ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, March 11, 2020

#3 - வியாப்தி சந்தி

#3 - வியாப்தி சந்தி

கந்த4 ரஸ ரூப1 ஸ்பர்ஷ ஷ
ப்தொ3ந்து3 தா1னல்லத3ரத3ர பெச
ரிந்த31ரெசுத ஜீவரிகெ31ர்பக1னு தா1னாகி3 |
பொ1ந்தி3 கொ1ண்டி3ஹ பரமக1ருணா
சிந்து4 சாஸ்வத1 மனவெ மொத3லா
திந்த்ரியக3ளொளகி3த்து3 போ4கி3சுதி1ஹனு விஷயக3||3


கந்த ரஸ ரூப ஸ்பர்ஷ ஷப்த = இந்த ஐந்து தன்மாத்ரா குணங்களுக்கு
ஒந்து தானல்ல = ஸ்ரீபரமாத்மன் இவை எவற்றிற்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல
அதரதர = அந்தந்த
பெஸரினிந்த = பெயர்களில்
கரெஸுத = அழைத்துக்கொண்டு
ஜீவரிகெ = ஜீவர்களுக்கு
தர்பகனு = திருப்தியைக் கொடுக்கிறான்
பொந்திகொண்டிஹ = சேர்த்துக் கொண்டிருக்கிறான்
ஷாஸ்வத = நிரந்தரமானவன்
பரமகருணாசிந்து = பரம கருணைக்கடலான ஸ்ரீஹரி
மனவெ மொதலாதிந்த்ரியகளொளகித்து = மனஸ், ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆகியவற்றில் இருந்து
விஷயாதிகள = விஷய போகங்களை
போகிஸுதிஹனு = ஜீவர்களின் சுகத்திற்காக தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறான். 

கந்த, ரஸ, ரூப, ஸ்பர்ஷ, ஷப்த என்னும் ஐந்து தன்மாத்ரா குணங்களில் ஸ்ரீபரமாத்மன் எதுவும் இல்லை. ஆனாலும், அவன் அவற்றில் இருந்து அவற்றினால் ஆகும் செயல்களை தானே செய்து, செய்விப்பதால் பரமாத்மனே கந்த ரஸாதி சொற்களால் அழைக்கப்படுகிறான் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆக, இந்த ஐந்து தன்மாத்ரங்களில் இருந்து, அவற்றினால் ஆகும் சுகங்களை ஜீவர்களுக்குக் கொடுத்து, திருப்திப்படுத்துகிறான். கருணைக்கடலான ஸ்வாமி, மனஸ், கண், காது ஆகிய இந்திரியங்களுக்குள் அதன் வடிவமாகவே இருந்து பார்க்கிறான், கேட்கிறான் - ஜீவர்களின் கர்மங்களுக்கேற்ப செயல்களை செய்வித்து, சுகங்களை மட்டும் தான் அனுபவிக்கிறான். அதுவும்கூட ஜீவர்களின் நலனுக்காகவே ஆகும். பூர்ணகாமனான ஸ்ரீஹரிக்கு இந்த சுகங்களினால் ஆவதென்ன? (எதுவும் இல்லை). பரமாத்மன், அந்த சுகங்களை ஸ்வீகரிக்காதிருந்தால், ஜீவர்களுக்கு சுகம் கிடைக்காது. ஆகையாலேயே, அவற்றை ஸ்வீகரிக்கிறான் என்று அறியவேண்டும். 

கந்தரஸாதி மாத்ரா குணங்களின் விவரம்:

பஞ்ச மஹாபூதங்களில், பூததத்வ மாத்ரா குணம் - கந்த. இந்த பூத-தத்வம், ஞானேந்திரியங்களில் ஒன்றான மூக்கில் இருக்கிறது. இதன் மாத்ரா குணமே கந்தம் ஆகையால், மனிதர்கள் நறுமணத்தையும், துர்மணத்தையும் வித்தியாசம் அறிகின்றனர். ஆகையால், கந்தகுணம் சிறந்த பூத-தத்வ குணம் என்று அறியவேண்டும். ஸ்ரீபரமாத்மன், மூக்கு இந்திரியத்தில், அதே உருவமாக, அதே பெயரில், அதில் அடங்கியிருக்கும் பூததத்வத்திலும், தன்மாத்ரா குணமான கந்தத்திலும் இருந்து, சுகந்தத்தை தான் ஸ்வீகரித்து, அதன் மூலம் ஜீவர்களை திருப்திப்படுத்துகிறான். துர்மணத்திலிருந்து வரும் துக்கத்தை, தான் ஏற்றுக்கொள்ளாமல், அதனை ஜீவர்களுக்கு அவர்களின் கர்மத்திற்கேற்ப கொடுக்கிறான். 

