#10 - கருணா சந்தி
ஷரணஜன மந்தார சாஸ்வத
க1ருணி கமலாகாந்த காமத3
பரமபாவனதர சுமங்கலசரித பா1ர்த்தஸக2 |
நிருபமானந்தாத்ம நிர்க3த1
துரிததே3வ வரேண்யனெந்தா3
த3ரதி3 க1ரெயலு ப3ந்தொத3கு3வனு த1ன்னவர ப3ளிகெ3 ||10
ஷரணஜன மந்தார = தன்னை சரணடைந்தவர்களுக்கு ஸ்ரீஹரி கல்பவ்ருக்ஷம் போலிருப்பவன்
சாஸ்வத கருணி = பக்தர்களில் திடமான கருணையுள்ளவன்
கமலாகாந்த = லட்சுமியின் கணவன்
காமத = நம் விருப்பங்களை பூர்த்தி செய்பவன்
பரமபாவனதர = அத்யந்த பவித்ர ரூபத்தைக் கொண்டவன் (அல்லது)
பரமபாவனதர சுமங்கலசரித = அத்யந்த பவித்ரமான, சுமங்கலமான சரிதங்களைக் கொண்டவன்
பார்த்தசக = அர்ஜுனனின் நண்பன்
நிருபமானந்தாத்ம = உவமைகளே இல்லாத ஆனந்த ஸ்வரூபன்
நிர்கததுரித = துக்கங்கள் இல்லாதவன்
தேவவரேண்யனெந்து = பிரம்மாதி தேவதைகளால் வணங்கப்படுபவன் என்று
ஆதரதி = பக்தி / மரியாதையுடன்
கரெயலு, தன்னவர பளிகெ = அழைத்தால், தன் பக்தர்களின் சமீபத்தில்
பந்து ஒதகுவனு = ஆபத்து காலங்களில் பக்தர்களைக் காப்பாற்றுவதற்கு வந்து நிற்பான்.
பொருள்:
பக்தர்கள் தங்களின் ஆபத்து காலங்களில், ’ஹே, அபயம் கேட்பவர்களின் கல்பவ்ருக்ஷனே, திடமான கருணை உள்ளவனே. லட்சுமிபதியே. பக்தர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுபவனே, பரம பவித்ரமான மங்கல சரித்திரங்களைக் கொண்டவனே. ஹே பார்த்தனின் நண்பனே. உவமையில்லாத ஆனந்த ஸ்வரூபனே. துக்கங்களை போக்குபவனே. தேவதைகளால் வணங்கப்படுபவனே. என்னை காப்பாற்று’ என்று பக்தியுடன் அழைத்தால், உடனடியாக பக்தர்களின் அருகில் வந்து, அவர்களை காப்பாற்றுவான்.
சிறப்புப் பொருள்:
பக்தவத்ஸலனான ஸ்ரீபரமாத்மனை யார் தமது ஆபத்து காலங்களில், தமது ஸ்வதந்த்ர கர்த்ருத்வ புத்தியை விட்டு, நீயே கதி என்று அவனடி சேர்ந்தால் உடனடியாக அவர்களை காப்பாற்றுகிறான். இதற்கு உதாரணம்: திரௌபதியின் வஸ்த்ர அபஹரண சமயத்தில், துச்சாதனன் அவளது புடவையை இழுக்க, அவள் தன் மானத்தை காக்க முற்பட்டபோது, ஸ்ரீகிருஷ்ணன் அவளை காப்பாற்ற வரவில்லை. எப்போது இரு கை கூப்பி ‘ஹே கிருஷ்ணா! த்வாரகா வாசனே! யாதவ நந்தனனே! என்னைக் காப்பாற்று’ என்று தன் முயற்சியை விட்டு வேண்டினாளோ, அப்போது ஸ்ரீகிருஷ்ணன் அவளது வஸ்திரத்தை முடிவில்லாததாக மாற்றி அவள் மானத்தை காப்பாற்றினான்.
கஜேந்திரன் முதலையிடம் அகப்பட்டு ஓராயிரம் ஆண்டுகள் வரை தான் அதிலிருந்து வெளிவர முயன்றும் முடியாமல், இறுதியில் ‘நாராயணா அகிளகுரோ பகவன் நமஸ்தே’ என்று பரமாத்மனை வேண்டினானோ, உடனடியாக அப்போதே பரமாத்மன் தரிசனம் அளித்து முதலையைக் கொன்று கஜேந்திரனை காப்பாற்றினான். பிரகலாதனை, ஹிரண்யகசிபு தான் கொல்வதாக தீர்மானித்து, மகனிடம் இப்படி கேட்டான்.
