ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Sunday, January 26, 2020

#2 - மங்களாசரண சந்தி

ஜக3து33ரனதி1 விமலகு3ண ரூ
1களனாலோசனதி3 பா4ரத
நிக3மத1திகளதிக்ரமிஸி க்ரியாவிசேஷக3|
3கெ33கெ3ய நூத1னவ கா1ணுத1
மிகெ3 ஹருஷதி3ம் பொ13ளி ஹிக்கு3
த்ரிகு3ணமானி மஹாலகுமி சந்தெய்சலு அனுதினவு ||2

ஜகதுதரன = இந்த உலகங்கள் அனைத்தையும் தன் உதரத்தில் வைத்துக்கொண்டிருக்கும் பரமாத்மனின், அதி அற்புதமான குணரூபங்களை.
அதி விமல = அற்புதமான.
குண = ஆனந்தாதி குணங்கள்.
ரூபகளன = மத்ஸ்யாதி அனந்தானந்த ரூபங்களை.
க்ரியா விசேஷகள = மூலரூப, அவதார ரூபங்களால் செய்யும் சிறந்த செயல்களை.
பாரத நிகமததிகளதிக்ரமிஸி = பாரத = ஐந்தாம் வேதம் என்று அழைக்கப்படும் பாரதத்தை.
நிகமததிகள = வேதராசிகளை.
அதிக்ரமிஸி = மீறி (பாரதத்திலும், வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பகவத் மகிமைகளைவிட அதிகமானதாக)
ஆலோசனதி = ஆலோசனையுடன்
பகெபகெய = பற்பல விதமான
நூதனவ = புதுப்புது மகிமைகளை பார்த்தவாறு
மிகெஹருஷதிம் = மிகுந்த மகிழ்ச்சியுடன்
பொகளி = வணங்கி, போற்றி
ஹிக்குவ = பூரிப்படையும்
த்ரிகுணமானி = ஸ்ரீ, பூ, துர்கா என்னும் மூன்று ரூபங்களால், சத்வ, ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களுக்கு அபிமானியாக இருக்கும்.
மஹாலகுமி = மகாலட்சுமி
அனுதினவு = தினந்தோறும்
சந்தைஸலி = கிரந்தத்தை முடிக்கும் வேலை முதலான இஷ்டார்த்தங்களை நிறைவேற்றி அருளட்டும்.

பொருள்:
எந்த மகாலட்சுமியானவர், சத்வ, ரஜஸ், தமோ குணங்களுக்கு அபிமானியாகி, ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவி என்னும் மூன்று குணங்களால், ஸ்ருஷ்டி காலத்திலும், பாதுகாக்கும் காலத்திலும், உலகத்தை தன் உதரத்தில் வைத்துக்கொண்டு படுத்திருக்கும் பரமாத்மனை, பிரளய காலத்திலும் அரை க்‌ஷணமும் விடாமல் வணங்கிக்கொண்டிருக்கிறாள். அந்த பரமாத்மன் தன் அவதார மற்றும் மூல ரூபங்களால் எந்தெந்த வேலைகளை செய்துவருகிறாரோ, அந்தந்த வேலைகளில் சிறப்புகளை, அவனின் குணரூபங்களை ஆலோசனை செய்து அறிந்தவாறு; பாரதத்திலும், வேதராசிகளிலும்கூட சொல்லப்பட்டிருக்காத புதுப்புது பகவத் மகிமைகளை, குணரூபங்களை, ஒவ்வொரு நொடியும் கண்டவாறு, அந்த பரமாத்மனை போற்றிப் புகழ்ந்தவாறு, அவனின் மகிமைகளை எவ்வளவு பார்த்தாலும் அவனிடம் இருக்கும் மகிமைகளின் ஒரு சிறிய அம்சத்தைப் பார்ப்பதற்கும் சாத்தியம் இல்லை என்று வியப்படைகிறாள். இத்தகைய ரமாதேவி, நான் மேற்கொண்டிருக்கும் இந்த காவியத்தை முடித்துவைத்து, நமக்கு  தினந்தோறும் அருளட்டும்.

சிறப்புப் பொருள்:
முந்தைய ஸ்லோகத்தில் தாசர், லட்சுமியுடன்கூடிய ஸ்ரீபரமாத்மனை வணங்கியவாறு, இங்கு லட்சுமிதேவியிடம் தான் விரும்புவதை வேண்டுகிறார். அது என்னவெனில்: இந்த கிரந்தத்தை முடித்தல்; பகவந்தனிடம் திடமான பக்தி; அபரோக்‌ஷத்தில் பரமாத்மனை காணுதல்; முக்தி - இவை அனைத்தும் லட்சுமிதேவியின் அருளால் மட்டுமே ஆகவேண்டும். ஆகையால், ‘ஸந்தெயிஸலி’ என்றி சொல்லி, மேலே சொன்ன விஷயங்களை வேண்டுகிறார்.

