ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, January 24, 2020

பல்லவி - மங்களாசரண சந்தி

ஹரிகதா2ம்ருதசார கு3ருக3
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்34க்தரித3னாத3ரதி கேளுவுது

ஹரிகதாம்ருதசார = ஹரிகதாம்ருதசாரம் என்னும் இந்த கிரந்தத்தை
குருகள = எனக்கு உபதேசம் செய்தவரை
கருணதிந்தா = அவரது கருணையினால்
ஆபநிது = எனக்கு தெரிந்தவரையில்
பேளுவே = கூறுவேன்
பரம = பலாபலன் பார்க்காமல் 
பகவத்பக்தரு = ஸ்ரீஹரியிடம் பக்தி செய்பவர்கள் (எந்த தடையுமில்லாமல் பக்தி செய்பவர்கள்)
இதன = இந்த கிரந்தத்தை
ஆதரதி = மிகவும் நம்பிக்கையுடன்
கேளுவுது = கேட்கலாம்.

முதலில் மங்களாசரணத்தை செய்யாமல், கூறுவேன் என்று சொல்லி, பிறகு மங்களாசரணத்திற்காக ஒரு சந்தியையே இயற்றியிருக்கிறார். ‘நத்வா சூத்ரார்த்த உச்யதே’ என்று ஸ்ரீமத்வர் பல கிரந்தங்களை மங்களாசரணத்துடன் துவக்கியிருக்கிறார். மேலும் ஒரு கிரந்தத்தை படைக்க வேண்டுமென்றால், அதற்கான விஷயம், பலன், அதிகாரி, சம்பந்தம் என்னும் நான்கு லட்சணங்களை சொல்லாமல், அந்த கிரந்தத்தை துவக்கக்கூடாது என்பது ஸ்ரீமத்வரின் சம்பிரதாயம். இதையே ஸ்ரீதாசரும் இந்த கிரந்தத்தின் துவக்கத்தில் கூறுகிறார். 

நாராயணம் நமஸ்க்ருத்ய - என்னும் மங்களாசரண ஸ்லோகத்துடன் துவங்கும் பாரதாதி கிரந்தங்களின் பொருளை விளக்கிக் கூறும் வகையில், ‘மங்களாசரண சந்தி’ என்று ஒரு சந்தியையே இயற்றியதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு சந்தியும் துவக்கும்போது படிப்பவரின் சௌகரியத்துக்காக மங்களாசரண பல்லவியை உருவாக்கி, சாதனசதுஷ்டய என்னும் விஷயத்தை தெரிவிக்கிறார். அது என்னவென்றால்:

மங்களாசரணம் என்றால், நான் நமஸ்கரிக்கிறேன் என்று சொல்வது மட்டுமல்ல. மங்களகரமான எழுத்தையோ அல்லது சொல்லையோ முதலில் பயன்படுத்தினால், அதுவும் மங்களாசரணம் என்றே சொல்லப்படுகிறது. ‘அதாதோ பிரம்மஜிக்ஞாஸா’ என்னும் ஸ்லோகத்தில், ’அ’ என்னும் எழுத்தும், ’அத’ என்னும் சொல்லும் மங்களாசரணம் என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள். பாகவதம் இரண்டாம் ஸ்கந்தத்தில், சுகாச்சாரியர் பாகவத்தை சொல்லத் துவங்கும்போது, புதியதாக வேறொரு மங்களாசரணம் செய்யாமல் ‘வரீயானீஷ தே ப்ரஷ்ன:’ என்று துவக்கியிருப்பார். அங்கு ‘வரீயான்’ என்னும் சொல்லே மங்களாசரணம் என்று சொல்லியிருப்பார். அப்படியே, ஸ்ரீதாசரும் ‘ஹரி’ என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியிருக்கிறார். அனைத்து பாவங்களையும், கஷ்டங்களையும் தீர்க்க வல்லவன் ஆகையால் அவனுக்கு ‘ஹரி’ என்று பெயர். இதைவிடவும் மங்களம் வேறு என்ன இருக்கமுடியும்? மேலும் இந்த கிரந்தத்தில் சொல்லப்படும் விஷயமாக ஸ்ரீஹரியே இருப்பதால், ‘ஹரி’ என்று துவக்கியிருக்கிறார். மேலும் இந்த கிரந்தத்தில் ஸ்ரீஹரியின் சரித்திரத்தையே சொல்லியிருப்பதால், ‘ஹரிகதா’ என்றும் சொல்லியிருக்கிறார். அம்ருதம் என்றால் மோட்சம் என்று பொருள். அப்படிப்பட்ட மோட்சத்தை அடைவதே இந்த கிரந்தத்தைப் படிப்பதால் கிடைக்கும் பலன். ’சாரம்’ என்றால் கிடைக்கக்கூடிய பலன் அல்லது தீர்வு. பரம பகவத்பக்தர்களே அதைப் பெற வல்லவர்கள். ‘சவை பும்சாம் பரோதர்மோ யதோ பக்தரதோக்‌ஷஜே! அஹைதுக்ய வைவஹிதா மயாத்மாஷு ப்ரஸீததி’ என்னும் பாகவத வாக்கியத்தின்படி, பலாபலன் எதிர்பார்க்காமல் தொடர்ந்து ஸ்ரீஹரியிடம் பக்தி செய்பவர்களே அவனின் கருணையைப் பெற தகுதியானவர்கள். இத்தகைய பக்திக்கு பரம பக்தி என்று பெயர். பரம பக்தர்களே இத்தகைய பலனைப் பெற தகுதியானவர்கள் என்றதால், சாதாரண மக்களுக்கு இந்த கிரந்தத்தைப் படிக்க அதிகாரம் இல்லை என்று பொருளில்லை. சாதாரண பக்தியென்றால் தொடர்ந்து ஸ்ரீஹரியின் மகிமைகளைக் கேட்பது, படிப்பது ஆகியவற்றை செய்து, ஸ்ரீஹரியின் பரமபக்தர்களாகி, அவனின் பிரசாதத்தை பெறுகிறார்கள் என்று பொருள். ஆகவே பகவத்பக்தர்களே இந்த கிரந்தத்தைப் படிக்க அதிகாரிகள் என்று சொல்லியிருக்கிறார். கேளுவுது என்னும் சொல்லின் மூலம் சம்பந்தத்தை சொல்கிறார். ஆகவே ஸ்ரீஹரியின் கதைகளைக் கேட்பது, அதனால் விளையும் ஞானம், ஆகியவற்றால் பயனடைவார்கள் என்று இந்த சொல்லின் மூலம் விளக்குகிறார். 

மங்களாசரண சந்தியின் சாராம்சம்

ஸ்ரீதாசர் ஒவ்வொரு சந்தியிலும் மங்களாசரணத்தை சொல்வதற்காக பல்லவியை உருவாக்கி, அதன் மூலம் விஷய சதுஷ்டயங்களை சொல்லி, தாம் இயற்றியுள்ள ஹரிகதாம்ருதசாரத்தில் உள்ள 32 சந்தியிலும், நிர்விக்னம் ஏற்படக்கூடாதென்றும், இஷ்டார்த்தங்கள் கிடைக்கவேண்டுமென்றும், கிரந்தத்தின் துவக்கத்தில் மங்களாசரணத்தை வைத்து விளக்கியது ஏன் என்றால், பாரதத்தை இயற்றிய வேதவியாசரும் அனைத்து தேவதைகளை நமஸ்கரித்தே பாரதத்தை எழுதத் துவங்கினார். எப்படியென்றால் :

நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் |
தேவீம் சரஸ்வதீம் சைவ (வியாசம்) ததோஜய (கிரந்தம்) முதீரயேத் ||

முதலில் சர்வோத்தமனான நாராயணனை வணங்க வேண்டும். பிறகு ‘ஸ்ரீதேவீம்’ லட்சுமிதேவியை, அதற்குப் பிறகு ‘சரஸ்வதிம்’, பிறகு சேஷாதி தேவதைகளைவிட உத்தமரான வாயுதேவரை, பிரம்மதேவரை, ’சரஸ்வதிம்’ - சரஸ்வதி பாரதிதேவிகளை, நரம் = அஹங்கார தத்வாபிமானி தேவதைகளான கருட, சேஷ, ருத்ரதேவர்களை வணங்க வேண்டும். நர என்னும் சொல், குறிப்பாக சேஷதேவரை குறிப்பதாக இருந்தாலும், இந்த மூவரும் (கருட, சேஷ, ருத்ரர்) தாரதம்யத்தின்படி ஒரே வகுப்பில் இருப்பவர்களாகையால், மூவரையும் குறிப்பதாக வைத்துக் கொள்ளலாம். பிறகு வேதவியாசரை வணங்கி, கிரந்தத்தைத் துவக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். வேதவியாசர் இந்த ஸ்லோகத்தில் ‘தேவீம் சரஸ்வதீம் சைவ’ என்று இயற்றியிருந்தாலும், அவரது சிஷ்யரான ஸ்ரீமத்வர் ‘சைவ’ என்பதற்கு பதில் ‘வியாச’ என்று மாற்றி எழுதினார். 

ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீவேதவியாசரும் ஒன்றேயானாலும், கிரந்தத்தின் கருப்பொருள்/ விஷயமான ஸ்ரீமன் நாராயணனுக்கே முதல் வணக்கம். குரு ஸ்தானத்தில் இருப்பவராகையால் வேதவியாசரையும் வணங்கினார் - ஆக ஸ்ரீஹரியை இரு முறை வணங்கினார் என்று புரிந்துகொள்ள வேண்டும். (இதே விஷயத்தை ஏழாம் ஸ்லோகத்தில் ’வேதபீடவிரிஞ்சிபவ’ இன்னும் விரிவாக விளக்கியுள்ளோம்). பாரதாதிகளில் நாராயணன் முதலானவர்களுக்கு வணக்கம் வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கார்களே தவிர, ஏன் வணங்க வேண்டும்? அப்படி வணங்குவதால் என்ன பலன்? என்ற கேள்விக்கெல்லாம் பதில் இல்லை. ஸ்ரீமத்வர் இந்த விஷயங்களை சிறிது விளக்கியிருப்பார். அது எப்படியென்றால் : முக்கியமாக ஒருவரை வணங்க வேண்டுமென்றால் அவரைப் பற்றிய ஞானம் / தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். ஆகையால், ஸ்ரீதாசர் மேலே உள்ள ஸ்லோகத்தில் இருக்கும் தேவதைகள் அனைவரின் மகிமைகளை விளக்கி, அந்த தேவதைகளின் மூலம் கிடைக்கும் பலன்களைச் சொல்லி, இந்த கிரந்தத்தை படிக்கும், கேட்கும் மக்களுக்கு தேவையான சிரத்தையை தரவேண்டும் என்று அந்த தேவதைகளை வேண்டி மங்களாசரண சந்தியை இயற்றியுள்ளார். அதில் முதலாம் ஸ்லோகத்தின் மூலம் தன் இஷ்ட தெய்வம், குல தெய்வம் மற்றும் உபாசனாமூர்த்தியான ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமியையும், இந்த கிரந்தத்தின் விஷயமும் சர்வோத்தமனும் ஆன, ஸ்ரீமன் நாராயணனையும் - இருவரையும் ஒரே ஸ்லோகத்தில் வணங்கியிருக்கிறார். 

***

Thursday, January 23, 2020

ஹரிகதாம்ருதசாரத்திற்கான முன்னுரை - 2


மோட்சத்திற்கான முதல் படி:
நான், எனது - என்னும் சுயநலத்தை விட்டுவிடவேண்டும்.

இரண்டாவது படி:
பெரிய அரக்கியைப் போல வாயைத் திறந்துகொண்டு நம்மை தின்ன வருவதைப் போல வருவது காமம் ஆகும். இந்த ஆசை, மனிதர்களை அழிக்கவல்லது. அரக்கியை அழிப்பது எப்படி மிகவும் கஷ்டமோ, அதைப் போலவே இந்த ஆசையை விடுவதும் மிகவும் கஷ்டமாகும். இந்த ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, அந்த அரக்கியை அழிக்கவேண்டும். அதற்கு குருவருள், ஸ்ரீஹரியின் கருணை தேவையாகும்.

மூன்றாவது படி:
சுக துக்கங்கள் இரண்டும் கோடை, குளிர் காலங்களைப் போல மாறி மாறி அனைவரது வாழ்க்கையில் வரக்கூடியவை. அவற்றிலிருந்து வரும் சுகம், துக்கங்களே ஒருவருடைய மக்கள் என்று நினைக்கவேண்டும். அவற்றை கடக்க வேண்டுமெனில், சுக, துக்கங்களுக்கு கட்டுப்படாமல், மன உறுதியுடன் அவற்றை அங்கங்கேயே விட்டுவிடவேண்டும். அதாவது, ஆசையை விடவேண்டும் என்று சொல்வது போல் ஆகிறது. அது எப்படியெனில்:

மாத்ரா ஸ்பர்ஷஸ் து கௌந்தேய சீதோஷ்ண சுகதுக்கதா: - என்று கீதையில் சொன்னதைப் போல, சுக துக்கங்கள் அஞ்ஞானிகளை மட்டுமே பாதிக்கும். அவை ஞானிகளை பாதிப்பதில்லை. உறவினர்களான மனைவி, மக்கள் மேல் அதிக அன்பு செலுத்தி, மகிழ்ச்சி / துக்கங்களைப் பெறுவர் மக்கள். இந்த உடல் அழியக்கூடியது. ஜீவனுக்கு அழிவில்லை. ‘பின்ன ஜீவ, பின்ன கர்ம’ என்று சொல்லியிருப்பதால், மனைவி மக்கள் என்னும் சம்பந்தம் ஜீவனுக்கு இல்லை என்னும் தெளிவு இல்லையெனில், யாருடைய பேச்சும் நம்மை பாதிப்பதில்லை. ஆகையால், மோகத்தை விடவேண்டும் என்ற பொருள் வருகிறது. 