ஹிரண்யகசிபு : ஹே துராத்மா! என்னை விட உத்தமனான ஈஸ்வரன் இருக்கிறான் என்று சொல்கிறாயே, அவன் எங்கு இருக்கிறான்?
பிரகலாதன்: தந்தையே! ‘சர்வத்ர’ அவன் எல்லா இடங்களிலும் இருக்கிறான்.
ஹிரண்யகசிபு : ’யதி ஸ ஸர்வத்ர! கஸ்மாத் ஸ்தம்பே நத்ருஷ்யதே?’ அப்படி எல்லா இடங்களிலும் இருப்பது உண்மையானால், இந்த கம்பத்தில் ஏன் தெரிவதில்லை?
பிரகலாதன்: ’ஸ்தம்பேன த்ருஷ்யதே’. ’ஸ்தம்பதரஸே! அல்லியு காணுவனு’ ஹே தூணின் அரசனே, கண்டிப்பாக இந்த தூணிலும் இருக்கிறான். (ஸ்தம்பதரஸே என்று சொல்வது, பரமாத்மன் தன்னில் இருக்கிறான் என்று எப்படி அந்த ஜடமான தூணுக்குத் தெரியாதோ, அதைப் போலவே நீயும் ஜடமாக இருக்கிறாய். அதாவது, ஞானசூன்யமாக இருக்கிறாய். ஆகையால், அவன் உனக்குத் தெரியவில்லை - என்று பொருள்).
ஹிரண்யகசிபு: ஹே அறிவுகெட்டவனே. கண்டபடி பேசும் உன் தலையை, இதோ இந்த வாளினால் கத்தரிக்கிறேன். அந்த ஹரி இருப்பது நிஜமானால் உன்னை காப்பாற்றட்டும். என்று சொல்லி வாளேந்தி ஹிரண்யகசிபு வர, பிரகலாதன் பயமே இல்லாமல், தன் நலனை பரமாத்மனிடம் ஒப்படைத்து, தியானித்தவாறு நின்றுவிட்டான். அப்போது பரமாத்மன் நரசிம்ம ரூபத்தினால் ஹிரண்யகசிபுவைக் கொன்று பிரகலாதனை காப்பாற்றினான். இவையெல்லாம் புராண கதைகள் என்று சொல்லி உதாசீனம் செய்யக்கூடாது.
தற்போது 100-200 ஆண்டுகளுக்கு முன்பாகவும்கூட இத்தகைய அற்புதங்கள் நடந்திருக்கின்றன என்று பக்தர்களின் சரித்திரங்களைப் பார்த்தால் தெரிகிறது. ராமதாசர், அரசுப் பணத்தை பயன்படுத்தி பத்ராசல ராமதேவரின் கோயிலைக் கட்டிவிட, அந்தப் பகுதியின் அரசன் கோபம் கொண்டு, ராமதாசரை சிறையில் அடைக்க, ராம லட்சுமணரே அந்த அரசனிடம் வந்து, ராமதாசர் செலவு செய்த பணத்தை அந்த அரசனுக்கு திருப்பிக் கொடுத்து, ராமதாசரை காப்பாற்றினர் என்னும் சரித்திரத்தை பார்க்கிறோம்.
இத்தகைய சரித்திரங்களை பக்தி விஜயம் என்னும் கிரந்தத்தில் நிறைய பார்க்கலாம். இதே ஜகன்னாததாசர், நோயினால் கஷ்டப்பட்டவாறு தன் குருகளுடன் திருப்பதிக்கு வந்தபோது, இவரை மட்டும் வீட்டில் விட்டுவிட்டு அனைவரும் கோயிலுக்கு சென்றுவிட, வீட்டில் இவர் பசி தாங்காமல் பகவந்தனை தியானம் செய்தவாறு இருக்க, ஸ்ரீஸ்ரீனிவாசனே இவரின் குருகளின் ரூபத்தில் வந்து ருசியான உணவினை இவருக்கு அளித்து, சாப்பிட வைத்து, முழு சக்தியைக் கொடுத்துச் சென்றான் என்பதை தாசராயரின் வாழ்க்கைச் சரிதத்தில் பார்க்கிறோம். ஆகையால், தாசராயர் ‘ஆதரதி கரெயலு பந்ததொகுவனு தன்னவர பளிகெ’ என்று சொல்கிறார். ‘ஷரணஜன மந்தார’ தன்னை வேண்டிய பக்தர்களுக்கு கல்பவ்ருக்ஷத்தைப் போல, அவர்கள் வேண்டிய வரங்களைக் கொடுக்கிறான் என்று பொருள்.
