஜையை விட்டுவிட வேண்டும் என்பது அர்த்தமல்ல. வெளிப்புற பூஜையை செய்தாலும், மானசிகமான பக்தி இல்லையேல், பிரயோஜனம் இல்லை. மானசிகமான பதார்த்தங்களை சிந்தித்து பூஜையை செய்வதால், கங்கையில் இருக்கும் நீர்த்துளிகள் எப்படி அளவுக்கதிகமாக இருக்கிறதோ, அதைப்போல (அவ்வளவு அதிகமாக) பரமாத்மனின் அருளால் இஹபரங்களில் சுகம் கிடைக்கிறது. 

இதற்கு உதாரணமாக, த்ருவ, பிரகலாதர்களின் கதையை பார்க்கலாம். த்ருவன் தவம் செய்யும்போது எந்த பிரதிமைகளை பூஜித்தான்? பக்‌ஷ்ய போஜ்யாதி எந்த பதார்த்தங்களை அவன் சமர்ப்பித்தான்? மானசிக சங்கல்பத்தினாலேயே இஹ பரங்களில் பரம சுகங்களை அவன் பெறவில்லையா? பிரகலாதனும் இப்படியே செய்து பரமானந்தத்தைப் பெற்றான். 


இப்படி பலர் பகவந்தனை மனதில் சிந்தித்து, தன்யர் ஆகியிருக்கின்றனர். சுகாசார்யர் முதலான அனேக ஞானிகள், தத்தம் தகுதிக்கேற்ப பரமாத்மனின் குணங்களை போற்றி வந்தனர். புரந்தரதாசர், விஜயதாசர் ஆகியோர் பரமாத்மனின் குணங்களை மனதார நினைத்தவர்களே. ஆகையால், பரமாத்மன் அவர்களின் பாவங்களைப் போக்கினான். இல்லையேல், அவர்கள் முக்தியை அடைந்தது எப்படி? இப்படிப்பட்ட விஷயங்களையே இந்த பத்யத்தில் தாசராயர் சொல்லியிருக்கிறார். 

***

Thursday, February 27, 2020

#21 - கருணா சந்தி

#21 - கருணா சந்தி

காமதே4னு சுகல்பதரு சி
ந்தாமணிக3 ளமரேந்த்3ர லோகதி3
காமிதார்த்தக3 ளீவுவல்லபெ3 ஸேவெமாள்பரிகெ3 |
ஸ்ரீமுகுந்த3ன பரமமங்க3
நாம நரகஸ்த3ரனு லஹிது
பாமரர பண்டி3தரெனிஸி புருஷார்த்த2 கொடு3திஹுது3 ||21

காமதேனு = காமிதார்த்தங்களைக் கொடுக்கவல்ல, பாற்கடலில் தோன்றிய பசு
சுகல்பதரு = காமிதார்த்தங்களைக் கொடுக்கவல்ல, பாற்கடலில் தோன்றிய, தேவலோகத்து பாரிஜாத மரம்
சிந்தாமணி = காமிதார்த்தங்களைக் கொடுக்கவல்ல ஒரு மாணிக்கம்
இவற்றையெல்லாம், 
அமரேந்த்ரலோகதி = தேவேந்திரனின் உலகத்தில் (ஸ்வர்க்கத்தில்)
ஸேவெமாள்பரிகெ = சேவைகளை செய்பவர்களுக்கு
காமிதார்த்தகள = இஷ்டார்த்தங்களான விஷயங்களை
கொடுவவல்லதெ = கொடுக்குமே தவிர (வேறு எதை கொடுக்கும்?)
ஸ்ரீமுகுந்தன = மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்ரீபரமாத்மனின்
பரமமங்கள = பரம மங்களகரமான
நாம = நாமமானது
நரகஸ்தரன = நரகவாசிகளை
ஸலஹிது = அருளியது
பாமரர = அஞ்ஞானிகளை
பண்டிதரெனிஸி = பண்டிதர் என்று புகழ்பெறச்செய்து
புருஷார்த்த = சதுர்வித புருஷார்த்தங்களை
கொடுதிஹுது = கொடுக்கிறது. 

சிறப்புப் பொருள்:

உலகத்தில் இஷ்டார்த்தங்களை பூர்த்தி செய்கின்றன என்று புகழ்பெற்றவை மூன்று விஷயங்கள். அவை காமதேனு என்னும் பசு, கல்பவ்ருக்‌ஷம் மற்றும் சிந்தாமணி என்னும் பாரிஜாத மரம். இவை மூன்று ஸ்வர்க்கத்தில் இருப்பவை. சேவை செய்யும் ஸ்வர்க்கவாசிகளுக்கு மட்டும் காமிதார்த்தங்களைக் கொடுக்கின்றன. அது ஸ்வர்க்கத்தில் இருக்கும்வரைக்கும் அனுபவிக்கத் தகுந்த தற்காலிக சுகங்களை மட்டுமே, அதாவது, அழியக்கூடிய செல்வங்கள், ஸ்த்ரீ முதலான போகங்கள் ஆகியவற்றை மட்டுமே தரக்கூடியவை. பரமாத்மனின் மங்களகரமான நாமமானது, 14 உலகங்களில் வசிக்கும் அனைவருக்கும் காமிதார்த்தங்களை - அதாவது தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் சதுர்வித புருஷார்த்தங்களைக் கொடுக்கிறது. 