நான்காவது படி: 
’மத சொக்கித கஜவன்னு நரி நுங்கோதனக’. மதயானையைப் போல இருப்பது கோபம். ‘க்ருத்தோ ஹன்யாத்குரூனபி’ அதாவது ஸ்வரூபத்தை மேம்படுத்துவதற்கு, தேகத்தைக் கொடுத்த பெற்றோர்களை, ஞானோபதேசம் செய்த வித்யாகுருகளை, கோபத்திற்கு ஆளானவன் கொன்று விடுகிறான். ஆகையால், கோபம் நமக்கு மிகப்பெரிய எதிரி. நம் மனம் நரியைப் போல பேராசை கொண்டது. (இது அனைவரது மனதின் சுபாவமே ஆகும்). இத்தகைய மனதிற்கு ஹரிகுருகளின் அருள் என்னும் பலத்தைக் கொடுத்து, மதயானையைப் போலிருக்கும் கோபத்தை அடக்கவேண்டும் என்பது பொருள். 

ஐந்தாவது படி:
’இப்பரு ஒந்தாகோதனக’. இப்பரு என்றால் இருவர். பரமாத்மா ஒருவன். இவ்வுலகில் இருக்கும் அனைத்தும் மற்றொன்று. இந்த இரண்டையும் ஒன்றாக நினைக்கவேண்டும். இதை ஞானிகள் ‘பாவாத்வைத’ என்பர். அதாவது:

’கார்ய காரண வஸ்வைக்ய தர்ஷனம் படதந்துவத் | அவஸ்துத்வா த்வகல்பஸ்ய பாவாத்வைதம் ததுச்யதே’ ||. காரண காரியங்களின் ஐக்கிய சிந்தனையே பாவாத்வைதம். உதாரணத்திற்கு: காரியபூதமான ஆடைக்கு காரணம் நூல். இந்த நூலே பின்னர் ஆடை எனப்படுகிறது. ஆனாலும், நூலுக்கும், ஆடைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆடையைப் பார்த்து, இது நூல் என்று யாரும் சொல்வதில்லை. அப்படியே நூலைப் பார்த்து ஆடை என்றும் யாரும் சொல்வதில்லை. எப்படி நூலே, ஆடையாகி மாறியிருக்கிறதோ, அதைப்போலவே பரமாத்மன் காரணனாகியும், இந்த உலகம் கார்யமாகவும் இருப்பதனால், பரமாத்மனே விஷ்வரூபத்தினால் இவ்வுலகில் வியாபித்து (இவ்வுலகிலிருந்து வேறுபட்டு), பிரபஞ்சரூபியாக இருக்கிறான். இப்படியாக நினைப்பதற்கு, பாவாத்வைதம் என்று பெயர். உலகத்தில் இருக்கும் பகவத் ரூபத்தையும், பகவந்தனின் மூல ரூபத்தையும், ஒன்றாக நினைக்கும்வரை முக்தி சுலபமல்ல. 

இதைப்போலவே க்ரியாத்வைதத்தையும், கிரஹணாத்வைதத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். க்ரியாத்வைதம் என்றால் என்ன? ’யத்ப்ரம்மணே பரே சாக்‌ஷாத் சர்வ கர்ம சமர்ப்பணம் | மனோவாக் தனுபி: பார்த்த க்ரியாத்வைதம் ததுச்யதே’. மனம், வாக்கு, தேகத்தினால் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் ஸ்ரீஹரிக்கு சமர்ப்பணம் செய்தவாறு, ஸ்ரீஹரியே நமக்குள் இருந்து அச்செயல்களை செய்விக்கிறான் என்று நினைப்பதே க்ரியாத்வைதம். இருவர் ஒன்றாவதைப் போல இரண்டும் ஒன்றாகிறது என்று பொருள். நாம் செய்யும் செயல்களை நமக்குள் இருக்கும் ஸ்ரீஹரியே செய்கிறான் என்று நினைக்கும்போது இரண்டும் ஒன்றாகிறது என்கிற எண்ணம் வருகிறது. 

த்ரவ்யாத்வைதம் என்றால் என்ன? ’ஆத்ம ஜாயா சுதாதீனாமன்யேஷாமபி தேஹினாம் | யத்ஸ்வார்த்த  காமயோரைக்யம் த்ரவ்யாத்வைதம் ததுச்யதே’. ‘ன்ருகோ கராஷ்வமர்காகி சரீஸுபவிமக்‌ஷிகான் | ஆத்மன: புத்ரவத்பஷ்யே த்ரைரேஷாமந்தரம் கியத்’ மனிதன், பசு, கழுதை, குதிரை, குரங்கு, எலி, பாம்பு போன்ற மிருகங்களையும், புழு, பூச்சி போன்றவற்றையும் தன் மக்களைப் போலவே நினைக்கவேண்டும். அதாவது, குதிரை, கழுதை போன்றவற்றிக்கும் தனக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கிறதோ, அவ்வளவே சம்பந்தம், தனக்கும் தன் மக்களுக்கும் இருக்கிறது என்று நினைப்பதே த்ரவ்யாத்வைதம். இப்படி மூன்று விதமாக ‘எரடன்னு ஒந்தாகி பாவிசபேகெம்புவதே’ என்னும் வரியின் விளக்கத்தை அறியலாம். 

ஆறாவது படி:
மூரு ஹப்பித பெட்டத நொண நுங்கோதனக - கஞ்சத்தனம், மதம், கர்வம் என்னும் இம்மூன்றும் மூன்று மலைகளைப் போல வளர்ந்து, நாம் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் நாசம் செய்கின்றன. இம்மூன்றும், சிறிய கிருமியைப் போல இருக்கும் நம் மனதினை கட்டுப்படுத்துகின்றன. மனக் கட்டுப்பாட்டின் மூலமே இவற்றை ஜெயிக்கவேண்டும் என்று பொருள். இதில் கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களைப் பார்த்தால், இது மிகவும் சுலபமான விஷயம் என்று நாம் நினைக்கக்கூடும். ஆனால், எலி முதலான சிறிய பிராணிகளைப் பிடிக்கவேண்டுமானாலும் மிகப்பெரிய விஷயங்களை செய்வதுபோல, கடினமான வேலைகளை செய்தே மனக் கட்டுப்பாட்டினை கொண்டுவர வேண்டுமே தவிர, இது சுலபமாக முடியக்கூடியது அல்ல. குருவருள் முதலான விஷயங்களினாலேயே மேற்படி விஷயம் முடியும் என்று பொருள். 

ஏழாவது படி:
‘ஒப்பள கூடோதனகா” ஒப்பளு - என்றால் புத்தி. மனைவியை வசப்படுத்துவது போல் அதனை வசப்படுத்த வேண்டும். தவறுகளை திருத்தி உடன் வைத்துக்கொண்டு, நற்சாதனைகளை செய்யவேண்டும் என்று பொருள். 

எட்டாவது படி:
‘கெட்ட குப்பியு, ராஜஹம்ஸ னாகோதனகா’. பரமாத்மனுக்கு பிரதிபிம்பனான ஜீவன், தான் ஸ்வதந்திரன் என்று நினைத்து, ஹம்ஸ ரூபியான (தோஷங்கள் அற்ற) பரமாத்மனுக்கு தான் பிரதிபிம்பன் ஆகையால், தானும் ஹம்ஸன் என்னும் ஞானமில்லாமல் வீணாக குருவி போல் வாழ்க்கையை கழிக்கிறான். இந்த நினைப்பை விட்டு, பிம்ப பிரதிபிம்ப பாவத்துடன், தானும் ஹம்ஸனைப் போன்றவனே என்று அறியவேண்டும் என்பதே பொருள். இப்படி சொல்வதால், பரமாத்மனின் சாரூப்யத்தை மட்டுமே சொல்கிறார் என்றும், பரமாத்மனில் ஐக்ய பாவத்தை சொல்லவில்லை என்றும் புரிந்துகொள்ள வேண்டும். 

ஒன்பதாவது படி:
’ஒளஹொரகொந்தாகுவதன’. தன்னுள் இருக்கும் பகவத் ரூபத்திற்கும், பிரதிமைகள், பிராமணர்கள் ஆகிய அனைவரிலும் இருக்கும் பகவத்ரூபத்திற்கும் அபேத சிந்தனை செய்யும்வரை என்று பொருள். 

பத்தாவது படி:
’தா கண்டேனெம்போ பாவ பைலாகுவ தனக’. இதுவரை நாம் தற்காலிக விஷயங்களில் மனதை பறிகொடுத்து அதுவே சுகம் என்று நினைத்து வந்திருக்கிறோமோ அவை சுகமல்ல, அவை நிரந்தர சுகமல்ல என்ற நினைவு நம் மனதிற்கு வரும்வரை என்று பொருள். இதையே பகவத்கீதையில் - ‘யா நிஷா சர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்த்தி சம்யமே | யஸ்யாம் ஜாக்ரதி பூதானி சா நிஷா பஷ்யதோ முனே:’ என்று கூறியிருக்கிறார். இதன் பொருள்: பகவத் விஷயங்களில் அனைத்து பிராணிகளுக்கும் இரவானது, யோகிகளுக்கு அதுவே காலைப் பொழுதாகும். அப்போது அனைத்து பிராணிகளும் தெளிந்து விழிக்கின்றரோ, அப்போது யோகிகள் தூங்குகின்றனர். இதே பொருளையே இந்த இடத்தில் அறியவேண்டும். 

பதினொன்றாவது படி:
’பெளகினொளகெ காணுவதனக’. ஞானம் என்னும் ஒளியால் பகவத்ரூபத்தை, அபரோக்‌ஷத்தில் காணும்வரை என்று பொருள். 

பன்னிரெண்டாம் படி:
’சிரி புரந்தரவிட்டலன தய பாஹோ தனகா’. ’ நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ நமேதயா நபஹுனா ஸ்ருதேன | யம்யைவேஷ வ்ருணுதே தேன லப்ய: தஸ்ம்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ||. அதாவது, எவ்வளவு பெரிய பண்டிதரானாலும், ஸ்ரவண மனனங்களை செய்தாலும், அதனால் மட்டுமே அபரோக்‌ஷம் கிடைப்பதில்லை. எதையும் எதிர்பாராத பக்திக்கு ஸ்ரீஹரி மெச்சி, தன்னை காட்டிக்கொள்வான் என்று நமக்கு புரியும்வரை. அதாவது, ஸ்ரீபரமாத்மனின் பரம பிரசாதம் கிடைக்கும்வரை முக்தி சுலபமல்ல என்று பொருள். 

அதற்காக தாசர்கள், முக்திக்கான வழியென்று - ‘அஹம் மமதா த்யாக’. நான் என்பதை விடுங்கள் என்றனர். பரமாத்மனின் பரமபிரசாதம் கிடைப்பதற்கான சாதனமாக 12 படிகள் இருந்தாலும் அவற்றை ஒரே சொற்றொடராக சுலபமாக சொல்லி புரியவைத்தனர். இதையே, பாகவதம் 4வது ஸ்காந்தம், 22வது அத்தியாயம், 21ம் ஸ்லோகத்தில் சனத்குமாரர்கள் ப்ருது ராஜனுக்கு உபதேசம் செய்யும்போது ‘சாஸ்திரேஷ்டியானேவ சுனிஸ்சிதோ ந்ருணாம்’ என்றனர். அதாவது, அனைத்து சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து பார்த்தால், இப்போது நாம் சொல்லும் இந்த விஷயமே சாரமாக இருக்கிறது என்று சொல்லி, 10-15 ஸ்லோகங்களில் முக்திக்கான சாதனங்கள் அனைத்தையும் போதித்தனர். தாசராயரும் அதே கருத்தை மனதில் வைத்து, முக்கியமான வழியை இந்த பதத்தில் சொல்லியிருக்கின்றனர். 

இப்படியாக புரந்தரதாசர் முதலானவர்கள் இயற்றிய கிரந்தங்களில் இருந்தாலும், அனைத்து வேத, பாரத, பாகவதத்தைப் படிக்கத் தகுதியற்றவர்களுக்கும் முக்திக்கான சாதனமான தத்வஞான, வைராக்யம் கிடைப்பதற்கான ஒரு கிரந்தத்தை இயற்றி, அனைத்து பாமர மக்களையும்கூட மேம்படுத்தும் யோசனையுடன், விஜயதாசரின் பிரசிஷ்யரும், பாகண்ண தாசரின் சிஷ்யருமான ஜகன்னாததாசரின் கனவில், ஸ்ரீபாதராயர், ஸ்ரீவியாசராயர், ஸ்ரீவாதிராஜர் மற்றும் ஸ்ரீபுரந்தரதாசர் ஆகியோர் வந்து - பாரத, பாகவத மற்றும் அனைத்து புராண சாஸ்திரங்களின் சாரமாக - மோட்சத்திற்கு உதவி செய்யும் ஒரு கிரந்தத்தை இயற்றுங்கள் என்று ஆணையிட்டனர். அதற்கேற்ப ஜகன்னாததாசரும் அற்புதமான ‘ஹரிகதாம்ருதசார’ என்னும் கிரந்தத்தை இயற்றினார். 

