#8 - வியாப்தி சந்தி
ஜாக3ர ஸ்வப்னங்களொளு வர
போ4கிஷயன பஹுப்ரகார வி
பா4க3கை3ஸி நிரம்ஷஜீவர
சிச்சரீரவனு |
போ4கவித்து சுஷுப்தி கா1லதி3
சாக3ரவ நதிகூ1டுவந்தெ1 வி
யோக3 ரஹிதனு அம்ஷக3ளனேகத்ர வைதிசுவ ||8
வரபோகிஷயன = உத்தமமான, சர்ப்பம் அதாவது சேஷதேவரே படுக்கையாக உள்ள ஸ்ரீபரமாத்மன்
ஜாகரஸ்வப்னங்களொளு = ஜீவர்கள் முழித்திருக்கும்போதும், ஸ்வப்ன அவஸ்தையிலும்
நிரம்ஷஜீவர = அம்சம் இல்லாத மனித ஜீவர்களின்
பஹுப்ரகார = பல விதங்களில்
விபாககையிஸி = பகுத்து (பிரித்து)
போகவித்து = போகங்களைக் கொடுத்து
சுஷுப்திகாலதி = தூங்கும்போது
வியோக ரஹிதனு = பிரியாமல் இருந்தாலும்
சாகரவ நதிகூடுவந்தெ = கடலை ஆறுகள் போய் சேர்வதைப் போல
அம்ஷகள = ஜீவர்களின் அம்சங்களை
ஏகத்ர = ஒரே இடத்தில்
ஐதிசுவ = சேர்த்து விடுவான்.
சேஷசயனனான ஸ்ரீபரமாத்மன், மனிதர்களுக்கு, ஜாக்ர அவஸ்தையில் அதாவது முழித்திருந்து வேலைகளை செய்திருக்கும் காலங்களில், நிரம்ஷ என்றால், மனிதர்கள் முதல் கிருமிகள் வரையில் என்று பொருள். இத்தகைய ஜீவர்களின் ஞானஸ்வரூபமான ஸ்வரூப தேகத்தை, மனிதன், யானை, குதிரை, பசு, எருமை ஆகியவையாக பிரித்து, ஜீவர்களின் யோக்யதைக்கேற்ப அவரவர்களுக்கு மனைவி, குழந்தைகள், தன தான்யங்கள் ஆகியவற்றைக் கொடுத்து போகங்களைக் கொடுக்கிறான்.
அதே பரமாத்மன், ஸ்வப்னாவஸ்தையில் நாம் காணும் இடங்களை, மக்கள், யானை, குதிரை ஆகிய நிரம்ஷ ஜீவர்களின் ஸ்வரூப தேகங்களை, ஸ்தூல தேகங்களை அம்சங்களாக பிரிக்கிறான். அதாவது, நாம் நம் கனவில் எந்த உறவினர்களைப் பார்க்கிறோமோ, யானை, குதிரைகளை பார்க்கிறோமோ, அவை உண்மையல்ல. அந்த கனவில் மட்டும் அவை உண்மையாக தெரிகின்றன. இதன் காரணம் என்னவெனில், ஸ்ரீபரமாத்மன், நாம் கனவில் பார்க்கும் மக்களின் அல்லது யானை, குதிரை ஆகிய ஜீவர்களின் அம்சங்களை பிரித்து, அவர்களின் ஸ்தூல தேகங்களைப் போல வேறு தேகங்களை ஸ்ருஷ்டித்து, அவற்றை கனவில் காட்டி போகங்களைக் கொடுக்கிறான்.
மறுபடி ஆழ்ந்த தூக்கம் வந்தபோது, தான் பிரித்த ஜீவர்களின் அம்சங்களை, எங்கிருந்து அந்த அம்சங்கள் பிரித்தெடுக்கப்பட்டனவோ, அங்கேயே மறுபடி சேர்த்துவிடுகிறான். அது எப்படியெனில், கடல் நீர் சூரிய ஒளியினால் ஆவியாகி, மேகங்களில் சேர்ந்து, மழையாக பெய்து, மறுபடி அதே நீரே கடலில் போய் சேர்கிறதோ, அது போலவே, பரமாத்மனிலிருந்து ஸ்ருஷ்டியான அம்சங்கள் மறுபடி ஜீவர்களிடமே போய் சேர்கின்றன என்று பொருள்.
சிறப்புப் பொருள்:
ஜீவர்களின் சாம்ஷர், நிரம்ஷர் என்று இரு விதங்கள் உண்டு. ஒரு அம்சத்தினால் தம் உலகங்களில் ஸ்தூல தேகங்களால் வசிப்பதோடு மட்டுமல்லாமல், தத்வாபிமானிகளாக சூக்ஷ்ம ரூபங்களால் அனைவரின் தேகங்களிலும் தனித்தனியாக வசிக்கின்றனர் அல்லது ஒரு ரூபத்தினால் தம் உலகங்களில் இருந்துகொண்டு, பூமியில் ஒரு அம்சத்தினால் பிறக்கின்றனர். இந்த குணங்களைப் பெற்றவர்கள் சாம்ஷ ஜீவர்கள் என்று அறிய வேண்டும்.
