ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, August 12, 2020

26-30 தத்த ஸ்வாதந்த்ர்ய சந்தி

பூ4தலாதி4பனாக்ஞ தா4ரக

தூ3தரிகெ3 ஸேவானுஸாரதி3

வேதனவ கொட்டவர ந்தோஷ படிஸுவ தெரதி3 |

மாதரிஷ்வப்ரியனு பரம

ப்ரீதிபூர்வக த்கு3ணங்க3

கா32கர ந்தோஷ ப3டி3ஸுவனிஹ பரங்க3ளலி ||26

 

பூதளாதிப = பூமண்டலத்திற்கு அதிபதியான மகாராஜா

ஆக்ஞா தாரக தூதரிகெ = ஆணையை மீறாமல் செயல்களை செய்யும் தூதர்களுக்கு

ஸேவானுசாரதி = அவர்களின் சேவைகளுக்கேற்ப

வேதனவ = சம்பளத்தை

கொட்டு = கொடுத்து

அவர சந்தோத படிசுவ தெரதி = எப்படி மகிழ்விக்கிறானோ, அப்படி

மாதரிஷ்ப ப்ரியனு = வாயுதேவருக்கு முக்கிய ப்ரியனான; அல்லது, வாயுதேவரில் ப்ரீதியுள்ள ஸ்ரீஹரி

பரமபூர்வக = பக்தியுடன்

சத்குணங்கள = நற்குணங்களை

காதகர = கொண்டாடும் பக்தர்களை

இஹபரங்களலி = இந்த உலகத்திலும், பர லோகத்திலும்

சந்தோஷ படிசுவனிஹ = மகிழ்விக்கிறான்.

 

மகாராஜனின் தூதர்கள் ராஜனின் ஆணையை மீறாமல், தமக்குக் கொடுத்திருக்கும் வேலையை, ராஜன் மெச்சுமாறு செய்துவந்தால், அவர்களின் வேலைக்குத் தகுந்த சம்பளத்தைக் கொடுத்து, ராஜன் அவர்களை மகிழ்விக்கிறான். அதுபோலவே, ப்ரீதி விஷயனான ஸ்ரீஹரி, தன் சரித்திரங்களை பாடியவாறு, ஸ்ருதி ஸ்ம்ருதிகள் என்னும் பகவத் ஆணைக்கு கட்டுப்பட்டு கர்மங்களை செய்தவாறு, செய்த கர்மங்களை பரமாத்மனுக்கு அர்ப்பித்திருந்தால், ஸ்ரீஹரி மகிழ்ந்து அவரின் சேவைக்கு மெச்சி இஹபரங்களில் சுகங்களைக் கொடுத்து அவர்களை காப்பாற்றுவான்.

 

தீ3ப தி3வத3லி கண்ட3ராத3டெ3

லோபகை3ஸுவராக்‌ஷண ஹரி

மீபத3ல்லிரெ நந்த3னாம ஸுனந்தவெனிஸுவுது |

ஔபசாரிகவல்ல ஸுஜனர

பாபகர்மவு புண்யவெனிபுது3

பாபிக3த்புண்யகர்மவு பாபவெனிஸுவுது3 ||27

 

திவதலி = பகலில்

தீப = வீட்டில் தீபங்கள் எரிவதை

கண்டராதடெ = வீட்டினர் பார்த்தால்

ஆக்‌ஷண = உடனடியாக

லோபகைஸுவரு = அதனை அணைத்து விடுவர்.

அதே தீபங்கள்,

ஹரி ஸமீபதல்லிரெ = பூஜையறையில் இருந்தால்

நந்தனாம = நந்தாதீபம் என்ற பெயரில்

ஸுனந்தவெனிஸுவவு = ஆனந்தமயம் என்று அழைக்கப்படும்

ஔபசாரிகவல்ல = உபசார வார்த்தை அல்ல

ஸுஜனர = பகவத் தாசர் செய்த

பாபகர்மவு = பாவ கர்மங்கள்

புண்யவெனிபுது = புண்ய கர்மங்களின் பலன்களையே கொடுக்கின்றன

பாபிகள = பாவிகள் செய்யும்

சத்புண்யகர்மவு = சத்புண்ணிய கர்மங்கள்

பாபவெனிஸுவுது = பாவ கர்மங்களின் பலன்களையே கொடுக்கின்றன

 