அப்படியெனில், மேலே கூறியவற்றை கவனித்துப் பார்த்தால், பாரதத்தினால் மக்கள் மேம்படமாட்டார்கள் என்றும், நாரதரின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீவேதவியாசர் பாகவதத்தை இயற்றினார். அதனாலும் மக்கள் மேம்படமாட்டார்கள் என்றும், இந்த ஹரிகதாம்ருதசார கிரந்தத்தை இயற்றினார் என்றால் - இதன் பொருள் என்ன? வேதம், பாரதம் ஆகியவற்றைவிட பாகவதம் சிறந்தது என்றும், பாகவதத்தைவிட இந்த கிரந்தம் (ஹரிகதாம்ருதசாரம்) சிறந்தது என்றும் சொல்லலாமா? அப்படி சொன்னால், ஸ்ரீமதாசார்யரின் வாக்கிற்கு எதிராக பொருள் வருகிறது. பாரதத்தில் சொல்லப்படாத பகவந்தனின் மகிமைகள் வேறு எந்த சாஸ்திரங்களிலும் சொல்லப்படவில்லை. வேறு எந்த சாஸ்திரங்களிலும் சொல்லப்படாத பகவன் மகிமைகளை பாரதத்தில் காணலாம். ‘தஸ்மாத்யத் பாரதேனோக்தம், தத்தினைவாஸ்தி குத்ரசித் | அத்ரோக்தம் சர்வ சாஸ்திரேஷு நஹி சம்யகுதாஹ்ருதம் ||’ என்று ஸ்ரீமதாசார்யர் மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில் சொல்கிறார். இதிலிருந்து பாரதம், சர்வோத்தம கிரந்தம் என்று தெரியவருகிறது. 

அப்படியெனில் நாரதர் - ‘யதா தர்ம தயோஹ்யர்த்தா: ‘ இந்த ஸ்லோகத்தில், பாரதத்தில் தர்மாதி விஷயங்களை எவ்வளவு அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கு வாசுதேவனின் மகிமைகளை சொல்லவில்லை என்றிருக்கிறார். எனில் அவரது அபிப்பிராயம் என்ன? பாரதம் என்பது அனைத்தையும்விட சிறந்த கிரந்தம்தான். ஆனால் ‘வாசுதேவஸ்ய மஹிமா பாரதே நிர்ணயோதித: பாஷாஸ்து த்ரிவிதாஸ்தத்ர மயாவ்யை சம்ப்ரதர்ஷிதா:, உக்தயோ மஹிமா விஷ்ணோ: சதோக்தோஹி சமாதினா’. இந்த ஸ்லோகம் ஹரிவம்சம் - பவித்யத் பர்வத்தில் சொல்லப்பட்டிருக்கும் வியாஸ வாக்கியம். நான், வாசுதேவனின் மகிமைகளை பாரதத்தில் விசேஷமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். ஆனால் அதில் பொதுவான மொழி, ரகசிய மொழி மற்றும் சமாதி மொழி என்று மூன்று விதங்களில் அதன் பொருளை சொல்லியிருக்கிறேன். விஷ்ணு மகிமைகளை மட்டும் சமாதி மொழியிலேயே சொல்லியிருக்கிறேன் என்பதை நிர்ணயத்தில் சொல்லியிருக்கிறார். 

இந்த வாக்கியத்தினால், பொதுவான மொழியினால் தெரியும் பாண்டவர்களின் கதை என்னும் ஒரு அர்த்தத்தை மட்டுமே மனிதர்கள் தங்களின் தகுதிக்கேற்ப புரிந்துகொள்ள முடியுமே தவிர, பகவந்தனின் மகிமைகளால் கூடிய ஆத்யாத்ம பாரதத்தின் உள் அர்த்தத்தை தேவதைகளாலும் புரிந்து கொள்வதற்கு சாத்தியமில்லை. நிர்ணய 2வது அத்தியாயத்தில்:

’ஏவமத்யாத்ம நிஷ்டாம் ஹி பாரதம் சர்வமுச்யதே | துர்விக்ஞேய மதஸ்சர்வைர் பாரதந்து சுரைரபி | ஸ்வயம் வ்யாஸோஹி தத்தேவ தத்பிரசாதத:. ததாபி விஷ்ணுபரதா, பாரதே சாரசங்க்ரஹ:’

இப்படியாக பாரதத்தின் உள்-அர்த்தத்தை ஆத்யாத்ம அர்த்தத்தை தேவதைகளாலும் புரிந்துகொள்வதற்கு சாத்தியம் இல்லை. அதன் அர்த்தத்தை வேதவியாசதேவர் மட்டுமே அறிவார். அவரின் அருளால் பிரம்மதேவர் அறிவார். ஆனாலும், பாரதம் முழுக்க விஷ்ணுவைப் பற்றியே சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். 

ஆகையால், பாரதத்தில் எவ்வளவு பகவன் மகிமைகள் இருந்தாலும், அதைப் படிக்க தகுதியற்ற மனிதர்களுக்கு அதனால் என்ன பயன்? ஆகவே, பகவந்தனின் விருப்பப்படி, பாரதத்தில் பகவந்தனின் மகிமைகள் சொல்லப்பட்டிருந்தாலும், நாரதர் பாகவத்தை இயற்றும்படி வேண்டினார். 

இதாவது வெறும் தேவாதிகாரியாகவே இருக்கிறது. அதனால், பாரதமானது துவக்கம் முதல் கடைசிவரை சாறு நிறைந்த கரும்பினைப் போன்று இனிக்கிறது. இப்படியாக, பாரதம் என்னும் கரும்பானது, 18 கண்களைக் கொண்டு, ஒவ்வொரு பர்வமும் சிறப்பான சாற்றினை முழுமையாகக் கொண்டுள்ளது. என்னதான் கரும்பில் சுவை இருந்தாலும், பல் முளைக்காத குழந்தைகளும், பல் விழுந்த வயதானவர்களும் அதை சுவைக்க முடியாது. அப்படியே பாரதம் படிப்பதும் மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை என்று நினைத்து, கரும்பைப் பிழிந்து சாற்றினை பிரித்தெடுப்பதைப் போல பாகவதத்தை இயற்றினார். ஆகவே பாகவதம் ‘அம்ருதத்ரவ சம்யுதம்’ அமிர்த ரசத்தினால் (முக்தி ரசத்தினால்) ஆனது என்று சொல்கின்றனர். இந்த பாகவதமும்கூட சாமான்ய மனிதர்களுக்கு ஞானத்திற்கான சாதனை அல்ல. ஏனெனில் ’நிர்மத்ஸராணாம் சதாம் வேத்யம்’ என்னும் வசனத்தால் தன்னைவிட உத்தமரிடம் பொறாமை கொள்ளாதவர்களே பாகவதம் படிப்பதற்கு தகுதியானவர் என்று சொல்லியிருப்பதால், ஸ்வரூப ஞானம் உள்ள தேவதைகளே பாகவதம் படிப்பதற்கு முக்கிய அதிகாரிகள் என்று சொல்லவேண்டியதாயிற்று. பாரதத்திற்கு பிரம்மதேவரே அதிகாரி என்றும், பாகவதத்திற்கு தேவதைகளே அதிகாரிகள் என்று மேலே சொன்னவைகளிலிருந்து தெரிய வருகிறது. ஆகையால், ஒரு பாத்திரத்தில் கரும்பு சாற்றினை வைத்தால், அதை களங்கமான தண்ணீர் என்று நினைத்து, அதன் உண்மையான ருசியை அறியாமல், புருஷர்கள் எப்படி அதை குடிக்காமல் இருப்பார்களோ அப்படி பாகவதத்தின் மகிமைகளை அறியாமல்; மற்றும் சம்ஸ்கிருதத்தை அறியாத மனிதன் அதிலிருக்கும் ரசத்தை குடிக்கமாட்டான். ஆகையால் பாகவதத்தில் ‘ரசிகா பாவிபாவுகா:’ பாகவதத்தின் ருசியை அறிந்தவர் யாரோ, அவரே இதை குடியுங்கள் என்று கூறினார். ஆகையால், பாகவதமும்கூட அனைவரும் படிக்கக்கூடியதாக இல்லை. ஆகையால், கன்னட மொழியிலேயே தத்வஞானம் தெரிவதற்கு, சுலபமாக வைராக்கியம் கிட்டுவதற்கு சாதனமான இந்த கிரந்தத்தை இயற்றுவதற்கு பகவத் அனுமதி கிடைத்தது. இந்த கிரந்தத்திற்கு ‘ஹரிகதாம்ருதசார’ என்று பெயரிட்டார். 

இதன் பொருள் என்ன? ஹரிகதை என்னும் அம்ருத ரசத்தினால், ஒரு கரும்பைப் போல இருக்கின்றன வேதங்கள், பாரதம் ஆகியவை. இவற்றிற்கு ஹரிகதை என்று பெயர். அம்ருதம் என்றால் அவற்றின் சாரம். ஆக, ஹரிகதாம்ருத என்றால் பாகவதம் என்று சொல்லலாம். அதன் சாரம் என்றால், கரும்பினை காய்ச்சி சர்க்கரை எடுப்பதைப் போல இந்த கிரந்தமும் இருக்கிறது. பாரதாதி கிரந்தங்கள் கரும்பு. அதன் சாறு பாகவதம். அதிலிருந்து கிடைக்கும் சர்க்கரை போன்றது இந்த கிரந்தம். வெல்லம் அல்லது சர்க்கரை இவற்றைப் பார்த்தால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்வர். போலவே, பகவத் பக்தரான பாமரர்களும் பண்டிதர்களும் கூட இந்த கிரந்தத்தை படிப்பதற்கு தகுதியானவர்கள் என்று சொல்வது போலாயிற்று. 

ஸ்ரீஜகன்னாததாசர் இந்த கிரந்தத்தை 32 சந்திகளாக பிரித்து, தொன்று தொட்டு வரும் பழக்கமாக கிரந்தத்தின் துவக்கத்தில், மூன்று வரிகளில் பொருள் நிறைந்த பல்லவியை இயற்றியிருக்கிறார். 

***

Wednesday, January 22, 2020

ஹரிகதாம்ருதசாரத்திற்கான முன்னுரை - 1

இந்த கலியுகத்தில் பெரும்பாலானவர்கள், சுகத்தை மட்டுமே வேண்டியவாறு, அந்த சுகத்தை அடையும் வழியை அறியாமல், சஜ்ஜனர்களும்கூட துர்ஜனர்களின் நட்பினால் அஞ்ஞானத்தைப் பெற்று  கெட்டுப்போவதைக் கண்டு, த்வாபர யுகத்தின் இறுதியில் பிரம்மாதி தேவர்கள், ஸ்ரீஹரியிடம் சென்று வேண்டினார்கள். ஸ்ரீஹரி, மகாதபஸ்வியான பராசரர் மூலமாக சத்யவதியிடம் வேதவியாசராக அவதரித்து, குறைந்த புத்தியுடைய மக்கள் அனைத்து வேதங்களையும் படிப்பது அசாத்தியம் என்று அறிந்து, அவற்றை ரிக்வேத, யஜுர்வேத, சாமவேத, அதர்வணவேத என்று நான்கு பாகங்களாகப் பிரித்தார். அந்த நான்கு வேதங்களே மேலும் பற்பல பாகங்களாகப் பிரித்து உலகத்தில் புகழ்பெற்றன. இந்த வேதங்களின் ஒரேயொரு பாகத்தையாவது படித்து, மக்கள் கடைத்தேறட்டும் என்பது வேதவியாசரின் விருப்பம். ஆனாலும், ‘சதுர்வேத்யபி யோ விப்ரோ வாசுதேவம் நவிந்ததி | வேதபார பராக்ராந்த:சவை ப்ராஹ்மண கார்தப:’ என்று சொல்வதைப் போல, எவ்வளவு வேதங்களைப் படித்தாலும், அந்த வேதங்கள் புகழ்வது ஸ்ரீஹரியையே என்று அறிந்து, அதன் அர்த்தங்கள் ஸ்ரீஹரியின் மகிமையையே விளக்குகின்றன என்று அறியாவிட்டால், அவன், வேதம் என்னும் பாரத்தை சுமக்கும், பிராமணன் ரூபத்தை சுமக்கும் கழுதை என்று மேற்கண்ட ஸ்லோகம் சொல்கிறது. 

ஆகையால், வேதத்தின் பொருளான தத்வஞானத்தை அறிவது மிகவும் கடினம் என்று தெரிந்து வேதவியாசர் ‘பிரம்ம சூத்திரத்தை’ இயற்றினார். பிறகு, வேதம் படிப்பதற்கு அதிகாரம் இல்லாத பெண்கள், சூத்திரர் இவர்களின் சாதனைக்காக ஐந்தாவது வேதமாகிய, ஸ்ரீஹரியின் மகிமைகளை சிறப்பாக விளக்கக்கூடிய, மகாபாரதத்தை இயற்றினார். இவ்வளவு செய்தும், தம் அவதாரத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்று கவலைப்பட்டு சிந்திக்கையில், ஸ்ரீஹரியின் சிந்தனையை அறிந்திருந்த நாரதர், வேதவியாசரிடம் வந்து, அவரால் மிகவும் வணங்கப்பட்டு, - ‘ஸ்வாமி! வேதங்களைப் பிரித்துக் கொடுத்து மந்தமதிகளை கடைத்தேற்றினீர்கள். வேதங்களை படிக்க முடியாதவர்களுக்காக, மகாபாரதத்தை இயற்றினீர்கள். ஆனால் ‘யதாதர்மா தயோஹ்யர்த்தா’ - பாரதத்தில் தர்மத்தை எவ்வளவுக்கு எவ்வளவு விளக்கியிருக்கிறீர்களோ, அவ்வளவு வாசுதேவனின் மகிமைகளை சொல்லவில்லை. ஆகையால், மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான ஞானம் அதிலிருந்து கிடைக்கவில்லை. ஆகவே, பாகவத தர்மத்தை விளக்கும்படியான பாகவதத்தை தாங்கள் இயற்றவேண்டும்’ என்று நாரதர் வேதவியாசரிடம் வேண்டினார். 

