ஹரிகதா2ம்ருதசார கு3ருக3ள
கருணதிந்தா3பநிது பே1ளுவே
பரம ப4கவத்3ப4க்தரித3னாத3ரதி கேளுவுது
ஹரிகதாம்ருதசார = ஹரிகதாம்ருதசாரம் என்னும் இந்த கிரந்தத்தை
குருகள = எனக்கு உபதேசம் செய்தவரை
கருணதிந்தா = அவரது கருணையினால்
ஆபநிது = எனக்கு தெரிந்தவரையில்
பேளுவே = கூறுவேன்
பரம = பலாபலன் பார்க்காமல்
பகவத்பக்தரு = ஸ்ரீஹரியிடம் பக்தி செய்பவர்கள் (எந்த தடையுமில்லாமல் பக்தி செய்பவர்கள்)
இதன = இந்த கிரந்தத்தை
ஆதரதி = மிகவும் நம்பிக்கையுடன்
கேளுவுது = கேட்கலாம்.
முதலில் மங்களாசரணத்தை செய்யாமல், கூறுவேன் என்று சொல்லி, பிறகு மங்களாசரணத்திற்காக ஒரு சந்தியையே இயற்றியிருக்கிறார். ‘நத்வா சூத்ரார்த்த உச்யதே’ என்று ஸ்ரீமத்வர் பல கிரந்தங்களை மங்களாசரணத்துடன் துவக்கியிருக்கிறார். மேலும் ஒரு கிரந்தத்தை படைக்க வேண்டுமென்றால், அதற்கான விஷயம், பலன், அதிகாரி, சம்பந்தம் என்னும் நான்கு லட்சணங்களை சொல்லாமல், அந்த கிரந்தத்தை துவக்கக்கூடாது என்பது ஸ்ரீமத்வரின் சம்பிரதாயம். இதையே ஸ்ரீதாசரும் இந்த கிரந்தத்தின் துவக்கத்தில் கூறுகிறார்.
நாராயணம் நமஸ்க்ருத்ய - என்னும் மங்களாசரண ஸ்லோகத்துடன் துவங்கும் பாரதாதி கிரந்தங்களின் பொருளை விளக்கிக் கூறும் வகையில், ‘மங்களாசரண சந்தி’ என்று ஒரு சந்தியையே இயற்றியதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு சந்தியும் துவக்கும்போது படிப்பவரின் சௌகரியத்துக்காக மங்களாசரண பல்லவியை உருவாக்கி, சாதனசதுஷ்டய என்னும் விஷயத்தை தெரிவிக்கிறார். அது என்னவென்றால்:
மங்களாசரணம் என்றால், நான் நமஸ்கரிக்கிறேன் என்று சொல்வது மட்டுமல்ல. மங்களகரமான எழுத்தையோ அல்லது சொல்லையோ முதலில் பயன்படுத்தினால், அதுவும் மங்களாசரணம் என்றே சொல்லப்படுகிறது. ‘அதாதோ பிரம்மஜிக்ஞாஸா’ என்னும் ஸ்லோகத்தில், ’அ’ என்னும் எழுத்தும், ’அத’ என்னும் சொல்லும் மங்களாசரணம் என்று நிர்ணயம் செய்திருக்கிறார்கள். பாகவதம் இரண்டாம் ஸ்கந்தத்தில், சுகாச்சாரியர் பாகவத்தை