ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, February 19, 2020

#13 = கருணா சந்தி

#13 - கருணா சந்தி

ஜனனியனு கா1ணதி3ஹ பா3லக
நெனெனெனெது3 ஹலபு3திரெ கத்தலெ
மனொயொளட3கி3த்த3வன நோடு3த நகு3த ஹருஷத3லி |
தனயனம்பி3கி33ப்பி ரம்பிஸி
கனனிகெய களெவந்தெ மதுசூ
4னனு தன்னவரித்தெடெ3கெ33ந்தொ33கி லஹுவனு ||13

ஜனனியனு = தாயை
காணதிஹ = காணாமல்
ஹலபுதிரெ = அழும்போது
கத்தலெ மனெயொளகெ அடகித்து = இருட்டு அறையில் ஒளிந்திருந்து
அவன = அந்தக் குழந்தையை
நோடுத நகுத ஹருஷதலி = மகிழ்ச்சியுடன்
தனயனம் = அந்த குழந்தையை
பிகிதப்பி = கட்டிக்கொண்டி
ரம்பிஸி = சமாதானம் செய்து
கனலிகெய = தன்னை பற்றிய பயத்தை
களெவந்தெ = களைவதை போல
மதுஸூதனனு = மது நாமக தைத்யனைக் கொன்ற பரமாத்மன்
தன்னவரு = தன் பக்தர்கள்
இத்தெடெகெ = இருக்கும் இடத்திற்கு
பந்து சலஹுவனு = வந்து காப்பாற்றுவான். 

பொருள்:
தான் இல்லாவிட்டால் தன் குழந்தை என்ன செய்கிறது என்பதைக் காண, தாயானவள் அக்குழந்தையை வெளியில் விட்டு, தான் மறைவாக உள்ளே ஒரு இருட்டு அறையில் ஒளிந்து பார்த்திருக்க, தாயைக் காணாத அக்குழந்தை அவளை நினைத்தவாறு அழுவதைக் கண்டு, மகிழ்ச்சியுடன் ஓடிவந்து அக்குழந்தையைத் தூக்கி கட்டியணைத்து, அதன் பயத்தைப் போக்கி சமாதானம் செய்வதைப் போல, ஸ்ரீபரமாத்மனும் தன் பக்தர்கள் தன்னைக் காணாமல் தவிப்பதைப் பார்த்து, அதாவது பஜிப்பதைப் பார்த்து மகிழ்ச்சியுடன் அவர் அருகில் வந்து அவர்களை காப்பாற்றுகிறான். 

சிறப்புப் பொருள்:
பொதுவாக வீடுகளில், சிறு குழந்தைகளை அதன் தாயானவள் கீழே படுக்கவைத்துவிட்டு, அவர்களின் கண்களில் தான் படாமல் நிற்பதும், அல்லது இருட்டு மூலையில் மறைந்தவாறு தான் மட்டும் குழந்தையைப் பார்க்குமாறும், அக்குழந்தை தன்னை பார்க்காதவாறும் நின்றுகொண்டு பார்ப்பதும், அதனால் குழந்தை தான் படுத்திருந்த இடத்திலேயே திரும்பி, சுற்றுமுற்றும் பார்த்து, தாயைக் காணாமல் அழத் தொடங்குவதைப் பார்க்கும் தாய்க்கு மகிழ்ச்சிகரமான விஷயமாகும். அப்படி குழந்தை அழத் தொடங்கும்போது, அந்தத் தாய் ஓடிவந்து அதை சமாதானம் செய்து கொஞ்சுவது என இவை அனைத்தும், குழந்தையைப் பெற்றவர்களுக்கு அனுபவத்தில் வந்ததாகும். இதைப் போலவே பரமாத்மனும் தன் பக்தர்களை பரிட்சை செய்து, அதன்பிறகு அவர்களை காப்பாற்றுகிறான். 