இதன்பிறகே, வேதவியாசர், பாகவதத்தை இயற்றினார் என்று பாகவத முதல் ஸ்கந்தத்தில் விளக்கியிருக்கிறார். பிறகு, பிரம்மசூத்திரம், பாரதம், பாகவதங்களையும் அவற்றின் உட்கருத்துகளை அறியாமல், குழப்பத்தில் ஆழ்ந்த மக்கள், அதையே விவாதித்து கஷ்டப்படும்போது, ஸ்ரீஹரியின் கட்டளைப்படி, வாயுதேவரே ஸ்ரீமதாசார்யராக அவதரித்து அவற்றின் தத்வ நிர்ணயத்தை செய்தார். அந்த கிரந்தங்களுக்கு டீகாசார்யரே முதலான அபரோக்‌ஷ ஞானிகள், மிகவும் அற்புதமான உரைகளை எழுதினர். அந்த கிரந்தங்களுக்கு பற்பல விளக்க கிரந்தங்கள் வெளிவந்து உலகப்புகழ் பெற்றன. ஆனால், இவை அனைத்தும் வெறும் சம்ஸ்கிருத வித்வாம்சர்களுக்கு மட்டுமே புரியுமே தவிர, வேறு யாருக்கும் பயன்படவில்லை. வித்வாம்சராக இல்லாதவர்களுக்கு அந்த கிரந்தங்கள் எதையும் நல்வழியையும் காட்ட முடியவில்லை. தைத்யர்களிடம்கூட பாண்டித்யம் இருக்கிறது. ஞான சாதனை மட்டும் ஆவதில்லை. 

ஆகையால், தகுதி பெற்றவர்கள் மட்டுமே சுதாதி கிரந்தங்களைப் படித்து முக்தி அடைகிறார்களே தவிர, தகுதி இல்லாத மற்றவர்களுக்கு அவை பயன்படவில்லை. ஜயதீர்த்த விஜயத்தில் ‘சேஷாதீனாமகம்யம் தவ முகஜனிதம் சாஸ்திரமாலோட்ய கீவா வியாக்யாஸ்ம்ருந்தீதி ப்ருஷ்ட:’ என்னும் வாக்கியத்தில், சேஷாதி தேவர்களுக்கும்கூட இதன் தத்வஞானம் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், சாதாரண வித்வாம்சர்கள் இந்த கிரந்தம் ஞானசாதனைக்கு பயன்படாமல், ‘சுதா கிரந்தத்தில் நான் சிறந்தவன். எனக்கு சமமானவர்கள் யாரும் இல்லை’ என்று சொல்லி, தமது பாண்டித்யத்தை வெளிக்காட்டியவாறு திரிவதற்கு பயன்படுமே தவிர அவர்களுக்கும் ஞானசாதனை ஆவதில்லை. 

ஆகையால், சுதாதி கிரந்தங்களுக்கு டிப்பணிகளை எழுதிய வியாசராஜர் (சந்திரிகாசார்யர்), ஸ்ரீபாதராஜர், ஸ்ரீவாதிராஜர் ஆகிய யதிசிரோமணிகள் கலந்தாலோசித்து, சம்ஸ்கிருதம் அறியாத மற்றவர்கள், மிகவும் சுலபமாக ஞான, பக்தி, வைராக்கியங்களை பெறுவதற்காக கன்னட மொழியில் பத, சூளாதிகளை இயற்றி, இந்த வழியிலேயே மக்களை மேம்படுத்த வேண்டும் என்றெண்ணியபோது, ஸ்ரீஹரியின் ஆணைப்படி சாக்‌ஷாத் நாரதரே, பண்டரிபுரத்தின் அருகில் புரந்தரகட என்னும் இடத்தில், வணிக குலத்தில் பிறந்து, அதிக செல்வத்தினால் கர்வியாக கஞ்சனாக இருந்தபோது, ஸ்ரீஹரி அவருக்கு அருளி, வைராக்கியத்தைக் கொடுத்து, தம் பற்பல கோடி மதிப்புள்ள செல்வத்தை தானம் செய்து, தாசத்வத்தை பின்பற்றி, ஸ்ரீவியாசராஜ ஸ்வாமிகளின் சன்னிதானத்திற்கு வந்தார். ஸ்வாமிகளும் மிகவும் மகிழ்ச்சியுற்று அவரை வரவேற்று, அவர் மூலமாக தாசபரம்பரையை வளர்க்கவேண்டும் என்று எண்ணி, அவருக்கு புரந்தரவிட்டலா என்னும் அங்கிதத்தைக் கொடுத்து, சாஸ்திரங்களின் சாரத்தை பதங்கள் சூளாதிகள் மூலமாக மொழிபெயர்த்து, மக்களை மேம்படுத்தி, தாசத்வம் பரம்பரையாக வளர்வதற்கு வழிசெய்யவும் என்று ஆணையிட்டார். 

இதற்கு முன்னரே, ஸ்ரீவியாசராயரும், ஸ்ரீஸ்ரீபாதராயரும் கன்னட பதங்களை இயற்றியிருந்தாலும், அவர்கள் யதிகளாக இருந்ததாலும், வேதாந்த கிரந்தங்களுக்கு டிப்பணி எழுதக்கூடிய கடமைகள் அவர்களுக்கு இருந்ததாலும் தாசர் என்னும் பெயர் அவர்களுக்கு வரவில்லை. ஆகையால், புரந்தரதாசரே தாசகூடத்திற்கு மூலபுருஷர் என்று சொல்லவேண்டியதாகிறது. இதற்கு முன்னர், தாசர் என்னும் சொல் இல்லாமல், ஆசார்யர் என்றே சொல் இருந்தது. ஆசார்யர் என்றால் உபதேசித்த குரு என்ற பொருள் வருகிறது. அதற்கு தகுதி இருந்தால் மட்டுமே, ஆசார்யர் என்னும் சொல் அதற்குத் தக்க பொருள் தருகிறது. இக்காலத்தில், தகுதி இல்லாதவர்களும், ராம என்னும் சொல்லின் பொருள் தெரியாதவர்கள்கூட, ஆசார்யர் என்று அழைத்தாலே கர்வம் கொள்கிறார்கள். மகானுபாவரான ஸ்ரீஜகன்னாததாசரின் வாழ்க்கையே இதற்கு சரியான உதாரணமாகிறது. அதற்காகவே, புரந்தரதாசர், தாசர் என்று அழைத்துக் கொண்டார். ஆசார்யர் போல தாசர் குரு ஸ்தானத்தை கொடுக்கவில்லை. மாறாக தான் எல்லோரைவிடமும் குறைந்தவன் என்ற எண்ணத்தைக் கொடுக்கக்கூடியது. ஆகவே தானும், தனக்குப் பின்னால் வரக்கூடிய பரம்பரையும் ஹரிதாசர்கள் என்றே அழைக்கப்படுவர் என்றார். ஆகவே, புரந்தரதாசருக்குப் பிறகு, தாசகூட, வியாசகூட என்று இரண்டு வழிகள் தோன்றின. 

குறைந்த புத்தி உள்ளவர்கள் மட்டுமே இந்த தாசகூட, வியாசகூட இருவருக்கிடையே குழப்பம் / சண்டை விளைவிக்கின்றரே தவிர, ஞானிகள் எப்போதும் அப்படி நினைப்பதில்லை. சுளாதி கிரந்தங்களைப் படித்து, ஸ்வாமிகளின் சிஷ்ய பரம்பரையில் சேர்ந்து, வேதாந்த கிரந்தங்களைப் படித்து வரும் ஆசார்யர்கள் அனைவரும் வியாசகூடத்தவர் என்றும், வேதாந்த கிரந்தங்களுக்கு உரை எழுதும்போது கன்னடத்தில் பதம், சுளாதி போன்றவற்றை இயற்றி, சிஷ்ய பரம்பரையில் அங்கிதத்தைப் பெற்றவர்களை தாசகூடத்தவர் என்றும் நினைக்கவேண்டுமே தவிர, ஸ்ரீமதாசார்யரின் சித்தாந்தங்களுக்கு எதிராக, தாசகூடத்தவர்கள் ஒரு எழுத்தையும் எழுதவில்லை என்று நம்பவேண்டும். 

புரந்தரதாசர், பற்பல சாஸ்திரங்களை படித்து, மிகச்சுலபமாக பகவத்பக்தி பிறக்கும் வழியினை எடுத்துக்கட்டும் கன்னட பதங்களை இயற்றினார். இந்த பதங்கள் எவ்வளவு சுலபமாக இருந்தாலும், குருகளிடமிருந்து உபதேசம், அங்கிதம் பெற்று, குருவின் அருளுக்கு பாத்திரராகிருந்தால் மட்டுமே, அபரோக்‌ஷமோ, முக்தியோ கிடைப்பதற்கு சாத்தியம் என்று சொல்லி, அதற்கேற்ப பல பாடல்களை இயற்றியுள்ளார். அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்ப்போம். 

ராகம்: நாதநாமக்ரியை
தாளம்: சாபு

சுலபவல்லவோ மஹானந்த ||ப||
அதர வலஹ திளியபேகோ குரு தயாதிந்த ||அப||

பெக்கன்னு இலி நுங்கோதனக | கடு
ரக்கசிய கண்டு கிளி நுங்கோதனக ||
மக்கள பக்‌ஷிசோதனக | மத
சொக்கித கஜவன்னு நரி நுங்கோதனக ||1||

இப்பரு ஒந்தாகோதனக | மூரு
ஹப்பித பெட்டவ நொண நுங்கோதனக |
ஒப்பள கொடோதனக | கெட்ட
குப்பியு ராஜஹம்ஸனாகோதனக ||2||

ஒளஹொர கொந்தாகோ தனக |
தா கண்டேனெம்போ பாவ பைலாகோ தனக |
பெளகினொளகெ காணோதனக |
சிரி புரந்தரவிட்டலன தய பாஹோதனக ||3||

இதன் பொருள்:

மஹானந்த = முக்தி. இதனை அடையவேண்டுமெனில் ‘அதர வலஹ திளியபேகோ குரு தயாதிந்த’ - குருவின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரராகி, அவரின் உபதேசத்தினால் மோட்சத்தின் வழியை அடையவேண்டும். அப்படியில்லை எனில், ‘சுலபவல்லவோ மஹானந்த’. அப்படி குருவின் அருளினால் மிகச் சுலபமாக முக்தியை அடையலாம். இதன் ரகசியமென்ன? ‘பெக்கன்னு இலி நுங்கோதனக’ எலியைப் பிடிப்பதற்காக காத்திருக்கும் பூனையைப் போல, நாம் கஷ்டப்பட்டு சேகரித்திருக்கும் புண்ணியத்தை அழிக்கக் காத்திருக்கும் கர்வம், தற்பெருமை (நான், எனது என்னும் பாவம்) ஆகியவை முக்திக்கு பெரும் தடையாக இருக்கின்றன. எலியானது பூனையை பிடித்து உண்பது எப்படி சாத்தியமில்லையோ, அப்படியே கர்வம், தற்பெருமை ஆகியவற்றை ஒழிப்பது கஷ்டமே ஆயினும், மனம் என்னும் எலிக்கு இறையருள் என்னும் பலத்தைக் கொடுத்து, குருவின் அருளினால் தைரியத்தை அதிகமாகப் பெற்று, நான், எனது என்னும் பூனையை தின்பதுபோல செய்யவேண்டும். குருவின் அருளினால் உண்டாகும் இறையின் பிரசாதத்தினாலேயே நான், எனது என்னும் எண்ணங்களை போக்கவேண்டும். சாதாரண முயற்சிகளால் இது சாத்தியம் இல்லை என்பது பொருள். 

***

Tuesday, January 21, 2020

ஸ்ரீபத்பனாப தாசர் இயற்றிய பாடல்கள்

ஆசாரியர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தம் இன்னலுக்கு தீர்வளித்த குருவின் கருணையை எண்ணி மகிழ்ந்தார். தம் குருவை வணங்கி குரு ஸ்தோத்ரத்தை கன்னடத்தில் இயற்றினார். அந்தப் பாடல் பின்வருமாறு:

தாசவர்யரே நிம்ம கருணகேனெம்பே

ஸ்ரீவாச தந்தேமுத்துமோகனவிட்டலாக்யா

பந்துகளு எனகில்லா பதுகினலி சுகவில்லா
நிந்து நொந்தெனோ பஹள பயதொளகே
தந்தே குருவர நிம்ம கருணதிந்தலி பவத
பந்த முக்திய பொந்தி சுகியாதே நானீக

அபரோக்‌ஷதல்லி தம்ம நிஜ ரூபவனெ தோரி
ஸ்வரோக்‌ஷதல்லி திவ்ய அங்கிதவ கொட்டு
சாபவாதத பாப சங்கவனு சுட்டென்ன
காபாடிதா மஹிமெ பொகளலென்னொசவே

தைத்யாரி ஸ்ரீ பத்பனாயவிட்டலன ரூப
நித்யாபரோக்‌ஷதல்லி நோடி சுகதி
மத்தெல்ல சிஷ்யனு தத்வபோதெயிந்த
நித்ய சலஹுவ திவ்ய தேவாம்ச சம்பூத

தன் குருவின் மகிமைகளைப் புகழ்ந்து கொண்டாடி பத்பனாபதாசர் சமஸ்கிருதத்திலும் குருஸ்தவனத்தை இயற்றியுள்ளார். அதற்கான பொருளுரையையும் அவரே வழங்கியுள்ளார். (ஆதாரம்: பரமார்த்த சந்திரோதய, எண்:4 இதழ்: 5, பிரமோதூத, சிராவண - 10.8.1930). அந்த ஸ்லோகங்கள் பின்வருமாறு உள்ளன.

