#5 - கருணா சந்தி
மலகி3 பரமாத3ரதி3 பாட3லு
குளிது1 கேளுவ குளிது1 பாட3லு
நிலுவ நிந்தரெ நலிவ நலித3ரெ ஒலிவெ நிமகெ3ம்ப3 |
சுலப4னோ ஹரி தன்னவரனர
க4ளிகெ3 பிட்டக3லனோ ரமாத4வன
ஒலிசலரியதெ3 பாமரரு ப3ளலுவரு ப4வதொ3ளகெ3 ||5
மலகி = படுத்தவாறு
பரமாதரதி = பக்தியுடனான மரியாதையுடன்
பாடலு = பகவன் மகிமைகளைக் குறித்து பாடல்களைப் பாட
குளிது கேளுவ = ஸ்ரீபரமாத்மன் அமர்ந்துகொண்டு அதைக் கேட்பான்
குளிது பாடலு = அமர்ந்து பாடினால்
நிலுவ = ஸ்ரீஹரி நின்றவாறு கேட்பான்
நிந்தரெ = நாம் நின்றவாறு பாடினால்
நலிவ = நடனமாடியவாறு கேட்பான்
நலிதரெ = நாம் நடனமாடியவாறு பாடினால்
ஒலிவெ நிமகெம்ப = நான் உங்களுக்கு தரிசனம் அளிப்பேன் என்று சொல்லி, சிலருக்கு அபரோக்ஷத்தையும், சிலருக்கு பிரத்யக்ஷமாகவும் என, அவரவர்களின் தகுதிக்கேற்ப தரிசனம் அளிக்கிறான்.
(ஆகையால்) சுலபனோ ஹரி = ஹே பக்தர்களே, ஸ்ரீஹரி மிகவும் சுலபமானவன் என்று, இரு கைகளையும் மேலே தூக்கி தீர்மானமாக சொல்கிறார்.
தன்னவரன = தன் பக்தர்களை
அரகளிகெ = அரை நாழிகை காலமானாலும்
பிட்டகலனு = விட்டு நீங்குவதில்லை
பாமரரு = சாமான்ய மனிதர்கள்
ரமாதவன = லட்சுமிபதியை
ஒலிஸலரியதெ = அவனது தரிசனத்தைப் பெறும் விதத்தை அறியாமல்
பவதொளகெ = சம்சாரத்தில்
பளலுவரு = கஷ்டப்படுகின்றனர்.
பொருள்:
நாம் படுத்தவாறு, பரமாத்மனை பக்தியுடன் புகழ்ந்து பாடினால், அவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பினால், நம்மருகே அமர்ந்து அதைக் கேட்பான். அதுபோலவே, நாம் அமர்ந்து பாடினால், அவன் நின்று கேட்பான். நாம் நின்று பாடினால், பரமாத்மன் நர்த்தனம் ஆடியவாறே கேட்பான். நாம் நர்த்தனம் ஆடியவாறே பாடினால், அவன் பிரத்யட்சம் ஆகிறான். இதுபோல, தன் பக்தர்களின் தகுதிக்கேற்ப அபரோக்ஷத்தில் தரிசனம் அளிக்கிறான். சிலர் அவதார ரூபங்களையே பிரத்யட்சமாகக் காண்கின்றனர். ஆகையால், ஸ்ரீஹரி பரம சுலபன் என்று கோஷத்துடன் சொல்கிறார் தாசராயர். ஆகவே, ‘சுலபனோ ஹரி’ என்று மிகத் தீர்மானமாக சொல்கிறார். இல்லையேல், அவன் சுலபன் என்று சாதாரணமாகவே சொல்லியிருக்கலாம். ஆனால், இவற்றையெல்லாம் (பரமாத்மனின் தரிசனத்தைப் பெறும் வழியினை) அறியாமல், மக்கள் இன்னும் சம்சாரத்தில் உழல்கின்றனர்.