ஒருமுறை நாரதர், யமலோகத்திற்குச் சென்று, அங்கு நரகத்தின் துக்கங்களை அனுபவித்திருக்கும் பாபிகளைப் பார்த்து மிகவும் கருணையுடன் ‘நாராயணானந்தஹரே முராரே தாமோதர மாதவேதி’ என்று ஒரு பெரிய சிலை மேல் நின்று, மிகவும் உச்ச ஸ்வரத்தில், அனைவரும் கேட்குமாறு கூவினார். இந்த சப்தமானது அனைவரின் காதுகளில் விழுந்த உடனேயே, அந்த பாபிகள் அனைவரும் பாவங்களிலிருந்து முக்தராகி, விமானத்தில் ஏறி ஸ்வர்க்கத்திற்குச் சென்றனர். நரகலோகமே காலியானது. 


காமதேனு முதலாதவைகளால் ஸ்வர்க்க லோகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே பயனே தவிர, வேறு லோகத்தில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பயன் உண்டா? இல்லை. பரமாத்மனின் நாமத்திற்கு எந்த உலகமானால் என்ன? எங்கு இருந்தாலும், பக்தியுடன் அவன் நாமத்தை சொன்னால், இஹபரங்களில் சுகத்தைத் தருகிறான். அஞ்ஞானிகளை மிகப்பெரிய ஞானியாக மாற்றி, பண்டிதராகவும் மாற்றுகிறது. பிரகலாதன் எந்த குருகளின் சேவையை செய்து எந்த கல்வியைக் கற்றான்? த்ருவன் யாரிடம் கல்வியைக் கற்றான்? இவர்கள் அனைவரும் ஞானிகளாகி, பண்டிதரும் ஆனது எதனின் உதவியால்? வெறும் பகவன் நாமத்தினால் மட்டுமே அல்லவா? ஆகையால், அனைவரும் பகவத் நாமமானது புருஷார்த்தங்களைக் கொடுக்கிறது என்பதில்  சந்தேகத்திற்கு இடமேயில்லை. 

***

Wednesday, February 26, 2020

#20 - கருணா சந்தி

#20 - கருணா சந்தி

அங்கு3டாக்3ரதி3 ஜனிஸி3மர த
ரங்கி3ணியு லோகத்ரயக3ளக4
ஹிங்கி3ஸுவ ளவ்யாக்ருதா காஷாந்த வியாபிஸி3 |
இங்க3டல மக3ளொடெயனங்கோ
பாங்க33ள லிப்பமலனந்த சு
மங்கப்ரத3நாம பாவன மாள்புதே3னரிது3 ||20

அங்குடாக்ரதி = ஸ்ரீபரமாத்மனின் இடது காலின் கட்டைவிரல் முனையில்
ஜனிஸித = பிறந்த
அமரதரங்கிணியே = தேவ நதியான கங்கை
லோகத்ரயகள = மூன்று உலகத்தின் மக்களின்
அக = பாவங்களை
ஹிங்குசுவளு = பரிகரிப்பாள்
அவ்யாக்ருதாகாஷாந்த = பிரம்மாண்டத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் லட்சுமி ஸ்வரூபமான, சர்வதந்த்ர ஸ்வதந்த்ரரான, 
இங்கடல மகள = பாற்கடலின் பிரதியான ரமாதேவி
ஒடெயன = தலைவனான ஸ்ரீபரமாத்மனின்
அங்கோபாங்ககளலி = அங்க = கை கால்களில். உபாங்க = நகம், முடிகளில்.
இப்ப = வியாபித்திருக்கும்
அமல = தோஷங்கள் அற்ற
அனந்த = அபரிமிதமான
சுமங்களப்ரத = உத்தமமான மங்களத்தைக் கொடுக்கும்
நாம = பகவந்தனின் நாமம்
பாவனமாள்பது = பவித்ரமாக ஆக்குகிறது
யேனரிது = என்ன ஆச்சரியம்?