தத்வஞானம் வஹந்தீம் சுஜன சுதயிதாம்
பூர்ணபோதார்ய சாஸ்திர க்‌ஷீராம்போதிம்
ப்ரவிஷ்டாம் சகல பத சுளாதி த்வைத ஹம்சாதி
யுக்தாம் | சுப்ரமண்யாக்ய சுரேஸ்ஸுமுக
கமலஜம் சர்வ பாபாப ஹந்தீம் | வந்தே
வாக்தேவதாக்யம் சகல பதித சங்கம்
பாவயந்திம் துய்யகங்காம் ||1||

பொருள்:

தத்வஞானம் வஹந்தீம் = தத்வஞான என்னும் கடலிலிருந்து
சுஜன சுதயிதாம் = சஜ்ஜனர்களுக்கு மிகவும் பிடித்தமான
பூர்ணபோதார்ய சாஸ்திர க்‌ஷீராம்போதிம் ப்ரவிஷ்டாம் = ஸ்ரீபூர்ணப்ரக்ஞாசார்யர் அவர்களின் சாஸ்திரம் என்னும் பாற்கடலில் சங்கமிக்கும்
சகல பத சுளாதி த்வைத ஹம்சாதி யுக்தாம் = சுளாதிகள் என்னும் ஹம்ச பட்சிகள்
சர்வ பாபாப ஹந்தீம் - வணங்கும் அனைவரின் பாவங்களையும் போக்கும்
சகல பதித சங்கம் பாவயந்தீம் - அனைத்து மக்களின் பாவங்களையும் போக்கும்
சுப்ரமண்யாக்ய சுரே: - சுப்பராயர் என்னும் ஞானியின்
சுமுககமலஜம் - இனிய மங்கலமான தாமரையைப் போன்ற முகமுள்ள
வாக்தேவதாக்யம் - வாக்தேவதா எனப்படும்
துய்யகங்காம் - ஆகாச கங்கையான
வந்தே - வணங்குகிறேன்.

உரை:

இந்த ஸ்லோகம், ஸ்ரீதாசரின் சரளமான வாக்கினை, கங்கையாக பாவித்து வணங்குகிறது. கங்கை என்று சொன்னால், இதன் உற்பத்தி எங்கு நடக்கிறது? எங்கு முடிகிறது? எப்படி பாய்கிறது? இந்த கங்கையினால் பயன்பெறுகிறவர்கள் யார்? இந்த கேள்விகளுக்கு இந்த ஸ்லோகத்தில் பதில் கிடைக்கிறது. 

ஸ்ரீதாசரின் முக-கமலத்திலிருந்து பிறக்கும் சொற்களே கங்கையாகும். அவர் வழங்கும் தத்வஞானோபதேசமே கங்கை பாயும் வழியாகும். சஜ்ஜனர்களின் மனதை மகிழ்ச்சிப்படுத்துகிறது. ஸ்ரீமதாசார்யரின் சாஸ்திரங்கள் என்னும் பாற்கடலில் போய் சேருகிறது என்றால், இவரின் தாசகூட உபன்யாசங்கள் எல்லாம் ஸ்ரீமதாசார்யரின் சாஸ்திரங்களில் போய் சேருகிறது என்று பொருள். தாசரின் பாடல்களே, சூளாதிகளே ஹம்சாதி பறவையைப் போல, இவரது வாய் வழியே வந்து அலங்கரிக்கின்றது. கங்கையைப் போலவே இவரது உபன்யாசமும் நம் அனைவரின் பாவங்களையும் போக்கி, அனைவரையும் புனிதப்படுத்துகிறது. இத்தகைய கங்கையை வணங்குகிறேன். இதுவே இந்த ஸ்லோகத்தின் பொருள்.

யம்ஹி தாசார்ய வியாசார்ய ஜாதே
பார்யே குணான்விதே | அஸ்பர்தயாபி
சேவந்த்யௌ பதிமேகந்தமாஷ்ரயே ||2||

பொருள்:
யம் ஏகம் பதிம் - இந்த தாசரானவர்
தாசார்ய வியாசார்ய ஜாதே - தாசகூட மற்றும் வியாசகூட இரண்டிலும் சேர்ந்தவரான
குணான்விதே - நற்குணங்களைக் கொண்ட
பார்யே - பிரமேய ரூபங்களர்களான இரு பெண்கள்
அஸ்பர்தயாபி - கொஞ்சம்கூட யாரிடமும் த்வேஷம் பாராட்டாமல்
சேவந்த்யௌ - வணங்கிக் கொண்டிருப்பவர்
தம் - அத்தகைய தாசராயரை
ஆஷ்ரயே - வணங்குவேன். 

விளக்கம்:
தாசகூடத்தின் நோக்கத்தையே அறியாமல் அதாவது தாசராயரை பார்க்காமலேயே, உலகத்தில் பலர் அவரை ஏளனம் செய்கிறார்கள். போலவே, தாசகூடத்தை சேர்ந்த சிலரே, தாசத்வேஷிகளாக மாறி, தாசரின் பத-சூளாதிகளுக்கு சரியான பொருளை புரிந்துகொள்ளாமல், ஸ்ரீமதாசார்யரின் கிரந்தங்களுக்கும், டீகைக்கும் பொருந்தாத அர்த்தத்தை சொல்லிக்கொண்டு, ஸ்ரீமதாசார்யரின் துரோகத்திற்கு காரணமாகின்றனர். அபரோக்‌ஷ ஞானிகளான ஸ்ரீபாதராயர், சந்திரிகாவை இயற்றிய ஸ்ரீவியாசராஜர் ஆகியோர், தாசவியாசகூடம் என்று இரண்டிலும் அறிஞர்களாக விளங்கியிருந்ததை இவர்கள் மறந்தேவிட்டனர். 

நம் தாசராயர், தற்போதைய பல தாசர்களைப் போலல்லாமல், தாசரின் பத-சூளாதிகளுக்கு வேதாந்த சாஸ்திரங்களில் தேடி அவற்றிலிருந்து விளக்கங்களை சொல்கிறார். தற்போதைய தாசர்களில், ஒருவர் தாசகூடத்தை சேர்ந்தவர் என்றால், அவருக்கு வியாசகூடத்தவர் மேல் த்வேஷம் வந்துவிடுகிறது. ஆனால், நம் தாசர் இரண்டிலும் சிறந்தவர் ஆகையால், நான் அவரையே வணங்குகிறேன். 

சுப்பராயேதி விக்யாதம், சுப்ரமண்யாக்ய ஷண்முகம் 
அஞ்ஞான சுரஹந்தாரம் ஞானசேனாபதீம் பஜே ||3||

சுப்பராயதாசரின் பெயருக்கு தக்க காரணத்தை விளக்குகிறது இந்த ஸ்லோகம். 

பொருள்:
அஞ்ஞான சுரஹந்தாரம் - அஞ்ஞானம் என்னும் தைத்யரை நாசம் செய்யும்
ஞானசேனாபதிம் - ஞானம் என்னும் சைன்யத்திற்கு அதிபதியான
சுப்பராயேதி விக்யாதம் - சுப்பராய தாசர் என்று உலகத்தில் புகழ்பெற்றிருக்கும்
சுப்ரமண்யாக்ய ஷண்முகம் - சுப்ரமண்யன் என்னும் ஷண்முகனை 
பஜே - வணங்குகிறேன். 

விளக்கம்:
ஷண்முகனுக்கு சுப்ரமன்யன் என்றும் சுப்பராயன் என்றும் பெயர்கள் இருப்பது பொருத்தமே. சுப்பராய சஷ்டி, சுப்ரமண்ய சஷ்டி, ஸ்கந்த சஷ்டி என்று மக்கள் கொண்டாடுவதால், இதைப் பற்றி நாம் மேலும்  விளக்கவேண்டியதில்லை. நம் தாசராயருக்கும், இதே பெயர் இருப்பதனால், இந்த பெயர் வெறும் ஒரு குறியீடு என்றில்லாமல், அவருக்கு காரணப்பெயராகவே அமைந்துவிட்டது. ஆகையால், இவரை ஷண்முகனின் அம்சம் என்று கூறினால் மிகையாகாது. இது ஈசனின் விருப்பம் என்றே அறியவேண்டும். எப்படியென்றால், ஒரு சேனாதிபதியாக இருந்து ஷண்முகன் எப்படி தைத்யர்களை அழிப்பது அவனின் கடமையாகிறதோ, அது போலவே நம் தாசராயரும் தத்வஞானம் என்னும் தேவதா சைன்யத்திற்கு தலைவராகி, அஞ்ஞானம் என்னும் தைத்ய சைன்யத்தை சின்னாபின்னமாக நாசப்படுத்துகிறார். ஆனால், ஷண்முகன் என்றால் ஆறு தலைகளைக் கொண்டவன் என்று பொருள். இவருக்கு ஆறு தலை எங்கே இருக்கிறது என்று கேட்டால், ஷண்முகனுக்கு ஆறு, ருத்ரருக்கு ஐந்து என்று தலைகள் இருந்தாலும், எப்போதும் அவற்றை அவர்கள் காட்டுவதில்லை. எப்போதும் அவர்கள் ஒரே தலையுடன் இருந்து, பக்தர்கள் யாருக்கேனும் சந்தேகம் வந்தால்மட்டுமே, ஐந்து அல்லது ஆறு தலைகளுடன் காட்சி தருவார்கள். 

இதைப்போலவே, நம் தாசராயருக்கும் நமக்குத் தெரியாது ஆறு முகங்கள் கண்டிப்பாக இருக்கும். அது அஞ்ஞானிகளுக்கு தெரிவதில்லை. அவை என்னவென்றால்: ஞான, பக்தி, வைராக்கியம், தர்ம, அர்த்த, காம என்னும் ஆறு முகங்களே ஆகும். இந்த முகங்கள் இருக்கும் வரிசை என்னவென்றால், முக்கிய முகங்கள் மூன்று, இதர முகங்கள் மூன்று. இதே வரிசையில் அவை உள்ளன: ஞான, பக்தி, வைராக்கியம், தர்ம, அர்த்த, காம. முக்கியமான ஞான, பக்தி, வைராக்கியங்களுக்கு, உதவியான தர்ம, அர்த்த, காம - என்றால் இதன் பொருள் என்ன? 

ஞானத்திற்கு -> தர்மம். அதாவது, இவரிடத்தில், வர்ணாசிரமத்திற்குத் தக்க தர்மங்களே நிரம்பியிருக்கின்றன. அதாவது, பக்தர்களுக்கு பகவத் தத்வங்களை உபதேசம் செய்வது, மற்றவர்களுக்கு தம்மால் எவ்வித தொந்தரவுகளும் ஆகாமல், பாவ/புண்ணியம் முதலானவற்றை பொறுத்துக் கொள்ளும்படியான தர்மம் இவரிடத்தில் முக்கிய குணங்களாக இருக்கின்றபடியால், ஞானத்திற்கு பொருத்தமாக தர்மத்தைக் குறிப்பிடுகிறோம். 

பக்தி என்னும் தலைக்கு, அர்த்த என்னும் தலை பொருத்துகிறோம். இதன் பொருள் என்னவென்றால், அதிக செல்வங்களை சேர்த்து, மனைவி மக்களுக்கு அதிகப்படியான ஆபரணங்களை சேர்த்து வைக்கும் நோக்கம் இவருக்கு இல்லை. ஸ்ரீஹரியின் விசேஷமான பக்தியை செய்து, அதிலிருந்து கிடைக்கும் புருஷார்த்த ரூபமான அர்த்தமே இவரிடம் இருக்கிறது. 

வைராக்கியம் என்னும் தலைக்கு, ஆறாவது தலையான காமத்தை பொருத்துகிறோம். காமம் என்றால் ஆசை. இவருக்கு தற்காலிகமான சுகங்களைப் பெறுவதில் ஆசையில்லை. வைராக்கியத்திற்கு சேர்ந்த காமம் என்றால், மகாபாரத்தில் பீமசேனர், காமத்திற்கு இணையானது வேறொம்றும் இல்லை என்று நிரூபித்திருப்பார். அது என்ன காமம் என்றால், முக்திக்கு முக்கிய காரணமான ஸ்ரீஹரியின் பரம பிரசாதத்தை விரும்புவது. அதன்படியே, இவருக்கு வாழ்க்கையில் வைராக்கியமும், ஸ்ரீஹரியின் பரம பிரசாதத்தின் மேல் விருப்பமும் இருப்பதால், வைராக்கியத்திற்கு பொருத்தமான தலையாக காமத்தைக் கூறுகிறோம். 

இப்படியாக ஆறு முகங்களைக் கொண்டிருப்பதால், இவரை ஷண்முகர் என்று சொல்வதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஸ்ரீஹரியின் விருப்பத்தினாலே இத்தகைய பொருளை நான் எழுதியிருப்பதால், இதை யாரும் ஒப்பிக் கொண்டாலும், ஒப்பிக் கொள்ளவில்லையென்றாலும், அதில் எனக்கு எவ்வித லாப நஷ்டங்களும் இல்லை. ‘சுப்ரமண்யாக்ய ஷண்முகம்’ என்று மூலத்தில் இருக்கும் சுப்ரமண்ய சொல்லின் பொருளை விளக்கியிருக்கிறேன். அதாவது, பிராமண என்னும் சொல்லிற்கு, யக்ஞோபவீத முதலான சின்னங்களே காரணம் இல்லை; ‘பிரம்ம அணதீதி பிராம்மண:’ என்று சாஸ்திரகாரர்கள் விளக்கம் அளிக்கிறார்கள். பரபிரம்மனை அடையும் சாதனை செய்பவனே பிராம்மணன். இத்தகையவரிடம் அன்பு செலுத்துகிறவன் பிரம்மண்யன் அல்லது மேலே கூறிய பிராமண லக்‌ஷணங்களை உடையவன். சுப்ரமண்யன் என்றால், பிரம்மனை அடைவதற்கு சிறப்பான சாதனைகளை செய்பவன் என்று பொருள். 

