ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, February 10, 2020

#4 - கருணா சந்தி

#4 - கருணா சந்தி

மனவசனகதிதூ3ர நெனெவர
நனுசரிஸி தி1ருகு3வனு ஜான்ஹவி
ஜனக1 ஜனரொளகி3த்து3 ஜனிசுவ ஜக3து33ர தா1னு |
4னமஹிம கா3ங்கே3யனு1த கா3
யனவ கே1ளுத க33னசர வா
ஹன திவௌக1சரொடனெ திருகு3வனு மனெமனெக3ளலி ||4

ஜான்ஹவிஜனக = கங்கையைப் பெற்ற பரமாத்மன்
மனவசனகதிதூர = மனதிற்கும், வாக்கிற்கும் காட்சியளிக்காத, ஆனாலும்
நெனெவரன = நினைப்பவர்களை
அனுசரிஸி = அவர்களுக்கேற்ப, நடப்பான்.
ஜகதுதர = உலகத்தையே தன் வயிற்றில் வைத்துக் கொண்டிருப்பவன்
ஜனரொளகித்து = அனைத்து பிராணிகளிலும் இருந்து
ஜனிஸுவ = பிராணிகள் கர்ப்பத்திலிருந்து பிறக்கும்போது, தானும் அவர்களுடன் பிறப்பான்
காங்கேயனுத = பீஷ்மாசார்யரால் புகழப்பட்ட
கனமஹிமெ = அபாரமான மகிமை உள்ளவன்
ககனசரவாஹன = கருட வாகனான ஸ்ரீபரமாத்மன்,
காயனவன = தன் பக்தர்கள் பாடும் ஸ்தோத்திரங்களை
கேளுத = கேட்டவாறு
திவௌகஸரொடனெ = தேவதைகளுடன்
மனெமனெகளலி = பக்தர்களின் வீடுகளில்
திருகுவனு = சஞ்சரித்திருப்பான்.

பொருள்:
கங்கையைப் பெற்றவனான ஸ்ரீபரமாத்மன், மனதிற்கும், வாக்கிற்கும் காட்சியளிக்காதவன் ஆனாலும், அபாரமான மகிமையுள்ளவன். சாதாரண பக்தர்கள் தன்னை துதித்தால், அவர்களை காப்பாற்றுவதற்கு அவர்களுடனே அவர்களுக்கேற்ப நடப்பான். உலகத்தையே தன் வயிற்றில் வைத்துக்கொண்டிருப்பவனான அவன், மக்களிடம் இருந்து, கர்ப்பத்திலிருந்து அவர்கள் பிறக்கும்போது, தானும் பிறக்கிறான். பீஷ்மாசார்யரால் வணங்கப்படுபவனான, மகானுபாவனான அவன், தன் சாதாரண பக்தர்கள் செய்யும் ஸ்தோத்திரங்களை கேட்டவாறு, கருடவாகனனாக, தேவதைகளுடன் கூடி, பக்தர்களின் வீடுகளில் சஞ்சரித்திருக்கிறான். ஆகையால், தாசராயர் ‘இவன காருண்யகேனெம்பெ’ என்று போற்றியிருக்கிறார். 

சிறப்புப் பொருள்:
முந்தைய ஸ்லோகத்தில் ‘இவன காருண்யகேனெம்பெ’ என்று பாடிய தாசராயர், இங்கு மற்றும் இந்த ஸ்லோகத்திலிருந்து அதன் உதாரணங்களைக் கொடுத்திருக்கிறார். 

ஜான்ஹவி ஜனக - என்று சொல்வதில் ஸ்ரீபரமாத்மனின் பாத மகிமைகளை, அதன் பவித்ரத்தை குறிப்பிடுகிறார். அது எப்படியெனில்: பாகவத ஐந்தாம் ஸ்கந்தத்தில்:

’தத்ர பகவஸ்ஸாக்‌ஷாத் யக்ஞலிங்கஸ்ய விஷ்ணோர்விக்ரமதோவாமபாதாங்குஷ்ட நகனிர்பின்னோர்த்வாண்ட கடாஹ விவரேணாந்த: ப்ரவிஷ்டயா ஜலதரா’ - ஸ்ரீபரமாத்மன் வாமன அவதாரம் எடுத்து, பலி சக்கரவர்த்தியிடமிருந்து மூன்று அடி நிலத்தை தானம் வாங்கி, அதை அளக்கும்போது த்ரிவிக்ரம ரூபம் எடுத்து, தன் ஒரு அடியால் பூமண்டலத்தை அளந்து, இரண்டாம் அடியால் அந்தரிக்‌ஷ லோகத்தை அளக்கும்போது, அந்த காலடியானது, புவல்லோக முதற்கொண்டு சத்யலோக வரைக்கும் இருக்கும் ஆறு உலகங்களைத் தாண்டி, மேலிருக்கும் பிரம்மாண்டத்தின் கூரையை இடித்தது. அப்போது பரமாத்மனின் இடது கால் கட்டை விரலின் நகம், அந்த கூரையை இடித்தவுடன், அது உடைந்து வெளியிலிருந்த நீர் உள்ளே நுழைந்தது. அந்த தண்ணீர், பரமாத்மனின் காலைத் தொட்டு, கழுவியவாறு வந்ததால், நதிகளில் உத்தமள் என்று பெயர் பெற்றாள். விஷ்ணுவி என்னும் பெயரினால் உலகத்தை பவித்ரமாக்கினாள் என்று சொல்வர். இதனால் ஜான்ஹவியைப் பெற்றவன் என்று பரமாத்மனை சொல்வதற்கு காரணம் வந்தது. 

