ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, January 20, 2020

ஸ்ரீபத்பனாப தாசர் - சிறு அறிமுகம்

ஸ்ரீஹரிகதாம்ருதாசர பாவபிரகாசிகா வியாக்யானத்தை எழுதிய
ஸ்ரீ பத்பநாபதாசர் (பல்லடம் மாதவாச்சார்) குறித்து ஒரு அறிமுகம்

மாதவாச்சார் கோயம்பத்தூர் அருகில் உள்ள பல்லடம் கிராமத்தில் பிறந்தவர். பாகவத மற்றும் சுதா ஆகியவற்றில் திறமை பெற்று அப்போதைய உத்தராதி மடாதீசரான ஸ்ரீசத்யத்யான தீர்த்தரின் பூரண நல்லாசியைப் பெற்றிருந்தார். கிருகஸ்தராக இருந்தபோது இரு மக்களை பெற்றிருந்தார். ஒரு நாள் சன்யாச ஆஸ்ரமத்தையும் பெற்றார். சிறிது காலம் சன்யாசியாக இருந்து பின்னர் மறுபடி தன் மனைவி மக்களுடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தார். இதற்காக ஏதேனும் பிராயச்சித்தம் இருக்கிறதா என்று ஸ்ரீசத்யத்யானரிடம் இவர் கேட்க, அவர் சன்யாசி ஆசிரமத்தை விட்டவருக்கு தேகத்யாகமே (மரணம்) பிராயச்சித்தம் என்று கூறியதாக தெரிய வருகிறது. முக்கியமான பீடாதிபதிகளாக இருந்து, சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருந்தபடி ஒரு பிராயச்சித்தம் சொன்னாலும், அதை ஆசாரியரால் கடைப்பிடிக்க முடியவில்லை. இதனால், ஸ்ரீபாதங்களவராலும், தம் நண்பர்களாலும் பகிஷ்காரம் செய்யப்பட்டு, தம் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்காக ஆசாரியர் ஒரு அச்சகத்தையும், புத்தகத்தை பைண்ட் செய்யும் தொழிலையும் நடத்தலானார். 

இப்படி இருந்தபோது, தந்தெமுத்துமோகனதாசரின் சிஷ்யரான ஸ்ரீராமபுரத்தின் கே.சேஷகிரிராவ் அவர்களின் பரிச்சயம் ஆசாரியருக்குக் கிடைத்தது. தாசரின் உபன்யாசங்களை சேகரித்து வந்த சேஷகிரிராவ் அவர்கள் அவற்றை பைண்ட் செய்வதற்காக ஆசாரியரின் கடைக்கு வந்து கொடுத்தார். அவற்றை பைண்ட் செய்யும்போது, ஆசாரியரின் பார்வை அந்த புத்தகத்திலிருந்த தாசரின் உபன்யாசங்களின் மேல் விழுந்தது. சேஷகிரிராயரிடமிருந்து தாசரின் மகிமைகளை அவ்வப்போது கேட்டுவந்தாலும், ஆசாரியருக்கு தாசரின் மேல் நல்ல அபிப்பிராயம் இன்னும் வந்திருக்கவில்லை. மேலும் தாசரி நடை உடை பாவனைகள், ஆசாரியருக்கு விசித்திரமாக தோன்றின. 

