ஷக்தரெனி ஸுவரில்ல ஹரிவ்யதி
ரிக்த ஸுரகணதொ3ளகெ3 ஸர்வோ
த்ரிக்தனெனிஸுவ ஸர்வரிந்த3லி ஸர்வகாலத3லி |
ப4க்திபூர்வகவாகி3 அன்ய ப்ர
ஸக்திக3ள நீடா3டி3 பரமா
ஸக்தனாகி3ரு ஹரிகதா2ம்ருதபான விஷயத3லி ||31
சுரகணதொளகெ = தேவதா கணங்களில்
ஷக்தரெனிஸுவரு = சிறந்தவன் என்று அழைக்கப்படுபவன்
அல்ல = வேறொருவர் இல்லை
சர்வ காலதலி = முந்தைய, தற்போதைய, அடுத்த என அனைத்து காலங்களிலும்
சர்வரிந்தலி = சராசர பிராணிகள் நிறைந்த பிரபஞ்சத்தில்
அனைவரிலும்
சர்வோத்ரிக்த நெனிஸுவ = ரமா பிரம்மாதி அனைத்து
ஜீவோத்தமர்களை விடவும் உத்தமன் என்று அழைக்கப்படுகிறான்
ஆகையால்,
ஹரிகதாம்ருத பான விஷயதலி = இத்தகைய மகானுபவனான
ஸ்ரீபரமாத்மனின் கதை என்னும் அம்ருதத்தை பானம் செய்யும் விஷயத்தில்
அன்ய ப்ரஸக்திகள நீடாடி = இதர விஷய சுகங்களின்
மேலுள்ள ஆசைகளை விட்டு
பக்த்பூர்வகவாகி = பக்தியுடன்
பரமாசக்தனாகிரு = மிகுந்த மரியாதையுடன் அவனையே
சரணடைந்திரு.
தேவதா கணத்திலாகட்டும், இதர தைத்ய, அசுர,
கந்தர்வாதிகளிலும், சமர்த்தன் என்று பரமாத்மனை
விட்டால் வேறு யாரும் இல்லை. பரமாத்மன் ஒருவனே அனைவரை விடவும், அனைத்து காலங்களிலும், சர்வோத்தமன் என்று
அழைக்கப்படுகிறான். ஆகையால், இதர விஷய சுகங்களில் இருக்கும்
ஆசையை விட்டு, ஹரிகதாம்ருதத்தை பானம் செய்யும் விஷயத்தில் பக்தியுடன், அத்யந்த மரியாதையுடன் இருந்து, அவனையே சரணடைந்திரு.
ப்ரணதகாமத3 ப4க்தசிந்தா
மணி மணிமயாப4ரண பூ4ஷித
க்4ருணி கு3ணத்ரய தோ3ஷவர்ஜித க3ஹன ஸன்மஹிம |
எணிஸ ப4க்தர தோ3ஷக3ள கு
ம்பி3னிஜெயாண்ம ஷரண்ய ராமா
ர்ப்பணவெனலு கைகொண்ட3 ஷப3ரிய ப2லவ பரமாப்த ||32
ப்ரணதகாமத = தன்னை வணங்குபவர்களின் மனோபீஷ்டங்களை
நிறைவேற்றுபவன்
பக்த சிந்தாமணி = பக்தர்களுக்கு சிந்தாமணியைப் போல
வேண்டியதைக் கொடுப்பவன்
மணி மணியாபரண பூஷித = மாணிக்கமயமான ஆபரணங்களால், அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டவனான
க்ருணி = தயாபூர்ணனான
குணத்ரய தூரவர்ஜித = ப்ரக்ருதி சம்பந்தமான சத்வ, ரஜஸ்,
தமோ குணங்களை தூர விலக்கிய
கஹன ஸன்மஹிம = யாராலும் அறியப்பட முடியாத உத்தம
மகிமையுள்ள பரமாத்ம