யச்சௌசனி: ஸ்ருதஸரித்ப்ரவரோதகேன தீர்த்தேன மூர்த்யதிதேன ஷிவ: ஷிவோபூத் |
த்யாதுர்மன: ஷமல ஷைல நிஸ்ருஷ்டவஜ்ரம் த்யாயோசீரம் பகவதஸ்சரணாவிந்தம் ||
(பாகவத மூன்றாம் ஸ்கந்தம்)

இந்த ஸ்லோகத்தில்: ’எந்த பரமாத்மனின் காலைத் தொட்டு புறப்பட்ட தண்ணீரை’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. கங்கையை பாதத்தை கழுவிய நீர் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வெளியில் இருந்த நீர், உள்ளே பாய்ந்தபோது, முதலில் பரமாத்மனின் காலைக் கழுவியபிறகே உள் நுழைந்தது என்று சொன்ன காரணத்தைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு. அது என்னவெனில்: 

பரமாத்மன் பூமியை அளந்தபோது, சத்யலோகத்திற்கு வந்தபோது, பிரம்மதேவர், பரமாத்மனைக் கண்டு மகிழ்ந்து, அந்த பரமாத்மனின் காலிலிருந்து வந்த தண்ணீரையே தன் கமண்டலத்தில் பிடித்து, பரமாத்மனின் கால்களை விதிப்படி பூஜித்து, அந்த கால்களை கழுவினார். 

தாது: கமண்டலுஜலந்ததுருக்ரமஸ்ய பாதாவனே ஜனபவித்ரத யானரேந்த்ர 
ஸ்வர்தூன்ய பூன்யபஸிஸாபததே நிமார்ஷ்டே லோகத்ரயம் பகவதோ விஷதேவகீர்தித: 
(பாகவத எட்டாம் ஸ்கந்தம்)

அதாவது, அந்த கமண்டலத்திலிருந்து வந்த தண்ணீரானது, பவித்ரம் கொண்டு, ஆகாயகங்கை என்று பெயர் பெற்று, மூன்று உலகங்களையும் பவித்ரமாக ஆக்கியது என்கிறார். ஆகையால், மூன்றாம் ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம் இதற்கு எதிரானதாக இல்லை என்று நினைக்கவேண்டும். மூன்றாம் ஸ்கந்தத்து ஸ்லோகார்த்தம் என்னவென்றால்: எந்த பரமாத்மனின் பாதங்களைக் கழுவி, பவித்ரமான கங்கையை, தன் தலையில் ஏந்தியதால் ருத்ரருக்கு ஷிவ என்று பெயர் வந்ததோ, யாருடைய பாதத்தை சிந்திப்பவரின் மனக்கஷ்டங்கள் என்னும் மலையானது தூள்தூளாக போகின்றதோ, அத்தகைய ஸ்ரீபரமாத்மனின் சரண கமலங்களை நாம் சிந்திக்கவேண்டும். இதுவே ‘யச்சௌசனி:’ என்னும் மூன்றாம் ஸ்கந்தத்து ஸ்லோகத்தின் அர்த்தமாகும். 

மஹனீயர்களே! பாருங்கள்! சாதாரணமாக நாம் கால், நகம், முடி ஆகியவை நீரிலோ, பதார்த்தங்களிலோ பட்டுவிட்டால், அந்த பதார்த்தங்களை தவிர்க்கவேண்டும் என்கிறார்கள் சாஸ்திரகாரர்கள். ஆனால், பரமாத்மனின் விஷயத்தில் இது எப்படி மாறுபடுகிறது என்று பாருங்கள். ‘ஏதோஷா: இதரத்ராபிதே குணா: பரமே மதா:’ - எது மக்களிடம் தோஷம் எனப்படுகிறதோ, அதுவே பரமாத்மனிடம் நற்குணம் எனப்படுகிறது. இதுவே வேதவாக்கியமாக இருக்கிறது. இந்த உதாரணத்திலிருந்து அது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பரமாத்மனின் இடது கால் கட்டைவிரல் நகத்திலிருந்து உற்பத்தியாகி,, அந்த பரமாத்மனின் கால்களைக் கழுவி, ருத்ர தேவர் மூலமாக, அனைத்து உலகத்தையும் பவித்ரமாக ஆக்கியது என்றபிறகு, அந்த பரமாத்மனின் பாத மகிமையை எப்படி வர்ணிப்பது? பரமாத்மன் இத்தகைய மகிமையைக் கொண்டவன் என்று காட்டுவதற்காக ‘ஜான்ஹவிஜனக’ என்று தாசராயர் சொல்லியிருக்கிறார். 

