ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, February 13, 2020

#7 - கருணா சந்தி

#7 - கருணா சந்தி

பரமசத்1 புருஷார்த்த2 ரூபனு
ஹரியு லோக1க்கெ1 யெந்து பரமா
3ரதி3 சது3பாசனெய கை3வரிகித்தப1னு தன்ன |
மரெது3 தர்மார்த்தக3ள காமிஸு
வரிகெ3 நகு31தி ஷீக்ரதிந்தலி
சுரபத1னய சுயோத4னரிகித்தந்தெ கொடு3திப்ப ||7

ஹரியு = ஸ்ரீபரமாத்மன்.
லோககெ = உலகத்திற்கு.
பரம சத்புருஷார்த்த ரூபனு = அத்யந்த சுகங்களான மோக்‌ஷாதி புருஷார்த்தங்களைக் கொடுக்கக்கூடிய ஸ்வதந்த்ர ஸ்வரூபத்தைக் கொண்டவன், என்று
பரமாதரதி = மிகுந்த பக்தியுடன்
ஸதுபாசனெய = எந்தவொரு பலன்களையும் எதிர்பார்க்காமல் வெறும் பகவத்ப்ரீதிக்காகவே உபாசனைகளை
கைவரிகெ = செய்பவர்களுக்கு
தன்ன = தன்னை எப்போதும் பார்க்கக்கூடியதான உலகத்தை, அதாவது முக்தியை
இத்தபனு = கொடுக்கிறான்.
தன்ன = தன்னை
மரெது = மறந்து
தர்மார்த்தகள = தர்ம = யாகாதி தர்மங்களினால் ஆகும். அர்த்தகள = பலரூபமான சுகங்களை மட்டும்
காமிஸுவவரிகெ = விரும்புபவர்களுக்கு
அதி ஷீக்ரதிந்தலி = மிக விரைவாக
சுரபதனய சுயோதனனிகெ = சுரபதனய = இந்திரனின் மகனான அர்ஜுனனுக்கும். சுயோதனனிகெ = துரியோதனனுக்கும்
இத்தந்தெ = கொடுத்ததைப் போல
கொடுதிப்ப = கொடுப்பான்.

ஸ்ரீபரமாத்மன் ஸ்வதந்த்ரன். ரமா பிரம்மாதி சராசரர்கள் நிறைந்த உலகத்திற்கு அதிபதி. அனைத்து சேதனர்களுக்கும் தர்ம, அர்த்த, காம, மோக்‌ஷ என்னும் நான்கு புருஷார்த்தங்களைக் கொடுப்பவன். அனைத்து பிராணிகளும் அவனின் அதீனமே என்று அறிந்து, உபாசனை செய்பவர்களுக்கு மோட்சத்தைக் கொடுத்து அருள்கிறான். பரமாத்மனை மறந்து, வெறும் தர்மங்களை செய்து, அதற்கான பலன்களை விரும்புபவர்களுக்கு, அர்ஜுன துர்யோதனர்களுக்கு கொடுத்ததைப் போல, அவர்களுக்கேற்ற பலன்களை மிகவும் விரைவாகக் கொடுக்கிறான். 

சிறப்புப் பொருள்:

ததர்த்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர |
கர்மண்யேவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசன ||
மாகர்ம பல ஹேதுர்பூ மாதே சங்கோஸ்த்வ கர்மணி ||

என்னும் கீதா வாக்கியத்தைப் போல, பலன்களை விரும்புவதை விட்டு, கர்மங்களை செய். ஹே அர்ஜுனா! செயல்களை செய்வதற்கு மட்டுமே உனக்கு அதிகாரமே தவிர, பலன்களைப் பெறும் சுதந்திரம் இல்லை. (பலன்களைக் கொடுக்கும் அதிகாரம் பரமாத்மனுடையது மட்டுமே என்று பொருள்). ஆகையால், கர்மத்தின் பலனுக்கு நீயே அதிகாரி என்று நினைக்காதே. அப்படியெனில், கர்மங்களையே செய்யவேண்டியதில்லை என்று விடக்கூடாது - என்று ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறான். இது போல, பலன்களை விரும்பாமல் கர்மங்களை செய்வதற்கு, நைஷ்கர்ம்ய என்று பெயர். இத்தகைய நிஷ்காம கர்மானுஷ்டானங்களிலிருந்தே முக்தி ஆகிறது என்பது கீதா வாக்கியத்தின் பொருள். 