சொல்லத் துவங்கும்போது, புதியதாக வேறொரு மங்களாசரணம் செய்யாமல் ‘வரீயானீஷ தே ப்ரஷ்ன:’ என்று துவக்கியிருப்பார். அங்கு ‘வரீயான்’ என்னும் சொல்லே மங்களாசரணம் என்று சொல்லியிருப்பார். அப்படியே, ஸ்ரீதாசரும் ‘ஹரி’ என்னும் சொல்லை முதலில் பயன்படுத்தியிருக்கிறார். அனைத்து பாவங்களையும், கஷ்டங்களையும் தீர்க்க வல்லவன் ஆகையால் அவனுக்கு ‘ஹரி’ என்று பெயர். இதைவிடவும் மங்களம் வேறு என்ன இருக்கமுடியும்? மேலும் இந்த கிரந்தத்தில் சொல்லப்படும் விஷயமாக ஸ்ரீஹரியே இருப்பதால், ‘ஹரி’ என்று துவக்கியிருக்கிறார். மேலும் இந்த கிரந்தத்தில் ஸ்ரீஹரியின் சரித்திரத்தையே சொல்லியிருப்பதால், ‘ஹரிகதா’ என்றும் சொல்லியிருக்கிறார். அம்ருதம் என்றால் மோட்சம் என்று பொருள். அப்படிப்பட்ட மோட்சத்தை அடைவதே இந்த கிரந்தத்தைப் படிப்பதால் கிடைக்கும் பலன். ’சாரம்’ என்றால் கிடைக்கக்கூடிய பலன் அல்லது தீர்வு. பரம பகவத்பக்தர்களே அதைப் பெற வல்லவர்கள். ‘சவை பும்சாம் பரோதர்மோ யதோ பக்தரதோக்ஷஜே! அஹைதுக்ய வைவஹிதா மயாத்மாஷு ப்ரஸீததி’ என்னும் பாகவத வாக்கியத்தின்படி, பலாபலன் எதிர்பார்க்காமல் தொடர்ந்து ஸ்ரீஹரியிடம் பக்தி செய்பவர்களே அவனின் கருணையைப் பெற தகுதியானவர்கள். இத்தகைய பக்திக்கு பரம பக்தி என்று பெயர். பரம பக்தர்களே இத்தகைய பலனைப் பெற தகுதியானவர்கள் என்றதால், சாதாரண மக்களுக்கு இந்த கிரந்தத்தைப் படிக்க அதிகாரம் இல்லை என்று பொருளில்லை. சாதாரண பக்தியென்றால் தொடர்ந்து ஸ்ரீஹரியின் மகிமைகளைக் கேட்பது, படிப்பது ஆகியவற்றை செய்து, ஸ்ரீஹரியின் பரமபக்தர்களாகி, அவனின் பிரசாதத்தை பெறுகிறார்கள் என்று பொருள். ஆகவே பகவத்பக்தர்களே இந்த கிரந்தத்தைப் படிக்க அதிகாரிகள் என்று சொல்லியிருக்கிறார். கேளுவுது என்னும் சொல்லின் மூலம் சம்பந்தத்தை சொல்கிறார். ஆகவே ஸ்ரீஹரியின் கதைகளைக் கேட்பது, அதனால் விளையும் ஞானம், ஆகியவற்றால் பயனடைவார்கள் என்று இந்த சொல்லின் மூலம் விளக்குகிறார்.
