இந்த கலியுகத்தில் பெரும்பாலானவர்கள், சுகத்தை மட்டுமே வேண்டியவாறு, அந்த சுகத்தை அடையும் வழியை அறியாமல், சஜ்ஜனர்களும்கூட துர்ஜனர்களின் நட்பினால் அஞ்ஞானத்தைப் பெற்று கெட்டுப்போவதைக் கண்டு, த்வாபர யுகத்தின் இறுதியில் பிரம்மாதி தேவர்கள், ஸ்ரீஹரியிடம் சென்று வேண்டினார்கள். ஸ்ரீஹரி, மகாதபஸ்வியான பராசரர் மூலமாக சத்யவதியிடம் வேதவியாசராக அவதரித்து, குறைந்த புத்தியுடைய மக்கள் அனைத்து வேதங்களையும் படிப்பது அசாத்தியம் என்று அறிந்து, அவற்றை ரிக்வேத, யஜுர்வேத, சாமவேத, அதர்வணவேத என்று நான்கு பாகங்களாகப் பிரித்தார். அந்த நான்கு வேதங்களே மேலும் பற்பல பாகங்களாகப் பிரித்து உலகத்தில் புகழ்பெற்றன. இந்த வேதங்களின் ஒரேயொரு பாகத்தையாவது படித்து, மக்கள் கடைத்தேறட்டும் என்பது வேதவியாசரின் விருப்பம். ஆனாலும், ‘சதுர்வேத்யபி யோ விப்ரோ வாசுதேவம் நவிந்ததி | வேதபார பராக்ராந்த:சவை ப்ராஹ்மண கார்தப:’ என்று சொல்வதைப் போல, எவ்வளவு வேதங்களைப் படித்தாலும், அந்த வேதங்கள் புகழ்வது ஸ்ரீஹரியையே என்று அறிந்து, அதன் அர்த்தங்கள் ஸ்ரீஹரியின் மகிமையையே விளக்குகின்றன என்று அறியாவிட்டால், அவன், வேதம் என்னும் பாரத்தை சுமக்கும், பிராமணன் ரூபத்தை சுமக்கும் கழுதை என்று மேற்கண்ட ஸ்லோகம் சொல்கிறது.
ஆகையால், வேதத்தின் பொருளான தத்வஞானத்தை அறிவது மிகவும் கடினம் என்று தெரிந்து வேதவியாசர் ‘பிரம்ம சூத்திரத்தை’ இயற்றினார். பிறகு, வேதம் படிப்பதற்கு அதிகாரம் இல்லாத பெண்கள், சூத்திரர் இவர்களின் சாதனைக்காக ஐந்தாவது வேதமாகிய, ஸ்ரீஹரியின் மகிமைகளை சிறப்பாக விளக்கக்கூடிய, மகாபாரதத்தை இயற்றினார். இவ்வளவு செய்தும், தம் அவதாரத்தின் நோக்கம் நிறைவேறவில்லை என்று கவலைப்பட்டு சிந்திக்கையில், ஸ்ரீஹரியின் சிந்தனையை அறிந்திருந்த நாரதர், வேதவியாசரிடம் வந்து, அவரால் மிகவும் வணங்கப்பட்டு, - ‘ஸ்வாமி! வேதங்களைப் பிரித்துக் கொடுத்து மந்தமதிகளை கடைத்தேற்றினீர்கள். வேதங்களை படிக்க முடியாதவர்களுக்காக, மகாபாரதத்தை இயற்றினீர்கள். ஆனால் ‘யதாதர்மா தயோஹ்யர்த்தா’ - பாரதத்தில் தர்மத்தை எவ்வளவுக்கு எவ்வளவு விளக்கியிருக்கிறீர்களோ, அவ்வளவு வாசுதேவனின் மகிமைகளை சொல்லவில்லை. ஆகையால், மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான ஞானம் அதிலிருந்து கிடைக்கவில்லை. ஆகவே, பாகவத தர்மத்தை விளக்கும்படியான பாகவதத்தை தாங்கள் இயற்றவேண்டும்’ என்று நாரதர் வேதவியாசரிடம் வேண்டினார்.
இதன்பிறகே, வேதவியாசர், பாகவதத்தை இயற்றினார் என்று பாகவத முதல் ஸ்கந்தத்தில் விளக்கியிருக்கிறார். பிறகு, பிரம்மசூத்திரம், பாரதம், பாகவதங்களையும் அவற்றின் உட்கருத்துகளை அறியாமல், குழப்பத்தில் ஆழ்ந்த மக்கள், அதையே விவாதித்து கஷ்டப்படும்போது, ஸ்ரீஹரியின் கட்டளைப்படி, வாயுதேவரே ஸ்ரீமதாசார்யராக அவதரித்து அவற்றின் தத்வ நிர்ணயத்தை செய்தார். அந்த கிரந்தங்களுக்கு டீகாசார்யரே முதலான அபரோக்ஷ ஞானிகள், மிகவும் அற்புதமான உரைகளை எழுதினர். அந்த கிரந்தங்களுக்கு பற்பல விளக்க கிரந்தங்கள் வெளிவந்து உலகப்புகழ் பெற்றன. ஆனால், இவை அனைத்தும் வெறும் சம்ஸ்கிருத வித்வாம்சர்களுக்கு மட்டுமே புரியுமே தவிர, வேறு யாருக்கும் பயன்படவில்லை. வித்வாம்சராக இல்லாதவர்களுக்கு அந்த கிரந்தங்கள் எதையும் நல்வழியையும் காட்ட முடியவில்லை. தைத்யர்களிடம்கூட பாண்டித்யம் இருக்கிறது. ஞான சாதனை மட்டும் ஆவதில்லை.
ஆகையால், தகுதி பெற்றவர்கள் மட்டுமே சுதாதி கிரந்தங்களைப் படித்து முக்தி அடைகிறார்களே தவிர, தகுதி இல்லாத மற்றவர்களுக்கு அவை பயன்படவில்லை. ஜயதீர்த்த விஜயத்தில் ‘சேஷாதீனாமகம்யம் தவ முகஜனிதம் சாஸ்திரமாலோட்ய கீவா வியாக்யாஸ்ம்ருந்தீதி ப்ருஷ்ட:’ என்னும் வாக்கியத்தில், சேஷாதி தேவர்களுக்கும்கூட இதன் தத்வஞானம் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், சாதாரண வித்வாம்சர்கள் இந்த கிரந்தம் ஞானசாதனைக்கு பயன்படாமல், ‘சுதா கிரந்தத்தில் நான் சிறந்தவன். எனக்கு சமமானவர்கள் யாரும் இல்லை’ என்று சொல்லி, தமது பாண்டித்யத்தை வெளிக்காட்டியவாறு திரிவதற்கு பயன்படுமே தவிர அவர்களுக்கும் ஞானசாதனை ஆவதில்லை.
ஆகையால், சுதாதி கிரந்தங்களுக்கு டிப்பணிகளை எழுதிய வியாசராஜர் (சந்திரிகாசார்யர்), ஸ்ரீபாதராஜர், ஸ்ரீவாதிராஜர் ஆகிய யதிசிரோமணிகள் கலந்தாலோசித்து, சம்ஸ்கிருதம் அறியாத மற்றவர்கள், மிகவும் சுலபமாக ஞான, பக்தி, வைராக்கியங்களை பெறுவதற்காக கன்னட மொழியில் பத, சூளாதிகளை இயற்றி, இந்த வழியிலேயே மக்களை மேம்படுத்த வேண்டும் என்றெண்ணியபோது, ஸ்ரீஹரியின் ஆணைப்படி சாக்ஷாத் நாரதரே, பண்டரிபுரத்தின் அருகில் புரந்தரகட என்னும் இடத்தில், வணிக குலத்தில் பிறந்து, அதிக செல்வத்தினால் கர்வியாக கஞ்சனாக இருந்தபோது, ஸ்ரீஹரி அவருக்கு அருளி, வைராக்கியத்தைக் கொடுத்து, தம் பற்பல கோடி மதிப்புள்ள செல்வத்தை தானம் செய்து, தாசத்வத்தை பின்பற்றி, ஸ்ரீவியாசராஜ ஸ்வாமிகளின் சன்னிதானத்திற்கு வந்தார். ஸ்வாமிகளும் மிகவும் மகிழ்ச்சியுற்று அவரை வரவேற்று, அவர் மூலமாக தாசபரம்பரையை வளர்க்கவேண்டும் என்று எண்ணி, அவருக்கு புரந்தரவிட்டலா என்னும் அங்கிதத்தைக் கொடுத்து, சாஸ்திரங்களின் சாரத்தை பதங்கள் சூளாதிகள் மூலமாக மொழிபெயர்த்து, மக்களை மேம்படுத்தி, தாசத்வம் பரம்பரையாக வளர்வதற்கு வழிசெய்யவும் என்று ஆணையிட்டார்.
இதற்கு முன்னரே, ஸ்ரீவியாசராயரும், ஸ்ரீஸ்ரீபாதராயரும் கன்னட பதங்களை இயற்றியிருந்தாலும், அவர்கள் யதிகளாக இருந்ததாலும், வேதாந்த கிரந்தங்களுக்கு டிப்பணி எழுதக்கூடிய கடமைகள் அவர்களுக்கு இருந்ததாலும் தாசர் என்னும் பெயர் அவர்களுக்கு வரவில்லை. ஆகையால், புரந்தரதாசரே தாசகூடத்திற்கு மூலபுருஷர் என்று சொல்லவேண்டியதாகிறது. இதற்கு முன்னர், தாசர் என்னும் சொல் இல்லாமல், ஆசார்யர் என்றே சொல் இருந்தது. ஆசார்யர் என்றால் உபதேசித்த குரு என்ற பொருள் வருகிறது. அதற்கு தகுதி இருந்தால் மட்டுமே, ஆசார்யர் என்னும் சொல் அதற்குத் தக்க பொருள் தருகிறது. இக்காலத்தில், தகுதி இல்லாதவர்களும், ராம என்னும் சொல்லின் பொருள் தெரியாதவர்கள்கூட, ஆசார்யர் என்று அழைத்தாலே கர்வம் கொள்கிறார்கள். மகானுபாவரான ஸ்ரீஜகன்னாததாசரின் வாழ்க்கையே இதற்கு சரியான உதாரணமாகிறது. அதற்காகவே, புரந்தரதாசர், தாசர் என்று அழைத்துக் கொண்டார். ஆசார்யர் போல தாசர் குரு ஸ்தானத்தை கொடுக்கவில்லை. மாறாக தான் எல்லோரைவிடமும் குறைந்தவன் என்ற எண்ணத்தைக் கொடுக்கக்கூடியது. ஆகவே தானும், தனக்குப் பின்னால் வரக்கூடிய பரம்பரையும் ஹரிதாசர்கள் என்றே அழைக்கப்படுவர் என்றார். ஆகவே, புரந்தரதாசருக்குப் பிறகு, தாசகூட, வியாசகூட என்று இரண்டு வழிகள் தோன்றின.
குறைந்த புத்தி உள்ளவர்கள் மட்டுமே இந்த தாசகூட, வியாசகூட இருவருக்கிடையே குழப்பம் / சண்டை விளைவிக்கின்றரே தவிர, ஞானிகள் எப்போதும் அப்படி நினைப்பதில்லை. சுளாதி கிரந்தங்களைப் படித்து, ஸ்வாமிகளின் சிஷ்ய பரம்பரையில் சேர்ந்து, வேதாந்த கிரந்தங்களைப் படித்து வரும் ஆசார்யர்கள் அனைவரும் வியாசகூடத்தவர் என்றும், வேதாந்த கிரந்தங்களுக்கு உரை எழுதும்போது கன்னடத்தில் பதம், சுளாதி போன்றவற்றை இயற்றி, சிஷ்ய பரம்பரையில் அங்கிதத்தைப் பெற்றவர்களை தாசகூடத்தவர் என்றும் நினைக்கவேண்டுமே தவிர, ஸ்ரீமதாசார்யரின் சித்தாந்தங்களுக்கு எதிராக, தாசகூடத்தவர்கள் ஒரு எழுத்தையும் எழுதவில்லை என்று நம்பவேண்டும்.
புரந்தரதாசர், பற்பல சாஸ்திரங்களை படித்து, மிகச்சுலபமாக பகவத்பக்தி பிறக்கும் வழியினை எடுத்துக்கட்டும் கன்னட பதங்களை இயற்றினார். இந்த பதங்கள் எவ்வளவு சுலபமாக இருந்தாலும், குருகளிடமிருந்து உபதேசம், அங்கிதம் பெற்று, குருவின் அருளுக்கு பாத்திரராகிருந்தால் மட்டுமே, அபரோக்ஷமோ, முக்தியோ கிடைப்பதற்கு சாத்தியம் என்று சொல்லி, அதற்கேற்ப பல பாடல்களை இயற்றியுள்ளார். அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்ப்போம்.
ராகம்: நாதநாமக்ரியை
தாளம்: சாபு
சுலபவல்லவோ மஹானந்த ||ப||
அதர வலஹ திளியபேகோ குரு தயாதிந்த ||அப||
பெக்கன்னு இலி நுங்கோதனக | கடு
ரக்கசிய கண்டு கிளி நுங்கோதனக ||
மக்கள பக்ஷிசோதனக | மத
சொக்கித கஜவன்னு நரி நுங்கோதனக ||1||
இப்பரு ஒந்தாகோதனக | மூரு
ஹப்பித பெட்டவ நொண நுங்கோதனக |
ஒப்பள கொடோதனக | கெட்ட
குப்பியு ராஜஹம்ஸனாகோதனக ||2||
ஒளஹொர கொந்தாகோ தனக |
தா கண்டேனெம்போ பாவ பைலாகோ தனக |
பெளகினொளகெ காணோதனக |
சிரி புரந்தரவிட்டலன தய பாஹோதனக ||3||
இதன் பொருள்:
மஹானந்த = முக்தி. இதனை அடையவேண்டுமெனில் ‘அதர வலஹ திளியபேகோ குரு தயாதிந்த’ - குருவின் பரிபூர்ண அருளுக்குப் பாத்திரராகி, அவரின் உபதேசத்தினால் மோட்சத்தின் வழியை அடையவேண்டும். அப்படியில்லை எனில், ‘சுலபவல்லவோ மஹானந்த’. அப்படி குருவின் அருளினால் மிகச் சுலபமாக முக்தியை அடையலாம். இதன் ரகசியமென்ன? ‘பெக்கன்னு இலி நுங்கோதனக’ எலியைப் பிடிப்பதற்காக காத்திருக்கும் பூனையைப் போல, நாம் கஷ்டப்பட்டு சேகரித்திருக்கும் புண்ணியத்தை அழிக்கக் காத்திருக்கும் கர்வம், தற்பெருமை (நான், எனது என்னும் பாவம்) ஆகியவை முக்திக்கு பெரும் தடையாக இருக்கின்றன. எலியானது பூனையை பிடித்து உண்பது எப்படி சாத்தியமில்லையோ, அப்படியே கர்வம், தற்பெருமை ஆகியவற்றை ஒழிப்பது கஷ்டமே ஆயினும், மனம் என்னும் எலிக்கு இறையருள் என்னும் பலத்தைக் கொடுத்து, குருவின் அருளினால் தைரியத்தை அதிகமாகப் பெற்று, நான், எனது என்னும் பூனையை தின்பதுபோல செய்யவேண்டும். குருவின் அருளினால் உண்டாகும் இறையின் பிரசாதத்தினாலேயே நான், எனது என்னும் எண்ணங்களை போக்கவேண்டும். சாதாரண முயற்சிகளால் இது சாத்தியம் இல்லை என்பது பொருள்.
***
No comments:
Post a Comment