ஸத்யவிக்ரம புண்யபாப ஸ
மஸ்தரிகெ3 கொட3லோஸுக2தி3 நா
ல்வத்து பா4க3வ மாடி3 லேஷாம்ஷவனு ஜனகீவ |
அத்யலுப பரம அணுவிகெ3 ஸா
மர்த்யவனு தா கொட்டு ஸ்தூ2ல ப
தா3ர்த்த2க3ள உண்டு3ணிப ஸர்வத3 ஸர்வஜீவரிகெ3 ||11
சத்யவிக்ரம = அதிகமான பராக்ரமங்களைக் கொண்ட ஸ்ரீஹரி
சமஸ்தரிகெ = அனைத்து பிராணிகளுக்கும்
புண்யபாப = புண்ய பாவங்களை
கொடலோஸுக = கொடுப்பதற்காக
நால்பத்து பாகவ மாடி = தன் ஸ்வதந்த்ர்யத்தை 40 பாகங்களாகப் பிரித்து
லேஷாம்ஷவனு = அதில் ஒரு பாகத்தை
ஜனகெ = ஜீவர்களுக்கு
ஈவ = கொடுக்கிறான்
அத்யல்ப பர்மாணுவிகெ = மிக சிறியதான, பரமாணு ஸ்வரூபனான ஜீவருக்கு
ஸாமர்த்யவன்னு தா கொட்டு = சாமர்த்தியத்தை கொடுத்து
ஸ்தூல பதார்த்தகளு = புண்ய பாவங்களுக்கு பல-ரூபமான
போகங்களை;
அதாவது, போஜன பானாதிகள், ஸ்த்ரீயாதி போகங்கள் ஆகிய ஸ்தூல பதார்த்தங்களின் போகங்களை
உண்டு = தான் உண்டு
ஸர்வதா = எப்போதும்
ஸர்வஜீவரிகெ = அனைத்து ஜீவர்களையும்
உணிப = உண்ண வைக்கிறான்.
சத்ய பராக்ரமனான ஸ்ரீஹரி, அனைத்து பிராணிகளுக்கும் புண்ய பாவங்களின் பலன்களைக் கொடுத்து, அவரவர்கள் தத்தம் யோக்யதைக்கேற்ப பலன்களை அனுபவிப்பதற்காக, தன் ஸ்வாதந்த்ர்யத்தை, 40 பாகங்களாகப் பிரித்து, அதில் 1 பாகத்தை ஜீவருக்குக் கொடுக்கிறான்.
தத்த ஸ்வாதந்த்ர்ய சந்தியில் 400 பாகங்களில் 10 பாகங்கள் என்று சொல்லியிருப்பார். இந்த சந்தியில் 10:1 என்றது போல, 40க்கு 1 அம்ஷம் என்று சொல்லியிருக்கிறார். 400ல் 10 பாகங்கள் என்றாலும், 40ல் 1 என்றாலும், இரண்டும் ஒன்றே. விஷ்ணு ரஹஸ்யத்தில்:
ஏவம் புண்யஸ்ய பாபஸ்ய சத்வாரிம்ஷத்தமம் லவம்
ப்ராப்னோதி ஜீவஸ்தேனைவ பூர்ணோயம் பவதித்ருவம் ||
அல்பஷக்தித்வ தோல்பஞ்ச புண்யம் பாபம் ப்ரஜாயதே ||17
40ல் 1ஆக ஜீவருக்கு இருக்கும் ஸ்வதந்த்ர்ய சக்தியால், இந்த தேகத்தில் தத்வாபிமானிகளான தேவதைத்யர்கள் இருந்து செய்விக்கும்
புண்யபாபாதிகளுக்கு, அந்த தேவ தைத்யர்கள் பங்குதாரர்களாகி (பாகிகளாகி) 40ல் 1 அம்ஷத்தை மட்டும் ஜீவர்கள் அனுபவிக்கின்றனர். ஜீவர்கள் அவ்வளவுக்கே பூர்ணர்
ஆகின்றனர். அல்ப சக்தி உள்ளவர்கள் ஆகையால், அல்பமான புண்ய பாபங்களே இவருக்கு பூர்ணமாக இருக்கிறது. என்று சொல்கிறார்.