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் கீதாவிவ்ருத்தி என்னும் வியாக்யானத்தில் இதன் அர்த்தத்தை, அபிப்பிராயத்தை, உபாசனா கிரமத்தை நன்கு விளக்கமாக சொல்லியிருக்கிறார். இடம் அதிகமாகிவிடும் என்பதால் அவற்றை இங்கு எழுதுவதற்கு சாத்தியமில்லை. 

பாகவத முதலாம் ஸ்கந்தத்தில் ‘நைஷ்கர்ம்யமப்யச்யுத பாவ வர்ஜிதம் நஷோபதே ஞானமலம் நிரஞ்சனம்’ நிஷ்காம கர்மானுஷ்டானங்களையே செய்துகொண்டிருந்தாலும், அதிலிருந்து கிடைத்த ஞானம் தெளிவான ஞானமாக இருந்தாலும், பரமாத்மனில் திடமான பக்தி இல்லையெனில், அந்த தெளிவான ஞானமும், நிஷ்காம கர்மமும் முக்திக்கு வழியாகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், பக்தியில்லாமல் செய்யப்படும் செயல்கள் தக்க பலன்களைக் கொடுக்காது. பரமாத்மனை பரம பக்தியினால் உபாசனை செய்வதாலேயே முக்தி ஆகிறது என்பதை ‘பரம சத்புருஷார்த்த ரூபனு ஹரியு’ என்னும் வாக்கியத்தால் குறிப்பிடுகிறார். 

இதற்கான ஒரு அர்த்தம் மேலே சொல்லப்பட்டிருக்கிறது. இன்னொரு அர்த்தமும் இதற்கு உள்ளது. பரமசத்புருஷ = பரம பகவத் பக்தர்களுக்கு, அர்த்தரூபனு = செல்வம் கொடுப்பவன். அதாவது, பக்தர்கள் தாம் குசேலனைப் போல ஏழையாக இருந்தாலும், பரமாத்மனே நமக்கு செல்வம், அவனைவிட வேறு செல்வத்தை நாம் விரும்புவதில்லை என்பர். பாகவத 4ம் ஸ்கந்தத்தில் ‘ஹரிரதனாத்ம தனப்ரியோரஸக்ஞ:’ தன் பக்தர்களின் யோக்யதையை அறிந்த பரமாத்மன், அவர்கள் பரம ஏழையாக இருந்தாலும், தன்னையே செல்வம் என்று நினைப்பவர்கள் யாரோ - அதாவது, செல்வத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் அன்பைவிட அதிகமான அன்பு தன்னிடம் வைத்து, செல்வத்தை கல், மண் ஆகியவற்றைப் போல நினைப்பார்கள் என்று அர்த்தம். பரமாத்மன் அத்தகையவர்களில் அன்பு செலுத்துவான். இதனால், பரமாத்மனை ‘அதனாத்ம தனப்ரிய’ என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறார்கள். 

அதே அர்த்தத்தையே தாசராயர் ‘ஸத்புருஷார்த்தரூப’ என்று சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் பரமாத்மன் ஸ்வதந்த்ரன். ஜீவன் அஸ்வதந்த்ரன். பரமாத்மன் துக்கங்கள் அற்றவன். ஜீவன், ஜனன மரணாதி பற்பல துக்கங்களைக் கொண்டவன் என்று இதைப் போன்ற பல்வேறு வேறுபாடுகள் பரமாத்மன் மற்றும் ஜீவர்களிடையே இருக்கிறது என்றும், ரமாபிரம்மாதிகள் அனைவரும் பரமாத்மனின் அதினத்திலேயே இருக்கின்றனர் என்பதை அறிந்து, உபாசனை செய்வதே ஸதுபாசனை. இத்தகைய ஸதுபாசனையை செய்பவரகளுக்கு இஹபரங்களில் பரமாத்மன் தன் தரிசனத்தை கொடுக்கிறான். 

