ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, August 9, 2020

11-15 தத்த ஸ்வாதந்த்ர்ய சந்தி

மொக3தொ3ளகெ3 மொக3விட்டு முத்3தி3ஸி

மகு3வினம்பி3கி33ப்பி நேஹதி3

தெகெ3து தன்ன ஸ்த2னக3ளுணிஸுவ ஜனனியந்த33லி |

அக3ணிதாத்மனு தன்ன பாதா3

ப்ஜக3ள தே4னிப ப4க்தஜனரிகெ3

ப்ரகடகனு தானாகி3 ஸௌக்2யகளீவ ர்வத்ர ||11

 

மொகதொளகெ = குழந்தையின் முகத்தில்

மொகவிட்டு = தாய் தன் முகத்தை வைத்து

முத்திஸி = கொஞ்சி

மகுவினம் = குழந்தையை

பிகிதப்பி = கட்டிக் கொண்டு

ஸ்நேஹதி = அன்புடன்

தெகெது = எடுத்து

தன்ன ஸ்தனகளுளிஸுவ = முலைப்பால் ஊட்டும்

ஜனனியந்ததலி = தாயைப் போல

அகணிதாத்மனு = எண்ணிக்கையற்ற குணரூப ஸ்வரூபனான பரமாத்மன்

தன்ன பாதாப்ஜகள = தன் பாத கமலங்களை

தேனிப பக்தஜனரிகெ = பஜிக்கும் பக்த ஜனர்களுக்கு

ப்ரகடகனு தானாகி = ராமகிருஷ்ணாதி ரூபங்களால் பாண்டவாதிகளுக்கு பிரத்யட்சம் ஆகி, தரிசனம் அளித்து

சர்வத்ர = அனைத்து இடங்களிலும்

சௌக்யகளீவ = சுகங்களைக் கொடுக்கிறான்.

 

தாயானவள் தன் குழந்தையை தூக்கி, கொஞ்சி, மிகவும் அன்புடன், தன் முலைப்பாலை உண்ண வைத்து, பாதுகாப்பதைப் போல, பரமாத்மன் தன் பக்தர்களில் அத்தகைய அன்புடன், தியானம் செய்பவர்களின் ஹ்ருதயாகாஷத்தில், அபரோக்‌ஷத்தில் தரிசனம் அளித்து, முக்தியில் எப்போதும் தன் அருகிலேயே வைத்துக்கொண்டு சுகங்களைக் கொடுத்து அவர்களை காப்பாற்றுகிறான். தாய் குழந்தையைக் கொஞ்சி முலைப்பால் கொடுக்கும் விஷயத்தில் அவளுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அவ்வளவு அன்பினை பக்தவத்ஸலன் என்னும் பெயர் பெற்றவனான ஸ்ரீஹரி பக்தர்களிடம் காட்டுவான் என்று அறியவேண்டும்.

 

கவிஞர்கள் பெண்களை சந்திரமுகி என்று தங்கள் கவிதைகளில் வர்ணிப்பதுண்டு. சந்திரனுக்கு கண் இல்லை. மூக்கு இல்லை. அப்படி சந்திரமண்டலத்தை முக மண்டலத்திற்கு உவமையாகக் கொடுத்தால், அந்த முகம் நன்றாக இருக்கிறது என்று யாரும் சொல்வதில்லை. பூர்ண சந்திரனைப் பார்த்தால் நமக்கு ஒரு விதமான புத்துணர்ச்சி வரும். அத்தகைய சந்திரனில் இருக்கும் புத்துணர்ச்சி தரும் குணம், எந்த ஸ்த்ரீயரில் இருக்கிறதோ; அதாவது, எந்த ஸ்த்ரியரின் முகத்தைப் பார்த்தால், தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ, அத்தகைய ஸ்த்ரியரை சந்திரமுகி என்று வர்ணிப்பர்.

