ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Monday, February 10, 2020

#4 - கருணா சந்தி

#4 - கருணா சந்தி

மனவசனகதிதூ3ர நெனெவர
நனுசரிஸி தி1ருகு3வனு ஜான்ஹவி
ஜனக1 ஜனரொளகி3த்து3 ஜனிசுவ ஜக3து33ர தா1னு |
4னமஹிம கா3ங்கே3யனு1த கா3
யனவ கே1ளுத க33னசர வா
ஹன திவௌக1சரொடனெ திருகு3வனு மனெமனெக3ளலி ||4

ஜான்ஹவிஜனக = கங்கையைப் பெற்ற பரமாத்மன்
மனவசனகதிதூர = மனதிற்கும், வாக்கிற்கும் காட்சியளிக்காத, ஆனாலும்
நெனெவரன = நினைப்பவர்களை
அனுசரிஸி = அவர்களுக்கேற்ப, நடப்பான்.
ஜகதுதர = உலகத்தையே தன் வயிற்றில் வைத்துக் கொண்டிருப்பவன்
ஜனரொளகித்து = அனைத்து பிராணிகளிலும் இருந்து
ஜனிஸுவ = பிராணிகள் கர்ப்பத்திலிருந்து பிறக்கும்போது, தானும் அவர்களுடன் பிறப்பான்
காங்கேயனுத = பீஷ்மாசார்யரால் புகழப்பட்ட
கனமஹிமெ = அபாரமான மகிமை உள்ளவன்
ககனசரவாஹன = கருட வாகனான ஸ்ரீபரமாத்மன்,
காயனவன = தன் பக்தர்கள் பாடும் ஸ்தோத்திரங்களை
கேளுத = கேட்டவாறு
திவௌகஸரொடனெ = தேவதைகளுடன்
மனெமனெகளலி = பக்தர்களின் வீடுகளில்
திருகுவனு = சஞ்சரித்திருப்பான்.

பொருள்:
கங்கையைப் பெற்றவனான ஸ்ரீபரமாத்மன், மனதிற்கும், வாக்கிற்கும் காட்சியளிக்காதவன் ஆனாலும், அபாரமான மகிமையுள்ளவன். சாதாரண பக்தர்கள் தன்னை துதித்தால், அவர்களை காப்பாற்றுவதற்கு அவர்களுடனே அவர்களுக்கேற்ப நடப்பான். உலகத்தையே தன் வயிற்றில் வைத்துக்கொண்டிருப்பவனான அவன், மக்களிடம் இருந்து, கர்ப்பத்திலிருந்து அவர்கள் பிறக்கும்போது, தானும் பிறக்கிறான். பீஷ்மாசார்யரால் வணங்கப்படுபவனான, மகானுபாவனான அவன், தன் சாதாரண பக்தர்கள் செய்யும் ஸ்தோத்திரங்களை கேட்டவாறு, கருடவாகனனாக, தேவதைகளுடன் கூடி, பக்தர்களின் வீடுகளில் சஞ்சரித்திருக்கிறான். ஆகையால், தாசராயர் ‘இவன காருண்யகேனெம்பெ’ என்று போற்றியிருக்கிறார். 

சிறப்புப் பொருள்:
முந்தைய ஸ்லோகத்தில் ‘இவன காருண்யகேனெம்பெ’ என்று பாடிய தாசராயர், இங்கு மற்றும் இந்த ஸ்லோகத்திலிருந்து அதன் உதாரணங்களைக் கொடுத்திருக்கிறார். 

ஜான்ஹவி ஜனக - என்று சொல்வதில் ஸ்ரீபரமாத்மனின் பாத மகிமைகளை, அதன் பவித்ரத்தை குறிப்பிடுகிறார். அது எப்படியெனில்: பாகவத ஐந்தாம் ஸ்கந்தத்தில்:

’தத்ர பகவஸ்ஸாக்‌ஷாத் யக்ஞலிங்கஸ்ய விஷ்ணோர்விக்ரமதோவாமபாதாங்குஷ்ட நகனிர்பின்னோர்த்வாண்ட கடாஹ விவரேணாந்த: ப்ரவிஷ்டயா ஜலதரா’ - ஸ்ரீபரமாத்மன் வாமன அவதாரம் எடுத்து, பலி சக்கரவர்த்தியிடமிருந்து மூன்று அடி நிலத்தை தானம் வாங்கி, அதை அளக்கும்போது த்ரிவிக்ரம ரூபம் எடுத்து, தன் ஒரு அடியால் பூமண்டலத்தை அளந்து, இரண்டாம் அடியால் அந்தரிக்‌ஷ லோகத்தை அளக்கும்போது, அந்த காலடியானது, புவல்லோக முதற்கொண்டு சத்யலோக வரைக்கும் இருக்கும் ஆறு உலகங்களைத் தாண்டி, மேலிருக்கும் பிரம்மாண்டத்தின் கூரையை இடித்தது. அப்போது பரமாத்மனின் இடது கால் கட்டை விரலின் நகம், அந்த கூரையை இடித்தவுடன், அது உடைந்து வெளியிலிருந்த நீர் உள்ளே நுழைந்தது. அந்த தண்ணீர், பரமாத்மனின் காலைத் தொட்டு, கழுவியவாறு வந்ததால், நதிகளில் உத்தமள் என்று பெயர் பெற்றாள். விஷ்ணுவி என்னும் பெயரினால் உலகத்தை பவித்ரமாக்கினாள் என்று சொல்வர். இதனால் ஜான்ஹவியைப் பெற்றவன் என்று பரமாத்மனை சொல்வதற்கு காரணம் வந்தது. 

