இனிதுபாஸனெகை3யுதிஹ ஸ
ஜ்ஜனரு ஸம்ஸாரத3லி ப்ரதிப்ரதி
தி3னக3ளலி ஏனேனு மாடுவுதெ3ல்ல ஹரிபூஜெ
எனிஸிகொம்பு3வு ஸத்ய ஈ மா
தினலி ஸம்ஷயப3டு3வ நரன
ல்பனு ஸுனிஸ்சய பா3ஹ்யகர்மவ மாடி3 ப2லவேனு ||21
இனிது = இந்த விதமாக
உபாஸனெகையுதிஹ = உபாசனை செய்து கொண்டிருக்கும்
சஜ்ஜனரு = பக்தர்கள்
சம்சாரதலி = சம்சாரத்தில்
ப்ரதிப்ரதி தினகளலி = தினந்தோறும்
ஏனேனு மாடுவுதெல்ல = எந்தெந்த கர்மங்களை செய்கின்றனரோ, அதையெல்லாம்
ஹரிபூஜெ = ஸ்ரீஹரியின் பூஜை
எனிஸிகொம்புவு = என்று சிந்தித்து
சத்ய = இது உண்மை
ஈ மாதினலி = இந்த விஷயத்தில்
சம்ஷயபடுவ = சந்தேகப்படுபவன்
நரனல்பனு = மனிதன்
சுனிஸ்சய = நிச்சயமாக
பாஹ்யகர்மவ = மற்ற அனைத்து கர்மங்களையும்
மாடி பலவேனு = செய்து என்ன பலன்?
மேற்சொன்ன விதங்களில் தினந்தோறும் உபாசனை செய்து
வரும் சஜ்ஜனர்கள், தினந்தோறும் என்ன செயல்களை செய்தாலும், அவை அனைத்தும் ஹரிபூஜை என்றே நினைத்து செய்வர். இதுவே உண்மை என்று அறியுங்கள்.
இந்த விஷயத்தில் கொஞ்சம்கூட சந்தேகம் படவேண்டாம். அப்படி சந்தேகப்படுபவர்கள், அல்பமான மனிதன் ஆவான். இது உண்மை.
இப்படி உபாசனை செய்யும் கிரமத்தை அறியாதவன், பாஹ்யபூஜை அதாவது, பிரதிமைகளை வைத்து ஆடம்பர பூஜையை செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? அந்த பூஜை, மக்கள் மெச்சுவதற்கு பயன்படுகிறதே தவிர, பகவந்தனை மகிழ்விப்பதற்கு பயன்படுவதில்லை, என்று தாசராயர் சபதம் செய்வதுபோல சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும்.
போ4க்3ய போ4க்த்ருக3ளொளகெ3 ஹரி தா
போ4க்3ய போ4க்தனு எனிஸி யோக்3யா
யோக்3ய ரஸக3ள தே3வ தா3னவ க3ணகெ உணிஸுவனு |
பா4க்யநிதி4 ப4க்தரிகெ3 ஸத்வை
ராக்3ய ப4க்தி ஞானவீவ அ
யோக்யரிகெ3 த்வேஷாதிக3ள தன்னல்லி கொடு3திப்ப ||22
போக்ய போக்ருத்களொளகெ = போகிக்க தகுந்த
பதார்த்தங்களில் மற்றும் அதை அனுபவிப்பவரின் உள்ளேயும்
ஹரியு = ஸ்ரீஹரி
தா = தான்
போக்யபோக்தனு = தானே அந்த பதார்த்தம்; தானே அந்த அனுபவிப்பவன்
எனிஸி = என்று நினைத்துக்கொண்டு
யோக்யாயோக்ய ரஸகள = போகிக்கத் தகுந்த பதார்த்தங்களின்
சாறுகளை,
தகுதியில்லாத பதார்த்தங்களின் சாறுகளை
தேவதானவகணகெ = தேவதா கணங்களுக்கும், தைத்ய கணங்களுக்கும், தனித்தனியாக பிரித்துக்
கொடுக்கிறான்
பாக்யநிதி = பக்தி, வைராக்ய என்னும் பாக்யம் உள்ள சஜ்ஜனர்களுக்கு நிதியாக இருக்கும் ஸ்ரீஹரி
பக்தரிகெ = அந்த பக்தர்களுக்கு
ஸத்வைராக்ய பக்தி ஞானவ = வைராக்ய, பக்தி, ஞானங்களை
ஈவ = கொடுக்கிறான்
அயோக்யரிகெ = அயோக்கியர்களுக்கு
தன்னல்லி = தன்னிடம்
த்வேஷாதிகள = த்வேஷம் ஆகியவற்றை
கொடுதிப்ப = கொடுக்கிறான்.
