ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, February 29, 2020

#23 - கருணா சந்தி

#23 - கருணா சந்தி

சேதனாசேதன விலக்‌ஷண
நூத1ன பதார்த்த23ளொளகெ33லு
நூத1னதி1 சுந்த3ரகெ1 சுந்தர ரசக்கெ1 ரசரூப |
ஜாத1ரூபோத3ர ப4வாத்யரோ
ளாததப்ரதி1ம ப்ரபா4வ த4
ராத1தொ3 ளெம்மொடனெ ஆடுத1லிப்ப1 நம்மப்ப1 ||23

சேதனாசேதன விலக்‌ஷண = ஜீவர்கள், ஜட பதார்த்தங்கள் இவற்றிலிருந்து வேறுபட்டும், 
நூதன பதார்த்ததளொளகெ = புதிதாகத் தோன்றும் பொருட்களில்
பலு நூதன = புத்தம் புதிதானவன்
சுந்தரகெ = அழகான பதார்த்தங்களுக்கு
சுந்தர = அழகானவன்
ரஸகெ = பொருட்களுக்கு
ரஸரூப = அந்த பொருட்களின் ரூபம் கொண்டவன்
ஜாத ரூபோதர = பிரம்மன், தங்கத்தை வயிறாகக் கொண்டவன்
பவாத்யரொளு = ருத்ரதேவர் ஆகியோரில்
அதத = நிலைத்திருப்பவன்
அப்ரதிமப்ரபாவ = அபாரமான மகிமையுள்ளவன்
தராதளதொளு = பூமண்டலத்தில்
நம்மப்ப = நம்மைப் படைத்த ஸ்ரீபரமாத்மன்
எம்மொடனெ = நம்முடன்
ஆடுதலிப்ப = ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பான்

பொருள்:

நம்மைப் படைத்தவனான ஸ்ரீபரமாத்மன், ஜீவ ஜட பதார்த்தங்களிலிருந்து வேறுபட்டவன். புதிய பதார்த்தங்களில் புதிதாக இருப்பவன். அழகான பதார்த்தங்களில் அழகாக இருப்பவன். திரவ பதார்த்தங்களில் திரவமாக இருப்பவன். பிரம்ம ருத்ரர்களில் நிலைத்திருப்பவன். அபாரமான மகிமையுள்ளவன். ஆனாலும், அவன் எப்போதும் நம்முடன் ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பவன். 

சிறப்புப் பொருள்:
சேதன, அசேதன பதார்த்தங்களிலிருந்து பரமாத்மன் வேறுபட்டவன் என்றபிறகு, அவன் எந்த குழுவில் சேர்ந்திருப்பவன் என்னும் சந்தேகம் வரலாம். பரமாத்மனுக்கு சேதனத்வம், பாவத்வம், நித்யத்வம் ஆகியவை தன்னுடைய ஸ்வாதந்த்ர்யத்தாலேயே வருகிறது. அந்த ஸ்வாதந்த்ர்யத்தினாலேயே, ஜீவ ஜட பதார்த்தங்களிலிருந்து வேறுபட்டவனாக இருக்கிறான். பாகவத 8ம் ஸ்கந்தத்தில் :

ஸவைனதேவாஸுரமர்த்ய திர்யக்னஸ்த்ரி நஷண்டோன புமான்யஜந்து: |
நாயம் குண: கர்மன ஸன்னவானன்னிஷேத சேஷோஜயதாதசேஷ: ||

அந்த பரமாத்மன் தேவதையும் அல்ல, அசுரனும் அல்ல, மனுஷ்யனும் அல்ல, ஜந்துவும் அல்ல, ஸ்த்ரியும் அல்ல, புருஷனும் அல்ல, நபும்சகனும் அல்ல, எந்த பிராணியும் அல்ல. அவன் பிராக்ருத குணரூபங்களைக் கொண்டவன் அல்ல. கர்மரூபனும் அல்ல. ஸத்-வஸ்துவும் அல்ல, அ-ஸத்-வஸ்துவும் அல்ல. அப்படியெனில் அவனது ஸ்வரூபத்தை என்னவென்று சொல்வது? என்று கேட்டால் மேலே சொன்னவற்றைத் தவிர வேறு என்ன பொருள் உள்ளதோ, அதுவே பகவத் ஸ்வரூபம். அதாவது, அப்ராக்ருத ஸ்வரூபமானவன் என்று பொருள். பரமாத்மன் எல்லா பொருட்களிலும் இருப்பவனாகையால் ‘அஸேஷன்’ என்று பரமாத்மனுக்கு பெயர் உண்டு என்கிறார் தாசராயர். இதனாலேயே, 'சேதனாசேதன விலக்‌ஷணனு' என்கிறார் தாசராயர். 