இப்படியாக, ஜீவர்கள் ஸ்தூல தேகத்தினால்
செய்யும் புண்ய பாப கர்மங்களுக்கு, கர்ம ப்ரேரகனான தத்வாபிமானி
தேவதைகளில் தேவதைகள் புண்ய பலன்களை, தைத்யர்கள் பாப பலன்களை
அனுபவிப்பர். ஜீவருக்கு 40ல் 1 அம்ஷ மட்டுமே கிடைக்கிறது என்றால், இந்த சரீரத்தினால் நாம் செய்யும்
புண்ய பாபத்திற்கு பலரூபமான சுக துக்கங்களில் 40ல் 1 அம்ச சுக துக்கங்களை மட்டுமே நாம் அனுபவிக்கிறோம் என்பது கருத்து. இப்படியாக, மிகக் குறைவான, பரமாணு ஸ்வரூபனான ஜீவருக்க்கு கருணா சமுத்திரனான ஸ்ரீஹரி, ஸ்தூல தேகத்தைக் கொடுத்து, புண்யத்திற்கும், பாவத்திற்கும் பலரூபமான சுக துக்கங்களை, ஸ்தூல பதார்த்தங்களின் சம்பந்தத்தினால் அனுபவிக்குமாறு செய்கிறான்.
குதிரையின் ஒரு முடியை 100ஆக பிரித்து, மேலும் அதனை 100ஆகப் பிரித்தால், இறுதியில் கிடைக்கும் அளவிற்கே ஜீவனின் ஸ்வரூபம் இருக்கிறது என்கிறார்.
இத்தகைய ஜீவருக்கு புண்ய பலன்களை அனுபவிக்கும்போது, ம்ருஷ்டான்ன போஜனங்களை செய்வது, ஸ்த்ரீயாதி போகங்களை அனுபவிப்பது
ஆகிய ஸ்தூல பதார்த்தங்களின் போகங்கள் ஆக வேண்டுமெனில், அது அந்த ஜீவருக்கு சாத்தியமா? பரமாத்மன் இத்தகைய சக்தியையும், ஸ்தூல தேகத்தையும் கொடுத்து, தத்வாபிமானி தேவதைகளை அங்கு வைத்து, அவருக்குள் தான் இருந்து, அந்த கர்மங்களை செய்து, செய்வித்து, பலன்களை தான் உண்டு, ஜீவருக்கு உண்ண வைக்கிறான்.
ஆகையாலேயே, பரமாத்மன் கருணா சமுத்திரனாக இருக்கிறான்.
திமிர தரணிக3ளேக தே3ஷதி3
ஸமனிஸிப்பவெ எந்தி3கா3த3ரு
ப்4ரமண சளி பி3ஸிலஞ்சிகெக3 ளுண்டேனு பர்வதக்கெ |
அமித ஜீவரொளித்து3 லகுமி
ரமண வ்யாபாரக3ள மாடு3வ
க1மலபத்ர ஸரோவரக3ளொளகி3ப்ப தெரனந்தெ ||12
திமிர தரணிகளு = இருட்டு மற்றும் சூரியன், இந்த இரண்டும்
ஏக தேஷதி = ஒரே இடத்தில்
ஸமனிஸி = சமமாக
இப்பவே எந்திகாதரு = என்றாவது இருக்குமா?
ப்ரமண = சோர்வு
சளி பிஸிலு = குளிர் வெயில்
அஞ்சிகெகளு = பயங்கள்
பர்வதக்கெ = மலைகளுக்கு
உண்டேனு = இருக்கிறதா?
அமித ஜீவரொளு = எண்ணிக்கையற்ற ஜீவரில்
கமலபத்ர = தாமரை இலையின்
ஸரோவரகளொளு = குளங்களில்
இப்பதெரனந்தெ = எப்படி நிர்லிப்தமாக இருக்கிறதோ
அப்படி
இத்து = இருந்து
லகுமிரமண = லட்சுமிபதியான ஸ்ரீஹரி
வ்யாபாரகள = கர்மங்களை
மாள்ப = செய்கிறான்.
