ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, July 19, 2020

1-5 நாமஸ்மரண சந்தி

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3

கருணதிந்தா3பநிது பே1ளுவே

பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது3

 

இந்த கலியுகத்தில், மற்ற அனைத்து சாதனங்களைவிட நாமோச்சாரணத்தை மட்டும் பக்தியினால் செய்தால், அதற்கு சமமான வேறெதுவும் இல்லை என்பதை

 

நாம்னாஸ்தி யாவதீ ஷக்தி: பாப நிர்ஹரணேஹரே: |

தாவத்கர்த்தும் நஷக்னோதி பாதகம் பாதகீஜன: ||

 

பரமாத்மனின் நாமத்தை பக்தியினால் உச்சரித்தால், அது எவ்வளவு பாவங்களை பரிகரிக்கிறதோ, அவ்வளவு பாவங்களை மனிதன் தன் ஆயுளில் செய்வதற்கு சாத்தியம் இல்லை என்று ஸ்ரீமதாசார்யர் கூறுகிறார். ஆகையால், தாசராயர் நாமஸ்மரணையின் மகிமையையும் அதனை செய்யும் விதத்தையும் இங்கு சொல்கிறார்.

 

சத்சாதனைக்கு முக்கிய காரணமான பகவத்பக்தர்களின் மகிமை எத்தகையது என்னும் விஷயத்தையும், புண்ணிய பாவங்களின் விவரத்தையும், பஞ்ச-பௌதிகரான ஜீவர்களின் போஜ்ய பதார்த்தங்களில் செய்ய வேண்டிய அனுசந்தான கிரமத்தையும், ஸ்ரீபரமாத்மனை அடையும் விதத்தையும் இந்த சந்தியில் தாசராயர் விளக்குகிறார். முதல் பத்யத்தில், சந்தியின் நோக்கத்தை விளக்கியவாறு, எந்த ரீதியில் நாமஸ்மரணை செய்தாலும் மகாபலன்கள் கிடைக்கிறது என்று சொல்கிறார்.

 

மக்களாடி3ஸுவாக3 மட3தி3யொ

ளக்கரதி3 நலிவாக3 ஹய ப

ல்லக்கி க3ஜமொத3லாத3 வாஹனவேரி மெரெவாக3 |

பி3க்குவாக3 ஆகளிஸுதலி தே3

வக்கிதனயன நெனெவுதிஹ நர

ஸிக்கனெம தூ3தரிகெ3 ஆவாவல்லி நோடித3ரு ||1

 

மக்களாடிசுவாக = குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டும்போது, அவர்களுடன் விளையாடும்போது, அவர்களுடன் மகிழ்ந்திருக்கும்போது,

மடதியொள் = மனைவியுடன்

அக்கரதி = அன்புடன்

நலிவாக = போகிக்கும் காலத்திலும்

ஹய = குதிரை

பல்லக்கி = பல்லக்கு

கஜ மொதலாத = யானை முதலான

வாஹனவேரி மெரெவாக = இத்தகைய பல்லக்கில் ஏறிச் செல்லும்போது

பிக்குவாக = விக்கல் வரும்போது

ஆகளிஸுதலி = கொட்டாவி விடும்போது

தேவக்கி தனயன = தேவகி மகனான ஸ்ரீகிருஷ்ணனை

நெனெவுதிஹ = நினைக்கும்

நர = ஜீவன்

ஆவாவல்லி நோடிதரு = எங்கு பார்த்தாலும்

யமதூதரிகெ = யமதூதர்களிடம்

சிக்கனு = சிக்க மாட்டான்.

 

ஸ்ரீபரமாத்மனின் நாமஸ்மரணையை செய்வதற்கு, ஸ்னானாதிகளை செய்து ஜபத்தை செய்ய வேண்டும், இத்தகைய காலத்திலேயே செய்ய வேண்டும். மற்ற நேரத்தில் செய்யக்கூடாது என்றெல்லாம் கிடையாது. ஸ்மரணை செய்வதற்கு அனைத்தும் தகுந்த காலமே. கருட புராணத்தில்:

 

புத்ராதீனாம் சும்பனேச்யைவ காலெ ஸவேணு ஹஸ்தம் ஸஸ்மரேத்க்ருஷ்ணமேவ |

ஸுசங்ககாலெ ஸ்வஸ்தியஸ்சைவ நித்யம் கோப ஸ்த்ரீணாம் பீனபயோதரம் த்ருதம் ||

 

குழந்தைகளைக் கொஞ்சும்போது வேணுகோபால கிருஷ்ணனை நினைக்க வேண்டும். தன் மனைவியுடன் போகிக்கும் காலங்களில், கோபிகாஸ்த்ரியர்களின் மார்பில் சாய்ந்திருக்கும் ஸ்ரீகிருஷ்ணனை நினைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 

இதே அர்த்தத்தையே தாசராயர் இந்த பத்யத்தில் கூறியிருக்கிறார். குழந்தைகளுடன் விளையாடும்போது, பகவந்தனே சிசு ரூபத்தில் இருந்து அப்படி விளையாட வைக்கிறான் என்று நினைக்க வேண்டும். மனைவியுடன் போகிக்கும் காலங்களில், தம்பதிகளில் தம்பதி ரூபியாக பரமாத்மன் இருந்து செயல்களை செய்விக்கிறான் என்று பரமாத்மனை நினைக்க வேண்டும்.