பொருள்:
ஸ்ரீபரமாத்மனின் இடது கால் கட்டைவிரல் நகத்தின் முனையிலிருந்து பிறந்த கங்கையே, பூலோக, புவர்லோக, சுவர்லோகத்தில் இருக்கும் அனைவரின் பாவங்களையும் போக்குகிறாள். இப்படியிருக்கையில், பாற்கடலின் மகளான லட்சுமிக்கு பதியான, லட்சுமிஸ்வரூபனான, பிரம்மாண்டத்தின் வெளியும் உள்ளேயும் வியாபித்திருக்கும் ஸ்ரீபரமாத்மனின், மகிமையுள்ள நாமம் அதாவது பரமாத்மனின் தேகத்தில் கை, கால்களில், நகம், முடிகளிலும், இவற்றின் ஒவ்வொன்று பாகங்களிலும் அபரிமிதமான குணநாமங்கள் வியாபித்திருக்கின்றன.

இந்த விஷயம் முதல் சந்தியில் இரண்டாம் பத்யத்தில் ‘க்ரியா விசேஷகள, பகெபகெய நூதனவ காணுத’ என்னும் பதத்தின் விளக்கத்தில் பார்த்திருக்கிறோம். அதை பார்த்துக்கொள்ளவும். இத்தகைய தோஷங்கள் அற்ற, நிர்மலமான பகவன் நாமமானது, மூன்று லோகங்களையும் பவித்ரமாக மாற்றுகிறது என்றால் அதில் வியப்பென்ன? அது மிகவும் சாதாரணமான விஷயமாகும். 

சிறப்புப் பொருள்:
அங்குடாக்ரதி ஜனிஸிதமர தரங்கிணியு - இந்த விஷயத்தில், பாகவத 5ம் ஸ்கந்தத்தில் ’தத்ர பகவத: சாக்‌ஷாத்யக்ஞ லிங்கஸ்ய விஷ்ணோர்விக்ரமதோ வாமபாதாங்குஷ்ட நக நிர்பினோர்த்வாண்ட கடாஹ விவரேணாந்த: ப்ரவிஷ்டாயா:’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வாக்கியத்திலிருந்து, பரமாத்மனின் இடது பாத கட்டைவிரலானது, மேலிருக்கும் பிரம்மாண்டத்தில் தாக்கி, அது உடைய, வெளியில் இருக்கும் நீரானது உள்ளே பாய்ந்தது. அதையே தேவ நதி என்றும் கங்கை என்றும் அழைக்கிறோம். 

கங்கா கங்கேதி யோப்ரூயாத் யோஜனானாம் ஷதைரபி |
முச்யதே சர்வபாபேப்யோ விஷ்ணுலோகம் சகச்சதி ||

என்ற வேத வாக்கியத்தின்படி, கங்கை அனைத்து பாவங்களையும் போக்குபவள் என்று புலனாகிறது. 

அவ்யாக்ருதாகாஷாந்த என்றால், நம் கண்ணுக்குத் தெரியும் ஆகாயம் இல்லாமல், பிரம்மாண்டத்தின் வெளிப்புறத்தில் பிரளய காலத்திலும்கூட இருக்கும் ஆகாயம் என்று பொருள். ஆனால் பிரளய காலத்தில் ‘நாஸதாஸீன்னோ ஸதாஸீத்ததானீ’ - எந்தவொரு பொருளும் இருக்காது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியிருக்கையில், ஆகாயம் இருக்கும் என்று இந்த வேத வாக்கியத்தில் சொல்லப்பட்டிருப்பது தவறானது என்றால், பிரளய காலத்தில் ப்ராக்ருத முதலான ஆகாயமும், நீர் முதலான விஷயங்களும் இருக்காது என்று அர்த்தமே தவிர, அவ்யாக்ருதாகாஷவு இருக்காது என்று அர்த்தம் அல்ல. 

அது ஏன் என்றால், பிரளய காலத்தில் லட்சுமிதேவி கண்டிப்பாக இருக்கிறாள் என்னும் விஷயத்தை ‘ஜகதுதரன’ என்னும் பத்யத்தில் விளக்கமாக பார்த்திருக்கிறோம். அந்த லட்சுமிதேவியே அவ்யாக்ருதாகாஷ ரூபத்தில் இருந்து, தமோ ரூபத்தைக் கொண்டு, ஜலரூபளாகவும் இருக்கிறாள். ஆகையால், மேற்சொன்ன ஸ்ருதிக்கு களங்கம் வரவில்லை. இப்படியாக, அவ்யாக்ருதாகாஷமானது பிரம்மாண்டத்திற்கு வெளியே, அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறது. 