இதற்கு வியாக்யானம் செய்த ஒருவர் - இருட்டு அறையில் குழந்தை அழுதுகொண்டிருந்தால், தாயானவள் ஓடி வந்து கொஞ்சி சமாதானம் செய்கிறாள் - என்றார். இந்த விளக்கமானது, உவமை, உவமானங்களுக்கு பொருந்துவதில்லை. ஏனெனில், இருட்டு அறையில் இருப்பவன், வெளிச்சத்தில் இருப்பவர்களை பிரச்னையின்றி காணமுடியும். அதே வெளிச்சத்திலிருந்து இருட்டு அறைக்குள் இருப்பவரை காணமுடியாது. ஆகவே, குழந்தை இருட்டில் படுத்திருந்தால், வெளிச்சத்தில் இருக்கும் தன் தாயை தாராளமாக பார்த்திருக்கும். வெளிச்சத்தில் இருந்த தாய், இருட்டறையில் படுத்திருக்கும் குழந்தையை பார்க்கமுடியாது. அதுமட்டுமல்லாமல், இருட்டு அறையில் குழந்தையை தன்னந்தனியாக எந்தவொரு தாயும் விட்டுவருவதில்லை. அப்படி இருந்தால், குழந்தை பயப்படும் என்பது அந்த தாய்க்கு தெரியும். சிறு குழந்தை, இருட்டு அறையில் தனியாக படுத்திருப்பது என்பது உலகத்தில் நடக்காத ஒன்றாகும். ஆகையால், இருட்டு அறையில் படுத்திருந்த குழந்தை என்று அர்த்தம் செய்துகொள்வதற்கு பதில், இருட்டு அறையில் மறைந்திருந்த தாய் / ‘அவன்’ என்று பரமாத்மனை சொல்வதே சரி என்று படுகிறது. 

இதே உவமான உவமைகள் பக்தர்களின் விஷயத்தில் எப்படி பொருந்துகிறது என்றால்: ஜீவனிடம் இருக்கும் அஞ்ஞானம் என்னும் இருட்டில் பரமாத்மன் மறைந்திருக்கிறான். அதாவது மனிதன் தனது அஞ்ஞானத்தினால் ஜீவனுக்கும் தேகத்திற்கும் இருக்கும் வேறுபாட்டினை அறியாமல், ஜீவனே தேகம் என்று நினைத்து, கர்வம் பொறாமைகளால், வெளிச்சமாகத் தெரியும் தற்காலிக சுகங்களில் மூழ்கி, அஞ்ஞானம் என்னும் தன் இருட்டில் அடங்கியிருக்கும் பரமாத்மனை காண்பதில்லை. பரமாத்மனோ, இவனின் அஞ்ஞானம் என்னும் இருட்டில் மறைந்து நின்று, எப்போது சத்-சங்கத்தால் மனிதனின் சித்தத்தில் ஞானம் என்னும் சூரியன் உதிக்கிறதோ, எப்போது இந்த மனிதன் தன்னை இடைவிடாமல் துதிக்கிறானோ, அப்போது தான் அபரோக்‌ஷத்தில் தரிசனம் அளிக்கிறான். அல்லது பக்தர்கள் தங்களுக்கு கஷ்டம் வந்தபோது ஸ்ரீபரமாத்மனை வணங்கினாலும், ஸ்வ-கர்த்ருத்வ அபிமானத்தில் எவ்வளவு காலம் வரைக்கும் முயற்சி செய்து வருகின்றனரோ, அதுவரைக்கும் பரமாத்மன் அவர்களது அஞ்ஞானம் என்னும் இருட்டில் அவர்கள் கண்ணில் விழாமல் மறைந்திருக்கிறான். பிறகு எப்போது அந்த பக்தர், ஸ்வ-கர்த்ருத்வ என்னும் பாவத்தை விட்டு, நீயே கதி என்று முழுமையான சரணாகதர் ஆகின்றனரோ அப்போது மகிழ்ச்சியுடன் சிரித்தவாறு பக்தரிடம் வந்து, திரௌபதி முதலானவர்களை ஆபத்து காலத்தில் எப்படி காப்பாற்றினாரோ, அப்படியே காப்பாற்றுவார். 