 

ஆஸீன: ஸம்விஷம்ஸ்த்ரிர்ஷ்ட புஞ்சான: பர்யர்ட பிபன் |

சிந்தயானோ ஹ்ருஷீகேஷ மபஷ்யத்தன்மயம் ஜகத் ||

 

என்னும் பாகவத 10ம் ஸ்கந்த வாக்கியத்தின்படி அமர்ந்திருக்கும்போதும், தூங்கும்போதும், நிற்கும்போதும், உண்ணும்போதும், நடக்கும்போதும், குடிக்கும்போதும், பரமாத்மனை நினைத்தவாறு, உலகம் முழுவதையும் பரமாத்மனாகவே பார்த்தான் என்று சொல்லியிருக்கிறார்கள். மேலும் ஆறாம் ஸ்கந்தத்தில்:

 

பதித:ஸ்கலிதோ பக்ன: ஸந்தஷ்டஸ்தப்த ஆஹத: |

ஹரிரித்யவஷேனாஹ புமான்னார்ஹதி யாதனாம் ||

 

வேண்டும்போதும், ஏதாவது காயம் பட்டாலும், உதட்டை கடித்துக் கொண்டாவது, திட்டு வாங்கும்போதும், ஐயோ அப்பா என்று சொல்லாமல் ஹரே ஹரே என்றால் போதும். அவன் யம பட்டண யாத்திரையை செய்ய மாட்டான் என்கிறார். அதாவது அபக்தோ தாஹ்ருதம் நைவபலதாத்ரு பவிஷ்யதிஎன்னும் 6ம் ஸ்கந்த வியாக்யானத்திற்கேற்ப, பக்தியில்லாமல் நாமோச்சாரணை செய்தால், பலன் வருவதில்லை என்று ஸ்பஷ்டமாக சொல்லியிருப்பதால், பக்தியுடன் மட்டுமே மேற்சொன்ன மாதிரி நாமோச்சாரணை செய்தால், யமதூதர்களை ஒருவன் பார்ப்பதில்லை போலவே தாசராயர், குதிரையின் மேலும், பல்லக்கியிலும், யானை முதலான வாகனங்களின் மேல் அமர்ந்து போகும்போதும், பரமாத்மனை பக்தியுடன் நினைக்கும் மனிதன் யமதூதர்களுக்கு சிக்க மாட்டான் என்கிறார். பாகவத 6ம் ஸ்கந்தத்தில்:

 

ஸக்ருன்மன: கிருஷ்ண பதாரவிந்த யோர்னிவேஷிதம் தத்குணராகியைரிஹ |

நதே யமம் பாஷப்ருதஸ்ச தத்பர்டா ஸ்வப்னேபி பஷ்யந்தி ஹிசீர்ண நிஷ்க்ருதா: ||

 

பரமாத்மனின் பாதாரவிந்தங்களில் மனதை வைத்து, ஒரு முறையாவது பரமாத்மனின் குணங்களை, அர்த்தங்களை அறிந்து உச்சரித்தால், அவன் யமனை மட்டுமல்ல, பாசக்கயிறைக் கொண்ட யமதூதர்களையும்கூட பார்ப்பதில்லை. ஏனெனில், இதனால் அவன் பிராயச்சித்தம் செய்தது போலாகிறது என்று சொல்கிறார். அதே அபிப்பிராயத்தையே சிக்குவனே யமதூதரிகெ ஆவல்லி நோடிதருஎன்று தாசராயர் கூறியிருக்கிறார்.