சிறப்புப் பொருள்:
பரமாத்மனை வழிபடுவதற்கு நேரம், காலம், இடம் ஆகியவை பொருட்டல்ல. எந்த இடத்திலும், காலத்திலும், எந்த நிலையிலும் பரமாத்மனை வழிபடலாம் என்பதற்கே ‘மலகி பரமாதரதி’ என்றிருக்கிறார். பாகவத ஏழாம் ஸ்கந்தத்தில், பிரகலாதனின் கதையில், அவன் எந்த நிலையில் இருந்தான் என்பதை ‘ஆஸீன: பர்யடன்னர்ஷ்னஷயான: ப்ரபிர்ப | நானு ஸந்தத விதானிகோஒவிந்த பரிரம்பித:’. ’அவன் அமர்ந்திருந்தபோதும், திரிந்தபோதும், சாப்பிடும்போதும், படுத்திருந்தபோதும், குடிக்கும்போதும்கூட, பரமாத்மனிடம் மிகவும் பக்தியுடன் தியானித்தவாறு இருந்தால், அவன் நிலையே அவனுக்கு மறந்துவிடும்’ என்பதே இதன் அர்த்தம்.
இப்படியாக ஏகாந்த பக்தர்கள் அவனை பஜிப்பதற்கு, நேரம், காலம், இடம், நிலை, ஆகியவை காரணம் ஆவதில்லை என்னும் அபிப்பிராயத்தையே தாசராயர் இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார். இது மட்டுமல்லாமல், இங்கு, படுத்துப் பாடுவதற்கும், அமர்ந்து பாடுவதற்கும், நின்று பாடுவதற்கும், நடனமாடி பாடுவதற்கும், தாரதம்யத்தை சொல்லியிருக்கிறார். இதற்கு ஆதாரமாக ப்ருஹன் நாரதிய புராணத்தில் இப்படி சொல்லியிருக்கின்றனர்:
ய: ஸ்வபிதாது ஷயனேஹரிஞ்சிந்தயதே வர: |
ஸஹரி: கீர்த்தனந்தஸ்ய சந்திர்ஷ்ட ஸ்ருணுதேஸ்தவம் ||
யஸ்திர்ஷ்ட கீர்த்தயேத்தேவம் பக்தாயுக்தோனரோத்தம: |
ஸ்வயமுத்தாயதேவேஷோ பக்தஸ்ய ஸ்ருணுதேஸ்தவம் |
யஸ்ஸமுத்தாய மதிர்யா ஜகதாதாரமீஷ்வரம் |
கீர்த்தயேத் விவிதைர்கீதை மஹாபக்தி ஸமன்வித: ||
ஸஹரி: ஷ்ருணுதே ஸ்தோத்திரம் ந்ருத்யமானோதி ஹர்ஷித: |
ய:புர்மா ந்ருத்யமானர்ஸ்ஸ விலஜ்ஜோகியதேயதி ||
ஸஹரி: பரமப்ரீதோ ப்ரத்யக்ஷோ பவதித்ருவம் ||
இதன் அர்த்தத்தயே ‘மலகி பரமாதரதி’ என்னும் பதத்தில் தெளிவாக, சுருக்கமாக அடக்கியிருக்கிறார் தாசராயர். இதன் முக்கிய கருத்து என்னவென்றால்: நல்ல வலிமையுடன் இருக்கும் செல்வந்தனான ஒருவன், தன் மனதை இறைவனிடம் செலுத்தாமல், எவ்வளவு ஸ்தோத்திரம் செய்தாலும், அவனுக்கு ஸ்ரீஹரியின் அருள் கிடைக்காது. பகவத் தியானத்தை செய்யும்போதும், பாடும்போதும், மெய்மறந்து, தன்னிலை தனக்கே மறந்து போகுமாறு, அமர்ந்தோ படுத்தோ பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தால் அவனுக்கு ஸ்ரீஹரியின் அருள் கிடைக்கிறது. பரமாத்மனிடம் மனதை நிலைநிறுத்துவதே முக்கியம்.
