#6 - மங்களாசரண சந்தி
க்1ருதிரமண ப்ரத்3யும்ன நந்த3னெ
சதுரவிம்ஷதி த1த்1வப1தி தே
வதெக3ளிகெ3 கு3ருவெனிசுதிஹ மாருதன
நிஜபத்னி |
சத1த1 ஹரியலி கு3ருகளலி ச
த்ரதிய பாலிஸி பா4க3வத பா4
ரத1 புராண ரஹஸ்ய த1த்வக3ளருபு1 கருணதலி ||6
க்ருதிரமண ப்ரத்யும்ன நந்தனெ = க்ருதி நாமகளான ரமா தேவியரின். ரமண = கணவனான ப்ரத்யும்ன = ப்ரத்யும்ன நாமகனான ஸ்ரீபரமாத்மனின். நந்தனெ = மகளான.
சதுரவிம்ஷதி தத்பதி தேவதெகளிகெ = 24 தத்வாபிமானிகளான தேவதைகளுக்கு
குருவெனிஸுதிஹ = குரு என்று அழைக்கப்படும்
மாருதன = வாயுதேவரின்
நிஜபத்னி = நியத பத்னியான பாரதி தேவியே
ஸதத = எப்போதும்
ஹரியலி = ஸ்ரீபரமாத்மனிடம்
குருகளலி = பிரம்மதேவரில் துவங்கி நம் குருகளின் வரை, தாரதம்யத்தின்படி அனைத்து குருகளிடமும்
ஸத்ரதிய = விசேஷமான பக்தியை
பாலிஸி = கொடுத்து
கருணதலி = என் மேல் கருணையுடன்
பாகவத பாரத புராண ரஹஸ்யகள = பாகவத பாரதாதி புராணங்களில் அடங்கியிருக்கும் / மறைந்திருக்கும் அரிய பகவத் தத்வங்களை
அருபு = தெரியப்படுத்து.
பொருள்:
முந்தைய பத்யத்தில் சரஸ்வதி தேவியரை வணங்கி நற்புத்தியை வேண்டி, பின் அடுத்த கல்பத்தில் சரஸ்வதி பதவிக்கு வரப்போகும் பாரதி தேவியிடம் தன் இஷ்டார்த்தங்களை இப்படியாக வேண்டுகிறார். தாயே! பாரதி! நீ பிரத்யும்ன ரூபியான பரமாத்மன் மற்றும் கிருதி என்னும் லட்சுமிதேவியின் ரூபத்திலிருந்து பிறந்தவள். ஆகையால் உனக்கு லட்சுமி நாராயணரே தாய் தந்தையாக இருக்கின்றனர். உன் பதியோ 24 தத்வாபிமானி தேவதைகளுக்கும் குரு எனப்படுகிறார். இத்தகைய உன்னை நான் வேண்டிக் கொள்கிறேன். ஸ்ரீபரமாத்மனிடமும், அவரின் பரம பக்தர்களான உன் கணவர் முதலான அனைத்து குருகளிடமும் எனக்கு திடமான பக்தியைக் கொடு. மேலும் என்னிடம் தயைகூர்ந்து, நான் எழுத முற்பட்டுள்ள இந்த ஹரிகதாம்ருதசார என்னும் கிரந்தத்திற்குத் தேவையான, பாரத பாகவத புராணங்களில் அடங்கியிருக்கும் / மறைந்திருக்கும் பகவத் தத்வங்களை எனக்கு புரியுமாறு / என் நினைவுக்கு வருமாறு எனக்கு அருள்புரிவாயாக.
சிறப்புப் பொருள்:
பாரதி தேவியே பின்னர் சரஸ்வதிதேவியராக இருப்பார் என்பதை குறிக்கும் வகையில், பாரதி தேவிக்கு தனியாக நமஸ்காரங்களை செய்யவில்லை. அதிகார பேதம் இருப்பதால், பலன்களை மட்டும் தனியாக வேண்டியிருக்கிறார் என்பதை அறியவேண்டும். இந்த பாரதி தேவியர், கருட, சேஷ, ருத்ராதி தேவதைகளைவிட உத்தமர் என்பதை தெரிவிப்பதற்காக ‘க்ருதிரமண ப்ரத்யும்ன நந்தனெ’ என்னும் பதத்தை உபயோகம் செய்திருக்கிறார்.