 

ரிது3 ப்ரவஹக3ளல்லி தி3வ்யா

ம்ப3ரதி31த்1ராதி3யலி ஹருஷா

மருஷ விஸ்ம்ருதி1யிந்த3லாக3லி ஒம்மெ பா3ய் தெரது3 |

ஹரி ஹரி ஹரியெம்ப3 எரட3

க்‌ஷர நுடித3 மாத்ரத3லி து3ரிதக3

ளிரதெ3 போபுவு தூ1லராஷியொளனல பொக்கந்தெ ||2

 

ஸரித்ப்ரவஹகளல்லி = ஆறுகளில் குளிக்கும்போது

திவ்யாம்பரதி = புதிய ஆடைகளை அணிவதற்காக கிழிக்கும்போது

பத்ராதியலி = இலை பறிக்கும்போது

ஹர்ஷாமருஷ விஸ்ம்ருதியிந்தலாகலி = கர்வத்துடனோ, கோபத்துடனோ, ஏதோ ஒரு காரணத்தாலும்

ஒம்மெ = ஒரு முறை

பாய் தெரது = வாய் திறந்து

ஹரி ஹரி எம்ப எரடக்‌ஷர = ஹரி என்னும் இரு எழுத்துக்கள்

நுடித மாத்ரதி = சொன்ன உடனேயே

துலராஷியொளு = பஞ்சுக் குவியலில்

அனல பொக்கந்தெ = நெருப்பு வைத்ததைப் போல

துரிதகளு = பாவங்கள்

இரதெ போபவு = சுட்டுப் போகின்றது.

 

ஆற்றில் நீர் பாயும்போது அதைப் பார்த்து தண்ணீர் பாய்கிறது (கன்னடத்தில் : ஹரிகிறது) என்று சொல்லும்போது அதில் இருக்கும் ஹரி என்னும் சொல், புதிய ஆடையை உடுத்தும்போது கிழி என்று சொல்லும்போது (கன்னடத்தில் : ஹரி) என்று சொல்லும்போது அதில் இருக்கும் ஹரி என்னும் சொல், இலையைப் பறி (கன்னடத்தில்: ஹரி) என்று சொல்லும்போது அதில் இருக்கும் ஹரி என்னும் சொல், ஆகியவற்றில் நம் முயற்சி இல்லாமலேயே நம் வாயிலிருந்து வரும் ஹரி என்னும் சொல் அதிக பலன்களைக் கொடுக்கக்கூடியது.

 

கர்வத்தினாலோ, கோபத்தினாலோ, ஏதோ ஒரு காரணத்தால் சுயநினைவு இல்லாதபோதோ, ஒரு முறை வாய் திறந்து, அதாவது சத்தமாக, ஹரி ஹரி ஹரி என்று உச்சரித்தால், பஞ்சுக் குவியலில் நெருப்பு வைத்ததைப் போல, பாவங்கள் அனைத்தும் சுட்டுப் போகின்றன என்கிறார். இதில் ஒரு சிறப்பினை கவனிக்க வேண்டும். நாம் செய்வது ஹரிஸ்மரணை என்றே நமக்குத் தோன்றாமல், இலையைப் பறி (ஹரி) என்று சொன்ன உடனேயே, பாவராசிகள் அனைத்தும் சுட்டுப் போகின்றன என்று அர்த்தமல்ல. இலையைப் பறி என்று சொல்லும்போது, அதில் இருக்கும் ஹரி சொல், அதன் அர்த்தஞானத்துடன், பாவத்தை அழிப்பதால் ஹரி என்று பரமாத்மனுக்கு பெயர் வந்தது என்னும் ஞானத்தை உடனடியாக மனதில் கொண்டு வந்து, அதே ஹரி சொல், இங்கும் பயன்பட்டிருக்கிறது என்று நினைக்க வேண்டும். அதாவது, நதி ஓடுகிறது (ஹரி) என்று சொல்லும்போது, தானாகவே வரும் ஹரி சொல், ஸ்ரீஹரியை நினைத்துக் கொள்வதற்கு உதவி செய்கிறது என்பதே இதன் பொருள்.

 

இப்படியாக கூறினால், தாசராயரின் கருத்துக்கு விரோதம் வருகிறது என்று நினைக்கக்கூடாது. ஏனெனில், இதே அபிப்பிராயத்தை வைத்தே தாசராயரும் இந்த பத்யத்தை இயற்றியிருக்கிறார் என்பது நிச்சயம். ஏனெனில், பாகவத 6ம் ஸ்கந்த, அஜாமிளனின் சரித்திர சமயத்தில்:

 

ஸாங்கேத்யம் பாரிஹாஸ்யம் வாஸ்தோபம் ஹேளனமேவவா |

வைகுண்டனாம க்ரஹணமஷேஷாகஹரம்விது: ||

 

