ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, March 9, 2020

#1 - வியாப்தி சந்தி

#1 - வியாப்தி சந்தி

புருஷரூபத்1ரய பு1ராத1
புருஷ புருஷோத்த1ம க்‌ஷராக்‌ஷர
புருஷபூஜிதபாத3 பூர்ணானந்த3 ஞானமய |
புருஷசூக்த1சுமேய தத்த
த்1 பு1ருஷஹ்ருத் புஷ்க3ர நிலய மஹ
புருஷ ஜாண்டந்த1ரதி33ஹிரதி3 வ்யாப்த1 நிர்லிப்த1 ||1

புருஷரூப த்ரய = மூன்று புருஷ ரூபங்களை தரித்த
புராதன புருஷ = ஆதி புருஷனான
புருஷோத்தம = க்‌ஷராக்‌ஷர புருஷர்களைவிட சிறந்தவனான
க்‌ஷராக்‌ஷர புருஷ பூஜிதபாத = க்‌ஷர = பிரம்மாதி தேவதைகள். அக்‌ஷர = ரமாதேவி. இந்த இரண்டுவித புருஷர்களால் பூஜிக்கப்படும் பாதங்களைக் கொண்ட
பூர்ணானந்த ஞானமய = முழுமையான ஆனந்தத்தையும், ஞானத்தையும் ஸ்வரூபமாகக் கொண்ட
புருஷசூக்த சுமேய = புருஷசூக்தத்தினால் நன்றாக விளக்கப்படும் 
தத்தத்புருஷ ஹ்ருத்புஷ்கர நிலய = க்‌ஷர அக்‌ஷர புருஷர்களின் இதயங்களை தன் வீடாகக் கொண்ட, அவர்களின் நடுவில்
மஹாபுருஷ = புருஷர்களின் சிறந்தவர்களான ஸ்ரீபரமாத்மனால்
ஜாண்டந்தரதி பஹிரதி = உருவாக்கப்பட்ட பிரம்மாண்டத்தின் உள்ளேயும் வெளியேயும்
வியாப்த = வியாப்தனாக இருந்தாலும்
நிர்லிப்த = அதற்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லாதவனைப் போல இருக்கிறான். 

ஸ்ருஷ்டி காலத்தில் ஸ்ரீபரமாத்மன் மூன்று புருஷ ரூபங்களை தரித்தான். இவன் புராண புருஷன். ரமா பிரம்மாதி, அனைத்து தேவதைகளையும்விட, கருட சேஷ கந்தர்வ ஆகிய எல்லோர்களையும்விட உத்தமன். க்‌ஷரா அக்‌ஷரர்களாகிய ரமா பிரம்மாதிகளால் வணங்கப்படும் பாதங்களைக் கொண்டவன். பூர்ணானந்த ஞானத்தைக் கொண்டவன். புருஷ சூக்தத்தினால் விளங்கிக் கொள்ளப்படுபவன். அந்தந்த புருஷர்களின் இதய கமலத்தில் வசித்திருப்பவன். பிரம்மாண்டத்தின் வெளியேயும் உள்ளேயும் என அனைத்து இடங்களிலும் வியாப்தனாக இருந்தாலும், எதற்கும் சம்பந்தப்படாதவன்போல இருப்பவன். 

புருஷரூபத்ரய - ஸ்ரீபரமாத்மன், மூன்று புருஷ ரூபங்களை தரித்த சந்தர்ப்பம் எப்போது என்றால்: பாகவத மூன்றாம் ஸ்கந்தம், ஆறாம் அத்தியாயத்தில்: ‘பகவானேக ஆஸேதமக்ர ஆத்மாத்மனாம் விபு:’ - அனைத்து ஜீவராசிகளுக்கும் பிரபுவான ஸ்ரீபரமாத்மன், ஸ்ருஷ்டிக்கு முன்னர் தான் ஒருவனே இருந்தான் என்று சொல்லி, அப்போது இந்த உலகத்தை படைக்க வேண்டும் என்று சிந்தித்தான் என்னும் விஷயத்தை 2ம் & 3ம் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