 

அதைப்போல, இங்கும் அன்பு விஷயத்தில் தாயின் உவமையைக் கொடுக்கிறார். அப்படியெனில், தாயைப் போல என்று மட்டும் சொல்லியிருந்தால் போதுமானதே. ஏன், முகத்தில் முகம் வைத்து, தூக்கி, கொஞ்சி, முலைப்பால் கொடுத்து - என்றெல்லாம் சொல்ல வேண்டும்? என்றால், பொதுவாக குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்போது, தாய் தன் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தால், அவ்வளவு அன்பு தெரிவதில்லை. அந்த குழந்தை பசியால் முலைப்பாலுக்காக தன்னிடம் வர, அந்த சமயத்தில் விசேஷமான அன்பு பிறந்து, முலைகளில் பால் சுரக்கிறது. அந்த சமயத்தில் தாய்க்கு குழந்தையிடம் எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அத்தகைய அன்பினை பரமாத்மன் தன் பக்தர்களிடம் எப்போதும் செய்கிறான் என்று சொல்வதற்காகவே இவ்வளவு விவரமாக தாயின் உவமையைக் கொடுத்திருக்கிறார் தாசராயர்.

 

தோடிக3னு பூ4மியொளு பீ3ஜவ

நாடபே3கெந்தெ3னுத ஹிதத3லி

மோடெயிம் நீரெத்தி ஸஸி3ந்தயிஸுவந்தெ |

பாடுப333லெ ஜக3தி3 ஜீவர

கோ4டகாஸ்யனு ஸ்ருஜிஸி யோக்3யதெ

தா3டகொ333லெ லஹுதிப்பனு ர்வகாலத3லி ||12

 

தோடிகனு = விவசாயி (தோட்டக்காரன்)

பூமியொளு = பூமியில்

பீஜவ = விதையை

நாடபேகெந்தெனுத = விதைக்க வேண்டும் என்னும் ஆசையில்

ஹிததலி = சிரத்தையுடன்

மோடெயின் நீரெத்தி = கிணற்றிலிருந்து பல உபகரணங்களின் உதவியுடன் நீர் எடுத்து

ஸஸிகள = வளர்ந்த பயிர்களை / செடிகளை

ஸந்தெயிஸுவந்தெ = திருப்திப்படுத்துவதைப் போல

பாடுபடதலெ = சோர்வில்லாமல்

ஜகதி = உலகில்

ஜீவர = பிராணிகளை

கோடகாஸ்யனு = ஹயக்ரீவ ரூபத்தை தரித்த ஸ்ரீபரமாத்மன்

ஸ்ருஜிஸி = ஸ்ருஷ்டித்து

ஸர்வகாலதலி = எப்போதும்

யோக்யதெ தாடகொடதலெ = ஜீவர்களின் யோக்யதையை மீறாமல்

ஸலஹுதிப்பனு = காப்பாற்றுகிறான்.

 

தோட்டவேலை செய்பவர், பூமியை தோண்டி, விதையை நட்டு, பல உபகரணங்களின் உதவியுடன் நீர் இறைத்து, அதனால் விளைந்த செடிகளை நன்றாக பார்த்துக் கொள்வதைப்போல, பரமாத்மன் ஜீவர்களை ஸ்ருஷ்டித்து, காப்பாற்றுகிறான். பூமியின் தன்மைக்கேற்ப தோட்டக்காரர் விதையை விதைப்பதைப் போல, செடிகளின் நிலைக்கேற்ப, எவ்வளவு நீர் வேண்டுமோ அவ்வளவே நீர் இறைத்து, அதனை பாதுகாக்கிறார். சில செடிகளுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை, சிலவற்றிற்கு 8 நாட்களுக்கு ஒருமுறை, சில தானியங்களுக்கு மழை நீரை மட்டுமே நம்பி, என அவற்றை பல்வேறு விதங்களாக பாதுகாக்கிறார். அதன்படியே, பரமாத்மனும், ஜீவர்களை, தேவ மானவாதி யோனிகளில் பிறக்கச் செய்து, எந்தெந்த ஜீவர்களை எப்படி எப்படி பாதுகாக்க வேண்டுமோ அப்படியே பாதுகாக்கிறான்.