யச்சௌசனி: ஸ்ருதஸரித்ப்ரவரோதகேன தீர்த்தேன மூர்த்யதிதேன ஷிவ: ஷிவோபூத் |
த்யாதுர்மன: ஷமல ஷைல நிஸ்ருஷ்டவஜ்ரம் த்யாயோசீரம் பகவதஸ்சரணாவிந்தம் ||
(பாகவத மூன்றாம் ஸ்கந்தம்)

இந்த ஸ்லோகத்தில்: ’எந்த பரமாத்மனின் காலைத் தொட்டு புறப்பட்ட தண்ணீரை’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. கங்கையை பாதத்தை கழுவிய நீர் என்று சொல்வதற்கு இன்னொரு காரணமும் உண்டு. வெளியில் இருந்த நீர், உள்ளே பாய்ந்தபோது, முதலில் பரமாத்மனின் காலைக் கழுவியபிறகே உள் நுழைந்தது என்று சொன்ன காரணத்தைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு. அது என்னவெனில்: 

பரமாத்மன் பூமியை அளந்தபோது, சத்யலோகத்திற்கு வந்தபோது, பிரம்மதேவர், பரமாத்மனைக் கண்டு மகிழ்ந்து, அந்த பரமாத்மனின் காலிலிருந்து வந்த தண்ணீரையே தன் கமண்டலத்தில் பிடித்து, பரமாத்மனின் கால்களை விதிப்படி பூஜித்து, அந்த கால்களை கழுவினார். 

தாது: கமண்டலுஜலந்ததுருக்ரமஸ்ய பாதாவனே ஜனபவித்ரத யானரேந்த்ர 
ஸ்வர்தூன்ய பூன்யபஸிஸாபததே நிமார்ஷ்டே லோகத்ரயம் பகவதோ விஷதேவகீர்தித: 
(பாகவத எட்டாம் ஸ்கந்தம்)

அதாவது, அந்த கமண்டலத்திலிருந்து வந்த தண்ணீரானது, பவித்ரம் கொண்டு, ஆகாயகங்கை என்று பெயர் பெற்று, மூன்று உலகங்களையும் பவித்ரமாக ஆக்கியது என்கிறார். ஆகையால், மூன்றாம் ஸ்கந்தத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயம் இதற்கு எதிரானதாக இல்லை என்று நினைக்கவேண்டும். மூன்றாம் ஸ்கந்தத்து ஸ்லோகார்த்தம் என்னவென்றால்: எந்த பரமாத்மனின் பாதங்களைக் கழுவி, பவித்ரமான கங்கையை, தன் தலையில் ஏந்தியதால் ருத்ரருக்கு ஷிவ என்று பெயர் வந்ததோ, யாருடைய பாதத்தை சிந்திப்பவரின் மனக்கஷ்டங்கள் என்னும் மலையானது தூள்தூளாக போகின்றதோ, அத்தகைய ஸ்ரீபரமாத்மனின் சரண கமலங்களை நாம் சிந்திக்கவேண்டும். இதுவே ‘யச்சௌசனி:’ என்னும் மூன்றாம் ஸ்கந்தத்து ஸ்லோகத்தின் அர்த்தமாகும். 

மஹனீயர்களே! பாருங்கள்! சாதாரணமாக நாம் கால், நகம், முடி ஆகியவை நீரிலோ, பதார்த்தங்களிலோ பட்டுவிட்டால், அந்த பதார்த்தங்களை தவிர்க்கவேண்டும் என்கிறார்கள் சாஸ்திரகாரர்கள். ஆனால், பரமாத்மனின் விஷயத்தில் இது எப்படி மாறுபடுகிறது என்று பாருங்கள். ‘ஏதோஷா: இதரத்ராபிதே குணா: பரமே மதா:’ - எது மக்களிடம் தோஷம் எனப்படுகிறதோ, அதுவே பரமாத்மனிடம் நற்குணம் எனப்படுகிறது. இதுவே வேதவாக்கியமாக இருக்கிறது. இந்த உதாரணத்திலிருந்து அது தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பரமாத்மனின் இடது கால் கட்டைவிரல் நகத்திலிருந்து உற்பத்தியாகி,, அந்த பரமாத்மனின் கால்களைக் கழுவி, ருத்ர தேவர் மூலமாக, அனைத்து உலகத்தையும் பவித்ரமாக ஆக்கியது என்றபிறகு, அந்த பரமாத்மனின் பாத மகிமையை எப்படி வர்ணிப்பது? பரமாத்மன் இத்தகைய மகிமையைக் கொண்டவன் என்று காட்டுவதற்காக ‘ஜான்ஹவிஜனக’ என்று தாசராயர் சொல்லியிருக்கிறார். 