4ம் ஸ்லோகம்:
காலவ்ருத்யாந்து மாயாயாம் குணமய்யா மதோக்‌ஷஜ: |
புருஷேணாத்ம பூதேன வீர்யமாதத்த வீர்யர்வா ததோபவன் மஹத்தத்வ அவ்யக்தாத்கால ஜோதிதாத் ||

காலத்திற்கேற்ப பகவத்சேவை செய்துகொண்டிருக்கும் சத்வரஜோதமோ குணங்களைக் கொண்ட மாயா என்னும் பெயரைக் கொண்ட ப்ரக்ருதியில் தானே புருஷ ரூபத்தை ஸ்வீகரித்த ஸ்ரீபரமாத்மன் வீர்யதானம் செய்தான். அப்போது அவ்யக்த தத்வமும், ப்ரக்ருதியிலிருந்து மஹத் தத்வமும் பிறந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி முதல் ஸ்ருஷ்டியின் சமயத்தில், மஹத் தத்வாதிகளை படைக்க எடுத்த ரூபமே முதலாம் புருஷருபம். பிறகு மஹத்தத்வத்திலிருந்து வைகாரிக, தைஜஸ, தாமஸ என்னும் மூன்று விதமான அஹங்கார தத்வம் பிறந்தது. அதன்பிறகு பஞ்சமஹா பூதங்கள், தன்மாத்ர குணங்கள், ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், சித்தபுத்தி, மனஸ், அஹங்காரம் என்னும் 24 தத்வங்களும், அதன் அபிமானி தேவதைகளும் பிறந்தனர். அந்த தேவதைகள் அனைவரும் சேர்ந்து வசிப்பதற்கு ஒரு இடத்தை படைப்பதற்கு முயற்சித்து, அது முடியாமல், பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்த விஷயத்தை இந்த அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறார். 

ஆறாம் அத்தியாயத்தில், ஸ்ரீபரமாத்மன், தத்வாபிமானி தேவதைகளால் வணங்கப்பட்டு, சித்தாபிமானியான வாயுதேவருடன் சேர்ந்து, 23 தத்வங்களிலும் ஒரே நேரத்தில் நுழைந்து, அவர்களில் நிலைத்திருந்தான். ‘

ப்ரபுத்த கர்மாதெய்வேன த்ரயோவிம்ஷதிகோகண: |
ப்ரேரிதோ ஜனயத் ஸ்வாபிர்மாத்ராபிரபி புருஷம் ஹிரண்மய: ஸபுருஷ: சஹஸ்ர பரிவத்ஸர்யா அண்டகோஷ உவாஸாப்ஸு சர்வ சர்வோபப்ரும்ஹித: ||

பரமாத்மன் நுழைந்ததால் இந்த 23 தத்வங்களும், பகவத் ப்ரேரணையினாலும், தன்மாத்ரா குணங்களின் உதவியுடனும், ஒரு புருஷ ரூபத்தை ஸ்ருஷ்டித்தது. அந்த தங்க மயமான புருஷ ரூபமே, பிரம்மாண்டத்தின் உள்ளே இருந்து, ஓராயிரம் ஆண்டுகள் வரை தண்ணீரில் இருந்தது. அதன் பிறகு, பிரம்மாண்டத்தை 14 உலகங்களாக பிரித்தான் என்று சொல்கிறார்கள். இதிலிருந்து, பிரம்மாண்டத்தில் நுழைந்த புருஷ ரூபம் இரண்டாவது என்று தெரிகிறது. 

முதலாம் ஸ்கந்தத்தில்: 

ஜக்ருஹேபௌருஷம் ரூபம் பகவான் மஹதாதிபி: |
சம்பூதம் ஷோடஷ கலமாதௌ லோக ஸிஸ்ருக்‌ஷயா |
யஸ்யாம்பஸி ஷயானஸ்ய யோகனித்ராம் விதன்வத: |
நாபி ஹ்ருதாம்புஜாதாஸீத்பிரம்மா விஸ்வஸ்ருஜாம் பதி: |
பஷ்யாந்ததொரூப மதப்ரசக்‌ஷுஷ: சஹஸ்ரபாதோரு புஜானனாத்புதம் |
சஹஸ்ர மூர்த்த ஸ்ரவணாக்‌ஷினாஸிகம் சஹஸ்ர மௌல்யம்பர குண்டலோல்லஸத் ||

