ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, February 27, 2020

#21 - கருணா சந்தி

#21 - கருணா சந்தி

காமதே4னு சுகல்பதரு சி
ந்தாமணிக3 ளமரேந்த்3ர லோகதி3
காமிதார்த்தக3 ளீவுவல்லபெ3 ஸேவெமாள்பரிகெ3 |
ஸ்ரீமுகுந்த3ன பரமமங்க3
நாம நரகஸ்த3ரனு லஹிது
பாமரர பண்டி3தரெனிஸி புருஷார்த்த2 கொடு3திஹுது3 ||21

காமதேனு = காமிதார்த்தங்களைக் கொடுக்கவல்ல, பாற்கடலில் தோன்றிய பசு
சுகல்பதரு = காமிதார்த்தங்களைக் கொடுக்கவல்ல, பாற்கடலில் தோன்றிய, தேவலோகத்து பாரிஜாத மரம்
சிந்தாமணி = காமிதார்த்தங்களைக் கொடுக்கவல்ல ஒரு மாணிக்கம்
இவற்றையெல்லாம், 
அமரேந்த்ரலோகதி = தேவேந்திரனின் உலகத்தில் (ஸ்வர்க்கத்தில்)
ஸேவெமாள்பரிகெ = சேவைகளை செய்பவர்களுக்கு
காமிதார்த்தகள = இஷ்டார்த்தங்களான விஷயங்களை
கொடுவவல்லதெ = கொடுக்குமே தவிர (வேறு எதை கொடுக்கும்?)
ஸ்ரீமுகுந்தன = மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய ஸ்ரீபரமாத்மனின்
பரமமங்கள = பரம மங்களகரமான
நாம = நாமமானது
நரகஸ்தரன = நரகவாசிகளை
ஸலஹிது = அருளியது
பாமரர = அஞ்ஞானிகளை
பண்டிதரெனிஸி = பண்டிதர் என்று புகழ்பெறச்செய்து
புருஷார்த்த = சதுர்வித புருஷார்த்தங்களை
கொடுதிஹுது = கொடுக்கிறது. 

சிறப்புப் பொருள்:

உலகத்தில் இஷ்டார்த்தங்களை பூர்த்தி செய்கின்றன என்று புகழ்பெற்றவை மூன்று விஷயங்கள். அவை காமதேனு என்னும் பசு, கல்பவ்ருக்‌ஷம் மற்றும் சிந்தாமணி என்னும் பாரிஜாத மரம். இவை மூன்று ஸ்வர்க்கத்தில் இருப்பவை. சேவை செய்யும் ஸ்வர்க்கவாசிகளுக்கு மட்டும் காமிதார்த்தங்களைக் கொடுக்கின்றன. அது ஸ்வர்க்கத்தில் இருக்கும்வரைக்கும் அனுபவிக்கத் தகுந்த தற்காலிக சுகங்களை மட்டுமே, அதாவது, அழியக்கூடிய செல்வங்கள், ஸ்த்ரீ முதலான போகங்கள் ஆகியவற்றை மட்டுமே தரக்கூடியவை. பரமாத்மனின் மங்களகரமான நாமமானது, 14 உலகங்களில் வசிக்கும் அனைவருக்கும் காமிதார்த்தங்களை - அதாவது தர்ம, அர்த்த, காம, மோட்ச என்னும் சதுர்வித புருஷார்த்தங்களைக் கொடுக்கிறது. 

ஒருமுறை நாரதர், யமலோகத்திற்குச் சென்று, அங்கு நரகத்தின் துக்கங்களை அனுபவித்திருக்கும் பாபிகளைப் பார்த்து மிகவும் கருணையுடன் ‘நாராயணானந்தஹரே முராரே தாமோதர மாதவேதி’ என்று ஒரு பெரிய சிலை மேல் நின்று, மிகவும் உச்ச ஸ்வரத்தில், அனைவரும் கேட்குமாறு கூவினார். இந்த சப்தமானது அனைவரின் காதுகளில் விழுந்த உடனேயே, அந்த பாபிகள் அனைவரும் பாவங்களிலிருந்து முக்தராகி, விமானத்தில் ஏறி ஸ்வர்க்கத்திற்குச் சென்றனர். நரகலோகமே காலியானது. 


காமதேனு முதலாதவைகளால் ஸ்வர்க்க லோகத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே பயனே தவிர, வேறு லோகத்தில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பயன் உண்டா? இல்லை. பரமாத்மனின் நாமத்திற்கு எந்த உலகமானால் என்ன? எங்கு இருந்தாலும், பக்தியுடன் அவன் நாமத்தை சொன்னால், இஹபரங்களில் சுகத்தைத் தருகிறான். அஞ்ஞானிகளை மிகப்பெரிய ஞானியாக மாற்றி, பண்டிதராகவும் மாற்றுகிறது. பிரகலாதன் எந்த குருகளின் சேவையை செய்து எந்த கல்வியைக் கற்றான்? த்ருவன் யாரிடம் கல்வியைக் கற்றான்? இவர்கள் அனைவரும் ஞானிகளாகி, பண்டிதரும் ஆனது எதனின் உதவியால்? வெறும் பகவன் நாமத்தினால் மட்டுமே அல்லவா? ஆகையால், அனைவரும் பகவத் நாமமானது புருஷார்த்தங்களைக் கொடுக்கிறது என்பதில்  சந்தேகத்திற்கு இடமேயில்லை. 

***

No comments:

Post a Comment