நூதன பதார்த்தகளொளகெ பலு நூதனதி
சுந்தரகெ சுந்தர ரஸகெ ரஸரூப

ஸ்ரீபரமாத்மன் அணுரேணு த்ருணகாஷ்டாதிகளில் அந்தந்த ரூபமாக, அந்தந்த உருவமாக, அதற்கு சம்பந்தப்படாமல் இருக்கிறான். ஆனால், அனைத்து பதார்த்தங்களின் முக்கிய குணங்கள் என்னவாக இருக்கிறதோ, அதுவே பகவத் ஸ்வரூபம் என்று நினைக்க வேண்டும். கீதை 7ம் அத்தியாயத்தில் :

ரஸோஹ மப்ஸு கௌந்தேய ப்ரபாஸ்மி ஷஷி ஸூர்யயோ: |
புண்யோகந்த: ப்ருதிவ்யாஞ்ச தேஜஸ்சாஸ்மி விபாவஸௌ ||

ஹே அர்ஜுனா! நீரில் இருக்கும் சுவையை நான் என்று அறி. சூர்ய சந்திரரில் இருக்கும் ஒளியினை நான் என்று அறி. பூமியிலிருக்கும் மணத்தை நான் என்று அறி. நெருப்பில் இருக்கும் தேஜஸ் நானே. பலசாலிகளில் இருக்கும் பலமும் நானே என்கிறான் ஸ்ரீகிருஷ்ணன். இனிப்பு பொருட்களில் இருக்கும் இனிப்பு, அழகான பெண்களில் இருக்கும் அழகு அனைத்தும் பரமாத்மனே. அந்தந்த பதார்த்தங்களில் இருந்து, அவற்றின் ரூபாதிகளை அவற்றிற்குக் கொடுப்பதால், அந்த ரூப குணாதிகள் அனைத்தும் பரமாத்மனின் விபூதி என்று அறியவேண்டும் என்பதே இதன் பொருள்.

ஜாதரூபோதர பவாத்யதொள் ஆததப்ரதிம ப்ரபாவ - பிரம்ம ருத்ராதி அனைத்து தேவதைகளிலும் அந்தந்த ரூபமான வியாபித்திருக்கிறான். பாகவத 3ம் ஸ்கந்த தாத்பர்யத்தில் :

ஸ்வாயம்புவோ மனஸ்சைவ ப்ருதுஸ்சைவ அர்ஜுனாவபி |
பிரம்மசேஷாவிபா ருத்ர இந்த்ர ருஷ்யாதயஸ்ததா ||
விஷ்ண்வாவேஷயாதாஸ் ஸர்வேனது விஷ்ணு ஸ்வரூபகா இதி தத்வ நிர்ணயே ||

ஸ்வாயம்புவமனு, ப்ருது சக்ரவர்த்தி, கார்த்தவீர்யார்ஜுன, அர்ஜுன, பிரம்ம, சேஷ, கருட, ருத்ர, இந்திர, ரிஷி ஆகியோர் அனைவரும் விஷ்ணுவின் விசேஷமான அம்சத்தைப் பெற்றிருக்கின்றனர். அவர்கள் விஷ்ணு ஸ்வரூபர்கள் அல்லர். இப்படி தத்வ நிர்ணய வாக்கியம் இருக்கிறது. என்று ஸ்ரீமதாசார்யர் சொல்லியிருக்கிறார். இதனால் தாசராயர் சொல்லிய ‘பவாத்யரொளு’ என்ற 'ஆதி' சொல்லினால் மன்வாதிகளை அறிந்துகொள்ள வேண்டும். 


நம்மொடனெ ஆடுதலிப்ப நம்மப்ப - ஸ்ரீபரமாத்மன் நம்மை ஸ்ருஷ்டித்து, நம் குழந்தைகளில் இருந்து, பாலலீலைகளைக் காட்டி, நமக்குள் இருந்து நம்மை மகிழ்ச்சிப்படுத்துகிறான். இதனால், பரமாத்மனுக்கு பிரயோஜனம் எதுவும் இல்லை. இப்படி விளையாடுவதே அவனின் ஸ்வபாவமாக இருக்கிறது. ஆகையாலேயே, தாசராயர் பரமாத்மனை ‘நம்மப்ப’ என்கிறார்.

***


No comments:

Post a Comment