ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, August 20, 2020

31-40 சர்வ ஸ்வாதந்த்ர்ய சந்தி

 

விதி4 நிஷேத33ளெரடு3 மரெயதெ3

மது4விரோதி3ய பாத3கர்ப்பிஸ

லதி3தி மக்களிகீ3வ புண்யவ பாப தை3த்யரிகெ3 |

ஸு3ருஷன த4ரகீ3யதி3ரெ ப3

ந்தொ33கி3 ஒய்வரு புண்ய தை3த்யரு

அதி4பரில்லத3 வ்ருக்‌ஷக3ள ப2லத3ந்தெ நித்யத3லி ||31

 

விதி நிஷேதகளெரடு = விதி மற்றும் தடை ஆகியவற்றை சரியாக பின்பற்றுவதாலும், விடுவதாலும் கிடைக்கும் புண்ய பாபங்களை

மரெயதெ = மறக்காமல்

மதுவிரோதிய = மதுசூதனனுக்கு

பாதகர்ப்பிஸலு = அர்ப்பித்தால்

அதிதி மக்களிகெ = அதிதியின் மக்களான தேவதைகளுக்கு

புண்யவ = புண்யத்தை

ஈவ = கொடுக்கிறான்

பாப = பாப கர்மங்களை

தைத்யரிகெ = தைத்யர்களுக்கு கொடுக்கிறான்

சுதருஷன தரகெ = சக்ரதாரியான பரமாத்மனுக்கு

நித்யதலி = தினந்தோறும்

ஈயதிரெ = அர்ப்பிக்காமல் இருந்தால்

தைத்யரு = தைத்யர்கள்

பந்தொதகி = புண்யம் செய்யும் காலத்திற்கு சரியாக அங்கு வந்து

புண்ய = புண்யத்தை

அதிபரில்லத வ்ருக்‌ஷகள பலதந்தெ = யஜமானர் இல்லாத மரங்களின் பழங்களைப்போல; அதாவது, காவல்காரன் இல்லாத மரங்களில் இருக்கும் பழங்களை மற்றவர்கள் திருடுவதைப்போல

ஒய்வரு = அபகரிப்பர்.

 

விதி என்றால் கட்டாயம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட கர்மங்கள். நிஷேத என்றால் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்ட கர்மங்கள். இந்த இரண்டில், விதியை சரியாக பின்பற்றி, தடை செய்யப்பட்டதை செய்யாமல் விடுவதே புண்ய கர்மங்கள். தடை செய்யப்பட்டதை செய்வது; விதியை விடுவது - பாவ கர்மங்கள். இத்தகைய புண்ய பாபங்கள் என எதை செய்தாலும், எப்போதும் மறக்காமல் அவற்றை பரமாத்மனின் பாதாரவிந்தங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

 

பரமாத்மன் புண்ணியங்களை தேவதைகளுக்கும், பாவங்களை தைத்யர்களுக்கும் பிரித்துக் கொடுக்கிறான். புண்யத்தை தேவதைகளுக்குக் கொடுத்துவிட்டால், நமக்கு புண்ய பலன்கள் எங்கிருந்து வரும் என்று யோசிக்கக்கூடாது. சத்பாத்ரர்களில் சிறிது தானம் செய்தாலும், அது அக்‌ஷயமாகிறது. நாம் சம்பாதித்திருக்கும் பணத்தை வீட்டில் வைத்துக் கொண்டிருந்தால் திருடர்களின் பயம் வரும். அதற்காக அந்த பணத்தை வங்கிகளில் வைத்தால், எப்படி அது வட்டியுடன் வளர்ந்து நமக்கு திரும்பக் கிடைக்கிறதோ, அப்படியே பரமாத்மன், நாம் செய்த புண்யத்தை, அவனுக்கு அர்ப்பிப்பதால், அதனை தான் தத்வாபிமானி தேவதைகளில் வைத்து, அதன் பலன்களை நமக்கு இருமடங்காக்கி கொடுக்கிறான்.