இந்த விஷயத்தைப் பற்றி சொல்லும்போது ஒரு வியாக்யானகாரர், இந்த அர்த்தமானது முக்தியில் மட்டுமே பொருந்துகிறது - அதாவது பரமாத்மன் முக்தர்களுக்கு மட்டுமே கல்பவ்ருக்ஷமாக இருக்கிறான். பிரளய காலத்தில் இது பொருந்தாது என்று சொல்லியிருக்கிறார். நமக்குத் தோன்றுவது என்னவென்றால்:
கல்பவ்ருக்ஷத்திடம் பலன்களை வேண்டுபவர்கள் நிஷ்காமர்கள் அல்ல. அவர் காம்ய பலன்களையே வேண்டுகிறார்கள். இந்த கல்பவ்ருக்ஷம் கூட காம்யமான இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுகிறதே தவிர, முக்தியோ அதற்கு இணையான நிரந்தர சுகமோ கொடுக்கும் தகுதி அதற்கு இல்லை. ஆகையால் இந்த கல்பவ்ருக்ஷ உவமையினால் நாம் அறியவேண்டியது என்னவெனில்: ‘கைவல்ய தாயக’ என்னும் சொற்களால், மேலே பல பதங்களில் பரமாத்மன் முக்தியைக் கொடுப்பவன் என்று சொல்லியிருப்பார். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் - பரமாத்மன் முக்தியை மட்டுமே கொடுக்கிறான் ஐஹிக சுகங்களை அவன் கொடுப்பதில்லை என்னும் சந்தேகங்கள் பக்தர்களுக்கு உண்டாகிறதோ என்னும் நோக்கத்துடன் தாசராயர், கல்பவ்ருக்ஷமானது எப்படி வேண்டுவதை கொடுக்கிறதோ, அப்படியே காம்யத்தை வேண்டுபவர்களுக்கு அவற்றை கண்டிப்பாகக் கொடுக்கிறான் என்பதைக் குறிப்பதற்காக ‘ஷரணஜன மந்தார’ என்று சொல்லியிருக்கிறார். தாசராயரின் அபிப்பிராயம் இதுவே என்று எப்படி சொல்லலாம் என்றால், சில உதாரணங்களைப் பார்க்கலாம். தாசராயரின் பரமகுருகளான ஸ்ரீவிஜயதாசரின் ஒரு பதத்தைப் பார்க்கலாம்.
இந்தா பிரபுவ காணேனோ
ஈ ஜகதொளகிந்தா பிரபுவ காணேனோ
பேடித வரவ (பேடிதிஷ்டார்த்தவ) கொடுவ
பக்தர தப்பு நோடதெ பந்து பொரெவ
காடிகாரனு, கருடாரூட குணவந்த மஹாப்ரௌட
ப்ரதாப ஜகதி கூடாதி சஞ்சரிப
பாடி பொகளி கொண்டாடுவவர முன்
தாடுதலிப்பனு காடொளகித்தனு ....
என்று சொல்கிறார்.
ஜகன்னாததாசர் சொல்லியிருக்கும் ‘ஷரணஜன மந்தார’ என்னும் பதத்தின் அர்த்தமானது, விஜயதாசரின் பதத்தின் அர்த்தத்தையே சொல்லியிருக்கிறது என்று நினைக்கலாம். ’பேடித வரவ கொடுவ’ என்னும் சொல் ‘ஷரணஜன மந்தார’ என்னும் சொல்லின் அர்த்தத்தையே குறிக்கிறது. எப்படியெனில், காமிதத்தைக் கொடுப்பதற்கு கல்பவ்ருக்ஷம் என்று பெயர். இதன் அர்த்தமானது ஏன் முக்தர்களைக் குறித்து சொல்லக்கூடாது என்று கேட்கலாம். ஆனால், அது கொடுப்பதில்லை. ஏனெனில் ‘பேடித வரவ கொடுவ’ என்றிருக்கிறார். முக்தியில், இஷ்டார்த்தங்களை வேண்டுவது என்னும் நிலையே இல்லை.