என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறார்கள். இதன் அர்த்தத்தை பொதுவாக பார்த்தால், இவன் யார் என்று மற்றவர்கள் அறிவதற்கு, இவனுக்கு ராம, கிருஷ்ண என்று பெயர் வைத்திருக்கிறார்கள். அந்தப் பெயரை வைத்து யாரையாவது அழைத்தால், ஹே ராம, ஹே கிருஷ்ண என்று அழைத்தால், ராம கிருஷ்ண பெயர் வைத்திருக்கும் ஒருவனை கேலி செய்தால், அவனை திட்டும்போது, அவன் மேல் கோபப்படும்போதும், இப்படி ஏதோ ஒரு காரணமாக பரமாத்மனின் பெயர், நம் வாயிலிருந்து வந்தால் போதும். அனைத்து பாவங்களும் சுட்டுப் போகின்றது என்று பாகவத கர்த்தரான வேதவியாஸ தேவர் சொல்லியிருக்கிறார். அதற்கு ஸ்ரீமதாசார்யர் இயற்றிய தாத்பர்யத்தை அனுசரித்து எழுதிய, விஜயத்வஜீய வியாக்யானத்தில் இதன் அர்த்தத்தை இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

 

தம் மக்களை அவர்களின் பெயர்களை சொல்லி, ஹே ராம, ஹே கிருஷ்ணா என்று அழைத்தால் போதும். அதற்கே அனைத்து பாவங்களும் சுட்டுப் போகின்றன என்று அர்த்தமல்ல. சாங்கேத்யம் என்றால் மக்கள், ராம என்று அழைக்கும்போது இப்படி சிந்திக்க வேண்டும்.

 

அவர்களுக்கு பெயர் வைக்கும்போது, ஸ்ரீஹரியின் பெயர்களை வைக்கும் காரணம் என்ன? நாம் சம்சாரத்தில் மெய்மறந்து மூழ்கியிருக்கும்போதும், மக்களின் பெயர்கள் மூலமாக அந்த பெயர் நமக்கு நினைவுக்கு வரட்டும் என்னும் நோக்கத்திற்கே. ஆகவே, ராம என்று மகனை அழைக்கும்போது, ‘ரமயதீதி ராம:உலகத்தில் இருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் குணம் இவனிடம் இருப்பதால், பரமாத்மனுக்கு ராமன் என்று பெயர், என்று நினைத்தவாறு, மகனை அழைக்கும்போதெல்லாம் இப்படி பரமாத்மனை நினைக்க வேண்டும் என்பது கருத்து. அப்படியெனில், அஜாமிளன் தன் இறுதிக்காலத்தில் தன் மகனை நாராயணா என்று அழைத்த மாத்திரத்தில், விஷ்ணு தூதர்கள் அவனை அழைத்துப் போயினரே? அவனுக்கு எப்படி சத்கதி உண்டாயிற்று? என்றால், அவன் தன் மகனை அழைக்கவில்லை.

 

தூரே க்ரீடனகாஸக்தம் புத்ரம் நாராயணாஹ்வயம் |

ப்லாவிதேன ஸ்வரேனோச்சை ராஜுஹாவாகுலேந்த்ரிய: ||

 

யமதூதர்களை பார்த்த மாத்திரத்தில், மகனிடம் வாத்ஸல்யம் பிறந்து, தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகனான நாராயணனை, தழுதழுத்த குரலில் நாராயணா என்று அழைத்தான் என்று ஸ்லோக அர்த்தம் சொல்கிறது.

இதைப் போலவே இதன் முந்தைய ஸ்லோகத்தில் மதிஞ்சகாரதனயே பாலேனாராயணாஹ்வயேபாசக்கயிறுடன், பயங்கரமான மூன்று யம தூதர்களை, கண்ணில் பார்த்த உடனேயே சிறுவனான நாராயணன் என்னும் தன் மகனை நினைத்தான் என்று அர்த்தம் சொல்லலாம். அதாவது, யமதூதர்களை கண்ணில் கண்டவுடன், பயத்தினால், மகன் மேல் உள்ள பாசத்தினால் மகனை அழைக்க நினைத்தான்.

 

அதற்குள், இவனது வினைப்பயனின் காரணமாக, இவன் யோக்ய ஜீவன் ஆன காரணத்தால், நாராயண என்னும் மகனை எப்போது அழைக்க முற்பட்டானோ, அப்போதே அவனுக்கு பரமாத்மனின் நினைவு வந்தது. ஆகையால், ‘மதிஞ்ச காரதனயே பாலே நாராயணாஹ்வயே’. தனய என்றால், ‘தனுவிஸ்தாரே, யீதிஞானம் ஸமுத்திஷ்டம்’. அதாவது ஞானம், விஸ்தாரமான ஞானம் உள்ளவன் என்று அர்த்தம். பால என்றால், ப்ராதேஷ நாமகனாகி, 5 வயது சிறுவனைப் போல நம் இதய கமலத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சிறுவன் என்று பரமாத்மனுக்குப் பெயர். இத்தகைய பால நாமகனான, விஸ்தாரமான ஞானமுள்ள நாராயணனில் மனதை வைத்தான் அஜாமிளன். தூரேக்ரீடனகாஸக்தம் - தூரத்தில் அதாவது, பிரம்மாண்டத்தின் வெளியில் விளையாடிக் கொண்டிருக்கிறான். என்ன விளையாட்டு? ஸ்ருஷ்டிப்பது; அழிப்பது; இத்தகைய விளையாட்டுக்கள்.