ஸ்ரீபரமாத்மனின் அருளைப் பெறவேண்டுமென்றாலும், அவனை அபரோக்‌ஷத்தில் காணவேண்டுமென்றாலும், ஸ்ரீலட்சுமிதேவியின் அருள் தேவை ஆதலால், மோகனதாசர், ‘வெங்கடாத்ரி நிலயன, பங்கஜநாபன, தோரவ்வா லகுமி’ என்று பாடினார். நம் தாசரும் இதே அபிப்பிராயத்தில் ‘ஸந்தெயிஸலி’ என்று சொல்லியிருக்கிறார் என்று அறியவேண்டும்.

‘த்ரிகுணமானி’ என்னும் சொல்லால், பிரம்மாதி எந்த தேவதைகளும் இல்லாத பிரளய காலத்திலும், ஸ்ரீதேவி, பூதேவி, துர்காதேவி என்னும் மூன்று ரூபங்களால் த்ரிகுணங்களுக்கு அபிமானியாகி; அதாவது சத்குண அபிமானி = ஸ்ரீதேவி; ரஜோகுண அபிமானி = பூதேவி; தமோகுண அபிமானி = துர்காதேவி என்று த்ரிகுணமானியாகி, மூன்று ரூபங்களால் பரமாத்மனை சேவை செய்துவருகிறாள்.

’ஸ்ரீ பூர்மிரிதி ரூபாக்யாம் ப்ரக்ருதிர்விஷ்ணுனா ஸஹ || ஷேதே ஸ்ருதிஸ்வரூபேண ஸ்தௌதிப்ரஹ்மலயே ஹரிம்’ என்னும் பாகவத 10ம் ஸ்கந்த தாத்பர்ய நிர்ணயத்தின் வாக்கியத்தின்படி, பிரளயகாலத்தில் பூதேவி படுக்கை ரூபத்தில் வடபத்ர (ஆல இலை) ரூபத்தைப் பெறுகிறாள். ஸ்ரீதேவி, பரமாத்மனுடன் படுத்திருக்கிறாள். துர்காதேவி ஸ்ருதி ரூபமாக பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்துகொண்டிருக்கிறாள். ‘ந கடத உத்பவ: ப்ரக்ருதி புருஷயோரஜயோ:’ - பிறப்பு இறப்பு இல்லாத, ப்ரக்ருதி புருஷ நாயகரான லட்சுமி நாராயணனுக்கு, அழிவு என்பதே இல்லை. இவர்கள் இருவரும், பிரளய காலத்திலும்கூட கண்டிப்பாக இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதே ஸ்ருதி வாக்கியத்தில் ‘உபய யுஜோர்பவந்த்யஸுப்ருதோ ஜலபுத்புதவத்’ - இவர்கள் இருவரும் சம்பந்தத்தாலேயே - நீரினால் நீரை அடித்தால் அலைகள் உருவாவதைப் போல, பிரம்மாதி ஜீவராசிகள் உருவாகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இன்னொரு வேத வாக்கியத்தில் ‘யத உதகா த்ருஷிரனு தேவகணா உபயே’ எந்த காரணத்தால் ’ரிஷி:’ ஞானியான பிரம்மதேவர் உன்னிடமிருந்து பிறந்தாரோ, மற்றும் அனு = அவரைத் தொடர்ந்து, தேவகணா உபயே = பிரம்மாதி பதவியைப் பெறாதவர்கள், பின்னர் அந்தப் பதவிக்கு வரப்போகிறவர்கள் என இந்த இரு விதமான தேவதைகளும் பிறந்தனரோ, அந்த காரணத்தாலேயே இந்த உலகத்தில் படைப்பு, அழிப்பு ஆகியவை இல்லாதவன், உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை. பிறப்பு இறப்பு உள்ளவர்கள், அது இல்லாத உன்னைப் பற்றி முழுமையாக அறியமாட்டார்கள். உன் மகிமைகளை முழுமையாக நீ ஒருவன் மட்டுமே அறிவாய் என்று வேதங்கள் கூறுகின்றன.

பிரளய காலத்தில், பரமாத்மனின் சேவையை செய்தவாறு லட்சுமிதேவியானவர் மட்டும் இருப்பாரே தவிர பிரம்மாதி தேவதைகள் யாரும் இருப்பதில்லை என்று நிரூபித்ததைப் போலவும் ஆயிற்று. மேலும் ‘ஜகதுதரன’ என்று சொல்லி பிரளய காலத்தில் பரமாத்மனின் ஸ்திதி நிலையைக் காட்டுகிறார். அது எப்படியெனில்: ’ஸம்ஷாந்த ஸம்விதகிலம் ஜடரே நிதாய லட்சுமி புஜாந்தரகத: ஸ்வரதோபிஜாக்ரே’ என்ற மகாபாரத தாத்பர்ய நிர்ணய ஸ்லோகத்தின்படி, இந்த உலகத்தை தன் உதரத்தில் வைத்துக்கொண்டு, லட்சுமிதேவியரால் வணங்கப்பட்டு, பிரளய காலத்தில் பரமாத்மன் இருக்கிறான் என்று தெரியவருகிறது.