 

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினால், தோட்டக்காரருக்கு மிகவும் சோர்வு உண்டாகிறது. அப்படியே, பரமாத்மனுக்கும் ஸ்ருஷ்ட்யாதி கர்மங்களில் சோர்வு ஆகிறதோ என்று கேட்டால் பாடுபடதலெஎன்னும் சொல்லினால் அந்த சந்தேகத்தை தாசராயர் போக்குகிறார். ஆனால் தோட்டக்காரன் எப்போதும் பலனை எதிர்பார்த்தே வேலை செய்கிறான்; பரமாத்மனோ எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் அனைத்தையும் செய்கிறான். ஆகையாலேயே, பரமாத்மன், சர்வோத்தமன். கருணா சமுத்திரன் என்பது கருத்து.

 

பூ4மியொளு ஜலவிரெ த்ருஷார்த்தனு

தா மரெது மொக3வெத்தி எண்தெ3ஸெ

வ்யோம மண்ட3லதொ3ளகெ3 காணதெ3 ஹுடுகவந்த33லி |

ஸ்ரீமனோரம ர்வரந்த

ர்யாமியாகி3ரெ திளியத3னுதி3

ப்4ராமகரு ப4ஜிஸுவரு ப4கு3தி1யொளன்ய தே3வதெய ||13

 

பூமியொளு ஜலவிரெ = பூமியில் நீர் இருந்தாலும்

த்ருஷார்த்தனு = தாகம் உள்ளவன்

தா மரெது = அதனை மறந்து

மொகவெத்தி = மேலே பார்த்தவாறு

வ்யோம மண்டலதொளகெ = ஆகாயத்தில்

எந்தெஸெ = எட்டு திசைகளிலும்

காணதெ = அதனை காணாமல்

ஹுடுகுவந்ததலி = நீரினை தேடுவதைப்போல

ஸ்ரீமனோரம = ரமாதேவியரின் மனதைக் கவரும் ரூபத்தைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்

ஸர்வரந்தர்யாமியாகிரெ = அனைவரின் இதயத்திலும் இருந்தாலும்

திளியதனுதின = அறியாமல், தினந்தோறும்

ப்ராமகரு = கர்வம், பொறாமை உள்ள அஞ்ஞானிகள்

அன்யதேவதெய = கணபதி முதலான பிற தேவதைகளை

பகுதியில் = பக்தியில்

பஜிஸுவரு = துதிப்பார்கள்.

 

பூமியில், கிணறு, வாய்க்கால்களில் நீர் நிரம்பியிருந்தாலும், அதை கேட்டு அறிந்துகொள்ளாத தகுதியற்ற மூர்க்கன், அத்தகைய பூமியில் நீரைத் தேடுவதை விட்டு, ஆகாயத்தில், எட்டு திசைகளில் எங்காவது நீர் இருக்கிறதா என்று, தலை தூக்கிப் பார்த்தால் அதனால் என்ன பயன்? ஆகாயத்தில் நீர் நிறைந்திருக்கிறதா?

 

அப்படியே, ஜகத்பிரபுவான ஸ்வாமி, சர்வவியாப்தனாகி, பக்தர்களை அருள்வதற்காக, அனைவரின் இதயாகாஷத்திலும் காத்திருந்தாலும், அல்பமான விஷயாதி சுகங்களை விரும்பியவாறு, ஸ்வதந்த்ரனான பரமாத்மனை விட்டு, உச்சிஷ்ட கணபதி முதலான அன்ய தேவதைகளை துதிக்கிறார்கள். அதனால் கிடைக்கும் பலன் என்ன? பிற தேவதைகளின் அந்தர்யாமியாக இருந்து, பரமாத்மனே வரங்களைக் கொடுக்கிறான். பரமாத்மனையே துதித்தால், நிரந்தர பலன் கிடைக்கிறது என்பது கருத்து.