ஸ்ருஷ்டி காலத்தில் ஸ்தூல ஸ்ருஷ்டியை செய்வதற்கு, மஹத்தத்வ மஹாபூதங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, மஹத் தத்வாதி 16 கலைகளைக் கொண்ட புருஷ சம்பந்தமான ரூபத்தை தரித்தான். இந்த புருஷரூபியான ஸ்ரீபரமாத்மன், பிரளயோதய காலத்தில் படுத்து, யோக நித்திரையை முடிக்கும் காலத்தில், அவனின் நாபியிலிருந்து தோன்றிய தாமரையிலிருந்து, பிரஜைகளை ஸ்ருஷ்டிப்பவனான பிரம்மதேவர் தோன்றினார். அத்தகைய ‘சஹஸ்ர சீர்ஷாபுருஷ:’ என்னும் புருஷ சூக்தத்தில் சொல்லப்பட்டிருப்பதைப் போல, ஆயிரம் பாதங்கள், தோள்கள், காதுகள், கண்கள், மூக்குகள், ஆயிரம் கிரீடங்கள், குண்டலங்கள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ பரமாத்மனின் புருஷரூபத்தை, அல்பஞானிகள் அல்லாத, மகாத்மர்களான பிரம்மாதிகள் தற்போதும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

இப்படி மஹத்தத்வாதிகளின் படைப்பிற்குக் காரணமான புருஷரூபம் 1, பிரம்மாண்டத்தில் நுழைந்த ரூபம் 2, நாபி கமலத்திலிருந்து பிரம்மதேவரைப் படைத்து, பத்பனாப என்னும் பெயரைப் பெற்ற புருஷ சூக்தத்தில் புகழப்பட்டுள்ள ரூபம் 3, என மூன்று புருஷ ரூபங்களை பாகவதம் விளக்குகிறது. இதே விஷயத்தை ‘பிரதமம் மஹதஸ்ருஷ்டு த்விதீயம் த்வண்ட ஸம்ஸ்திதம் | த்ருதீயம் தேஹினாந்தேஹே’ என்று விஷ்ணு புராண வசனம் சொல்கிறது. இந்த வாக்கியத்தில் முதலாவது மஹத் தத்வத்தை ஸ்ருஷ்டித்த ரூபம் என்றும், இரண்டாவது பிரம்மாண்டத்தில் நுழைந்த ரூபம் என்றும் சொல்கிறது. இந்த இரண்டு ரூபங்களும் பாகவதத்தின் விளக்கத்திற்கு சரியாக பொருந்துகிறது. மூன்றாவது மட்டும் ‘தேஹினாம் தேஹே’ அனைத்து தேஹிகளின் தேகத்திலும் இருக்கும் புருஷ ரூபம் என்கிறது. ஆனால் பாகவதத்தில் பிரம்மதேவருக்கு மூலபூதமான சரீரம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

ஆக இந்த மூன்றாவது தேகத்தின் விஷயத்தில் இங்கு வேறுபாடு வருகிறது என்றால்: முதலாம் ஸ்கந்தத்தில் இதற்கு சம்பந்தமாக: 

ஏதன்மானாவதாராணாம் நிதானம் பீஜமவ்யயம் |
யஸ்யாம்ஷாம்ஷேன ஸ்ருஜ்யந்தெ தேவதியக்ஞனராதய: ||

