#16 - வியாப்தி சந்தி
தோ1த3க1னு தானாகி மனமொத3
லாத3 க1ரணதொளித்து3 விஷயவ
நைது3வனு நிஜபூர்ண சுக2மய க்ராஹ்ய க்ராஹக1னு |
வேத3வேத்3யனு திளியத3வனோ
பா1தி3 பு4ஞ்சிஸுதெ1ல்லரொளகா3
ஹ்லாத3 ப3டு3வனு ப4க்தவத்ஸல பா4க்யஸம்ப1ன்ன ||16
தோதகனு = எதையும் தீர்மானிப்பவன்
தானாகி = தானே ஆன
மனமொதலாத = மனது முதலான
கரணதொளித்து = இந்திரியங்களில் இருந்துகொண்டு
விஷயவனு = விஷய சுகங்களை
ஐதுவனு = (பரமாத்மன் தானே) அவற்றைப் பெறுகிறான்
நிஜபூர்ண சுகமய = பூர்ணானந்த ஸ்வரூபன் (ஆனாலும்)
க்ராஹ்யக்ராஹகனு = கந்த ரஸ முதலான வஸ்துகளில் இருந்து, க்ராஹ்ய என்று பெயர் பெறுகிறான், மூக்கு, நாக்கு ஆகிய இந்திரியங்களில் இருந்து க்ராஹக என்று பெயர் பெறுகிறான்.
பாக்யசம்பன்ன = ஷட்குணைஸ்வர்யங்களைக் கொண்டவனான, பக்தவத்ஸலனான ஸ்ரீபரமாத்மன்
திளியதவனோபாதியலி = ஒன்றும் தெரியாதவனைப் போல
புஞ்சிசுத = அவரவர தேகங்களில் சுகங்களை போகித்தவாறு
எல்லரொளகு = அனைவரின் தேகங்களிலும் இருந்து மகிழ்ச்சியடைகிறான்.
ஸ்ரீபரமாத்மன், மனம் முதலான இந்திரியங்களில் இருந்து, ஜீவர்களுக்கு விஷயாதிகளில் ஆசையை உருவாக்கி செய்யும் செயல்கள் என்ன?
ஸ்ரீபரமாத்மன், மனம் முதலான இந்திரியங்களில் இருந்து, அதாவது, கண்களில் இருந்து, ரூபங்களை பார்ப்பது, காதுகளில் இருந்து சத்தத்தைக் கேட்பது, மூக்கில் இருந்து வாசனையை ஸ்வாசிப்பது ஆகிய செயல்களை செய்கிறான். நாக்கினில் இருந்து ருசியை ஏற்றுக் கொள்கிறான். தோல் சர்மங்களில் இருந்து, குளிர் வெயில் ஆகியவற்றை உணர்கிறான். மேலும், கண் காது போன்ற இந்திரியங்களின் அபிமானிகளான தேவதைகளில் இருந்து பார்ப்பது, கேட்பது, உண்பது, ஜீர்ணிப்பது, குளிர் வெயில்களை உணர்வது என அந்தந்த செயல்களை செய்கிறான். இதன் பொருள் என்னவெனில்: கண் முதலான அபிமானி தேவதைகளில் இருந்து பார்ப்பதற்கும், கேட்பதற்கும் தீர்மானிக்கிறான். கண் முதலான இந்திரியங்களில் இருந்து ரூப, சப்தங்களை ஏற்றுக்கொள்கிறான் என்று அறியவேண்டும்.
க்ராஹ்ய க்ராஹக என்றால்: கண்களால் பார்க்கத் தகுதியானவை அழகான வஸ்துகள். இதற்கு க்ராஹ்ய என்று பெயர். ரூபங்களை பார்ப்பவை கண் முதலான இந்திரியங்கள். ஸ்ரீபரமாத்மன் தானே க்ராஹ்ய ரூபியாகவும், க்ராஹக ரூபியாகவும் இருக்கிறான். இப்படி, தத்வாபிமானி தேவதைகளில் இருந்து, க்ராஹ்ய வஸ்துகளை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்லி, இந்திரியங்களில் இருந்து அவற்றை ஏற்றுக்கொண்டு, விஷய சுகங்களை அனுபவிக்கிறான். அவனோ, எப்போதும், பூர்ணானந்த ஸ்வரூபன். ஒருவரில் இருந்து ஆனந்தத்தை ஏற்றுக்கொள்வது அவனுக்கு பெரிய விஷயமில்லை. வேதங்களால் புகழப்படுபவன். ஆறு நற்குணங்களால் நிரம்பியவன். ஆனாலும், ஜீவர்களில் இருந்து, ஒன்றும் தெரியாதவனைப் போல, அந்தந்த தேகங்கள் ஏற்கும் சுகங்களை ஏற்று மகிழ்ச்சியடைகிறான்.