இந்த ஆகாயமானது, எங்கெங்கு வியாபித்திருக்கிறதோ, அதன் இறுதிப்பகுதி வரைக்கும் பரமாத்மன் வியாபித்திருக்கிறான். இத்தகைய பரமாத்மனின் கை, கால் முதலான அங்கங்களிலும், முடி, நகம் முதலான அங்கங்களிலும்கூட, அனந்தானந்தமாக அவனது குண நாமங்கள் நிரம்பியிருக்கின்றன. இத்தகைய நாமாதிகளில் ஒரு முடியை பல பாகங்களாக பகுத்தாலும், அதன் ஒரு பாகத்தில் இருக்கும் குண நாமங்களில், ரமாதேவியானவர், தினந்தோறும் புத்தம்புதிய விஷயங்களையே பார்த்து வந்தாலும், அதை பார்த்து முடிக்க அவரால் முடியவில்லை என்ற பிறகு, அந்த பரமாத்மனின் நாமத்தின் மகிமைகளை என்னவென்று சொல்லி வியப்பது? இத்தகைய நாமமானது உலகத்தை பவித்ரமாக மாற்றுவதில் என்ன வியப்பு? இதையே தாசராயர் இந்த பத்யத்தில் விளக்குகிறார். 

***



Tuesday, February 25, 2020

#19 - கருணா சந்தி

#19 - கருணா சந்தி

பாபகர்மவ சஹிஸுவொடெ3 லகு
மீபதிகெ3 சமராத3 திவிஜர
நீ பயோஜப3வாண்ட3 தொ3ளகா3வல்லி நா காணே |
கோப கு3ருவினமட3தி3 ப்4ருகு3 நக3
சாப மொத3லாத3வரு மாட்3த ம
ஹாப1ராத4களெ ணிசிதனெ கருணாசமுத்ர ஹரி ||19

பாபகர்மவ = பாவ கர்மங்களை
சஹிசுவடெ = மன்னிப்பதில்
லட்சுமிபதிகெ சமராத = லட்சுமிபதிக்கு இணையான
திவிஜரனு = தேவதைகளை
ஈ பயோஜபவாண்டதொளகெ = இந்த பிரம்மாண்டத்தில்
ஆவல்லி = எங்கும்
நாகாணெ = என்னால் பார்க்கமுடியவில்லை
கோப = ஸ்வர்க்க அதிபதியான இந்திரன் (அல்லது சந்திரன்)
குருவின மடதி = பிருகஸ்பதி ஆசார்யரின் மனைவியான தாரா
ப்ருகு = ப்ருகு முனிவர்
நகசாப = மலையையே வில்லாக ஏந்திய ருத்ரர், 
மொதலாதவரு = ஆகியோர்
மாடித = செய்த
மஹாபராதகள = மிகப்பெரிய தவறுகளை
எணிஸிதனெ = எண்ணிப் பார்த்தானா? (இல்லை)
கருணா சமுத்ர ஹரி = கருணைக்கடலான ஹரி.

பொருள்:
பக்தர்கள் செய்யும் பாவ கர்மங்களை மன்னிப்பதில், லட்சுமிபதியான, கருணைக்கடலான ஸ்ரீஹரியை விட்டால், இந்த பிரம்மாண்டத்தில் எங்கு தேடினாலும், வேறு யாரும் கிடைக்கமாட்டார்கள். தேவேந்திரன், சந்திரன், பிருஹஸ்பதி ஆச்சார்யரின் மனைவியான தாரா, ப்ருகுரிஷி, ருத்ரதேவர் ஆகியோர் செய்த மகா அபராதங்களை (தவறுகளை), கண்டுகொள்ளாமல் இருந்தானே? ஆகையாலேயே, அவனுக்கு கருணைக்கடல் என்று பெயர் வந்தது. 

சிறப்புப் பொருள்:
'கோப' என்றால் அது இந்திரனையும், சந்திரனையும்கூட குறிக்கலாம். எப்படியெனில் ‘கௌர்னாகே வ்ருஷபே சந்திரே வாக் பூதிக்தேனு ஷுஸ்த்ரியா மித்யமர:’ கோ என்றால் ஸ்வர்க்கம், பசு, எருது, சந்திரன், வாக்கியம், பூமி, திசை என இவற்றைக் குறிக்கும் என அமரகோசத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ’த்வயோஸ்து ரஷ்மித்ருக்பாண ஸ்வர்கவஜ்ராம்பு லோமஸு’ என்னும் வாக்கியத்தில் கோ என்றால் ரஷ்மி அதாவது கிரணங்களுக்கும்கூட பொருந்தும். ‘காம்பாதீதி கோப:’ ஸ்வர்க்கத்திற்கு அதிபதியானதால், தேவேந்திரனுக்கு கோப என்று பெயர். தன் கிரணங்களால் பிராணிகளை காப்பாற்றுவதால் சந்திரனுக்கும் கோப என்று பெயர். இந்திரன், அகலிகையை மயக்கியதால், மிகப்பெரிய பாவத்தை சம்பாதித்தான். பாரிஜாத மரத்தின் அபஹரண காலத்தில் கிருஷ்ணனுடன் போர் புரிந்தான். கோபாலகர்கள் செய்யத் தீர்மானித்த இந்திர யாகத்தை ஸ்ரீகிருஷ்ணன் தடுத்தான் என்ற கோபத்தினால் கோகுலத்தை மூழ்கடிக்க முயன்றான். இப்படி பல தகாத செயல்களால் சம்பாதித்த பாவங்களை எல்லாம் பரிகரித்து அவனை காப்பாற்றினான் ஸ்ரீபரமாத்மன். 