’நாபியில் கமலம் இருப்பதால் பத்பனாபன் என்று பெயர் பெற்றுள்ள இந்த புருஷ ரூபம், அனைத்து அவதாரங்களுக்கும் விதையைப் போலவும், நிரந்தரமானதாகவும் இருக்கிறது. இந்த பரமாத்மனின் அம்சங்களிலிருந்தே, தேவதைகள், பறவை, மிருகங்கள், மனிதர்கள் ஆகியவை படைக்கப்பட்டிருக்கின்றன’ என்று சொல்கிறது. இதனால், ரமா பிரம்மாதி அனைத்து ஜீவராசிகளிலும், பின்ன-அம்சத்தினால் புருஷ ரூபத்தினால் ஸ்ரீபரமாத்மன் நிலைத்திருக்கிறான் என்று நிரூபணம் ஆகிறது. இதன் சுருக்கம் என்னவென்றால், எந்த புருஷரூபமானது, பிரம்மதேவர் உருவாக காரணமாக, பத்பனாபன் என்று பெயர் பெற்றதோ, அந்த ரூபமே அனைத்து ஜீவராசிகளிலும் இருக்கிறது என்று தெரியவருகிறது. ஆகையால், பாகவத வாக்கியத்திற்கும், விஷ்ணு புராண வாக்கியத்திற்கும் வேறுபாடு இல்லை என்று அறியவேண்டும். 

அல்லது புருஷரூபத்ரய என்பதை புருஷ, ரூபத்ரய என்று பிரித்தும் படிக்கலாம். புருஷ என்றால் ‘பூர்ண ஷட்குணத்வாத்புருஷ:’ ஆறு நற்குணங்களால் நிரம்பியவனாகையால் அவனுக்கு புருஷன் என்று பெயர். அல்லது ‘புருஸரதீதி புருஷ:’ புர என்றால் தேகம். அவன் மத்ஸ்ய, கூர்மாதி, கிருஷ்ண ரூபங்களை எடுத்திருப்பதால் புருஷன் என்று பெயர் பெறுகிறான். ரூபத்ரய = உலகப்புகழ் பெற்ற மூன்று ரூபங்களை தரித்தவன். 

பாகவத முதலாம் ஸ்கந்த தாத்பர்யத்தில் 

பிரம்மா விஷ்ண்வேஷ ரூபாணித்ரீணி விஷ்ணோர்மஹாத்மன: |
பிரம்மணி பிரம்மருபஸன் ஷிவரூபீ ஷிவேஸ்தித: ||

ஸ்ரீவிஷ்ணுவிற்கு ’பிரம்ம விஷ்ணு மஹேஸ்வர’ என்று மூன்று ரூபங்கள் உண்டு. பிரம்மதேவரில் பிரம்ம ரூபத்திலும், ருத்ர தேவரில் ருத்ரரூபத்திலும் இருந்து, ஸ்ருஷ்டி சம்ஹாரங்களை செய்கிறார். ஸ்வயம் விஷ்ணு ரூபத்தில் இருந்து அனைத்தையும் நிர்வகிக்கிறான். இப்படியாக ரூப த்ரயங்கள் பரமாத்மனுக்கு இருக்கிறது. அல்லது, பரமாத்மனின் அவதாரங்களில் மூன்று விதங்கள் உண்டு. பாகவத எட்டாம் ஸ்கந்த 3ம் அத்தியாயத்தில் - ‘நம: ஷாந்தாய கோராய மூடாய குணகர்மணே’ என்று சொல்வதால், சாந்தமான, கோரமான, மூடாவதாம் என்று மூன்று விதங்கள் இருக்கிறது என்பதை அறியலாம். வாசுதேவாதி ரூபங்கள் சாந்தமான ரூபங்கள். பரசுராமாதி அவதாரங்கள் கோரமான ரூபங்கள். மத்ஸ்யாதி அவதாரங்கள் மூடாவதாரங்கள். இந்த அவதாரங்களில் பரஸ்பரம் வேறுபாடுகள் இல்லை என்றாலும், இடம் காலத்திற்கேற்ப இப்படி சொல்லலாம். இங்கு ரூபத்ரய என்றால், மொத்தம் மூன்றே ரூபங்கள் என்று பொருளல்ல. அனேக ரூபங்கள் என்று நினைக்க வேண்டும். 