பாண்டித்யம் (திறமை) இல்லாதவர்கள் செய்யும் தந்திரமே இவை (விசித்திரமான நடை, உடை ஆகியன) என்னும் தப்பான அபிப்பிராயமே தாசர் மேல் அவருக்கு இருந்தது. ஆனால், தாசரின் தங்குதடையற்ற உபன்யாசத் திறமை, அதற்காக அவர் சாஸ்திரங்களிலிருந்து எடுத்துக் கொடுக்கும் உதாரணங்கள், அவரின் சிறந்த ஸ்ரீஹரி பக்தி, மிகவும் கடினமான விஷயங்களை மிகவும் சுலபமான நடையில் சொல்லும் திறமை, குறுகிய மனதுடையவர்களை தெளிய வைத்து விசாலமானதாக்கும் அவரது பாடல்கள் - இவையெல்லாவற்றையும் சேர்த்து அவர் வழங்கிய உபன்யாசங்களைப் படித்த ஆசாரியர் - தாசர் ஒரு அபூர்வமான பண்டிதர் மட்டுமல்ல, பாண்டித்யத்தை மீறிய ஞானிவரேண்யர் - என்று புரிந்துகொண்டார். பரந்த அறிவுடைய இத்தகைய மகானைப் பற்றி இவ்வளவு காலம் தப்பான அபிப்பிராயம் கொண்டிருந்தேனே என்று எண்ணி ஆசாரியர் மிகவும் வருந்தினார். இப்படிப்பட்ட தாசரை குருவாகப் பெற்ற சேஷகிரிராவ் எவ்வளவு பாக்கியசாலி என்று எண்ணினார். தாமும் தாசரை சந்தித்து வணங்கி, அவரிடமிருந்து தாசதீட்சை பெறவேண்டும் என்று ஆசைகொண்டார். தம் விருப்பத்தை ஆசாரியர் சேஷகிரிராயரிடம் சொல்ல, அவரும் - ஆசார்யரே, மிகவும் சந்தோஷம். நான் இந்த விஷயத்தை தாசரிடம் கூறி, பின் அவரின் பதிலை உங்களுக்கு தெரிவிக்கிறேன். ஆனாலும், தாங்கள் இது விஷயமாக தாசருக்கு ஒரு விண்ணப்பக் கடிதம் எழுதவும் - என்றார். அப்படியே ஆசாரியரும் தன் மனதில் உள்ளவற்றை தாசருக்கு ஒரு கடிதத்தில் எழுதினார். அந்தக் கடிதம் இப்படியாக இருந்தது:

ஸ்ரீமத்சமீர சாஸ்திர ப்ரவீண துரீணரான, ஸ்ரீமத்புரந்தர, விஜயதாச, சிரேஷ்டமுக கமல க்‌ஷீராப்திஜாத அம்ருதாந்தசராத, அஸ்மத்குருமர்யாதரான ஸ்ரீஸ்ரீதாசராயரவரின் பாதகமலங்களுக்கு சிஷ்டகோடி ப்ரவீண தாசானுதாசனாத பல்லடம் மாதவ செய்யும் சாஷ்டாங்க வணக்கம் மற்றும் ஒரு வேண்டுகோள்.

ஒன்றிரண்டு ஆண்டுகள் முன்பு தங்களிடமிருந்து வரதமோகனவிட்டலா என்ற அங்கிதத்தைப் பெற்றவரான திரு.சேஷகிரிராயரின் நட்பு எனக்கு உண்டாயிற்று. தங்களைப் பற்றி அவரிடமிருந்து பலமுறை கேட்டிருந்தாலும், பல தாசர்களில் தாங்களும் ஒருவர் என்ற எண்ணமே கொண்டிருந்தேன். தங்கள் மகிமையை நான் உணர்ந்திருக்கவில்லை. அதை தெரிந்து கொள்ளவேண்டும் என்னும் ஆசையும் இருந்திருக்கவில்லை. ஒரு நாள் மல்லேஸ்வரத்தில் கம்பௌண்டர் திரு சுப்பராயர் வீட்டிற்கு தாங்கள் வந்திருந்தபோது, நானும் உபன்யாசம் செய்வதற்காக அங்கு வந்திருந்தேன். அப்போது தங்களைக் கண்டு இவர் யார் என்று கேட்க, இவரே (தாங்களே) திரு.சேஷகிரிராயரின் குரு என்று தெரிய வந்தது. தங்களின் வேடத்தைப் பார்த்து, எனக்கு அவநம்பிக்கையே தோன்றியது. ஆகவே, தங்களை கண்டும் காணாததுபோல் திரும்ப வந்துவிட்டேன். அதற்கான காரணம் என்னவென்றால், தங்களின் மகிமையைக் கேட்ட காதுகளிலேயே, தங்களை திட்டுவோர் கூறுவதும் விழுந்தது. அம்ருதத்தில் கலந்த விடம் போல் அது என் மனதை கலைத்தது. 