ஸ்ருஷ்டியின் துவக்கத்தில் பரமாத்மன், வாசுதேவன், சங்கர்ஷண, ப்ரத்யும்ன, அனிருத்த என்னும் 4 ரூபங்களை தரித்தார். அப்போது, பகவத் ஆணையின்படி ரமாதேவியும்கூட மாயா, ஜயா, க்ருதி, ஷாந்தி என்னும் 4ரூபங்களை தரித்து, பரமாத்மனின் அந்த நான்கு ரூபங்களுக்கு முறையே பத்னியானார். வாசுதேவ + மாயாவிடமிருந்து புருஷ என்னும் மகன் தோன்றினார். சங்கர்ஷண + ஜயாவிடமிருந்து ஸூத்ரன் (Soothra) என்னும் மகன் தோன்றினார். பிரத்யும்ன + க்ருதியிடம், ப்ரக்ருதி, ஸ்ரத்தா என்று இரு பெண் குழந்தைகள் பிறந்தனர். புருஷனுக்கு ப்ரக்ருதியும், ஸூத்ரனுக்கு ஸ்ரத்தாவும் மனைவியர் ஆயினர். இந்த புருஷனே பிரம்மதேவர். ப்ரக்ருதியே சரஸ்வதி. ‘ஸூத்ரம்ஸவாயு: புருஷோவிரிஞ்சி: ப்ரத்யும்னதஸ்சாத க்ருதௌ ஸ்த்ரியௌ த்வே’ என்னும் மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தின் 3ம் அத்தியாயத்தின் வாக்கியம் இதற்கு ஆதாரமாகின்றது. ஸூத்ர நாமகரான பிரம்ம வாயுகளிடமிருந்து ஸூக்ஷ்மத்தில் கருட, சேஷ, ருத்ராதிகள் பிறந்தனர். இவர்களைவிட பாரதிதேவி உத்தமர் என்று சொல்வதைப் போலாயிற்று.
கருடசேஷஷஷாங்கதள சேகரர ஜனக - என்னும் மூன்றாம் பத்யத்தில் பிரம்மதேவர் கருடாதிகளுக்கு தந்தை என்று சொல்கிறார். 24 தத்வாபிமானிகளில் ஒருவரான வாயுதேவரை குரு என்று இந்த பத்யத்தில் சொல்கிறார். 24 தத்வங்கள் என்னவெனில்: ப்ருத்வ்யாதி மஹாபூதங்கள் 5, ஷப்தாதி தன்மாத்ரங்களான குணங்கள் 5, ஞானேந்திரியங்கள் 5, கர்மேந்திரியங்கள் 5, சித்த, புத்தி, மனஸ், அஹங்கார தத்வங்கள் என மொத்தம் 24 தத்வங்கள் உள்ளன. இதில் சித்த தத்வத்திற்கு அபிமானியானவர் வாயுதேவர். இவரே அனைவரைவிடவும் உத்தமர். இந்த விஷயத்தைப் பற்றி பாகவதத்தில் மற்றும் விஷ்ணு ரகசியத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது என்னவெனில்:
ஒரு சமயம், 24 தத்வாபிமானிகளும் (வாயுதேவரைத் தவிர) தமக்குள் தாமே உத்தமர் என்று சொல்லி சண்டை போடத் துவங்கினர். அப்போது பரமாத்மன், ’ஹே தேவதைகளே, ஏன் இப்படி சண்டை போடுகிறீர்கள்? உமக்குள் இருக்கும் சக்தியை வைத்து யார் உத்தமர் என்று பார்ப்போம். இங்கே விழுந்திருக்கும் மிகப்பெரிய சரீரமானது, உம்மில் யார் நுழைந்தால் உயிர்பெற்று எழுகிறதோ, மேலும் யார் வெளியேறுவதால் உயிரற்று விழுகிறதோ அவரே உத்தமர் என்று நிர்ணயிப்போம். இப்போது உங்கள் சக்தியைக் காட்டுங்கள்’ என்றார். அப்படியே ஒவ்வொருவராக 23 தத்வாபிமானி தேவதைகள் நுழைந்தாலும், அந்த தேகம் எழுந்திருக்கவில்லை.