பக்தர தோஷகள எணிஸ = பக்தர்களின் தோஷங்களை / குறைகளை
மன்னிப்பவன்
கும்பிணிஜெயாண்ம = சீதா தேவியின் பதியான ராமன்
ஷரண்ய = பக்தர்களால் வணங்கப்படுபவன்
பரமாப்த = பக்தர்களுக்கு உற்ற தோழனைப் போல இருப்பவன்
(பரமாத்ம என்றும் பாடபேதம் உண்டு. பரமாத்ம = சர்வோத்தமனான பரமாத்மன்)
ராமார்ப்பணவெனலு = ஸ்ரீராமா, உனக்கு அர்ப்பணம் என்று சொன்ன
ஷபரிய பலவ = ஷபரி கொடுத்த பழங்களை
கைகொண்ட = ஏற்றுக் கொண்டான்
தன்னை வணங்கும் பக்தர்களின் இஷ்டார்த்தங்களை
நிறைவேற்றுபவன். பக்தர்களுக்கு சிந்தாமணியைப் போல அவர்களின் விருப்பங்களை
நிறைவேற்றுபவன். மாணிக்கமயமான ஆபரண, அணிகலன்களை அணிந்திருப்பவன். பரம
தயாளு. ப்ராக்ருதமான சத்வ, ரஜஸ், தமோ குணங்களிலிருந்து தூரவிருப்பவன். பிரம்மாதி தேவதைகளாலும் அறியப்பட முடியாத
மகாமகிமைகளைக் கொண்டவன். பக்தர்களிடம் என்ன தோஷங்கள் இருந்தாலும் அவற்றை
மன்னிப்பவன்.
பூமிக்கு கும்பிணி என்று பெயர். பூமியிலிருந்து
பிறந்தவளுக்கு கும்பிணிஜெ என்று பெயர். அவளின் ஆண்ம என்றால், அவளை பாதுகாப்பவன் அதாவது கணவன் என்று அர்த்தம். பூமியிலிருந்து பிறந்தவள்
சீதாதேவி. அவளின் கணவன் ஸ்ரீராமன். ஸ்ரீராமன் ஆரண்யத்தில் இருந்தபோது, ஷபரி என்பவள், ராமனின் வருகையை அறிந்து, அவனுக்காக பழங்களை சுவை பார்த்து, சுவையுள்ள பழங்களை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்திருந்தாள். ஸ்ரீராமனும் அவளது
இடத்திற்கு வருகையில், ‘ஹே,
சீதாபதியான ஸ்ரீராமனே. இந்த பழங்களை நான் உனக்காக வைத்துள்ளேன். இவற்றை
ஏற்றுக்கொள்’ என்று அர்ப்பிக்க, ஸ்ரீராமனும் அவற்றை, அவளது தோஷங்களை பார்க்காமல்
ஏற்றுக்கொண்டான்.
ப3ல்லெனெம்பு3வரில்ல ஈதன
ஒல்லெனெம்பு3வரில்ல லோகதொ3
ளில்லத3 ஸ்த2லவில்லவல்லை ஞாத ஜனரில்ல |
பெ3ல்லத3ச்சின பொம்பெ3யந்த3தி3
எல்லரொளகி3ருதிப்ப ஸ்ரீ பூ4
நல்ல இவகெ3ணெயில்ல அப்ரதிமல்ல ஜக3க்கெல்ல ||33
ஈதன = இந்த பரமாத்மனை
பல்லெனெம்புவரில்ல = நான் முழுவதுமாக அறிந்தேன் என்று
சொல்ல இந்த உலகத்தில் யாரும் இல்லை
ஒல்லெனெம்புவரில்ல = பரமாத்மன் நமக்கு வேண்டாம் என்று
சொல்பவர்களும் யாரும் இல்லை
லோகதொள் இல்லத ஸ்தளவில்ல = பரமாத்மன் இல்லாத இடமே
