ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, March 13, 2020

#5 - வியாப்தி சந்தி

#5 - வியாப்தி சந்தி

கு3ணி கு3ணகளொளகி3த்து3 கு3ணி கு3
நெனிசுவனு கு3ணபத்த4னாக3தெ3
கு3ணஜ புண்யாபுண்ய ப2ல பிரம்மாதி சேதனக்கெ |
உணிசுதவரொளகி3த்து3 வ்ருஜினா
ர்த்த3ன சிதானந்தைக1 தே3ஹனு
கொ1னெகெ3 ஸசராசர ஜக3த்புகு4யெனிப னவ்யயனு ||5

குணி குணகளொளகித்து = குணங்கள் உள்ளவர்களில் (சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் ஜீவர்களில்)
குணபத்தனாகதெ = அந்த குணங்களுக்கு கட்டுப்படாமல்
குணிகுணனெனிஸுவனு = அந்த குணம் என்றே அழைக்கப்படுகிறான்
குணஜ = சத்வரஜஸ்தமோ குணங்கள் உள்ளவர்கள், அந்த குணங்களுக்கேற்ப செய்யும் செயல்கள்
புண்யாபுண்யபல = புண்ய, பாவ பலன்களை 
பிரம்மாதி சேதனக்கெ = பிரம்மனில் தொடங்கி கலி வரைக்குமான சேதன சமூகத்திற்கு
அவரொளகிர்து = பிரம்மாதி ஜீவர்களில் இருந்து
உணிஸுத = சத்வ குணங்களால் வரும் புண்ய பலன்களை பிரம்மாதி தேவதா சேதனர்களுக்கும்; ரஜோ குணத்தால் வரும் சுகதுக்கம் கலந்த பலன்களை ராஜஸர்களான மனிதர்களுக்கும்; தமோகுணங்களால் வரும் பாவ பலன்களை தைத்ய தானவர்களுக்கும் கொடுத்தவாறு, 
வ்ருஜினார்த்தன = பாவங்களை நாசம் செய்யும் (போக்கும்)
சிதானந்தைக தேஹனு = ஞானம், ஆனந்தம் இவற்றையே தேகமாகக் கொண்டிருக்கும் பரமாத்மன்
கொனெகெ = பிரளய காலத்தில் (ருத்ராந்தர்யாமியாக சங்கர்ஷண ரூபத்தில்)
ஸசராசரஜகத்புக் = சராசர பிராணிகளைக் கொண்ட உலகத்தை விழுங்கி (ருத்ரதேவரின் மூன்றாம் கண்ணிலிருந்து வந்த அக்னியால் சுடுகிறான் என்று பொருள்)
யெனிப = ஸசராசர என்னும் பெயரைப் பெறுகிறான்
அவ்யயனு = பிரளய காலத்திலும்கூட நாசம் இல்லாத பரமாத்மன், 
ஜகத்புக் = சராசர உயிரினங்களைக் கொண்ட இந்த உலகத்தை விழுங்கி, தன் உதரத்தில் வைத்துக்கொண்டு, ஸ்ரீமன் நாராயணன்
எனிப = என்று அழைத்துக் கொள்கிறான். 

குணங்கள் உள்ளவர்களுக்கு குணி என்று பெயர். இதில் சத்குணங்கள் அதிகமாக இருப்பவர்கள் சாத்விகர் எனப்படுகின்றனர் (பிரம்மாதி தேவதைகள்). ராஜஸர்களான மனிதர்கள் ரஜோகுணங்களைக் கொண்டவர்கள். தாமஸர் என்றால் தமோகுணம் கொண்ட தைத்ய தானவர்கள். இத்தகைய குணிகளான தேவ, மனுஷ்ய, தைத்யர்களிலும், சத்யரஜஸ்தமோ குணங்களிலும் நிலைத்திருந்து, அந்தந்த பெயர்களைப் பெறுகிறான். அதாவது, பிரம்ம தேவரில் பிரம்ம எனும் பெயரில் இருந்து, ருத்ர தேவரில் ருத்ர என்னும் பெயரில் இருந்து, இப்படியே இந்திராதி தேவதைகளிலும் இருந்து அந்தந்த பெயர்களில் அழைத்துக் கொள்கிறான். அப்படியே மனிதர்களிலும் இருந்து, அவர்களின் பெயர்களில் அழைக்கப்படுகிறான். தைத்ய தானவர்களில் இருந்து, அந்த பெயர்களில் அழைக்கப்படுகிறான். 

