#27 - போஜனரசவிபாக சந்தி
கலுஷ ஜிஹ்வெகெ3 ஸுஷ்டு போ4ஜன
ஜலமொத3லு விஷ தோ1ருவுது3 நி
ஷ் கலுஷ ஜிஹ்வெகெ3 சுரஸ தோருவுதெ3ல்ல காலத3லி |
சுலலிதாங்க3கெ சகலரஸ ம
ங்கல வெனிசுதிஹுத ன்னமய கை
கொ1ளதெ3 பி3டு3வனெ பூதனிய விஷமொலெய னுண்ட3வனு ||27
கலுஷ ஜிஹ்வெகெ = நோய் நொடி வந்தால் மரத்துவிடும் நாக்கிற்கு
சுஷ்டு போஜன = நல்ல சுவையான உணவும்
ஜலமொதலு = தண்ணீர்கூட
விஷதோருவுது = கசப்பாகத் தெரியும்
நிஷ்கலுஷ ஜிஹ்வெகெ = எந்த பிரச்னையும் இல்லாத நாக்கிற்கு
சருசதோருவுது = அனைத்தும் அருமையாகத் தெரியும் (சுவைக்கும்)
எல்ல காலதலி = எப்போதும்
சுலலிதாங்ககெ = மிகச்சிறந்த அழகான ஸ்வரூபமுள்ள பரமாத்மனுக்கு
சகலரஸ = அனைத்து ரசங்களும் (சுவைகளும்)
மங்கல வெனிசுதிஹுது = மங்கலமாகியே இருக்கிறது
பூதனிய = பூதனி என்னும் அரக்கியின்
விஷமொலெய = விஷம் நிரம்பிய பாலினைக் கொடுக்க வந்த
உண்டவனு = குடித்தவன்
அன்னமய = அன்னமய என்னும் பெயருள்ள பரமாத்மன்
கைகொள்ளதெ = நாம் கொடுப்பதை ஏற்றுக் கொள்ளாமல்
பிடுவனெ = நிராகரித்து விடுவானோ?
பகவந்தனுக்கு நாம் சமர்ப்பிக்கும் பதார்த்தங்கள், சுவையற்றதாகவே இருந்தாலும், அவனுக்கு அவை சுவையானதாகவே தோன்றும். அது பகவந்தனின் மகிமையே தவிர வேறில்லை என்று சொல்கிறார். ஜுரம் வந்தவனுக்கு, நல்ல சுவையான உணவு, நீர் எது கொடுத்தாலும், அது விஷத்தைப் போல கசக்கும். அதுவே, நோய் நொடிகள் இல்லாதவனுக்கு நன்றாக ருசி தெரியும். ஒரே பதார்த்தமானது, சிலருக்கு சுவையாகவும், சிலருக்கு கசப்பாகவும் தோன்றுவதற்கு நாக்கு மட்டுமே காரணம். அந்த பதார்த்தம் இல்லை.
‘யோதோஷா இதரத்ராபிதே குணா: பரமேமதா:’ அனைவருக்கும் எது தோஷங்களாக தெரிகிறதோ, அதுவே பரமாத்மனுக்கு குணங்களாக தெரிகிறது என்பது இந்த பிரம்ம சூத்திர வாக்கியத்தின் பொருள். நமக்கு சுவையானதாக இருக்கும் பதார்த்தங்கள், பரமாத்மனுக்கு ருசிகரமாகவே இருக்கின்றது. பகவத்பக்தனான ஒரு பிராமணன், தன் வீட்டில் ஸ்ரார்த்தம் வரும்போது, பிராமணர்களுக்கு உணவளிக்க எந்தவித பதார்த்தங்களும் கிடைக்காமல், வெறும் கடுகு-உருண்டைகளை மட்டும் பரிமாறினான். அந்த பிராமணர்களுக்கு அதுவே அமிர்தத்தைப் போல இருந்தது என்று வராக புராண வாக்கியம் சொல்கிறது. பகவத் பக்தர்களுக்கே கடுகு-உருண்டை அமிர்தமாக தோன்றினால், அந்த பரமாத்மனுக்கு எப்படி அது கசப்பாகத் தோன்றும்?
விதேஹ நாட்டின் ஸ்ருததேவ என்னும் பிராமணன், ஸ்ரீகிருஷ்ணனை பக்தியுடன் பிரார்த்திக்க, ஸ்ரீகிருஷ்ணன் அவனது பக்திக்கு மெச்சி, அந்த பிராமணனின் வீட்டிற்கு வந்தான். அப்போது அந்த பிராமணன் கடுகு-உருண்டையாலேயே ஸ்ரீகிருஷ்ணனை திருப்திப்படுத்தினான். ஸ்ரீகிருஷ்ணன் அதை அமிர்தத்தைப் போல நினைத்து உண்டான் என்று பாகவத 10ம் ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
பூதனி என்னும் அரக்கி, ஸ்ரீகிருஷ்ணனைக் கொல்வதற்காக தன் முலைகளில் விஷம் தடவி அந்தப் பாலை ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஊட்டி விடுவதற்காக வந்தால், ஸ்ரீகிருஷ்ணன் அதைக்கூட நிராகரிக்காமல் ஏற்றுக்கொண்டான் என்றபிறகு, நாம் கொடுக்கும் பதார்த்தங்களை ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிப்பானா? ஒருக்காலும் நிராகரிக்க மாட்டான் என்பது பொருள்.
***
No comments:
Post a Comment