இந்த உலகத்தில் இல்லை
ஒள்ளெ ஞாத ஜனரில்ல = பரமாத்மனை நன்றாக அறிந்த மக்கள்
யாரும் இல்லை
பெல்லதஜ்ஜின பொம்பெயந்ததி = வெல்லத்தினால் அச்சு
செய்தால்,
அந்த பொம்மைகளின் கை, கால் எதை உடைத்து ருசி
பார்த்தாலும், அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான இனிப்பு சுவை இருப்பது போல
எல்லரொளகிருதிப்ப = பரமாத்மனும் அனைவரிடமும் ஒரே
மாதிரியாக நிலைத்திருக்கிறான்
ஸ்ரீபூனல்ல = ஸ்ரீதேவியருக்கும், பூதேவியருக்கும், கணவன் ஆனவன்
இவகெணெயில்ல = இவனுக்கு இணை என்று யாரும் இல்லை
ஜகக்கெல்ல = இந்த அனைத்து உலகத்திலும்
அப்ரதிமல்ல = யாராலும் வெல்லப்பட முடியாதவன்
பாகவத 2ம் ஸ்கந்தம் 6ம் அத்தியாயத்தில், பிரம்மதேவர் நாரதருக்கு உபதேசம்
செய்யும் சந்தர்ப்பத்தில்:
யஸ்யாவதார கர்மாணி காயந்திஹ்யஸ்மதாதய: |
ந யம் விந்தந்திதத்வேன தஸ்ம்யை பகவதே நம: ||
எந்த பரமாத்மனின் அவதார சரித்திரங்களை, நம்மைப் போன்றவர்கள் பாடல்களாகப் பாடுகின்றோமோ, யாரின் ஸ்வரூபத்தை நம்மால் முழுமையாக அறியமுடியாதோ, அத்தகைய பரமாத்மனுக்காக நமஸ்காரம் என்று கூறினார்.
மேலும். 7ம் அத்தியாயத்தில் 40ம் ஸ்லோகம்:
விஷ்ணோர்னுவீர்ய கணனாம் கதமோர்ஹதீஹ |
நாந்தம்விதாம்யஹ மமீ முனய: ப்ரஜேஷா: ||
ஆகிய வாக்கியங்களால், பரமாத்மனின் மகிமைகளை நாம் முழுமையாக அறியமுடியாது என்று தெரிய வருகிறது.
ஆகையாலேயே, தாசார்யர் இவற்றை முழுமையாக அறிந்தவர்கள் யாரும் இல்லை என்றார். யோக்யரான
மக்களில் யாரும் பரமாத்மனை வேண்டாம் என்று சொல்பவர்களும் இல்லை என்பது கருத்து.
தமோயோக்யர்களான பகவத் த்வேஷிகள் மட்டும் பகவந்தனை
அறிவார்கள். உலகத்தில் பரமாத்மன் இல்லாத இடமே இல்லை. பரமாத்மனின் மகிமைகளை நன்றாக
அறிந்தவர்களும் இல்லை. வெல்லப்பாகினால் பொம்மைகளை செய்தால், அந்த பொம்மைகளின் அனைத்து பாகங்களிலும் எப்படி இனிப்பு ஒரே மாதிரியாக
பரவியிருக்கிறதோ, அப்படியே, பரமாத்மன், அனைவரிலும் அனைத்து பாகங்களிலும் வியாபித்திருக்கிறான். ஸ்ரீதேவியருக்கும், பூதேவியருக்கும் அவனே அரசன். இவனுக்கு சமமானவர்கள் யாரும் இல்லை. உலகத்தில்
இவனுக்கு இணை வேறு யாரும் இல்லை என்பது கருத்து.