முந்தைய பத்யத்தில் சொன்ன ‘தனுவ தண்டிஸி தினதினதி சாதனவ மாள்பரிகித்தபனு ஸ்வர்க்காதி போககள’ என்னும் வாக்கியத்திலும் ‘பரம சத்புருஷார்த்த ரூபனு ஹரி’ என்று உபாசனை செய்பவர்களுக்கு தன் தரிசனத்தை எப்போதும் கொடுக்கிறான் என்னும் அர்த்தத்தினாலும் அறியவேண்டிய அர்த்தம் என்னவெனில் : தேகத்தை தண்டித்து தவம் செய்வது, நித்யமான பலன்களுக்கு அல்ல. ஏனெனில், எந்த நோக்கத்திற்காக அவன் தவம் செய்கிறானோ, அந்த வரத்தைப் பெற்ற உடனேயே அந்த தேக தண்டனையை / தவத்தை நிறுத்தி, தன் விஷய போகங்களில் ஈடுபட்டுவிடுகிறான். அப்படியில்லாமல், எந்நேரமும் மனதை பரமாத்மனிடமே வைத்து, தான் ஸ்னானம் செய்வது பகவத்சேவா, எழுவது, அமர்வது, பேசுவது என அனைத்தும் பகவத் சேவை என்றே சிந்தித்து, எப்போதும் அவனை நினைத்திருப்பவர்களுக்கு நித்யமான பலன் கிடைக்கிறது. 

ஏதத்ஸம்ஸூசிதம் ப்ரம்மன் தாபத்ரய சிகித்ஸிதம் |
யதீஷ்வரே பகவதி கர்மப்ரம்மணி பாவிதம் ||
ஆமயொயஞ்ச பூதானாம் ஜாயதே யேன சுவ்ரத |
ததேவஹ்யாமயத்வர்யம் தத்புனாதி சிகித்ஸிதம் |
ஏவம் ந்ருணாம் க்ரியா யோகா: சர்வே சம்ஸ்ம்ருதி ஹேதவ: |
த ஏவாத்ம வினாஷாய கல்பந்தே கல்பிதா: பரே ||

பாகவத முதலாம் ஸ்கந்தத்தில் நாரதர் ஸ்ரீவேதவியாசரைக் குறித்து சொல்வது: ஹே பிராமணோத்தமரே! என் அனுபவத்தினால் எனக்குத் தெரிந்த விஷயம் என்னவெனில், நாம் செய்யும் அனைத்து கர்மங்களையும் பகவத் சேவையென்று நினைப்பதே நம் கஷ்டங்களுக்கான மருந்து. மனிதனைக் கொல்லக்கூடிய விஷங்களை நன்றாக சுத்தம் செய்து, மாத்திரைகளாக்கி, பெரிய நோய்களுக்கு அவற்றையே மருந்தாக மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். அதுபோலவே, தேக சுகத்திற்காக நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நரகத்திற்கே சாதனமாகின்றன. அதே செயல்களை, பகவத்சேவை என்று நினைத்து செய்தால், சுத்தம் செய்த விஷ மருந்துகளைப் போல, பவரோகத்தை பரிகரித்து முக்தியைக் கொடுக்கவல்லதாகும். 

அது எப்படியெனில், நாம் ஸ்னானம் செய்யும்போது, தேகத்தை சுத்தம் செய்வதற்காக குளிக்கிறோம் என்று நினைக்காமல், தேகமானது பரமாத்மன் வசிக்கும் ஒரு ரதம் என்றும், அந்த ரதத்தை சுத்தம் செய்வதற்காக குளிக்கிறோம் என்று நினைத்தால், அதுவே முக்திக்கு சாதனையாகும். போலவே, தேகத்தை அலங்கரிப்பது, மக்கள் நம்மை புகழ்வதற்கு என்று நினைத்தால், அது நரக-சாதனை. பகவந்தன் அமரும் ரதமாகையால், பரமாத்மனை மகிழ்விப்பதற்காக ரதத்தை அலங்கரிக்கிறேன் என்று நினைத்தால் அது முக்தி-சாதனை. பக்‌ஷ்ய-போஜனங்களை தனக்காக செய்தால், அது நரக-சாதனை. அதே பக்‌ஷ்யாதிகளை, பரமாத்மனின் நிவேதனைக்காக என்று எண்ணி செய்தால், பரமாத்மன் மகிழ்ச்சியடைந்து அது முக்திக்கு சாதனையாகிறது. 

இப்படி, தான் செய்யும் ஒவ்வொரு செயல்களும் சுகத்திற்காக என்று நினைத்தால், அது நரகத்திற்கே சாதனையாகும். அதையே பகவத் ப்ரீத்யர்த்தமாக செய்தால், அது முக்திக்கு சாதனையாகிறது. இதுவே நாரதரின் வாக்கியத்திற்கு அர்த்தமாகும். இதற்கு உதாரணம், த்ருவன் மற்றும் பிரகலாதனுக்குமிடையே இருக்கும் வேறுபாடுதான். 