’புராதன புருஷ’ என்றால் -  ’ஏகோ நாராயண ஆஸீன்ன பிரம்மானச சங்கர:’ என்னும் வசனத்திலிருந்து பிரம்மாதிகள் அனைவரும் பிறப்பதற்கு முன்னரும்கூட ஸ்ரீபரமாத்மன் இருந்தார் என்றதால் தாசராயர் ‘புராதன புருஷ’ என்றார். புருஷோத்தமன் என்னும் சொல்லுக்கு பொதுவாக 

த்வாவியௌ புருஷௌ லோகே க்‌ஷரஷாக்‌ஷர ஏவச |
க்‌ஷரஸ்ஸர்வாணி பூதானி கூடஸ்தோக்‌ஷர உச்யதே |
உத்தம: புருஷஸ்வன்ய: பரமாத்மேத்யுதாஹ்ருத: ||

உலகத்தில் புருஷ என்னும் சொல்லால் அழைக்கப்படுபவர்கள் - க்‌ஷர மற்றும் அக்‌ஷர என்று இருவர் இருக்கின்றனர். க்‌ஷர என்றால் ஸ்தூல சரீரத்தைப் பெற்று, அதை இழக்கும் நிலையைப் பெறுபவர்கள். சரீர நாசம் இல்லாதவர்கள் அக்‌ஷரர். அது ரமாதேவி மட்டுமே. 

ஸ்த்ரி ஸ்வரூபளான ரமாதேவிக்கு புருஷ என்று எப்படி சொல்வது என்றால், சாந்தோக்ய பாஷ்யத்தில் ‘புல்லீங்கேனோச்யதே ஸ்த்ரீபும்வசத்புகிமதீயத:’ ரமாதேவி ஸ்த்ரீயாக இருந்தாலும், புருஷ சக்தி உள்ளவளாகையால், புல்லிங்க (ஆண்பால் பெயர்) பொருந்துகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி க்‌ஷர புருஷர்களான பிரம்ம, சிவாதிகளைவிட, அக்‌ஷரளான ரமா தேவியைவிட உத்தமனான புருஷன் இன்னொருவன் இருக்கிறான், அவனே புருஷோத்தமன். கீதையில் சொல்லியபடி, க்‌ஷராக்‌ஷர புருஷர்களான ரமா பிரம்மாதிகளைவிட உத்தமனாகையால் அவன் புருஷோத்தமன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த இடத்தில் அர்த்தம் சரியாக பொருந்தவில்லை எனலாம். 

தாசராயர் சொல்லும் ‘க்‌ஷராக்‌ஷர புருஷ பூஜித பாத’ என்னும் வாக்கியத்தால் க்‌ஷராக்‌ஷர புருஷரான ரமா பிரம்மாதிகளால் வணங்கப்படுபவனான பாதங்களைக் கொண்டவன் என்னும் அர்த்தம் வருவதால் புனருக்தி தோஷம் (இரு முறை விளக்கும்) வருகிறது. க்‌ஷராக்‌ஷர புருஷர்களால் வணங்கப்படும் பாதங்களைக் கொண்டவன் என்று சொன்னபிறகு, க்‌ஷராக்‌ஷர புருஷர்களைவிட உத்தமன் என்பது தானாகவே தெளிவாகிறது. ஆகையால், புருஷோத்தமன் என்னும் சொல் இங்கு தேவையேயில்லை. புருஷோத்தம என்னும் சொல்லாலேயே க்‌ஷராக்‌ஷர புருஷர்களால் வணங்கப்படுபவன் என்று தெரிந்தபிறகு, மறுபடி ’க்‌ஷராக்‌ஷர புருஷ பூஜித பாத’ என்று ஏன் இரண்டாம் முறை சொல்லவேண்டும்? இந்த காரணத்தால், புருஷோத்தமன் என்னும் சொல்லுக்கு வேறொரு அர்த்தம் சொல்லவேண்டியதாகிறது. 24 தத்வாபிமானி தேவதைகளுக்கும் புருஷ என்னும் பெயர் உண்டு. எப்படியெனில், புருஷரூபியான பரமாத்மன், ஆதியில் அவர்களில் நுழைந்து பிரம்மாண்டத்தை ஸ்ருஷ்டித்ததால், அவர்களுக்கு புருஷ என்று பெயர் வந்தது. அல்லது ‘புருஷ பஹுஷு ஷீதீதி புருஷ:’ என்னும் வாக்கியத்தால் அனைத்து பஞ்ச-பௌதிக சரீரத்திலும் தத்வாபிமானிகள் இருந்தே இருக்கின்றனர். ஆகையால், தத்வாபிமானி தேவதைகளுக்கு புருஷ என்று பெயர். 