 

புண்யத்தை நாம் பரமாத்மனுக்கு அர்ப்பிக்கவில்லையெனில், வீட்டில் இருக்கும் பணத்தை திருடர்கள் திருடுவதைப்போல வந்து, தைத்யர்கள் அந்த புண்யத்தை அபகரித்து விடுகின்றனர். ஆகவே, அனைத்தையும் பரமாத்மனுக்கு அர்ப்பிக்க வேண்டும். பரமாத்மன், நம் பாவங்களை தைத்யர்களுக்குக் கொடுத்து, அயோக்யர்களுக்குக் கொடுத்த பணம் எப்படி மூழ்கிவிடுகிறதோ அப்படியே அந்த பாவங்கள் அனைத்தும் தைத்யர்களில் மூழ்கிப் போகிறது. ஆகையால், புண்ய பாவம் இந்த இரண்டினையும் பரமாத்மனுக்கு அர்ப்பிக்க வேண்டும் என்பது கருத்து.

 

திலஜ கஷ்மல த்யஜிஸி தீ3பவு

திளியதைலவ க்3ரஹிஸி மந்தி3

தொ3ளகெ3 வ்யாபிஸியிப்ப கத்தல ப3ங்கிஸுவ தெரதி3 |

கலிமொத3லு கொ3ண்ட3கி2ல தா3னவ

குலஜரனுதி3ன மாள்ப புண்யஜ

2லவ பி3ரம்மாத்3யரிகெ3 கொட்டல்லல்லெ ரமிஸுவனு ||32

 

திலஜ = எள்ளிலிருந்து வந்த

கஷ்மல = கசடுகளை

தீபவு = தீபமானது

த்யஜிஸி = புறக்கணித்து

திளிய தைலவ = தெளிந்த எண்ணெயை மட்டும்

க்ரஹிஸி = இழுத்துக்கொண்டு

மந்திரதொளகெ = வீட்டில்

வியாபிஸி = பரவி

இப்ப = இருக்கும்

கத்தல பங்கிசுவ தெரதி = இருட்டினை விரட்டுவதைப்போல

கலி மொதலு கொண்டு = கலியில் துவங்கி

அகிள தானவ குலஜரு = தைத்யர்களின் குலத்தில் பிறந்தவர்கள் அனைவரும்

அனுதின மாள்ப = தினந்தோறும் செய்யும்

புண்யஜ பலவ = புண்ணியத்தின் பலன்களை

பிரம்மாத்யரிகெ = பிரம்மதேவரே முதலான தேவதைகளுக்கு

கொட்டு = கொடுத்து

அல்லல்லெ = அந்தந்த தேவதைகளில் இருந்து,

ரமிஸுவனு = ஆனந்தப்படுகிறான்.

 

விளக்கில் எண்ணையை ஊற்றி, தீபம் ஏற்றினால், அந்த எண்ணையில் இருக்கும் கசடுகளை பொருட்படுத்தாமல், அவற்றை அந்த விளக்கிலேயே விட்டுவிட்டு, தெளிவான எண்ணையை மட்டுமே இழுத்து, ஒளியானது வீட்டை ஒளிர்வித்து, இருட்டினை விரட்டுவதைப் போல, ஸ்ரீஹரி, கலி முதலான தைத்ய குலத்தவர் செய்யும் பாபரூப கசடுகளை அங்கேயே விட்டு தெளிவான எண்ணையைப் போல இருக்கும் புண்யத்தை மட்டும் இழுத்து, வீடுகளைப் போல இருக்கும் பிரம்மாதிகளில் தான் வியாபித்து, அவர்களில் இருக்கும் இருட்டிற்கு சமமான பாவங்களை அழித்து, தான் அங்கங்கே ஒளிர்ந்து கொண்டிருக்கிறான் என்பது கருத்து.