மேலும் ‘மனவசனகதிதூர நெனெவரனனுசரிஸி திருகுவனு’. இந்த வாக்கியத்தால் பரமாத்மனின் கருணையை விளக்குகிறார். அது எப்படியெனில்: பாகவத பத்தாம் ஸ்கந்தத்தில் - ‘மனோவசோப்யாமனுமேய வர்த்மனோ தேவக்ரியாயா: ப்ரதியந்த்யதாபிஹி’ - பிரம்மாதி தேவதைகள்கூட பகவத் மகிமைகளை முழுமையாக அறியமுடியாது. பகவந்தனின் ஸ்வரூபம் எத்தகையது என்றால், மனம், வாக்கு ஆகியவற்றால் அவன் புலப்படமாட்டான். அதாவது, உலகம் இருக்கிறது என்றால், அதைப் படைத்தவன் ஒருவன் இருக்கவேண்டும். அவன் யார்? வேதங்களில், பரமாத்மனே ஸ்ருஷ்டிகர்த்தன் என்று சொல்லியிருப்பதால், அவனே படைத்தவன் என்று அறியவேண்டும். பிரம்மாதிகளும் இதுவரைக்கும் அல்லது இதைவிட கொஞ்சம் அதிகமாக, தத்தம் தகுதிக்கேற்ப, பகவந்தனின் விருப்பப்படியே (ப்ரேரணையுடன்), பகவந்தனின் மகிமைகளை காண்பரே தவிர, அதை முழுமையாக அறிவதற்கு சாத்தியமில்லை. 

அப்படியெனில், தாசராயர் ‘சுலபனோ ஹரி’ என்றிருக்கிறாரே? அது எப்படி? ‘யமேவைஷ வ்ருணுதேதேனலப்ய:’ யாருக்கு அருளவேண்டும் என்று பரமாத்மனுக்கு இச்சை வருகிறதோ, அவருக்கு பரமாத்மன் சுலபமானவன். இதன் பொருள் என்னவெனில்: பிரம்மாதிகளுக்கு காட்சியளிக்காத ஸ்வாமியை, சாதாரண பக்தர் பார்ப்பது என்றால் என்ன? ரமாதேவியிடம் இருக்கும் பகவத் அருள் பிரம்மனுக்கு இருப்பதில்லை. பிரம்மனுக்கு இருக்கும் அருள் ருத்ராதி தேவதைகளுக்கு இல்லை. பிரம்மாதிகள் பகவத் ஸ்வரூபத்தை முழுமையாக அறிந்திருப்பதில்லை என்றபிறகு, அவரைவிட அதிகமாக பகவத் ஸ்வரூபத்தை அறிந்த பக்தர்கள் இருக்கிறார்கள் என்று யோசிப்பதில் அர்த்தமேயில்லை. இதற்கு சரியான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். 

அம்பரீஷ ராஜன் மிகச்சிறந்த பகவத் பக்தனாக இருந்தார். அவனின் பக்திக்கு மெச்சி, ஸ்ரீபரமாத்மன் அவனின் பாதுகாப்பிற்காக, தன் சக்ராயுதத்தையே கொடுத்திருந்தான். ஒவ்வொரு துவாதசி தினத்தன்றும் அவர், லட்ச பிராமணர்களுக்கு போஜனத்தை செய்வித்து, பாரணை காலத்திற்குள் தானும் பாரணம் செய்யவேண்டும் என்னும் ஒரு விசேஷ விரதத்தை மேற்கொண்டிருந்தான். இப்படியிருக்கையில், ஒரு துவாதசியன்று, பிராமணர்களின் போஜனத்தை செய்வித்த ராஜன், அவர்களின் அனுமதியைப் பெற்று, தானும் பாரணைக்கு அமரும்போது, சரியாக அந்த நேரத்தில், துர்வாச ரிஷிகள், அந்த விரதத்தை பங்கம் செய்யும் முயற்சியாக தன் 10,000 சிஷ்யர்களுடன் அங்கு வந்தார். ராஜன் தான் பாரணை செய்வதைவிட்டு, அவரை உணவுக்கு அழைத்தான். 

