ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, February 21, 2020

#15 - கருணா சந்தி

#15 - கருணா சந்தி

ஸ்மரிசுவவ ரப1ராத4கள தா
ஸ்மரிஸ சகலேஷ்ட பிரதா3யக
மரளி தனக3ர்ப்பிசலு கொட்டுத3னந்த மடி3 மாடி3 |
1ரிபரியலிந்து3ணிஸி சுக2 சா
3ரதி3 லோலாடிசுவ மங்கல
சரித சின்மயகா3த்ர லோக1பவித்ர சுசரித்ர ||15

ஸ்மரிசுவவ = தன்னை நினைப்பவர்களின்
அபராதகள = தவறுகளை
தா ஸ்மரிஸ = லட்சியம் செய்வதில்லை
சகலேஷ்ட பிரதாயக = அவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுபவன் (பகவத் ப்ரீதிக்காக அவர்கள் செய்யும் கர்மங்களை)
மரளி = மறுபடியும்
தனகர்ப்பிஸலு = அதை அவர்கள் அர்ப்பித்தால்
அத = அதனை
அனந்த மடி மாடி = அனந்த குணங்களை பல மடங்கு ஆக்கி
பரிபரியலி = பலவிதங்களாக
உண்டு = பக்தர்களில் இருந்து, தான் அவற்றை உண்டு
உணிஸி = பக்தர்களை உண்ண வைத்து
மங்களசரித = மங்களகரமான மகிமைகளைக் கொண்டவன்
சின்மயகாத்ர = சிதானந்த ஸ்வரூபனான
லோகபவித்ர = லோக பவித்ரனான
சுசரித்ர = மிகச்சிறந்த சரித்திரத்தைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்
சுகசாகரதி = சுகம் என்னும் கடலில்
லோலாடிசுவ = மிதக்குமாறு செய்வான்.

பொருள்:

தன்னை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் பக்தர்கள் என்ன அபராதம் செய்தாலும் அதை பரமாத்மன் நினைவுக்குக் கொண்டு வருவதில்லை (மறந்துவிடுகிறான்). பிரதிபலனாக அவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுகிறான். மங்களகரமான சரித்திரங்களைக் கொண்டவனும், சிதானந்த ஸ்வரூபனும், லோக பவித்ரனும், உத்தம மகிமைகளைக் கொண்டவனுமான ஸ்ரீஹரி, தன் பக்தர்கள் செய்யும் பூஜாதி கர்மங்களை, அந்த பரமாத்மனுக்கே கிருஷ்ணார்ப்பணம் என்பவர்களுக்கு, அதனை பல மடங்காக்கி, அதன் பலன்களை, அவர்களில் இருந்து தான் உண்டு, அவர்களையும் உண்ண வைத்து, அவர்களை சுக சமுத்திரத்தில் நீந்தி கரைசேருமாறு செய்கிறான். 

சிறப்புப் பொருள்:
’ஸ்மரிசுவர அபராதகள தா ஸ்மரிஸ’ - தன் பக்தர்கள் சில நேரங்களில் அசுர ஆவேசத்தினால் தவறுகளை செய்வர். ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணன் யாகம் செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு பிராமணன், தனக்குப் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் பிறந்தவுடன் இறந்து விடுகின்றனர். அப்படி இறந்த தன் குழந்தைகளை மறுபடி உயிர்ப்பித்துக் கொடுக்குமாறு கேட்கிறார். ஸ்ரீகிருஷ்ணன் யாகம் செய்துகொண்டிருந்ததால், எதுவும் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தான். அப்போது அங்கிருந்த அர்ஜுனன் எழுந்து, அக்குழந்தைகளை தான் காப்பாற்றுவதாகக் கூறினான். 

அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் ‘பெரிய பூதம் வந்திருக்கிறது. அது அக்குழந்தையை கவர்ந்து கொள்ளும். ஆகவே அக்குழந்தையைக் காப்பாற்றுவது உன்னால் முடியாதது. யாகம் முடிந்தபிறகு நாம் இருவரும் போய் அந்த வேலையைச் செய்வோம்’ என்றான். ஆனால் அதைக் கேட்காத அர்ஜுனன், அந்த பிராமணரிடம் சென்று, தான் அக்குழந்தைகளை காப்பாற்றுவதாகவும், அப்படி செய்யமுடியவில்லையெனில், தான் அக்னிப் பிரவேசம் செய்வதாகவும் சபதம் செய்தான். நம்பிக்கையற்ற அந்த பிராமணருக்கு, நம்பிக்கை ஊட்டி, அங்கு சென்று முயன்றாலும், அவனால் அக்குழந்தைகளை மீட்க முடியவில்லை. ஆகையால் தன் சபதத்திற்கேற்ப, அக்னிப் பிரவேசத்திற்கு தயாரானான். 

அப்போது ஸ்ரீகிருஷ்ணன் வந்து, அனந்தாசனத்தில் இருந்த அக்குழந்தைகளைக் கொண்டு வந்து பிராமணரிடம் கொடுத்து, அர்ஜுனனையும் சமாதானப்படுத்தினான். இப்படியாக, அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணனை புறக்கணித்தாலும், அவன் அர்ஜுனனின் தவறினை கவனத்தில் கொள்ளாமல், அவன் அக்னிப் பிரவேசம் செய்யும் காலத்தில் அங்கு வந்து அதனைத் தடுத்து, அவனைக் காப்பாற்றினான். 