இந்த விஷயத்தில் இன்னொரு இதிகாச சம்பவமும் உள்ளது. அது என்னவெனில்: பைடபா நகரத்தில் கூர்மதாஸ என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். பிறக்கும்போதே அவனுக்கு கை, கால்கள் இருக்கவில்லை. பரம பகவத்பக்தனாக இருந்தான். எங்காவது ஹரிதாசர்கள் பஜனை செய்துவந்தால், எப்படியாவது பாடுபட்டு இவன் அங்கு போய், மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தப் பாடல்களை கேட்டு, அவர்களுடன் பாடி, காலத்தை கழித்து வந்தான். இப்படியிருக்கையில், ஹரிதாசர் ஒருவர் பண்டரிபுரத்து மகிமைகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்க, அதனைக் கேட்ட கூர்மன் தானும் பண்டரிபுரத்திற்குச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டான். இதைக் கேட்ட அங்கிருந்த மக்கள், உனக்கோ கால்களே இல்லையே, நீ எப்படி அங்கு போவது சாத்தியம்? என்று கேட்டனர். அப்படியும், மனம் தளராத கூர்மதாஸ், எப்படியோ தவழ்ந்தவாறு விட்டலனை தியானித்தவாறு பாதி தூரம் வந்துவிட்டான். மிகவும் பசி, தாகம், சோர்வு ஆகியவை ஆனதால், அதற்கு மேல் ஒரு அடியும் நகரமுடியாமல், ‘ஹே பாண்டுரங்கா. உன் இஷ்டம் போலவே செய்’ என்று சொல்லியவாறு தன் ஸ்வாதந்த்ர்யத்தை மறந்து, அங்கேயே அமர்ந்துவிட்டான். 

அப்போது விட்டலன் ஒரு செல்வந்தரைப் போல வேடமிட்டு இவனிடம் வந்து உணவினையும், இருக்க இடத்தையும் கொடுத்து இவ்வாறு கூறினார். நீ பண்டரிபுரம் போகும் வரை உனக்கு உணவு, இடம் கொடுப்பது என் கடமை. நீ இப்படியே போய்க்கொண்டிரு. தினமும் உன்னிடம் வந்து உனக்கு நான் உணவு அளிக்கிறேன்’ என்று சொல்லி, அங்கிருந்து மறைந்தான் விட்டலன். அதைப்போலவே கூர்மதாசனும் தினமும் பயணத்தில் முன்னேறிக் கொண்டிருக்க, பரமாத்மனும் செல்வந்தரின் ரூபத்தில் வந்து அவனுக்கு உதவிகளைச் செய்து வந்தான்.

‘ஐயா, பார்த்தீரா? பரமாத்மனுக்கு தன் பக்தர் மேல் எவ்வளவு கருணை?’ என்று கூர்மதாஸ புகழ்ந்தான். பண்டரிபுரத்திற்குச் செல்ல கூர்மதாஸ்க்கு இன்னும் 6 நாட்கள் தேவைப்பட்டன. அதற்குள், ஆஷாட சுத்த ஏகாதசி (பண்டரிபுரத்தில் உற்சவங்கள் நடக்கும் நாள்) வந்துவிட்டது. பண்டரிபுரத்தில் மக்கள் வெள்ளம். இதை அறிந்த கூர்மதாஸ், ’இவ்வளவு நாட்கள் நான் தவழ்ந்து வந்துவிட்டேன், இனி நான் வாழ்வது கடினம். இங்கேயே என் தேகத்தை விடுகிறேன். என்னை உன் பாதாரவிந்தங்களில் சேர்த்துக்கொள்’ என்று புலம்பினான். இதைக் கேட்ட விட்டலன் கருணையுடன் தன் நான்கு கரங்களுடன், பீதாம்பரதாரியாகி, அவனுக்கு தரிசனம் அளித்தார். தினந்தோறும் செல்வந்தரின் ரூபத்தில் தரிசனம் அளித்தும் இவனுக்கு அது புரியவில்லை. பண்டரிபுரத்தில் எந்த ரூபத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே ரூபத்தில் அன்று கூர்மதாஸின் விருப்பப்படி பரமாத்மன் தரிசனம் அளித்தான். அதே வகையில், அன்றிலிருந்து இன்று வரை அங்கும் பண்டரிபுரத்தைப் போலவே அனைத்து உற்சவங்களும் நடைபெறுகின்றன. இப்படி செய்வதால்தான் பரமாத்மனுக்கு பக்தவத்ஸலன் என்று பெயர். இத்தகைய கதைகள் பற்பல உண்டு. உதாரணத்திற்காக ஒரேயொரு கதையை இங்கு சொல்லியிருக்கிறோம். 


இவை அனைத்தையும் அறிந்ததாலேயே தாசராயர் ‘ஜனனியனு காணதிஹ பாலகனு’ என்ற பதத்தினை பயன்படுத்தியிருக்கிறார்.

***


No comments:

Post a Comment