த்ருவன் ஐந்து மாதங்கள் தன் தேகத்தை தண்டித்து மிகவும் கஷ்டமான தவத்தினை செய்தான். பரமாத்மன், அவனுக்கு பிரத்யட்சம் ஆகி, 36,000 ஆண்டுகள் வரை பூமியை ஆள்வதற்கும், அதற்குப்பிறகு த்ருவ லோகத்தின் அதிபதியாகவும் நியமித்து வரமளித்தான். த்ருவஸ்தானமானது, ஸ்வர்க்க லோகத்தைவிட கீழான இடமாகும். 5 மாதங்கள் தவத்திற்குப் பிறகு பரமாத்மன் தரிசனம் அளித்து, என்ன வரம் கொடுத்தாரோ அதுவே அதற்குப் பலன். மறுபடி அவனுக்கு பகவத் தரிசனம் இல்லை. ஆனால், பிரகலாதன் இத்தகைய தேக தண்டனையினால் தவம் எதுவும் செய்யவில்லை. 

ஆஸீன: ப்ரயடன்னஸ்னன் ஷயான ப்ரபிபன் ப்ருவன் | 
நாம ஸந்தத ஏதானி கோவிந்த பரிரம்பித: ||

அமர்ந்திருக்கும்போதும், சஞ்சரிக்கும்போதும், படுத்திருக்கும்போதும், குடிக்கும்போதும், பேசும்போதும் என எப்போதும் கோவிந்தனிடம் மனதை வைத்து, மெய்மறந்து, தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்று தனக்கே தெரியாமல் இருந்தான். அவனுக்கு இஹத்தில் (பூமியில்) ஒரு மன்வந்தர காலத்திற்கு ஆயுளையும், அரசாட்சியையும் கொடுத்து, அதன்பிறகு, முக்தியைக் கொடுத்தான். இந்த உலகத்தில் ஒரு மன்வந்தர காலம் ஆயுளைக் கொடுத்தாலும், த்ருவனைப் போல அவனுக்கு பகவத் தரிசனம் இல்லாமல் இல்லை (அதாவது எப்போதும் இருந்தது). வாமன ரூபியான பரமாத்மனை எப்போதும் பார்த்திருந்தான். இந்த விஷயத்தில் த்ருவ, பிரகாலத இருவர் மட்டுமே இந்த உதாரணத்திற்கு பொருந்துகின்றனர் என்று நினைக்கக்கூடாது. 

த்ருவனைப் போலவே தேகத்தை தண்டித்து, பிரம்மதேவரை, ருத்ரதேவரை, விஷ்ணுவைக் குறித்து தவம் புரிந்த ராவணன், ஹிரண்யகசிபு முதலான பலர் வரங்களைப் பெற்ற கதைகளைக் கேட்டால் இந்த விஷயம் புலப்படுகிறது. மேலும், சுதபஸ் என்பவன் தேவமானத்தினால் 12,000 ஆண்டுகள் தவம் செய்து, ப்ருத்னிகர்ப்ப என்னும் புத்ரனைப் பெற்றார். அந்த மகன் பரமாத்மனின் அவதாரமே ஆகும். ஆனாலும், அவரை பஜிக்கவில்லை. இந்த தம்பதிகளே அடுத்த பிறவியில் கஸ்யப - அதிதிகளாகப் பிறந்து கடினமான பயோ-விரதத்தை செய்து வாமனரூபியான பரமாத்மனை மகனாகப் பெற்றனர். அப்போதும் அவரை அவதாரமாகப் பார்க்காமல், புத்ர பாசத்தில் இருந்துவிட்டதால், அவர்களே மறுபடி வசுதேவ தேவகியாகப் பிறந்தனர். அந்தப் பிறவியிலும் பரமாத்மனிடம் த்ருடமான பக்தி வந்தபிறகே, அவர்களுக்கு முக்தி கிடைத்தது. 