 

ஈர்3லெயு நித்யத3லி மேத்4யா

மேத்4ய வஸ்துக3ளுண்டு3 லோகதி3

ஷுத்த4 ஷுசி எந்தெ3னிஸிகொம்ப3னு வேத3ஸ்ம்ருதிக3ளொளு |

பு3த்தி4பூர்வகவாகி3 விபு43ரு

ஸ்ரத்தெ3யிந்த3ர்ப்பிஸி3 கர்ம நி

ஷித்த4வாத3ரு ரியெ கைகொண்டு3த்த4ரிஸுதிப்ப ||33

 

ஈர்தலெயு = இரு தலைகளைக் கொண்ட அக்னி

நித்யதலி = எப்போதும்

மேத்யாமேத்ய வஸ்துகள = யோக்ய, அயோக்ய வஸ்துகளை

உண்டு = எரித்து

லோகதி = உலகத்தில்

வேத ஸ்ம்ருதிகளொளு = ஸ்ருதி ஸ்ம்ருதிகளில்

ஷுத்த ஷுசியெந்து = தோஷங்கள் அற்றவன், தூய்மையானவன் என்று

எனிஸிகொம்பனு = அழைத்துக் கொள்கிறான்

புத்திபூர்வகவாகி = தெளிவாக அறிந்துகொண்டு

விபுதரு = தேவதைகள்

ஸ்ரத்தெயிந்த = பக்தியுடன்

அர்ப்பிஸித = தனக்கு அர்ப்பித்த

கர்ம நிஷித்தவாதரு = கர்மங்கள், தடை செய்யப்பட்டவையாக இருந்தாலும்

சரியெ = அதை சரியென்று

கைகொண்டு = ஏற்றுக்கொண்டு

உத்தரிசுதிப்ப = அவர்களை அருள்கிறான்.

 

சத்வாரி ஸ்ருங்கா த்ரயோஸ்யபாதா த்வேஷீர்ஷே - என்னும் ஸ்ருதியின்படி, அக்னி இரு தலைகளைக் கொண்டுள்ளது என்பது தெரிகிறது. ஆகையாலேயே தாசராயர் இங்கு ஈர்தலெயெ என்று சொல்லியிருக்கிறார். இத்தகைய அக்னி, யாகாதிகளில் ஆஹுதியை ஏற்றுக் கொள்கிறான். கூடவே பிணத்தையும் ஏற்றுக் கொள்கிறான். ஆனாலும், அக்னி, நித்ய சுத்தன் (தூய்மையானவன்) என்று ஸ்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. அதைப்போல, புத்திபூர்வகமாக, பக்தி, ஸ்ரத்தையுடன் தம்மில் இருக்கும் கர்மங்களை தேவதைகள் பரமாத்மனுக்கு அர்ப்பித்தால், பரமாத்மன் அவை தடை செய்யப்பட்ட கர்மங்களாக இருந்தாலும் ஏற்றுக்கொண்டு அவர்களை அருள்வான். அந்த பாவங்களை தான் சுட்டுப் பொசுக்குகிறான். ஆகையால், பாப சம்பந்தத்தினால் பரமாத்மன் தோஷங்களைக் கொண்டவன் என்று எண்ணாமல், அவன் நித்யானந்த ஸ்வரூபமானவன் என்று பெயர் பெற்றிருக்கிறான்.

 

ஒடெ3யரித்த3 வனஸ்த22லக3

3டி3து திம்பு3வருண்டெ கண்ட3ரெ

ஹொடெ3து பி3ஸுடு3வரெம்ப ப4யதி3ம் நோட3லஞ்சுவரு |

பி33தெ3 மாடு3வ கர்மக3ளு மனெ

மட3தி3 மக்களு ப3ந்து43ளு கா

ரொட3லனாளுக3ளெந்த3 மாத்ரதி3 ஓடுவுவு து3ரித ||34

 

ஒடெயரித்த = யஜமானனால் பாதுகாக்கப்பட்ட

வனஸ்த = காட்டில் இருக்கும்

பலகள படிது திம்புவருண்டெ = மரங்களில் இருக்கும் பழங்களைத் திருடி தின்பவர்கள் உண்டா?