ஸ்ரீபரமாத்மன் அந்த 24 தத்வாபிமானி தேவதைகளைவிட உத்தமனாக தான் இருப்பதால், புருஷோத்தமன் என்று பெயர் பெற்றான். அல்லது புருஷோத்தம என்னும் சொல்லுக்கு, கீதையின்படி ‘க்‌ஷரஸ்ஸர்வாணி பூதானி’ என்று பிரம்மரிலிருந்து துவங்கி அனைவருமே க்‌ஷர என அழைக்கப்படுகின்றனர். அக்‌ஷர என்றால் அது ரமாதேவி. பரமாத்மன் இவர்களைவிட உத்தமன் என்று அர்த்தம் சொல்லி, ‘க்‌ஷராக்‌ஷர பூஜித பாத’ என்னும் சொல்லுக்கு அர்த்தம் சொல்லவேண்டும். எப்படியெனில், விஷ்ணு தத்வ நிர்ணயத்தில் :

பிரம்மா ஷிவஸ்ஸுரேஷாத்யா: ஷரீர க்‌ஷரணாத்க்‌ஷரா: |
லட்சுமீரக்‌ஷர தேஹத்வாத க்‌ஷராத்பரதோ ஹரி: ||

பிரம்மா ருத்ர இந்திராதிகள், சரீர நாசம் கொண்டவர்கள் ஆகையால், க்‌ஷர என்று அழைக்கப்படுகிறார்கள். ரமாதேவியருக்கு சரீர நாசம் இல்லாததால் அவருக்கு அக்‌ஷர என்று பெயர். இவர்களைவிட உத்தமன் பரமாத்மன். இந்த ஆதாரத்தினால், க்‌ஷர சொல்லுக்கு, பிரம்ம ருத்ராதி ஜீவர்களை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும். கீதையின்படி, கலி முதலான தமோ யோக்யர்களைவிட பரமாத்மன் உத்தமனே ஆகியிருந்தாலும், அவர்களால் வணங்கப்படும் பாதங்களைக் கொண்டவன் அல்ல. தைத்யர்கள் பரமாத்மனை த்வேஷிக்கின்றனரே தவிர, பூஜிப்பதில்லை. ஆகையால், ரமா பிரம்மாதி ஜீவர்களால் பூஜிக்கப்படும் பாதங்களைக் கொண்டவன் என்று மட்டுமே பொருள். இப்படி புருஷோத்தம என்னும் சொல்லுக்கு ரமா பிரம்மாதி தகுதி உள்ளவர்களால் மட்டுமே வணங்கப்படும் பாதங்களைக் கொண்டவன் என்று பொருள் கொண்டால், அதில் புனருக்‌ஷி தோஷம் வருவதில்லை. 

பூர்ணானந்த ஞானமய = முழுமையான ஆனந்த மற்றும் ஞானத்தைக் கொண்டவன். மணிமஞ்சரியில் - ‘வந்தே கோவிந்தமானந்த ஞானதேஹம் பதிம் ஸ்ரிய:’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ‘ஆனந்தோ பிரம்மேதி வ்யஜானாத் விக்ஞானம் பிரம்மேதி வ்யஜானாத்’ என்னும் உபநிஷத் வாக்கியங்களால் ஆனந்த ஸ்வரூபன் பிரம்மன், விக்ஞான ஸ்வரூபன் பிரம்மன் என்று தனித்தனியாக சொல்லியிருக்கும் பிரம்ம ஸ்வரூபத்தை இங்கு தாசராயர், ஒரே வாக்கியத்தில் ‘பூர்ணானந்த ஞானமய’ என்று சொல்கிறார். அனைத்து சூக்தங்களும் பரமாத்மனின் ஸ்வரூபத்தையே விளக்குகின்றன என்றாலும், 