மேலும் ‘மனவசனகதிதூர நெனெவரனனுசரிஸி திருகுவனு’. இந்த வாக்கியத்தால் பரமாத்மனின் கருணையை விளக்குகிறார். அது எப்படியெனில்: பாகவத பத்தாம் ஸ்கந்தத்தில் - ‘மனோவசோப்யாமனுமேய வர்த்மனோ தேவக்ரியாயா: ப்ரதியந்த்யதாபிஹி’ - பிரம்மாதி தேவதைகள்கூட பகவத் மகிமைகளை முழுமையாக அறியமுடியாது. பகவந்தனின் ஸ்வரூபம் எத்தகையது என்றால், மனம், வாக்கு ஆகியவற்றால் அவன் புலப்படமாட்டான். அதாவது, உலகம் இருக்கிறது என்றால், அதைப் படைத்தவன் ஒருவன் இருக்கவேண்டும். அவன் யார்? வேதங்களில், பரமாத்மனே ஸ்ருஷ்டிகர்த்தன் என்று சொல்லியிருப்பதால், அவனே படைத்தவன் என்று அறியவேண்டும். பிரம்மாதிகளும் இதுவரைக்கும் அல்லது இதைவிட கொஞ்சம் அதிகமாக, தத்தம் தகுதிக்கேற்ப, பகவந்தனின் விருப்பப்படியே (ப்ரேரணையுடன்), பகவந்தனின் மகிமைகளை காண்பரே தவிர, அதை முழுமையாக அறிவதற்கு சாத்தியமில்லை. 

அப்படியெனில், தாசராயர் ‘சுலபனோ ஹரி’ என்றிருக்கிறாரே? அது எப்படி? ‘யமேவைஷ வ்ருணுதேதேனலப்ய:’ யாருக்கு அருளவேண்டும் என்று பரமாத்மனுக்கு இச்சை வருகிறதோ, அவருக்கு பரமாத்மன் சுலபமானவன். இதன் பொருள் என்னவெனில்: பிரம்மாதிகளுக்கு காட்சியளிக்காத ஸ்வாமியை, சாதாரண பக்தர் பார்ப்பது என்றால் என்ன? ரமாதேவியிடம் இருக்கும் பகவத் அருள் பிரம்மனுக்கு இருப்பதில்லை. பிரம்மனுக்கு இருக்கும் அருள் ருத்ராதி தேவதைகளுக்கு இல்லை. பிரம்மாதிகள் பகவத் ஸ்வரூபத்தை முழுமையாக அறிந்திருப்பதில்லை என்றபிறகு, அவரைவிட அதிகமாக பகவத் ஸ்வரூபத்தை அறிந்த பக்தர்கள் இருக்கிறார்கள் என்று யோசிப்பதில் அர்த்தமேயில்லை. இதற்கு சரியான ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். 

அம்பரீஷ ராஜன் மிகச்சிறந்த பகவத் பக்தனாக இருந்தார். அவனின் பக்திக்கு மெச்சி, ஸ்ரீபரமாத்மன் அவனின் பாதுகாப்பிற்காக, தன் சக்ராயுதத்தையே கொடுத்திருந்தான். ஒவ்வொரு துவாதசி தினத்தன்றும் அவர், லட்ச பிராமணர்களுக்கு போஜனத்தை செய்வித்து, பாரணை காலத்திற்குள் தானும் பாரணம் செய்யவேண்டும் என்னும் ஒரு விசேஷ விரதத்தை மேற்கொண்டிருந்தான். இப்படியிருக்கையில், ஒரு துவாதசியன்று, பிராமணர்களின் போஜனத்தை செய்வித்த ராஜன், அவர்களின் அனுமதியைப் பெற்று, தானும் பாரணைக்கு அமரும்போது, சரியாக அந்த நேரத்தில், துர்வாச ரிஷிகள், அந்த விரதத்தை பங்கம் செய்யும் முயற்சியாக தன் 10,000 சிஷ்யர்களுடன் அங்கு வந்தார். ராஜன் தான் பாரணை செய்வதைவிட்டு, அவரை உணவுக்கு அழைத்தான். 

துர்வாசரும் அந்த அழைப்பை ஏற்று, ஸ்னானம் செய்து வருவதாக யமுனா நதிக்கரைக்குச் சென்று, ஸ்னானம் செய்து, தியானத்தில் அமர்ந்துவிட்டார். பாரணை முடியும் காலம் ஆகிவிட்டது, ஆனால் துர்வாசர் வரவேயில்லை என்று ராஜன் கவலைப்பட்டவாறு, அங்கிருந்த பிராமணர்களின் அனுமதியைப் பெற்று, தீர்த்தத்தைக் குடித்து, பாரணை செய்ததாக அறிந்து, விரதத்தை முடித்துவிட்டார். பின்னர் அங்கு வந்த துர்வாசர், நிலையை அறிந்து, மிகுந்த கோபம் கொண்டு, ஒரு சக்தியை உருவாக்கி, ராஜனைக் கொல்வதற்கு அதற்கு ஆணையிட்டார். ராஜன், பகவத் தியானத்தை செய்தவாறு நின்றுவிட்டான். 