பகல் வேளையில் வீட்டில் விளக்கு எரிந்துகொண்டிருப்பதை வீட்டினர் பார்த்தால், உடனடியாக அதனை அணைத்துவிடுவர். அத்தகைய தீபத்தை பூஜையறையில் வைத்தால், அதற்கு நந்தாதீபம் என்று பெயர் வைத்து, அதனை பார்த்து மகிழ்வர். இதைப்போல, பரமாத்மனே தானென்று ஸ்வதந்த்ர கர்த்ருத்வத்தை சிந்தித்தால், செய்த புண்ணியங்கள் அனைத்தும், பகலில் வீட்டில் எரிந்த தீபம் போல நஷ்டமடைகின்றன. புண்ணியங்கள் கழிந்துபோய், அதற்கு பதிலாக, பாவங்கள் வருகின்றன.

 

இதைப்போல, பகவத்பக்தர்கள் செய்யும் பாபங்கள்கூட, பரமாத்மன் ஸ்வதந்த்ரன், எனக்கு தலைவன் அவனே. நான் அவனின் தாசன். நான் பராதீனன். என்னும் ஞானத்தினால், அந்த கர்மங்களை பரமாத்மனிடம் அர்ப்பித்தால், நந்தாதீபம் பரமாத்மனின் சன்னிதானத்தில் இருந்தால் எப்படி அதற்கு நந்தாதீபம் என்று அழைத்தவாறு, ஆனந்தகரமாக இருக்கிறதோ, அப்படி, பாபங்கள் அனைத்தும் பஸ்மமாகி புண்யபலன்களையே கொடுக்கிறது.

 

இந்த உதாரணத்தில், தீபமானது புண்ணியத்திற்கு உவமையாக இருக்கிறது. பகல் நேரம், தீபத்திற்கு எதிரானது. ஹரித்வேஷிகள் பகல் நேரத்திற்கு ஒப்பானவர்கள். அவர்கள் செய்த புண்ணியம், பகல் நேர தீபம் அணைவதைப் போல அணைகிறது. அதே பகல் நேரத்து தீபம், பகவத் சன்னிதானத்தில் இருந்தால் மங்களகரமானது. அதுபோலவே, பகவத்பக்தர்கள் செய்த பாவங்கள் பகலின் நந்தாதீபத்தைப் போல, பகவத் அனுக்கிரக விசேஷத்தினால் புண்ணியம் ஆகிறது என்பது கருத்து.

 

மகாபாரத தாத்பர்ய நிர்ணய 1ம் அத்தியாயம், ஸ்லோகம் 108:

தர்மோபவத்ய தர்மோபிக்ருதோ பக்த்யைஸ்துவாச்யுத பாவம்பவதி தர்மோபி யோன பக்த்யை: க்ருதோஹரே ||

என்று சொல்லியிருப்பதையே தாசராயர் இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார்.

 

4னவ ம்பாதி3ஸுவ ப்ரத்3ரா

வணிகரந்த3தி3 கோவித3ர மனெ

மனெக3ளலி ஞ்சரிஸு ஷாஸ்த்ர ரவண கோ3ஸு3தி3 |

மனனகை3து3பதே3ஷிஸுத து3

ர்ஜனர கூடா33தி3ரு ஸ்வப்னதி3

ப்ரணதகாமத3 கொடு3ஸௌக்2யவனிஹ பரங்க3ளலி ||28

 

தனவசம்பாதிசுவ = வியாபாரம் செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஆசையுள்ள

ப்ரத்ராவணிகரந்ததி = வியாபாரிகளைப்போல

கோவிதர = ஞானிகளின்

மனெமனெகளல்லி = வீடுகளில்

சாஸ்த்ர ஸ்ரவண கோஸுகதி = நற்சாஸ்திர ஸ்ரவணம் செய்வதற்காக

சஞ்சரிஸு = சஞ்சரித்திரு

மனவகைது = காதால் கேட்டவற்றை மனதில் நினைத்தவாறு

உபதேஷிசுத = சஜ்ஜனர்களுகு அதனை உபதேசம் செய்தவாறு

துர்ஜனர கூட = துர்ஜனர்களுடன்

ஸ்பப்னதி = கனவிலும்கூட

ஆடதிரு = இந்த விஷயத்தை சொல்லாதிரு / அவர்களின் நட்பில் இருக்காதே

ப்ரணதகாமத = தன்னை வணங்குபவர்களுக்கு இஷ்டார்த்தங்களைக் கொடுக்கும் பரமாத்மன்

இஹபரங்களலி = இஹ பரங்களிலும்

சௌக்யவனிஹ = உனக்கு அருள்வான்.