யதைவ பௌருஷம் சூக்தம் விஷ்ணோரேவாபிதாயக |
ந ததா சர்வவேதாஷ்ச வேதாங்கானி ச நாரத ||

எப்படி புருஷ சூக்தமானது வெறும் விஷ்ணு ஸ்வரூபத்தை மட்டுமே வர்ணிக்கிறதோ அது போல, அனைத்து வேத வேதாங்கங்களும்கூட சொல்வதில்லை என்று பிரம்மசூத்ர பாஷ்ய பிரமாணத்தின் அர்த்தத்திலிருந்து மேற்சொன்ன விஷயம் புரிகிறது. ஆகையால் தாசராயர் ‘புருஷசூக்த சுமேய’ என்றார். 

‘தத்தத்புருஷ ஹ்ருத்புஷ்கர நிலய’ அந்தந்த புருஷர்களின் இதய கமலங்களில் வாசம் செய்பவன் என்று பொருள். பரமாத்மன் அனைவரின் இதய கமலங்களில் கண்டிப்பாக இருந்தாலும், முதல் சந்தியின் இறுதி பத்யத்தில் ‘பரிமளவு சுமனதொளகனலனு அரணியொளகிப்பந்தெ தாமோதரனு பிரம்மாதிகள மனதலி தோரிதோரதலெ இருதிஹனு’ என்று சொன்னதைப் போல, பிரம்மாதி ஞானிகளுக்கும், யோகிகளுக்கும் தரிசனம் அளித்து, பிறருக்கு தரிசனம் கொடுக்காதிருப்பவன். ஞானிகள் அனைவரும் அவனை கண்டிப்பாக காண்பர். பாகவத நான்காம் ஸ்கந்தம் 9ம் அத்தியாயத்தில், நாரதர் த்ருவனுக்கு உபதேசம் செய்த சமயத்தில்:

ஸ்ரீவத்ஸாங்கம் கனஷ்யாமம் புருஷம் வனமாலிகம் |
ஷங்க சக்ர கதாபத்யைரபிவ்யக்த சதுர்புஜம் |
கிரீடினம் குண்டலினம் கேயூர மலயான்விதம் |
கௌஸ்துபாபரண க்ரீவம் பீதகௌஷேயவாஸம் ஸம் |
பத்ப்யாம் நகமணிஸ்ரேண்யா விலஸத்ப்யாம் சமர்ச்சதாம் |
ஹ்ருத்பத்ம கர்ணிகாதிஷ்ண்ய மாக்ரம்யாத்ம ந்யவஸ்திதம் |
ஸ்மயமானமபித்யாயேத் ஸாதுராகாவலோகனம் ||

மேகத்தைப் போன்ற கருப்பானவனும், அனைவரின் இதயத்தில் நிலைத்திருப்பவனும், வனமாலையை தரித்திருப்பவனும், சங்கு சக்ர கதா பத்மங்களை வைத்திருக்கும் நான்கு கரங்களைக் கொண்டவனும், கிரீட குண்டலங்களை ஆபரணங்களாக ஏந்தியிருப்பவனும், கௌஸ்துப ஆபரணங்களை அணிந்த கழுத்தினைக் கொண்டவனும், பீதாம்பரத்தை தரித்திருப்பவனும், மணி போன்ற அழகான நகங்களைக் கொண்ட பாதங்களைக் கொண்டவனுமான பரமாத்மன், தன்னை அர்ச்சிப்பவர்களின் இதய கமலங்களை ஆக்ரமித்து, எப்போதும் புன்னகைத்தவாறு அவர்களை பார்த்துக் கொண்டிருப்பான் என்று நினைத்தவாறு அவனை தியானம் செய்யவேண்டும் - என்று நாரதர் த்ருவனுக்கு உபதேசிக்கிறார். த்ருவனும் அப்படியே செய்ததால், பரமாத்மனை அவனது இதய கமலத்தில் கண்டான். 