இப்படி இருக்கும்போது, தெய்வாதீனமாக தங்கள் சிஷ்யரான திரு.சேஷகிரிராவ் அவர்கள் தங்கள் உபன்யாசங்களைக் கொண்ட ஒரு புத்தக மூட்டையை பைண்டிங் செய்யவேண்டி என்னிடம் கொண்டு வந்தார். புத்தகங்களை பைண்ட் செய்யும்போது அவற்றில் ஒன்றிரண்டு உபன்யாசங்களைப் படித்தேன். அதைப் படிக்கையிலேயே எனக்கு விசித்திரமான மகிழ்ச்சியும், கண்ணிலிருந்து ஆனந்தக் கண்ணீரும் வந்தன. மேலும் தங்களுக்கு நான் செய்த அவமரியாதையும் நினைவுக்கு வந்தது. உடனே தங்களைக் காண வேண்டுமென்ற ஆவலும் வந்தது. அன்றிரவே, நம் திரு.சேஷகிரிராயரிடம் இதைப் பற்றி சொல்லி, எனக்கும் உபதேசம் மற்றும் அங்கிதம் வேண்டும் என்றும் தெரிவித்தேன். அவரும் தங்களைக் கேட்டுச் சொல்வதாகக் கூறினார். 

ஆனால் அதற்குள் என் கெட்ட காலமாக வெளியூர் செல்ல நேரிட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகே இங்கு திரும்பி வந்தேன். அந்த சமயம் நம் ராயர் காசி யாத்திரைக்குச் சென்றிருந்ததால், அவரின் வருகைக்காகக் காத்திருந்தேன். அவரும் - எனக்குத் தோன்றியவாறு ஒரு கடிதத்தை எழுதி வருமாறு கூறினார். என்னை தங்களிடம் அழைத்துச் செல்வதாகக் கூறினார். அவர் சொன்னதைப் போலவே, நானும் என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன். நான் படித்த தங்களின் ஒன்றிரண்டு உபன்யாசங்களின் மூலம் எனக்குத் தெரிந்தது என்னவென்றால் - தாசர் சாதாரண மனிதரல்ல. ஒரு மகாபுருஷர் ஆவார். 

ஸ்ரீமதாசாரியரின் கிரந்தங்களிலும், அதற்கான டீகா கிரந்தங்களிலும், தத்வவாதம் நிரம்பியிருந்தாலும் அவை எப்படி இருக்கிறதென்றால் - கரும்பின் மேலிருந்து கீழ்வரை நற்சுவையே இருந்தாலும், பல்லில்லாத முதியவர் அதை எப்படி சுவைக்க முடியாதோ, அந்த கரும்பையே ரசமாக்கிக் கொடுத்தால், எப்படி சுவைத்து ரசித்து அதை குடிப்பாரோ - அதைப்போலவே, கரும்பைப்போல உள்ள பாரதம் ஆகிய கிரந்தங்களில் காணப்படும் தத்வவாத என்னும் சுவை, தங்களின் வாக்கின் இனிமையில் இன்னும் சுவை மிகுந்து சர்க்கரையைப் போல் இனிக்கிறது என்பது நிச்சயமாகத் தெரிகின்றது. 

நானும் பலமுறை பாரதம், பாகவத கிரந்தங்களை உபன்யாசத்தில் சொல்லியிருக்கிறேன். ஆனால் கரும்பில் மறைந்திருக்கும் சுவையைப் போல், எனக்கும் அவற்றில் மறைந்திருக்கும் தத்வவாதங்கள் புலப்படவில்லை. தங்களில் உபன்யாசம் என்னும் சர்க்கரையை சிறிதே சுவைத்தவுடன், அதை முழுவதும் சுவைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்ற ஆவல் எழுந்து, எந்நேரமும் தங்களை எப்போது பார்ப்பேன், தங்களிடமிருந்து எப்போது உபதேசதம் மற்றும் அங்கிதம் பெறுவேன் என்றே சிந்தித்துக் கொண்டுள்ளேன். 