உலகத்தில் போகங்களை அனுபவிப்பதற்கு கெட்ட
பதார்த்தங்கள், சிறந்த பதார்த்தங்கள் பல இருக்கின்றன. உணவுப் பொருட்களில் கோதுமை, அரிசி, வாழை,
கிழங்குகள், ஆகியவை சாத்விக ஆகாரங்கள் என்றும், சுரைக்காய், புடலங்காய் ஆகியவை ராஜஸ என்றும், கத்திரி, வெங்காயம் ஆகியவை தாமஸ என்றும் தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன.
இதன் விளக்கத்தை வராக புராண சாதுர்மாஸ மகாத்ம்யம், ஸ்ம்ருத்யர்த்த சாகர என்னும் சலாரி ஆசார்யர் இயற்றிய தர்மசாஸ்திர
முதலானவைகளில் பார்க்கலாம்.
இந்த மூன்றுவித பதார்த்தங்கள் அனைவருக்கும் சுவையாக
இருப்பதில்லை. ஆகையாலேயே ‘லோகோ பின்னருசி:’ என்று சொல்லியிருக்கின்றனர். முக்கியமாக சாத்விகர்களுக்கு சாத்விக
பதார்த்தங்களும், ராஜஸர்களுக்கு ராஜஸ பதார்த்தங்களும், தாமஸருக்கு தாமஸ பதார்த்தங்களும்
பிடிக்கிறது. ஸ்ரீஹரி, த்ரிகுணங்களும் இல்லாதவனே ஆனாலும், இந்த மூன்றுவித பதார்த்தங்களில்
அந்தந்த ரூப, அந்தந்த பெயர்களில், அவற்றிற்கு சம்பந்தப்படாமல்
இருக்கிறான். சாத்விக, ராஜஸ,
தாமஸ மக்களிலும் இருந்து, அந்த பதார்த்தங்களின் சுவையை
அந்தந்த ஜீவர்களுக்குக் கொடுக்கிறான்.
போக்யவஸ்து என்றால் உண்ணும் பதார்த்தங்கள் என்று
மட்டும் அர்த்தம் அல்ல. உடுத்துவது, தொடுவது, அலங்கார வகைகள், ஸ்த்ரி போகம் என அனைத்தையும் சொல்லலாம். வேஷ பூஷணாதிகள் என அனைத்திலும், ஒரே குலம் ஒரே மதமாக இருந்தாலும் இன்றைய காலத்தில் எவ்வளவு வேறுபாடுகள்
இருக்கின்றன என்பதை கண்கூடாகப் பார்க்கிறோம். உதாரணங்கள் என்று ஒன்றிரண்டை மட்டும்
பார்க்கலாம்.
வேஷங்களில் முந்தைய கால பிராமணர்கள் என்றால், த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத மதங்களில் பிறந்தவர்கள் அந்தந்த மத சின்னங்களை தரித்துக்கொண்டு, அவர்களைப் பார்த்தாலே அந்தந்த மதங்களை சேர்ந்தவர்கள் என்று அறிந்துகொள்ளலாம்.