அதே ஸ்கந்தத்தில் 10ம் அத்தியாயத்தில்:

ஸவைதியாயோக விபாகதீவ்ரயா ஹ்ருத்பத்மகோஷேஸ்புரிதம் தடித்ப்ரபம் |
திரோஹிதம் ஸஹஸைடோபலக்‌ஷ்யை பஹிஸ்திதம் ததவஸ்தந்ததர்ஷ ||

த்ருவன் தன் தியானத்தினால், பக்குவத்தை அடைந்து, அதனால் தன் இதய கமலத்தில் மின்னலைப் போல பிரகாசிக்கும், தான் பார்த்திருந்த ரூபமே தன் எதிரில் நின்றிருப்பதைக் கண்டான். பரமாத்மனை த்ருவனுக்கு வரத்தைக் கொடுப்பதற்காக அவன் எதிரில் நின்று - ‘வத்ஸ, எழுந்திரு. உனக்கு வரமளிப்பதற்காக நான் வந்திருக்கிறேன்’ என்று சொல்ல, த்ருவனுக்கு தன் இதயத்தில் கண்டு வந்த பகவத் ரூபமானது மறைந்தது. அதே ரூபமானது, தன் எதிரிலேயே நின்றிருப்பதைக் கண்டு, பரமாத்மனை வணங்கினான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படி, பரமாத்மன் தன்னை தியானிப்பவர்களின் கண்ணிற்கு தெரிந்து, மற்றவர்களுக்கு தரிசனம் அளிக்காமல் இருக்கிறான் என்று அறியவேண்டும். 

மஹாபுருஷ ஜாண்டந்தரதி பஹிரதி வியாப்த - மகாபுருஷனான ஸ்ரீபரமாத்மனிடமிருந்து பிறந்த பிரம்மாண்டத்தின் உள்ளே மற்றும் வெளியே, எல்லா இடங்களிலும், மிகச் சிறிய பொருட்களிலிருந்து மிகப் பெரிய பொருட்கள் வரை அனைத்திலும், தேவ தைத்ய, பறவை விலங்குகளில் நிலைத்திருக்கிறான். ‘அந்தர்பஹிஸ்ச தத்ஸர்வம் வியாப்த நாராயணஸ்தித:’ என்னும் வேத வாக்கியம் இதற்கு ஆதாரமாக இருக்கிறது. ஆனாலும், சம்பந்தப்பட்ட குண தோஷங்களிலிருந்து சம்பந்தப்படாமல் இருக்கிறான். இதற்கு ஆதாரமாக பாகவத 11ம் ஸ்கந்தத்தில்: 

தேஜோப்பன்ன மமைர்பாவைர்மே கோகைர்வாயுனேரிதை: |
நஸ்ப்ருஷ்யதே நபஸ்தத்வத் கால ஸ்ருஷ்டைர்குணை: புர்மா ||

நெருப்பினாலும், தண்ணீரினாலும், நிலத்தினாலும், காற்றினால் நகர்த்தப்படும் மேகங்களினாலும், ஆகாயமானது எப்படி தோஷங்கள் அற்றதாக இருக்கிறதோ, அது போலவே பரமாத்மன், நர, மிருக போன்ற அனைத்து பிராணிகளிலும், அவற்றின் சம்பந்தப்பட்ட குண தோஷங்களின் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறான் என்று பொருள். இதிலிருந்து ‘நிர்லிப்த’ என்னும் சொல்லுக்கு அர்த்தம் விளங்குகிறது. 

இந்த சந்தியில் எந்தெந்த இடங்களில், எந்தெந்த ரூபங்களால் பரமாத்மன் வியாப்தனாக இருந்து, என்னென்ன விஷயங்களை செய்கிறான் என்னும் விஷயங்களை சொல்கிறார் தாசராயர். இந்த விஷயத்தையே இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார். 

***

2 comments:

  1. முதல் செய்யுளுக்கே இப்படிப்பட்ட மிக மிக விஸ்தாரமான வியாக்கியானங்கள் அளித்ததமைக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. வாசித்து புரிந்தவார்கள் எல்லோரும் பாக்கியசாலிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றாக புரியும் வண்ணம் விளக்கம் அளித்ததற்கு நன்றி.

      Delete