 

புன்னாம்னோ நரகாத்ராதா புத்ர இத்யாபி ஷப்த்யைதே - புத் என்னும் நரகத்திலிருந்து விடுவிக்கிறான் ஆகையால் பரமாத்மனுக்கு புத்ர என்று பெயர். இத்தகைய புத்திரனான நாராயணனை, தன் உச்ச குரலில் அழைத்தான் அஜாமிளன். அப்போது விஷ்ணு தூதர்கள் வந்தனர் என்று உரை எழுதியிருக்கின்றனர். ஆகையால் ஸாங்கேத்யாம்என்றாலும் பரமாத்மனின் பெயர் நினைவுக்கு வருவதற்காக இந்த பெயரை நினைத்து குழந்தைகளை அழைத்தால், பரமாத்மனின் நாமம் நினைவுக்கு வரவேண்டும் என்பது அர்த்தம்.

 

பாரிஹாஸ்யம்வா என்றால், பரமாத்மனின் பெயர் உள்ள ஒருவரை கேலியாகவும் அவர் பெயரை சொன்னால் போதும் என்னும் அர்த்தமல்ல. நாராயண என்னும் பெயருள்ள ஒருவரை கேலி பேசும்போது, ‘ஓஹோ. இவன்தானா நாராயணன்? பாற்கடலில் படுத்திருப்பவனா இவன்? முட்டாளே. வீட்டில் மோருக்கு வழியில்லை. இவனுக்கு நாராயணன் என்று பெயர். அந்த ஸ்வாமி பாற்கடலில் படுத்திருக்கிறான். முக்தர்களின் கதியானவன். தோஷங்கள் இல்லாதவன். இவனோ? என்று கேலி பேசும்போதும், நாராயணன் முக்தர்களின் கதி, ஆகிய நாராயணனின் குணங்களை நினைவுக்குக் கொண்டு வரவேண்டும். இதனால், பாவங்கள் பரிகாரம் ஆகின்றன என்று பொருள்.

 

ஸ்தோபம் என்றால் கோபம் வரவழைப்பது அல்லது திட்டுவது என்று அர்த்தம். மதுசூதனன் என்னும் பெயருள்ள ஒருவரை திட்டி, அவருக்கு கோபம் வரவழைப்பது. அப்போதாவது நம் ஸ்வாமி மது என்னும் தைத்யனைக் கொன்றான். அவனுக்கு மதுசூதனன் என்று பெயர் வந்தது. ஹே பாபி. நீ எத்தகைய மதுசூதனன். மது என்றால் தேன். அதனைக் கொல்லும் யோக்யதையும் உனக்கில்லை. இப்படி இருக்கையில், உன் பெயர் மதுசூதனனா? என்று ஒருவரை திட்டும்போதும், பரமாத்மனின் மகிமை, குணங்களை நினைத்தால் செய்த பாவங்கள் தீர்கின்றன என்ற அர்த்தம்.

 

இவையல்லாமல், நாராயணாதி பெயருள்ள ஒருவரை திட்டும்போது, அந்தப் பெயர் வந்தால் போதும், பாவங்கள் அனைத்தும் போகின்றன என்றால், இந்த உலகத்தில் பாவிகளே இருக்கமாட்டார்கள். துரியோதனாதிகள் எவ்வளவோ முறை ஸ்ரீகிருஷ்ணனின் பெயரை சொல்லியிருக்கின்றனர். இறக்கும்போது, ஸ்ரீகிருஷ்ணனின் அருகிலேயே இறந்திருக்கின்றனர். ஆனாலும், அவர்களுக்கு முக்தி கிடைக்கவில்லை. ஆகையால், அ-பக்தியினால் உச்சரிக்கும் பெயர்களுக்கு பலன் இல்லை என்கிறார்.

 

அப்படியிருக்கையில், இலையைக் கிழி (ஹரி), நதி பாய்கிறது (ஹரி), என்று சொன்ன மாத்திரத்திலேயே, இவனுக்கு சத்கதி என்று தாசராயர் சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை. வியாச வாக்கியத்தைப் பார்த்து, ஸ்ரீமதாசார்யருக்கு தோன்றிய அர்த்தத்தை விட்டு, வேறு அர்த்தத்தை அதாவது வியாச வாக்கியத்திற்கு எதிரான அர்த்தத்தை அவர் எழுதினார் என்று சொல்வது எப்படி சாத்தியமில்லையோ, அதுபோலவே ஆசார்யரின் வாக்கியத்திற்கு எதிரான அர்த்தத்தை தாசராயர் எழுதினார் என்று சொல்வதும் சாத்தியமில்லை.