தனக்கு சுக அனுபவங்களின் விருப்பமே இல்லாவிட்டால், ஸ்ரீபரமாத்மன், ஜீவர்களில் இருந்து அந்த சுகங்களை ஏன் அனுபவிக்க வேண்டும்? அதாவது, அவன் பக்தவத்ஸலன் ஆகையால், ஜீவர்களை மேம்படுத்துவதற்காக (உத்தரிப்பதற்காக) தான் அவற்றை ஏற்றுக்கொள்கிறான். பாகவத 7ம் ஸ்கந்தத்தில், இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது.
நைவாத்மன: ப்ரபுரயம் நிஜலாபபூர்ணோ மானஞ்சனாதவிதுஷ: கருணோவ்ருணீதே |
யத்யஜ்ஜனோ பகவதே விததீதமானம் தச்சாத்மனே ப்ரதிமுகஸ்ய யதாமுகஸ்ரீ: ||
இந்த ஸ்லோகத்தை ஏற்கனவே ஒரு இடத்தில் உதாரணமாகப் பார்த்திருக்கிறோம். ஆனாலும், பேசும் விஷயத்திற்கு சம்பந்தப்பட்டிருப்பதால் மறுபடி இங்கே பார்க்கலாம். ஸ்ரீபரமாத்மனுக்கு தன் விருப்பத்தினாலேயே தனக்கு பூர்ணமான சுகம் இருக்கிறதே தவிர, ரமாதேவியர் மூலமாகக்கூட தனக்கு ஆகவேண்டியது ஒன்றும் இல்லை. அப்படி இருந்தாலும், தகுதியானவர்களில் இருந்து பூஜைகளை செய்வித்து, ஜீவர்களில் இருந்து அதை ஏற்றுக்கொள்கிறான். அது எதற்கு என்றால், அவன் கருணைக்கடல் ஆகையால், பக்தர்களின் பூஜையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால், பக்தர்களுக்கு திருப்தி ஆவதில்லை. அவர்களின் நலனுக்காகவே தான் அவற்றை ஏற்றுக்கொள்கிறான். நம் முகத்தின் அலங்காரத்தைப் பார்த்து மகிழவேண்டும் என்றால், அதை கண்ணாடியில் பார்த்து மகிழவேண்டுமே தவிர, நம் முகம் நமக்குத் தெரிவதில்லை. ஆனால், கண்ணாடியில் தெரியும் முகத்தின் பிரதிபிம்பத்திற்கு அலங்காரம் செய்வது சாத்தியமில்லை. ஆகையால், நம் முகத்திற்குத் தேவையான அலங்காரம் செய்துகொண்டு, கண்ணாடியில் அதைப் பார்த்து மகிழ்வதைப் போல, பிம்பனான பரமாத்மன் பூஜையை ஏற்றுக்கொண்டால் நமக்கு மகிழ்ச்சி உண்டாகிறது என்பதே இந்த ஸ்லோகத்தின் கருத்து.
மரங்களின் வேருக்கு நீர் இறைத்தால், அதன் கிளைகள் வளர்வதைப் போல், நம் தேகத்தின் இருந்து பரமாத்மன் சுகங்களை அனுபவித்தால், அது ஜீவனுக்கு திருப்தி ஆகிறது. இல்லையெனில், ஜீவன் சுகத்தைப் பெறுவதில்லை. ஆகையாலேயே, ஸ்ரீபரமாத்மன் தேகங்களில் இருந்து விஷய சுகங்களை அனுபவித்து, ஜீவனை திருப்திப்படுத்துகிறான் என்று அறியவேண்டும்.
***
No comments:
Post a Comment