கண்டரெ = அந்த யஜமானன் பார்த்தால்

ஹொடெது பிசுடுவரெம்ப = அடித்து துரத்துவர் என்னும்

பயதிம் = பயத்தால்

நோடலஞ்சுவரு = அதை பார்ப்பதற்கே பயப்படுபவர்

பிடதெ மாடுவ கர்மகளு = நாம் செய்யும் கர்மங்கள்

மனெ மடதி மக்களு பந்துகளு = வீடு மனைவி மக்கள் உறவினர், இவர்கள் அனைவரும்

காரொடலன = ஜகதுதரன (ஜகத்தை தன் வயிற்றில் வைத்துக் கொண்டிருப்பவனின்)

ஆளுகளு = சேவகர்கள்

எந்த மாத்ரதி = என்று சொன்ன உடனேயே

துரித = பாபங்கள் அனைத்தும்

ஓடுவுவு = ஓடுகின்றன.

 

தோட்டக்காரர் ஒருவர் தன் தோட்டத்தில் இருக்கும் மரங்களை காத்து வந்தால், அந்த மரங்களில் இருக்கும் பழங்களை திருடித் தின்பதற்கு அனைவரும் பயப்படுவார்கள். தாம் அவற்றை திருடுவதைப் தோட்டக்காரர் பார்த்துவிட்டால், அடித்து துரத்துவார் என்கிற பயத்தால் அதை பார்ப்பதற்கே பயப்படுவார்கள். அதைப்போலவே, நாம் செய்யும் கர்மங்கள், நம் வீடு, மனைவி, மக்கள், உறவினர்கள் என அனைத்துமே பரமாத்மனின் சேவகர்களே என்று நினைத்து சர்வ சமர்ப்பணம் செய்தால், நமக்கு எதிரிகளான பாவங்கள் அனைத்தும் ஓடிப் போகின்றன.

 

ஞான கர்மேந்தி3ரியளிந்தே3

நேனு மாடு3வ கர்மக3ள ல

குமி நிவானிக3ர்ப்பிஸுதலிரு காலகாலத3லி |

ப்ராணபதி கைகொண்டு3 நானா

யோனியைதி3னொம்மெ கொட3தி3ரெ3

தா3னவரு ஸெளெதொ3ய்வரெல்லா புண்யராஷிக3||35

 

ஞான கர்மேந்திரியங்களிந்த = ஞானேந்திரியங்களால், கர்மேந்திரியங்களால்

ஏனு மாடுவ கர்மகள = செய்யும் அனைத்து கர்மங்களும்

காலகாலதலி = அந்தந்த காலங்களில்

லகுமி நிவாசனிகெ = லட்சுமிபதியான ஸ்ரீஹரிக்கு

அர்ப்பிசுதலிரு = அர்ப்பித்து வா

ப்ராணபதி = ப்ராணேஷனான ஸ்ரீஹரி

கைகொண்டு = அவற்றை ஏற்றுக்கொண்டு

நானா யோனி= அனேக வித பிறவிகளை

ஐதிஸலு = கிடைக்காதவாறு பார்த்துக் கொள்வான்

ஒம்மெ கொடதிரெ = ஒரு வேளை அந்த கர்மங்களை நாம் அவனுக்கு அர்ப்பிக்காவிடில்

எல்லா புண்யராசிகள = நாம் செய்யும் அனைத்து புண்ய ராசிகளையும்

தானவரு = அசுரர்கள்

செளெதொய்வரு = அபகரித்துவிடுவர்.

 

கண் முதலான ஞானேந்திரியங்களால், கை கால் முதலான கர்மேந்திரியங்களால் நாம் செய்யும் அனைத்து கர்மங்களையும் அந்தந்த காலத்திலேயே பரமாத்மனுக்கு அர்ப்பிக்க வேண்டும். அப்படி செய்தால், பரமாத்மன் அவற்றை ஏற்றுக்கொண்டு நமக்கு மறுபிறவி இல்லாதவாறு பார்த்துக் கொள்வான். ஒரு வேளை நாம் அப்படி அவனுக்கு அவற்றை சமர்ப்பிக்காவிடில், நாம் செய்த புண்யராசிகளை தைத்யர்கள் அபகரித்துவிடுவர்.