உடனடியாக பகவத் சக்கரமானது, அந்த சக்தியை சுட்டுப் பொசுக்கிவிட்டு, துர்வாசரைக் கொல்லும் நோக்கில் அவரிடம் வந்தது. துர்வாசரும் பயந்தவாறு, பிரம்மனிடம், ருத்ரரிடம் சென்று முறையிட, அவர்களோ, பகவத் சக்கரத்திலிருந்து உங்களைக் காப்பாற்ற எங்களுக்கு சாத்தியமில்லை என்று சொல்லிவிட்டனர். பிறகு, வைகுண்டவாசியான பரமாத்மனிடமே சரணாகதி அடைந்தார் துர்வாசர். பரமாத்மனோ ‘நான் பக்தர்களின் வசமானவன். நானும் இதை தடுக்கமுடியாது. நீங்கள் அம்பரீஷ ராஜனிடமே சென்று கேளுங்கள்’ என்றார். அதன்படி துர்வாசரும், அம்பரீஷனை சரணடைய, அம்பரீஷனும் சக்கரத்தை வேண்டிக்கொண்டு, துர்வாசரைக் காப்பாற்றினார். ஆனால் இந்த சம்பவத்திற்கு ஒரு ஆண்டு காலம் ஆகிவிட்டது. அதுவரைக்கும், அம்பரீஷ ராஜன், உபவாசத்துடனே காத்திருந்து, அவருக்கு பாரணை செய்வித்து, பின்னர் தான் பாரணம் செய்து விரதத்தை முடித்தார். 

இதனாலேயே ‘யயாவிரிஞ்சாதி மதஸ்சகார’ அதாவது, பக்தியில் அம்பரீஷன், பிரம்மாதிகளைக்கூட மீறியவன் என்று பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அம்பரீஷனின் சக்கரத்திலிருந்து காப்பாற்றுவதற்கு, பிரம்ம ருத்ராதிகளுக்கும்கூட சாத்தியமில்லை என்று இந்த கதையிலிருந்து தெரிகிறது. ஆனால், இது சித்தாந்தத்திற்கு எதிரானது என்று ஸ்ரீமதாசார்யர், இதற்கு விளக்கம் அளித்திருக்கிறார். அது என்னவெனில்:

பிரம்மாதி பக்திகோட்யம்ஷாதம்ஷோனை வாம்பரிஷகே |
தாத்காலிகோ பசேயத்வாக்தேபாம் யஷஸ ஆதிராட் ||
பிரம்மாதயஸ்ச தத்கீர்த்திம் வ்யஞ்சயாயாஸுருத்தமாம் ||

பிரம்மாதி தேவதைகளின் பக்தியில் கோடியில் ஒரு அம்சம்கூட அம்பரீஷ ராஜனிடம் இல்லை. ஆனால், பிரம்மாதிகளாலும் சாத்தியமாகாத ஒரு காரியத்தை மனுஷ்யோத்தமனான அம்பரீஷன் மூலமாக செய்விக்க வேண்டும் என்பது பரமாத்மனின் இச்சையாக இருந்தது. இந்த விஷயம் பிரம்மாதிகளுக்கும் தெரிந்திருந்தது. ஆகையாலேயே, அவர்கள் துர்வாசரை காப்பாற்றாமல், அம்பரீஷனின் பக்தியை சோதித்தனர் என்று பாகவத வாக்கியம் சொல்கிறது. இதை நாம் சமூகத்திலும்கூட காணலாம். யாராவது ஒரு வேலையாள் மேல் முதலாளிக்கு அதிக நம்பிக்கை இருந்தால், மக்கள் சொல்வது என்னவெனில் : ‘இவருக்கு தம் மனைவி, மக்கள் மீதுகூட இவ்வளவு நம்பிக்கை இல்லை. ஆனால் இந்த வேலையாள் மேல் இருக்கிறது’. ஆனால், இப்படி சொல்லியதால், மனைவி மக்களுக்கு இருக்கும் ஸ்வாதந்த்ர்யம், இந்த வேலையாளுக்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா? அப்படியே அம்பரீஷனின் விஷயத்திலும் சொல்லவேண்டும். பக்தனிடம் தனக்கு அதிக கருணை இருக்கிறது என்பதை காட்டுவதற்காக பரமாத்மன், இந்த நாடகத்தை நடத்தியிருக்கிறான். அதாவது, பக்தர்களை கஷ்ட காலத்தில் மட்டும் காக்கிறான். பிரம்மாதிகளுக்கு எந்த நேரத்திலும் தரிசனம் அளித்துக்கொண்டே இருக்கிறான் என்று அறியவேண்டும். 