துர்வாசரும் அந்த அழைப்பை ஏற்று, ஸ்னானம் செய்து வருவதாக யமுனா நதிக்கரைக்குச் சென்று, ஸ்னானம் செய்து, தியானத்தில் அமர்ந்துவிட்டார். பாரணை முடியும் காலம் ஆகிவிட்டது, ஆனால் துர்வாசர் வரவேயில்லை என்று ராஜன் கவலைப்பட்டவாறு, அங்கிருந்த பிராமணர்களின் அனுமதியைப் பெற்று, தீர்த்தத்தைக் குடித்து, பாரணை செய்ததாக அறிந்து, விரதத்தை முடித்துவிட்டார். பின்னர் அங்கு வந்த துர்வாசர், நிலையை அறிந்து, மிகுந்த கோபம் கொண்டு, ஒரு சக்தியை உருவாக்கி, ராஜனைக் கொல்வதற்கு அதற்கு ஆணையிட்டார். ராஜன், பகவத் தியானத்தை செய்தவாறு நின்றுவிட்டான். 

உடனடியாக பகவத் சக்கரமானது, அந்த சக்தியை சுட்டுப் பொசுக்கிவிட்டு, துர்வாசரைக் கொல்லும் நோக்கில் அவரிடம் வந்தது. துர்வாசரும் பயந்தவாறு, பிரம்மனிடம், ருத்ரரிடம் சென்று முறையிட, அவர்களோ, பகவத் சக்கரத்திலிருந்து உங்களைக் காப்பாற்ற எங்களுக்கு சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டனர். பிறகு, வைகுண்டவாசியான பரமாத்மனிடமே சரணாகதி அடைந்தார் துர்வாசர். பரமாத்மனோ ‘நான் பக்தர்களின் வசமானவன். நானும் இதை தடுக்கமுடியாது. நீங்கள் அம்பரீஷ ராஜனிடமே சென்று கேளுங்கள்’ என்றார். அதன்படி துர்வாசரும், அம்பரீஷனை சரணடைய, அம்பரீஷனும் சக்கரத்தை வேண்டிக்கொண்டு, துர்வாசரைக் காப்பாற்றினார். ஆனால் இந்த சம்பவத்திற்கு ஒரு ஆண்டு காலம் ஆகிவிட்டது. அதுவரைக்கும், அம்பரீஷ ராஜன், உபவாசத்துடனே காத்திருந்து, அவருக்கு பாரணை செய்வித்து, பின்னர் தான் பாரணம் செய்து விரதத்தை முடித்தார். 

இதனாலேயே ‘யயாவிரிஞ்சாதி மதஸ்சகார’ அதாவது, பக்தியில் அம்பரீஷன், பிரம்மாதிகளைக்கூட மீறியவன் என்று பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அம்பரீஷனின் சக்கரத்திலிருந்து காப்பாற்றுவதற்கு, பிரம்ம ருத்ராதிகளுக்கும்கூட சாத்தியமில்லை என்று இந்த கதையிலிருந்து தெரிகிறது. ஆனால், இது சித்தாந்தத்திற்கு எதிரானது என்று ஸ்ரீமதாசார்யர், இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அது என்னவெனில்:

பிரம்மாதி பக்திகோட்யம்ஷாதம்ஷோனை வாம்பரிஷகே |
தாத்காலிகோ பசேயத்வாக்தேபாம் யஷஸ ஆதிராட் ||
பிரம்மாதயஸ்ச தத்கீர்த்திம் வ்யஞ்சயாயாஸுருத்தமாம் ||

பிரம்மாதி தேவதைகளின் பக்தியில் கோடியில் ஒரு அம்சம்கூட அம்பரீஷ ராஜனிடம் இல்லை. ஆனால், பிரம்மாதிகளாலும் சாத்தியமாகாத ஒரு காரியத்தை மனுஷ்யோத்தமனான அம்பரீஷன் மூலமாக செய்விக்க வேண்டும் என்பது பரமாத்மனின் இச்சையாக இருந்தது. இந்த விஷயம் பிரம்மாதிகளுக்கும் தெரிந்திருந்தது. ஆகையாலேயே, அவர்கள் துர்வாசரை காப்பாற்றாமல், அம்பரீஷனின் பக்தியை சோதித்தனர் என்று பாகவத வாக்கியம் சொல்கிறது. இதை நாம் சமூகத்திலும்கூட காணலாம். யாராவது ஒரு வேலையாள் மேல் முதலாளிக்கு அதிக நம்பிக்கை இருந்தால், மக்கள் சொல்வது என்னவெனில் : ‘இவருக்கு தம் மனைவி, மக்கள் மீதுகூட இவ்வளவு நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த வேலையாள் மேல் இருக்கிறது’. ஆனால், இப்படி சொல்லியதால், மனைவி மக்களுக்கு இருக்கும் ஸ்வாதந்த்ர்யம், இந்த வேலையாளுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அப்படியே அம்பரீஷனின் விஷயத்திலும் சொல்லவேண்டும். பக்தனிடம் தனக்கு அதிக கருணை இருக்கிறது என்பதை காட்டுவதற்காக பரமாத்மன், இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறான். அதாவது, பக்தர்களை கஷ்ட காலத்தில் மட்டும் காக்கிறான். பிரம்மாதிகளுக்கு எந்த நேரத்திலும் தரிசனம் அளித்துக்கொண்டே இருக்கிறான் என்று அறியவேண்டும். 