 

வியாபாரி அதிக வியாபாரங்களை செய்து மேலும் அதிக லாபங்களை சம்பாதிக்க வேண்டுமென்று, அந்த ரகசியங்களை அறிந்திருக்கும் பிற வியாபாரங்களின் வீடுகளுக்குச் சென்று, தன் வியாபார விஷயங்களை அறிந்து, அந்த இடங்களுக்குச் சென்று வியாபாரம் செய்து, லாபங்களை சம்பாதிப்பான். அதுபோலவே, பகவத்பக்தர்கள் நற்சாஸ்திர ஸ்ரவணம் என்னும் லாபத்தை பெறுவதற்காக, சஜ்ஜனர்களின் வீடுகளுக்குச் சென்று அங்கு சாதுகளான ஞானிகள் இருந்தால், அவர்களுக்கு சேவாரூபமாக தான்யங்களை கொடுத்து, கதா ஸ்ரவணம் என்னும் லாபத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது கருத்து.

 

வியாபாரிகள் லாபத்தை சம்பாதித்து, எவ்வளவு லாபம் / நஷ்டம் என்பதை தனிமையில் அமர்ந்து பார்த்து, லாபம் வந்தால் தன் வீடு மனைவி மக்களுக்காக செலவழிப்பான். அதைப்போலவே, கதா ஸ்ரவணம் என்னும் லாபத்தை சம்பாதித்து அதனை தனிமையில் அமர்ந்து மனனம் செய்து, தன் பந்துக்களாக இருக்கும் இதர பக்தர்களுக்கு உபதேசம் செய்ய வேண்டும். வியாபாரிகள் தங்கள் லாபத்தை தங்கள் உறவினரைத் தவிர வேறு யாருக்கும் கொடுப்பதில்லையோ, அதுபோலவே தம் நண்பர்களான பக்தர்களுக்கு உபதேசம் செய்யவேண்டுமே தவிர, வேற்றார் போல இருக்கும் துஷ்ட மக்களுக்கு உபதேசம் செய்யக்கூடாது என்பது கருத்து.

 

சஜ்ஜனர்களின் சங்கத்தினாலேயே, கதா ஸ்ரவணம் ஆகவேண்டும். பாகவத 3ம் ஸ்கந்தத்தில் தேவஹூதிக்கு கபில உபதேசம் சமயத்தில் : ஸதாம் ப்ரஸங்கான்மம வீர்ய ஸம்பதோ பவந்தி ஹ்ருத்கர்ண ரஸாயனா: கதா: - சஜ்ஜனர்களின் சகவாசத்தினால், மனதிற்கும் காதிற்கும் இனிமையான கதைகள் கிடைக்கிறது என்கிறார். 12ம் ஸ்கந்தத்தில் :

 

அவிஸ்ம்ருதி ஸ்ரீதர பாதபத்மயோர் குணானுவாத ஸ்ரவணாதி பிர்ஹரே: --

பரமாத்மனின் குணங்களை பிறருக்கு சொல்வதாலும், அதை கேட்பதாலும், பரமாத்மனை எப்போதும் மறக்காமல் இருக்கிறோம். அவிஸ்ம்ருதி: க்ருஷ்ணபதாரவிந்தயோ: க்‌ஷீணோத்யபத்ராணி ஷமம்தனோதிச -- அந்த பரமாத்மனை மறக்காமல் இருப்பது, அமங்களங்கள் அனைத்தையும் பரிகாரம் செய்து, உத்தமகதியைக் கொடுக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆகையால், சஜ்ஜனர்களின் சங்கத்திற்காக வீடுவீடாகச் சென்று, பின் அதனை மனனம் செய்து, பிறருக்கு உபதேசம் செய்தால், இஹபரங்களிலும் சுகம் கிடைக்கிறது என்று தாசராயர் கூறுகிறார்.

