#1 - கருணா சந்தி
சந்தியின் நோக்கம்:
முதலாம் சந்தியில் மங்களாசரணம் செய்தவாறு மத்வ சித்தாந்தத்தின்படி, முக்திக்கு முக்கிய சாதனைகளான பஞ்சபேத, தாரதம்யங்களை அறிந்து, ஹரி சர்வோத்தமத்வம் என்பதை அறிந்து உபாசனை செய்யவேண்டும் என்னும் விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தியில், பரமாத்மன், அவதார மற்றும் மூல ரூபங்களால், பக்தர்களில் எவ்வளவு கருணையைக் காட்டுகிறார் என்பதை தெரிவிக்கிறார். இந்த விஷயங்களை பாரத பாகவதாதி கிரந்தங்களில் இதிகாச ரூபங்களாக மிகவும் விளக்கமாக சொல்லப்பட்டவையே ஆகும். அவை அனைத்தும் மிகவும் விளக்கமான கிரந்தங்களாகையால், ஒவ்வொரு சம்பவங்களையும் படித்து, பரமாத்மனின் கருணை நம் மேல் எவ்வளவு அதிகம் இருக்கிறது என்பதை அறிவதற்கு நம் இந்தப் பிறவி போதாது. ஆகையால், உலகத்திற்கு நன்மை செய்யவேண்டும் என்பதாலேயே தாசராயர், பாரத, பாகவதாதிகளில் பக்தர்கள் பரமாத்மனிடமிருந்து பெற்றிருக்கும் கருணையை, அதன் சிறப்பு அம்சங்களை மட்டும் எடுத்து, தாசராயர் கருணா சந்தி என்னும் இந்த சந்தியை இயற்றியிருக்கிறார். இந்த சந்தியின் முதலாம் ஸ்லோகத்தில், இந்த சந்தியின் நோக்கத்தை, கதா ஸ்ரவணத்தின் நற்பலன்களை விளக்கியிருக்கிறார்.
ஸ்ரவண மனனானந்த3வீவுது3
ப4வஜனித து3க்க2க3ள க1ளெவுது
விவித4 போ4க3வ னிஹபரங்களலித்து சலஹுவுது3 |
பு4வனபாவன நெனிப லகுமி
த4வன மங்க3ள க1தெ2ய பரமோ
த்ஸவதி3 கி1விகொ3ட்டாலிபுது3 பூ4சுரரு தி3னதி3னதி3 ||1
ஸ்ரவண = பகவத்கதையைக் கேட்பது
மனகெ = மனதிற்கு
ஆனந்தவ = மகிழ்ச்சியை
ஈவுது = கொடுப்பது
பவஜனித துக்ககள = பவ = சம்சார சம்பந்தத்தை. ஜனித = அதிலிருந்து வரும். துக்ககள = பிறப்பு இறப்பு சுழற்சியை
களெவுது = பரிகரிக்கும்
இஹபரங்களலி = இந்த பூலோகத்திலும் பரலோகத்திலும் கூட
விவித போகங்கள = பற்பல விதமான சுகங்களை
இத்து = கொடுத்து
சலஹுவுது = காப்பாற்றும்
புவனபாவனனெனிப = உலகத்தில் பவித்ரமானவன் என்றிருக்கும்
லகுமிதவன = லட்சுமிபதியின்
மங்கள கதெய = பரம மங்களமான கதையை
பரமோத்ஸவதி = மிகுந்த மகிழ்ச்சியுடன் (மரியாதையுடன்)
கிவிகொட்டு = ஸ்ரவண இந்திரியத்தை வேறு எந்த விஷயத்திலும் ஈடுபடுத்தாமல், ஒருமனத்துடன் இதற்கு காது கொடுத்து
பூஸுரரு = பிராமணர்கள்
தினதினதி = தினந்தோறும்
ஆலிபுது = கேட்கவேண்டும்.
பொருள்:
பரமாத்மனின் கதைகளைக் கேட்கும்போது பேரானந்தம் ஆகிறது. நவகாதம்பரிகளை (நவீன நாவல்களை) படிக்கும்போதுகூட மகிழ்ச்சியே ஆகிறது. அதனால் என்ன என்று கேட்டால், அதில் கர்ணானந்தம் (கேட்கும் மகிழ்ச்சி) மட்டுமே ஆகும். இதில் சம்சாரத்திலிருந்து விடுதலையும் ஆகிறது. இதுமட்டுமல்லாமல், அனைத்து துக்கங்களையும் பரிகரித்து பரலோகத்திலும் பற்பல விதமான போகங்களைக் கொடுத்து சுகத்தையும் கொடுக்கிறது. ஆகையால், இத்தகைய லோகபாவனனான, ஸ்ரீரமாபதியின் மங்கள கதையை மிகுந்த மகிழ்ச்சியுடன் பக்தர்கள் அனைவரும் கேட்கவேண்டும்.