விஸ்வாமித்திரர் கடுந்தவம் புரிந்து பிரம்மரிஷி ஆனார். இத்தகைய உதாரணங்கள் பல இருக்கின்றன. நாரதர், அம்பரீஷ, பிரகலாதன் ஆகியோர் வெறும் பக்தியினாலேயே, அதாவது கடுந்தவம் முதலான தேகத்தை தண்டிக்கக்கூடிய செயல்களை செய்யாமலேயே பரமாத்மனின் தரிசனத்தைப் பெற்ற கதைகளைக் கேட்டால், இதன் அர்த்தம் மேலும் தெளிவாகப் புரிகிறது. பரிக்‌ஷித் ராஜன் வெறும் ஸ்ரவண, மனனத்தினாலேயே முக்தியை அடையவில்லையா? இவற்றையெல்லாம் உத்தேசித்தே தாசராயர், தேகத்தை தண்டித்து சாதனை செய்பவர்களுக்கு ஸ்வர்க்காதி போகங்களையும், ஹரியை சத்புருஷார்த்தன் என்று பஜிப்பவர்களுக்கு தன்னையே கொடுக்கிறான் என்றும் கூறுகிறார்.

இப்படியாக, பரமாத்மன், முக்தியைக் கொடுப்பவன் என்பதை மறந்து ‘தர்மார்த்தகளனு காமிஸுவவரிகெ’ - அதாவது, யாக தானாதி தர்மங்களை செய்பவர்களுக்கு வரும் பலன் என்ன? ஐஸ்வர்யாதி சுக, செல்வங்கள் கிடைக்குமா? அதை மட்டுமே வேண்டுபவர்களுக்கு, சிரித்தவாறு (அதாவது, குபேரனிடம் சென்று ஏழை ஒருவன் ஒரு வேளை உணவிற்கு காசு கேட்பதைப் போல, முக்தியைக் கொடுக்கக்கூடிய தன்னிடம், இப்படி தற்காலிகமான பலன்களைக் கேட்கிறானே என்று சிரித்தவாறு), மிக விரைவாக துரியோதனனுக்கு பலன்களைக் கொடுத்ததைப் போல கொடுப்பான். 

தர்மாத்தங்களைக் கேட்காமல், உன் அருளே எனக்கு வேண்டும் என்று கேட்பவர்களுக்கு, இந்திரனின் மகனான அர்ஜுனனுக்கு கொடுப்பதைப் போல கொடுப்பான் என்கிறார் தாசராயர். ‘சுரபதனய சுயோதனரிகித்தந்தெ கொடுதிப்ப’ என்கிறார். பாரதத்தில் உத்யோக பர்வத்தில் வரும் ஒரு சம்பவத்தை இது நமக்கு தெரிவிக்கிறது. அது என்னவெனில்:

பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞான வாசத்தை முடித்து, விராடராஜனின் பட்டணத்தில் அபிமன்யுவின் திருமணத்தை முடித்துக்கொண்டு, உபப்லாவ்ய பட்டணத்தில் வசித்திருந்தபோது, தம் பாகமான நிலத்தை துரியோதனன் கொடுக்கப்போவதில்லை என்றும், தமக்கும் துரியோதனாதிகளுக்கும் போர் உண்டாகப்போவது நிச்சயம் என்று அறிந்தபிறகு, அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணனை போருக்கு உதவுமாறு அழைப்பதற்காக துவாரகைக்குப் புறப்பட்டான். இதை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த துரியோதனன், அர்ஜுனனுக்கு முன்னர் தானே ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டு அவன் உதவியைப் பெறவேண்டும் என்று நினைத்து, உடனடியாக துவாரகைக்குப் புறப்பட்டான். இந்த இருவரும் ஒரே சமயத்தில் புறப்பட்டாலும், தந்திரனனான துரியோதனன் தானே முதலில் அங்கு போய் சேரவேண்டும் என்று தன் ரதத்தை மிகவும் விரைவாக செலுத்தி துவாரகைக்கு வந்து சேர்ந்தான். இவர்கள் இருவரும் ஒரே நோக்கத்துடன் தன்னைக் காண வருகிறார்கள் என்பதை அறிந்த ஸ்ரீகிருஷ்ணன், அவர்களின் யோக்யதைக்கேற்ப பலன்களைக் கொடுப்பதற்காக, தன் மெத்தை மேல் படுத்து தூங்குவதாக காட்டிக்கொண்டான். 