 

காரக க்ரிய த்3ரவ்ய விப்4ரம

மூருவித4 ஜீவரிகெ33ஹு ம்

ஸாரகி3வு காரணவெனிஸுவவு எல்லகாலத3லி |

தூ3ர ஓடி3ஸி ப்4ராமகத்ரய

மாரிகொ3ளகா333லெ ர்வா

தா4ரகன சிந்திஸுதலிரு ர்வத்ர மரெயத3லெ ||29

 

காரக = ஞானேந்திரியங்களால் செய்யப்படும் செயல்களின் மேல் உள்ள அபிமானம்

க்ரிய = கர்மேந்திரியங்களால் செய்யப்படும் செயல்களின் மேல் உள்ள அபிமானம்

த்ரவ்ய = தேக அபிமானம்

மூருவித = என்று மூன்று விதமான

விப்ரம = விசேஷமான அபிமானங்கள் உள்ளன

ஜீவரிகெ = ஜீவர்களுக்கு

எல்லகாலதலி = அனைத்து காலங்களிலும்

சம்சாரக்கெ = சம்சார வாழ்க்கைக்கு

பஹு = அதிகமாக

ப்ராமகத்ரய = இந்த மூன்று விதமான அபிமானங்கள் என்னும்

மாரிகெ = எதிரிகளுக்கு

ஒளகாகதலெ = வசப்படாமல் (கட்டுப்படாமல்)

தூர ஓடிஸி = அவர்களை தூர ஓட்டி

ஸர்வத்ர மரெயதலெ = மறக்காமல் அனைத்து இடங்களிலும்

ஸர்வாதாரகன = அனைவருக்கும் ஆதாரமாக இருப்பவனான ஸ்ரீஹரியை

சிந்திஸுதலிரு = நினைத்துக் கொண்டிரு.

 

சம்சாரத்தில் பற்பல விதமான துக்கங்களைக் கொடுப்பதற்கும், திரும்பத்திரும்ப சம்சாரத்தில் கஷ்டப்படுமாறு செய்வதற்கும், காரக-ப்ரமை, க்ரிய-ப்ரமை, த்ரவ்ய-ப்ரமை என்னும் மூன்று வித அபிமானங்கள் காரணம் ஆகின்றன. இதன் அர்த்தங்கள் ஸ்ரீபுரந்தரதாசர் தாம் இயற்றிய சுளாதி ஒன்றில் விவரித்திருக்கிறார்.

 

நானேவெ கர்தனெம்போ காரகப்ரமவய்ய |

தைனந்தினதி கரண கார்ய மாடுவதெம்போ க்ரியத ப்ரமவய்ய |

ஆனபூர்வக தன தாராபத்யரெனகெ

ஆனிஸிகொடுவாரு ஸத்பதவெம்பந்த த்ரவ்ய விப்ரமவய்ய |

ஸானுராகதி பஹுபாதெபடிஸுதிதெ |

நீனாகி பிடிஸுதா தவ த்யான நீடய்ய

தீனஜனமந்தார புரந்தரவிட்டலானெ ஆனமிஸி நின்ன பாதயுகளக்கெ ||

 

இதன் அர்த்தம்:

 

நானே என் மனைவி, மக்களை காக்கிறேன் என்னும் ஸ்வதந்த்ர கர்த்ருத்வ அபிமானமே காரக- ப்ரமை.  என் கண்களே பார்க்கின்றன. என் காதுகளே கேட்கின்றன என்று இந்திரியங்களுக்கு ஸ்வதந்த்ர கர்த்ருத்வத்தை நினைப்பதே க்ரிய- ப்ரமை. என் தேகம், குடும்பம், செல்வம் ஆகியவையே எனக்கு சுக சாதனையாகிறது என்று அறிவதே த்ரவ்ய- ப்ரமை. இத்தகைய மூன்றுவித பிரமைகளே சம்சாரத்தில் பற்பல விதமான துக்கங்களைக் கொடுப்பதற்கும், திரும்பத்திரும்ப நம்மை சம்சாரத்தில் தள்ளி கஷ்டப்படச் செய்வதற்கும் காரணமாகின்றன.

 

ஆகையால், இத்தகைய ப்ரமக த்ரயங்களை தூர ஓட்ட வேண்டும், இந்த மூன்று வித ப்ரமைகள் நமக்கு வாய்த்த மிகப்பெரிய நோய்களை / எதிரிகளைப் போல நம்மை இம்சிக்கின்றன. அவற்றிற்கு வசப்படாமல், அனைவரின் ஆதாரகனான ஸ்ரீபரமாத்மனை திடமாக அனைத்து காலங்களிலும் அனைத்து இடங்களிலும் சிந்தித்து இருக்க வேண்டும் என்பது கருத்து.

