ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Tuesday, March 10, 2020

#2 - வியாப்தி சந்தி

#2 - வியாப்தி சந்தி


ஸ்த்ரீ நபு1ம்சக1 புருஷ பூ4 சலி
லானலானில க33ன மன ஷஷி
பா4னு கா1ல கு3ண ப்ரக்ருதியொளகொ3ந்து3 தா1னல்ல |
ஏனு இவன மஹாமஹிமெ கடெ3
கா3ணரஜ ப4வ ஷக்ரமுக2ரு நி
தா3னிலு மானவரிக3ள வடு3வதே விசாரிசலு ||2

ஸ்த்ரி, நபும்சகன், புருஷ, பூ = பூமி, ஸலில = தண்ணீர், அனல = நெருப்பு, அனில = வாயு, ககன = ஆகாயம், மன = மனஸ். மன என்னும் சொல்லில், சித்த, புத்தி, அஹங்கார, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, இவை அனைத்தையும் குறிக்க வேண்டும். மேலும், ஷஷி = சந்திரன், பானு = சூரியன், கால, குண = சத்வ ரஜஸ் தமோ குணங்கள், ப்ரக்ருதி = குளாத்மகளான ப்ரக்ருதி, இவற்றில், ஒந்து = எவையும் இவன் அல்ல. 


இவற்றிலிருந்து வேறுபட்டு, அவற்றின் அந்தர்யாமியாக இருக்கிறான். இவன மஹாமஹிமெ = மகாமகிமைகளை என்னவென்று வர்ணிப்பேன்? (அல்லது இவனது மகாமகிமை என்ன என்று வியப்புடன் பார்ப்பது). 

அஜ பவ ஷக்ர முகரு = பிரம்ம, ருத்ர, இந்திர ஆகியோர். 
நிதானிஸலு = எவ்வளவு சிந்தித்தாலும் 
கடெகாணரு = இறுதியை பார்க்க முடியாது
விசாரிசலு = சிந்தித்துப் பார்த்தால்
மானவரிகெ = மனிதர்களுக்கு
அளவடுவுதெ = சாத்தியம் ஆகுமா? (என்றும் சாத்தியமே இல்லை).

ஸ்ரீபரமாத்மனின் ஸ்வரூபம் எத்தகையது என்றால், அவன் ஸ்த்ரி அல்ல, நபும்ஸகன் அல்ல, புருஷன் அல்ல, ப்ருத்வி, அபு, முதலான பஞ்ச பூதங்கள் அல்ல, தன்மாத்ர குணங்களில் ஒன்றுக்கும்கூட சம்பந்தப்பட்டவன் அல்ல. சித்த, புத்தி, மனஸ், அஹங்கார ஆகியவற்றில் எதற்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல. அவன் சந்திரனும் அல்ல. சூரியனும் அல்ல. காலனும் அல்ல. குணப்ரக்ருதியும் அல்ல. இவற்றிலிருந்து வேறுபட்டவன். இவற்றைத் தவிர வேறு எது மீந்திருக்கிறதோ, அதுவே பகவத் ஸ்வரூபம். அவனின் மகிமைகளை என்னவென்று வர்ணிப்பேன்? எவ்வளவு யோசித்தாலும், பிரம்மா ருத்ராதி தேவதைகளும்கூட அவனது ஸ்வரூபத்தைப் பற்றி முழுமையாக அறியார். என்று சொன்னபிறகு மனிதர்களால் அது சாத்தியமாகுமா? என்றும் முடியாது என்பதே சொல்ல வந்த விஷயம். 

முந்தைய ஸ்லோகத்தில், பிரம்மாண்டத்தின் உள்ளேயும், வெளியேயும் நிலைத்திருந்து, அதற்கு சம்பந்தப்படாமல் ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான் என்று சொல்லிவிட்டு, இந்த ஸ்லோகத்தில் அவன் ஸ்த்ரி அல்ல, புருஷன் அல்ல என்கிறார். இதே அர்த்தத்தை பாகவதம் எட்டாம் ஸ்கந்தம் ‘ஸவ்யேன தேவாசுர மர்த்ய திர்யங்னஸ்த்ரி நஷண்டோ நபுமான்னஜந்து:’ என்னும் ஸ்லோகத்தில் சொல்லியிருக்கின்றனர். இந்த இரண்டு ஸ்லோகங்களுக்கும் வேறுபாடு இருப்பதுபோல தெரிகிறது. ஏனென்றால், ஸ்ரீபரமாத்மன், அனைத்து இடங்களிலும் வியாப்தனாக இருப்பதால், சர்வஷப்த வாச்யனாக இருக்கிறான். பாகவத 11ம் ஸ்கந்தத்தில்:

கம்வாயு மக்னிம் ஸலிலம் மஹீஞ்ச ஜ்யோதீம்ஷி சத்வானி விஷோத்ருமார்தீ |
சரித்ஸமுத்ராம்ஸ்ச ஹரே:ஷரீரம் யத்கிஞ்ச பூதம் ப்ரணமேதனன்யம் ||

என்னும் ஸ்லோகத்தில், ஆகாயம், வாயு, அக்னி, தண்ணீர், பூமி, ஆகிய அனைத்தும் பகவந்தனின் சரீரம் என்று நினைக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. எட்டாம் ஸ்கந்தத்தில் ‘ஸவைனதேவா’ என்னும் ஸ்லோகத்தினாலும், ‘ஸ்த்ரி நபும்சக’ என்னும் பத்யத்தினாலும், இவை பரமாத்மனல்ல என்று சொல்லியிருக்கின்றனர். அப்படியெனில், இதில் எது உண்மை என்று நம்ப வேண்டும்? 

அதாவது, 11ம் ஸ்கந்த ஸ்லோகத்தின்படி, ஸ்த்ரி, புருஷ, ஆகாச, வாயு ஆகியவற்றில், அந்த பொருட்களின் பெயரில், அதன் வடிவத்தில், அவற்றில் இருப்பதால், அவற்றில் இருக்கும் பகவத்ரூபங்களை சிந்தித்து பூஜிக்கவேண்டும். 8ம் ஸ்கந்த ஸ்லோகத்தின்படி மற்றும் இந்த பத்யத்தின்படியும், பரமாத்மன் ஆகாயம் முதலானவற்றில் இருந்தாலும், அதற்கு சம்பந்தப்பட்ட குண தோஷங்களுக்கு சம்பந்தப்படாமல் நிர்லிப்தனாக இருக்கிறான். அதுமட்டுமல்லாமல், அந்த ஆகாயங்களே பரமாத்மன் அல்ல. அவற்றிலிருந்து வேறுபட்டு, அவற்றின் உருவத்தைப் பெற்று மட்டும் இருக்கிறான். அவனது உண்மையான ஸ்வரூபம், அந்த ஆகாயம் முதலான ப்ராக்ருத வஸ்துகளில் எதுவும் அல்ல. பரமாத்மன் அப்ராக்ருதன் என்பதை சொல்லியிருக்கின்றனர். ஆகையால், இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் வேறுபாடு இல்லை என்பதை அறியவேண்டும். 

இவன மஹாமஹிமெ கடெகாணரஜபவ ஷக்ரமுகரு நிதானிஸலு - இப்படி இருக்கையில், மனிதர்கள் இவனின் மகிமைகளை காண்பரே? இதே அர்த்தத்தையே பாகவத 7ம் ஸ்கந்த 9ம் அத்தியாயம் 

பிரம்மாதயஸ்ஸுரகணா முனயோத ஸித்தா: ஸத்வைக தானமதயோ வசஸாந்த்ரவாஹ்யை: |
நாந்தம் பரஸ்ய பரதோப்யதுனாபியாந்தி கிந்தோஷ்புமர்ஹதி ஸமே ஹரிருக்ரஜாதே: ||

பிரம்மாதி அனைத்து தேவதா கணங்கள், ரிஷிகள், சித்தர்கள் ஆகிய மஹனீயர்கள் உன் மகாமகிமைகளை, அவர்களது பிரவாகமான வாக்கினால் எவ்வளவு துதித்தாலும், இன்னும் அதன் இறுதியைக் காணமுடியாமல் இருக்கின்றனரோ, அத்தகைய நீ தைத்ய குலத்தில் பிறந்த எனக்கு நீ தரிசனம் அளித்தது உன் விருப்பத்தினாலேயே தவிர வேறு காரணம் எதுவுமில்லை என்று பிரகலாதன் சொல்கிறான். இதே அர்த்தத்தையே தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார். 

***


2 comments:

  1. அற்புதமான விளக்கங்கள். மிக்க நன்றி. வணக்கம்.

    ReplyDelete
  2. கன்னடம் தெரியாத எங்களை போன்ற வர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். நன்றி

    ReplyDelete