சந்திரன், குருபத்னியான தாரையை மயக்கினாலும், அதற்கேற்ப தண்டனையான நரகதண்டனையை ஸ்வாமி சந்திரனுக்கு விதித்தானா? இல்லை. ‘குருவின மடதி’ பிருஹஸ்பதியின் மனைவியான தாரையை சந்திரன் மயக்கி, மிகப்பெரிய பாவத்தை சம்பாதித்தாலும், அதனை கவனத்தில் கொள்ளாமல், அவனுக்கு அருளினான். 

யார் சர்வோத்தமன் என்று சோதிப்பதற்காக ப்ருகுரிஷிகள் பரமாத்மனை அவன் மார்பில் எட்டி உதைத்தார். இதற்கான தண்டனையை பரமாத்மன் அவருக்கு கொடுத்தானா? இல்லை. ‘நகசாப’ - நக என்றால் மலைகள். அத்தகைய மலைகளை தனுஸ்ஸாக வைத்துக் கொண்டிருப்பவன் என்று பெயர். இதே ஜகன்னாததாசர் செய்த, ருத்ர தேவரைக் குறித்த இன்னொரு ஸ்தோத்திரத்தில், ’த்ருத டமருக ஸாரங்க நின்னயபாத ஷதபத்ரார்ச்சிபர சங்க ஸதத பாலிஸொ ஜகன்னாத விட்டலன சம்ஸ்துதிசுவெ நீக்‌ஷிதிரத பூதரதன்வி’ என்று சொல்லியிருக்கிறார். பூதரதன்வி என்றால் நகசாப என்னும் அர்த்தமே வருகிறது. த்ரிபுராசுரர்களின் சம்ஹார காலத்தில் ருத்ரதேவருக்கு பூமியே ரதமாக ஆனது என்றும், நான்கு வேதங்களே குதிரைகள் ஆனது என்றும், பிரம்மதேவர் சாரதியானார் என்றும், மேரு பர்வதமே தனுஸ் ஆனது என்றும், ஸ்ரீஹரி பாணமாக ஆனார் என்றும் பாரதத்திலும், ஹரிவம்ச, பவிஷ்யோத்தர புராணங்களிலும் கதை உண்டு. ஆகையாலேயே, நகசாப என்றார். இத்தகைய ருத்ரதேவர், பாணாசுரனுக்கும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மனுக்கும் உஷாவிற்காக போர் நடந்தபோது பாணாசுரனின் சார்பாக, ஸ்ரீகிருஷ்ணனுடன் போர் புரிந்தார். 

இது மட்டுமல்லாமல், ராமாவதார சமயத்தில், ராவணனின் சம்ஹாரம் ஆனபிறகு, பிரம்மதேவர் தேவதைகளுடன் சேர்ந்து ராமனைக் குறித்து ஸ்தோத்திரம் செய்துகொண்டிருக்க, ருத்ரர் ராமனைக் குறித்து ‘யாராலும் கொல்லப்படக்கூடாது என்ற வரத்தை என்னிடமிருந்து பெற்றிருந்த ராவணனை, என் வரத்தை மீறி கொன்றாய். ஆகையால், என்னுடன் போருக்கு வா’ என்றார். இந்த விஷயத்தில் நிர்ணய வாக்கியம் இப்படி இருக்கிறது. 

இதீரிதேத்வப்ஜ பவேனஷூலி சமாஹ்வய த்ராகவ மாஹவாய |
வரம் மதீயம் த்வகணய்ய ரக்‌ஷோ ஹதம் த்வயாதேன ரணாய மைஹி || (8-218)

இதிலிருந்து மேற்கூறிய அர்த்தம் புலப்படுகிறது. பாரிஜாத அபஹரண காலத்தில், இந்திரனுடன் சேர்ந்து ருத்ரதேவர், ஸ்ரீகிருஷ்ணனுக்கு எதிராக போர் புரிந்தார். இப்படியாக ருத்ரதேவர் பலமுறை ஸ்ரீபரமாத்மனுடன் போர் புரிந்திருக்கிறார் என்று புரிகிறது. நகசாப மொதலாதவரு - என்று சொல்லியதால், ருத்ரதேவருடன், பலராம, அர்ஜுன, திருதராஷ்டிர, பீஷ்மாசார்யர், துரோணர் ஆகியோரையும் சேர்த்து சொல்லியிருக்கிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும். 

இவர்கள் அனைவரும் செய்த அபராதங்கள் மிகப்பெரியதாக இருப்பினும், அவற்றை கவனத்தில் கொண்டுவராமல், இவர்கள் அனைவருக்கும் ஸ்ரீபரமாத்மன் இஹ பரங்களில் சுகங்களைக் கொடுக்கிறார். ஆகையால், ஸ்ரீஹரி கருணைக்கடல் என்று சொல்கிறார் தாசராயர். 


