நிருபமானந்தா3த்ம ப4வ நி
ர்ஜர சபா4சம்சேவ்ய ருஜுக3ண
த3ரஸெ சத்வப்ரசுர வாணிமுக2சரோஜேன |
கருட சேஷ ஷஷாங்கத3ல சே
கரர ஜனக ஜகத்குரவே த்வ
ச்சரணகளிக3பி4 வந்திசுவே பா1லிபு1து சன்மதிய ||3
பொருள்:
நிருபமானந்த = உவமைகள் அற்ற அற்புத ஆனந்தத்தைக் கொண்ட.
ஆத்மபவ. ஆத்ம = பரமாத்மனிடமிருந்து.
பவ = தோன்றிய. அல்லது.
நிருபமானந்தாத்மபவ = உவமைகள் அற்ற ஆனந்த ரூபமான பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்து தோன்றிய.
நிர்ஜரசபா சம்ஸேவ்ய. நிர்ஜர = தேவதைகளின்.
சபா = குழுவிடமிருந்து.
சம்ஸேவ்ய = நன்றாக வணங்கப்படும்.
ருஜுகணதரஸெ = பிரம்ம பட்டத்திற்கு தகுதி பெற்ற கணங்களுக்கு தலைவனான.
ஸத்வப்ரசுர = சத்வகுணங்கள் நிரம்பியவரான.
வாணிமுகசரோஜேன. வாணி = சரஸ்வதி.
முகஸரோஜேன = முக கமலத்திற்கு
இன = சூரியனைப் போலிருக்கும்
கருட, சேஷ, ஷஷாங்கதள சேகரர = கருட, சேஷ, ருத்ரர்களின்
ஜனக = தந்தையான
ஜகத்குருவே = உலகத்திற்கு முக்கிய குருவான, ஹே பிரம்மனே
த்வச்சரணகளிகெ = உன் பாதாரவிந்தங்களை
அபிவந்திஸுவெ = வணங்குகிறேன்
ஸன்மதிய = (ஸ்ரீபரமாத்மனின் பாதாரவிந்தங்களில் என் மனம் லயிக்குமாறு) நல்ல புத்தியை
பாலிபுது = அருள் புரிவாயாக.
விளக்கம்:
யார் உவமைகள் கொடுக்க சாத்தியமில்லாத ஆனந்த ஸ்வரூபத்தைக் கொண்ட ஸ்ரீபரமாத்மனின் சாக்ஷாத் சேவகனாக இருக்கிறாரோ, யார் மொத்த தேவ கணங்களால் வணங்கப்படுகிறாரோ, யார் நிர்மலமான சத்வ ஸ்வரூபனாக இருக்கிறாரோ, யார் சரஸ்வதிதேவியின் முக-கமலத்திற்கு தாமரையைப் போல இருக்கிறாரோ, யார், கருட, சேஷ, ருத்ரர்களுக்கு தந்தையாக இருக்கிறாரோ, அத்தகைய ஜகத்குருவான பிரம்மனின் பாத-பத்மங்களை நான் வணங்குகிறேன். எனக்கு நற்புத்தியைக் கொடுத்து அவர் அருளட்டும்.
சிறப்பு விளக்கம்:
பொதுவாக, மனஸ், புத்தி, சித்த ஆகிய மூன்றையும் ஒன்றாகவே நினைத்து நாம் பயன்படுத்தி வந்தாலும், இவை மூன்றும் வெவ்வேறு தத்வங்களாகவும், வெவ்வேறு தேவதைகள் அங்கு அபிமானியாகவும் இருக்கின்றன. மனஸ் என்றால் முதன்முதலில் பிறக்கும் சஞ்சல நிலை. புத்தி என்றால் அதை நிச்சயம் செய்யும் நிஸ்சல நிலை. சித்த என்றால் சத்-வ்ருத்தி. சந்திரன், மனோபிமானியாவார். புத்திக்கு அபிமானி ப்ருஹஸ்பதி மற்றும் உமாதேவி. சித்தத்திற்கு அபிமானி பிரம்ம மற்றும் வாயு. வாயுதேவரே அடுத்த கல்பத்தில் பிரம்ம பட்டத்திற்கு வருகிறார். இவர்கள் இருவரும் சமமே. ஆனாலும், பதவியில் வாயுவைவிட பிரம்மன் சிறிது அதிகமாக இருப்பதால், முதலில் பிரம்மதேவரை வணங்குகிறார் தாசர். ’நிருபமானந்த’ என்னும் பதத்தினால் உன் சரணங்களை வணங்குவேன் என்று கூறுகிறார். பிரம்மதேவருக்கு ஜகத்குரு பதவி எப்படி வந்தது என்றால்:
‘ஜகத்குருத்வமாதிஷ்டம் மயாதே கமலோத்பவ’. என்னால் உனக்கு ஜகத்குருத்வம் கொடுக்கப்பட்டுள்ளது என்று பரமாத்மன், பிரம்மதேவருக்கு சொல்ல்லியிருப்பதாக, தாத்பர்ய நிர்ணய 9ம் அத்தியாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நிர்ணயத்தில் இன்னொரு இடத்தில் ‘ஷண்ணவத்யங்குலோயஸ்து ந்யக்ரோதபரிமண்டல: சப்தபாதஷ்சதுர்ஹஸ்தோ த்வாத்ரிம்ஷல் லக்ஷணைர்யுத: அஸம்ஷய: சம்ஷயஸ்சித்குருக்தோ மனீஷிபி: தஸ்மாத்பிரம்மா குருர்முக்ய: சர்வேஷாமேவ சர்வதா’ என்றும் சொல்லியிருக்கிறார். இதன் பொருள் என்னவெனில்:
குருவின் லட்சணத்தை சொல்கிறார். 96 அங்குலம் உயரம் இருக்கவேண்டும். இரு கைகளை நீட்டினாலும் இதே அளவு இருக்கவேண்டும். 24 அங்குலத்திற்கு ஒரு முழம் என்று பெயர். அத்தகைய 4 முழங்கள் 96 அங்குலங்கள் ஆகின்றன. 4 முழங்களை காலடிகளால் அளந்தால் 7 காலடி ஆகவேண்டும். இப்படி இரு கைகள் நீட்டினால் வரும் அளவும், உயரமும் ஒன்றாக இருந்தால், அதற்கு ’ந்யக்ரோத பரிமண்டலம்’ என்பார்கள். 32 லட்சணங்கள் இருக்கவேண்டும். தனக்கு சந்தேகங்கள் எதுவும் இருக்கக்கூடாது. மற்றவர்களின் சந்தேகங்களை சரியாக தீர்ப்பவராக இருக்கவேண்டும். இத்தகைய குணங்கள் உள்ளவரே குரு ஆவார். இத்தகைய அனைத்து லட்சணங்களையும் கொண்ட குரு பிரம்மன் ஒருவரே. வாயுதேவர், பிரம்மனுக்கு சமமானவர் என்பதாலும், பின்னர் இவரே பிரம்ம பதவிக்கு வரப்போகிறவர் என்பதாலும், வாயுதேவரும் குரு எனப்படுகிறார். இதற்கு நிர்ணய வாக்கியம் இருப்பதால் ‘ஜகத்குருவே’ என்று அழைத்திருப்பதாக அறியவேண்டும்.
’நிருபமானந்தாத்மபவ’ என்று, பரமாத்மனின் நாபி கமலத்திலிருந்து பிறந்திருக்கும் மகாமகிமர் என்று சொல்லியிருக்கிறார். மன்மதன்கூட பரமாத்மனின் மகனே. ‘நிர்ஜரசபா சம்ஸேவ்ய’ என்கிறார். தேவேந்திரன், தேவகணங்களால் வணங்கப்படுபவன். ‘முகாதிந்த்ராஸ்சாக்னிஸ்ச’ என்னும் வாக்கியத்தின்படி தேவேந்திரனும் பரமாத்மனின் மகனே. இப்படி இருக்கையில், பிரம்மதேவர் எப்படி சிறந்தவர் ஆகிறார் என்றால், ‘ருஜுகணதரஸெ’ என்றார். இந்த அதிகாரம் பிரம்மதேவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அதனாலேயே, பிரம்மர் ஜீவோத்தமர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதைத்தவிர, ருத்ராதி தேவர்களில் ரஜோகுணம் அதிகமாக காணப்படுகிறது. இவரில் அப்படி இல்லை என்பதற்காக ‘சத்வப்ரசுர’ என்கிறார். ‘விஷுத்தசத்வம் பிரம்மாக்யம்’ என்னும் பாகவத வசனத்தின்படி, இவரிடம் சத்வகுணம் அதிகமாக காணப்படுகிறது என்பதை நினைவூட்டுகிறார். இத்தகைய வாக்கியங்களால், இவருக்கு அசுராவேஷமோ, அஞ்ஞானாதி தோஷங்களோ இல்லை என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், நமக்கு ஒரு பெரிய அதிகாரியினால் ஒரு வேலை ஆகவேண்டுமெனில், நேரடியாக அவரிடமே போய் அதைப்பற்றி கேட்டால், அது நடக்காமல் போக வாய்ப்பிருக்கிறது. ஆகையால், முதலில் அதிகாரியின் அன்பைப் பெற்ற ஒருவரின் கருணையைப் பெற்று, அவர் மூலமாக அந்த அதிகாரியைக் கண்டால், அந்த வேலை நடக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பதை உலக வழக்கத்தில் பார்க்கிறோம். இதன்படியே, தாசராயரும், பிரம்மனின் பரிவாரங்களில் மூத்தவரான அவரது மனைவியின் மூலமே அவரின் பிரசாதத்தைப் பெறவேண்டும் என்று உத்தேசித்து ‘வாணிமுக ஸரோஜேன’ என்கிறார். சூரியனைக் கண்ட தாமரை எப்படி மலர்கிறதோ, அதன்படியே பிரம்மன் என்னும் சூரியனைக் கண்ட சரஸ்வதியின் முக- கமலம் மலர்கிறது என்னும் சிந்தனையுடன் இந்த பதத்தை பயன்படுத்தியுள்ளார். பொதுவாக கணவரின் முகத்தைக் கண்டால், மனைவிக்கு ஆனந்தம் உண்டாகிறது. இதிலிருந்து, அவரின் பதிவிரதமும், அவர்கள் இருவரின் மகிழ்ச்சியான தாம்பத்யத்தையும் அறியலாம். இப்படி வர்ணித்திருப்பதால், சரஸ்வதிதேவியரின் பிரசாதமும் கிடைத்து, அவர் மூலமாக, பிரம்மதேவரின் பிரசாதமும் கிடைக்கிறது என்பது தாசராயரின் அபிப்பிராயம்.