‘யம்யம் சுகே காமயதீர்த்த மத்ர சங்கல்ப மாத்ராத்ஸகலோபி ஸஸ்யாத்’ - முக்தியில் இருக்கும் ஆனந்தஸ்வரூபமான முக்தர்கள், எதை விரும்புகின்றரோ அவை அனைத்தும் அவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அவர்களுக்குக் கிடைக்கிறது என்று வேதங்கள் சொல்லியிருக்கிறன. (மத்வ விஜயம் 11-76 ஸ்லோகத்தைப் பார்க்கலாம்). ’பேடித வரவ கொடுவ’ என்று விஜயதாசர் சொல்வது முக்தர்களின் வரங்கள் அல்ல. மேலும் கல்பவ்ருக்ஷத்தைப் பற்றி பாகவத 10ம் ஸ்கந்தத்தில் ‘ததைவ மத்த: பலஸம்பத:ஸ்யு: உச்சாவசா: கல்பதரோரிவார்த்தினாம்’ (இது கோபியர்களைக் குறித்து ஸ்ரீகிருஷ்ணன் சொல்வது). கல்பவ்ருக்ஷத்திடம் வேண்டுபவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ப உத்தம / அதம பலன்கள் கிடைக்கின்றன என்கிறார்.
முக்தர்களுக்கு புதிதாக பலன்கள் கிடைக்கும் சந்தர்ப்பமே இல்லை. ஆகையால், இது அமுக்தர்களின் விஷயமே ஆகும். மேலும் 8ம் ஸ்கந்தத்தில், சுகாசார்யர் பரிக்ஷித் ராஜனைக் குறித்து சொல்லும் வாக்கியம்:
ததோ பவத்பாரிஜாத: சுரலோக விபூஷண: |
பூரயத்யர்த்தினோ யோர்த்தை: ஷஷ்வத்புவியதா பர்வா ||
தேவலோகத்திற்கு அலங்காரம் சேர்க்கும் பாரிஜாதம் (கல்பவ்ருக்ஷம்) உற்பத்தி ஆயிற்று. பூலோகத்தில் வேண்டுபவர்களின் வேண்டுதல்களை நீ எப்படி நிறைவேற்றுகிறாயோ, அப்படியே இந்த மரம் அனைத்து உலகங்களிலும் இருக்கும் மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுகிறது. இவை அனைத்தையும் பார்த்தால், வேண்டியவர்களுக்கு (குசேலனுக்கு) கொடுத்ததைப் போல, ஐஹிக சுகங்களைக் கொடுக்கிறது என்று அர்த்தம் உண்டாகிறது.
காமித - என்றால் பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவன் என்று பொருள். அதனால், ஷரணஜன மந்தார, காமத ஆகிய இரு சொற்களுக்கும் ஒரே அர்த்தம் என்று தெரிகிறது. ஆனாலும் ‘புனருக்தி தோஷம்’ வந்திருக்கிறது என்று நினைக்கக்கூடாது.
ஷரணஜன = வேண்டும் பக்தர்களுக்கு. மந்தார = கல்பவ்ருக்ஷம் எப்படி காமிதமோ அதைப் போல பரமாத்மனும் காமித-ப்ரதன் என்று பொருள் கொண்டால், புனருக்தி தோஷம் வருவதில்லை. மேலும், பரமாத்மன், கல்பவ்ருக்ஷத்தைப் போல ஐஹிக வரங்களை மட்டும் கொடுப்பவனல்ல என்பதைக் காட்டுவதற்காக ‘சாஸ்வத கருணி’ என்று சொல்லியிருக்கிறார்.
இப்படி சொல்லியிருப்பதால் என்ன தெரியவருகிறது என்றால், குசேல, பிரகலாதர்களுக்குக் கொடுத்ததைப் போல, இஹத்தில் பல போகங்களைக் கொடுத்து, பரலோகத்தில் முக்தியையும் கொடுப்பவன் என்று அர்த்தம். ஆகையால், பரமாத்மனின் பிரசாதமானது நிரந்தரமானது என்று சொல்லியாயிற்று. ‘பரமபாவனதர சுமங்கள சரித’ பரமாத்மனின் சுமங்கல சரித்திரமானது, மிகவும் பவித்ரமானது என்று பொருள்.