உதாரணம்:
வாயுதேவர் மூலரூபத்தினால் தம் உலகத்தில் இருந்தாலும், அம்சத்தினால் ஹனும, பீம, மத்வ அவதாரங்களை எடுத்து, பூமியிலும் இருந்தார். அதே சமயத்தில், அனைவரின் சித்தத்திலும், சித்தாபிமானிகளாக வசித்திருந்தார். இப்படியே, இந்திரதேவரும் ஸ்வர்க்கத்தை காத்தவாறு அங்கு இருந்தாலும், அர்ஜுனனாகவும், வாலியாகவும் பிறந்தார். இது மட்டுமல்லாமல், அனைவரின் கரங்களுக்கு அபிமானியாகவும் அனைவரின் கரங்களில் சூக்ஷ்ம ரூபங்களில் இருந்து, கைகளால் செய்யப்படும் செயல்களை செய்து வருகிறார். இவர்கள் அனைவ்ரும் சாம்ஷர்களே.
மேலும் கலி முதலான தைத்யர்கள், ஸ்தூல தேகத்தினால் தம் உலகத்தில் இருந்தாலும், இந்திரியாபிமானிகளாக அனைவரின் இந்திரியங்களில் சூக்ஷ்ம ரூபத்தினாலும், துரியோதனாதிகளாக பூமியில் பிறந்தும் இருந்தனர். ஆகையால், இத்தகைய தைத்யர்கள்கூட சாம்ஷ ஜீவர்களே. மனிதன் முதல் கிருமி வரை மட்டும் இப்படி சாம்ஷர் அல்ல. அங்கு இருந்தால் இங்கு இல்லை. இங்கு இருந்தால் அங்கு இல்லை. ஆகையால், இவர்கள் நிரம்ஷ ஜீவர்கள் இல்லை என்று அறியவேண்டும். ஆனால், இவர்களுக்கும்கூட சில சமயங்களில் சாம்ஷத்வம் வருகிறது.
ஆதாரம்:
வாமன புராணத்தில்:
நிரம்ஷானாஞ்ச ஜீவானாம் க்வசித்ஸாம்ஷத்வமிஷ்யதே |
லோகாந்தரேஷு சாம்ஷத்வம் சுகாதேவ பவிஷ்யதி ||
நிரம்ஷரான ஜீவர்களுக்கும்கூட சில சமயங்களில் சாம்ஷத்வம் வருகிறது. இவர்கள் புண்ணிய சாதனங்களை செய்துகொண்டு, ஸ்வர்க்க லோகத்தில் வாசம் செய்தவாறு, தன் புண்ணிய பலன்களை போகித்திருக்கும்போது, சாம்ஷர்கள் ஆவர். பூலோகத்தில் என்றைக்கும் சாம்ஷர்கள் ஆகமாட்டார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனாலும், பரமாத்மன், ஜீவர்களுக்கு கனவில், சுகதுக்கங்களைக் கொடுக்க விருப்பப்பட்டபோது, நிரம்ஷ ஜீவர்களைக்கூட, தன் விருப்பத்தின்பேரில் சாம்ஷ ஜீவர்களாக மாற்றுகிறான்.
அனம்ஷஸ்யாபி ஜீவஸ்ய விபாகம் பஹுதாஹரி: |
க்ருத்வாபோகான்ப்ரதாயைவ சைக்யமாபத்யதே புன: ||
நிரம்ஷரான ஜீவர்களுக்கு கனவில் இருக்கும்போது, படுத்திருக்கும் ஜீவனின் அம்சத்தை, ஸ்தூல தேகங்களைக் கொடுத்து, வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று, அங்கு யானை குதிரைகளின் அம்சத்தைப் பிரித்து, அவற்றின் ரூபங்களைக் கொடுத்து, பரஸ்பர சம்பந்தத்தினால் சுக துக்காதிகளைக் கொடுத்து, மறுபடி அந்தந்த ஜீவர்களின் அம்சத்தை அங்கேயே திரும்ப சேர்க்கிறான். இதுவே மேற்சொன்ன ஸ்லோகத்தின் அர்த்தமாகும். பிம்பக்ரியைகளை செய்தவாறு எப்போதும் ஜீவர்களில் இருப்பதால், பரமாத்மனுக்கு ‘வியோக ரஹிதனு’ என்று பெயர்.
***
No comments:
Post a Comment