இவர்களின் தவறுகளையெல்லாம் மன்னித்ததைப் போல, நம் தவறுகளையும் (பாவங்களையும்) கூட ஸ்ரீபரமாத்மன் மன்னிக்காமல் இருந்தால், அவனை பக்‌ஷபாதி (ஒருதலைப் பட்சமானவன்) என்று சொல்ல முடியுமா என்றால் அப்படியல்ல. பாவம் செய்தவர்களின் தகுதி (யோக்யதை), தேவதாகார்ய சாதனை, பாவம் செய்தவர்களின் சுயபச்சாதாபம் ஆகியவையே அந்த பாவங்களுக்காக மன்னிப்பதற்கும், தண்டிப்பதற்காகவும் காரணமாக அமைந்திருக்கிறது தவிர, பரமாத்மனை பக்‌ஷபாதி என்று சொல்லமுடியாது. 

***


Monday, February 24, 2020

#18 - கருணா சந்தி

#18 - கருணா சந்தி

பு4வனபாவன சரித புண்ய
ஸ்ரவணகீர்த்தன பாபநாஷன
கவிபி3ரீடி3த கைரவ ஷ்யாம நிஸ்ஸீம |
யுவதிவேஷதி3 ஹிந்தே3 கௌ3ரி
4வன மோஹிஸி கெடி3ஸி உளிசித3
இவன மாயவ கெ3லுவனாவனு ஈ ஜக3த்ரயதி3 ||18

புவனபாவன சரித = 14 உலகங்களையும் பவித்ரமாக ஆக்கும் சரிதத்தைக் கொண்டவன்
புண்யஸ்ரவணகீர்த்தன = புண்யகரமான ஸ்ரவண கீர்த்தனைகளைக் கொண்டவன் (கதை கேட்பதும், அவனைப் பற்றி பாடுவதும்கூட புண்ணியகரமானது). அவனின் மகிமைகளை ஸ்ரவணம் செய்பவர்களுக்கும், பாடுபவர்களுக்கும் புண்ணியத்தைக் கொடுப்பவன் என்னும் கருத்து.
பாபனாஷன = பாவங்களை நாசம் செய்பவன்
கவிபிரீடித = பிரம்மாதிகளால் வணங்கப்படுபவன்
கைரவதளஷ்யாம = குவளை மலரின் இதழ்கள் போல நீல வண்ண தேகமுடையவன்
நிஸ்ஸீம = அபரிமிதமான குணரூபங்களைக் கொண்டவன்
ஹிந்தெ = முன்னர், சாக்‌ஷுஷ மன்வந்தரத்தில்
யுவதிவேஷதி = பெண்ணின் ரூபத்தில்
கௌரிதவன = உமாபதியான ருத்ரதேவரை
மோஹிஸி, கெடிஸி = அவரை தன் மேல் ஆசைப்பட வைத்து 
உளிஸிதனு = பின் அவரைக் காப்பாற்றினான்
ஈ ஜகத்ரயதி = மூன்று உலகங்களிலும்
அவனு = எந்த புருஷன் (யாரும்)
இவன மாயவ = இவனின் மாயையை
கெலுவனு = வெல்பவன் யாருமில்லை.

பொருள்:
ஸ்ரீபரமாத்மன் 14 உலகங்களையும் பவித்ரமாக ஆக்கும் சரித்திரத்தைக் கொண்டவன். தன் கதையை கேட்பவருக்கும், கொண்டாடுபவர்களுக்கும் புண்ணியத்தைக் கொடுப்பவன். அவர்களின் பாவத்தை போக்குவான். பிரம்மாதிகளால் போற்றப்படுபவன். குவளை மலர் இதழ்களைப் போல உத்தமனான நீல வர்ண தேகத்தைக் கொண்டவன். அபரிமிதமான நாம ரூபங்களைக் கொண்டவன் ஆகையால், நிஸ்ஸீம என்ற பெயர் பெற்றவன். 