 

ஸ்ருதி ஸ்ம்ருத்யர்த்த2வ திளித3

ம்மதி3 விஷிஷ்டனு கர்ம மாட3லு

ப்ரதிக்ரஹிச பாபக3ள கொடு3திப்ப  நித்ய ஹரி |

சதுரத3ஷ பு4வனாதி3ப க்ரது

க்ருத க்ருதக்4 நியாமகனெனெ

மதிய ப்4ரம்ஷ ப்ரமாத3 ங்கடதோ3ஷவவகி3ல்ல ||36

 

ஸ்ருதி = வேதார்த்தங்கள்

ஸ்ம்ருத்யர்த்தவ = புராண வாக்கியங்களின் அர்த்தங்களை

திளிது = அறிந்துகொண்டு

அஹம் மதி விசிஷ்டனு = நான் எனது என்னும் அறிவு கொண்டவன்

கர்ம மாடலு = சத்கர்மங்களை செய்தாலும்

ப்ரதிக்ரஹிஸலு = பரமாத்மன் அவற்றை ஏற்றுக் கொள்ளமாட்டான்

நித்யதலி = எப்போதும்

பாபகள = சஜ்ஜனர்கள் செய்யும் பாவங்களை

கொடுதிப்ப = இவர்களுக்கு கொடுப்பான்

சதுரதஷ புவனாதிபதி = 14 உலகங்களுக்கும் அதிபதியான

க்ரது = யக்ஞ நாமகனான ஸ்ரீஹரி

க்ருத = சத்கர்மங்களை செய்த புருஷனுக்கும்

க்ருதக்ஞ = இந்த புருஷனால் உதவி பெற்றேன் என்று அறிந்தவனுக்கும்

நியாமகனு = தலைவன்

எனெ = என்று நினைத்தால்

மதிப்ரம்ஷ = புத்தி கெட்டு

ப்ரமாத = அன்யதா ஞானம் பிறப்பது

ஸங்கட = அதனால் வரும் துக்கங்கள்

தோஷவு = இதே முதலான தோஷங்கள்

இவகில்ல = இவனுக்கு இல்லை.

 

ஸ்ருதி, ஸ்ம்ருதி இவற்றின் அர்த்தங்களை தான் அறிந்து, அதனை மற்றவர்களுக்கு போதனை செய்யக்கூடிய சக்தியைக் கொண்டிருந்தாலும், தான், தனது என்னும் அபிமானத்தை விடாதவன், எந்த சத்கர்மங்களை செய்தாலும், அவற்றை சத்கர்மங்கள் என்று பரமாத்மன் ஒப்புக்கொள்வதில்லை. ஆகையால், அந்த புண்ய கர்மங்களுக்கு பலன்கள் இல்லை மற்றும் சஜ்ஜனர்களிடம் இருக்கும் பாபங்களை மட்டும் இவனுக்கே கொடுக்கிறான்.

 

14 உலகங்களுக்கும் தலைவனான, யக்ஞ நாமகனான ஸ்ரீஹரி, சத்கர்மங்களை செய்பவனும், செய்விப்பவனும் - இவர்கள் அனைவரிலும் நின்று, அவற்றை செய்து, செய்விக்கிறான் என்று உபாசனை செய்பவர்களுக்கு எப்போதும் அறிவு கெடுவதில்லை. தவறான ஞானம் பிறப்பதில்லை. எந்தவிதமான சங்கடங்களும் வருவதில்லை.

 

க்ருத, க்ருதக்ஞ என்னும் இரு சொற்களுக்கு அர்த்தம்: க்ருத என்றால் செய்யப்பட்ட என்று பொருள். சத்கர்மங்களை, செய்பவன் என்று அர்த்தம். இத்தகைய சத்கர்மங்களை செய்பவன் பரமாத்மனின் ஆணையின்படியே செய்கிறான் என்று அறிபவனே, க்ருதக்ஞன் எனப்படுகிறான். அந்த ஞானம் வரவேண்டுமானாலும், பகவத் அருளாலேயே வருகிறது என்று அறிந்து உபாசனை செய்ய வேண்டும்.