எப்போதும் மகாராஜனையே பார்த்திருக்கும் திவான் முதலானவர்களுக்கு, ராஜன் காட்சியளித்துவிட்டால் அதில் என்ன ஆச்சரியம்? இப்படி இல்லாமல், ஏழை மக்களிடம் மகாராஜா அன்பு வைத்து, அவர்களை மேம்படுத்தினால், அத்தகைய ராஜனை கருணைக்கடல் எனவேண்டும். அப்படியே பரமாத்மன், சாதாரண பக்தர்களுக்கு வசமாகிறான் ஆகையால் அவனை ‘கருணாளு’ என்று கொண்டாடியிருக்கிறார் தாசராயர். 

அடுத்து: மனம், வாக்கிற்கு காட்சியளிக்காத, மகாமகிமையுள்ள பரமாத்மன், தன்னை நினைப்பவர்களுக்கு, அவர்களுக்கேற்ப, தன்னை காட்டிக்கொள்வான் என்று தாசராயர் சொல்கிறார். இது எப்படி? அதாவது பாண்டவர்களின், அதிலும் அர்ஜுனனின் கதையை பார்ப்போம். பாண்டவர்கள் கஷ்ட காலத்தில் இருக்கும்போது, அவனை நினைத்தவுடன், ஸ்ரீகிருஷ்ண ரூபத்திலும், வியாச ரூபத்திலும், உடனடியாக வந்து அவர்களுக்கு தரிசனம் அளித்திருந்தான். அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்து, அவன் நண்பனாக, குருவாக, தூதனாக என இரவும் பகலும் அவனுடனேயே இருந்து காப்பாற்றினான். 

ஒருவேளை இதை புராண கதை என்றுவிட்டால், சரி. நம் புரந்தரதாசர், கனகதாசர் ஆகியோருக்கும், இவர்களைவிட முந்தையவர்களான மகாராஷ்டிரத்தின் துக்காராம், நாமதேவ், ஞானதேவ, ராமதாஸ் ஆகியவர்களை எப்படி அருளினான் என்பதை பார்த்தால், ஜகன்னாததாசரின் ‘நெனெவவரனனுசரிஸி திருகுவனு’ என்னும் வாக்கு எவ்வளவு உண்மை என்பது தெரியவருகிறது. கிரந்தம் நீண்டுவிடும் என்னும் பயத்தினால் அவை அனைத்தையும் இங்கு எழுதுவதற்கு சாத்தியமில்லை.

அடுத்து: ’ஜகதுதரன தானு ஜனரொளகித்து ஜனிஸுவனு’ என்றிருக்கிறார். இதன் பொருள் என்னவெனில்: பரமாத்மன், பிம்பரூபியான காரணத்தால், உபாதியான ஜீவனின் ஸ்வரூபத்தை விடாமல் எப்போதும் அவனுடனேயே இருக்கிறார். இதனால், பிரதிபிம்பனான ஜீவன், நித்யன் ஆனான். அப்படியில்லையெனில், பிம்பனின் சன்னிதானம் இல்லையெனில், பிரதிபிம்பனுக்கு அநித்யத்வம் வருகிறது. நாம் கண்ணாடியைப் பார்த்து நின்றால், நம் பிரதிபிம்பம் கண்ணாடியில் தெரியும். கண்ணாடிக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லையெனில், எப்படி கண்ணாடியில் நம் பிரதிபிம்பம் தெரியாதோ, அதைப்போலவே, கண்ணாடியைப் போல இருப்பது, ஜீவனின் ஸ்வரூப தேகம். பிம்பன் பரமாத்மன். இவர்கள் இருவரின் சம்பந்தத்தினால் பிரதிபிம்பம் தெரிகிறது. இந்த சம்பந்தம் இல்லையெனில், பிரதிபிம்பம் இல்லாமல் போகிறது. ஆகையால், ஜீவன் பிறக்கும்போதே பரமாத்மன் அவனுடன் பிறக்கிறான். பாகவத 10ம் ஸ்கந்தத்தில்:

’குணேஷு மாயா ரசிதேஷு தேஹ்ய ஸௌப்ரபத்யமானஸ்ஸஹதேன ஜாயதே’. மரண காலத்தில், பிரகருதி சம்பந்தமான சத்வ, ரஜஸ், தமோ குணங்களில், தத்தம் தகுதிக்கேற்ப, அதாவது, தான் சாத்விகனோ, ராஜஸனோ, தாமஸனோ அந்த தகுதிக்கேற்ப, பரமாத்மனின் ப்ரேரணையால் (விருப்பத்தால்), தேவ, அசுர, கந்தர்வ, மனுஷ்யாதி யோனிகளில் மனம் வைப்பான். மரண காலத்தில் எந்த யோனியை சிந்தித்து தேகத்தை விடுகிறானோ, அடுத்த பிறவியில் அதே யோனியில், பரமாத்மனுடன் பூமியில் பிறப்பான். ஆனால், கர்ப்பம் முதலான செயல்கள் எல்லாம், ஜீவனுக்கு மட்டுமே தவிர, பரமாத்மனுக்கு இல்லை. எப்படியெனில், தண்ணீரில் சூரியனின் பிரதிபிம்பம் விழும்போது, காற்று அடித்தால், அந்த சூரியன் உடைந்தது போல காணப்படும். ஆனால், பிம்பரூபனான சுரியனுக்கு தண்ணீரில் சம்பந்தம் இல்லாததால் அவன் எந்தவொரு களங்கமும் இல்லாமல் இருக்கிறான். அப்படியே, தேக சம்பந்தமில்லாத பரமாத்மனுக்கு, தேகத்திற்கு சம்பந்தப்பட்ட எந்தவொரு துக்கமும் இல்லை, என்று அறியவேண்டும். 