சிறப்புப் பொருள்:
இந்த பதத்தை, சந்தி சூசனை (சந்தியின் நோக்கத்தை சொல்லும் பதம்) என்று சொல்வதால், இந்த சந்தியில் சொல்லப்போகும் விஷயத்தின் சாரத்தை இதில் அடக்கியிருக்கிறார் தாசராயர் என்று சொல்லவேண்டும். அது என்ன? பகவத் கதையைக் கேட்பதால், துக்கங்கள் பரிகாரமாவதுடன், இஹபரங்களில் பரம சுகங்கள் உண்டாகின்றன. முக்கியமாக, பகவத்பக்தர்கள் பரமாத்மனின் கதைகளைக் கேட்டு உண்மையான ஞானத்தினால் அவனை ஆராதித்தால், அவன் அவர்களுக்கு பரமானுக்கிரகம் செய்து இஹபரங்களில் சுகங்களைக் கொடுக்கிறான் என்னும் விஷயத்தையே சொல்லியிருக்கிறார். ஆகையால், இந்த பதத்திற்கு சந்தி சூசனை என்று சொல்வது நியாயமே என்று அறியவேண்டும்.
மேலும் இந்த சந்தியில் பாரதாதி கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கும் கதைகளையே சொல்லியிருக்கிறார். பாரதம் முழுக்கவும் படித்தால் நமக்கு என்ன பலன் கிடைக்குமோ அதுவே கிடைக்கும் என்கிறார். அது எப்படி என்று யோசிப்போம்.
முதன்முதலில், பாண்டவர்கள் வனத்தில் பிறந்து, குந்திதேவியுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்ரீபரமாத்மனே கதி என்று நினைத்து வணங்கியபோது, வியாசரூபியான பரமாத்மனே அவர்களுக்கு தரிசனம் தந்து, அவர்களை ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்து வந்து அருளினார். பிறகு, காண்டவ வனத்தின் தகனம் சமயத்திலும், திரௌபதி வஸ்திர அபஹரண சமயத்திலும், வனவாசத்திலும், அஞ்ஞான வாசத்திலும், போர் காலத்திலும் பக்தவஷ்யனன ஸ்ரீபரமாத்மன், ஸ்ரீகிருஷ்ண ரூபத்தினால் பாண்டவர்களுக்கு நண்பனாக இருந்து, தூதனாக இருந்து, உறவினனாக இருந்து, சாரதியாக இருந்து அவர்களை காப்பாற்றிய கதைகளின் முக்கிய சாராம்சம் என்ன? பரமாத்மன் தன் பக்தர்களை எந்த காலத்திலும் எல்லா விதங்களிலும் காப்பாற்றுவான் என்பதுதானே? பாகவதத்தைப் பாருங்கள்.
த்ருவ, பிரகலாதன், அம்பரீஷ, முசுகுந்த ஆகியோரின் கதைகளிலும், ஸ்ரீபரமாத்மனின் மத்ஸ்ய, கூர்ம, ராம, கிருஷ்ணாதி அவதார சரித்திரங்களிலும் நமக்குத் தெரியும் செய்தி என்ன? ஸ்ரீபரமாத்மன் கருணைக்கடல், பக்தர்களை மேம்படுத்துபவன் என்றுதானே தெரிகிறது? இவை அனைத்தையும் யோசித்து தாசராயர், பாரத, புராணங்கள் அனைத்தும் 4 லட்சம் கிரந்தங்கள். இவை அனைத்தையும் படித்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதை தாசராயர் இந்த கருணா சந்தியிலேயே அடக்கியிருக்கிறார்.
த்ருவாதி சரித்திரங்களைக் கேட்டு அவற்றிலிருந்து தெரியவேண்டிய முக்கிய கருத்துக்களை புரிந்துகொள்ளாவிடில், சாதாரண காதம்பரிகளைக் கேட்டு மகிழ்ச்சியடைவதைப் போலவே ஆகுமே தவிர, அதிலிருந்து நற்பலன் என்ன கிடைக்கும்? ஆகையால், நற்கதைகளின் சாராம்சத்தை புரிந்து கொள்ளவேண்டும். த்ருவனின் சரிதையைக் கேட்டால் நமக்கு புரியவேண்டிய கருத்து என்ன? ஆஹா. ஐந்து வயதுக் குழந்தை, தாய் தந்தைகளை விட்டு வனத்திற்குச் சென்று, பரமாத்மனைக் குறித்து தவம் செய்து, வெறும் 4 மாதம் அவன் செய்த தவத்தில் மெச்சி, பரமாத்மன் காட்சியளித்து, இங்கு 36,000 ஆண்டுகள் அரச பதவியையும், பரத்தில் த்ருவலோகாதிபத்யத்தையும் கொடுத்தான். இதிலிருந்து நாம் அறியவேண்டிய கருத்து என்ன? பகவந்தனை பக்தியுடன் யார் வணங்கினாலும், கருணா சமுத்திரனான ஸ்ரீஹரி, அவரை காப்பாற்றுவான். இந்த கருணா ரசத்தையே இந்த சந்தியில் சொல்லியிருப்பதால், இந்த சந்திக்கு ‘கருணா சந்தி’ என்றே பெயர் வைத்தார் தாசராயர்.