வைஷ்ணவ மாத்வர்கள் ஊர்த்வ புண்ட்ரங்களை தரித்து, சந்தனம், அங்கார, அக்ஷதெகளை தரித்து, 12 முழ வேட்டியை அணிந்து, அத்தகைய ஒன்றையே போர்த்திக்கொண்டு, பார்த்தாலே இவர் மாத்வ ஆசார்யர்
என்று தெரிந்துவிடும். ஸ்மார்த்தர், விபூதிகளை ருத்ராட்சங்களை
தரித்திருப்பர். ஸ்ரீவைஷ்ணவர், மூன்று நாமங்களை தரித்திருப்பர்.
ஆனால்,
இந்த காலத்தில் இந்த மூன்று மதத்தவரைப் பார்த்தால், முதலில் நீங்கள் பிராமணரா என்றே கேட்க வேண்டியுள்ளது. அதன்பிறகு, எந்த மதத்தவர் என்று கேட்டு அறியவேண்டியிருக்கிறது.
அது இருக்கட்டும். அந்தந்த பூஷணங்கள் அவரவர்களுக்கு
பிடிக்காதிருந்தால் அவர் அந்த வேஷத்தை தரிப்பார்களா? கண்டிப்பாக இல்லை. ஆகவே இவையும் போக்ய வஸ்துகளே. அனைத்து பொருட்களிலும், பரமாத்மன், அந்தந்த ரூப, உருவமாக இருந்து, அவற்றை தரிக்க யோக்யர் யாரோ, அவரில் பரமாத்மன் அவரின் உருவமாக
இருந்து,
அந்தந்த பொருட்களில் அவர்களுக்கு ருசி உண்டாகுமாறு செய்து, அந்த பலன்களை அவர்களுக்குக் கொடுக்கிறார்.
மேலும், பாகவத 11ம் ஸ்கந்த தாத்பர்யத்தில்
ஸஏவது ஸ்வபக்தீஷு ஸ்தித்வானுக்ரஹகாரக: |
அஞ்ஞேஷ்யஞான யந்தாச த்விஷத்ஸு த்வேஷகாரக: ||
அதே பரமாத்மனே பக்தர்களில் இருந்து, அருள்கிறான். அஞ்ஞானிகளில் இருந்து அஞ்ஞானத்தை வளர்க்கிறான். த்வேஷிகளில்
இருந்து தன்னில் த்வேஷத்தை வளர்க்கிறான், என்கிறார். இதே அபிப்பிராயத்தையே
இங்கும் தாசராயர் கூறுகிறார். பக்தி, ஞானாதிகளே ஐஸ்வர்யம் என்று
நினைக்கும் பக்தர்களுக்கு நிதியைப் போல இருக்கும் ஸ்ரீபரமாத்மன், அவர்களில் இருந்து உத்தமமான வைராக்கியம், பக்தி, ஞானங்களைக் கொடுக்கிறான். தமோயோக்யர்களுக்கு தன்னில் த்வேஷங்களையே
வளர்க்கிறான். இப்படி செய்வதற்கு, அவரவர்களின் யோக்யதையே முக்கிய
காரணம் என்று அறியவேண்டும்.
ஈ சதுர்தஷ பு4வனதொ3ளகெ3 ச
ராசராத்மக ஜீவரல்லி வி
ரோசனாத்மஜ வஞ்சகனு நெலெஸித்து3 தி3னதி3னதி3
யாசகனு எந்தெ3னிஸிகொம்ப ம
ரீசித3மன ஸுஹம்ஸரூபி நி
ஷேச காஹ்வயனாகி3 ஜனரபி4லாஷெ பூரைப ||23
ஈ சதுரதஷ புவனதொளகெ = இந்த 14 உலகங்களில்
சராசராத்மக ஜீவரல்லி = ஸ்தாவர, ஜங்கமங்களாக இருக்கும் அனைத்து ஜீவர்களிலும்
வஞ்சகனு = விரோசனனின் மகனான பலிசக்கரவர்த்தியை
வஞ்சித்த வாமனன்
நெலெஸித்து = நிலைத்திருந்து
தினதினதி = தினந்தோறும்
யாசகனு எந்தெனிஸிகொம்ப = தான் யாசகன் என்று அழைத்துக்
கொள்கிறான்.