சூரியனும், இருட்டும் எப்படி ஒரே சமயத்தில், ஓரிடத்தில் இருப்பது சாத்தியமில்லையோ, அப்படியே, சச்சிதானந்த ஸ்வரூபனான ஸ்ரீஹரிக்கு இதர பிராணிகளின் தேக சம்பந்தத்தினால்
துக்கம் வருவதும் சாத்தியமில்லை. மலைகளுக்கு வெயில், குளிர் ஆகிய பயங்கள் எப்படி இல்லையோ, அப்படியே ஜகதீஷ்வரனான
பரமாத்மனுக்கு சுகதுக்காதி சம்பந்தங்கள் எப்போதும் இல்லை. அனைவரின் தேகங்களிலும்
இருந்து,
செயல்களை செய்து கொண்டிருந்தாலும், தாமரை இலைகளைப் போல, நிர்லிப்தனாக இருக்கிறான்.
இந்த பத்யத்தில் மூன்று உவமைகளைக் கொடுக்கிறார்.
சூரியன் எப்படி என்றைக்கும் இருட்டினை பார்க்க மாட்டானோ, அப்படியே பரமாத்மன் ஆனந்த ஸ்வரூபனாகையால், துக்கத்தின் சாயலையும்கூட காண மாட்டான் என்பது முதலாம் உவமை. குளிர், வெயில் ஆகியவை மலைகளை துக்கப்படுத்துவது எப்படி சாத்தியமில்லையோ, அப்படியே ஜீவர்கள் செய்யும் பாவ புண்ணியங்கள் பரமாத்மனை எதுவும் செய்வதில்லை
என்பது இரண்டாம் உவமை. தாமரை இலையானது, தண்ணீரிலேயே இருந்தாலும், தண்ணீர் எப்படி அதன் மேல் இருப்பதில்லையோ, அப்படியே பரமாத்மன், ஜீவர்களின் தேகத்தில் இருந்தாலும், அவன் நிர்லிப்தனாகவே இருக்கிறான் என்பது மூன்றாம் உவமையாகும்.
அம்பு4ஜோத்ப4வ முக்2யஸுர கலி
ஷம்ப3ராதி3 ஸமஸ்த தை3த்ய க
த3ம்ப3கனுதி3ன புண்யபாப விபா4க3வனெ மாடி3 |
அம்பு3தி4ய ஜலவனு மஹத்த4ட
தி3ம்ப3னிது தும்பு3வ தெரதி3 ப்ரதி
பி3ம்ப3ரொளு தானித்து3 யோக்3யதெயந்தெ ப2லவீவ ||13
அம்புஜோத்பவ முக்யசுர = பிரம்மதேவரே முதலான தேவதைகள்
கலிஷம்பராதி சமஸ்த தைத்ய கதம்பகெ = கலி மற்றும்
ஷம்பராஸுர முதலான தைத்ய சமூகத்திற்கு
அனுதின = தினந்தோறும்
புண்யபாப விபாகவனெ = புண்ய பாவங்களைப் பிரித்துக்
கொடுத்து
அம்புதிய ஜலவனு = கடல் நீரை
மஹாகட = பெரிய குடத்தால்
பிம்பரிது = தன் உருவத்திற்கேற்ப
தும்புவ தெரதி = நிரப்புவதைப் போல
ப்ரதிபிம்பரொளு = பிரதிபிம்பர்களான ஜீவர்களில்
தானித்து = தான் இருந்து
யோக்யதெயந்தெ = அவரவர்களின் யோக்யதைக்கேற்ப
பலவீவ = பலன்களைக் கொடுக்கிறான்.
பிரம்மதேவரே முதலான தேவதைகளுக்கும், கலி முதலான தைத்ய சமூகத்திற்கும், கடலில் மிக அதிகமான நீர்
இருந்தாலும், குடம், சொம்பு முதலான பாத்திரங்களில் நீர் நிரப்பினால், அந்த பாத்திரங்களின் யோக்யதைக்கேற்ப எப்படி நீர் அதில் நிரம்புகிறதோ, அப்படி தினந்தோறும் மக்கள் செய்யும் புண்ய பாவங்களை, பாகம் செய்து, அவரவர்களின் யோக்யதைக்கேற்ப அவரவர்களுக்கு பலன்களைக் கொடுக்கிறான்.
