ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, June 6, 2020

#23 - பஞ்சதன்மாத்ர சந்தி

ஒந்த3ரொள கொ3ந்தொ3ந்து3 பெ1ரெதி3

இந்தி3ரேஷன ரூபக3ள மன

3ந்ததெரதலி சிந்திஸித31னுமான வினிதில்ல |

ஸிந்து4ராஜனொ ளம்ப3ராலய

பந்தி4லு ப்ரதிதந்துக3ளொளுத3

பி3ந்து3 வ்யாபிஸித3ந்தெ இருதிப்பனு சராசரதி3 ||23

 

ஒந்தரொளகெ = சராசராத்மகவான இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து பொருட்களிலும்

ஒந்தொந்து = ஒவ்வொரு ரூபத்தைப் போல

பெரெதிஹ = சேர்ந்திருக்கும்

இந்திரேஷன = லட்சுமிபதியின்

ரூபகள = ரூபங்களை

மனபந்த தெரதலி = எந்தப் பொருளின் அந்தர்யாமி ரூபத்தை நினைக்க வேண்டுமென்று மனதிற்கு தோன்றியபோது

சிந்திஸு = தியானம் செய்

இதகெ = இந்த விஷயத்தில்

இனிது = எந்தவொரு

அனுமானவில்ல = சந்தேகமும் இல்லை

ஸிந்துராஜனொளு = சமுத்திரத்தில்

அம்பராலய = துணியால் ஆன வீட்டை

பந்திஸலு = கட்டினால்

ப்ரதிதந்துகளொளு = ஒவ்வொரு நூலிலும்

உதபிந்து = தண்ணீர்த் துளிகள்

வியாபிஸிதந்தெ = நிறைந்திருப்பதைப் போல

சராசரதி = சராசர பொருட்கள் நிறைந்திருக்கும் இந்த பிரபஞ்சத்தில்

இருதிப்பனு = வியாபித்திருக்கிறான்.

 

சராசர பொருட்களால் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில், ஒவ்வொரு ஜடப் பொருட்களிலும் ஒவ்வொரு பகவத் ரூபங்கள் கண்டிப்பாக இருந்தே இருக்கும். பிரம்மாதிகளில், வாசுதேவாதி ரூபங்களாக அந்தர்யாமியாக இருக்கிறான்.

 

ஸ்வ-அம்ச ரூபங்களால் ராம, கிருஷ்ணாதி ரூபங்களை எடுக்கிறான். லட்சுமண, பலராம, ப்ருது ஆகியோரில் குறைந்த அம்சத்துடன் அந்த ரூபத்தில் இருக்கிறான். பானையில் பானையின் ரூபத்திலும், ஒரு படத்தில் அந்த படத்தின் ரூபத்திலும், வேறு பொருட்களில் அந்தந்த ரூபங்களிலும் வியாபித்திருக்கிறான். அணோரணீர்யா மஹதோ மஹீர்யாஎன்னும் ஸ்ருதி வாக்கியத்திற்கேற்ப மிகச்சிறியதான அணு ரூபத்தின் பொருட்களில் அதைவிட சிறியதாக இருக்கிறான். மிகப்பெரியதான பொருட்களில், அதைவிட பெரியதான ரூபத்தில் இருக்கிறான்.

 

ஆனால், இப்படி வியாபித்திருக்கும் பகவத் ரூபோபாசனையின் அதிகாரமானது, அனைவருக்கும் கிடைப்பதில்லை. ப்ரதிமா ஸ்வப்ரபுத்தானாம் சர்வத்ர விதிதாத்மனாம்என்னும் ஆதாரத்தில், அஞ்ஞானிகள் பிரதிமைகளில் இருக்கும் பரமாத்மனை பூஜிக்க வேண்டும் என்றும், ஞானிகள் எங்கெங்கும் வியாபித்திருக்கும் பரமாத்மனை பூஜிக்க வேண்டும் என்றும் நிச்சயமாகிறது. அஞ்ஞானிகள் என்றால் மூடர்கள் அல்ல. யாவத்ஸர்வேஷு பூதேஷு மத்பாவோ நோபஜாயதே | தாவதேவமுபாஸீத... என்னும் பாகவத வாக்கியத்தின்படி, தமக்குள் இருக்கும் பரமாத்மனுக்கும், நாய், பாம்பு ஆகியவற்றில் இருக்கும் பரமாத்மனுக்கும் வேறுபாடு இல்லை என்று எப்போது அறிகிறானோ, அப்போது ப்ரணமேத் தண்டவத் பூமௌ அஷ்வசண்டால கோகரம்’ - நாய், சண்டால, பசு, பாம்பு ஆகியவற்றிற்கும்கூட சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்யவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள்.