யுவதி வேஷதி ஹிந்தெ கௌரிதவன மோஹிஸி - க்ருதயுகத்தில் தேவ தைத்யர்கள் அனைவரும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தபோது ஸ்ரீபரமாத்மன், தைத்யர்களை ஏமாற்றி தேவதைகளுக்கு அமிர்தத்தை பங்கிட்டுக் கொடுத்தான் என்னும் விஷயத்தை ருத்ரதேவர் கேட்டு, ஸ்ரீபரமாத்மனிடம் வந்து ஸ்தோத்திரம் செய்து ‘நீ தைத்யர்களை ஏமாற்றுவதற்காக எடுத்த ஸ்த்ரீ ரூபத்தை எனக்குக் காட்டுவாயாக’ என்றார். அதற்கு பரமாத்மன் ‘ஈஸ்வரா! தைத்யர்கள் தேவதைகளிடமிருந்து அமிர்த கலசத்தை அபகரித்துப் போக, அவர்களை வஞ்சித்து, தேவதைகளுக்கு அமிர்தத்தை பகிர்ந்து கொடுக்க, அந்த ரூபத்தை நான் எடுத்தேன். அது அவர்கள் பார்த்து ஏமாற்றம் அடைவதற்காக எடுத்த ரூபம். ஆனாலும், நீ விரும்பியதால், உனக்கு அதை காட்டுகிறேன்’ என்று சொல்லி, ஸ்ரீஹரி மறைந்தார். ருத்ரதேவர் பார்வதி சமேதராக, அனைத்து இடங்களிலும் ஸ்ரீஹரியை தேடினார்.

அப்போது பக்கத்தில் இருந்த ஒரு தோட்டத்தில், பாட்டு பாடும் ஒலியும், அதற்கேற்ப நடனமாடுவதும், கைகளில் இரு பந்துகளை ஏந்தி விளையாடியவாறு, அற்புத அழகினைக் கொண்ட ஒரு பெண் வருவதை ருத்ரதேவர் கண்டார். ஸ்ரீஹரியின் மாயையை வெல்பவர் யார்? உடனடியாக ருத்ரர் காமத்திற்கு அடிமையானார். அதற்குள் அந்தப்பெண் ருத்ரதேவருக்கு அருகில் வர, காற்று அவளின் வஸ்திரத்தை அபகரித்தது. ’பவான்யா அபி பஷ்யந்த்யாகதஹ்ரீ ஸ்தத்பதன்யயௌ’ - பார்வதிதேவி பார்த்திருக்க, ருத்ரதேவர், அந்தப் பெண்ணை நெருங்கி, அவள் முடியில் கைவைத்துப் பிடித்து, அவளை கட்டியணைக்க முயன்றார். அவளோ அவரிடமிருந்து தப்பி ஓடியபோது, ருத்ரரும் அவளை துரத்திப் பிடிக்க முயல, அவரால் அது முடியவில்லை. 


வெகு சமீபத்தில் ஓடிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்ததால், அவரது மனம் சஞ்சலப்பட்டு, அவரது வீர்யம் வெளிப்பட்டது. அந்த இடங்கள் அனைத்தும் சிவ-ஸ்தலங்கள் ஆயின. சில காலம் கழித்து, ருத்ரருக்கு, அந்தப் பெண் ஸ்ரீபரமாத்மனே என்கிற உண்மை புலப்பட்டது. உடன் பெண் மறைந்தாள். ருத்ரரும் வெட்கத்துடன் தலைகுனிந்து, பார்வதியிடம் வந்தார். அப்போது ஸ்ரீபரமாத்மன் தன் உண்மை ரூபத்தினால் ருத்ரருக்கு தரிசனம் அளித்து, அவரை சமாதானப்படுத்தி மறைந்தார். மகானுபாவரான மன்மதனையே தகித்த ருத்ரரின் கதியே இப்படியானால், உலகத்தில் வேறு யார் இவரது மகிமைகளை வெல்லமுடியும்? இதே அபிப்பிராயத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார். 

***

Sunday, February 23, 2020

#17 - கருணா சந்தி

#17 - கருணா சந்தி

ஜனப மெச்சித3ரீவ த4ன வா
ஹன விபூ4ஷண வசன பூமிய
தனு மனக3ளித்தா த3ரிபருண்டேனு லோகதொ3ளு |
அனவரத நெனெவவரனந்தா
னவே மொத3லாதாலயதொ3ளி
ட்டணுக3னந்ததி அவர வஷனாகு3வ மஹாமஹிம ||17

ஜனப = அரசன்
மெச்சிதரெ = மகிழ்ச்சியடைந்தால்
தன வாஹன விபூஷண வசன பூமிய = பொருட்களை, குதிரை முதலான வாகனங்களை, நகைகளை, ஆடைகளை, நிலங்களை
ஈவ = கொடுப்பான்
லோகதொளு = உலகத்தில்
தனு = தன் சரீரத்தை
மனகள = தன் மனதையும்
இத்து = கொடுத்து
ஆதரிபருண்டேனு = ஆதரிப்பவர்கள் உண்டா என்று யோசித்துப் பார்
மஹாமஹிம = மிகச்சிறந்த புகழைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்
அனவரத நெனெவவர = எப்போதும் தியானித்திருப்பவர்களை
அனந்தாஸனவெ மொதலாதாலயதலி = அனந்தாசன, ஸ்வேதத்வீப, வைகுண்ட ஆகிய தன் இல்லங்களில் வைத்து
அணுகனந்ததி = சிறு பாலகனைப் போல ஸ்ரீபரமாத்மன்
அவர வஷனாகுவ = அவர்களின் வசமாவான்.