மரீசிதமன = மரீசி என்றால் ‘ம்ருகத்ருஷ்ணா மரீசிகா’ என்னும் வாக்கியத்தால், இக்கரைக்கு அக்கரை பச்சை என்று மேயும் பசுக்கள் அங்கு சென்றால் அதிகம் மேயலாம்
என்ற ஆசையில் போவது. இதற்கு ம்ருக-த்ருஷ்ணி என்று பெயர். அதைப்போலவே பாலைவனச்சோலை.
தூரத்தில் தண்ணீர் இருப்பதைப் போல தெரிந்தால், மக்கள் பக்கத்தில் இருக்கும் தண்ணீரைவிட்டு, அதனை நோக்கிப் போவார்கள். அதற்கும் ம்ருக-த்ருஷ்ணி என்றே பெயர். பாகவதத்தில்
இதற்கு சம்சாரத்தை (வாழ்க்கையை) உதாரணமாகக் காட்டியிருப்பர். எப்படி பக்கத்தில்
இருக்கும் தண்ணீரை விட்டு, தூரத்தில் மண்ணில் நீர் இருக்கிறது
என்று நினைத்து அங்கு போவது, துக்ககரமானதோ, உத்தமமான மனிதப்பிறவியில் பிறந்து, தனக்குள் இருந்த பரமாத்மனை
கண்டுகொள்ளாமல், விஷய போகங்களில் இருக்கும் அல்ப சுகங்களுக்காக மிகவும் முயற்சி செய்வதால், சம்சார வாழ்க்கையை ம்ருக-த்ருஷ்ணிக்கு சமமாக சொல்லியிருப்பர். பொதுவாக மரீசி
என்றால் சூரிய கிரணம் என்று அர்த்தம். மண்ணில் விழும் கிரணங்கள் தண்ணீர் போல
தெரிவதற்கு மரீசிகா என்பர். மரீசி என்றாலும் மரீசிகா என்றாலும் ஒன்றே. ஆகையால், மரீசி என்றால் ம்ருக-த்ருஷ்ணாவைப் போல இருக்கும் வாழ்க்கை என்று பொருள்.
தமன = அழிக்கும்
சுஹம்ஸரூபி = துக்கங்களை அழிப்பவனான ஹம்ஸ நாமகனான
ஸ்ரீபரமாத்மன்
நிஷேசகாய்வயனாகி = அனைவரின் மனோபீஷ்டங்களை
நிறைவேற்றுபவனாகையால் நிஷேசக என்னும் பெயர் பெற்றவனாகி
ஜனரபிலாஷெ பூரெய்ப = மக்களின் விருப்பங்களை
நிறைவேற்றுகிறான். இதற்கு மரீசி, ஹம்ஸ, தமன என்னும் மூன்று ரூபங்களால் நிஷேசக நாமகனாக இருக்கிறான் என்று அர்த்தமும்
உண்டு.
இந்த 14 உலகங்களில் உள்ள அனைத்து
ஜீவர்களிலும், ஸ்ரீவாமனதேவர் நிலைத்திருந்து, அவரவர் வேண்டும் விஷயங்களை
செய்கிறார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஆயிரம் நாமங்களால் புகழப்படுபவன் ஆகையால், அதில் வரும் ‘மரீசிர்த மனோஹம்ஸ’ மரீசி, தமன,
ஹம்ஸ என்னும் மூன்று பெயர்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். மரீசி என்றால்
பொதுவாக சூரிய கிரணங்கள் என்று அர்த்தம். ஸ்வயம் பகவந்தனே சூரிய கிரணங்களைப் போல
இருப்பதால், பரமாத்மனுக்கு மரீசி என்று பெயர். அல்லது விஷ்ணு சஹஸ்ரநாம வியாக்யானத்தில், ‘சலனான்மரீசி:’ அனைத்து பிராணிகளிலும் இருந்து, அவர்களுக்கு நடக்கும் சக்தியை
கொடுப்பவன் ஆகையால் பரமாத்மனுக்கு மரீசி என்று பெயர்.
