ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Wednesday, February 5, 2020

#12 - மங்களாசரண சந்தி

#12 - மங்களாசரண சந்தி

பாக1ஷாசன முக்ய சகல தி
வௌகசரிக3பினமிபெ ருஷிகளி
கேகசித்ததி பித்ருகளிகெ கந்த4ர்வ க்‌ஷிதிபரிகெ3 |
ஆ க1மலனாபா4தி யதிக3
நீக1கானமிசுவேனு பிடதெ3
மா களத்ரன தாசவர்க3க்கெ நமிபெனனவரத ||12

பாகஷாஸன முக்ய சகல திவௌகஸரிகெ = தேவேந்திரன் முதலான அனைத்து தேவதைகளுக்கு
ஏக சித்ததி = ஒரு மனத்துடன் புத்தியை அவர்களிடமே வைத்து
அபினமிபெ = சாஷ்டாங்க நமஸ்காரத்தை செய்து
ருஷிகளிகெ = விஸ்வாமித்ர, மரீச்யாதி ரிஷிகளுக்கு
பித்ருகளிகெ = பித்ரு கணங்களுக்கும்
கந்தர்வ = தேவ கந்தர்வ, மனுஷ்ய கந்தர்வர்களுக்கு
க்‌ஷிதிபரிகெ = ப்ரியம்வ்ரத முதலான அரசர்களுக்கு
ஆ கமலனாபாதி யதிகள = (ஸ்ரீமன் மத்வாசார்யரின் சிஷ்யரான) பத்மனாப தீர்த்தரே முதலான யதிகளுக்கு
ஆனீககெ = குழுவிற்கு
ஆனமிசுவெனு = நன்றாக வணங்குவேன்
பிடதெ = யாரையும் விடாமல்
ரமாகளத்ரன = ஸ்ரீலட்சுமிதேவியையே மனைவியாகக் கொண்ட ஸ்ரீபரமாத்மனின்
தாச வர்கக்கெ = தாச சமூகத்திற்கு
அனவரத = என்றைக்கும்
நமிபெ = வணங்குவேன்

இந்திராதி அனைத்து தேவதைகளுக்கும் நமஸ்காரம் செய்வேன். ரிஷிகளுக்கும், பித்ருகளுக்கும், கந்தர்வர்களுக்கும், அரசர்களுக்கும், பத்பனாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர் முதலான யதிஸ்ரேஷ்டர்களுக்கும், ஹரிதாசர்களான புரந்தர, விஜய முதலான தாச வர்க்கத்தவர்களுக்கும் ஒருமுகப்படுத்திய மனதுடன் வணக்கம் செலுத்துவேன். என்று தாரதம்யத்தின்படி ஸ்வோத்தமர் அனைவருக்கும், இந்த பத்யத்தில் நமஸ்காரங்களை செய்திருக்கிறார் ஸ்ரீதாசராயர். 

சிறப்புப் பொருள்:
’நாராயணம் நமஸ்க்ருத்ய’ என்னும் ஸ்லோகத்தில் சொல்லியபடி, தாரதம்யத்தின்படி ஸ்ரீமன் நாராயணனிலிருந்து ருத்ரர் வரை வணக்கங்களை சொல்லி, பிறகான இந்திராதி தேவதைகளை சொல்லி மனுஷ்யோத்தமர்களின் வரை இதில் நமஸ்காரங்களை சொல்கிறார். 

‘பாகஷாஸன முக்ய சகல திவௌகசரிகெ’ என்னும் வாக்கியத்தினால் பாகஷாசன என்றால் இந்திரன். இந்திரன் முதலான தேவதைகள் என்றால் - இந்திர காமன், அனிருத்த, ரதி, மனுகுரு, தக்‌ஷ, ஷசி, ப்ரவஹ, யம, ஷதரூபா, சந்திர, சூர்ய, வருணன் வரைக்குமான அனைத்து தேவதைகளுக்கும் வணக்கங்களை செலுத்துகிறார் என்று பொருள். 

ரிஷிகளிகெ என்று சொல்வதால் - நாரதர், ப்ருகு, அக்னி, ப்ரஸூதி, விஷ்வாமித்ர, மரீசி ஆகிய பிரம்மதேவரின் மகன்களும், புஷ்கரன் என்னும் கர்மஜதேவதையும், அஜானஜ என்னும் தேவதைகளும் என அனைவரையும் எடுத்துக் கொள்ளவேண்டும். 

அஜானஜர் என்றால் தேவகுலத்தில் பிறந்து, தத்வங்களுக்கு அபிமானியாகாமல், சோமபானத்திற்கு தகுதி பெறாமல் இருக்கும் தேவதைகள். தும்புரு முதலான முக்கிய கந்தர்வர்கள் 100 பேர், நாரதர் முதலான உசத்யர் வரைக்கும், மேலே தாரதம்யத்தில் சொல்லப்பட்டிருக்கும் ரிஷிகளை விட்டு வேறு ரிஷிகள் இவர்கள் அனைவரும் அஜானஜர் என்று அழைக்கப்படுகிறார்கள். ரிஷி என்றால் இவர்கள் அனைவருமே ஆவர். 