பொருள்:
ஒரு அரசன், தன் சேவகனின் சேவையை மெச்சினால், அவனுக்கு பொருள், வாகனங்கள், நகைகள், ஆடைகள், நிலங்கள் ஆகியவற்றைக் கொடுத்து அவனை மகிழ்விப்பான். மகாமகிமையுள்ள ஸ்ரீபரமாத்மன், தன்னை எப்போதும் பஜிப்பவர்களை, தன்னைப் பார்த்து மகிழ்ச்சியடைவதற்காக, தன் தரிசனத்தையே கொடுக்கிறான். அவர்களை முக்தராக செய்து, அனந்தாசனம் முதலான தன் வீடுகளில் அவர்களை வைத்து மகிழ்ச்சியளிப்பான். இத்தகைய பிரபு இந்த உலகத்தில் வேறு யார் உளர்? ஆகையால், ஸ்ரீஹரியே தயா சமுத்திரன் என்கிறார். 

சிறப்புப் பொருள்:
தனுமனகளித்ததரிபருண்டேனோ - இங்கு தனு என்றால், சாத்விக மக்களுக்கு தேவதாதி சரீரங்களைக் கொடுத்து, முக்தி சாதனங்களைக் கொடுத்து, வைகுண்டாதி தன் இடங்களில் வைத்து ஆதரிக்கிறான் என்ற ஒரு அர்த்தத்தை சொல்லலாம். இன்னொரு அர்த்தம் - அவன் பக்தாதீனன் ஆகையால், அர்ஜுனாதிகளுக்கு தன் சரீரத்தையே கொடுத்து சாரதியாக இருந்து, அவர்களைக் காத்தான். நாரதாதிகளுக்கு அவர்கள் நினைத்த இடங்களிலேயே தரிசனம் கொடுத்திருந்தான். இதையே 1ம் ஸ்கந்த பாகவதத்தில் ‘அஹோ இவமே ஷீக்ரம் தர்ஷனம்யாதி சேதஸி’ - நான் பாடல்களைப் பாடத் துவங்கியவுடன், எதிரில் இருப்பவரை அழைத்தால் எப்படி உடனே வருவாரோ, அதுபோல, ஸ்ரீஹரி என் சித்தத்தில் தரிசனம் அளிப்பான் - என்று நாரதர் கூறுகிறார். 

தற்போது 400-500 ஆண்டுகளுக்கு முன்னர்கூட ஸ்ரீஹரி தன் அற்புத மகிமைகளைக் காட்டியிருக்கிறார். மகாராஷ்டிரத்தில் கொல்லாபுரத்தில் ‘சதி சக்குபாய்’ என்பவர் விட்டலனிடம் பரம பக்தியைக் கொண்டு, அவனை எப்போதும் ஆராதித்தவாறு இருந்து, பண்டரிபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆஷாட சுத்த ஏகாதசியன்று நடக்கும் விழாவிற்காக போகும் தாசர்களுடன் தானும் அங்கு போவதற்கான முயற்சியை செய்துகொண்டிருக்க, அவளின் அத்தை, அவளை மிகவும் கண்டித்து, தண்டித்து, ஒரு தூணில் அவளைக் கட்டிப்போட்டு, 15 நாட்கள் வரை அவளுக்கு சாப்பாடு கொடுக்காமல் துன்புறுத்தினாள். சக்குபாய், ஸ்ரீஹரியிடம் தன் மனம், உடலை ஒப்படைத்து தொடர்ந்து அவனை நினைத்து வந்தாள். 

ஸ்ரீஹரியும் அவளுக்கு விடுதலையைக் கொடுத்து, அவளை பண்டரிபுரத்திற்கு அனுப்பிவிட்டு, அவள் யாத்திரையை முடித்துவரும் வரையில், தான் சக்குபாயைப் போல அந்த தூணில் கட்டப்பட்டு, அவள் திரும்பி வந்தபிறகு, மாயமானான். சக்குபாயின் அத்தை ஆகியோர் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டு, வியந்து வருத்தப்பட்டு, அவளிடம் அவர்களை மன்னிக்குமாறு வேண்டியவாறு, அவளின் அருளின்படி அனைவரும் இஹத்தில் சுகங்களை அடைந்தனர். இப்படி பரமாத்மன் பக்தர்களுக்கு தன் சரீரத்தையே கொடுப்பதால் ‘தனுமனகளித்தா’ என்று தாசராயர் கூறுகிறார். 


சிறிய குழந்தை எப்படி தன் பெற்றோரின் வசத்தில் இருக்குமோ, அப்படியே பரமாத்மனும் பக்தர்களின் வசத்தில் இருக்கிறான் என்பது பொருள். ஆகையாலேயே இவனை மகாமகிமை உள்ளவன் என்றும், கருணைக்கடல் என்றும் அழைக்கின்றனர். 

***