 

அனைவரிலும், பகவந்தன் இருக்கிறான் என்று சொல்வது மற்றும் அறிவது சுலபம். அதனை அனுஷ்டானத்திற்கு கொண்டு வருவது மிகவும் கஷ்டம். அனுஷ்டானம் என்றால் என்ன? பாம்புகளில் பரமாத்மன் இருக்கிறான் என்று ஆத்திகர்கள் சொல்கின்றனர். ஆனால், புலி, பாம்புகளை பார்த்தவுடன் அவற்றைக் கொல்ல முயல்கின்றனர் அல்லது தாமே ஓடிப் போகின்றனர். நம்மில் இருக்கும் பகவந்தனே அங்கும் இருக்கிறான் என்னும் எண்ணம் திடமானால், நெருப்பு நெருப்பினை என்ன செய்யும்? அதுபோலவே, தான், தனது என்னும் கர்த்ருத்வ பாவத்தை விட்டு, இங்கிருப்பவனும், அங்கிருப்பவனும் ஒருவனே ஆகையால், தானே தன்னை என்ன செய்துவிட முடியும்? என்று சொல்லி, பிரதிமைகளை எப்படி பூஜிக்கிறோமோ, பயமில்லாமல் இருக்கிறோமோ அப்படியே பாம்புகளைக் கண்டாலும் பயப்படாமல் இருக்கும் நிலை வந்தால், அவன் அனைத்து இடங்களிலும் வியாப்தனான பகவந்தனின் பூஜையை செய்யமுடியும்.

 

இந்த ஞானம் வரும்வரை தன்னைவிட உத்தமர் என்று யாரிடம் பக்தி பிறக்கிறதோ, அவரில் அந்தர்யாமியான பரமாத்மனை மாத்திரம் பூஜிக்க வேண்டும். யாரிடம் தபஸ், ஞான, பக்தி ஆகியவை அதிகமாக இருக்கிறதோ, அந்த சன்னிதானத்தில் தாரதம்யத்திற்கேற்ப பக்தி செய்யவேண்டும். நம்மைவிட நீசரில்கூட ஞானாதிகளில் இருக்கும் பகவத்ரூபங்களுக்கு அபேத சிந்தனை செய்துகொண்டு தன் யோக்யதைக்கேற்ப எந்தெந்த சன்னிதானங்களில் தனக்கு பக்தி பிறக்கிறதோ, அந்தந்த சன்னிதானங்களில் பகவத் பூஜையை செய்யவேண்டும். ஆகையாலேயே, தாசராயர், ‘மன பந்த தெரதலி சிந்திஸுஎன்று சொல்லியிருக்கிறார்.

 

அனைத்து இடங்களிலும் பகவத் ரூபம் வியாபித்திருப்பதற்கான ஆதாரத்தை கொடுக்கிறார். கடற்கரையில் துணியினால்ஆன ஒரு கூடாரத்தை அமைத்தால், ஒவ்வொரு முறை அலை அடிக்கும்போதும், அந்த துணியில் இருக்கும் நூல்களின் இடைவெளிகளில் எப்படி நீர்த் திவலைகள் வந்து நிரம்பியிருக்குமோ, அப்படி, பரமாத்மன் சராசராத்மக பிரபஞ்சத்தின் அனைத்து இடங்களிலும் வியாபித்திருக்கிறான். இந்த உதாரணம் நடைமுறைக்கு பொருந்தாது. நீருக்குள் சென்று யாரும் இப்படிப்பட்ட துணியாலான வீட்டினை கட்டமாட்டார்கள். அப்படியிருக்கையில், இந்த உதாரணத்தை எப்படி கொடுத்தார் என்றால், பழமொழிகளில் இருக்கும் உதாரணங்களை மட்டுமே கொடுக்கத் தேவையில்லை என்று பொருள்.