மங்களாசரண சந்தியின் சாராம்சம்
ஸ்ரீதாசர் ஒவ்வொரு சந்தியிலும் மங்களாசரணத்தை சொல்வதற்காக பல்லவியை உருவாக்கி, அதன் மூலம் விஷய சதுஷ்டயங்களை சொல்லி, தாம் இயற்றியுள்ள ஹரிகதாம்ருதசாரத்தில் உள்ள 32 சந்தியிலும், நிர்விக்னம் ஏற்படக்கூடாதென்றும், இஷ்டார்த்தங்கள் கிடைக்கவேண்டுமென்றும், கிரந்தத்தின் துவக்கத்தில் மங்களாசரணத்தை வைத்து விளக்கியது ஏன் என்றால், பாரதத்தை இயற்றிய வேதவியாசரும் அனைத்து தேவதைகளை நமஸ்கரித்தே பாரதத்தை எழுதத் துவங்கினார். எப்படியென்றால் :
நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் |
தேவீம் சரஸ்வதீம் சைவ (வியாசம்) ததோஜய (கிரந்தம்) முதீரயேத் ||
முதலில் சர்வோத்தமனான நாராயணனை வணங்க வேண்டும். பிறகு ‘ஸ்ரீதேவீம்’ லட்சுமிதேவியை, அதற்குப் பிறகு ‘சரஸ்வதிம்’, பிறகு சேஷாதி தேவதைகளைவிட உத்தமரான வாயுதேவரை, பிரம்மதேவரை, ’சரஸ்வதிம்’ - சரஸ்வதி பாரதிதேவிகளை, நரம் = அஹங்கார தத்வாபிமானி தேவதைகளான கருட, சேஷ, ருத்ரதேவர்களை வணங்க வேண்டும். நர என்னும் சொல், குறிப்பாக சேஷதேவரை குறிப்பதாக இருந்தாலும், இந்த மூவரும் (கருட, சேஷ, ருத்ரர்) தாரதம்யத்தின்படி ஒரே வகுப்பில் இருப்பவர்களாகையால், மூவரையும் குறிப்பதாக வைத்துக் கொள்ளலாம். பிறகு வேதவியாசரை வணங்கி, கிரந்தத்தைத் துவக்க வேண்டும் என்று சொல்லியிருப்பார். வேதவியாசர் இந்த ஸ்லோகத்தில் ‘தேவீம் சரஸ்வதீம் சைவ’ என்று இயற்றியிருந்தாலும், அவரது சிஷ்யரான ஸ்ரீமத்வர் ‘சைவ’ என்பதற்கு பதில் ‘வியாச’ என்று மாற்றி எழுதினார்.
ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீவேதவியாசரும் ஒன்றேயானாலும், கிரந்தத்தின் கருப்பொருள்/ விஷயமான ஸ்ரீமன் நாராயணனுக்கே முதல் வணக்கம். குரு ஸ்தானத்தில் இருப்பவராகையால் வேதவியாசரையும் வணங்கினார் - ஆக ஸ்ரீஹரியை இரு முறை வணங்கினார் என்று புரிந்துகொள்ள வேண்டும். (இதே விஷயத்தை ஏழாம் ஸ்லோகத்தில் ’வேதபீடவிரிஞ்சிபவ’ இன்னும் விரிவாக விளக்கியுள்ளோம்). பாரதாதிகளில் நாராயணன் முதலானவர்களுக்கு வணக்கம் வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கார்களே தவிர, ஏன் வணங்க வேண்டும்? அப்படி வணங்குவதால் என்ன பலன்? என்ற கேள்விக்கெல்லாம் பதில் இல்லை. ஸ்ரீமத்வர் இந்த விஷயங்களை சிறிது விளக்கியிருப்பார். அது எப்படியென்றால் : முக்கியமாக ஒருவரை வணங்க வேண்டுமென்றால் அவரைப் பற்றிய ஞானம் / தெரிந்திருத்தல் மிகவும் அவசியம். ஆகையால், ஸ்ரீதாசர் மேலே உள்ள ஸ்லோகத்தில் இருக்கும் தேவதைகள் அனைவரின் மகிமைகளை விளக்கி, அந்த தேவதைகளின் மூலம் கிடைக்கும் பலன்களைச் சொல்லி, இந்த கிரந்தத்தை படிக்கும், கேட்கும் மக்களுக்கு தேவையான சிரத்தையை தரவேண்டும் என்று அந்த தேவதைகளை வேண்டி மங்களாசரண சந்தியை இயற்றியுள்ளார். அதில் முதலாம் ஸ்லோகத்தின் மூலம் தன் இஷ்ட தெய்வம், குல தெய்வம் மற்றும் உபாசனாமூர்த்தியான ஸ்ரீலட்சுமி நரசிம்ம ஸ்வாமியையும், இந்த கிரந்தத்தின் விஷயமும் சர்வோத்தமனும் ஆன, ஸ்ரீமன் நாராயணனையும் - இருவரையும் ஒரே ஸ்லோகத்தில் வணங்கியிருக்கிறார்.
***
No comments:
Post a Comment