சத்குணத்தில் இருந்து சத்குணம் என்றும், ரஜோகுணத்தில் இருந்து ரஜோகுணன் என்றும், தமோகுணத்தில் இருந்து தமோகுணன் என்றும், பெயர் பெறுகிறான். இப்படி ப்ராக்ருதமான சத்வாதி குணங்களில் இருந்து, அந்தந்த பெயர்களைப் பெறுகிறானே தவிர, அந்த குணங்களினால் என்றைக்கும் தான் சிக்கமாட்டான். 

சாத்விகர்களான பிரம்மாதி தேவதைகளில் இருந்து, சத்வகுணத்தால் வரும் பலன்களை, அவரவர்களின் தகுதிக்கேற்ப அவர்களுக்கே கொடுக்கிறான். ராஜஸர்களான மனிதர்களில் இருந்து, ரஜோகுணத்தால் வரும் சுக-துக்கம் கலந்த பலன்களை, அவரவர்களின் தகுதிக்கேற்ப அவர்களுக்கே கொடுக்கிறான். தாமஸர்களான தைத்ய தானவர்களில் இருந்து, தமோகுணத்தால் வரும் பாப பலன்களை, அவரவர்களின் தகுதிக்கேற்ப அவர்களுக்கே கொடுக்கிறான். பிறரின் பாவங்களைப் பரிகரிப்பதால், பரமாத்மனுக்கு வ்ருஜினார்த்தன என்று பெயர். தானே பாவியாக இருந்தால், மற்றவர்களின் பாவங்களை எப்படி பரிகரிப்பது? பிறரின் பாவங்களைப் போக்குகிறான் என்று சொன்னதால், ஸ்வத: பாவங்கள் இல்லாதவன் என்று சொல்லத் தேவையேயில்லை. பாவங்கள் இல்லாதவனாகவும், ஞானானந்த ஸ்வரூபனாகவும் இருக்கிறான். 

ரமாபிரம்மாதிகளும்கூட ஞானாந்த ஸ்வரூபர்களே ஆகியிருந்தாலும், அவர்களின் ஞானானந்தத்திற்கு எல்லைகள் உண்டு. பரமாத்மனின் ஞானானந்தம் எல்லைகள் அற்றது. ஒப்புமைக்கு அப்பாற்பட்டது. அதுமட்டுமல்லாமல், வேறு ஒருவரின் உதவி இல்லாமலேயே, ஸ்வதந்த்ரமாக அனுபவிக்கக்கூடியது பரமாத்மனின் ஞானானந்தம். ரமாதிகளின் ஞானானந்தம், பரமாத்மனுக்குக் கட்டுப்பட்டவை. ஆகையால், பரமாத்மன் ஒருவனே, ஞானானந்த ஸ்வரூபர்களில் முக்கியமானவன் என்று அறியவேண்டும். 

ஸ்ரீபரமாத்மன், பிரளயம் துவங்கும்போது, ருத்ரனின் அந்தர்யாமியாக இருந்து, சங்கர்ஷண நாமகனாகி பிரபஞ்சத்தை எரிக்கிறான். இதற்கு ஆதாரமாக பாகவத 10ம் ஸ்கந்தத்தில் :

தத: ஸாம்வர்தகோ வன்ஹி சங்கர்ஷண முகோத்தித: |
தஹத்யனிலவேகோத்த: சூன்யான்பூவிவராந்ததா ||


பிறகு, சங்கர்ஷணனின் முகத்திலிருந்து வந்த அக்னி, சூன்யமான பூமியை தகிக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. சர பிராணிகள் என்றால் நடமாடிக்கொண்டிருக்கும் அனைத்து பிராணிகளும் என்று பொருள். அசல என்றால் நடமாடாத பிராணிகள் என்று பொருள். இவற்றைக் கொண்ட அனைத்து உலகங்களையும், பிரளய காலத்தில் பரமாத்மன் விழுங்கி, தன் வயிற்றில் வைத்துக்கொண்டு, வடபத்ரசாயியாக (ஆல இலை) படுத்திருக்கிறான். ஆகையால், பரமாத்மன் ‘ஸசராசர ஜகத்புக்’ என்று அழைத்துக் கொள்கிறான். ஆனாலும், அவனுக்கு எந்தவிதமான நாசமும் இல்லாத காரணத்தால் ‘அவ்யயன்’ என்றும் பெயர் பெறுகிறான்.

***

No comments:

Post a Comment