அது ஏனெனில், பரமாத்மனுக்கு ஏதோவொரு புண்ணியத்தைக் கொடுத்தால் ‘மரளிதனகர்ப்பிஸலு கொட்டுதனந்த மடிமாடி’ என்று தாசராயர் முன்னர் சொல்லியிருப்பதைப் போல, அந்த புண்ணியத்தை அவன் ஏற்றுக்கொண்டு, அதனை பன்மடங்காக்கி திருப்பிக் கொடுக்கிறான். இப்படி பக்தர்கள் கொடுக்கும் பாவங்களை தான் ஏற்றுக்கொண்டால், அதையே பன்மடங்காக்கி திருப்பி அவர்களுக்கே கொடுக்க வேண்டியிருப்பதால், பரமாத்மன், பக்தர்கள் தாங்கள் செய்த புண்ணிய பாவங்களை தனக்கு சமர்ப்பித்தால், அந்த பாவங்களை தான் ஏற்றுக்கொள்ளாமல் அவற்றை பஸ்மம் ஆக்கிவிடுகிறான். 

இதுமட்டுமல்லாமல், பரமாத்மன், ஆனந்தஸ்வரூபமானவன் ஆகையால், ஜீவர்கள் கொடுக்கும் ஆனந்தத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறான். துக்கங்கள் இல்லாதவன் ஆகையால், பக்தர்கள் தனக்கு சமர்ப்பிக்கும் பாவங்களை சுட்டு பொடிப்பொடியாக்கி விடுகிறான். அந்த பக்தர்கள் செய்யும் பாவங்களினால் வரும் பலன்களை, அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கிறான். அவர்கள் கொடுக்கும் சுகங்களை, பக்தர்களின் நலனுக்காக, தன் விருப்பப்படி தான் ஸ்வீகரிக்கிறானே தவிர, அந்த புண்ணிய பாவங்கள், பரமாத்மனை எதுவும் செய்வதில்லை.

தண்ணீரானது அனைத்தையும் நனைக்கும் / மூழ்கடிக்கும் சக்தி கொண்டதாக இருந்தாலும், எப்படி தாமரை இலையை அது நனைப்பதில்லையோ, அப்படியே, கண் காது முதலான இந்திரியங்களால் வரும் சுகதுக்கங்கள் பரமாத்மனை பாதிப்பதில்லை. பரமாத்மன் எதற்கும் சம்பந்தப்படாதவனாக இருக்கிறான். இப்படியே மற்ற கர்மேந்திரியங்களின் செயல்களும் இருக்கின்றன என்று அறியவேண்டும். இந்த கண், காது ஆகியவற்றின் செயல்களுக்கு முக்கிய காரணம் - மனஸ். மனஸ் இல்லாமல் அந்த இந்திரியங்களின் செயல்கள் எதுவும் நடைபெறுவதில்லை. 


நம் மனம் நம்மிடம் இல்லாதிருந்தால், நம் எதிரில் யார் இருந்தாலும் அவர் நமக்குத் தெரிவதில்லை. யார் எது சொன்னாலும், அது நமக்குக் கேட்பதில்லை. இது அனைவருக்குமே அனுபவத்தில் வந்த விஷயம்தான். ஆகையாலேயே, பாகவதத்தில் ‘மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்தமோக்‌ஷயோ:’ என்று சொல்லியிருக்கின்றனர். ஆகையால், அனைத்து இந்திரியங்களையும்விட மனஸ் என்னும் இந்திரியமே பெரியது. ஸ்ரீபரமாத்மன் மனோ-நாமகனாகி மனதில் இருந்து, ஞானேந்திரிய கர்மேந்திரியங்களால், கர்மங்களை செய்வித்து சுகங்களை தான் ஏற்றுக்கொண்டு, ஜீவர்களை திருப்திப்படுத்தி, துக்கங்களை ஜீவர்களுக்குக் கொடுத்து தான் எதற்கும் சம்பந்தப்படாமல் இருக்கிறான். 

***


No comments:

Post a Comment