எப்போதும் மகாராஜனையே பார்த்திருக்கும் திவான் முதலானவர்களுக்கு, ராஜன் காட்சியளித்துவிட்டால் அதில் என்ன ஆச்சரியம்? இப்படி இல்லாமல், ஏழை மக்களிடம் மகாராஜா அன்பு வைத்து, அவர்களை மேம்படுத்தினால், அத்தகைய ராஜனை கருணைக்கடல் எனவேண்டும். அப்படியே பரமாத்மன், சாதாரண பக்தர்களுக்கு வசமாகிறான் ஆகையால் அவனை ‘கருணாளு’ என்று கொண்டாடியிருக்கிறார் தாசராயர். 

அடுத்து: மனம், வாக்கிற்கு காட்சியளிக்காத, மகாமகிமையுள்ள பரமாத்மன், தன்னை நினைப்பவர்களுக்கு, அவர்களுக்கேற்ப, தன்னை காட்டிக்கொள்வான் என்று தாசராயர் சொல்கிறார். இது எப்படி? அதாவது பாண்டவர்களின், அதிலும் அர்ஜுனனின் கதையை பார்ப்போம். பாண்டவர்கள் கஷ்ட காலத்தில் இருக்கும்போது, அவனை நினைத்தவுடன், ஸ்ரீகிருஷ்ண ரூபத்திலும், வியாச ரூபத்திலும், உடனடியாக வந்து அவர்களுக்கு தரிசனம் அளித்திருந்தான். அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து, அவன் நண்பனாக, குருவாக, தூதனாக என இரவும் பகலும் அவனுடனேயே இருந்து காப்பாற்றினான். 

ஒருவேளை இதை புராண கதை என்றுவிட்டால், சரி. நம் புரந்தரதாசர், கனகதாசர் ஆகியோருக்கும், இவர்களைவிட முந்தையவர்களான மகாராஷ்டிரத்தின் துக்காராம், நாமதேவ், ஞானதேவ, ராமதாஸ் ஆகியவர்களை எப்படி அருளினான் என்பதை பார்த்தால், ஜகன்னாததாசரின் ‘நெனெவவரனனுசரிஸி திருகுவனு’ என்னும் வாக்கு எவ்வளவு உண்மை என்பது தெரியவருகிறது. கிரந்தம் நீண்டுவிடும் என்னும் பயத்தினால் அவை அனைத்தையும் இங்கு எழுதுவதற்கு சாத்தியமில்லை.

அடுத்து: ’ஜகதுதரன தானு ஜனரொளகித்து ஜனிஸுவனு’ என்றிருக்கிறார். இதன் பொருள் என்னவெனில்: பரமாத்மன், பிம்பரூபியான காரணத்தால், உபாதியான ஜீவனின் ஸ்வரூபத்தை விடாமல் எப்போதும் அவனுடனேயே இருக்கிறார். இதனால், பிரதிபிம்பனான ஜீவன், நித்யன் ஆனான். அப்படியில்லையெனில், பிம்பனின் சன்னிதானம் இல்லையெனில், பிரதிபிம்பனுக்கு அநித்யத்வம் வருகிறது. நாம் கண்ணாடியைப் பார்த்து நின்றால், நம் பிரதிபிம்பம் கண்ணாடியில் தெரியும். கண்ணாடிக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையெனில், எப்படி கண்ணாடியில் நம் பிரதிபிம்பம் தெரியாதோ, அதைப்போலவே, கண்ணாடியைப் போல இருப்பது, ஜீவனின் ஸ்வரூப தேகம். பிம்பன் பரமாத்மன். இவர்கள் இருவரின் சம்பந்தத்தினால் பிரதிபிம்பம் தெரிகிறது. இந்த சம்பந்தம் இல்லையெனில், பிரதிபிம்பம் இல்லாமல் போகிறது. ஆகையால், ஜீவன் பிறக்கும்போதே பரமாத்மன் அவனுடன் பிறக்கிறான். பாகவத 10ம் ஸ்கந்தத்தில்:

’குணேஷு மாயா ரசிதேஷு தேஹ்ய ஸௌப்ரபத்யமானஸ்ஸஹதேன ஜாயதே’. மரண காலத்தில், பிரகருதி சம்பந்தமான சத்வ, ரஜஸ், தமோ குணங்களில், தத்தம் தகுதிக்கேற்ப, அதாவது, தான் சாத்விகனோ, ராஜஸனோ, தாமஸனோ அந்த தகுதிக்கேற்ப, பரமாத்மனின் ப்ரேரணையால் (விருப்பத்தால்), தேவ, அசுர, கந்தர்வ, மனுஷ்யாதி யோனிகளில் மனம் வைப்பான். மரண காலத்தில் எந்த யோனியை சிந்தித்து தேகத்தை விடுகிறானோ, அடுத்த பிறவியில் அதே யோனியில், பரமாத்மனுடன் பூமியில் பிறப்பான். ஆனால், கர்ப்பம் முதலான செயல்கள் எல்லாம், ஜீவனுக்கு மட்டுமே தவிர, பரமாத்மனுக்கு இல்லை. எப்படியெனில், தண்ணீரில் சூரியனின் பிரதிபிம்பம் விழும்போது, காற்று அடித்தால், அந்த சூரியன் உடைந்தது போல காணப்படும். ஆனால், பிம்பரூபனான சுரியனுக்கு தண்ணீரில் சம்பந்தம் இல்லாததால் அவன் எந்தவொரு களங்கமும் இல்லாமல் இருக்கிறான். அப்படியே, தேக சம்பந்தமில்லாத பரமாத்மனுக்கு, தேகத்திற்கு சம்பந்தப்பட்ட எந்தவொரு துக்கமும் இல்லை, என்று அறியவேண்டும். 

காங்கேயனுத, ககனசரவாஹன என்ற இரு சொற்கள் பரமாத்மனின் அபாரமான மகிமைகளை எடுத்துக் காட்டுகிறது. எப்படியெனில்: கங்கா புத்ரனான பீஷ்மாசார்யர் ‘பீஷ்மாஸ்தவராஜ’ என்னும் ஸ்தோத்திரத்தை செய்தார் என்று பாரத அனுஷாஸன பர்வத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் விசேஷமான பகவன் மஹிமைகளை சொல்லியிருப்பார். பாரதத்தில் ஐந்து ரத்தினங்கள் என்று சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள். அது என்னவெனில்: 

கீதா சஹஸ்ர நாமைவஸ்தவராஜோஹ்யனுஸ்ம்ருதி: |
கஜேந்திரமோக்‌ஷணம்சைவ பஞ்சரத்னானி பாரதே ||

1. பகவத்கீதை. 2. விஷ்ணு சஹஸ்ர நாமம் 3. பீஷ்மஸ்தவராஜ 4. அனுஸ்ம்ருதி மற்றும் 5. கஜேந்திர மோட்சம். இவையே ஐந்து ரத்னங்கள் எனப்படுகின்றன. இவற்றில் இரண்டு ரத்னங்கள் பீஷ்மாசார்யர் இயற்றியவை. 1. கிருஷ்ணனை பிரத்யட்சமாக ஸ்தோத்திரம் செய்தது பீஷ்மஸ்தவராஜ. 2. அனுஸ்ம்ருதி - பீஷ்மாசார்யர் தேகத் தியாகம் செய்தபோது, அந்தர்யாமி பரமாத்மனையும், ஸ்ரீகிருஷ்ணனையும் ஐக்கிய சிந்தனை செய்து, பகவத் மகிமைகளை வெளிப்படுத்தினார். ஆக, 5 ரத்னங்களில் ஸ்தவராஜ, அனுஸ்ம்ருதி இந்த இரண்டும் பீஷ்மர் இயற்றிய ஸ்தோத்திரங்கள். இந்த இரு ஸ்தோத்திரங்களின் பிரதிபாத்யனும் ஸ்ரீபரமாத்மனே ஆகும். அந்த ஸ்தோத்திரங்களை படித்தால், பரமாத்மனின் அபாரமான மகிமைகள் நமக்குத் தெரிய வருகின்றன. ககனசரனான கருட வாகனானவன் என்று சொல்கிறார். இத்தகைய மகிமைகள் வேறு யாருக்கு இருக்கிறது? சிந்திப்போம். முதலில் கருடனின் மகிமைகள் புரிந்தால், பின்னர் அவரை வாகனமாக வைத்திருப்பவனின் மகிமைகள் தானாக புரியவரும். கருடனின் மகாமகிமைகளை புராணங்கள் இப்படி சொல்கின்றன. 

கருடஸ்ய ஜாதமாத்ரேண த்ரயோலோகா: ப்ரகம்பிரே |
ப்ரகம்பிதா மஹி சர்வாசஷைல வனகானனா ||
ககனன்னஷ்டாசந்த்ரார்க்கம் ஜ்யோதிஷனப்ரகாஷத |
தேவதாபய பீதாஸ்து மாருதோன ப்ரகம்பத ||

இதன் பொருள்:
கருடன் பிறந்தபோது மூன்று உலகத்து மக்களும் நடுநடுங்கிப் போயினர். மலைகளைக் கொண்ட பூமி நடுங்கியது. ஆகாயத்தில் சூர்ய சந்திரர்கள் தங்களின் ஒளியை இழந்தனர். தேவதைகள் அனைவரும் பயந்தனர். காற்று அடிக்கவில்லை. என்று மேற்கண்ட ஸ்ருதி வாக்கியம் சொல்கிறது. 