 

பாகவத முதலாம் ஸ்கந்தத்தில் ஸ்ரீகிருஷ்ணன் ஹஸ்தினாபுரத்திலிருந்து த்வாரவதிக்கு வரும்போது, ரத்னத்தால் ஆன வெள்ளையான குடையை பிடித்திருந்தான். உத்தவ, சாத்யகி இவர்கள் இருவரும் விசிறியை பிடித்து நின்றிருந்தனர். ஸ்ரீகிருஷ்ணன், கௌஸ்துப மாணிக்கம், வனமாலை ஆகியவறை தரித்திருந்தான். அவை எப்படி ஒளிர்ந்து கொண்டிருந்தது என்பதை சொல்கிறார். கனோ யதார்கீனசாபவைத்யுதை:’ -- உச்சத்தில் சூரியன், பக்கத்தில் பூர்ணசந்திரன், மேகமண்டலத்தில் இந்திர தனுஸ் மற்றும் மின்னல். இவை அனைத்தும்கூடிய நீலமேகம் எப்படி ஒளிருமோ அப்படியே பரமாத்மன் தலையின் மேல் இருந்த குடை சூரியனைப் போலவும், விசிறி பூர்ண சந்திரனைப் போலவும், வனமாலை பற்பல வண்ணங்களால் ஆன வில்லைப் போலவும், கௌஸ்துப மாணிக்கம் மின்னலைப் போலவும், ஸ்ரீகிருஷ்ணன், இவை அனைத்தையும்கூடிய நீலமேகன் எனவும் ஒளிர்ந்தான் என்று சொல்லியிருக்கிறார்.

 

நம் தாசராயர் கொடுத்திருக்கும் உவமானத்தின்படி, மேற்கத்தியர் தற்போது கடற்கரையில் அத்தகைய வீட்டினை கட்டினாலும் கட்டுவர். ஆனால், பாகவதத்தில் சொல்லியிருக்கும் உவமை என்றாவது நடக்குமா? மதிய சூரியன், அத்தகைய சூரியனின் பக்கத்தில் பூர்ணசந்திரனை வானத்தில் எப்போதாவது காணமுடியுமா? அமாவாசை அன்றே சூரிய, சந்திரர் இருவரும் ஒன்றாக சேர்வர். ஆனால் அன்றைய தினம் சந்திரனுக்கு ஒளி இல்லை. இப்படியிருக்கையில், சூரியனை உச்சத்திலும், பக்கத்தில் சந்திரனைக் காண்பது என்றும் சாத்தியம் இல்லை.

 

அடுத்து, வானவில். காலையில் கிழக்கில் சூரியன் இருந்து, மேற்கில் மேகம் இருந்து, மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தால், அப்போதோ அல்லது மாலையில் மேற்கில் சூரியன் இருந்து, கிழக்கில் மேகத்திலிருந்து மழைத்துளிகள் விழுந்து கொண்டிருந்தால், அப்போது, பற்பல வண்ணங்களுடன் கூடிய வானவின் தோன்றும். இதைப் பார்க்கவேண்டுமெனில், காலையில் உதயமாகி 1-2 நாழிகைக்குள் அல்லது அஸ்தமனத்திற்கு முன் 1-2 நாழிகையில், முறையே மேற்கு கிழக்கில், இந்த வானவில் தோன்றும். மதிய நேரத்தில் இந்த வானவில் என்றும் தோன்றுவதில்லை. உச்சத்தில் சூரியன் இருந்து, அதன்கீழ் மேகங்கள் இருந்தால், சுற்றிலும் ஒளிமயமான வெயில் இருக்கையில், மின்னல் தோன்றுவது எப்படி? இவற்றில் எதுவுமே சாத்தியமில்லை.

 

குடை, விசிறி, வனமாலை, கிருஷ்ண இவை அனைத்தும் கண்ணிற்குத் தெரிபவை. இதைப்போல அந்த ஆதாரத்திலும், சூரியன், சந்திரன், வில், மின்னல்களால் கூடிய மேகம் என்று சொன்ன அனைத்தையும் காண வேண்டியதாக இருந்தது. இப்படியாக இந்த உதாரணம் நடைமுறைக்கு சாத்தியமில்லாததாக இருந்தாலும், மிகச்சிறந்ததான பகவத் ரூபத்தை விளக்குவதற்கு வேறு உதாரணம் இல்லையென்பதால், இவை அனைத்தும் சேர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி என்று உதாரணத்தைக் கொடுத்திருக்கிறார். ஆகையால், தாசராயர் இங்கு கொடுத்துள்ள உவமையும் இதைப் போலவே என்று நினைக்க வேண்டும்.

***
 

No comments:

Post a Comment