இதை எழுதும்போது மரீசிதமன என்று ஒரே சொல்லாக எழுதி, சம்சார- நாசகன் என்று பொருள் வருமாறு சொல்லியிருக்கிறார்கள். அப்படியெனில், இந்த மரீசி, தமன,
ஹம்ஸ என்னும் மூன்று ரூபங்கள் இல்லவேயில்லை என்றும் சிலர் சொல்லலாம். அதை
எப்படி எதிர்கொள்ளலாம் என்றால்: சொல்லும்போது, மரீசி என்னும் சொல்லை, இருமுறை சொன்னால் சரியாகிவிடும்.
மரீசி மரீசி தமன ஹம்ஸ என்று மூன்று ரூபங்கள் என்று சொல்லவேண்டும். இப்படியாக
அர்த்தம் கொள்வதால், தாசராயரின் வாக்கியத்திற்கு விரோதம் வருவதில்லை என்று சொல்கிறார்.
தமன என்றால் ‘சம்சாரம் தமயதீதி தமன:’ சம்சாரத்தை நாசப்படுத்துபவன்
ஆகையால் பரமாத்மனுக்கு தமன என்று பெயர். மரீசி, தமன இரு சொற்களையும் தனித்தனியாக படித்து அர்த்தம் சொல்லவேண்டுமெனில், தமன -> சம்சாரத்தை அழிப்பவன். மரீசி -> ஒளிபொருந்தியவன் அல்லது நடக்கும்
சக்தி கொடுப்பவன் என்று சொல்லலாம். ஹம்ஸ என்றால், ‘துக்கம்ஸர்வம் ஹந்தீதி ஹம்ஸ:’ அனைத்து துக்கங்களையும் நாசம்
செய்கிறான் ஆகையால், ஹம்ஸ என்று பெயர். இப்படி, மரீசி, தமன,
ஹம்ஸ என்னும் விஸ்வாதி 1,000 பெயர்களில் வரும் மூன்று
ரூபங்களால் அனைத்து மக்களிலும் இருந்து, ‘ நிஷேசக’ என்னும் பெயரால் அனைவரின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுகிறான். நிஷேசக = பொழிவது
என்று அர்த்தம் கொள்ளலாம். அவர்கள் விருப்பங்களை ( நிறைவேற்றி) பொழிகிறான் என்று
கருத்து.
அன்னத3ன்னாத3ன்னமய ஸ்வய
மன்ன பி3ரம்மாத்யகி2ல சேதன
கன்ன கல்பகனாஹன நிருத்தா4தி3 ரூபத3லி |
அன்யரன பேக்ஷிஸதெ3 கு3ணகா
ருண்யஸாக3ர ஸ்ருஷ்டிஸுவனு ஹி
ரண்ய க3ர்ப்பனொளித்து3 பாலிஸுவனு ஜக3த்ரயவ ||24
அன்னத = அன்னத்தை பிறருக்குக் கொடுப்பவன்
அன்னாத = மக்களில் இருந்து அன்னத்தை உண்பவன்
அன்னமய = அன்னத்தில் நிலைத்திருப்பவன்
ஸ்வயமன்ன = ஸ்வயம் அன்ன என்று அழைக்கப்படுபவன்
பிரம்மாத்யகிலசேதனகெ = பிரம்மாவிலிருந்து தொடங்கி
அனைத்து சேதனர்களுக்கும்
அன்ன கல்பகனு = தகுதிக்கேற்ப அன்னத்தைக் கொடுப்பவன், இப்படி 5 வித செயல்களை
அனிருத்தாதி ரூபதலி = அனிருத்த, பிரத்யும்ன, சங்கர்ஷண, வாசுதேவ, நாராயண என்னும் 5 ரூபங்களில் இருந்து
அஹனு = செய்கிறான்.