காங்கேயனுத, ககனசரவாஹன என்ற இரு சொற்கள் பரமாத்மனின் அபாரமான மகிமைகளை எடுத்துக் காட்டுகிறது. எப்படியெனில்: கங்கா புத்ரனான பீஷ்மாசார்யர் ‘பீஷ்மாஸ்தவராஜ’ என்னும் ஸ்தோத்திரத்தை செய்தார் என்று பாரத அனுஷாஸன பர்வத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதில் விசேஷமான பகவன் மஹிமைகளை சொல்லியிருப்பார். பாரதத்தில் ஐந்து ரத்தினங்கள் என்று சிலவற்றை சொல்லியிருக்கிறார்கள். அது என்னவெனில்: 

கீதா சஹஸ்ர நாமைவஸ்தவராஜோஹ்யனுஸ்ம்ருதி: |
கஜேந்திரமோக்‌ஷணம்சைவ பஞ்சரத்னானி பாரதே ||

1. பகவத்கீதை. 2. விஷ்ணு சஹஸ்ர நாமம் 3. பீஷ்மஸ்தவராஜ 4. அனுஸ்ம்ருதி மற்றும் 5. கஜேந்திர மோட்சம். இவையே ஐந்து ரத்னங்கள் எனப்படுகின்றன. இவற்றில் இரண்டு ரத்னங்கள் பீஷ்மாசார்யர் இயற்றியவை. 1. கிருஷ்ணனை பிரத்யட்சமாக ஸ்தோத்திரம் செய்தது பீஷ்மஸ்தவராஜ. 2. அனுஸ்ம்ருதி - பீஷ்மாசார்யர் தேகத் தியாகம் செய்தபோது, அந்தர்யாமி பரமாத்மனையும், ஸ்ரீகிருஷ்ணனையும் ஐக்கிய சிந்தனை செய்து, பகவத் மகிமைகளை வெளிப்படுத்தினார். ஆக, 5 ரத்னங்களில் ஸ்தவராஜ, அனுஸ்ம்ருதி இந்த இரண்டும் பீஷ்மர் இயற்றிய ஸ்தோத்திரங்கள். இந்த இரு ஸ்தோத்திரங்களின் பிரதிபாத்யனும் ஸ்ரீபரமாத்மனே ஆகும். அந்த ஸ்தோத்திரங்களை படித்தால், பரமாத்மனின் அபாரமான மகிமைகள் நமக்குத் தெரிய வருகின்றன. ககனசரனான கருட வாகனானவன் என்று சொல்கிறார். இத்தகைய மகிமைகள் வேறு யாருக்கு இருக்கிறது? சிந்திப்போம். முதலில் கருடனின் மகிமைகள் புரிந்தால், பின்னர் அவரை வாகனமாக வைத்திருப்பவனின் மகிமைகள் தானாக புரியவரும். கருடனின் மகாமகிமைகளை புராணங்கள் இப்படி சொல்கின்றன. 

கருடஸ்ய ஜாதமாத்ரேண த்ரயோலோகா: ப்ரகம்பிரே |
ப்ரகம்பிதா மஹி சர்வாசஷைல வனகானனா ||
ககனன்னஷ்டாசந்த்ரார்க்கம் ஜ்யோதிஷனப்ரகாஷத |
தேவதாபய பீதாஸ்து மாருதோன ப்ரகம்பத ||

இதன் பொருள்:
கருடன் பிறந்தபோது மூன்று உலகத்து மக்களும் நடுநடுங்கிப் போயினர். மலைகளைக் கொண்ட பூமி நடுங்கியது. ஆகாயத்தில் சூர்ய சந்திரர்கள் தங்களின் ஒளியை இழந்தனர். தேவதைகள் அனைவரும் பயந்தனர். காற்று அடிக்கவில்லை. என்று மேற்கண்ட ஸ்ருதி வாக்கியம் சொல்கிறது. 

மேலும் பாரதத்தில் கருடனின் மகிமைகளை ஏராளமாக சொல்லியிருக்கின்றனர். அதனை இங்கு விளக்கமாக சொல்லமுடியாவிட்டாலும், சிறிது மட்டும் பார்ப்போம். 

தாயான வினதாதேவியின் அடிமைத்தனத்தை விடுவிப்பதற்காக, பிறந்தவுடனேயே அமிர்தத்தைக் கொண்டு வர புறப்பட்டார் கருடன். அந்த சமயத்தில் அவருக்கு ஆகாரம் கிடைக்காமல் தாயைக் கேட்க, அவர் கடலில் ஒரு ஓரத்தில், மகா பாபிகளான, உலகத்தை அழிக்க வல்லவர்களான, ஆயிரக்கணக்கான விஷதர்கள் வசித்து வருகின்றனர். அவர்களைக் கொன்று தின்றுவிட்டு, அமிர்தத்தைக் கொண்டு வா என்றார். கருடனும் அவ்வாறே செய்தார். அப்படியும் அவருக்கு வயிறு நிரம்பவில்லை. அப்படியே கவலையுடன் வரும்போது, தந்தையான கஷ்யபரைக் கண்டு, ’தாய் ஆகாரம் கொடுத்தாலும், எனக்கு வயிறு நிரம்பவில்லை. வேறு எங்காவது இருக்கும் ஆகாரத்தை காட்டுங்கள்’ என்று வேண்டினார். 