இந்த சந்தியை கேட்டாலும்கூட மிகச்சிறந்த பலன் கிடைக்கும் என்பதை குறிப்பதற்காக, முதல் பத்யத்தில் ஸ்ரவணத்தின் பலனை சொல்கிறார். ஸ்ரவணத்தினால் இந்த கலியுகத்தில் கிடக்கும் பலன்களானது, வேறு எதை செய்தாலும் கிடைக்காது என்பது தாசராயரின் அபிப்பிராயம். ஆனால், இந்த அபிப்பிராயம், வியாசகூடத்தவரின் கருத்துக்கு எதிர்மறையானது என்று சொல்லக்கூடாது. வியாச வாக்கியமும் இதையே சொல்கிறது. பாகவத 12ம் ஸ்கந்தத்தில்
யஷ: ஸ்ரீயாமேவ பரிஸ்ரம: பரோவர்ணாஸ்ரமாசாரதப: ஸ்ருதாதிஷு |
அவிஸ்ம்ருதி: ஸ்ரீதரபாதபத்ம யோகானுவர்ணானுவாத ஸ்ரவணாதிபிர்ஹரே: ||
அவிஸ்ம்ருதி: கிருஷ்ணபதாரவிந்தயோ: க்ஷிணோத்யபத்ராணி ஷமந்தனோதிச: |
ஸத்வஸ்ய ஷுத்திம்பரமாஞ்ச பக்திம் ஞானஞ்ச விஞான விராகயுக்தம் ||
என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால்:
மனிதர்கள் வர்ணாசிரம தர்மங்களை பின்பற்றுவதாலும், தவத்தினாலும், த்ருவன் முதலானவர்களின் சரித்திரங்களை அடக்கிய பாகவதங்களின் சாராம்சங்களை அறியாமல், வெறும் ஸ்ரவணாதிகளை செய்வதால் வரும் பலன் என்னவென்றால்: உலகத்தில் இவர் பெரியவர். தன் ஸ்னான, ஜப, தப, ஆகியவற்றை செய்துகொண்டு இருக்கிறார் என்னும் நற்பெயரும், தான் தானத்தை இவருக்கே கொடுக்கவேண்டும் என்று கிருஹ தானம், பூமி தானம், கோ-தானம் ஆகியவை இவர்களுக்குக் கிடைப்பதே இதற்கான பலன். அதாவது, வர்ணாசிரம தர்மங்களை பின்பற்றுவதால், புகழும் செல்வமும் கிடைக்கும் என்பது அர்த்தம்.
ஸ்ரவணம் செய்யும்போது, அதன் கருத்துக்களையும் அறிந்து, மகாத்ம்ய ஞானத்துடன், பகவந்தனின் ஸ்மரணையையும் செய்தது போலாயிற்று. இந்த செயல், இந்த உலகத்தில் வரும் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கி, பர லோகத்தில் சுகங்களைக் கொடுத்து, ஞான பக்தி வைராக்கியங்களை அதிகரித்து, முக்திக்கு வழிகாட்டுகிறது என்பதே அந்த பாகவத ஸ்லோகத்தின் தாத்பர்யம் ஆகும். இதையே தாசராயர், மிக ஆணித்தரமாக இந்த முதல் பத்யத்தில் சொல்கிறார்.
பாகவதம் சொல்கிறவர்கள் அதில் வரும் ஒவ்வொரு கதையையும் சொல்லி முடித்தவுடன், அதன் பலனையும் சொல்பவராக இருக்கவேண்டும். ஆனால், பலர் அப்படி சொல்வதில்லை. ஒருவேளை அப்படி அவர் அந்த பலன்களை சொன்னாலும், அங்கு அமர்ந்து கேட்பவர்கள் அனைவரும் அதை புரிந்துகொண்டனர் என்று சொல்வதற்கில்லை. ஒரு சிலரே அந்த பலன்களை புரிந்து கொள்வர். பலர் புராணம் முடிந்தவுடன், வீட்டுக்குப் புறப்பட்டுப் போவதிலேயே குறியாக இருப்பர். நாம் தினம் பார்க்கும் காட்சி இதுவே. ஆகவே, தாசராயர், இவை அனைத்தையும் அறிந்து, சிந்தித்து, அந்த நற்பலன்களையெல்லாம் எடுத்து இந்த கிரந்தத்தில் இயற்றியிருக்கிறார்.
இத்தகைய மிகப்பெரிய உபகாரத்தை செய்து, மக்களை மேம்படுத்திய மகானுபாவரான நம் தாசராயரை எவ்வளவு கொண்டாடினாலும் அது போதாது. முதல் பத்யத்தில், சந்தி சூசனையைக் கொடுத்து, சிரவணத்தின் மகிமைகளை புரியவைத்து, இந்த கிரந்தத்தை தாம் பேசுமொழியில் செய்திருப்பதால், மகாத்மர்கள் இதை உதாசீனம் செய்யக்கூடாது என்று சொல்லி, அவசியமாக இந்த கிரந்தம் பார்க்கத்தக்கது (படிக்கத்தக்கது) என்று இதன் மகிமைகளை தெரியப்படுத்தியிருக்கிறார்.
***
No comments:
Post a Comment