 

முக்2யப2ல வைகுண்ட முக்2யா

முக்2யப2ல மஹராதி3 லோக அ

முக்2யப2ல வைஷயிகவெந்த3ரிததி34கு3தி1யிந்த3 |

ரக்கஸாரிய ப4ஜிஸுதலி நி

ர்து3க்க2னாகு3 நிரந்தரதி3 மொரெ

பொக்கவர பி334க்தவத்ல பா4ரதீஷபித ||14

 

முக்யபல = பகவத் ஆராதனைகளிலிருந்து நாம் பெறவேண்டிய பலன்களில் முக்கியமானது

வைகுண்ட = வைகுண்ட லோகத்தை சேர்வது

முக்யாமுக்யபல = முக்கியமும் அல்ல; அமுக்கியமும் அல்ல; மத்யம பலன்கள்

மஹராதிலோக = மஹர்லோக, ஜனோலோக முதலான லோகங்களை சேர்வது

அமுக்யபல = அமுக்கியமான பலன்

வைஷிகவு = விஷய சுகங்களைப் பெறுவது

எந்தரிது = என்று அறிந்து

அதி பகுதியிந்த = அதிகமான பக்தியினால்

ரக்கஸாரிய = அசுரர்களின் எதிரியான பரமாத்மனை

பஜிஸுதலெ = பஜனை செய்தவாறு

நிர்துக்கனாகு = எப்போதும் துக்கங்கள் அற்றவனாகி வைகுண்டத்தை சேர்

பக்தவத்ஸல = பக்தவத்ஸலனானவன்

பாரதீஷபித = பாரதிரமணனான முக்யபிராணதேவரின் தந்தையான ஸ்ரீஹரி

நிரந்தரதி = நிரந்தரமாக (தொடர்ச்சியாக)

மொரெபொக்கவர பிட = தன்னை வணங்குபவர்களை விடமாட்டான்

 

பலன்களில், முக்கிய பலன்கள், அமுக்கிய பலன்கள், முக்கியாமுக்கிய பலன்கள் என்று மூன்று விதங்கள் உண்டு.

 

அவற்றில் நிரந்தர சுகத்தைக் கொடுப்பது வைகுண்ட லோகம் - இதுவே முக்கிய பலன். இந்த பலனைப் பெறவேண்டுமெனில், எவ்வித வேண்டுதல்களும் இல்லாமல் (நிஷ்காமத்தினால்) பரமாத்மனை தொடர்ச்ச்சியாக துதிக்க வேண்டும்.

 

பரமாத்மனின் மத்யம பக்தர்களுக்கு முக்யாமுக்யமான மஹர்லோக, ஜனோலோக, தமோலோக, ஸத்யலோக முதலான உலகங்கள் கிடைக்கின்றன.

 

இந்த உலகங்களுக்கு செல்பவர்கள், சாபங்களால் மறுபடி பூலோகத்திற்கு வரும் வாய்ப்பு உண்டு. ஆனாலும், ஸ்வர்க்கவாசிகளைப் போல, புண்ணியங்களை இழந்து, பாவிகளாக இவர்கள் கீழே வருவதில்லை. அங்கிருந்தவாறே மேலே முக்த லோகத்திற்குச் சென்று, முக்தி காலத்தில் பிரம்மனுடன் சேர்ந்து முக்தர்கள் ஆகின்றனர். முக்தர்கள் ஆகும் அனைவருக்கும் பிரம்மனுடன்தான் முக்தி கிடைக்கிறது. ஆனால், முதலிலேயே சாதனைகளை பூர்த்தி செய்து வைகுண்டத்திற்கு புறப்பட்டவர்கள், பிரம்மலோகத்தில் இருந்தாலும், முக்தியில் இருந்தாற்போலவே சுகங்களை அனுபவித்தவாறு காலம் கழித்துக் கொண்டிருப்பார்கள்.