 

ஆக, நமக்குத் தெரியாமல் ஹரி என்ற சொல் நம் வாயிலிருந்து வந்தாலும், அதன் மூலம் ஸ்ரீஹரியை நினைத்து, அவன் மகிமை குணங்களை சிந்தித்தால், அப்போதே கதி, மற்றும் பாவங்கள் பரிகரிக்கின்றன என்று தாசராயர் சொல்வதாக அறியவேண்டும்.

 

மலகு3வாக3லி ஏளுவாக3லி

குளிது மாதாடு3தலி மனெயொளு

கெலஸக3ள மாடு3தலி மைதொளெவாக3 மெலுவாக3 |

கலுஷதூ3ரன கலடா2விலி

திளியெ தத்தன்னாம ரூபதி3

3ளியலிப்பனு ஒந்த3ரெக்‌ஷண பி3ட்டலக3லனவர ||3

 

மலகுவாகலி = படுக்கும்போதும்

ஏளுவாகலி = எழும்போதும்

குளிது மாதாடுதலி = அமர்ந்து பேசும்போதும்

மனெயொளு கெலஸகள மாடுதலி = வீட்டு வேலைகளை செய்யும்போதும்

மைதொளெவாக = குளிக்கும்போதும்

மெலுவாக = உண்ணும்போதும்

கலுஷதூரன = தோஷங்கள் அற்றவனான ஸ்ரீஹரி

தத்தன்னாமரூபவ = அங்கங்கு அந்தந்த பெயர், ரூபங்களை வசிப்பவனான

சகலடாவிலி = அனைத்து இடங்களிலும்

திளிது = அறிந்து நினைத்தால்

பளியொளிப்பனு = அவரின் சமீபத்திலேயே வசிக்கிறான்

ஒந்தரெக்‌ஷண = ஒரு கணமும்

அவர = அவர்களை

பிட்டகல = விட்டு விலகாமல் இருக்கிறான்

 

படுப்பது முதலான காலங்களில், அனைத்து இடங்களில், அந்தந்த நாம ரூபத்தை அறியவேண்டும் என்று இந்த பத்யத்தில் சொல்கிறார். அந்தந்த நாமரூபத்தை அறிவது என்றால் என்ன? அதாவது, நாம் படுக்கும்போது, ஸ்ரீபரமாத்மனுக்கு சேஷன் படுக்கையாக இருப்பதைபோல, இந்த படுக்கையிலும் ஸ்ரீபரமாத்மன் இருக்கிறான் என்று நினைக்க வேண்டும். அடுத்து, நம்மில் பரமாத்மன் நம் ரூபத்தில் இருக்கிறான் என்றும், லட்சுமிதேவி என் மனைவியின் ரூபத்தில் இருக்கிறார் என்றும் நினைத்து, போகாதிகளை அனுபவித்து தூங்க வேண்டும். நம் யோக்யதைக்கேற்ப, அந்த சுகத்தை சிறிதளவு நமக்குக் கொடுக்கிறான் என்று நமக்குள்ளும், படுக்கையிலும், மனைவியிலும் லட்சுமி நாராயணனையே நினைக்க வேண்டும் என்பது கருத்து.

 

அல்லது தன் படுக்கையில் சேஷ ரூபத்திலும், நம்மில் புருஷ ரூபத்திலும், தன் மனைவியில் ஸ்த்ரீ ரூபத்திலும், அதே உருவம், அதே பெயரில் ஒவ்வொரு இடத்திலும் ஸ்ரீபரமாத்மன், லட்சுமிசமேதனாக இருக்கிறான் என்று நினைக்க வேண்டும். இதைப்போல, எழும்போதும், லட்சுமி நாராயணர்கள் நம்மில் இருந்து, நம்முடன் எழுந்திருக்கிறார் என்று அறியவேண்டும். எழுந்தபிறகு அருகில் எந்த பொருட்களைப் பார்க்கிறோமோ, அந்தப் பொருட்களில் அந்த ரூபம், அந்த பெயரில் பகவந்தன் இருக்கிறான் என்று அறியவேண்டும்.