தண்ணீர் இருக்கும் இடத்திற்கு பாத்திரங்கள் தாமாகவே
போய் நீர் நிரப்பிக் கொள்வதில்லை. ஒருவர் குடம் ஆகியவற்றை எடுத்து, கடலுக்குச் சென்று அந்த பாத்திரம் நிரம்பும் அளவிற்கு நீர் நிரப்புவார். அதைப்போலவே, புண்ய பாவங்கள், கடல் நீரைப்போல அபாரமாக இருக்கிறது. பரமாத்மன் பானையைப் போலிருக்கும்
ஜீவர்களின் யோக்யதையை அறிந்து, புண்யபாப பலன்களைக் கொடுக்கிறான்.
ஸ்வயோக்யம் ஜலமாதத்தெ ஸமுத்ராதுத்த்ருதோகட: |
தாவதைவ பவேத்பூர்ண ஏவமத்ர நிதர்ஷனம் ||
என்னும் விஷ்ணு ரஹஸ்ய வாக்கியம் இதற்கு ஆதாரமாக
இருக்கிறது.
இனிது விஷ்ணு ரஹஸ்யதொ3ளு ப்4ருகு3
முனிப இந்த்3ரத்3யும்ன க3ருபிது
த3னு பு3த4ரு கேளுவுது3 நித்யதி3 மத்ஸரவபி3ட்டு |
அனுசிதோக்திக3ளித்3த3ரேயு ஸரி
க3ணனெ மாட3தி3ரெந்து3 வித்3வ
ஜ்ஜனகெ விக்ஞாபனெய மாடு3வெ வினயபூர்வகதி3 ||14
இனிது = இப்படியாக
விஷ்ணு ரஹஸ்யதொளு = விஷ்ணு ரஹஸ்யத்தில்
ப்ருகு முனிப = ப்ருகு என்னும் முனீஸ்வரர்
இந்த்ரத்யும்னகெ = இந்திரத்யும்ன என்னும் அரசனுக்கு
அருபிதனு = கூறியதை
புதரு = ஞானிகள்
நித்யதி = தினந்தோறும்
மத்ஸரவ பிட்டு கேளுவுது = கர்வத்தை விட்டு கேட்க வேண்டும்
அனுசிதோக்திகளு = இதில் ஏதாவது தவறான வாக்கியங்கள்
இத்தரேயு சரி = இருந்தாலும் சரி
கணனெ மாடதிரி = அதனை கவனத்தில் கொள்ள வேண்டாம்
எந்து = என்று
வித்வஜ்ஜனகெ = அறிஞர்களுக்கு
விக்ஞாபனெய = வேண்டுகோள்
மாடுவெ = வைக்கிறேன்
வினயபூர்வகதி = மிகுந்த பணிவுடன்
இந்த சந்தியில் நாம் கூறிய விஷயங்கள் அனைத்தும், விஷ்ணு ரஹஸ்ய 30ம் அத்தியாயத்தில் ப்ருகு ரிஷிகள், இந்திரத்யும்னன் ராஜனுக்கு உபதேசம்
செய்த விஷயங்களே தவிர, இதில் என் சொந்த கருத்துகள் எதுவும் இல்லை. ஆகையால், ஞானிகள் தினந்தோறும் இதனை கேட்க வேண்டும். நான் கூறியவற்றில் ஏதாவது தவறான
கருத்துகள் இருந்தாலும், பகவத் மகிமை என்னும் குணத்தை
நினைத்து,
அந்த தோஷங்களை அலட்சியம் செய்யவேண்டும் என்று மிகுந்த பணிவுடன் கேட்டுக்
கொள்கிறேன் என்று தாசராயர், பெரியவர்களிடம் மரியாதை கொடுக்க
வேண்டும் என்று சொல்கிறாரே தவிர, இந்த கிரந்தத்தில் தவறான விஷயங்கள்
எதுவும் இல்லை என்று அறியவேண்டும்.
இனிது விஷ்ணு ரஹஸ்யதொளு ப்ருகுமுனிப இந்திரத்யும்னகெ
அருபிதனு -- என்னும் வாக்கியத்தால், விஷ்ணு ரஹஸ்யத்தில் இந்திரத்யும்ன
ராஜனுக்கு ப்ருகு முனிகள் கூறிய விஷயத்தையே இங்கு சொல்லியிருக்கிறேன் என்று
தாசராயர் தெளிவாகக் கூறியிருப்பதால், இதற்கு மூலம் விஷ்ணு ரஹஸ்யமே என்று
தெளிவாகிறது. விஷ்ணு ரஹஸ்ய 30ம் அத்தியாயத்தில், ப்ருகு ரிஷிகளுக்கும் இந்திரத்யும்னனுக்கும், பேச்சுவார்த்தை ரூபமாக இதே விஷயங்களே பேசப்படுகின்றன. அந்த ஸ்லோகங்களையே இந்த
சந்தியின் தாத்பர்யத்தில் கொடுத்திருக்கிறோம்.