 

மஹராதி லோகங்களுக்கு செல்பவர்கள் அப்படியில்லை. சரியான காலத்தில் பிரம்மலோகத்தை அடைந்து முக்தர் ஆகின்றனர். இதற்கு நடுவில் இவர்கள் பூமிக்கு வரும் சந்தர்ப்பமும் உண்டு. வெறும் அமுக்ய பலன் என்றால், ஸ்வர்க்கலோக, அல்லது பூமியில் விஷயாதி போகங்களை அனுபவிப்பது. இந்த இரண்டும் தற்காலிகமானவை. புண்ணியம் இருக்கும் வரை ஸ்வர்க்கத்தை அனுபவிப்பர். புண்ணியம் குறைந்தால் மறுபடி பூமிக்கு வருவர். இந்த விஷயத்தில் ஷாண்டில்யதத்வத்தின் வாக்கியம்:

 

அதமாத் ஸ்வர்க்கலோகாதிர் மத்யமாத் ப்ரம்மண: பதம் |

உத்தமான் மோக்‌ஷமாப்னோதி ப்ரஸாதாச் சக்ரபாணின: ||

 

ஸ்ரீபரமாத்மனின் அதம பிரசாதத்தினால், ஸ்வர்க்கங்களோ, பூலோகத்தில் விஷய சுகானுபவங்களோ கிடைக்கின்றது. மத்யம பிரசாதத்தினால், மஹர்லோக முதல் ஸத்யலோகம் வரைக்கும் இருக்கும் ஏதோவொரு லோகத்தில் வசிக்கின்றனர். பரமாத்மனின் உத்தம ப்ரசாதத்தை அடைந்தவர்கள், மோட்சத்தை சேர்வார்கள் என்கின்றனர்.

 

இதே அபிப்பிராயத்தையே தாசராயர் இங்கு சொல்கிறார். பரமாத்மன் பக்தவத்ஸலன். நீயே கதி என்று தன்னை சரணடைந்தவர்களை என்றைக்கும் அவன் கைவிடுவதில்லை. ஆகையால், நீ பரமாத்மனை துதித்து, உத்தம பிரசாதத்தைப் பெற்று, முக்யபலனான முக்தியை அடைந்து, ஸ்வரூப சுகத்தை அனுபவித்திரு என்று சொல்கிறார்.

 

வ்யாதி4யிம் பீடி3ஸிஷுவிகெ3 கு3

டோத33வனெரெதகெ3 ஔஷத3

தேது3 குடி3ஸுவ தாயியோபாதி3யலி ர்வக்ஞ |

பா33ராயண ப4குதஜனகெ ப்ர

ஸா3 ரூபகனாகி3 பா43

தாதி3யலி பேளித3ரு த4ர்மாதிக3ளெ ப2லவெந்து3 ||15

 

வியாதியிம் = நோயில்

பீடித சிசுவிகெ = பாதிக்கப்பட்ட குழந்தைக்கு

குடோதகவனெரெது = இனிப்பு சுவை கூட்டுவதற்காக, வெல்லம் கலந்த நீரினை

அதகெ = அந்த பானத்திற்கு

ஔஷதி = மருந்தை

தேது = சந்தனத்தைப் போல கல்லில் அரைத்து அந்த பானத்தில் சேர்த்து

குடிசுவ தாயியோபாதியலி = அதை அக்குழந்தைக்கு குடிக்க வைக்கும் தாயினைப் போல

ஸர்வக்ஞ = அனைத்தும் அறிந்தவனான ஸ்ரீஹரி

பாதராயண = பதரி மரத்தடியில் அமர்ந்திருப்பதால் பாதராயண என்று பெயர் பெற்ற வேதவியாஸ தேவர்

பக்தஜனகெ = தன் பக்தர்களுக்கு

ப்ரஸாத ரூபகனாகி = அருள்வதற்காக

பாகவதாதியலி = பாகவதம் முதலான கிரந்தங்களில்

பேளிதரு = கூறியதைப் போல

தர்மார்த்தகளே பலவெந்து = காம பலன்களை எதிர்பார்த்து செயல்களை செய்தால், அதிலிருந்து தர்ம அர்த்தாதி புருஷார்த்தங்கள் கிடைக்கிறது என்று சொல்கிறார்.