அன்யரனு = பிறரை
அபேக்ஷிஸதெ = எதிர்பார்க்காமல் (அவர்களின்
உதவியின்றி)
குணகாருண்ய சாகர = ஆனந்தாதி குணங்களின் சாகரமாக
இருப்பவன்; அல்லது கருணைக் கடலாக இருப்பவன்
ஹிரண்யகர்ப்பனொளித்து = பிரம்மதேவருக்குள் இருந்து
ஸ்ருஷ்டிசுவனு = படைக்கிறான்
ஜகத்ரயவ = மூன்று உலகங்களையும்
பாலிஸுவ = ஸ்வயம் விஷ்ணு ரூபத்தினால் சத்வ குணத்துடன்
காக்கிறான்; தமோ குணத்தால் ருத்ர ரூபத்தினால் அழிக்கிறான்.
ஸ்ரீபரமாத்மன், அனிருத்தாதி 5 ரூபங்களால் அன்னத, அன்னாத, அன்னமய, அன்ன,
அன்னகல்பக என்று 5 செயல்களை செய்கிறான்.
அன்ன என்றால் ‘அன்னந்ததாதீதி அன்னத:’ அனைவருக்கும் அன்னத்தைக்
கொடுப்பவர் என்று பொருள்.
* அனிருத்த ரூபத்தினால், அனைத்து அன்னதாதாவிலும் இருந்து, அன்னப்ரதன் ஆகிறான்.
* பிரத்யும்ன ரூபத்தினால், அனைத்து பிராணிகளிலும் இருந்து, போஜனங்களை உண்கிறான். ‘அன்னமத்தீதி அன்னாத:’ அன்னத்தை உண்பவன் ஆகையால் அன்னாத
என்று பெயர். ஆகையால் பிரத்யும்னன், அன்னாத என்று அழைக்கப்படுகிறான்.
* ஸ்வயமன்னம் என்றால் ‘அத்தீத்யன்னம்’ அனைத்து பிரபஞ்சத்தையும் உண்பவன் ஆகையால், அன்ன என்று பெயர். இந்த செயலை, சங்கர்ஷண ரூபத்தினால் செய்கிறான்.
* நாராயண ரூபத்தினால் பிரம்மாதி
அனைத்து ஜீவகணங்களுக்கும் அன்னத்தை ஸ்ருஷ்டிக்கிறான். இதை செய்வதற்கு
யாரிடமிருந்தும், எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஏன் இந்த செயல்களை அவன் செய்கிறான் என்று
கேட்டால்,
அவன் ‘காருண்ய சாகரன்’. கருணைக்கடலாக இருப்பவனாகையால் இவற்றை செய்கிறான்.
* ரஜோகுணத்தை ஏற்றுக்கொண்டு பிரம்ம
தேவரில் இருந்து உலகத்தை படைக்கிறான்.
* ஸ்வயம் விஷ்ணு ரூபத்தினால்
சத்குணத்தினால் காக்கிறான்.
* தமோ குணத்தினால் ருத்ரரில் இருந்து
அழிக்கும் செயலை செய்கிறான்.
இந்த செயல்களால் பரமாத்மனுக்கு ஆகவேண்டியது என்று
ஒன்றும் இல்லை. எவ்வித எதிர்பார்ப்புகளோ லாபமோ இல்லாமல், மக்களின் நலனுக்காக, கருணைக் கடல் ஆகையால், இந்த செயல்களை செய்கிறான் என்பது கருத்து.