 

அமர்ந்து பேசும்போது, நம் வாயிலிருந்து வெளிவரும் அனைத்து எழுத்துக்களும் பரமாத்மனே. பேசும் பேச்சுக்கள் அனைத்தும் பகவந்தனின் ஸ்தோத்திரங்கள் என்று நினைக்க வேண்டும். வீட்டில் எந்த வேலையை செய்து வந்தாலும், இவை அனைத்தும் பகவத் சேவை என்று நினைத்து, அங்கு காணும் அனைத்து பதார்த்தங்களிலும் அந்த உருவத்தில், அந்த பெயரில் பரமாத்மன் இருக்கிறான் என்று அறியவேண்டும்.

 

குளிக்கும்போது, இந்த என் தேகம், பகவந்தனின் பிரதிமை என்றும், அந்த பிரதிமைக்கு இந்த குளியலானது, அபிஷேகம் என்று நினைக்க வேண்டும். அல்லது பரமாத்மனுக்கு என் தேகம் ரதம். இதில் பரமாத்மனை சிந்திப்பதற்கு, அதனை (ரதத்தை) சுத்தப்படுத்துவதே இந்தக் குளியல் என்று சிந்திக்க வேண்டும். தேகத்தில் வஸ்திர, ஆபரணங்களை தரிக்கும்போதும், பகவந்தனின் பிரதிமையான இந்த தேகத்திற்கு அவை அலங்காரங்கள் என்றும், அல்லது தேக- ரதத்தை அலங்கரிக்கிறேன் என்றும் நினைக்க வேண்டும்.

 

உண்ணும்போது, அன்னரூபியான பரமாத்மனை எனக்குள் இருக்கும் பரமாத்மனிடம் சேர்க்கிறேன் என்ற சிந்தனை வேண்டும் என்னும் அர்த்தத்தையே சர்வடாவிலி துரிததூரன தத்தன்னாமரூபவ திளியேஎன்று சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும். இதைத்தவிர, படுக்கும்போது, அமரும்போது, எழும்போது, வேலை செய்யும்போது, உண்ணும்போது என அனைத்து காலங்களிலும் ஹரிநாமஸ்மரணையையே செய்து கொண்டிருக்கவேண்டும் என்பதே இங்கு சொல்ல வந்துள்ள கருத்து. அங்கங்கு அந்தந்த நாம, ரூபத்தை நினைப்பது உபாசனைக் கிரமம். அனைத்து காலங்களிலும், நாராயணா, கிருஷ்ணா என்று சொல்வது, பக்தியை வெளிக்காட்டும் உபாசனை. அதையே மனதில் சொல்லிக் கொண்டிருப்பதும் உபாசனை கிரமமே. இந்த இரு வகை கிரமங்களும் நாம் செய்யவேண்டும் என்கிறார்.

 

ஆவ குலத3வனாத3டே3 நி

ந்னாவ தே3ஷதொ3ளித்த3டே3 நி

ந்னாவ கர்மவ மாட3லேனின்னாவ காலத3லி |

ஸ்ரீவரன ர்வத்ரத3லி

ம்பா4விஸுத பூஜிஸுத மோதி3

கோவித3ரிகு3ண்டேனு ப4ய து3க்கா2தி தோ3ஷக3ளு ||4

 

ஆவ குலதவனாதடே = எந்த குலத்தவனாக இருந்தால் என்ன?

ஆவ தேஷதொளித்தடேனு = எந்த தேசத்தில் இருந்தால் என்ன?

ஆவ காலதலி = அந்த காலமாக இருந்தால் என்ன?

ஆவ கர்மவ மாடலேனு = எந்த செயல்களை செய்தால் என்ன?

ஸ்ரீவரன = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மனை

சர்வத்ரதலி = அனைத்து இடங்களிலும்

சம்பாவிஸுத = நினைத்து

பூஜிஸுத = பூஜித்து

மோதிப = மகிழும்

கோவிதரிகெ = ஞானிகளுக்கு

பவ துக்காதி தோஷகளு = பய, துக்க ஆகிய தோஷங்கள்

உண்டேனு = இருக்கிறதா? (இல்லை என்பது கருத்து).

 

பகவந்தனை துதிக்க வேண்டுமெனில் இந்த குலத்தவனே ஆகவேண்டும் என்பதில்லை. இந்த தேசத்தில் துதிக்க வேண்டும், இந்த காலத்திலேயே துதிக்க வேண்டும், இத்தகைய செயல்களையே செய்ய வேண்டும் என்றும் இல்லை. எந்த தேசத்திலாகட்டும், எந்த காலத்திலாவது ஆகட்டும், எந்த குலத்தவனாக இருக்கட்டும், பரமாத்மனிடம் பக்தி மட்டும் இருந்தால் போதும். பரமாத்மன் இவனது பய, துக்கங்களை பரிகரிக்கிறான்.