இதே சந்தியின் முதல் பத்யத்தில் ‘புவன பாவனனெனிப லகுமிதவன மங்கள கதெய’ என்று சொல்லியிருக்கும் அர்த்தத்தையே இங்கும் கொள்ளவேண்டும். மேலும் பாகவத 10ம் ஸ்கந்தத்தில்
வாசுதேவ கதாப்ரஷ்னம் புருஷாம் ஸ்த்ரிஸ்புனாதிஹி |
வக்தாரம் ப்ருச்சகம் ஸ்ரோத்ரூன் ஸ்தத்பாத சலிலம்யதா ||
பரமாத்மனின் கதாபிரஸ்னமானது, கேள்வியைக் கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும், கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும், விஷ்ணு பாதோதகமானது (கங்கை அல்லது சாலிகிராம தீர்த்தம்) எப்படி அதில் ஸ்னானம் செய்பவர்களை பவித்ரமாக்குகிறதோ, அது போலவே ஆக்குகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே அர்த்தத்தையே தாசராயர் ‘பரமபாவனதர சுமங்கள சரித’ என்று சொல்லியிருக்கிறார்.
‘பார்த்தசக’ என்றதால் பரமாத்மன் பக்தர்களின் வசம் என்று சொல்கிறார். பரமாத்மனின் பக்தர்கள் பலர் இருந்தாலும், அர்ஜுனனின் பக்திக்கு கட்டுப்பட்டதைப் போல வேறு யாரின் பக்திக்கும் கட்டுப்படவில்லை. அர்ஜுனனைவிட பீமசேனர், பரமாத்மனுக்கு வேண்டியவராக இருந்தாலும், அவர் நிஷ்காம பக்தர். ஆகையால், அவர் பரமாத்மனிடம் எதையும் வேண்டாமல் பரமாத்மனுக்கு தாசராகவே இருந்துவிட்டார். அர்ஜுனன் வேண்டிக்கொண்டதைப் போல, அவனுக்கு சாரதியாகவும், நண்பனாகவும், தூதனாகவும் இருந்து தன் தேகத்தையே அவனிடம் ஒப்படைத்தான். ஆகையாலேயே, ’பார்த்தசக’ என்றார் தாசராயர்.
’நிருபமானந்த’ பிரம்மாதிகளைவிட அதிகமான, உவமையில்லாத ஆனந்தம் ரமாதேவிக்கு இருந்தாலும், அவரும் பராதீனரே ஆவார். பரமாத்மனுடையது, ரமாதேவியரின் ஆனந்தத்தைவிட அத்யதிகமாக இருக்கிறது. தான் ஸ்வதந்த்ரனாகையாலும், இந்த ஆனந்தம் வேறு யாருக்கும் இல்லை. பிரம்மசூத்ர பாஷ்யத்தில் ‘நாராயணம் குணைஸ்ஸர்வை ருதீர்ணம் தோஷவர்ஜிதம்’ என்று சொல்லியிருக்கிறார். பரமாத்மன் அனைத்து குணங்களினாலும் பூர்ணனாக இருக்கிறான். ஆகையால், உவமையில்லாத ஆனந்தஸ்வரூபன் என்று சொல்கிறார். ஆனந்தஸ்வரூபம் மட்டுமே இல்லை.
’நிர்கததுரித’ தோஷங்கள் அற்றவன் என்று சொல்கிறார். பிரம்மாதிகளுக்கும்கூட பராதீனத்வம், தேஹ நாசம் ஆகிய தோஷங்கள் உள்ளன. இவை யாவும் பரமாத்மனுக்கு இல்லை என்று பொருள். ஆகையால் ‘தேவவரேண்ய’ - பிரம்மாதிகளால் வணங்கப்படுபவன். வரேண்ய என்றால் நம்மை காப்பாற்றுவதற்கு நம்மால் வணங்கத் தகுதி படைத்தவன் என்று பொருள்.
இதனாலேயே வரேண்ய என்றால் வணங்கப்படுபவன் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்.
***
Super
ReplyDelete