 

வாரிஜான முக்2யராக்ஞா

தா4ரகரு ர்வ ஸ்வதந்த்ர ர

மாரமண நெந்த3ரிது இஷ்டானிஷ்ட கர்மப2

ஸாரபோ3க்தனி க3ர்ப்பிஸலு ஸ்வீ

கார மாடு3வ பாபப2லவ கு

பே3ர நாமக தை3த்யரிகெ3 கொட்டவர நோயிஸு||37

 

வாரிஜாஸன முக்யரு = பிரம்மதேவரே முதலானவர்கள்

ஆக்ஞாதாரகரு = பரமாத்மனின் ஆணையின்படி நடப்பவர்கள்

ரமாரமணனு = லட்சுமிதேவியருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஸ்ரீபரமாத்மன்

சர்வஸ்வதந்த்ரன் = ஸ்வதந்த்ரமானவன்

எந்தரிது = என்று அறிந்து

இஷ்டானிஷ்ட கர்மபல = புண்ய பாப கர்மங்களின் பலன்களை

ஸாரபோக்தனிகெ = பலன்களின் சாரத்தை உண்ணும் ஸ்ரீஹரிக்கு

அர்ப்பிஸலு = அர்ப்பித்தால்

ஸ்வீகார மாடுவ = அதனை ஏற்றுக் கொள்கிறான்

குபேரனாமக = குபேரன் என்னும் பெயருள்ள ஸ்ரீஹரி

பாபபல = பாப பலன்களை

தைத்யரிகெ கொட்டு = தைத்யர்களுக்குக் கொடுத்து

அவர நோயிசுவ = அவர்களுக்கு துக்கத்தைக் கொடுக்கிறான்.

 

பிரம்மதேவரே முதலானவர்கள் அனைவரும் பரமாத்மனின் வசத்தில் இருந்து, அவனின் ஆணைப்படி நடந்து கொள்வர். பரமாத்மன் ஒருவனே சர்வஸ்வதந்த்ரன் என்று அறிந்து, நாம் செய்த புண்ய பாப கர்மங்களை பரமாத்மனுக்கு அர்ப்பித்தால், பரமாத்மன் அவற்றை ஏற்றுக்கொண்டு புண்ய பலன்களின் சாரத்தை தான் உண்டு, அதை தனக்கு அர்ப்பித்தவர்களுக்கு பலன்களை இரு மடங்காக்கிக் கொடுத்து சுகப்படுத்துவான். குபேரன் என்னும் பெயருள்ள பரமாத்மன், தனக்கு அர்ப்பித்த பாப பலன்களை தைத்யர்களுக்குக் கொடுத்து அவர்களை துக்கப்படுத்துவான்.

 

க்ரூர தை3த்யரொளித்து3 தானே

ப்ரேரிஸுவ காரணதி3 ஹரிகெ3 கு

பே3ரனெம்ப3ரு எல்லரொளு நிர்க3தரதிகெ3 நிருத |

ஸூரிக3ம்யகெ3 ஸூர்யனெம்ப3ரு

தூ3ரஷோககெ3 ஷுக்லலிங்க3

ரீரவில்லத3 காரணத3லி அகாயனெனிஸுவனு ||38

 

க்ரூர தைத்யரொளித்து = தைத்யர்களில் இருந்துகொண்டு

தானே = தான்

ப்ரேரிசுவ காரணதி = தானே வழிநடத்தும் காரணத்தால்

ஹரிகெ = ஸ்ரீஹரியை

குபேரனெம்பரு = குபேரன் என்று அழைக்கிறார்கள்

எல்லரொளு = அனைவரிலும்

நிர்கதரதிகெ = எப்போதும் பிரவேசம் செய்யும் யோக்யதை உள்ளவன் ஆகையால்

நிருத = அவனுக்கு நிருத என்று பெயர்.