முதலில் அங்கு வந்த துரியோதனன், ஸ்ரீகிருஷ்ணன் படுத்திருப்பதைக் கண்டு, தான் ராஜாதிராஜன் என்னும் கர்வத்தினால் ஸ்ரீகிருஷ்ணனின் தலைமாட்டில் இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தான். சிறிது நேரத்தில் அங்கு வந்த அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணன் படுத்திருப்பதைக் கண்டு, பக்தி மரியாதையுடன் அவன் கால்மாட்டில் நின்றுகொண்டான். இதிலிருந்து அர்ஜுன துரியோதனர்களின் யோக்யதை (தகுதி) தெரிகிறதல்லவா?. ஸ்ரீகிருஷ்ணனும் தன் தூக்கத்திலிருந்து விழிப்பதைப் போல விழித்து, தன் எதிரே நின்றிருந்த அர்ஜுனனைக் கண்டு, ‘அர்ஜுனா! எப்போது வந்தாய்?’ என்று கேட்டான். உடனடியாக துரியோதனன், ‘கிருஷ்ணா! நானும் வந்திருக்கிறேன். நாந்தான் முதலில் வந்தேன்’ என்றான். கிருஷ்ணன் ‘ஓஹோ. மிகவும் சந்தோஷம். ஆனால், நீ முதலில் வந்தாய் என்று சொல்ல வேண்டியதில்லை. நீ அமர்ந்த ஆசனத்திலிருந்தே அது தெரிகிறது. அர்ஜுனன் முதலில் வந்திருந்தால், இருந்த ஒரு ஆசனத்தில் அவன் அமர, நீ நின்றிருக்க வேண்டியிருக்கும். இதிலிருந்தே நீ முதலில் வந்திருக்கிறாய் என்று எனக்கு புரிகிறது. உங்கள் இருவரின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதே என் கடமை. ஆனாலும், நான் முதலில் பார்த்தது அர்ஜுனனையே. ஆகவே, அவன் கோரிக்கையை முதலில் கேட்டுவிட்டு பிறகு உன்னிடம் வருகிறேன், துரியோதனா. சரி அர்ஜுனா, நீ இங்கு வந்த நோக்கம் என்னவென்று சொல்’. என்றான். 

அர்ஜுனன் : எங்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கப்போகும் போரில் நீ எங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்கவே வந்தேன். 

கிருஷ்ணன் : துரியோதனா, நீ வந்த நோக்கம் என்ன?

துரியோதனன் : நானும் அதைக் கேட்கவே வந்தேன். 

கிருஷ்ணன் : ஒரே விஷயத்தில் நீங்கள் இருவரும் என்னை சிக்க வைத்திருக்கிறீர்கள். ஆனாலும் பிரச்னையில்லை. உங்கள் இருவருக்குமே உதவுகிறேன் என்று முதலிலேயே சொல்லியிருக்கிறேன் அப்படியே செய்வேன். அர்ஜுனா! நிராயுதபாணியாக நான் ஒருவனே ஒரு பக்கத்தில் நிற்பேன். கோபிகா ஸ்த்ரீயர்களிடம் பிறந்த என் மக்களான 10 லட்சம் பேர் ஆயுதங்களை ஏந்தி ஒரு பக்கத்தில் நின்று போரிடுவர். இதில் நீ எதை விரும்புகிறாய்?

அர்ஜுனன் : நிராயுதபாணியான நீயே எனக்கு வேண்டும். 

துரியோதனன் : எனக்கு வேண்டியது சைன்யங்களே. அதனால் நான் மகிழ்ச்சியடைவேன். (மனதில்) நிராயுதபாணியான கிருஷ்ணனால் எனக்கு என்ன உதவி கிடைத்துவிடப் போகிறது. அர்ஜுனன் ஏமாந்துவிட்டான் என்று எண்ணி, சைன்யங்களுடன் அங்கிருந்து புறப்பட்டான். ஸ்ரீகிருஷ்ணனின் உதவியால் பாண்டவர்கள் அந்தப் போரினில் வென்றனர். அர்ஜுன துரியோதனர்களின் பக்தி பாவத்தை உலகிற்குத் தெரியப்படுத்தவே ஸ்ரீகிருஷ்ணன் இந்த நாடகத்தை நடத்தினான். இதே அர்த்தத்தையே தாசராயர் ‘சுரபதனய சுயோதனனகித்தந்தெ கொடுதிப்பனு’ என்றிருக்கிறார். 

***


No comments:

Post a Comment