பித்ருகளிகெ என்றால் பித்ரு கணங்களில் சில கணங்கள் உத்தம கணங்கள் என்று சொல்லப்படுகின்றன. (இந்த தாரதம்யத்தின் மேலதிக தகவல்கள் ‘ப்ருஹத் தாரதம்ய சந்தி’யில் வருகிறது). அந்த பித்ருகளை விட்டு மிச்ச பித்ரு கணங்களை இங்கு எடுத்துக் கொள்ளவேண்டும். கந்தர்வ என்னும் சொல்லால் அஜானஜரில் சேர்ந்த தும்புரு முதலான முக்கிய கந்தர்வர்களை விட்டு மிச்ச கந்தர்வர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். க்‌ஷிதிபர் என்றால் ப்ரியம்வ்ரதாதி உத்தமாதிகாரிகளைத் தவிர மிச்ச அரசர்களை, மனுஷ்யோத்தமர்கள் வரை எடுத்துக் கொள்ளவேண்டும். இதுவரை சொல்லியவர்கள் அனைவருக்கும் வணக்கங்களை சொல்லி, குரு பரம்பரையை வணங்குகிறார் தாசராயர். 

‘ஆ கமலனாபாதி யதிகள நீககா நமிஸுவெனு’ என்று ஸ்ரீமதாசார்யரின் நேரடி சிஷ்யர்களான பத்பனாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், மாதவ தீர்த்தர், அக்‌ஷோப்ய தீர்த்தர் என்ற நான்கு யதிகளையும், இவரின் பரம்பரையில் வரும் டீகாராயர் (ஜயதீர்த்தர்), ஸ்ரீபாதராஜர், வியாசராஜர், வாதிராஜர், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் ஆகிய யதிகளை வணங்குகிறார் என்று அறியவேண்டும். தமக்கு வியாசகூடத்தினவர் மேல் அபிமானம் இருக்கிறது என்பதையும், வியாசகூடத்தவரகளுக்கும், தாசகூடத்தவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்பதையும், தற்போது பேதங்களை சொல்பவர்கள் அஞ்ஞானிகள் என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுமாறு, வியாசகூடத்தவர்களுக்கு முதலில் நமஸ்காரங்களை சொல்லி பிறகு தாசவர்க்கத்தவர்களுக்கு நமஸ்காரங்களை செய்கிறார். 

‘பிடதெ ரமாகளத்ரன தாசவர்கக்கெ நமிபெ நனவரத’ என்று ‘ரமாகளத்ரன’ என்று பரமாத்மன் கிருஹஸ்தாஸ்ரமியாக, ஜகத்குடும்பியாக சொல்லியாயிற்று. பகவத் தாசர்களில் பரமாத்மனுக்கு அதிக ப்ரீதி இருக்கிறது என்பதை ‘ரமாகளத்ரன’ என்று சொல்லி விளக்கியாயிற்று. ‘நாஹம்வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே ரவௌ | மத்பக்தா யத்ரகாயந்தி தத்ரதிஷ்டாமி நாரத’. ’ஹே நாரத ! நான் வைகுண்டத்திலோ அல்லது இதயங்களில் மட்டுமே இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். என் பக்தர்கள் எங்கெங்கெல்லாம் பாடிக்கொண்டிருக்கிறார்களோ, அங்கு நான் எப்போதும் நிலைத்திருக்கிறேன்’ என்று பரமாத்மன் சொல்லியிருக்கிறார். இந்த பகவத் வாக்கியமானது, பரமாத்மனுக்கு தாசர்களில் இருக்கும் அன்பினை எடுத்துக் காட்டுகிறது. தாசவர்கக்கெ என்னும் சொல்லினால், புரந்தரதாசர், விஜயதாசர், பாகண்ணதாசர் என்று ஜகன்னாததாசரைவிட உத்தமர்களான தாசவர்கத்தினவருக்கு நமஸ்காரங்களை சொல்கிறார் தாசராயர். 

இப்படி முதல் சந்தியின் நோக்கத்தினை சொல்லும்போதே பார்த்த, முக்திக்கு முக்கிய காரணங்களான பஞ்சபேத, தாரதம்ய, 24 தத்வங்களை சொல்லி, தற்போது சந்தியை முடித்தவாறு, மங்கள ஸ்தோத்திரமாக தம் அந்தர்யாமியான பிம்பரூபி ஸ்ரீஜகன்னாதவிட்டல நாமக ஸ்ரீபரமாத்மனை வணங்குகிறார்.

***


No comments:

Post a Comment