த்ரிபத3 த்ரித3ஷாத்3யக்ஷ த்ரிஸ்த2
த்ரிபத2 கா3மினிபித த்ரிவிக்ரம
க்ருபணவத்ஸல குவலயத3ளஷ்யாம நிஸ்ஸீம |
அபரிமித சித்ஸுக2கு3ணாத்மக
வபுஷ வைகுண்டா2தி3 லோகா
தி3ப த்ரயீமய தன்னவர நிஷ்கபடதி3ம் பொரெவ ||25
த்ரிபத = மூன்று பாதங்களைக் கொண்ட காயத்ரி
மந்திரத்தின் தலைவன்
த்ரிதஷாதக்ஷ = தேவதைகளுக்கு தலைவனானவன்
த்ரிஸ்த = ஸ்வேதத்வீப, அனந்தாஸன, வைகுண்ட என்னும் மூன்று இடங்களில் வசிப்பவன்
த்ரிபதகாமினி = மூன்று வழிகளில் பிரவகிக்கும் கங்கை
பித = தந்தை
த்ரிவிக்ரம = மூன்று பாதங்களால் உலகை அளந்த
த்ரிவிக்ரமரூபி
க்ருபணவத்ஸல = தன் பக்தர்களாக இருந்து, இந்திரியங்களை அடக்கமுடியாமல் இருப்பவர்களில் ப்ரியம் உள்ளவன்
குவலயதளஷ்யாம = குவளை மலரைப் போல நீல வண்ணமாக
இருப்பவன்
நிஸ்ஸீம = எல்லைகள் இல்லாத குணங்களைக் கொண்டவன்
அபரிமித = எல்லைகள் இல்லாதவன்
சித்ஸுக = நிரந்தர சுகம் கொண்டவன்
குணாத்மக = ஆனந்தாதி குணங்களை
வபுஷ = சரீரமாக உள்ளவன்
வைகுண்டாதி லோகாதிப = வைகுண்ட முதலான மூன்று
உலகங்களுக்கு அரசன்
த்ரயீமய = வேத ப்ரதிபாத்யன் அல்லது வேத ஸ்வரூபனுமான
இத்தகைய ஸ்வாமி
தன்னவர = தன் பக்தர்களை
நிஷ்கபடதிந்த = எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி
பொரெவ = காப்பாற்றுகிறான் / அருள்கிறான்.
த்ரிபதகாயத்ரி என்று புகழ் பெற்றிருக்கும் காயத்ரி
மந்திர பிரதிபாத்யன். ‘த்ரிதஷா விபுதா: ஸுரா:’ என்னும் அமர வாக்கியத்தின்படி த்ரிதஷ என்றால் தேவதைகள். அவர்களுக்கு தலைவன். ‘கங்காத்ரிபத காமினி’ என்னும் ஆதாரத்திற்கேற்ப கங்கையைப்
பெற்றவன் என்று அர்த்தம். வாமன அவதாரத்தில், பலியிடம் மூன்றடி நிலம் தானம் கேட்டு, அவற்றினால் 14 உலகங்களையும் அளந்தான். க்ரம என்றால் காலடி. ஆகையால், த்ரிவிக்ரம என்று பெயர். க்ருபண என்றால் கஞ்சர்களுக்கு பெயர் உண்டு.
பாகவத 11ம் ஸ்கந்தத்தில் ‘யார் க்ருபண?’ என்று உத்தவன் கேள்வி கேட்டபோது, ஸ்ரீபரமாத்மன் சொன்னது. ‘க்ருபணோயோsஜிதேந்த்ரிய:’. 16ம் அத்தியாயம் 45ம் ஸ்லோகத்தில் இந்த விவரம் இருக்கிறது. இதற்கு விஜயத்வஜீயத்தில் இவ்வாறு
குறிப்பிடுகிறார்.