அதற்கு கஷ்யபர் அங்கிருந்த ஏரியைக் காட்டி, இங்கு ஒரு யானையும், ஆமையும் இருக்கின்றன. இந்த இருவரும் முந்தைய பிறவியில் அண்ணன் தம்பியாக இருந்து, சொத்து விஷயத்தில் இருவருக்கும் விவாதம் வந்து, ஒருவருக்கொருவர் சாபம் கொடுத்து, யானை ஆமைகளாக பிறந்திருக்கின்றனர். யானை 6 காத உயரமும், 12 காத அகலமும் இருக்கிறது. ஆமை 3 காத உயரமும், 10 காத சுற்றளவும் இருக்கிறது. முந்தைய பிறவியின் சண்டையினால், இப்பிறவியிலும் இருவரும் எதிரிகளாகவே பிறந்திருக்கின்றனர். அவர்கள் இருவரையும் கொன்று தின்று உன் வேலையைப் பார் என்று கஷ்யபர் சென்றார். கருடன் அந்த இரண்டு பிராணிகளையும் தன் கால்களில் பிடித்து, எங்கு அமர்ந்து தின்னலாம் என்று யோசித்தவாறு, மரங்களையெல்லாம் பார்த்தவாறு வரும்போது அவைகளெல்லாம் நடுநடுங்கின. அங்கு ஒரு பெரிய மரம் இருந்தது. 

அந்த மரம் கருடனை பார்த்து - ‘கருடா, யோசிக்கவேண்டாம். என் கிளைகள் அனைத்தும் 100 காததூரங்கள் வரைக்கும் இருக்கின்றன. அந்த ஒரு கிளையில் அமர்ந்து நீ யானை, ஆமைகளை தின்னலாம்’ என்றது. கருடனும் மகிழ்ச்சியுடன், அந்த 100 காததூரம் உள்ள கிளையில் அமரப் போகும்போது, அந்த கிளையானது சடசடவென்று முறிந்து கீழே விழப்போனது. அதில் அமர்ந்து தவம் செய்துகொண்டிருந்த நூற்றுக்கணக்கான ரிஷிகளை கருடன் பார்த்தார். கிளை முறிந்து கீழே விழுந்தால், இவ்வளவு பேரின் உயிருக்கும் ஆபத்து வரும் என்று நினைத்து, அந்த கிளையை அப்படியே தன் மூக்கில் தாங்கிப் பிடித்தவாறு பறந்துவிட்டார். அப்படியே பல காத தூரங்கள் பறந்தார். 

கஷ்யபர் தன் மகனின் சாகசத்தைப் பார்த்து வியந்து, அந்த கிளையில் அமர்ந்திருந்த ரிஷிகளைக் கண்டு வணங்கி, அவர்கள் அந்த இடத்தை விட்டுப் போகுமாறு செய்து, அந்த கிளையை, மலையின் மேல் போட்டுவிடுமாறு சொன்னார். அதே போல, கருடனும் அந்த கிளையை ஒரு பெரிய மலையின் மேல் போட, அந்த மலை 100 துண்டுகளானது. அங்கு அமர்ந்து அந்த யானை, ஆமையைத் தின்று பின், அமிர்தத்தைக் கொண்டு வருவதற்குப் போனார் என்று சொல்லியிருக்கிறார். இதிலிருந்து கருடனின் மகிமை எப்படிப்பட்டது என்று தெரியவருகிறது. இத்தகைய கருடனை, தன் வாகனமாக வைத்திருப்பதென்றால், சாமான்யர்களுக்கு சாத்தியமா? 

‘காங்கேயனுத’ ‘ககனசரவாஹன’ என்னும் இரு சொற்களால் பரமாத்மனின் சிறந்த மகிமைகளை நிரூபணம் செய்தாயிற்று. இப்படிப்பட்ட மகிமைகளைக் கொண்டவனாயினும், ’காயனவ கேளுத, திவௌகஸரொடனெ திருகுவனு மனெமனெகளல்லி’ என்று சொல்லி, பகவந்தன் சர்வக்ஞர் ஆனாலும், பக்தர்கள் பாடும் கானங்களைக் கேட்டவாறு, தேவதைகளுடன் பக்தர்களை மகிழ்வித்தவாறு அவர்களின் வீடுகளில் சஞ்சரித்தவாறு, ஆபத்துகள் வரும்போது அவர்களை காப்பாற்றுகிறான். இந்த வாக்கியத்தால், பரமாத்மனுக்கு பக்தர்களிடம் இருக்கும் வாத்ஸல்யத்தை (பிரியத்தை) விளக்கியது போல ஆயிற்று. இத்தகைய ஆதாரங்களினாலேயே தாசராயர் ‘இவன காருண்யகேனெம்பெ’ என்றிருக்கிறார். 