ஞான பக்தி வைராக்கியங்களினால், தர்மார்த்த காமங்களை பின்பற்றுபவன் என்றால்: ஸ்ரீஹரியை அடைவது ஒன்றே முக்கியமான செயலென்று தெரிவதால், சுப்ரமண்ய என்னும் சொல்லிற்கும், ஷண்முக என்னும் சொல்லிற்கும் ஒரே பொருள் என்று தெரிகிறது. ‘சுப்பராயேதி விக்யாதம்’ என்றால், மக்கள் இவரை சுப்பராய தாசர் என்று அழைக்கின்றனர் என்று பொருள். 

சு என்றால் சுகம். வாதி என்றால் நாசம் என்று பொருள். தற்காலிக சுகங்களை நாசம் செய்யும் அஞ்ஞானம் என்று பொருள். ‘சுவம்வாதீசுவ: பவயோரபேதரதேவசுப்ப:’ என்றால், சுகத்தை நாசம் செய்யும் அஞ்ஞானம். அத்தகைய அஞ்ஞானத்தை ஞானோபதேசத்தினால் பரிகாரம் செய்பவருக்கு சுப்ப என்று பெயர். சம்ஸ்கிருதத்தில் ‘ப’’வ’ இரண்டிக்கும் வேறுபாடு இல்லாததால், சுவ்வ என்னும் சொல்லே, சுப்ப என்றாயிற்று. ரா என்றால் செல்வம். மொத்தத்தில், அஞ்ஞானத்தைப் போக்கி ஞானத்தைக் கொடுப்பவர் என்று சுப்பராயர் என்னும் சொல்லிற்கு பொருள் வந்தது. இத்தகைய மகானுபாவரான, ஷண்முக சொல்லினால் குறிப்பிடுபவரான சுப்பராய தாசரை வணங்குவேன் என்பதே இந்த ஸ்லோகத்தின் பொருள். 

சுப்ரமண்யாக்ய சூர்யந்தம் ஸ்வாந்த த்வாந்த
நிக்ருந்தகம் | தத்வஞான கரை: பூர்ணம்
குருவர்யம் அஹம் பஜே ||4||

விளக்கம்:
இந்த ஸ்லோகம், தாசராயரை சூரியன் என்று வர்ணிக்கிறது. சூரியன், புற இருட்டினை அழிப்பவன். இவரோ, ’ஸ்வாந்த த்வாந்த நிக்ருந்தகம்’ - அக அஞ்ஞானத்தை அழிப்பவர். தத்வஞான கரை: பூர்ணம் - தத்வஞானம் என்னும் கிரணங்களால். குருவர்யம் - சிறந்த குருவான. தம் - முன் சொன்ன மகிமைகளைக் கொண்டவரான. சுப்ரமண்யாக்ய சூர்யம் - சுப்ரமண்ய பெயரைக் கொண்டவரான சூரியனை, அஹம் - நான், பஜே - வணங்குகிறேன். 

சதுஸ்லோகாத்மகம் இதம் குரோ: சுகுண
சம்ஸ்தவம் | பத்மனாபாக்ய தாசேன
க்ருதம் ஸ்ரீ குருவனுக்ரஹாத் ||5||

விளக்கம்:
நான்கு ஸ்லோகங்களினால் குருவின் மகிமைகளைக் கொண்டாடும் இந்த கிருதி, அந்த குருவின் அருளாலேயே, அவரின் சிஷ்யன் என்று பெயர் பெற்றுள்ள பத்மனாப தாசனால் இயற்றப்பட்டு, குருவின் சரணகமலங்களில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

ஸ்ரீ குருவந்தர்கத ஸ்ரீ தந்தேமுத்துமோகனவிட்டல: ப்ரீயதாம் ||

இப்படியாக, மிகவும் அற்புதமான நடையில் இயற்றப்பட்டுள்ள அவரது குரு வணக்கம் மற்றும் அதன் பொருளில் பக்திரசம் ததும்பியது, பத்பனாப தாசரின் பாண்டித்யத்திற்கு மற்றும் அவரது குருபக்திக்கு சாட்சியாக இருக்கிறது. 

அங்கித உபதேசமான பிறகு, குருவின் ஆணைக்கு கட்டுப்பட்டு, ஹரிகதாம்ருதசாரத்திற்கு மிகச்சிறந்த உரையை இயற்றினார். தம் உரையை குருகளின் சமர்ப்பித்த சில நாட்களிலேயே, பத்மனாப தாசர் இறைவனடி சேர்ந்தார். 

ஹரிகதாம்ருதசாரத்திற்கு பத்பனாபதாசர் இயற்றியுள்ள உரை மிகவும் அபூர்வமானது. பண்டித பாமரர்களால் கொண்டாடப்படுகிறது. மூல பாகவத ஸ்லோகங்கள் மற்றும் புராண வாக்கியங்களை உதாரணம் கொடுத்து ஹரிகதாம்ருதசாரத்தின் உட்பொருளை சரியாக விளக்கும் இந்த உரையானது தற்போதும் அனைவராலும் படிக்கப்படுகிறது. தந்தெமுத்துமோகனதாசரின் பேரன்பினால் இத்தகைய அபூர்வமான உரை ஹரிதாச உலகத்திற்கு கிடைத்துள்ளது. 

ஸ்ரீதாசர், தமது உரையை ஸ்ரீபிரமோத நாம சம்வத்சரம் மாக பகுள ஏகாதசி வியாழக்கிழமையன்று (13-3-1931) முடித்து, தமது குருகளிடம் சமர்ப்பித்தார். சன்யாச ஆசிரமத்தை துறந்த சமயத்தில், ஸ்ரீஸ்ரீ சத்யத்யான தீர்த்தர் கூறியதை பின்பற்றாமல் கவலைப்பட்டு, அதன் பரிகாரமாக என்று சொல்வதைப் போல, ஸ்ரீ பத்பனாபதாசர், தம் குருகள் சொன்னதைப் போல, இந்த வேலையை செய்துமுடித்து, சில நாட்களிலேயே இறைவனடி சேர்ந்தார். 

ஆதாரங்கள்:
1. பரமார்த்த சந்திரோதயத்தில் வெளிவந்த கட்டுரைகள்.
2. ‘பரமப்ரிய சுப்பராய தாசர்’, குருக்ருபா கிரந்தமாலை, மைசூர்
3. தந்தெமுத்துமோகன தர்சன - பரிமள பிரகாஷன, பெங்களூரு. 50.


***

Monday, January 20, 2020

ஸ்ரீபத்பனாப தாசர் - சிறு அறிமுகம்

ஸ்ரீஹரிகதாம்ருதாசர பாவபிரகாசிகா வியாக்யானத்தை எழுதிய
ஸ்ரீ பத்பநாபதாசர் (பல்லடம் மாதவாச்சார்) குறித்து ஒரு அறிமுகம்

மாதவாச்சார் கோயம்பத்தூர் அருகில் உள்ள பல்லடம் கிராமத்தில் பிறந்தவர். பாகவத மற்றும் சுதா ஆகியவற்றில் திறமை பெற்று அப்போதைய உத்தராதி மடாதீசரான ஸ்ரீசத்யத்யான தீர்த்தரின் பூரண நல்லாசியைப் பெற்றிருந்தார். கிருகஸ்தராக இருந்தபோது இரு மக்களை பெற்றிருந்தார். ஒரு நாள் சன்யாச ஆஸ்ரமத்தையும் பெற்றார். சிறிது காலம் சன்யாசியாக இருந்து பின்னர் மறுபடி தன் மனைவி மக்களுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார். இதற்காக ஏதேனும் பிராயச்சித்தம் இருக்கிறதா என்று ஸ்ரீசத்யத்யானரிடம் இவர் கேட்க, அவர் சன்யாசி ஆசிரமத்தை விட்டவருக்கு தேகத்யாகமே (மரணம்) பிராயச்சித்தம் என்று கூறியதாக தெரிய வருகிறது. முக்கியமான பீடாதிபதிகளாக இருந்து, சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருந்தபடி ஒரு பிராயச்சித்தம் சொன்னாலும், அதை ஆசாரியரால் கடைப்பிடிக்க முடியவில்லை. இதனால், ஸ்ரீபாதங்களவராலும், தம் நண்பர்களாலும் பகிஷ்காரம் செய்யப்பட்டு, தம் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக ஆசாரியர் ஒரு அச்சகத்தையும், புத்தகத்தை பைண்ட் செய்யும் தொழிலையும் நடத்தலானார். 

இப்படி இருந்தபோது, தந்தெமுத்துமோகனதாசரின் சிஷ்யரான ஸ்ரீராமபுரத்தின் கே.சேஷகிரிராவ் அவர்களின் பரிச்சயம் ஆசாரியருக்குக் கிடைத்தது. தாசரின் உபன்யாசங்களை சேகரித்து வந்த சேஷகிரிராவ் அவர்கள் அவற்றை பைண்ட் செய்வதற்காக ஆசாரியரின் கடைக்கு வந்து கொடுத்தார். அவற்றை பைண்ட் செய்யும்போது, ஆசாரியரின் பார்வை அந்த புத்தகத்திலிருந்த தாசரின் உபன்யாசங்களின் மேல் விழுந்தது. சேஷகிரிராயரிடமிருந்து தாசரின் மகிமைகளை அவ்வப்போது கேட்டுவந்தாலும், ஆசாரியருக்கு தாசரின் மேல் நல்ல அபிப்பிராயம் இன்னும் வந்திருக்கவில்லை. மேலும் தாசரி நடை உடை பாவனைகள், ஆசாரியருக்கு விசித்திரமாக தோன்றின. 

பாண்டித்யம் (திறமை) இல்லாதவர்கள் செய்யும் தந்திரமே இவை (விசித்திரமான நடை, உடை ஆகியன) என்னும் தப்பான அபிப்பிராயமே தாசர் மேல் அவருக்கு இருந்தது. ஆனால், தாசரின் தங்குதடையற்ற உபன்யாசத் திறமை, அதற்காக அவர் சாஸ்திரங்களிலிருந்து எடுத்துக் கொடுக்கும் உதாரணங்கள், அவரின் சிறந்த ஸ்ரீஹரி பக்தி, மிகவும் கடினமான விஷயங்களை மிகவும் சுலபமான நடையில் சொல்லும் திறமை, குறுகிய மனதுடையவர்களை தெளிய வைத்து விசாலமானதாக்கும் அவரது பாடல்கள் - இவையெல்லாவற்றையும் சேர்த்து அவர் வழங்கிய உபன்யாசங்களைப் படித்த ஆசாரியர் - தாசர் ஒரு அபூர்வமான பண்டிதர் மட்டுமல்ல, பாண்டித்யத்தை மீறிய ஞானிவரேண்யர் - என்று புரிந்துகொண்டார். பரந்த அறிவுடைய இத்தகைய மகானைப் பற்றி இவ்வளவு காலம் தப்பான அபிப்பிராயம் கொண்டிருந்தேனே என்று எண்ணி ஆசாரியர் மிகவும் வருந்தினார். இப்படிப்பட்ட தாசரை குருவாகப் பெற்ற சேஷகிரிராவ் எவ்வளவு பாக்கியசாலி என்று எண்ணினார். தாமும் தாசரை சந்தித்து வணங்கி, அவரிடமிருந்து தாசதீட்சை பெறவேண்டும் என்று ஆசைகொண்டார். தம் விருப்பத்தை ஆசாரியர் சேஷகிரிராயரிடம் சொல்ல, அவரும் - ஆசார்யரே, மிகவும் சந்தோஷம். நான் இந்த விஷயத்தை தாசரிடம் கூறி, பின் அவரின் பதிலை உங்களுக்கு தெரிவிக்கிறேன். ஆனாலும், தாங்கள் இது விஷயமாக தாசருக்கு ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதவும் - என்றார். அப்படியே ஆசாரியரும் தன் மனதில் உள்ளவற்றை தாசருக்கு ஒரு கடிதத்தில் எழுதினார். அந்தக் கடிதம் இப்படியாக இருந்தது:

ஸ்ரீமத்சமீர சாஸ்திர ப்ரவீண துரீணரான, ஸ்ரீமத்புரந்தர, விஜயதாச, சிரேஷ்டமுக கமல க்‌ஷீராப்திஜாத அம்ருதாந்தசராத, அஸ்மத்குருமர்யாதரான ஸ்ரீஸ்ரீதாசராயரவரின் பாதகமலங்களுக்கு சிஷ்டகோடி ப்ரவீண தாசானுதாசனாத பல்லடம் மாதவ செய்யும் சாஷ்டாங்க வணக்கம் மற்றும் ஒரு வேண்டுகோள்.

ஒன்றிரண்டு ஆண்டுகள் முன்பு தங்களிடமிருந்து வரதமோகனவிட்டலா என்ற அங்கிதத்தைப் பெற்றவரான திரு.சேஷகிரிராயரின் நட்பு எனக்கு உண்டாயிற்று. தங்களைப் பற்றி அவரிடமிருந்து பலமுறை கேட்டிருந்தாலும், பல தாசர்களில் தாங்களும் ஒருவர் என்ற எண்ணமே கொண்டிருந்தேன். தங்கள் மகிமையை நான் உணர்ந்திருக்கவில்லை. அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆசையும் இருந்திருக்கவில்லை. ஒரு நாள் மல்லேஸ்வரத்தில் கம்பௌண்டர் திரு சுப்பராயர் வீட்டிற்கு தாங்கள் வந்திருந்தபோது, நானும் உபன்யாசம் செய்வதற்காக அங்கு வந்திருந்தேன். அப்போது தங்களைக் கண்டு இவர் யார் என்று கேட்க, இவரே (தாங்களே) திரு.சேஷகிரிராயரின் குரு என்று தெரிய வந்தது. தங்களின் வேடத்தைப் பார்த்து, எனக்கு அவநம்பிக்கையே தோன்றியது. ஆகவே, தங்களை கண்டும் காணாததுபோல் திரும்ப வந்துவிட்டேன். அதற்கான காரணம் என்னவென்றால், தங்களின் மகிமையைக் கேட்ட காதுகளிலேயே, தங்களை திட்டுவோர் கூறுவதும் விழுந்தது. அம்ருதத்தில் கலந்த விடம் போல் அது என் மனதை கலைத்தது. 