 

தாயானவள், குழந்தைக்கு வந்திருக்கும் நோயினை குணப்படுத்துவதற்காக, மருந்து கொடுக்கவேண்டுமெனில், அந்த குழந்தை அந்த மருந்தினை குடிக்காமல் அழுதால், அதன் கையில் சிறிது வெல்லத்தைக் கொடுத்து இந்தா இந்த மருத்தைக் குடித்து இந்த வெல்லத்தைக் கடிஎன்று சமாதானப்படுத்தி மருத்தைக் குடிக்க வைப்பாள். ஆனால், இந்த வெல்லத்தினால் நோய் குணமாகுமா? அல்லது, மருந்தைக் குடித்தால் அதன் பலனாக வெல்லம் கிடைக்கும் என்று சொல்வதுதான் அந்த தாயின் அபிப்பிராயமா? இரண்டும் இல்லை. அடம் பிடிக்கும் குழந்தையை சமாதானப்படுத்துவதே தாயின் நோக்கம். மருந்தினால் கிடைக்கும் பலன் நோய் நிவாரணம்.

 

அதைப்போல, எவ்வித பலன்களையும் எதிர்பார்க்காமல், பரமாத்மனை பக்தியுடன் துதிப்பதே சம்சாரம் என்னும் நோய்க்கு மருந்து. அப்போது இக்குழந்தைக்கு கொடுத்ததைப்போல, சுவை ஊட்டுவதற்காக, அந்த கர்மங்களை செய்த யோக்யர்களுக்கு முதலில் சிறிது பலன்களை சொல்லியிருக்கிறார்களே தவிர, பலன்களை எதிர்பார்த்தே கர்மங்களை செய்யவேண்டும் என்னும் சொல்வது, ஸ்ரீவேதவியாச தேவரின் நோக்கம் அல்ல.

 

பாகவத 12ம் ஸ்கந்தம் இறுதியில், பாகவதம் கேட்டால் க்ருதகுல்யா: பய:குல்யா: மதுகுல்யாஸ்ச தத்பலம்’ - இவன் வீட்டில் நெய் ஆறு, பாலாறு, தேனாறு பாய்கிறது என்று சொல்கின்றனர். குல்ய என்றால் மலைகளின் அடிவாரங்களில் தானாக தோன்றும் குளம் / குட்டை என்று சொல்லலாம். பாகவத ஸ்ரவணம் செய்பவர்களின் வீட்டில் இத்தகைய ஆறுகள் ஓடும் - அதாவது, அவ்வளவு செல்வங்கள் வந்து சேரும் என்பது கருத்து.

 

மற்றும் நாராயண பர்வத்தில் வரும் மந்திரங்களை ஜெபித்தால் ராஜதஸ் யுக்ரஹாதிப்யோ வ்யாத்யாதி ப்ருஷ்ச கஸ்சன’ - அவனுக்கு ராஜனிடமிருந்தோ, திருடர்களிடமிருந்தோ, நவக்கிரகங்களிடமிருந்தோ, நோய்களிடமிருந்தோ எவ்வித பிரச்னைகளும் வருவதில்லை என்கிறார். இப்படி சொல்லியிருக்கும் வேதவியாஸதேவரின் அபிப்பிராயம் என்னவெனில் - பலன்களை எதிர்பார்த்து கர்மங்களை செய்பவர்களுக்கு, அந்த கர்மங்களுக்கு அவ்வளவே பலன்கள் கிடைக்கும் என்று இல்லை. இதே கர்மங்களை பகவத் ப்ரீதிக்காக செய்தால், அதன் பலன் முக்தி என்று அறியவேண்டும்.

 

கீதையில் கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசனகர்மத்தை செய்வதற்கு மட்டுமே உனக்கு அதிகாரம் உள்ளதே தவிர, பலன்களை எதிர்பார்ப்பதில் அதிகாரம் இல்லை என்று அர்ஜுனனுக்கு ஸ்ரீகிருஷ்ணன் உபதேசிக்கிறார். இந்த காரணங்களால், பலன்களை சொல்லியிருப்பது, சுவை ஊட்டுவதற்காகவே என்று அறிந்து, பலன்களை எதிர்ப்பார்ப்பதை விட்டு, பகவத்ப்ரீதிக்காக கர்மங்களை செய்து முக்தியை அடையவேண்டும். 

No comments:

Post a Comment