மேலும் பாரதத்தில் கருடனின் மகிமைகளை ஏராளமாக சொல்லியிருக்கின்றனர். அதனை இங்கு விளக்கமாக சொல்லமுடியாவிட்டாலும், சிறிது மட்டும் பார்ப்போம். 

தாயான வினதாதேவியின் அடிமைத்தனத்தை விடுவிப்பதற்காக, பிறந்தவுடனேயே அமிர்தத்தைக் கொண்டு வர புறப்பட்டார் கருடன். அந்த சமயத்தில் அவருக்கு ஆகாரம் கிடைக்காமல் தாயைக் கேட்க, அவர் கடலில் ஒரு ஓரத்தில், மகா பாபிகளான, உலகத்தை அழிக்க வல்லவர்களான, ஆயிரக்கணக்கான விஷதர்கள் வசித்து வருகின்றனர். அவர்களைக் கொன்று தின்றுவிட்டு, அமிர்தத்தைக் கொண்டு வா என்றார். கருடனும் அவ்வாறே செய்தார். அப்படியும் அவருக்கு வயிறு நிரம்பவில்லை. அப்படியே கவலையுடன் வரும்போது, தந்தையான கஷ்யபரைக் கண்டு, ’தாய் ஆகாரம் கொடுத்தாலும், எனக்கு வயிறு நிரம்பவில்லை. வேறு எங்காவது இருக்கும் ஆகாரத்தை காட்டுங்கள்’ என்று வேண்டினார். 

அதற்கு கஷ்யபர் அங்கிருந்த ஏரியைக் காட்டி, இங்கு ஒரு யானையும், ஆமையும் இருக்கின்றன. இந்த இருவரும் முந்தைய பிறவியில் அண்ணன் தம்பியாக இருந்து, சொத்து விஷயத்தில் இருவருக்கும் விவாதம் வந்து, ஒருவருக்கொருவர் சாபம் கொடுத்து, யானை ஆமைகளாக பிறந்திருக்கின்றனர். யானை 6 காத உயரமும், 12 காத அகலமும் இருக்கிறது. ஆமை 3 காத உயரமும், 10 காத சுற்றளவும் இருக்கிறது. முந்தைய பிறவியின் சண்டையினால், இப்பிறவியிலும் இருவரும் எதிரிகளாகவே பிறந்திருக்கின்றனர். அவர்கள் இருவரையும் கொன்று தின்று உன் வேலையைப் பார் என்று கஷ்யபர் சென்றார். கருடன் அந்த இரண்டு பிராணிகளையும் தன் கால்களில் பிடித்து, எங்கு அமர்ந்து தின்னலாம் என்று யோசித்தவாறு, மரங்களையெல்லாம் பார்த்தவாறு வரும்போது அவைகளெல்லாம் நடுநடுங்கின. அங்கு ஒரு பெரிய மரம் இருந்தது. 

அந்த மரம் கருடனை பார்த்து - ‘கருடா, யோசிக்கவேண்டாம். என் கிளைகள் அனைத்தும் 100 காததூரங்கள் வரைக்கும் இருக்கின்றன. அந்த ஒரு கிளையில் அமர்ந்து நீ யானை, ஆமைகளை தின்னலாம்’ என்றது. கருடனும் மகிழ்ச்சியுடன், அந்த 100 காததூரம் உள்ள கிளையில் அமரப் போகும்போது, அந்த கிளையானது சடசடவென்று முறிந்து கீழே விழப்போனது. அதில் அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான ரிஷிகளை கருடன் பார்த்தார். கிளை முறிந்து கீழே விழுந்தால், இவ்வளவு பேரின் உயிருக்கும் ஆபத்து வரும் என்று நினைத்து, அந்த கிளையை அப்படியே தன் மூக்கில் தாங்கிப் பிடித்தவாறு பறந்துவிட்டார். அப்படியே பல காத தூரங்கள் பறந்தார். 

கஷ்யபர் தன் மகனின் சாகசத்தைப் பார்த்து வியந்து, அந்த கிளையில் அமர்ந்திருந்த ரிஷிகளைக் கண்டு வணங்கி, அவர்கள் அந்த இடத்தை விட்டுப் போகுமாறு செய்து, அந்த கிளையை, மலையின் மேல் போட்டுவிடுமாறு சொன்னார். அதே போல, கருடனும் அந்த கிளையை ஒரு பெரிய மலையின் மேல் போட, அந்த மலை 100 துண்டுகளானது. அங்கு அமர்ந்து அந்த யானை, ஆமையைத் தின்று பின், அமிர்தத்தைக் கொண்டு வருவதற்குப் போனார் என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்து கருடனின் மகிமை எப்படிப்பட்டது என்று தெரியவருகிறது. இத்தகைய கருடனை, தன் வாகனமாக வைத்திருப்பதென்றால், சாமான்யர்களுக்கு சாத்தியமா? 