சூரிகம்யகெ = ஞானிகளால் அறியப்படும் ஸ்வரூப உள்ளவன் ஆகையால்; அல்லது, ஞானிகளால் அடையப்படும் ஸ்தானம் உள்ளவனாகையால்

சூர்யனெம்பரு = சூரியன் என்று பெயர் இருக்கிறது

தூரஷோககெ = சோகங்கள் இல்லாதவனுக்கு; அல்லது, சோகங்களையே காணாதவனுக்கு

சுக்லலிங்க சரிரவில்லத காரணதலி = (ப்ரக்ருதியிலிருந்து வரும் ஸ்தூல சரீரம் இல்லாதவன்) - சுக்ல, லிங்க சரீரங்கள் இல்லாத காரணத்தால்,

அகாயனெனிஸுவனு = அகாய (சரீரம் இல்லாதவன்) என்ற பெயர் பெறுகிறான்.

 

க்ரூரர்களான தைத்யர்களில் இருந்து, பாபங்களை செய்ய முடிவெடுத்ததால் குமதேரீரணாத் குபேர:என்னும் இலக்கணத்தால், ஸ்ரீஹரிக்கு குபேரன் என்று பெயர். ஸூரிகம்யத்வாத் ஸூர்ய:ஞானிகளால் அடையப்படும் ஸ்தானத்தைக் கொண்டவன் ஆகையால் சூர்யன் என்று பெயர். சுக்லந்தச்சோகராஹித்யாத்என்னும் ஆதாரத்தால், சோகங்கள் இல்லாதவன் ஆகையால், சுக்ல என்று பெயர். ஆகாஷோ லிங்கவர்ஜனாத்என்னும் பிரமாணத்தால் லிங்கசரீர இல்லாத காரணத்தால், அகாய என்று பெயர்.

 

ஈசாவாஸ்ய உபநிஷத் பாஷ்யத்தின் ஆதாரத்தின் பெயரில் தாசார்யர் இந்த பெயர்களை சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும்.

 

பேளலொஷவல்லத3 மஹா பா

பாளிக3ளனொந்தெ3 க்‌ஷணதி3 நி

ர்மூலகை3லிபே3கு எம்பு3வகொ3ந்தெ3 ஹரி நாம |

நாலிகெ3யொளுள்ளவகெ3 பரமக்ரு

பாலு க்ருஷ்ணனு கைபிடி3து3

ன்னாலய தொ3ளிட்டனுதி3னதி3 ஆனந்த33டி3ஸுவனு ||39

 

பேளலொஷவல்லத = சொல்வதற்கு சாத்தியமில்லாத

மஹா பாபாளிகள = பக்தர்களால் செய்யப்படும் மிகப்பெரிய பாவங்களை

ஒந்தேக்‌ஷணதி = ஒரே நொடியில்

நிர்மூலகைஸலு பேகு = அழிக்கப்பட வேண்டும்

எம்புவகெ = என்று விரும்புபவனுக்கு

ஹரி நாம ஒந்தே = ஹரி நாமம் ஒன்றே (முக்கிய சாதனம் ஆகும்)

நாலிகெயொளுள்ளவகெ = இந்த ஹரி நாமம் தன் நாக்கில் இருப்பவனுக்கு; அதாவது, ஹரி நாமஸ்மரணையை எப்போதும் செய்துகொண்டிருப்பவனுக்கு

பரமக்ருபாளு = பரம கருணாளுவான ஸ்ரீகிருஷ்ணன்

கைபிடிது = கையைப் பிடித்து

தன்னாலயதொளு = தன் இருப்பிடமான வைகுண்டத்தில்

இட்டு = வைத்து

அனுதினதி = தினந்தோறும் (எப்போதும்)

ஆனந்த படிசுவனு = மகிழ்ச்சிப்படுத்துவான்.