இப்படி இருக்கும்போது, தெய்வாதீனமாக தங்கள் சிஷ்யரான திரு.சேஷகிரிராவ் அவர்கள் தங்கள் உபன்யாசங்களைக் கொண்ட ஒரு புத்தக மூட்டையை பைண்டிங் செய்யவேண்டி என்னிடம் கொண்டு வந்தார். புத்தகங்களை பைண்ட் செய்யும்போது அவற்றில் ஒன்றிரண்டு உபன்யாசங்களைப் படித்தேன். அதைப் படிக்கையிலேயே எனக்கு விசித்திரமான மகிழ்ச்சியும், கண்ணிலிருந்து ஆனந்தக் கண்ணீரும் வந்தன. மேலும் தங்களுக்கு நான் செய்த அவமரியாதையும் நினைவுக்கு வந்தது. உடனே தங்களைக் காண வேண்டுமென்ற ஆவலும் வந்தது. அன்றிரவே, நம் திரு.சேஷகிரிராயரிடம் இதைப் பற்றி சொல்லி, எனக்கும் உபதேசம் மற்றும் அங்கிதம் வேண்டும் என்றும் தெரிவித்தேன். அவரும் தங்களைக் கேட்டுச் சொல்வதாகக் கூறினார். 

ஆனால் அதற்குள் என் கெட்ட காலமாக வெளியூர் செல்ல நேரிட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகே இங்கு திரும்பி வந்தேன். அந்த சமயம் நம் ராயர் காசி யாத்திரைக்குச் சென்றிருந்ததால், அவரின் வருகைக்காகக் காத்திருந்தேன். அவரும் - எனக்குத் தோன்றியவாறு ஒரு கடிதத்தை எழுதி வருமாறு கூறினார். என்னை தங்களிடம் அழைத்துச் செல்வதாகக் கூறினார். அவர் சொன்னதைப் போலவே, நானும் என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன். நான் படித்த தங்களின் ஒன்றிரண்டு உபன்யாசங்களின் மூலம் எனக்குத் தெரிந்தது என்னவென்றால் - தாசர் சாதாரண மனிதரல்ல. ஒரு மகாபுருஷர் ஆவார். 

ஸ்ரீமதாசாரியரின் கிரந்தங்களிலும், அதற்கான டீகா கிரந்தங்களிலும், தத்வவாதம் நிரம்பியிருந்தாலும் அவை எப்படி இருக்கிறதென்றால் - கரும்பின் மேலிருந்து கீழ்வரை நற்சுவையே இருந்தாலும், பல்லில்லாத முதியவர் அதை எப்படி சுவைக்க முடியாதோ, அந்த கரும்பையே ரசமாக்கிக் கொடுத்தால், எப்படி சுவைத்து ரசித்து அதை குடிப்பாரோ - அதைப்போலவே, கரும்பைப்போல உள்ள பாரதம் ஆகிய கிரந்தங்களில் காணப்படும் தத்வவாத என்னும் சுவை, தங்களின் வாக்கின் இனிமையில் இன்னும் சுவை மிகுந்து சர்க்கரையைப் போல் இனிக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிகின்றது. 

நானும் பலமுறை பாரதம், பாகவத கிரந்தங்களை உபன்யாசத்தில் சொல்லியிருக்கிறேன். ஆனால் கரும்பில் மறைந்திருக்கும் சுவையைப் போல், எனக்கும் அவற்றில் மறைந்திருக்கும் தத்வவாதங்கள் புலப்படவில்லை. தங்களில் உபன்யாசம் என்னும் சர்க்கரையை சிறிதே சுவைத்தவுடன், அதை முழுவதும் சுவைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆவல் எழுந்து, எந்நேரமும் தங்களை எப்போது பார்ப்பேன், தங்களிடமிருந்து எப்போது உபதேசதம் மற்றும் அங்கிதம் பெறுவேன் என்றே சிந்தித்துக் கொண்டுள்ளேன். 

ஆகவே, பரமஏழையான என்மேல் தாசர் கருணை காட்டி தம் அம்ருதவாக்கினால் என்னை பவித்ரன் ஆக்கி, உபதேசம் மற்றும் அங்கிதத்தைக் கொடுத்து, தாசகூட்டத்தில் என்னையும் தங்களின் தாசனாகிக் கொள்ளவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். பரமஞானியான உங்களுக்கு எதுவும் அறியாத என்னால் அதிகம் எழுதத் தோன்றவில்லை. சாஷ்டாங்கமாக வணங்கும், உங்களின் தாசனின் தாசன் - பல்லடம் மாதவன். (விபவ சம்வத்சரம் புஷ்ய சுத்த சஷ்டி புதன்கிழமை - 16-01-1929).

மேற்கண்ட கடிதத்தைக் கண்ட கருணாபூரணரான தாசர், விரைவிலேயே ஆசாரியருக்கு தன் தரிசனத்தைத் தந்தார். ஆஜானுபாகுவான தாசரைக் கண்டதும், மகிழ்ச்சியடைந்த ஆசாரியர், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி - தாம் அவசரப்பட்டு சன்யாசாஸ்ரமம் பெற்றதும், பின்னர் மறுபடி குடும்பஸ்தராக ஆனது, மடத்தினால் பகிஷ்காரம் செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானது என தம் முழுக்கதையையும் தாசரிடம் சொல்லி, கண்ணீர் வடித்தார். தம்மை அனுக்கிரகித்து காப்பாற்றவேண்டும் என்று தாசரின் பாதங்களை கெட்டியாகப் பிடித்து வேண்டிக்கொண்டார். 

இப்படியாக மனம் வருந்திய ஆசாரியரைக் கண்டு தாசர் மிகவும் அனுதாபம் கொண்டார். அவரை கைத்தூக்கி எழுப்பி ஆறுதல் கூறினார். பயப்படவேண்டாம். ஸ்ரீஹரி காப்பாற்றுவான். ஸ்ரீஹரியால் மன்னிக்க முடியாத குற்றங்களை மனிதனால் செய்யவே முடியாது. பக்தர்களின் பாவச்செயல்களை மன்னித்து அருளுவதில் ஸ்ரீலட்சுமிபதிக்கு சமமானவர் இந்த உலகில் வேறு யாருமே இல்லை. 

பாபகர்மவ சஹிசுவொடே ல
குமிபதிகே சமராத திவிஜர
நே பயோஜபவாண்டதொளகாவல்லே நாகாணே 
கோபகுருவின மடதி ப்ருகு நக
சாப மொதலாதவரு மாடித ம
ஹாபராதகளெணிசிதனே கருணாசமுத்ர ஹரே

என்னும் ஹரிகதாம்ருதசார வசனத்தை நீங்கள் கேட்டதில்லையா? பாரதம், பாகவத புராணங்களின் ரகசியங்களை நன்கு அறிந்தவரான நீங்கள், மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய கிரந்தமாகிய ஸ்ரீஜகன்னாததாசர் எழுதிய ஹரிகதாம்ருதசாரத்திற்கு ஒரு விளக்க நூலை நீங்கள் எழுதவும். இதனால் உங்களின் பாவங்கள் நீங்கி, வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக ஆகிவிடும். பக்தர்களின் கஷ்டத்தைப் போக்குபவனான ஸ்ரீஹரியின் கருணை உங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லி ஆசாரியருக்கு ‘பத்பனாப விட்டலா’ என்று அங்கிதோபதேசமும் அருளினார். 

***

Sunday, January 19, 2020

பாவப்ரகாசிகை - சில கடிதங்கள்

பாவப்ரகாசிகே’விற்கு சம்பந்தப்பட்ட சில விசேஷமான தகவல்கள்

1.
பரமார்த்த சந்திரோதய மாதப் பத்திரிக்கை பிரமோதூத நாம சம்வத்ஸரம் சிராவண மாதம் தொகுப்பு 4 இதழ் 5 ஆகஸ்ட் 1930 இதழில் பிரசுரிக்கப்பட்ட கடிதம்.

குருசேவா

என் நம்பிக்கைக்குப் பாத்திரரான பாகேனஹல்லி பிராணநாதவிட்டலா அங்கிதத்தைப் பெற்றவரான திரு சேஷதாசர், சுமார் 6-7 ஆண்டுகளுக்கு முன் மல்லேஸ்வரத்தில் நடந்த ரதோத்ஸவத்தின்போது என்னிடம் சொன்ன விஷயம் பின்வருமாறு. நம் குருவான திரு சுப்பராயதாசரிடம் வேண்டிக்கொண்டு, அவர் மூலமாக ஸ்ரீராம பட்டாபிஷேகத்தின் கதையை உபன்யாசம் செய்வித்தால் மிகவும் நன்றாக இருக்கும். அவர் கேட்டுக்கொண்டபடியே சீதாகல்யாண மகோத்ஸவத்தை செய்து முடித்தோம். அங்கு வந்திருந்து உபன்யாசத்தைக் கேட்ட அனைவரும் மிகவும் மகிழ்ந்து, தாசரை மல்லேஸ்வர மடத்தில் ஹரிகதாம்ருதசார பாடத்தை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். ஸ்ரீதாசரும் அதை மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, ‘ஹரிக்ருபா’ ஆலயத்தில் சுமார் 10 மாதங்கள் சில சிஷ்யர்களுக்கு பாடம் எடுத்தார். 

ஆனால் அதற்கும் திருப்தி அடையாத நாங்கள், ஹரிகதாம்ருதசார காவியத்திற்கு பாவபிரகாசிகெ என்னும் உரையை எழுதி வெளியிடவேண்டும் என்ற எங்கள் ஆசையை தெரிவித்தோம். மிகவும் வயதாகிவிட்டதால் தம்மால் இந்த வேலையை செய்ய முடியாது. இந்த வேலைக்கு மிகவும் கற்றறிந்த அறிஞரான, தன் அருளுக்கு பாத்திரரான சிஷ்யரையே கேட்கிறேன் என்று கூறினார். 

அதன்படியே இப்போது அந்த உரையை எழுதிக்கொண்டிருக்கும் ஸ்ரீதந்தேமுத்துமோகனவிட்டல அங்கிதத்தைப் பெற்றவரான சுப்பராயதாசரின் சிஷ்யரான ஸ்ரீபத்மனாபதாசரை தேர்ந்தெடுத்தார். ஸ்ரீதாசரின் அருளைப் பெற்று இந்த உரையானது தற்போது எழுதப்பட்டு வருகிறது. இதுவரை 14 இதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. 

இதுவரை இந்த காவிய பிரசாரத்திற்கு உதவி செய்து வரும் நல்லுள்ளங்களுக்கு எனது சாஷ்டாங்க வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

பக்தசேவகன்
M. மூர்த்திராவ்

2. 
பரமார்த்த சந்திரோதய மாதப் பத்திரிக்கை சுக்ல நாம சம்வத்ஸரம் சைத்ர மாதம் தொகுப்பு 3 இதழ் 1 ஏப்ரல் 1929 இதழில் பிரசுரிக்கப்பட்ட கடிதம்.

பலமுறை பாரத பாகவத புராணங்களை நன்றாக படித்து தெரிந்துகொண்டு, உபன்யாசங்களை செய்து, வியாசகூடத்தை நன்றாக அறிந்துகொண்டு பிறகு தாசகூடத்தைப் பற்றிய ஸ்ரீசுப்பராயதாசரின் சிஷ்யரான பத்பனாபதாசரால் இயற்றப்பட்டது இந்த உரை. திருப்பதி சபாவில் ஹரிகதாம்ருதசார தேர்விற்கு மேற்பார்வையாளராக இருந்து, பலமுறை ஹரிகதாம்ருதசார பாடத்தை எடுத்திருக்கும் ஸ்ரீசுப்பராயதாசரிடமிருந்தும், பல ஆண்டுகளாக பாகவதாதி புராண உபன்யாசங்களை சொல்லிக்கொண்டிருக்கும் பண்டிதரான போடேனஹல்லி ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி ஆச்சாரிடமும் காட்டி ஒப்புதல் பெற்றுள்ளார். வியாசகூட தாசகூட என்று இருவருக்கும் வரும் சந்தேகங்களை, பாரத பாகவத புராணங்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டி தீர்த்துவைத்துள்ளார். மேலும் அங்கங்கே தக்க உதாரணங்களைக் கொடுத்து, ஒவ்வொரு சொல்லுக்குமான பொருள், பொருளுரை, விசேஷமான பொருள் ஆகியவற்றைக் கொடுத்துள்ளார். மல்லேஸ்வரத்தில் வசிக்கும் ஸ்ரீமூர்த்திராயர் மற்றும் ஆற்காடு ஸ்ரீனிவாசராயர் தெருவில் வசிக்கும் ஸ்ரீவெங்கடராவ், நிஜகல், இவர்களுடன் 

தற்போது குறைந்திருக்கும் தாசபரம்பரையை மறுபடி அதிகரிக்கும்படியான நோக்கத்துடன் இந்த உரையை குறைந்த லாபத்தில் அச்சடித்து, குறைந்த விலைக்கே மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று நிச்சயித்துள்ளனர். 