ஷப்3த3கோ3சர ஷார்வரீகர
அப்3த3 வாஹனனனுஜ யது3வம்
ஷப்தி3 சந்த்ரம நிருபம ஸு3னிஸ்ஸீம ஸமிதஸம |
லப்3த3னாகு3வ தன்னவகெ3 ப்ரா
ரப்த3 கர்மக3ளுணிஸி தீவ்ரதி3
க்ஷுப்த3 பாவகனந்தெ பி3டதி3ப்பனு தயாஸாந்த்3ர ||34
ஷப்தகோசர = வேதங்கள் மூலம் அறியப்படுபவன்
ஷார்வரீகர = சஜ்ஜனர்களின் கஷ்டங்களை போக்குபவன்
அப்த வாஹனனனுஜ = மேக வாகனன் என்னும் தேவேந்திரனுக்கு
தம்பியாக,
வாமனாவதாரம் செய்து, பலி சக்ரவர்த்தியிடமிருந்து பூமி
தானம் கேட்டு, இந்திரனுக்கு அவனது அரசை மறுபடி கொடுத்து, அங்கு யுவராஜனாக உபேந்திரன் இருக்கிறான்
யதுவம்ஷாப்தி சந்திரனு = யது வம்சம் என்னும் கடலுக்கு, சந்திரனைப் போல இருப்பவன்
நிருபமனு = உபமானம் இல்லாதவன்
நிஸ்ஸீம = எல்லைகள் இல்லாத குணங்களைக் கொண்டவன்
ஸமதிஸமா = சமம் என்று யாரும் இல்லாதவன். அதாவது, பரமாத்மனுக்கு சமம் என்றால் அது பரமாத்மன் மட்டுமே என்று பிரம்மாதிகளால்
வணங்கப்பட்டவன்
தன்னவகெ = தன் பக்தர்களுக்கு
தீவ்ரதி = மிகவும் விரைவாக
ப்ராரப்த கர்மகளுணிஸி = வினைப்பயன்களை அனுபவிக்குமாறு
செய்து
லப்தனாகுவ = தரிசனம் அளிக்கிறான்
க்ஷுப்த பாவகனந்தெ = கட்டையில் பிடித்த நெருப்பு, எப்படி கட்டை இருக்கும்வரை அதை விடுவதில்லையோ, அப்படியே
தயாஸாந்த்ர = தயையால் நிறைந்த பரமாத்மன்
பிடதிப்பனு = ஜீவனை விடாமல் பிடித்திருப்பான்.
ஸ்ரீபரமாத்மன், வேதங்களால் அறியப்படுபவன். சந்திரன் எப்படி வெப்பத்தைக் குறைத்து குளிர்ச்சியை
தருகிறானோ, பரமாத்மனிடமும் அதே குணங்கள் இருக்கின்றன. பக்தர்களுக்கு சம்சாரத்தால் ஆகும்
கஷ்டங்களை பரிகரித்து, அபரோக்ஷத்தில் பிரத்யட்சமாகி, தன் தரிசனத்தால் குளிர்ச்சியை
தருகிறான். ஆகையால், பரமாத்மனை சந்திரன் என்றார்.
நீரைக் கொடுப்பதால், மேகத்திற்கு அப்த என்று பெயர். மேக வாகனன் என்று தேவேந்திரனுக்குப் பெயர். ‘துராஷாண்மேக வாஹன:’ என்று அமரகோச வாக்கியம்
இருக்கிறது. அதிதியிடம் வாமனனாக அவதரித்ததால், இந்திரனுக்கு தம்பி ஆனான். ஆகையால் பரமாத்மனுக்கு உபேந்திரன் என்று பெயர். ‘உபேந்திர இந்திரா வரஜ:’ என்று அமரகோஷத்தில் தெளிவாக
இருக்கிறது. யதுவம்ச என்னும் சமுத்திரத்திற்கு சந்திரன். கடலில் சந்திரோதயம் ஆன
உடனேயே வளரும் குணம் அதற்கு இருக்கிறது. ஆகையால், யதுவம்சம் என்னும் கடலுக்கு சந்திரன், என்றால், அந்த வம்சமத்தில் கிருஷ்ணாவதாரம் செய்து, அந்த வம்சத்தை வளர்த்தவன் என்று பொருள்.
உபமானரஹிதனு = இந்திராதிகளுக்கு ஒப்புமை கொடுக்க
வேண்டுமெனில், அவரைவிட உத்தமரான இன்னொருவரை சொல்வதுண்டு. பரமாத்மனுக்கு சமமாக யாரை சொல்வது? ஆகையால், ராமாயணத்தில் ‘ராம ராவணயோர் யுத்தம் ராம ராவணயோரிவ’, ராம ராவண போரினை எதற்கு ஒப்பிடலாம்
என்றால் ‘ராம ராவணர்களைப் போலவே’ இருந்தது என்றார். ஆகையால், நிருபம (ஒப்புமை இல்லாதவன்) என்று பரமாத்மனுக்குப் பெயர். எல்லைகள் இல்லாதவன்.