 

இவன் எவ்வளவு பாவங்களை செய்திருக்கிறான் என்று சொல்வதற்குக்கூட சாத்தியம் இல்லாத அளவிற்கு பாவங்களை செய்திருந்தாலும், அந்த அனைத்து பாவங்களையும் அழித்துவிட வேண்டும் என்னும் விருப்பத்தால், பச்சாதாபம் கொண்டு பகவன் நாமங்களை வாயில் உச்சரித்தால், அதே நொடியில், அனைத்து பாவங்களும் சுட்டுப் போகின்றன. பாகவத 6ம் ஸ்கந்தம் 2ம் அத்தியாயம் 9ம் ஸ்லோகத்தில்:

 

ஸ்தேன: ஸுராபோ மித்ரத்ருக் ப்ரம்ம ஹாகுரு தல்பக: |

 

ஸ்த்ரீராஜ பித்ருகோஹந்தா யே ச பாதகினோ பரே ||

ஸர்வேஷாமப்ய கவதாமித மேவ ஸுனிஷ்க்ருதம் ||

 

என்று சொல்லியிருக்கின்றனர். பிரம்மஹத்யா முதலான பஞ்ச மஹாபாதகங்கள், மற்றும் பித்ரு ஹத்யா முதலான அனைத்து பாவங்களுக்கும் நாராயண ஸ்மரணையே பிராயச்சித்தம் என்று சொல்லியிருக்கின்றனர். ஆகையால், எவனொருவன் எப்போதும் பகவன் நாமோச்சாரணையை செய்து வருகிறானோ, அவனை கருணைக்கடலான ஸ்ரீபரமாத்மன், கை பிடித்து தன் உலகத்தில், முக்த ஸ்தானத்தில் வைத்து, எப்போதும் நிரந்தரமான சுகத்தைக் கொடுக்கிறான்.

 

ரோகி3 ஔஷத4 பத்2யதி3ந்த3 நி

ரோகி3 யெனிஸுவதெரதி3 ஸ்ரீம

த்3பா43வத ஸுஸ்ரவணகை3து34வாக்2ய ரோக3வனு |

நீகி3 ஷப்தாத்3யகி2ல விஷய நி

யோகி3ஸு த3ஷேந்த்3ரியவனிலனொளு

ஸ்ரீகு3ரு ஜகன்னாத2விட்ட2ல ப்ரீதனாகு3வனு ||40

 

ரோகி = நோய் உள்ளவன்

ஔஷத பத்யதிந்த = மருந்து எடுத்துக் கொள்வதால்

நிரோகி எனிசுவ தெரதி = நோய் இல்லாதவன் என்று அழைக்கப்படுகிறான் (அவன் நோய் தீர்கிறது). அதைப்போல,

ஸ்ரீமத்பாகவத,

சுஸ்ரவணகைது = நன்றாக கேட்டு

பவாக்ய ரோகவனு = சம்சாரம் என்னும் நோயினை

நீகி = போக்கிக்கொண்டு

ஷப்தாத்யகில = ஷப்த, ஸ்பர்ஷ முதலான

தஷேந்த்ரிய = ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களால் செய்யும்

விஷய = விஷயங்களை

அனிலனொளு = ஸ்ரீபாரதிரமண முக்யபிராணரில்

நியோகிஸு = முக்யபிராணதேவரே நமக்குள் இருந்து செய்விக்கிறார் என்று அறிந்து, முக்யபிராணாந்தர்கத பரமாத்மனுக்கு அர்ப்பித்து வா.

ஸ்ரீகுரு = சர்வ ஜகத்குருவான

ஜகன்னாதவிட்டலனு,

ப்ரீதனாகுவனு = மகிழ்வான்.

 

நோயால் கஷ்டப்படும் நோயாளி ஒருவன், மருந்தினை எடுத்துக்கொண்டு அந்த நோயை போக்கிக் கொள்கிறான். அதுபோலவே, சம்சாரம் என்னும் நோயை போக்குவதற்கு மருந்து - பாகவத ஸ்ரவணம். ஆகவே, அதை நன்றாகக் கேட்டு, சம்சார நோயினை போக்கிக் கொள்ளவேண்டும். ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்களால் செய்யும் கர்மங்களை, ஸ்ரீபாரதிரமண முக்யபிராணாந்தர்கத பரமாத்மனுக்கு அர்ப்பித்தால், ஸ்ரீஜகன்னாதவிட்டலன் மகிழ்கிறான்.

 

க்ரீடாவிலாஸ சந்தி என்னும் 18ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிந்தது.

 

ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து

 

***

 

No comments:

Post a Comment