விஷயேதோஷ புத்திஸ்ஸன் இந்த்ரியாணாம் வஷேஸ்தித: |
க்ருபண: ஸதுஸம்ப்ரோக்தோ குணபுத்தி விபர்யய: ||
பரமாத்மனிடம் பக்தி வைத்து, சம்சார சுகத்தை சுகம் என்று எண்ணாமல், அதன் மேல் ஆசை கொள்ளாமல் இருந்தாலும், தன் இந்திரியங்களை வசப்படுத்திக் கொள்ள முடியாமல் இருப்பவனே க்ருபணன். அதாவது
இவனிடம் இருக்கும் குணத்திற்கும், புத்திக்கும் வேறுபாடு உண்டு.
குணம்,
விஷய சுகத்தை வேண்டாமல் பரமாத்மனை துதிக்கிறது. புத்தியோ, இந்திரியங்களை வசப்படுத்தாது. இத்தகையவர்கள், ‘ஸ்வாமி, இந்திரியங்களை வசப்படுத்த முடியாமல் இருக்கும் எங்களை காப்பாற்றுங்கள்’ என்று தன்னிரக்கத்துடன் வேண்டுகிறார்கள். இவர்களிடம் வாத்ஸல்யம் உள்ளவன் என்று
பொருள்.
த்ரயீமயி என்றால்
ஸ்ரீர்பூமிரிதி ரூபாப்யாம் ப்ரக்ருதிர்விஷ்ணு நாஸஹ |
ஷேதே ஸ்ருதி ஸ்வரூபேண ஸ்தௌதிபிரம்ம கல்பலயே ஹரிம் ||
என்னும் ஸ்ருதிகீதையின் தாத்பர்யத்திற்கேற்ப, வேதம், லட்சுமிஸ்வரூபமே ஆனாலும், அதில் பரமாத்மன்
வியாபித்திருப்பதால், அவனை வேதஸ்வரூபன் என்று சொல்வதில் பிரச்னை எதுவும் இல்லை. இத்தகைய பரமாத்மன், பக்தர்களை வஞ்சிக்காமல் காப்பாற்றுவான் என்பதே கருத்து.
ஆனால் இந்த விஷயத்தில் சிறிது ஆட்சேபம் வரலாம். அது
எப்படியெனில், பலி சக்ரவர்த்தியை வாமன ரூபத்தில் வந்து ஏமாற்றியது. பாண்டவர்களுக்கு பகவத்
அனுக்கிரகம் இருந்திருந்தால், வனவாசாதிகள் அவர்களுக்கு
வந்திருக்காது. பாண்டவர்கள் வனவாசத்திற்கு சென்றபிறகு, அவர்களிடம், ‘நான் ஊரில் இருந்திருந்தால் உங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது. நான் சால்வ
ராஜனுடன் போருக்கு சென்றிருந்தேன். அப்போதே இந்த பிரச்னை உண்டாகியிருக்கிறது’ என்று சாக்கு சொல்கிறான் ஸ்ரீகிருஷ்ணன். பகவத் விருப்பம் இருந்திருந்தால், சாட்சாத் ஸ்ரீகிருஷ்ணனின் மாப்பிள்ளையும், அர்ஜுனனின் மகனுமான அபிமன்பு செத்திருப்பானா? இவை அனைத்தும் வஞ்சனை இல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? என்றால்,
அவை பக்தர்களை வஞ்சிப்பதற்காக செய்த செயல்கள்
கிடையாது. பலியை வேண்டியதால் அவனது புகழை நிரந்தரமாக பரவச் செய்தான்.
வனவாசத்தினால் பாண்டவர்களின் யோக்யதையும், துரியோதனாதிகளின் அயோக்யதையும் உலகிற்கு தெரியபடுத்தியதைப் போல் ஆயிற்று.
அபிமன்யு பிறந்த காலத்திலேயே ‘16ம் வயதிலேயே உன் மகன் உன்னிடம் வருவான்
என்று சந்திரனுக்கு பரமாத்மன் வரம் கொடுத்திருந்ததால், அதனை உண்மையாக்குவதற்கு அவனை கொல்ல வேண்டியதாயிற்று.
No comments:
Post a Comment