ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, January 18, 2020

பரமப்ரிய சுப்பராய தாசர் - சிறு அறிமுகம்

பரமப்ரிய ஸ்ரீசுப்பராயதாசரின் (ஸ்ரீதந்தேமுத்துமோகனவிட்டலதாசரின்) சிறு அறிமுகம்

ஸ்ரீசுப்பராயதாசர் பெங்களூர் ஜில்லா டாபஸ்பேட் பக்கத்தில் நர்சிப்புர் என்னும் கிராமத்தில் கிபி1865ல் க்ரோதன நாம சம்வத்ஸரம் சிராவண சுத்த சதுர்தசி (இதை சதுர்தசி, தேதி 6.8.1865 இருக்கலாம் என்று எண்ணுகிறோம்) ஞாயிற்றுக்கிழமை சிராவண நட்சத்திரத்தில், பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவரான சேஷப்பா மற்றும் லட்சுமிதேவம்மா என்னும் தம்பதியருக்கு பிறந்தார். காடி சுப்ரமணியரின் அந்தயாமியான ஜெயாசங்கர்ஷணனின் அருளால் பிறந்தவராகையால், சுப்பராய என்னும் பெயர் இடப்பட்டார். அட்சராப்யாசம் மற்றும் 8வது வயதில் பிரம்மோபதேசம் ஆகியவை, குந்தாபுர வியாஸராஜ மடத்தின் அப்போதைய அதிபரான ஸ்ரீலட்சுமிப்ரிய தீர்த்தரின் ஆசியால் நடைபெற்றன. நர்சிபுர் மற்றும் கானகானஹல்லியில் துவக்கப்பள்ளிப் பாடங்கள் நடைபெற்றன. இரண்டு ஆண்டுகள் அங்கு ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 14வது வயதில் வேங்கட நாராயணாச்சார் மற்றும் ஸ்ரீமதி லட்சுமி நரசம்மா அவர்களின் புதல்வியான 6-7 வயதான அச்சம்மா என்பவருடன் திருமணம் நடந்தது.

சுப்பராயர் சிறு வயது முதலே வைராக்கியமும் ஆன்மிக சிந்தனையும் கொண்டிருந்தார். பெங்களூரில் கற்றறிந்த அறிஞரான திரு.சிஞ்சோலே வெங்கடாசார்யரிடத்தில், ஸ்ரீமதாசார்யரின் சர்வமூல கிரந்தங்கள் 37யும், சுமத்வவிஜயமும் படித்து முடித்தார். இதன் மங்கள நிகழ்ச்சியை நர்சிபுரத்தில் மிகவும் விமரிசையாக நடத்தினார். 

ஸ்ரீவிஜயதாசரின் சரித்திரத்தை படித்து, தாமும் அவரைப்போலவே ஹரிதாசர் ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டார். ஒரு தம்புரியையும் வாங்கினார். கரிகிரி நரசிம்மரின் சன்னிதியில் பஜனைகள் செய்துவந்தார். ஸ்ரீ நரசிம்மாச்சார் என்பவர் இவருக்கு குருவின் அவசியத்தை உணர்த்தினார். ஸ்ரீவிஜயதாசரின் சிஷ்யரான ஸ்ரீவேணுகோபாலதாசரின் தாச பரம்பரையில் வந்த ஸ்ரீவரவிட்டலதாசரின் சிஷ்யரான தொட்டபெல்லாபுரத்தின் முத்துமோகனவிட்டலதாசர் தன் பயணத்திற்கு நடுவில் நர்சிபுரத்திற்கு வந்தார். ஸ்ரீசுப்பராயரை சோதித்து, அவரை தும்கூர் வியாசராஜ மடத்திற்கு வருமாறு சொல்லி, அங்கு ஒரு சுபமுகூர்த்தத்தில் ‘தந்தேமுத்துமோகனவிட்டலா’ என்னும் அங்கிதத்தை வழங்கி, அவர் தலையில் கைவைத்து உபதேசம் செய்தார். 

இப்படியாக, ஸ்ரீதந்தேமுத்துமோகனவிட்டலதாசர், வியாச-தாச என்று இரண்டு வழிகளிலும் தேர்ந்தவராகி, பல பயணங்களை மேற்கொண்டு, ஜாதிமத பேதமில்லாமல், சஜ்ஜனர்களுக்கு அங்கிதம் வழங்கி வந்தார். அங்கிதம் வாங்கியவர்களில் முதலாமவர் ஸ்ரீ பிராணநாதவிட்டலா என்று அங்கிதம் பெற்றவரான ஸ்ரீபாகேபல்லி சேஷதாசர். இறுதியானவர் ஸ்ரீகுருகோவிந்தவிட்டலா அங்கிதம் பெற்றவரான மைசூர் கோவிந்த ராவ் அவர்கள். 

இவர்களுக்கு நடுவில் அங்கிதம் வாங்கியவர்களில் முக்கியமானவர்கள் கீழ்வருமாறு:

ஸ்ரீபத்மனாபதாசர்
ஸ்ரீஉரகாத்ரிவிட்டலதாசர்
ஸ்ரீரமாகாந்தவிட்டலதாசர்
ஸ்ரீகோபாலகிருஷ்ணவிட்டலதாசர் (ஸ்ரீமதி அம்பாபாய்)
ஸ்ரீநித்யானந்தவிட்டலதாசர்

ஆகியோர். ஸ்ரீதாசர் மொத்தம் 1165 பேருக்கு அங்கிதம் வழங்கியுள்ளார். தாசபரம்பரையில் இவ்வளவு பேருக்கு அங்கிதம் வழங்கியவர் இவர் மட்டுமே எனலாம். வைராக்கியத்தில் சன்யாசம் வாங்கி, மறுபடி சம்சாரத்தில் நுழைந்த தோஷம் பரிகாரத்திற்காக ஸ்ரீதாசரை அணுகி அவரது அருளை வேண்டி, அவர் சொல்லிய வண்ணம், ஹரிகதாம்ருதசாரத்திற்கு பாவப்ரகாசிகை என்னும் உரையை எழுதிய பத்மனாபதாசர் எனப்படும் பல்லடம் மாதவாச்சார் இவரது சிஷ்யர்களில் முக்கியமானவர்களில் ஒருவராவார். ஸ்ரீதாசரின் முக்கிய சிஷ்யரான ஸ்ரீஉரகாத்ரிவிட்டலதாசரின் சிஷ்யர், ஸ்ரீதந்தேவேங்கடேசவிட்டலா அங்கிதத்தை வாங்கியவரான சித்ரதுர்காவின் ஸ்ரீ R.ராமசந்திரராவ் ஆவார். 

கரிகிரியில் நரசிம்மனின் அருளால் கிடைத்த ஒரு காலி மனையில், ஸ்ரீதாசர் தாசகூடசபாவை கிபி1900ம் ஆண்டில் நிறுவினார். ஒவ்வொரு ஆண்டும் ரதோத்ஸவ காலத்தில் கரிகிரிக்கு வந்து சபாவில், ஆன்மிக நிகழ்ச்சிகள், அன்னதானம் ஆகியவற்றை நடத்திவந்தார். சிஷ்யர்களின் ஆதி-வியாதிகளை ‘என்ன பின்னவ கேளோ தன்வந்திரி தயமாடோ’ என்னும் பாடலின் மூலமும், ஸ்ரீஹரிவாயுஸ்துதி புனஸ்சரணத்தின் மூலம் தீர்த்து வந்தார். தூரத்தில் இருப்பவர்களுக்கு தம் கருத்துகள் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணத்தில் ‘பரமார்த்த சந்திரோதய’ என்னும் மாதப் பத்திரிக்கையை துவக்கினார். 

முளபாகில் ஸ்ரீஸ்ரீபாதராஜ மடத்தில், சாம்ராஜ்பேட் பிராணதேவரின் கோயிலில், மற்றும் மல்லேஸ்வர மடத்தில் 10 மாதங்கள் பாடம் சொல்லியும், திரு.M.மூர்த்திராவ் அவரின் ஹரிக்ருபா இல்லத்திலும், ஹரிகதாம்ருதசார உபன்யாசங்களை நடத்தினார். பெங்களூர் மத்திய சிறைச்சாலையில், தர்மபோதகராக, அரசால் நியமிக்கப்பட்டு அங்கிருந்த கைதிகளுக்கு வாரத்திற்கு ஒருமுறை தத்வ உபதேசங்கள் செய்துவந்தார். இதனால் பல கைதிகள் திருந்தி நல்வாழ்க்கைக்கு திரும்பினர். 

ஸ்ரீசத்யத்யான தீர்த்தர், ஸ்ரீதாசரின் உபன்யாசங்களைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து திருப்பதி மத்வசித்தாந்த ஒன்னாஹினி சபையில் நடைபெறும் தாசசாகித்ய தேர்வுக்கு ஸ்ரீதாசரை மேற்பார்வையளாராக நியமித்தார். புத்திகே மடத்து அதிபரிடமிருந்து பரமப்ரிய என்னும் விருதையும் ஸ்ரீதாசர் பெற்றார். ஸ்ரீதாசரின் ஆஜானுபாகுவான உருவம், அவரின் ஞானம், சொற்பொழிவுத் திறமை ஆகியவற்றால் கவரப்பட்டு அவரின் சிஷ்யரான முக்கியஸ்தர்கள் பின்வருமாறு:

ஸ்ரீவாய்கர் கிருஷ்ணாசார், 
ராஜசபாபூஷண ஸ்ரீ கர்பூர ஸ்ரீனிவாசாச்சார்,
ஸ்ரீசுபோத ராமராயர்,
ஸ்ரீபேலூர் கேசவதாஸ்,
ஸ்ரீதொட்டபேலே நாராயண சாஸ்திரிகள்,
ஸ்ரீஹொஸகெரெ சிதம்பரம் அவர்கள்,
ஸ்ரீ D.K. பாரத்வாஜர்,
ஸ்ரீ தேஷ்முக் ஷ்யாமராயர்,
ஸ்ரீ B.D. ராகவேந்திர 

ஆகியோர். 

கரிகிரி வருபவர்கள் வணங்குவதற்காக, கதருமண்டலகியிலிருந்து தருவிக்கப்பட்ட பிராணதேவரின் சிலையை, கரிகிரியிலேயே இருந்த ஸ்ரீகிருஷ்ணதாச தீர்த்தர் மூலமாக, பிரமாதி நாம சம்வத்ஸரம் பால்குள பகுள பஞ்சமியன்று தேதி 28.3.1940, மிகவும் விமரிசையாக பிரதிஷ்டை செய்தார். தினசரி பூஜை செய்தவதற்கான ஏற்பாடுகளையும் செய்தார். இதற்கடுத்த சில நாட்களிலேயே, ஸ்ரீதாசர் தாம் இவ்வுலகிற்கு வந்த வேலை முடிந்தது என்று தெரிந்து, விக்ரம சம்வத்ஸரம் சைத்ர சுத்த நவமி ஸ்ரீராமநவமி தேதி 16.4.1940 செவ்வாய்க்கிழமையன்று மதியம் சுமார் 12 மணிக்கு இறைவனடி சேர்ந்தார். 

இன்றும் அவரது அருளால் தாசகூடசபா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. பிராணதேவரின் பூஜை, வந்த அதிதிகளுக்கு அன்னதானம், ரதோத்ஸவம், ராமநவமி, நரசிம்மஜயந்தி ஆகிய பல விசேஷ நாட்களில், அறிஞர்களால் உபன்யாசம், ஹரிதாச தாசிகள் மூலமாக பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

ஸ்ரீதாசரின் பற்றிய விரிவான தகவல்களுக்கு - ஸ்ரீகுருகோவிந்தவிட்டலதாசர் எழுதிய ‘பரமப்ரிய சுப்பராயதாசர்’ மற்றும் ஸ்ரீஜயசிம்ஹ அவரின் ‘தந்தேமுத்துமோகன விட்டலா’ என்னும் புத்தகங்களைப் படிக்கலாம்.

***

No comments:

Post a Comment