‘சித்தேனஹ்ருதயம் சைத்ய: க்ஷேத்ரக்ஞ: ப்ராவிஷத்யதா |
விராட்ததைவ புருஷ: ஸலிலாதுததிஷ்டத: ||’
என்று சித்தத்தின் அபிமானியான வாயுதேவர் அந்த உடலின் இதயத்தில் நுழைந்த உடனேயே அந்த உடல் எழுந்தது. அடுத்து அனைத்து தத்வாபிமானியும் வெளியேறியபிறகும் அந்த உடல் விழவில்லை. வாயுதேவர் வெளியேறிய உடனேயே அந்த உடல் கீழே விழுந்தது. அப்போது கண் முதலான தத்வாபிமானி தேவதைகள், நாங்கள் 23 தேவதைகள் இல்லையெனில், வாயுதேவர் மட்டும் உடலில் இருந்து என்ன செய்வார்? என்று கேட்டனர். அதற்கு வாயுதேவர், தான் மட்டும் அந்த உடலில் நுழைந்து, 23 தத்வாபிமானிகளின் வேலைகளையும் தான் ஒருவரே செய்து காட்டினார். அதைக் கண்ட பிற அனைத்து தத்வாபிமானி தேவதைகளும், வாயுதேவரிடம் மன்னிப்பு கேட்டு, அவரிடம் சரண் புகுந்தனர்.
இது பாகவதாதிகளில் மிகவும் விஸ்தாரமாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஆதாரத்தின் பேரிலேயே, தாசராயர், வாயுதேவரை தத்வாபிமானி தேவதைகளின் குரு என்றிருக்கிறார். ‘நிஜபத்னி’ என்றதால், அவதார ரூப, மூல ரூபங்களிலும் கூட பாரதி தேவியரே வாயுதேவருக்கு மனைவியாகிறார் என்று அறியவேண்டும். இத்தகைய நற்குணங்களைக் கொண்ட பாரதியே! எங்களுக்கு ஹரி குருகளில் சத்பக்தியைக் கொடுத்து அருள்வாயாக என்று வேண்டுகிறார் தாசராயர்.
இப்படியாக தாசராயர் ‘நாராயணம் நமஸ்க்ருத்ய நரஞ்சைவ நரோத்தமம் | தேவீம் சரஸ்வதிம் வ்யாஸம்’ என்னும் வசனத்தின்படி, பாரதி தேவியின் வரை தாரதம்யத்தின்படி வரிசையாக வேண்டினார். அடுத்து, பரமாத்மனின் அவதார ரூபமான மற்றும் பாரதாதி கிரந்தங்களை இயற்றியவரான ஸ்ரீ பாதராயண (வேதவியாஸ) தேவரை குருவாக நினைத்து வணங்குகிறார். ஸ்ரீமன் நாராயணனே வேதவியாஸராக இருந்தாலும், கிரந்தத்திற்கு காரணமானவனும், சர்வோத்தமனும் ஆன ஸ்ரீமன் நாராயணனுக்கு முதலில் வணக்கம் செலுத்தினார். அதிகார பேதத்தினால், அதாவது ஒரு குருவைப் போன்றவரான ஸ்ரீவேதவியாஸருக்கு தற்போது நமஸ்காரம் செய்கிறார் என்று அறியவேண்டும்.
‘வியாஸோகஸ்சனருஷி:’ என்று சில தாமஸ புராணங்களின் ஆதாரத்தில், சிலர் வேதவியாசரை வெறும் ஒரு சாதாரண ரிஷி என்று சொல்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் அப்படி நினைத்தே, தமது தமஸ் சாதனையை செய்துகொள்ளட்டும் என்று தற்போது வேதவியாசரை வணங்குகிறார் என்று கருட புராணத்தில் ஸூதர் ஷௌனகாதிகளுக்கு சொல்லியிருக்கிறார்.
ஸூதரின் வாக்கு:
த்த்ராபிகாரணம் வக்ஷ்யேஸாதரேண முனீஷ்வரா |
வ்யாஸஸ்து கஷ்சனரிஷி: புராணே தாமஸேஸ்ம்ருத: ||
இதி ஞானாவலம்பேன தைத்யாதைத்யானுகாஸ்ஸதா |
ப்ரவிஷேயு:ர்ஹ்யந்ததம இஹிஹ்யந்தெ நமஸ்க்ருதம் ||
இதஞ்ச பரமம்கோப்யம் ஹ்ருதிதார்யன் நஸம்ஷய: ||
என்னும் வாக்கியங்களே மேலே சொன்ன விஷயத்திற்கு ஆதாரம் என்று அறியவேண்டும். இந்த காரணத்தினாலேயே தற்போது தாசராயர், வேதவியாஸ தேவரை வணங்குகிறார்.
***
No comments:
Post a Comment