ஆனால் ஒரு வியாக்யானகாரர், ‘ப்ருகுமுனிப இந்திரத்யும்னனிகெ’ என்னும் இடத்தில், ப்ருகுமுனிப என்றால், ப்ருகு வம்சத்திற்கு அதிபதியான
பரசுராம தேவர் இந்திரத்யும்னனுக்கு உபதேசம் செய்தார் என்று கூறியிருக்கிறார்.
முனிப என்னும் சொல்லுக்கு ரிஷீஸ்வரர் என்று அர்த்தம். ப்ருகு ரிஷீஸ்வரர் என்று
சொன்னால்,
விஷ்ணு ரஹஸ்ய வாக்கியத்திற்கு சரியாக பொருந்துகிறது. பரசுராமதேவர் என்று
அர்த்தம் கொள்ள வேண்டுமெனில், இதற்கு ஆதாரம்
தேடவேண்டியிருக்கிறது. விஷ்ணு ரஹஸ்ய 28 முதல் 34ம் அத்தியாயம் வரை, இந்திரத்யும்ன ராஜனுக்கும் ப்ருகு
ரிஷிகளுக்கும் பேச்சுவார்த்தை நடப்பதாக கதை இருக்கிறது. அதில், 30ம் அத்தியாயத்தின் கதையைப் பார்த்து, இதை உபதேசம் செய்தவர் ப்ருகு
ரிஷியோ அல்லது பரமசுராம தேவரோ என்பதை தெளிவாக்கிக் கொள்ளலாம்.
வீதப4ய விஷ்வேஷ விதி4பித
மாதுலாந்தக மத்வவல்லப4
பூ4த பா4வனனந்த1 பா4ஸ்கர தேஜ மஹராஜ |
கௌ3தமர மட3தி3யனு காய்த3 அ
நாத2ரக்ஷக கு3ருதம ஜக3
ன்னாத2விட்டல தன்ன நம்பி3த3 ப4குதரனு பொரெவ ||15
வீதபய = பயம் இல்லாதவனான
விஷ்வேஷ = பிரபஞ்சத்திற்கு அதிபதியான
விதிபித = பிரம்மதேவரின் தந்தை
மாதுலாந்தக = தாய் மாமனான கம்சனைக் கொன்றவன்
மத்வவல்லப = மத்வாசார்யருக்கு மிகவும் ப்ரியமானவன்
பூத பாவன = ப்ராணிகளை காப்பாற்றுபவன்
அனந்த பாஸ்கர தேஜ = அனந்த சூரியர்களின் ஒளியைக்
கொண்டவன்
மஹராஜ = பிரம்மாதி தேவதைகளே உள்ள பிரபஞ்சத்திற்கு
அரசன்
கௌதமர மடதியனு காய்த = கௌதமரின் மனைவியான அகலிகைக்கு
அருளிய (இந்திரதேவரின் சங்கத்தினால், கணவனான கௌதமரின் சாபத்திற்கு ஆளான
அகலிகையை,
ராமாவதாரத்தில் தன் பாத ஸ்பரிசத்தால் மறுபடி பெண்ணாக மாற்றிய)
அனாதரக்ஷகனு = அனைவரையும் காப்பாற்றுபவன்
குருதம = முக்கிய குருகளான வாயுதேவருக்கும் குருவான
ஜகன்னாதவிட்டல = இத்தகைய நம் அங்கித மூர்த்தியான
ஜகன்னாதவிட்டல நாமகனான ஸ்ரீஹரி
தன்ன நம்பித பகுதரனு = தன்னை நம்பி வணங்கும்
பக்தர்களை
பொரெவ = அருள்வான்
மேலே கூறியதே தெளிவாக இருப்பதால், விளக்கம் எழுதவில்லை.
ஸ்வகத ஸ்வாதந்த்ர சந்தி என்னும் 17ம் சந்தியின் தாத்பர்யம் இத்துடன் முடிவுற்றது.
ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து.
***
No comments:
Post a Comment