ஆகவே, பரமஏழையான என்மேல் தாசர் கருணை காட்டி தம் அம்ருதவாக்கினால் என்னை பவித்ரன் ஆக்கி, உபதேசம் மற்றும் அங்கிதத்தைக் கொடுத்து, தாசகூட்டத்தில் என்னையும் தங்களின் தாசனாகிக் கொள்ளவேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன். பரமஞானியான உங்களுக்கு எதுவும் அறியாத என்னால் அதிகம் எழுதத் தோன்றவில்லை. சாஷ்டாங்கமாக வணங்கும், உங்களின் தாசனின் தாசன் - பல்லடம் மாதவன். (விபவ சம்வத்சரம் புஷ்ய சுத்த சஷ்டி புதன்கிழமை - 16-01-1929).

மேற்கண்ட கடிதத்தைக் கண்ட கருணாபூரணரான தாசர், விரைவிலேயே ஆசாரியருக்கு தன் தரிசனத்தைத் தந்தார். ஆஜானுபாகுவான தாசரைக் கண்டதும், மகிழ்ச்சியடைந்த ஆசாரியர், நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி - தாம் அவசரப்பட்டு சன்யாசாஸ்ரமம் பெற்றதும், பின்னர் மறுபடி குடும்பஸ்தராக ஆனது, மடத்தினால் பகிஷ்காரம் செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளானது என தம் முழுக்கதையையும் தாசரிடம் சொல்லி, கண்ணீர் வடித்தார். தம்மை அனுக்கிரகித்து காப்பாற்றவேண்டும் என்று தாசரின் பாதங்களை கெட்டியாகப் பிடித்து வேண்டிக்கொண்டார். 

இப்படியாக மனம் வருந்திய ஆசாரியரைக் கண்டு தாசர் மிகவும் அனுதாபம் கொண்டார். அவரை கைத்தூக்கி எழுப்பி ஆறுதல் கூறினார். பயப்படவேண்டாம். ஸ்ரீஹரி காப்பாற்றுவான். ஸ்ரீஹரியால் மன்னிக்க முடியாத குற்றங்களை மனிதனால் செய்யவே முடியாது. பக்தர்களின் பாவச்செயல்களை மன்னித்து அருளுவதில் ஸ்ரீலட்சுமிபதிக்கு சமமானவர் இந்த உலகில் வேறு யாருமே இல்லை. 

பாபகர்மவ சஹிசுவொடே ல
குமிபதிகே சமராத திவிஜர
நே பயோஜபவாண்டதொளகாவல்லே நாகாணே 
கோபகுருவின மடதி ப்ருகு நக
சாப மொதலாதவரு மாடித ம
ஹாபராதகளெணிசிதனே கருணாசமுத்ர ஹரே

என்னும் ஹரிகதாம்ருதசார வசனத்தை நீங்கள் கேட்டதில்லையா? பாரதம், பாகவத புராணங்களின் ரகசியங்களை நன்கு அறிந்தவரான நீங்கள், மோட்சத்தைக் கொடுக்கக்கூடிய கிரந்தமாகிய ஸ்ரீஜகன்னாததாசர் எழுதிய ஹரிகதாம்ருதசாரத்திற்கு ஒரு விளக்க நூலை நீங்கள் எழுதவும். இதனால் உங்களின் பாவங்கள் நீங்கி, வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக ஆகிவிடும். பக்தர்களின் கஷ்டத்தைப் போக்குபவனான ஸ்ரீஹரியின் கருணை உங்களுக்குக் கிடைக்கும் என்று சொல்லி ஆசாரியருக்கு ‘பத்பனாப விட்டலா’ என்று அங்கிதோபதேசமும் அருளினார். 

***

No comments:

Post a Comment