 

பாகவத 7ம் ஸ்கந்தம் 7ம் அத்தியாயத்தில்:

 

தேவோsஸுரே மனுஷ்யோவா எக்‌ஷோ கந்தர்வ ஏவச |

பஜன்முகுந்த சரனம் ஸ்வஸ்திமான் ஸ்யாத்யதாவயம் ||52

நாலம் த்விஜத்வம் தேவத்வம் ரிஷித்வம் வாsஸுராத்மஜா: |

ப்ரீணனாய முகுந்தஸ்ய நவ்ருத்தம் நபஹுஞ்ஞாதா ||53

நதானம் நதபோனேஜ்யா நஷௌசம் நவ்ரதானிச |

ப்ரீயதேsமலயாபக்த்யா ஹரிரன்ய த்விடம்பனம் ||54

 

பிரகலாதன் தைத்ய பாலகர்களுக்கு உபதேசம் செய்யும் சந்தர்ப்பம். ஹே தைத்ய பாலகர்களே. தேவதையோ, தைத்யரோ, மனுஷ்யரோ, யக்‌ஷனோ, கந்தர்வனோ, அவர் யாராக இருக்கட்டும், மோட்சத்தைக் கொடுப்பவனான ஸ்ரீபரமாத்மனை துதித்தால், அவர் நம்மைப்போல சுகத்தைப் பெறுவார்கள். ||52

 

பிராமணராக பிறந்ததால் மட்டுமே, தேவதையாக பிறந்ததால் மட்டுமே, ரிஷியாக இருந்தால் மட்டுமே, பரமாத்மனை மகிழ்விக்க முடியும் என்பதில்லை. ஹே தைத்ய பாலகர்களே. சதாசாரங்களை பின்பற்றுவதால் மட்டுமல்ல. அதிகமாக தெரிந்து வைத்திருப்பதும் காரணமல்ல. ||53

 

தானமும் காரணமல்ல. விரதங்களும் காரணமல்ல. நிர்மலமான - அதாவது, த்வேஷாதி சம்பந்தங்கள் அல்லாத பக்தி ஒன்றிற்கே ஸ்ரீஹரி மெச்சுகிறான். மற்றது அனைத்தும் வெறும் டாம்பீகமே. ||54

 

பிரகலாதன் இவ்வாறு கூறுவதையே, தாசராயரும் இந்த பத்யத்தில் விளக்கியிருக்கிறார்.

 

வாஸுதேவன கு3முத்3ரதோ3

ளீஸ ப3ல்லவ ப4முத்3ரா

யாஸவில்லதெ3 தா3டுவனு ஷீக்3ரத3லி ஜக3தொளகெ3 |

பே3ரதெ3 து3ர்விஷயக3ள அபி

லாஷெயலி ப3ளலுவவ நானா

க்லேஷக3ள நனுப4விப ப4க்தி ஸுமார்க்க3 காணத3லெ ||5

 

வாசுதேவன = ஸ்ரீஹரியின்

குணசமுத்ரதொளு = குணங்கள் என்னும் கடலில்

ஈஸ பல்லவ = யாரால் நீந்த (சிந்திக்க / தியானிக்க) முடிகிறதோ

பவசமுத்ர = சம்சாரம் என்னும் கடலை

ஜகதொளகெ = இந்த உலகில்

ஷீக்ரதலி = விரைவாக

ஆயாஸவில்லதெ = சோர்வு இல்லாமல்

தாடுவனு = தாண்டுகிறான்

துர்விஷயகளன = துஷ்டமான விஷய சுகங்களின் ஆசையில்

பேஸரதெ = சலிப்பு இல்லாமல்

பளலுவவ = அல்லாடிக் கொண்டிருக்கிறான்

பக்தி சுமார்க்க காணதலெ = பக்தி என்னும் உத்தமமான வழியைக் காணாமல்

க்லேஷகள = துன்பங்களை

அனுபவிப = அனுபவிக்கிறான்.

 

இந்த உலகில், யாரொருவன், வாசுதேவனின் குணக்கடலில் நீந்துவதற்கு அறிந்தவனோ, அதாவது, எப்போதும் பரமாத்மனின் குணங்களையே கொண்டாடியவாறு, நினைத்தவாறு, நாமங்களை ஸ்மரணை செய்தவாறு காலத்தை கழிக்கிறானோ, அத்தகையவர், சம்சாரம் என்னும் கடலை எவ்வித சோர்வுமின்றி தாண்டுவதற்கான தகுதியுள்ளவன். அப்படி இல்லாமல் எப்போதும், மனைவி, மக்கள், வீடு, நிலம் என்று இவற்றில் மூழ்கியிருக்கிறானோ, அவன் பக்தி மார்க்கத்தையே பார்க்காமல் சம்சாரத்தில் அனேக விதமான கஷ்டங்களை அனுபவிக்கிறான். 

No comments:

Post a Comment