மேலும் ‘தஸ்யோதரஸ்த ஜகத:’ என்னும் நிர்ணய ஸ்லோகத்தினால், ஸ்ரீபரமாத்மன் பிரளய காலத்தில், தன் உதரத்தில் இருக்கும் ஜீவகணர்களை, ஸ்ருஷ்டிக்குக் கொண்டு வந்து, அவரவர்களின் தகுதிக்கேற்ப சாதனைகளை செய்வித்து, அதற்கேற்ப பலன்களைக் கொடுத்து, அருளவேண்டும் என்று, பிரளயத்தின் முடிவில் நிச்சயித்தான் என்று சொல்லியிருக்கிறார்கள்.

இதிலிருந்து தெரிய வரும் விஷயங்கள் என்னவெனில்: பிரம்மாதிகள் இல்லாத பிரளய காலத்தில், பகவத் வியாபாரங்கள் எப்படி இருந்தன என்று பிரம்மாதிகளுக்கு தெரியாது. அப்போதும் ரமாதேவியர்கள் இருந்ததால், அப்போதைய அபாரமான பகவத் மகிமைகளை தொடர்ந்து பார்த்திருப்பதால், ஸ்ரீலட்சுமிதேவியர் மகாமகிமைகளைக் கொண்டவர்கள். லட்சுமிதேவியரின் ஞானத்தில் சிறிதளவுகூட பிரம்மாதிகளுக்கு இல்லை என்று இதிலிருந்து தெரியவருகிறது. உலக விஷயங்களைப் பற்றி பிரம்மதேவர் யோசித்தால், உள்ளங்கை நெல்லிக்கனி போல அவருக்கு அனைத்தும் தெள்ளத்தெளிவாக தெரிய வருகிறது. அதே சமயம், ரமாதேவியருக்கு அந்த விஷயத்தை யோசிக்காமலேயே தெரிந்து கொள்ளும் மகிமை இருக்கிறது. அப்படியிருந்தும், பரமாத்மனின் அதிவிமல குணரூபங்களை, மூலரூப அவதார ரூபங்களால் அவர் செய்யும் அபாரமான செயல்களை, பாரதத்திலும், வேத ராசிகளிலும் சொல்லப்பட்டிருக்கும் அந்த விஷயங்களைப் பற்றி யோசித்தே தெரிந்து கொள்கிறார். ஆனால், எவ்வளவு யோசித்தாலும், அந்த குணங்களைப் பற்றி முழுமையாக அறியமாட்டார் . இந்த விஷயத்தைப் பற்றி பாகவத பத்தாம் ஸ்கந்தத்தில் இப்படி சொல்லப்பட்டிருக்கிறது.

நனாமரூபே குணகர்மஜன்மபி
ர்னிரூபிதவ்யெஷவதஸ்ய ஸாக்‌ஷிண: |
மனோவசோப்யாமனுமேயவர்த்மனோ
தேவக்ரியாயா; ப்ரதியந்த்யதாபிஹி || (பாகவத 10-3-37)

தேவகியின் கர்ப்பத்தில் இருக்கும் பரமாத்மனை, பிரம்மதேவர் ஸ்தோத்திரம் செய்யும் சந்தர்ப்பத்தில், அவர் சொல்வது: ‘எலே ஈஷா! உன்னுடைய நாம ரூபங்களை, செயல்களாலோ, பிறவிகளை எடுத்தோ, குணங்களாலோ காண்பது சாத்தியமில்லை. குண, கர்ம, பிறவிகளால் அக்னியை காணமுடியும். எப்படியெனில், ஒளிமயமான காந்தியைக் கொண்டவன் என்ற குணங்களாலும், எதையும் எரிக்கும் சக்தி உள்ளவன் என்னும் செயலாலும், மரங்களை அழிக்கவல்லவன் என்று பிறப்பினாலும் அக்னியின் ஸ்வரூபத்தைக் காணமுடியும். இப்படி உன்னுடைய ஸ்வரூபத்தைக் காண்பதற்கு சாத்தியமில்லை. அப்படியெனில், குணரூபங்களே இல்லை என்பதா? உன்னுடைய குணரூபங்களை நீ மட்டுமே காண்பதற்கு சாத்தியம். நீ கண்டுகொண்டிருப்பதை பொய் என்று எப்படி சொல்வது? இதற்கு ஆதாரம் என்னவெனில்: ‘சர்வ நாமா, சர்வகர்ம, ரிக்மவர்ணம், கர்த்தாரமீஷம்’ என்னும் வேத மந்திரங்களின் ஆதாரத்தினாலும், மனதினாலும், வசனங்களாலும், நீ அபரிமிதமான குண நாமங்களைக் கொண்டவன் என்று அனுமானிக்க சாத்தியம் உள்ளதை பொய் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை என்பதே இதற்கு ஆதாரம்.