ஒரு வேளை, நோய்களாலோ, வேறு பிரச்னைகளாலோ, அமரவோ, நிற்கவோ சாத்தியம் இல்லாவிடில், இருக்கும் நிலையிலேயே அவனைக் குறித்து பஜித்தால், அவனுக்கு பகவத் அருள் கிடைக்கிறது. இதற்கு உதாரணம் பீஷ்மாசார்யர். அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோது அவனைக் குறித்து ஸ்தோத்திரம் செய்ய, பரமாத்மன் ஸ்ரீகிருஷ்ணன் அங்கு அமர்ந்து அதனைக் கேட்டான். புண்டலீகன் அமர்ந்து துதிப்பதை, ஸ்ரீஹரி நின்று கேட்டான். பிரகலாதன் நின்று துதிக்க நரசிம்ம ரூபத்தினால் நடனமாடியவாறே வந்து அதனைக் கேட்டான். நாரதர் நடனமாடியவாறே பாடியதால், அவருக்கு ஸ்ரீஹரி தரிசனம் அளித்தார் என்னும் உதாரணங்களை சில உபன்யாசகர்கள் இந்த பத்யத்தை விளக்கும்போது சொல்கின்றனர்.
பீஷ்மாசார்யர் முதலானவர்களை உதாரணமாகக் கொடுப்பதன் சாதக பாதக அம்சங்கள் என்னவென்றால்: ’மலகி பரமாதரதி’ என்னும் வாக்கியத்தாலும், இதற்கு ஆதாரமான பிரம்ம நாரதிய புராண வாக்கியத்திலும், தெரியவரும் விஷயம் இதுவே. படுத்துப் பாடினால், படுத்திருப்பவரின் கண்களுக்குத் தெரிந்தவாறு அமர்ந்தோ, நின்றோ கேட்கிறானா? அல்லது கண்மறைவாக (தரிசனம் அளிக்காமல்), மறைந்திருந்து நின்று கேட்கிறானா? என்றால், எதிரிலேயே நிற்கிறான் என்று சொல்வது போலவே ஆயிற்றல்லவா?
’நலிதரெ ஒலிவெ நிமகெம்ப’ என்பதன் பொருள் என்ன? நர்த்தனம் ஆடியவாறு பாடினால், அவனுக்கு தரிசனம் அளிப்பேன் என்று சொல்கிறான் அல்லவா? இதில் நமக்கு சந்தேகம் இருந்தால் ‘ய:புர்மா ந்ருத்யமானர்ஸ்ஸ விலஜ்ஜோகியதேயதி ||
ஸஹரி: பரமப்ரீதோ ப்ரத்யக்ஷோ பவதித்ருவம் ||’ என்னும் வாக்கியத்தில், யாரொருவன் வெட்கப்படாமல், நாட்டியமாடியவாறு பாடுகிறானோ, அவனிடம் மிகவும் ப்ரியத்துடன் நிச்சயமாக காட்சியளிப்பேன் என்று சொல்கிறான். இதிலிருந்து தெரியவேண்டியது என்ன?
படுத்திருப்பருக்கும், அமர்ந்திருப்பவருக்கும், பரமாத்மன் அமர்ந்து, நின்று பிரத்யட்சம் ஆகிறான் என்பதே. ஆனால் ‘நலிதரெ ஒலிவெ’ என்று சொல்வது எதற்காக? மேலும் பீஷ்மாசார்யர், புண்டலீகன், பிரகலாதன்,, நாரதர் முதலான அனைவருக்கும் கிருஷ்ணன், விட்டலன், நரசிம்ம, நாராயணர்கள் பிரத்யட்சமாக காட்சியளித்திருக்கின்றனர். அப்படியிருக்கையில் இந்த தாரதம்யத்திலிருந்து நமக்கு அறியவரும் செய்தி என்ன? பீஷ்மாசார்யர் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும்போது, எழுந்துகொள்ளவும், அமரவும் சாத்தியம் இல்லாதபோது, அவர் படுத்த நிலையிலேயே அவருக்கு காட்சியளித்தான்.
புண்டலீகன் தன் பெற்றோரின் சேவையில் இருந்தபோது, எழுந்துகொள்ளவும் சாத்தியமில்லாமல், அந்த நிலையிலேயே பரமாத்மனை தியானிக்க, விட்டல ரூபத்தில் அவனுக்கு தரிசனம் அளித்தான். பிரகலாதனுக்கு நின்று பாடுவதற்கு சாத்தியம் இருந்ததால், அவனுக்கு நரசிம்ம ரூபத்தில் வந்து காட்சியளித்தார். நாரதர் எப்போதும் நாட்டியமாடியவாறே இருந்ததால், அவர் எந்தெந்த ரூபத்தை பார்க்கவேண்டும் என்று விருப்பப்படுகிறாரோ, அந்த ரூபத்தினாலேயே அவருக்கு தரிசனம் அளித்தான். இப்படி இவர்கள் அனைவருக்கும் பிரத்யட்சம் ஆகியிருப்பதால், இந்த பதமானது இவர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது என்று நமக்கு தோன்றுகிறது. ஆனால் உண்மை அப்படியா?