பூதனி, சிசுபாலன் ஆகியோரில் முறையே ஊர்வசி, ஜய ஆகியோர் இருந்தாலும், அசுர ஆவேசத்தினால் அவர்கள் செய்த தவறுகளை மன்னித்து, அவர்களுக்கு திவ்ய கதியையே கொடுத்தான். இத்தகைய உதாரணங்கள் பல உண்டு. கிரந்தம் அதிகமாகிவிடும் என்பதால் அனைத்தையும் இங்கு விளக்கவில்லை. இத்தகைய கதைகளைக் கேட்டு, பக்தர்களே இந்த விஷயத்தை ஊகிக்க முடியும். ஆகையால் தாசராயர் ‘ஸ்மரிசுவர அபராதகள தா ஸ்மரிச’ என்றிருக்கிறார். 

’மரளி தனகர்ப்பிஸலு கொட்டுதனந்த மடிமாடி’ பக்தர்கள் செய்த அபராதங்களை பரமாத்மனுக்கு அர்ப்பிக்க, அதனை பன்மடங்காக்கி, சுகங்களைக் கொடுக்கிறான் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக, குசேலன் கொடுத்த ஒரு பிடி அவலைப் பெற்றுக்கொண்டு, அவனுக்கு இஹத்தில் பெருஞ்செல்வத்தைக் கொடுத்து, பரலோகத்தில் முக்தியைக் கொடுத்தான். இதைப் போல, நாம் செய்யும் கர்மங்களை பரமாத்மனுக்கு ஒப்படைத்தால், அவன் அதை ஏற்றுக்கொண்டு, அவற்றை பன்மடங்காக்கி, அதன் பலன்களைத் திருப்பித் தருவான் என்பது கருத்து. 

இதற்கு ஆதாரமாக மத்வாசார்யரின் வாக்கியம் ஒன்று இருக்கிறது. துவாதச ஸ்தோத்திரத்தில் : ‘அக்‌ஷயம் கர்மயஸ்மின் பலே ஸ்வர்ப்பிதம் ப்ரக்‌ஷயம் யாந்தி துக்கானியன் நாமத:’ - ‘எந்த பரமாத்மனிடம் நாம் செய்யும் கர்மங்களை சமர்ப்பிப்பதால், அந்த பலன் அக்‌ஷயமாகிறதோ, யாரின் நாமோச்சாரணை செய்தால் மட்டும் துக்கங்கள் அனைத்தும் நாசமாகிறதோ, அத்தகைய பரமாத்மனை பக்தியுடன் அடைவோமாக’ என்கிறார். இதே அபிப்பிராயத்தை தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார். 

பரியபரியலுண்டுனிஸி - பரமாத்மன் ஜீவர்களை ஸ்ருஷ்டித்து, காப்பாற்றியவாறு, ஜீவர்களில் இருந்து, ஸ்தோத்ராதிகளைப் பெற்றுக்கொண்டு, விஷய சுகங்களை தான் உண்டு, அவர்களுக்கும் கொடுக்கிறான் என்று பொருள். பாகவத 1ம் ஸ்கந்தத்தில் ‘பூதேஷு ஜாந்தர்ஹித ஆத்ம தந்த்ர: பாட்வர்கிகம் ஜிப்ரதி ஷட்குணேஷ:’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஸ்லோகம் மேற்சொன்ன அர்த்தத்தையே கொடுக்கிறது. ஆனால் பரமாத்மன் ஸ்வதந்த்ரனாகையால், தேகங்களில் இருந்தாலும், துக்கங்களை விட்டு, சுகங்களை மட்டுமே ஸ்வீகரிக்கிறான். 


புங்க்தே பூதேஷு தத்குணார்த்த - என்று குணங்களை அதாவது சுபங்களை, சுகங்களை மட்டுமே ஸ்வீகரிக்கிறான் என்னும் பொருள் தெளிவாகிறது. ‘சுகசாகரதி லோலாடிசுவ’ இஹத்திலும் தன் பக்தர்களுக்கு தன் அபரோக்‌ஷத்தைக் காட்டி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவான். பாகவத 1ம் ஸ்கந்தத்தில் நாரதரின் வாக்கியம் - ‘ஆனந்த சம்ப்லவேலினோ நாபஷ்யமுபயம்முனே’. ’அந்த பகவந்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே நான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிவிட்டேன். எனக்கு இஹபரம் என்பதே தெரியவில்லை’ என்று நாரதர் வியாசரைப் பார்த்து சொல்கிறார். ஆகையால், பக்தர்களுக்கு இஹத்திலேயே இத்தகைய ஆனந்தத்தைக் கொடுக்கிறான் என்றபிறகு முக்தியில் ஆனந்தத்தைக் கொடுப்பதைப் பற்றி கேட்கவேண்டுமா? அதையும் கொடுப்பான் என்பதே கருத்து. லோகபவித்ர, சுசரித்ர ஆகியவை ‘பிரத்யக்‌ஷம்யாந்தி து:க்கானியன் நாமத:’ - நாமஸ்மரணையால் மட்டுமே துக்கங்களை நாசம் செய்வேன் என்ற துவாதச ஸ்தோத்திரத்தின் வாக்கியத்தையே தாசராயர் இங்கு குறிப்பிட்டிருக்கிறார். 

***

No comments:

Post a Comment