மேலும், ’கருட, சேஷ, ஷஷாங்கதள சேகரர ஜனக’ - கருட, சேஷ, ருத்ரர்களின் தந்தை என்று சொல்கிறார். இதற்கு ஆதாரம் என்னவெனில்: மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தின் 3ம் அத்தியாயத்தில் ‘வ்யூடஸ்சதுர்தாபகர்வா’ என்னும் 9ம் ஸ்லோகத்திலிருந்து ‘தௌவாஹனம் ஷயனம் சைவவிஷ்ணோ:’ என்னும் 13ம் ஸ்லோகம் வரைக்கும் இவரின் சிறப்பினை விளக்கியிருக்கிறார் ஸ்ரீமதாசார்யர். இதன் பொருள் என்னவெனில்: ஸ்ரீபரமாத்மன், வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்தன் என்னும் 4 ரூபங்களை எடுத்திருக்கிறார். லட்சுமிதேவியும் 4 ரூபங்களை தரித்து, 4 ரூபங்களை எடுத்த பரமாத்மனுக்கு மனைவியாகிறார். அதில், வாசுதேவ நாமகனான ஸ்ரீஹரியின் ரூபத்தை அடையும் மாயாதேவி புருஷனைப் படைத்தார். சங்கர்ஷண நாமகனான ஸ்ரீஹரியின் ரூபத்தை அடையும் ஜயாதேவி, ஸூத்ரனைப் (Soothra) படைத்தார். ‘ஸூத்ரம் ஸவாயு: புருஷோவிரிஞ்சி:’. ஸூத்ரனே வாயுதேவர். புருஷன் பிரம்மதேவர். பிரத்யும்ன நாமகனான ஸ்ரீஹரியின் ரூபத்தை அடையும் கிருதிதேவி இரு பெண் மக்களைப் படைத்தார். முதலாமவள் ப்ரக்ருதி, இரண்டாமவள் ஷ்ரத்தா. இவர்கள் இருவரே சரஸ்வதி பாரதியர்கள். பிரம்மதேவரிடமிருந்து சரஸ்வதி ஜீவன், வாயுதேவரிடமிருந்து பாரதி காலனையும் பெற்றனர். இவர்களில் ஜீவனே சேஷன். காலனே கருடன். இவர்கள் இருவரில் ஒருவர் பரமாத்மனுக்கு படுக்கையானார். இன்னொருவர் வாகனமானார் என்று நிர்ணயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதே அர்த்தத்தையே விஷ்ணுரகசியத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மதேவரிடமிருந்து ருத்ரதேவர் பிறந்தார் என்பதற்கு பாகவத நிர்ணயாதிகள் ஆதாரமாக இருக்கின்றன. சேஷ கருடர், பிரம்ம வாயுகளின் மக்கள் ஆனாலும், வாயுதேவரே கல்பத்தின் முடிவில் பிரம்மன் ஆகிறார் ஆகையால் தாசராயர், கருட, சேஷ, ருத்ரர்களை பிரம்மதேவரின் மக்கள் என்று சொல்கிறார். இத்தகைய பிரம்மதேவருக்கு நமஸ்காரங்களை சொல்லி, நல்லறிவைக் கொடுக்கட்டும் என்று வேண்டுகிறார்.
அடுத்த பத்யத்திலிருந்து, உலகத்திற்கு முக்கிய குருகளான ஹனும, பீம, மத்வ அவதாரங்களினால் ராம, கிருஷ்ண, வேதவியாஸரின் சேவையை செய்து, ஹரி சர்வோத்தம, வாயு ஜீவோத்தம என்னும் ஞானத்தினால் பஞ்சபேத, தாரதம்யாதிகளை அறிந்து பரமாத்மனை உபாசனை செய்வதே முக்திக்கு சாதனை என்று நிர்ணயித்து, ஜகத்குரு என்று அழைக்கப்பெற்ற வாயுதேவரை பிரார்த்திக்கிறார்.
***
No comments:
Post a Comment