 

கரண கர்மவ மாடித3ரெ வி

ஸ்மரணெகாலதி3 மாதுக3ளிகு3

த்தரவ கொட33லெ ஸும்மனிப்பனு ஜாக3ராவஸ்தெ2

கருணிலு வ்யாபார மாடு3

3ரலு நால்காவஸ்தெ23ளு பரி

ஹரிஸிகொளனேதகெ ஸ்வதந்த்ரனு தானெ எம்பு3வனு ||30

 

கரண = இந்திரியங்களே

கர்மவ மாடிதரெ = செயல்களை செய்தால்

விஸ்மரணெ காலதி = நினைவு இல்லாத காலங்களில் (தூக்கத்தில்)

மாதுகளிகெ = அவரிடம் சொன்னதற்கு

உத்தரவ கொடதலெ = பதில் சொல்லாமல்

சும்மனிப்பனு = அமைதியாக இருப்பான்

ஜாகராவஸ்தெ = முழிப்பு வந்த நிலையில்

கருணிஸலு = பகவந்தனின் கருணையால் (பகவந்தனின் கருணையால் விழிப்பு வந்தபிறகு)

வ்யாபாரமாடுவ = இந்திரியங்களால் செய்யப்படும் செயல்கள்; அதாவது, கேட்பது, சொல்வது, அமர்வது ஆகிய செயல்களை செய்வான்.

நால்காவஸ்தெகளு = முழிப்பு, கனவு, தூக்கம், மயக்கம் என்னும் 4 நிலைகள்

பரலு = வந்தால்

ஸ்வதந்த்ரனு தானே எம்புவனு = தானே ஸ்வதந்த்ரன் என்பான்

ஹரிஸிகொளனேதகெ = அந்தந்த நிலையில் ஏன் இருக்கக்கூடாது?

 

இந்திரியங்களே ஸ்வதந்த்ரமாக செயல்களை செய்கின்றன என்றால், தூங்கிக் கொண்டிருக்கும்போதும் கண், காது முதலான இந்திரியங்கள் இருந்தே இருக்கின்றன. அந்த சமயத்தில் யாராவது எதையாவது கேட்டால், தூங்கிக் கொண்டிருப்பவனின் காதில் அது கேட்குமா? வாய் ஏன் பதில் சொல்வதில்லை? முழிப்புடன் இருக்கும்போது மட்டுமே கேள்வி பதில்களை கேட்க / சொல்ல முடிகிறது. ஆகையால், இந்திரியங்களுக்கு ஸ்வதந்த்ர சக்தி இல்லை என்று சொல்ல வேண்டியதாகிறது.

 

இவனே ஸ்வதந்த்ரனாக இருந்தால், தன்னை மீறி வரும் தூக்கமோ, தூக்கத்திலிருந்து விழிப்போ, மூர்ச்சை அடைவது, கனவு காண்பது - என இந்த செயல்களை தன் இஷ்டத்திற்கு தன்னால் ஏன் செய்யமுடியவில்லை? அதாவது, நமக்குத் தேவையானபோது தூக்கம் வரட்டும். ஆனால் நம்மை அறியாமல் தூக்கம் ஏன் வருகிறது? நாமே ஸ்வதந்த்ரர் ஆனபிறகு, நம் இஷ்டத்திற்கே நாம் விழிக்க வேண்டும். நம்மை அறியாமலேயே நாம் ஏன் விழிக்கிறோம்? நமக்கு வேண்டுமானால் மட்டுமே கனவு வரட்டும். தானாகவே அது ஏன் வரவேண்டும்? நமக்கு இஷ்டமில்லாத மூர்ச்சை நிலையை, வேறு நோய்களை நமக்கு வராமல் நாம் ஏன் அவற்றை தடுக்கமுடியவில்லை? மரணம் நமக்கு ஏன் வருகிறது?

 

இவை அனைத்தும் நம் கையாலாகாத தன்மையை (பராதீனத்தை) தெளிவாக்குகிறது. இப்படி இருந்தாலும், நாமே ஸ்வதந்த்ர கர்தன். நம் இந்திரியங்களே கர்மங்களை செய்கின்றன என்று கூறினால், இது மயக்கம்தானே? மயக்கம் என்று தானாகவே நிரூபணம் ஆகிவிட்டது என்று கருத்து. 

No comments:

Post a Comment