ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Thursday, January 23, 2020

ஹரிகதாம்ருதசாரத்திற்கான முன்னுரை - 2


மோட்சத்திற்கான முதல் படி:
நான், எனது - என்னும் சுயநலத்தை விட்டுவிடவேண்டும்.

இரண்டாவது படி:
பெரிய அரக்கியைப் போல வாயைத் திறந்துகொண்டு நம்மை தின்ன வருவதைப் போல வருவது காமம் ஆகும். இந்த ஆசை, மனிதர்களை அழிக்கவல்லது. அரக்கியை அழிப்பது எப்படி மிகவும் கஷ்டமோ, அதைப் போலவே இந்த ஆசையை விடுவதும் மிகவும் கஷ்டமாகும். இந்த ஆசையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து, அந்த அரக்கியை அழிக்கவேண்டும். அதற்கு குருவருள், ஸ்ரீஹரியின் கருணை தேவையாகும்.

மூன்றாவது படி:
சுக துக்கங்கள் இரண்டும் கோடை, குளிர் காலங்களைப் போல மாறி மாறி அனைவரது வாழ்க்கையில் வரக்கூடியவை. அவற்றிலிருந்து வரும் சுகம், துக்கங்களே ஒருவருடைய மக்கள் என்று நினைக்கவேண்டும். அவற்றை கடக்க வேண்டுமெனில், சுக, துக்கங்களுக்கு கட்டுப்படாமல், மன உறுதியுடன் அவற்றை அங்கங்கேயே விட்டுவிடவேண்டும். அதாவது, ஆசையை விடவேண்டும் என்று சொல்வது போல் ஆகிறது. அது எப்படியெனில்:

மாத்ரா ஸ்பர்ஷஸ் து கௌந்தேய சீதோஷ்ண சுகதுக்கதா: - என்று கீதையில் சொன்னதைப் போல, சுக துக்கங்கள் அஞ்ஞானிகளை மட்டுமே பாதிக்கும். அவை ஞானிகளை பாதிப்பதில்லை. உறவினர்களான மனைவி, மக்கள் மேல் அதிக அன்பு செலுத்தி, மகிழ்ச்சி / துக்கங்களைப் பெறுவர் மக்கள். இந்த உடல் அழியக்கூடியது. ஜீவனுக்கு அழிவில்லை. ‘பின்ன ஜீவ, பின்ன கர்ம’ என்று சொல்லியிருப்பதால், மனைவி மக்கள் என்னும் சம்பந்தம் ஜீவனுக்கு இல்லை என்னும் தெளிவு இல்லையெனில், யாருடைய பேச்சும் நம்மை பாதிப்பதில்லை. ஆகையால், மோகத்தை விடவேண்டும் என்ற பொருள் வருகிறது. 

நான்காவது படி: 
’மத சொக்கித கஜவன்னு நரி நுங்கோதனக’. மதயானையைப் போல இருப்பது கோபம். ‘க்ருத்தோ ஹன்யாத்குரூனபி’ அதாவது ஸ்வரூபத்தை மேம்படுத்துவதற்கு, தேகத்தைக் கொடுத்த பெற்றோர்களை, ஞானோபதேசம் செய்த வித்யாகுருகளை, கோபத்திற்கு ஆளானவன் கொன்று விடுகிறான். ஆகையால், கோபம் நமக்கு மிகப்பெரிய எதிரி. நம் மனம் நரியைப் போல பேராசை கொண்டது. (இது அனைவரது மனதின் சுபாவமே ஆகும்). இத்தகைய மனதிற்கு ஹரிகுருகளின் அருள் என்னும் பலத்தைக் கொடுத்து, மதயானையைப் போலிருக்கும் கோபத்தை அடக்கவேண்டும் என்பது பொருள். 

ஐந்தாவது படி:
’இப்பரு ஒந்தாகோதனக’. இப்பரு என்றால் இருவர். பரமாத்மா ஒருவன். இவ்வுலகில் இருக்கும் அனைத்தும் மற்றொன்று. இந்த இரண்டையும் ஒன்றாக நினைக்கவேண்டும். இதை ஞானிகள் ‘பாவாத்வைத’ என்பர். அதாவது:

’கார்ய காரண வஸ்வைக்ய தர்ஷனம் படதந்துவத் | அவஸ்துத்வா த்வகல்பஸ்ய பாவாத்வைதம் ததுச்யதே’ ||. காரண காரியங்களின் ஐக்கிய சிந்தனையே பாவாத்வைதம். உதாரணத்திற்கு: காரியபூதமான ஆடைக்கு காரணம் நூல். இந்த நூலே பின்னர் ஆடை எனப்படுகிறது. ஆனாலும், நூலுக்கும், ஆடைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஆடையைப் பார்த்து, இது நூல் என்று யாரும் சொல்வதில்லை. அப்படியே நூலைப் பார்த்து ஆடை என்றும் யாரும் சொல்வதில்லை. எப்படி நூலே, ஆடையாகி மாறியிருக்கிறதோ, அதைப்போலவே பரமாத்மன் காரணனாகியும், இந்த உலகம் கார்யமாகவும் இருப்பதனால், பரமாத்மனே விஷ்வரூபத்தினால் இவ்வுலகில் வியாபித்து (இவ்வுலகிலிருந்து வேறுபட்டு), பிரபஞ்சரூபியாக இருக்கிறான். இப்படியாக நினைப்பதற்கு, பாவாத்வைதம் என்று பெயர். உலகத்தில் இருக்கும் பகவத் ரூபத்தையும், பகவந்தனின் மூல ரூபத்தையும், ஒன்றாக நினைக்கும்வரை முக்தி சுலபமல்ல. 

இதைப்போலவே க்ரியாத்வைதத்தையும், கிரஹணாத்வைதத்தையும் புரிந்துகொள்ள வேண்டும். க்ரியாத்வைதம் என்றால் என்ன? ’யத்ப்ரம்மணே பரே சாக்‌ஷாத் சர்வ கர்ம சமர்ப்பணம் | மனோவாக் தனுபி: பார்த்த க்ரியாத்வைதம் ததுச்யதே’. மனம், வாக்கு, தேகத்தினால் நாம் செய்யும் அனைத்து செயல்களையும் ஸ்ரீஹரிக்கு சமர்ப்பணம் செய்தவாறு, ஸ்ரீஹரியே நமக்குள் இருந்து அச்செயல்களை செய்விக்கிறான் என்று நினைப்பதே க்ரியாத்வைதம். இருவர் ஒன்றாவதைப் போல இரண்டும் ஒன்றாகிறது என்று பொருள். நாம் செய்யும் செயல்களை நமக்குள் இருக்கும் ஸ்ரீஹரியே செய்கிறான் என்று நினைக்கும்போது இரண்டும் ஒன்றாகிறது என்கிற எண்ணம் வருகிறது. 

த்ரவ்யாத்வைதம் என்றால் என்ன? ’ஆத்ம ஜாயா சுதாதீனாமன்யேஷாமபி தேஹினாம் | யத்ஸ்வார்த்த  காமயோரைக்யம் த்ரவ்யாத்வைதம் ததுச்யதே’. ‘ன்ருகோ கராஷ்வமர்காகி சரீஸுபவிமக்‌ஷிகான் | ஆத்மன: புத்ரவத்பஷ்யே த்ரைரேஷாமந்தரம் கியத்’ மனிதன், பசு, கழுதை, குதிரை, குரங்கு, எலி, பாம்பு போன்ற மிருகங்களையும், புழு, பூச்சி போன்றவற்றையும் தன் மக்களைப் போலவே நினைக்கவேண்டும். அதாவது, குதிரை, கழுதை போன்றவற்றிக்கும் தனக்கும் எவ்வளவு சம்பந்தம் இருக்கிறதோ, அவ்வளவே சம்பந்தம், தனக்கும் தன் மக்களுக்கும் இருக்கிறது என்று நினைப்பதே த்ரவ்யாத்வைதம். இப்படி மூன்று விதமாக ‘எரடன்னு ஒந்தாகி பாவிசபேகெம்புவதே’ என்னும் வரியின் விளக்கத்தை அறியலாம். 

ஆறாவது படி:
மூரு ஹப்பித பெட்டத நொண நுங்கோதனக - கஞ்சத்தனம், மதம், கர்வம் என்னும் இம்மூன்றும் மூன்று மலைகளைப் போல வளர்ந்து, நாம் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் நாசம் செய்கின்றன. இம்மூன்றும், சிறிய கிருமியைப் போல இருக்கும் நம் மனதினை கட்டுப்படுத்துகின்றன. மனக் கட்டுப்பாட்டின் மூலமே இவற்றை ஜெயிக்கவேண்டும் என்று பொருள். இதில் கொடுக்கப்பட்டுள்ள உதாரணங்களைப் பார்த்தால், இது மிகவும் சுலபமான விஷயம் என்று நாம் நினைக்கக்கூடும். ஆனால், எலி முதலான சிறிய பிராணிகளைப் பிடிக்கவேண்டுமானாலும் மிகப்பெரிய விஷயங்களை செய்வதுபோல, கடினமான வேலைகளை செய்தே மனக் கட்டுப்பாட்டினை கொண்டுவர வேண்டுமே தவிர, இது சுலபமாக முடியக்கூடியது அல்ல. குருவருள் முதலான விஷயங்களினாலேயே மேற்படி விஷயம் முடியும் என்று பொருள். 

ஏழாவது படி:
‘ஒப்பள கூடோதனகா” ஒப்பளு - என்றால் புத்தி. மனைவியை வசப்படுத்துவது போல் அதனை வசப்படுத்த வேண்டும். தவறுகளை திருத்தி உடன் வைத்துக்கொண்டு, நற்சாதனைகளை செய்யவேண்டும் என்று பொருள். 

எட்டாவது படி:
‘கெட்ட குப்பியு, ராஜஹம்ஸ னாகோதனகா’. பரமாத்மனுக்கு பிரதிபிம்பனான ஜீவன், தான் ஸ்வதந்திரன் என்று நினைத்து, ஹம்ஸ ரூபியான (தோஷங்கள் அற்ற) பரமாத்மனுக்கு தான் பிரதிபிம்பன் ஆகையால், தானும் ஹம்ஸன் என்னும் ஞானமில்லாமல் வீணாக குருவி போல் வாழ்க்கையை கழிக்கிறான். இந்த நினைப்பை விட்டு, பிம்ப பிரதிபிம்ப பாவத்துடன், தானும் ஹம்ஸனைப் போன்றவனே என்று அறியவேண்டும் என்பதே பொருள். இப்படி சொல்வதால், பரமாத்மனின் சாரூப்யத்தை மட்டுமே சொல்கிறார் என்றும், பரமாத்மனில் ஐக்ய பாவத்தை சொல்லவில்லை என்றும் புரிந்துகொள்ள வேண்டும். 

ஒன்பதாவது படி:
’ஒளஹொரகொந்தாகுவதன’. தன்னுள் இருக்கும் பகவத் ரூபத்திற்கும், பிரதிமைகள், பிராமணர்கள் ஆகிய அனைவரிலும் இருக்கும் பகவத்ரூபத்திற்கும் அபேத சிந்தனை செய்யும்வரை என்று பொருள். 

பத்தாவது படி:
’தா கண்டேனெம்போ பாவ பைலாகுவ தனக’. இதுவரை நாம் தற்காலிக விஷயங்களில் மனதை பறிகொடுத்து அதுவே சுகம் என்று நினைத்து வந்திருக்கிறோமோ அவை சுகமல்ல, அவை நிரந்தர சுகமல்ல என்ற நினைவு நம் மனதிற்கு வரும்வரை என்று பொருள். இதையே பகவத்கீதையில் - ‘யா நிஷா சர்வபூதானாம் தஸ்யாம் ஜாகர்த்தி சம்யமே | யஸ்யாம் ஜாக்ரதி பூதானி சா நிஷா பஷ்யதோ முனே:’ என்று கூறியிருக்கிறார். இதன் பொருள்: பகவத் விஷயங்களில் அனைத்து பிராணிகளுக்கும் இரவானது, யோகிகளுக்கு அதுவே காலைப் பொழுதாகும். அப்போது அனைத்து பிராணிகளும் தெளிந்து விழிக்கின்றரோ, அப்போது யோகிகள் தூங்குகின்றனர். இதே பொருளையே இந்த இடத்தில் அறியவேண்டும். 

பதினொன்றாவது படி:
’பெளகினொளகெ காணுவதனக’. ஞானம் என்னும் ஒளியால் பகவத்ரூபத்தை, அபரோக்‌ஷத்தில் காணும்வரை என்று பொருள். 

பன்னிரெண்டாம் படி:
’சிரி புரந்தரவிட்டலன தய பாஹோ தனகா’. ’ நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ நமேதயா நபஹுனா ஸ்ருதேன | யம்யைவேஷ வ்ருணுதே தேன லப்ய: தஸ்ம்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ||. அதாவது, எவ்வளவு பெரிய பண்டிதரானாலும், ஸ்ரவண மனனங்களை செய்தாலும், அதனால் மட்டுமே அபரோக்‌ஷம் கிடைப்பதில்லை. எதையும் எதிர்பாராத பக்திக்கு ஸ்ரீஹரி மெச்சி, தன்னை காட்டிக்கொள்வான் என்று நமக்கு புரியும்வரை. அதாவது, ஸ்ரீபரமாத்மனின் பரம பிரசாதம் கிடைக்கும்வரை முக்தி சுலபமல்ல என்று பொருள். 

அதற்காக தாசர்கள், முக்திக்கான வழியென்று - ‘அஹம் மமதா த்யாக’. நான் என்பதை விடுங்கள் என்றனர். பரமாத்மனின் பரமபிரசாதம் கிடைப்பதற்கான சாதனமாக 12 படிகள் இருந்தாலும் அவற்றை ஒரே சொற்றொடராக சுலபமாக சொல்லி புரியவைத்தனர். இதையே, பாகவதம் 4வது ஸ்காந்தம், 22வது அத்தியாயம், 21ம் ஸ்லோகத்தில் சனத்குமாரர்கள் ப்ருது ராஜனுக்கு உபதேசம் செய்யும்போது ‘சாஸ்திரேஷ்டியானேவ சுனிஸ்சிதோ ந்ருணாம்’ என்றனர். அதாவது, அனைத்து சாஸ்திரங்களையும் கரைத்துக் குடித்து பார்த்தால், இப்போது நாம் சொல்லும் இந்த விஷயமே சாரமாக இருக்கிறது என்று சொல்லி, 10-15 ஸ்லோகங்களில் முக்திக்கான சாதனங்கள் அனைத்தையும் போதித்தனர். தாசராயரும் அதே கருத்தை மனதில் வைத்து, முக்கியமான வழியை இந்த பதத்தில் சொல்லியிருக்கின்றனர். 

இப்படியாக புரந்தரதாசர் முதலானவர்கள் இயற்றிய கிரந்தங்களில் இருந்தாலும், அனைத்து வேத, பாரத, பாகவதத்தைப் படிக்கத் தகுதியற்றவர்களுக்கும் முக்திக்கான சாதனமான தத்வஞான, வைராக்யம் கிடைப்பதற்கான ஒரு கிரந்தத்தை இயற்றி, அனைத்து பாமர மக்களையும்கூட மேம்படுத்தும் யோசனையுடன், விஜயதாசரின் பிரசிஷ்யரும், பாகண்ண தாசரின் சிஷ்யருமான ஜகன்னாததாசரின் கனவில், ஸ்ரீபாதராயர், ஸ்ரீவியாசராயர், ஸ்ரீவாதிராஜர் மற்றும் ஸ்ரீபுரந்தரதாசர் ஆகியோர் வந்து - பாரத, பாகவத மற்றும் அனைத்து புராண சாஸ்திரங்களின் சாரமாக - மோட்சத்திற்கு உதவி செய்யும் ஒரு கிரந்தத்தை இயற்றுங்கள் என்று ஆணையிட்டனர். அதற்கேற்ப ஜகன்னாததாசரும் அற்புதமான ‘ஹரிகதாம்ருதசார’ என்னும் கிரந்தத்தை இயற்றினார். 

அப்படியெனில், மேலே கூறியவற்றை கவனித்துப் பார்த்தால், பாரதத்தினால் மக்கள் மேம்படமாட்டார்கள் என்றும், நாரதரின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீவேதவியாசர் பாகவதத்தை இயற்றினார். அதனாலும் மக்கள் மேம்படமாட்டார்கள் என்றும், இந்த ஹரிகதாம்ருதசார கிரந்தத்தை இயற்றினார் என்றால் - இதன் பொருள் என்ன? வேதம், பாரதம் ஆகியவற்றைவிட பாகவதம் சிறந்தது என்றும், பாகவதத்தைவிட இந்த கிரந்தம் (ஹரிகதாம்ருதசாரம்) சிறந்தது என்றும் சொல்லலாமா? அப்படி சொன்னால், ஸ்ரீமதாசார்யரின் வாக்கிற்கு எதிராக பொருள் வருகிறது. பாரதத்தில் சொல்லப்படாத பகவந்தனின் மகிமைகள் வேறு எந்த சாஸ்திரங்களிலும் சொல்லப்படவில்லை. வேறு எந்த சாஸ்திரங்களிலும் சொல்லப்படாத பகவன் மகிமைகளை பாரதத்தில் காணலாம். ‘தஸ்மாத்யத் பாரதேனோக்தம், தத்தினைவாஸ்தி குத்ரசித் | அத்ரோக்தம் சர்வ சாஸ்திரேஷு நஹி சம்யகுதாஹ்ருதம் ||’ என்று ஸ்ரீமதாசார்யர் மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில் சொல்கிறார். இதிலிருந்து பாரதம், சர்வோத்தம கிரந்தம் என்று தெரியவருகிறது. 

அப்படியெனில் நாரதர் - ‘யதா தர்ம தயோஹ்யர்த்தா: ‘ இந்த ஸ்லோகத்தில், பாரதத்தில் தர்மாதி விஷயங்களை எவ்வளவு அதிகம் சொல்லப்பட்டிருக்கிறதோ அவ்வளவுக்கு வாசுதேவனின் மகிமைகளை சொல்லவில்லை என்றிருக்கிறார். எனில் அவரது அபிப்பிராயம் என்ன? பாரதம் என்பது அனைத்தையும்விட சிறந்த கிரந்தம்தான். ஆனால் ‘வாசுதேவஸ்ய மஹிமா பாரதே நிர்ணயோதித: பாஷாஸ்து த்ரிவிதாஸ்தத்ர மயாவ்யை சம்ப்ரதர்ஷிதா:, உக்தயோ மஹிமா விஷ்ணோ: சதோக்தோஹி சமாதினா’. இந்த ஸ்லோகம் ஹரிவம்சம் - பவித்யத் பர்வத்தில் சொல்லப்பட்டிருக்கும் வியாஸ வாக்கியம். நான், வாசுதேவனின் மகிமைகளை பாரதத்தில் விசேஷமாக நிர்ணயம் செய்திருக்கிறேன். ஆனால் அதில் பொதுவான மொழி, ரகசிய மொழி மற்றும் சமாதி மொழி என்று மூன்று விதங்களில் அதன் பொருளை சொல்லியிருக்கிறேன். விஷ்ணு மகிமைகளை மட்டும் சமாதி மொழியிலேயே சொல்லியிருக்கிறேன் என்பதை நிர்ணயத்தில் சொல்லியிருக்கிறார். 

இந்த வாக்கியத்தினால், பொதுவான மொழியினால் தெரியும் பாண்டவர்களின் கதை என்னும் ஒரு அர்த்தத்தை மட்டுமே மனிதர்கள் தங்களின் தகுதிக்கேற்ப புரிந்துகொள்ள முடியுமே தவிர, பகவந்தனின் மகிமைகளால் கூடிய ஆத்யாத்ம பாரதத்தின் உள் அர்த்தத்தை தேவதைகளாலும் புரிந்து கொள்வதற்கு சாத்தியமில்லை. நிர்ணய 2வது அத்தியாயத்தில்:

’ஏவமத்யாத்ம நிஷ்டாம் ஹி பாரதம் சர்வமுச்யதே | துர்விக்ஞேய மதஸ்சர்வைர் பாரதந்து சுரைரபி | ஸ்வயம் வ்யாஸோஹி தத்தேவ தத்பிரசாதத:. ததாபி விஷ்ணுபரதா, பாரதே சாரசங்க்ரஹ:’

இப்படியாக பாரதத்தின் உள்-அர்த்தத்தை ஆத்யாத்ம அர்த்தத்தை தேவதைகளாலும் புரிந்துகொள்வதற்கு சாத்தியம் இல்லை. அதன் அர்த்தத்தை வேதவியாசதேவர் மட்டுமே அறிவார். அவரின் அருளால் பிரம்மதேவர் அறிவார். ஆனாலும், பாரதம் முழுக்க விஷ்ணுவைப் பற்றியே சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம். 

ஆகையால், பாரதத்தில் எவ்வளவு பகவன் மகிமைகள் இருந்தாலும், அதைப் படிக்க தகுதியற்ற மனிதர்களுக்கு அதனால் என்ன பயன்? ஆகவே, பகவந்தனின் விருப்பப்படி, பாரதத்தில் பகவந்தனின் மகிமைகள் சொல்லப்பட்டிருந்தாலும், நாரதர் பாகவத்தை இயற்றும்படி வேண்டினார். 

இதாவது வெறும் தேவாதிகாரியாகவே இருக்கிறது. அதனால், பாரதமானது துவக்கம் முதல் கடைசிவரை சாறு நிறைந்த கரும்பினைப் போன்று இனிக்கிறது. இப்படியாக, பாரதம் என்னும் கரும்பானது, 18 கண்களைக் கொண்டு, ஒவ்வொரு பர்வமும் சிறப்பான சாற்றினை முழுமையாகக் கொண்டுள்ளது. என்னதான் கரும்பில் சுவை இருந்தாலும், பல் முளைக்காத குழந்தைகளும், பல் விழுந்த வயதானவர்களும் அதை சுவைக்க முடியாது. அப்படியே பாரதம் படிப்பதும் மனிதர்களுக்கு சாத்தியம் இல்லை என்று நினைத்து, கரும்பைப் பிழிந்து சாற்றினை பிரித்தெடுப்பதைப் போல பாகவதத்தை இயற்றினார். ஆகவே பாகவதம் ‘அம்ருதத்ரவ சம்யுதம்’ அமிர்த ரசத்தினால் (முக்தி ரசத்தினால்) ஆனது என்று சொல்கின்றனர். இந்த பாகவதமும்கூட சாமான்ய மனிதர்களுக்கு ஞானத்திற்கான சாதனை அல்ல. ஏனெனில் ’நிர்மத்ஸராணாம் சதாம் வேத்யம்’ என்னும் வசனத்தால் தன்னைவிட உத்தமரிடம் பொறாமை கொள்ளாதவர்களே பாகவதம் படிப்பதற்கு தகுதியானவர் என்று சொல்லியிருப்பதால், ஸ்வரூப ஞானம் உள்ள தேவதைகளே பாகவதம் படிப்பதற்கு முக்கிய அதிகாரிகள் என்று சொல்லவேண்டியதாயிற்று. பாரதத்திற்கு பிரம்மதேவரே அதிகாரி என்றும், பாகவதத்திற்கு தேவதைகளே அதிகாரிகள் என்று மேலே சொன்னவைகளிலிருந்து தெரிய வருகிறது. ஆகையால், ஒரு பாத்திரத்தில் கரும்பு சாற்றினை வைத்தால், அதை களங்கமான தண்ணீர் என்று நினைத்து, அதன் உண்மையான ருசியை அறியாமல், புருஷர்கள் எப்படி அதை குடிக்காமல் இருப்பார்களோ அப்படி பாகவதத்தின் மகிமைகளை அறியாமல்; மற்றும் சம்ஸ்கிருதத்தை அறியாத மனிதன் அதிலிருக்கும் ரசத்தை குடிக்கமாட்டான். ஆகையால் பாகவதத்தில் ‘ரசிகா பாவிபாவுகா:’ பாகவதத்தின் ருசியை அறிந்தவர் யாரோ, அவரே இதை குடியுங்கள் என்று கூறினார். ஆகையால், பாகவதமும்கூட அனைவரும் படிக்கக்கூடியதாக இல்லை. ஆகையால், கன்னட மொழியிலேயே தத்வஞானம் தெரிவதற்கு, சுலபமாக வைராக்கியம் கிட்டுவதற்கு சாதனமான இந்த கிரந்தத்தை இயற்றுவதற்கு பகவத் அனுமதி கிடைத்தது. இந்த கிரந்தத்திற்கு ‘ஹரிகதாம்ருதசார’ என்று பெயரிட்டார். 

இதன் பொருள் என்ன? ஹரிகதை என்னும் அம்ருத ரசத்தினால், ஒரு கரும்பைப் போல இருக்கின்றன வேதங்கள், பாரதம் ஆகியவை. இவற்றிற்கு ஹரிகதை என்று பெயர். அம்ருதம் என்றால் அவற்றின் சாரம். ஆக, ஹரிகதாம்ருத என்றால் பாகவதம் என்று சொல்லலாம். அதன் சாரம் என்றால், கரும்பினை காய்ச்சி சர்க்கரை எடுப்பதைப் போல இந்த கிரந்தமும் இருக்கிறது. பாரதாதி கிரந்தங்கள் கரும்பு. அதன் சாறு பாகவதம். அதிலிருந்து கிடைக்கும் சர்க்கரை போன்றது இந்த கிரந்தம். வெல்லம் அல்லது சர்க்கரை இவற்றைப் பார்த்தால் உடனடியாக அடையாளம் கண்டுகொள்வர். போலவே, பகவத் பக்தரான பாமரர்களும் பண்டிதர்களும் கூட இந்த கிரந்தத்தை படிப்பதற்கு தகுதியானவர்கள் என்று சொல்வது போலாயிற்று. 

ஸ்ரீஜகன்னாததாசர் இந்த கிரந்தத்தை 32 சந்திகளாக பிரித்து, தொன்று தொட்டு வரும் பழக்கமாக கிரந்தத்தின் துவக்கத்தில், மூன்று வரிகளில் பொருள் நிறைந்த பல்லவியை இயற்றியிருக்கிறார். 

***

No comments:

Post a Comment