நிறுவனர்.

3.
பாவப்ரகாசிகாவைப் பற்றி ஸ்ரீதந்தேமுத்துமோகனதாசரின் சிஷ்யரான ஸ்ரீவரதேசவிட்டல அங்கிதத்தைப் பெற்றவரான ஸ்ரீவாமன கிருஷ்ண தேஷ்பாண்டே எழுதிய கடிதம். பரமார்த்த சந்திரோதய பத்திரிக்கை ஜுலை 1930ல் வெளிவந்தது. 

தங்களின் பிரிய சிஷ்யரான ஸ்ரீபத்பனாபதாசர், ஹரிகதாம்ருதசாரத்திற்கு எழுதிய பாவபிரகாசிகே என்னும் உரையைப் படித்தேன். இரண்டாம் பகுதியில் ‘ஸ்ரீரமணி கரகமலபூஜித’ இந்த பதத்திற்கு எழுதியுள்ள நீண்ட விளக்கத்தை & கொடுத்துள்ள உதாரணங்களைக் கண்டு, மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளேன். இதைப் படித்ததால் என் இந்த ஜென்மம் சார்த்தகமாயிற்று என்று எண்ணுகிறேன். இந்த உரையை எவ்வளவு படித்தாலும் திருப்தி ஆவதேயில்லை. இப்படிப்பட்டவருக்கு பண்டிதரத்ன என்னும் பட்டத்தைக் கொடுப்பது தகுதியானதே. இப்படிப்பவருக்கு குருவாக இருக்கும் தங்களின் புகழ், பரமார்த்த சந்திரனின் கதிர்களைப் போல் எப்போதும் வளர்ந்துகொண்டே இருக்கட்டும். பத்மனாபதாசரை நான் வணங்குகிறேன். மேலும் நீங்கள் செய்த உதவியை நான் எக்காலத்திற்கும் மறக்காமல் இருக்கவேண்டி மதுசூதனின் காலடிகளைப் பற்றி வணங்குகிறேன்.

***

Saturday, January 18, 2020

பரமப்ரிய சுப்பராய தாசர் - சிறு அறிமுகம்

பரமப்ரிய ஸ்ரீசுப்பராயதாசரின் (ஸ்ரீதந்தேமுத்துமோகனவிட்டலதாசரின்) சிறு அறிமுகம்

ஸ்ரீசுப்பராயதாசர் பெங்களூர் ஜில்லா டாபஸ்பேட் பக்கத்தில் நர்சிப்புர் என்னும் கிராமத்தில் கிபி1865ல் க்ரோதன நாம சம்வத்ஸரம் சிராவண சுத்த சதுர்தசி (இதை சதுர்தசி, தேதி 6.8.1865 இருக்கலாம் என்று எண்ணுகிறோம்) ஞாயிற்றுக்கிழமை சிராவண நட்சத்திரத்தில், பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவரான சேஷப்பா மற்றும் லட்சுமிதேவம்மா என்னும் தம்பதியருக்கு பிறந்தார். காடி சுப்ரமணியரின் அந்தயாமியான ஜெயாசங்கர்ஷணனின் அருளால் பிறந்தவராகையால், சுப்பராய என்னும் பெயர் இடப்பட்டார். அட்சராப்யாசம் மற்றும் 8வது வயதில் பிரம்மோபதேசம் ஆகியவை, குந்தாபுர வியாஸராஜ மடத்தின் அப்போதைய அதிபரான ஸ்ரீலட்சுமிப்ரிய தீர்த்தரின் ஆசியால் நடைபெற்றன. நர்சிபுர் மற்றும் கானகானஹல்லியில் துவக்கப்பள்ளிப் பாடங்கள் நடைபெற்றன. இரண்டு ஆண்டுகள் அங்கு ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 14வது வயதில் வேங்கட நாராயணாச்சார் மற்றும் ஸ்ரீமதி லட்சுமி நரசம்மா அவர்களின் புதல்வியான 6-7 வயதான அச்சம்மா என்பவருடன் திருமணம் நடந்தது.

சுப்பராயர் சிறு வயது முதலே வைராக்கியமும் ஆன்மிக சிந்தனையும் கொண்டிருந்தார். பெங்களூரில் கற்றறிந்த அறிஞரான திரு.சிஞ்சோலே வெங்கடாசார்யரிடத்தில், ஸ்ரீமதாசார்யரின் சர்வமூல கிரந்தங்கள் 37யும், சுமத்வவிஜயமும் படித்து முடித்தார். இதன் மங்கள நிகழ்ச்சியை நர்சிபுரத்தில் மிகவும் விமரிசையாக நடத்தினார். 

ஸ்ரீவிஜயதாசரின் சரித்திரத்தை படித்து, தாமும் அவரைப்போலவே ஹரிதாசர் ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். ஒரு தம்புரியையும் வாங்கினார். கரிகிரி நரசிம்மரின் சன்னிதியில் பஜனைகள் செய்துவந்தார். ஸ்ரீ நரசிம்மாச்சார் என்பவர் இவருக்கு குருவின் அவசியத்தை உணர்த்தினார். ஸ்ரீவிஜயதாசரின் சிஷ்யரான ஸ்ரீவேணுகோபாலதாசரின் தாச பரம்பரையில் வந்த ஸ்ரீவரவிட்டலதாசரின் சிஷ்யரான தொட்டபெல்லாபுரத்தின் முத்துமோகனவிட்டலதாசர் தன் பயணத்திற்கு நடுவில் நர்சிபுரத்திற்கு வந்தார். ஸ்ரீசுப்பராயரை சோதித்து, அவரை தும்கூர் வியாசராஜ மடத்திற்கு வருமாறு சொல்லி, அங்கு ஒரு சுபமுகூர்த்தத்தில் ‘தந்தேமுத்துமோகனவிட்டலா’ என்னும் அங்கிதத்தை வழங்கி, அவர் தலையில் கைவைத்து உபதேசம் செய்தார். 

இப்படியாக, ஸ்ரீதந்தேமுத்துமோகனவிட்டலதாசர், வியாச-தாச என்று இரண்டு வழிகளிலும் தேர்ந்தவராகி, பல பயணங்களை மேற்கொண்டு, ஜாதிமத பேதமில்லாமல், சஜ்ஜனர்களுக்கு அங்கிதம் வழங்கி வந்தார். அங்கிதம் வாங்கியவர்களில் முதலாமவர் ஸ்ரீ பிராணநாதவிட்டலா என்று அங்கிதம் பெற்றவரான ஸ்ரீபாகேபல்லி சேஷதாசர். இறுதியானவர் ஸ்ரீகுருகோவிந்தவிட்டலா அங்கிதம் பெற்றவரான மைசூர் கோவிந்த ராவ் அவர்கள். 

இவர்களுக்கு நடுவில் அங்கிதம் வாங்கியவர்களில் முக்கியமானவர்கள் கீழ்வருமாறு:

ஸ்ரீபத்மனாபதாசர்
ஸ்ரீஉரகாத்ரிவிட்டலதாசர்
ஸ்ரீரமாகாந்தவிட்டலதாசர்
ஸ்ரீகோபாலகிருஷ்ணவிட்டலதாசர் (ஸ்ரீமதி அம்பாபாய்)
ஸ்ரீநித்யானந்தவிட்டலதாசர்

ஆகியோர். ஸ்ரீதாசர் மொத்தம் 1165 பேருக்கு அங்கிதம் வழங்கியுள்ளார். தாசபரம்பரையில் இவ்வளவு பேருக்கு அங்கிதம் வழங்கியவர் இவர் மட்டுமே எனலாம். வைராக்கியத்தில் சன்யாசம் வாங்கி, மறுபடி சம்சாரத்தில் நுழைந்த தோஷம் பரிகாரத்திற்காக ஸ்ரீதாசரை அணுகி அவரது அருளை வேண்டி, அவர் சொல்லிய வண்ணம், ஹரிகதாம்ருதசாரத்திற்கு பாவப்ரகாசிகை என்னும் உரையை எழுதிய பத்மனாபதாசர் எனப்படும் பல்லடம் மாதவாச்சார் இவரது சிஷ்யர்களில் முக்கியமானவர்களில் ஒருவராவார். ஸ்ரீதாசரின் முக்கிய சிஷ்யரான ஸ்ரீஉரகாத்ரிவிட்டலதாசரின் சிஷ்யர், ஸ்ரீதந்தேவேங்கடேசவிட்டலா அங்கிதத்தை வாங்கியவரான சித்ரதுர்காவின் ஸ்ரீ R.ராமசந்திரராவ் ஆவார். 

கரிகிரியில் நரசிம்மனின் அருளால் கிடைத்த ஒரு காலி மனையில், ஸ்ரீதாசர் தாசகூடசபாவை கிபி1900ம் ஆண்டில் நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் ரதோத்ஸவ காலத்தில் கரிகிரிக்கு வந்து சபாவில், ஆன்மிக நிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவற்றை நடத்திவந்தார். சிஷ்யர்களின் ஆதி-வியாதிகளை ‘என்ன பின்னவ கேளோ தன்வந்திரி தயமாடோ’ என்னும் பாடலின் மூலமும், ஸ்ரீஹரிவாயுஸ்துதி புனஸ்சரணத்தின் மூலம் தீர்த்து வந்தார். தூரத்தில் இருப்பவர்களுக்கு தம் கருத்துகள் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் ‘பரமார்த்த சந்திரோதய’ என்னும் மாதப் பத்திரிக்கையை துவக்கினார். 

முளபாகில் ஸ்ரீஸ்ரீபாதராஜ மடத்தில், சாம்ராஜ்பேட் பிராணதேவரின் கோயிலில், மற்றும் மல்லேஸ்வர மடத்தில் 10 மாதங்கள் பாடம் சொல்லியும், திரு.M.மூர்த்திராவ் அவரின் ஹரிக்ருபா இல்லத்திலும், ஹரிகதாம்ருதசார உபன்யாசங்களை நடத்தினார். பெங்களூர் மத்திய சிறைச்சாலையில், தர்மபோதகராக, அரசால் நியமிக்கப்பட்டு அங்கிருந்த கைதிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை தத்வ உபதேசங்கள் செய்துவந்தார். இதனால் பல கைதிகள் திருந்தி நல்வாழ்க்கைக்கு திரும்பினர். 

ஸ்ரீசத்யத்யான தீர்த்தர், ஸ்ரீதாசரின் உபன்யாசங்களைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து திருப்பதி மத்வசித்தாந்த ஒன்னாஹினி சபையில் நடைபெறும் தாசசாகித்ய தேர்வுக்கு ஸ்ரீதாசரை மேற்பார்வையளாராக நியமித்தார். புத்திகே மடத்து அதிபரிடமிருந்து பரமப்ரிய என்னும் விருதையும் ஸ்ரீதாசர் பெற்றார். ஸ்ரீதாசரின் ஆஜானுபாகுவான உருவம், அவரின் ஞானம், சொற்பொழிவுத் திறமை ஆகியவற்றால் கவரப்பட்டு அவரின் சிஷ்யரான முக்கியஸ்தர்கள் பின்வருமாறு:

ஸ்ரீவாய்கர் கிருஷ்ணாசார், 
ராஜசபாபூஷண ஸ்ரீ கர்பூர ஸ்ரீனிவாசாச்சார்,
ஸ்ரீசுபோத ராமராயர்,
ஸ்ரீபேலூர் கேசவதாஸ்,
ஸ்ரீதொட்டபேலே நாராயண சாஸ்திரிகள்,
ஸ்ரீஹொஸகெரெ சிதம்பரம் அவர்கள்,
ஸ்ரீ D.K. பாரத்வாஜர்,
ஸ்ரீ தேஷ்முக் ஷ்யாமராயர்,
ஸ்ரீ B.D. ராகவேந்திர 

ஆகியோர். 

கரிகிரி வருபவர்கள் வணங்குவதற்காக, கதருமண்டலகியிலிருந்து தருவிக்கப்பட்ட பிராணதேவரின் சிலையை, கரிகிரியிலேயே இருந்த ஸ்ரீகிருஷ்ணதாச தீர்த்தர் மூலமாக, பிரமாதி நாம சம்வத்ஸரம் பால்குள பகுள பஞ்சமியன்று தேதி 28.3.1940, மிகவும் விமரிசையாக பிரதிஷ்டை செய்தார். தினசரி பூஜை செய்தவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். இதற்கடுத்த சில நாட்களிலேயே, ஸ்ரீதாசர் தாம் இவ்வுலகிற்கு வந்த வேலை முடிந்தது என்று தெரிந்து, விக்ரம சம்வத்ஸரம் சைத்ர சுத்த நவமி ஸ்ரீராமநவமி தேதி 16.4.1940 செவ்வாய்க்கிழமையன்று மதியம் சுமார் 12 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். 

இன்றும் அவரது அருளால் தாசகூடசபா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பிராணதேவரின் பூஜை, வந்த அதிதிகளுக்கு அன்னதானம், ரதோத்ஸவம், ராமநவமி, நரசிம்மஜயந்தி ஆகிய பல விசேஷ நாட்களில், அறிஞர்களால் உபன்யாசம், ஹரிதாச தாசிகள் மூலமாக பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

ஸ்ரீதாசரின் பற்றிய விரிவான தகவல்களுக்கு - ஸ்ரீகுருகோவிந்தவிட்டலதாசர் எழுதிய ‘பரமப்ரிய சுப்பராயதாசர்’ மற்றும் ஸ்ரீஜயசிம்ஹ அவரின் ‘தந்தேமுத்துமோகன விட்டலா’ என்னும் புத்தகங்களைப் படிக்கலாம்.

***