‘காங்கேயனுத’ ‘ககனசரவாஹன’ என்னும் இரு சொற்களால் பரமாத்மனின் சிறந்த மகிமைகளை நிரூபணம் செய்தாயிற்று. இப்படிப்பட்ட மகிமைகளைக் கொண்டவனாயினும், ’காயனவ கேளுத, திவௌகஸரொடனெ திருகுவனு மனெமனெகளல்லி’ என்று சொல்லி, பகவந்தன் சர்வக்ஞர் ஆனாலும், பக்தர்கள் பாடும் கானங்களைக் கேட்டவாறு, தேவதைகளுடன் பக்தர்களை மகிழ்வித்தவாறு அவர்களின் வீடுகளில் சஞ்சரித்தவாறு, ஆபத்துகள் வரும்போது அவர்களை காப்பாற்றுகிறான். இந்த வாக்கியத்தால், பரமாத்மனுக்கு பக்தர்களிடம் இருக்கும் வாத்ஸல்யத்தை (பிரியத்தை) விளக்கியது போல ஆயிற்று. இத்தகைய ஆதாரங்களினாலேயே தாசராயர் ‘இவன காருண்யகேனெம்பெ’ என்றிருக்கிறார். 

பக்தர்களின் வீடுகளில் சஞ்சரிக்கிறான் என்பதற்கு கோபிகா ஸ்த்ரியர்களை விட்டால் வேறு உதாரணமே தேவையில்லை. கோபாலனாக கோபிகா ஸ்த்ரியர்களின் வீடுகளில் திரிந்து, அவர்களின் துதிகளை / பாடல்களைக் கேட்டவாறு, தயிர் பானைகளை உடைப்பது, பால் வெண்ணைகளை திருடித் தின்பது, ஆகிய பால சேஷ்டைகளால் அவர்களை மகிழ்வித்து, அவர்களுக்கு வந்த ஆபத்துகளை பரிகரித்து, அவர்களுக்கு அங்க-சங்கங்களைக் கொடுத்துக் காப்பாற்றிய உதாரணமே இதற்கு சாலப் பொருந்தும். 

மேலும் பக்தவத்ஸலனான ஸ்வாமி, தாயான யசோதை தன்னை கயிற்றில் கட்ட முயன்றபோது, எவ்வளவு நீளமான கயிறைக் கொண்டுவந்தாலும், எப்போதும் இரு அங்குல கயிறு குறைவாகவே இருக்கும்படியான நிலையைக் கண்டு, ஆச்சரியப்பட்ட யசோதையின் மகிழ்ச்சி, வியப்பு ஆகியவை, பிரம்மாதி தேவதைகளுக்கும் கிட்டவில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இதே அர்த்தத்தை பாகவதத்தின் கீழ்க்கண்ட ஸ்லோகத்திலும் சொல்லியிருக்கின்றனர். 

நேமம் விரிசிர்னபவோ ந ஸ்ரீரப்யங்க சம்ஸ்ரயா | 
ப்ரஸாதம் லேபிரேகோப்யோ யத்ப்ராப விமுக்திதாத் ||

இதன் முக்கியக் கருத்து என்ன? ஏகாந்த பக்தரும், மனைவி மக்களுமான ரமா பிரம்மாதிகளில், பரமாத்மனின் சம்பூர்ண அனுக்கிரங்கள் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவே சாதாரண மனிதர்களில் அவனின் அருள் மிகச்சிறியதாகவே இருந்தாலும், அவர்களின் யோக்யதைக்கு அது மிகவும் அதிசயமாகவே காணப்படும். ரமா பிரம்மாதிகளில் இருக்கும் அவனது அருளில் கோடியில் ஒரு பங்குகூட இந்த சாதாரண மனிதர்களில் இல்லை. ஆனாலும், அவர்களில் பகவந்தன் வைக்கும் அன்பைக் கண்டு யாரும் பகவந்தன் கருணாளு என்று சொல்வதில்லை. சாமான்ய மக்களின் கஷ்டங்களைப் பரிகரிக்கும்போது, பரமாத்மன் காட்டும் அருளே, அவனது அதிசயமான கருணையை வெளிப்படுத்துகிறது. 

இந்த ஸ்லோகத்தில் வரும் ‘மனெமனெகளலி திருகுவனு’ என்னும் பதத்திற்கு சில வியாக்யானகாரர்கள், ’இந்திரியங்கள் என்னும் வீடுகளில் பிம்பரூபியாக திரிகிறான்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தாசராயரின் அபிப்பிராயம் அப்படி இருந்ததாக தெரியவில்லை. ஏனெனில் ‘காயனவ கேளுத’ என்பது, பக்தியுடன் பாடல் பாடுபவர்களைக் குறிக்கிறது. பிம்பரூபியான பரமாத்மன் இந்திரியாதிகளில் திரிகிறான் என்றால், பசு, பறவைகளிலும், தமோ யோக்யர்களான ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக இருக்கிறான். இப்படியிருக்கையில் அந்த அர்த்தமானது பொருந்துவதில்லை. 

***


No comments:

Post a Comment