வேதங்களில் பகவத் மகிமைகளைப் பற்றி எவ்வளவு சொல்லப்பட்டிருக்கிறதோ, பிரம்மாதிகள் அவ்வளவு மட்டுமே அறிந்து, அவ்வளவே மகிழ்ச்சியை அடைகின்றனர். லட்சுமிதேவியரோ, வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் பகவத் மகிமைகளை, யோசிக்காமலே அறியும் சக்தியைப் பெற்றிருக்கின்றனர். அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் அபாரமான குணங்களை யோசித்தவாறு, பரமாத்மனின் அனந்தானந்த ரூபங்களைப் பற்றி, ஒவ்வொரு ரூபங்களுக்குள்ளும் இருக்கும் அனந்தானந்த பாகங்களைப் பற்றி, ஒவ்வொரு பாகங்களுக்குள்ளும் இருக்கும் அனந்தானந்த செயல்களைப் பற்றி, ஒவ்வொரு செயல்களில் இருக்கும் புதுப்புது விஷயங்களைப் பற்றி, ஒரு நொடியின் அனந்தானந்த பாகங்களில், ஒரு பாகத்தின் மிகச்சிறிய காலத்தில் மிகத்தெளிவாக அறிந்து, ஒரு முறை கண்ட வியப்பினை மற்றொரு முறை காணாமல், புதிதுபுதிதான விஷயங்களையே காண்கிறார் என்றும், அந்த மகிழ்ச்சியிலேயே மூழ்கி, ஸ்தோத்திரம் செய்தவாறு, மெய்மறந்து, பூரிப்படைந்தவாறு இருக்கிறார்.

பிரம்மாதிகள், வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் பகவந்தனின் மகிமைகளையே அபாரமாக அறிந்திருக்கின்றனர். அவர்கள் அறிந்திருக்கும் இத்தகைய மகிமைகள், லட்சுமிதேவியருக்கு மிகவும் குறைவானதாக தெரியும். இத்தகைய மகிமையுள்ள ரமாதேவி, மிகக்குறைந்த காலத்தில், பகவந்தனின் அபாரமான மகிமைகளைக் காணும் சக்தியுள்ளவர். புதிதுபுதிதாக பகவந்தனின் மகிமைகளை அவர் கண்டாலும், இன்னும் அவருக்குத் தெரியாத அத்தகைய மகிமைகள் ஏராளமாக இருக்கின்றன. ஆகையால், பகவந்தனிடம் இருக்கும் அபார குணங்களில் மிகச்சிறிய அளவையே மகாலட்சுமி அறிந்திருக்கிறார் என்று நாம் அறியவேண்டும். பரமாத்மன் ஒருவனே தன்னுடைய மகிமைகளை முழுமையாக அறிய வல்லவன் என்றும் அறியவேண்டும். இதே பொருளையே ‘சத்தத்வ ரத்னமாலா’ என்னும் கிரந்தத்தில் ‘விஷ்ணோர்குணா ந நந்தாம்ஷ்சத்ரஷ்டும் ஷக்தாபி ஹிஸ்புடம் | க்‌ஷணேக்‌ஷணே நவனவ சுவிஷேஷோபலம்பத ‘ (ஸ்லோகம் 126) ஆகிய வாக்கியங்களால் அறிந்து கொள்ளலாம்.

இத்தகைய மகிமைகளைக் கொண்ட ரமாதேவியின் அருள், நமக்கு கிடைக்குமாறு செய்து, தினந்தோறும் அவரை நம் அபரோக்‌ஷத்தில் காணுமாறு செய்து, நிர்விக்னத்துடன் இந்த கிரந்தத்தை முடிக்க வைத்து, நமக்கு அருளட்டும்.

இப்படியாக இதுவரை, பாக்யத்தைத் தரக்கூடியவரான மகாலட்சுமியை பிரார்த்தித்த தாசராயர், அடுத்து சதுர்முக பிரம்ம, வாயு இருவரும் வகுப்பில் சமமானாலும், பதவியில் சிறிது சிறந்தவரான பிரம்மதேவரைக் குறித்து வேண்டிக் கொள்கிறார்.

No comments:

Post a Comment