ஸமதிஸம = இவனுக்கு சமம் என்று யாரையாவது சொல்ல வேண்டுமெனில், எந்த விஷயத்திலும் யாரும் இல்லை.
பிரம்ம ருத்ராதிகளை ஸ்ருஷ்டிக்கும் யோக்யதை உள்ள
ரமாதேவியரே பரமாத்மனுக்கு அதீனம் என்ற பிறகு, இவனுக்கு சமம் என்று யாரை சொல்வது? ஆகையால், தனக்கு தானே சமம் என்று சொல்லிக் கொள்பவன். தன் பக்தர்களின் ஆகாமி, சஞ்சித பாவங்களை சுட்டுப் பொசுக்குவான். ப்ராரப்தங்களை மட்டும் அனுபவிக்க
வேண்டும். ஆகையால், அந்த ப்ராரப்த கர்மங்களையும் சீக்கிரத்தில் அனுபவிக்குமாறு செய்து, அவருக்கு அபரோக்ஷத்தில் தரிசனம் அளிக்கிறான்.
கட்டைகளை எரித்து, ஒளிர்ந்து கொண்டிருக்கும் நெருப்பு எப்படி ஒளிமயமாக இருக்கிறதோ அப்படி, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப அவருக்கு தரிசனம் அளித்து, கருணாபூர்ணனான ஸ்ரீஹரி அந்த பக்தர்களை விடாமல் இருப்பான்.
ஸ்ரீவிரிஞ்சாத்3யமர வந்தி3த
ஈ வஸுந்த3ரெயொளகெ3 தே3வகி
தே3வி ஜடரதொ3ளவதரிஸித3னு அஜனு நரனந்தெ |
ரேவதி ரமணனனுஜனு ஸ்வப
தா3வலம்பி3க3ளனு ஸலஹி தை3
த்யாவளிய ஸம்ஹரிஸித3 ஜகன்னாத2விட்ட2லனு ||35
ஸ்ரீவிரிஞ்சாத்யமர வந்தித = ரமா பிரம்மாதி தேவதைகளால்
வணங்கப்படுபவன்
ஜகன்னாதவிட்டலன் = ஜகன்னாத விட்டல நாமக ஸ்ரீபரமாத்மன்
ஈ வசுந்தரெயொளகெ = இந்த பூமியில்
அஜனு = பிறப்பு இல்லாதவன்
ஜனதந்தெ = பிறக்கும் சாமான்ய மக்களைப் போல
தேவகி தேவி ஜடரதொளு = தேவகிதேவியின் வயிற்றில்
அவதரிசிதனு = அவதரித்தான்
ரேவதி ரமணானுஜனு = ரேவதிதேவியின் பதியான பலராமனுக்கு
தம்பியான
ஸ்வபதாவலம்பிகளனு = தன் பாதங்களை சரணடைந்த
பாண்டவர்கள், யாதவர் முதலானவர்களை
ஸலஹி = காப்பாற்றி
தைத்யாவளிய = தைத்ய வம்சத்தை
சம்ஹரிஸித = சம்ஹாரம் செய்தான்.
ரமா பிரம்மாதி அனைத்து தேவதைகளாலும் வணங்கப்படுபவனான
ஸ்ரீஜகன்னாதவிட்டலன், தான் பிறப்பு இல்லாதவனானாலும், சாமான்ய ஜீவர்களைப் போல தேவகி
தேவியின் வயிற்றில் அவதரித்து, பலராமனின் தம்பியாக, கம்சன் முதலான துஷ்ட ராஜர்களைக் கொன்று, பாண்டவர்கள் முதலான தேவதாம்ஷர்களான ராஜர்களை காப்பாற்றினான். ஆகையால், இத்தகைய பரமாத்மனிடம் திடமான பக்தியை செய்தால், அவன் நம் கஷ்டங்களை பரிகரித்து, நம்மை காப்பாற்றுவான் என்று
பொருள்.
கர்மவிமோசன சந்தி என்னும் 19ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment