ஆரு மூரெரடொ3ந்து சாவிர
மூரெரடு ஷத ஷ்வாஸ ஜபகள
மூருவித ஜீவரொளக3ப்ஜஜ கல்பபரியந்த |
தா1 ரசிஸி சாத்வரிகெ3 சுக2 சம்
சார மிஸ்ரரிக3த4ம ஜனரிக
பார து3க்க2க3ளீவ கு3ருபவமான சலஹெம்ம ||4
பொருள்:
ஆறுமூரெரடொந்து சாவிர மூரெரடு ஷத ஸ்வாஸ ஜபகள = ஆறு மூரு (6x3=18) எரடொந்து (2+1=3) ஸாவிர, மூரெரடு ஷத = (3x2x100=600) ஆக மொத்தம் 21,600 ஷடக்ஷராத்மக ஹம்ஸ மந்திர ஜபத்தினை தினந்தோறும்.
மூரு வித ஜீவரொளகெ = சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்று வித ஜீவர்களுக்குள்ளும் இருந்து
அப்ஜஜகல்ப பர்யந்த = பிரம்மகல்ப முடியும்வரை
தா ரசிஸி = தான் செய்து
ஸத்வரிகெ = சாத்விகர்களுக்கு
சுக = முக்தி சுகத்தை
மிஷ்ரரிகெ = ராஜஸர்களுக்கு
சம்சார = சுக, துக்கங்கள் கலந்த நித்ய சம்சாரத்தை
அதமரிகெ = தாமஸ ஜனர்களுக்கு
அபார துக்ககள = சகிக்கமுடியாத துக்கங்களைக் கொண்ட அந்தந்தமஸ்ஸினை
ஈவ = கொடுக்கிறார்
குருபவமான = குருமுக்யபிராண
யம்ம = நம்மை
ஸலஹு = பஞ்சபேத தாரதம்யாதி ஞானங்களைக் கொடுத்து அருள்வாயாக.
விளக்கம்:
ஹே பவமானனே. ஸாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்று வித ஜீவர்களுக்குள்ளும் இருந்து, தினந்தோறும் 21,600 ஷ்வாஸ ஜபம் என்னும் ஹம்ஸ மந்திர ஜபங்களை, பிரம்ம கல்பத்தின் முடிவு வரைக்கும் செய்து, ஸாத்விகர்களுக்கு முக்தியையும், ராஜஸர்களுக்கு சம்சாரத்தையும், தாமஸர்களுக்கு அந்தந்தமஸ்ஸையும் வழங்குவதற்கு காரணமாக இருக்கிறாய். அத்தகைய நீ எமக்கு அருள்வாயாக.
சிறப்புப் பொருள்:
'த்வச்சரணகளிகபிவந்திஸுவெ பாலிபுது சன்மதிய’ என்று பிரம்மதேவரிடம் நற்புத்தியை வழங்குமாறு வேண்டிய தாசராயர், அப்படியே வாயுதேவரிடமும் வேண்டாமல் ‘குருபவமான ஸலஹெம்ம’ என்று மட்டும் வேண்டியது எதற்காக? வாயுதேவரே அடுத்து பிரம்மபதவிக்கு வருகிறார் ஆகையால், பிரம்ம என்னும் சொல்லாலேயே வாயுதேவரை வணங்கியாயிற்று என்று சிந்தித்து வாயுதேவருக்கு என்று தனியாக வணங்கவில்லை. வாயுதேவரை தனியாக வணங்கக்கூடாது என்று விதி எதுவும் இல்லை. ஏன் செய்யவில்லையெனில், வாயுதேவருக்கும் பிரம்மதேவருக்கும் பதவியில் மட்டுமே பேதமே தவிர வேறு எந்த பேதமும் இல்லை. வாயுதேவரே பிரம்மதேவர் என்று மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே வாயுதேவரை தனியாக வணங்கவில்லை. ஆனாலும், வாயுபதவியில் இருந்துகொண்டு மக்களுக்கு உதவும் விதமே வேறு. பிரம்மபதவியில் இருந்துகொண்டு மக்களுக்கு உதவும் விதமே வேறு. ஆகையாலேயே, பிரம்மதேவரிடமிருந்து சித்த சுத்தியை மட்டும் வேண்டிக்கொண்டு, வாயுதேவரிடமிருந்து மக்களுக்கு உண்டாகும் மிகப்பெரிய உதவியை தெரிவித்து, அவரிடமிருந்து, தமக்கும் இந்த கிரந்தத்தைப் படிக்கும், கேட்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வேண்டுகிறார்.
வாயுதேவரால் மக்களுக்கு ஆகும் உபகாரம் என்னவெனில்: உலகத்தில் அனைத்து பிராணிகளும் மூச்சு விடுகிறார்கள்தானே? அந்த மூச்சினை வாயுதேவரே பிராணிகளில் இருந்துகொண்டு செய்விக்கிறார். அது ஒரு நாளுக்கு சுமார் (அதாவது 60 நாழிகைகளுக்கு) 21,600 என்று ஆகிறது. ஜீவராசிகள், தேவமனுஷ்யாதி வேறுபாட்டினால், சாத்விக, ராஜஸ, தாமஸ என்று மூன்று விதமாக இருக்கின்றனர். ஸ்வாஸத்தில் ஸ்வாஸ, உஸ்வாஸ, நிஸ்வாஸ என்று மூன்று விதங்கள் உண்டு. ஸ்வாஸ என்றால் மூக்கிலிருந்து காற்றை வெளியில் விடுவது. உஸ்வாஸ என்றால் காற்றை உள்ளிழுப்பது. நிஸ்வாஸ என்றால் இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட காலம். இன்று மூன்றும் சேர்ந்து ஸ்வாஸ எனப்படுகிறது. இதை மனுஷ்யாதிகள் ஒரு நாளைக்கு 21,600 முறை செய்கின்றனர்.
இந்த ஸ்வாஸமானது வெறும் ஸ்வாஸம் என்று அழைக்கப்படாமல், ஸ்வாஸ ரூபமான ஹம்ஸ மந்திர ஜபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஹம்ஸ மந்திர ஜபத்தை, மூன்று வித ஜீவர்களுக்குள்ளும் இருந்து, வாயுதேவரே செய்து, ஜீவர்களால் செய்விக்கிறார். பிராணிகள் விடும் மூச்சினை ஹம்ஸ மந்திர ஜபம் என்று எப்படி சொல்வது என்றால், ஹம்ஸ மந்திரமானது ‘ஹம்ஸ: ஸோஹம் ஸ்வாஹா’ என்னும் ஆறு எழுத்துக்களால் ஆனது. ஹம்ஸ என்னும் இரு எழுத்துக்கள் இடைப்பட்ட காலம். ஸோஹம் என்னும் இரு எழுத்துக்கள் உஸ்வாஸ காலம். ஸ்வாஹா என்னும் இரு எழுத்துக்கள் ஸ்வாஸ காலம்.
இந்த சோதனையை அனைவரும் செய்து பார்க்கலாம். வாயை நன்றாக மூடிக்கொண்டு மூக்கினால் மட்டுமே மூச்சு விடவேண்டும். மூச்சை இழுத்துப் பிடிக்கும்போது ‘ஹம்ஸ’ என்னும் இரு எழுத்துக்களை மனதில் சொல்லிக் கொள்ளவும். காற்றை இழுக்கும்போது ‘ஸோஹம்’ என்றும், காற்றை விடும்போது ‘ஸ்வாஹா’ என்றும் சொல்லவும். இதுவே ஹம்ஸ மந்திர ஜபமாகும். மூன்று வித ஜீவர்களுக்குள் இருந்துகொண்டு வாயுதேவர் இந்த ஹம்ஸ மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தாலும், அந்த மந்திர ஜபத்தின் பலனை, அந்த மூன்று ஜீவர்களுக்கும் மூன்று விதமாகக் கொடுக்கிறார்.
அது ஏனெனில், மந்திரத்தின் உபாஸனையின் வேறுபாட்டினால், அதன் பலன்களும் வேறுபடுகின்றன. சாத்விகர்கள் தாம் விடுவது வெறும் காற்று மட்டும் அல்ல, அது ஹம்ஸ மந்திர ஜபம் என்று அனுசந்தானம் (சிந்தனை) செய்கிறார்கள். இது எப்படியென்றால்: தந்திரசாரத்தில் சொல்லப்பட்டுள்ள 32 மஹாமந்திரங்களில் இது ஒரு முக்கிய மந்திரமாகும். ‘பூர்வேத்யு: ப்ராத: சூர்யோதயமாரப்ய அத்யஸூர்யோதய பர்யந்தம் மத்தேஹஸ்தித முக்ய ப்ராணக்ருதேன, முக்யப்ராணப்ரேரிதேன மயாக்ருதேனச ஷட் ஷதாதிக ஏகவிம்ஷ சஹஸ்ர சங்க்யாக ஸ்வாஸ ரூப ஷடக்ஷர ஹம்ஸமஹாமந்திரஜபேன பகர்வா முக்ய பிராணாந்தர்கத ஹம்ஸரூபி ஸ்ரீலட்சுமி நாராயண: ப்ரியதாம்’. இதன் பொருள் என்னவெனில்: நேற்றைய சூர்யோதயத்திலிருந்து இன்றைய சூர்யோதயத்தின் வரை நம்முள் இருக்கும் வாயுதேவர் செய்த மற்றும் அவரின் ப்ரேரணையினால் நான் செய்த 21,600 எண்ணிக்கையிலான ஸ்வாஸ ரூபங்களான 6 எழுத்துக்களால் கூடிய ஹம்ஸ மஹாமந்திர ஜபங்களால், முக்யபிராணனின் அந்தர்யாமியான ஸ்ரீலட்சுமி நாராயணன் ப்ரீதியாகட்டும்’ என்ற பொருளை சிந்தித்து, செய்த ஸ்வாஸங்களை பரமாத்மனுக்கு ஜப பாவனையுடன் சமர்ப்பித்து, இந்த ஸ்லோகத்தை சொல்வார்கள்.
முக்யபிராணேன மத்தேஹே மந்த்ர த்ரயஜபஸ்ஸதா
அனுக்ரஹாயமே விஷ்ணு ப்ரீதயே க்ரியதேஹிஸ: |
ஏகவிம்ஷத் ஸஹஸ்ராத்மா ஸஷட்ஷதமஹர்னிஷம்
தத்ஸர்வம் விஷ்ணுபூஜாஸ்து ப்ரீயதாம் ப்ராணமாபதே ||4
இதன் பொருள்:
முக்யபிராண தேவர், என் தேகத்தில் இருந்துகொண்டு, ஹம்ஸ: ஸோஹம் ஸ்வாஹா என்னும் மூன்று மந்திரங்களின் ஜபங்களை, எனக்கு அருள்வதற்காகவும், விஷ்ணு ப்ரீத்யர்த்தமாகவும் செய்துவருகிறார். இப்படியாக நான் இரவும் பகலுமாக செய்துவரும் 21,600 ஸ்வாஸ ரூபங்களான ஜபங்கள் அனைத்தும் விஷ்ணு பூஜையாகட்டும். இதனால், பிராணதேவருக்கும், லட்சுமிதேவிக்கும் தலைவனான ஸ்ரீபரமாத்மன் ப்ரீதனாகட்டும்.
இதைப் போலவே இன்னொரு ஸ்லோகமும் உண்டு. அதன் பொருளை மட்டும் தருகிறோம். இன்றைய சூர்யோதயத்திலிருந்து நாளைய சூர்யோதயம் வரைக்குமான 21,600 ஸ்வாஸரூப ஹம்ஸ மந்திர ஜபங்களை நம் தேகத்தில் இருந்துகொண்டு, தாமும் செய்து, நம்மிடமிருந்தும் செய்விக்க வேண்டும் என்னும் ஆசைகொண்ட முக்யபிராணதேவரின் விருப்பப்படி, நான் செய்வேன் என்று அடுத்து செய்யவிருக்கும் ஸ்வாஸ ஜபங்களுக்கு சங்கல்பம் செய்வர். என் தேகத்தில் இருக்கும் பிராண நாமக வாயுதேவரின் மற்றும் அபான நாமக வாயுதேவரின் உதவியாலும், தியான யோகத்தினாலும், இந்த ஸ்வாஸரூப ஹம்ஸமந்திர ஜபங்களை செய்வேன். இதிலிருந்து, ஹம்ஸரூபி பரமாத்மன் ப்ரீதனாகட்டும். என்று சங்கல்பம் செய்வர்.
இதற்கு வேறு மந்திரமில்லை. இவர் விடும் ஸ்வாச்சோஸ்வாஸங்களே ஜபங்கள் என்று அறியவேண்டும். ஹம்ஸ: ஸோஹம்: ஸ்வாஹா என்னும் மந்திரத்தின் அர்த்தத்தை, சாத்விகர்கள் அறிந்திருக்கும் விதம் எப்படியெனில்: ஹம்ஸ: = ’துக்கம் சர்வம் ஹந்தீதி ஹம்ஸ:’. அனைத்து துக்கங்களையும் நாசம் செய்பவனாகையால் அவன் ஹம்ஸன் என்று அழைக்கப்படுகிறான். ‘ஸோஹம்’ என்றால், அந்த ஹம்ஸனின் பிரதிபிம்பமே நான். ஆகையால் ஹம்ஸ என்னும் சொல் என்னையும் குறிக்கும். இது எப்படியென்றால், கண்ணாடியில் என் பிரதிபிம்பத்தைப் பார்த்தால், அது நம்மைப் போலவே தோன்றுகிறது ஆகையால், நானே அது என்று பிரதிபிம்பத்தை நினைக்கிறோம். நம் புகைப்படத்தை எடுத்து, அது யாருடைய படம் என்று கேட்டால், நம் பெயரையே சொல்கிறோம். ஆனால், அந்த புகைப்படத்திற்கும், அந்த படத்தில் இருப்பவருக்கும் எப்படி வேறுபாடு இருக்கிறதோ அப்படியே ஸோஹம் என்னும் சொல்லால், அவனே நான் என்னும் அர்த்தம் இல்லை. அவனின் பிரதிபிம்பம் நான் என்று அறியவேண்டும். ஸ்வாஹா என்னும் சொல் வணக்கத்தைக் குறிப்பதாகும். இப்படியாக இந்த மந்திரத்தின் அர்த்தத்தை புரிந்துகொண்டு சாத்விகர்கள் உபாசனை செய்வதால், அவர்கள் சுக ஸ்வரூபமான முக்தியைப் பெறுகிறார்கள்.
தாமஸர்கள் இதற்கு எதிர்ப்பதமாக இருக்கின்றனர். அதாவது: ’யோஹம்ஸ: யார் ஹம்ஸனோ, ஸோஹம் - அவனே நான். ஸ்வாஹா - முன்னர் சொன்னதைப் போலவே. இப்படியாக, பரமாத்மனே நான் என்று உபாசனை செய்வதால், துக்க ஸ்வரூபமான தமஸ்ஸினை அடைகின்றனர்.
ராஜஸர்கள் இதன் சரியான அர்த்தத்தை அறியாமல், சந்தேகத்துடன் இருந்து, சுக துக்கத்தின் கலவையான நித்ய சம்சாரத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
இப்படி, மூன்றுவித ஜீவர்களும் தங்களின் வெவ்வேறான அனுசந்தானத்தினால், அதற்குத்தக்க பலன்களைக் கொடுக்கும் ‘குரு பவமான’, நம்மை காப்பாற்றட்டும். ராஜஸ, தாமஸ புத்திகளை விடுவித்து, சாத்விக பாவத்துடன் உபாசனை செய்வித்து, சத்கதியைக் கொடுத்து அருளட்டும் என்று தாசராயர் வேண்டிக்கொள்கிறார்.
அடுத்து, வாக்கிற்கு அபிமானியான சரஸ்வதிதேவியை வணங்குகிறார்.
***
No comments:
Post a Comment