அபரோக்ஷத்தை விரும்புபவர்களான பகவத் பக்தர்கள், அபரோக்ஷத்தைப் பெறும் முன்னர், பரமபக்தியுடன் - படுத்திருக்கும்போதோ, அமர்ந்தோ, நின்றோ - இடைவிடாமல் பகவத் மகிமைகளை பாடிக்கொண்டிருந்தால், அவர்களின் கண்ணுக்குத் தெரியாமல், ஸ்ரீபரமாத்மன்,, படுத்துப் பாடினால் அமர்ந்தும், அமர்ந்து பாடினால் நின்றும், நின்று பாடினால் நர்த்தனம் ஆடியும், இறுதியில் மிதமிஞ்சிய பக்தியினால் மெய்மறந்து ஆடிப்பாடினால், அப்போது அவர்களுக்கு அபரோக்ஷத்திலும், ப்ரத்யட்சத்திலும், தரிசனம் அளிக்கிறான். இப்படியாக புரந்தரதாசர், விஜயதாசர், ஜகன்னாததாசர், நாமதேவ, ஞானதேவ ஆகியவர்களின் சரிதைகளில், அவரவர்களுக்கு வெவ்வேறு நிலைகளில் பிரத்யட்சம் ஆகியிருக்கிறான் என்று தெரியவருகிறது.
‘மலகி பரமாதரதி’ ஆகிய பதங்களுக்கு சில வியாக்யானகாரர்கள் அவை மயக்க, சமாதி நிலை என்று விளக்கியிருக்கிறார்கள். தாசராயரும் அதே சிந்தனையில் இருந்திருந்தால் ‘சுலபனோ ஹரி’ என்று சொல்லியிருப்பது எதிர்ப்பதம் ஆகும். போலவே
‘கலேர்தோஷ நிதேராஜன்னஸ்திஹ்யேகோ மஹான் குண: |
கீர்த்தனாதேவ க்ருஷ்ணஸ்யமுக்தபந்த: பரம்வ்ரஜேத் ||
கலியுகத்தில் தோஷங்கள் நிறைந்திருந்தாலும் அதில் மிகப்பெரிதான நற்குணம் ஒன்று உண்டு. அது என்னவெனில்: பரமாத்மனை கீர்த்தனை செய்தால், முக்தராக பரமாத்மனிடமே சேரமுடியும். இந்த பாகவத வாக்கியமும் இதற்கு எதிர் என்றே தோன்றுகிறது. மேலும் ஆறாம் ஸ்கந்தத்தில், மனிதர்கள் மனம், வாக்கு, உடலினால் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்யவில்லையெனில், நரகம் நிச்சயம் என்கின்றனர்.
ப்ராயஸ்சித்தானி ஜீர்ணானி நாராயணபராங்முகை: |
நவைபுனந்திராசேந்த்ர சுராகும்பாமிவாபகா: ||
நாராயணனைப் பார்க்காதவர்கள், பிராயச்சிதம் செய்துகொண்டாலும், சாராயம் நிரம்பிய மண் குடத்தை எப்படி பெரிய ஆறுகளும் சுத்தம் செய்ய முடியாதோ, அதுபோலவே, அந்த பிராயச்சித்தமும் அவர்களை பவித்ரம் ஆக்குவதில்லை.
நனிஷ்க்ருதைருதித்யை ப்ரம்மவாதிபிஸ்ததா விஷுத்தத்யத்யவானுவ்ரதாதிபி: |
யதாஹரேர் நாமரூபை ருதாஹ்ருதைஸ்த துத்தமஸ்லோக குணோபலம்பகம் ||
உத்தம ஸ்லோகனான ஸ்ரீபரமாத்மனின் ஆனந்தாதி குணங்களால் கூடியிருக்கும் பெயர்களை மிகுந்த பக்தியுடன் நினைப்பவர்கள், பாதத்தினால் முக்தர் ஆவர். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விரத நியமாதி பிராயச்சித்தங்கள் எவற்றிற்கும் இத்தகைய சக்தி இல்லை -- என்பது பாகவத வாக்கியம். ஆறாம் ஸ்கந்தம், மூன்றாம் அத்தியாயத்தின் முன்னுரையில் விஜயத்வஜ ஆசார்யரின் வாக்கியம் இப்படியாக இருக்கிறது.
’பக்திபூர்வகம் நாம சங்கீர்த்தனம் முக்திஸாதன மித்யெததஸ்மின்னத்யாயே அபிதீயதே’ - பக்திபூர்வகமான பகவன்னாம சங்கீர்த்தனையே முக்தி சாதனம் என்பதை இந்த அத்தியாயத்தில் சொல்கிறார், என்கிறார். இத்தகைய பல புராணங்களின் ஆதாரங்களில் ‘மலகி பாடலு குளிது கேளுவ’ என்னும் உண்மையான வியாக்யானமே தாசராயரின் சிந்தனை என்று அறிகிறோம். ‘ஹரியு சுலபனு’ என்று தாசராயர் சொல்கிறார். இந்த வாக்கியத்தாலும், நம்மால் செய்யமுடியாத சாதனை நிலையிலான தியானங்கள் தேவையில்லை என்று உறுதியளிக்கிறார்.
அனன்ய சேதாஸ்ஸததம் யோமான்ஸ்மரதி நித்யஷ: |
தஸ்யாஹம் சுலப: பார்த்தனித்யயுக்தஸ்ய யோகின: || (கீதை 8-14).
ஹே அர்ஜுனா! யார் அவன் மனதை சிதறடிக்காமல், ஒருமுகப்படுத்தி, தினந்தோறும் என்னை நினைக்கிறானோ, அவனே என்னை அடைவதற்குத் தேவையான முழுமையான வழிகளை அறிந்திருக்கிறான். அவனுக்கு நான் சுலபமாக கிடைக்கிறேன் - என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்கிறான். ‘யோகி’ என்னும் சொல்லுக்கு, ஞானோபாயத்தை அறிந்தவன் என்னும் அர்த்தத்தை சொல்கிறார். ஆகையாலேயே ‘ஒலிஸலரியதெ பாமரரு பளலுவரு பவதொளகெ’ என்று சொல்கிறார். இதனால், கீதையில் சொல்லப்பட்ட ‘நித்யயுக்தஸ்ய யோகின:’ என்றால், ‘முழுமையான வழிமுறைகளை அறிந்தவனுக்கு நான் சுலபன்’ என்று ஸ்ரீகிருஷ்ணனின் வாக்கியத்திற்கும், தாசராயரின் வாக்கியத்திற்கும் சரியாக ஒத்துப்போகிறது என்று அறியவேண்டும்.
‘தன்னவரனரகளிகெ பிட்டகலனு’ என்னும் தாசராயரின் வாக்கியத்திற்கு, பிம்பரூபத்தினால் எப்போதும் கூடவே இருக்கிறான் என்னும் அர்த்தம் கொண்டால், பக்தர்களிலும், அ-பக்தர்களிலும்கூட பிம்பரூபத்தினால் கண்டிப்பாக இருக்கிறான் என்று பொருள் வருவதால் ‘தன்னவரன’ என்னும் சொல் தேவையற்றதாகிறது. பக்தர்களை காப்பதற்காக கிருஷ்ணாதி ரூபங்களினால், அர்ஜுனாதி பக்தர்களை காப்பாற்றுவதைப் போலவே, தன் ஏகாந்த பக்தர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்களின் கண்ணுக்குத் தெரியாமல், எப்போதும் அவர்களின் அருகிலேயே இருந்து, அவர்களை காப்பாற்றுவான் என்னும் அர்த்தம் தெளிவாக புரிகிறது. இதற்கு ஸ்ரீவாதிராஜர், துளசிதாசர், புரந்தரதாசர் ஆகியோரின் சரிதங்களே சாட்சியாக இருக்கின்றன.
***
No comments:
Post a Comment