பக்தர்களின் வீடுகளில் சஞ்சரிக்கிறான் என்பதற்கு கோபிகா ஸ்த்ரியர்களை விட்டால் வேறு உதாரணமே தேவையில்லை. கோபாலனாக கோபிகா ஸ்த்ரியர்களின் வீடுகளில் திரிந்து, அவர்களின் துதிகளை / பாடல்களைக் கேட்டவாறு, தயிர் பானைகளை உடைப்பது, பால் வெண்ணைகளை திருடித் தின்பது, ஆகிய பால சேஷ்டைகளால் அவர்களை மகிழ்வித்து, அவர்களுக்கு வந்த ஆபத்துகளை பரிகரித்து, அவர்களுக்கு அங்க-சங்கங்களைக் கொடுத்துக் காப்பாற்றிய உதாரணமே இதற்கு சாலப் பொருந்தும். 

மேலும் பக்தவத்ஸலனான ஸ்வாமி, தாயான யசோதை தன்னை கயிற்றில் கட்ட முயன்றபோது, எவ்வளவு நீளமான கயிறைக் கொண்டுவந்தாலும், எப்போதும் இரு அங்குல கயிறு குறைவாகவே இருக்கும்படியான நிலையைக் கண்டு, ஆச்சரியப்பட்ட யசோதையின் மகிழ்ச்சி, வியப்பு ஆகியவை, பிரம்மாதி தேவதைகளுக்கும் கிட்டவில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது. இதே அர்த்தத்தை பாகவதத்தின் கீழ்க்கண்ட ஸ்லோகத்திலும் சொல்லியிருக்கின்றனர். 

நேமம் விரிசிர்னபவோ ந ஸ்ரீரப்யங்க சம்ஸ்ரயா | 
ப்ரஸாதம் லேபிரேகோப்யோ யத்ப்ராப விமுக்திதாத் ||

இதன் முக்கியக் கருத்து என்ன? ஏகாந்த பக்தரும், மனைவி மக்களுமான ரமா பிரம்மாதிகளில், பரமாத்மனின் சம்பூர்ண அனுக்கிரங்கள் இருப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவே சாதாரண மனிதர்களில் அவனின் அருள் மிகச்சிறியதாகவே இருந்தாலும், அவர்களின் யோக்யதைக்கு அது மிகவும் அதிசயமாகவே காணப்படும். ரமா பிரம்மாதிகளில் இருக்கும் அவனது அருளில் கோடியில் ஒரு பங்குகூட இந்த சாதாரண மனிதர்களில் இல்லை. ஆனாலும், அவர்களில் பகவந்தன் வைக்கும் அன்பைக் கண்டு யாரும் பகவந்தன் கருணாளு என்று சொல்வதில்லை. சாமான்ய மக்களின் கஷ்டங்களைப் பரிகரிக்கும்போது, பரமாத்மன் காட்டும் அருளே, அவனது அதிசயமான கருணையை வெளிப்படுத்துகிறது. 

இந்த ஸ்லோகத்தில் வரும் ‘மனெமனெகளலி திருகுவனு’ என்னும் பதத்திற்கு சில வியாக்யானகாரர்கள், ’இந்திரியங்கள் என்னும் வீடுகளில் பிம்பரூபியாக திரிகிறான்’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், தாசராயரின் அபிப்பிராயம் அப்படி இருந்ததாக தெரியவில்லை. ஏனெனில் ‘காயனவ கேளுத’ என்பது, பக்தியுடன் பாடல் பாடுபவர்களைக் குறிக்கிறது. பிம்பரூபியான பரமாத்மன் இந்திரியாதிகளில் திரிகிறான் என்றால், பசு, பறவைகளிலும், தமோ யோக்யர்களான ஜீவராசிகளிலும் அந்தர்யாமியாக இருக்கிறான். இப்படியிருக்கையில் அந்த அர்த்தமானது பொருந்துவதில்லை. 

***


Sunday, February 9, 2020

#3 - கருணா சந்தி

#3 - கருணா சந்தி

ஸ்ருதி 1திகளபி4மானி லகுமி
ஸ்துதிக3ளிகெ3 கோ3சரிசத3ப்ரதி
ஹத மஹைஸ்வர்யாத்யகி2ள சத்3கு3ண கணாம்போ4தி |
ப்ரதிதி3வஸ தன்னங்க்4ரி சேவா
ரத மஹாத்மரு மாடு3தி1ஹ சம்
ஸ்துதிகெ3 வஷனாகு3வனிவன காருண்யகேனெம்பே3 ||3

ஸ்ருதிததிகளிகெ = வேத சமூகங்களுக்கு
அபிமானி = அபிமானியான
லகுமி ஸ்துதிகளிகெ = லட்சுமிதேவி செய்யும் ஸ்தோத்திரங்களுக்கு
கோசரிசத = தரிசனம் அளிக்காத
அப்ரதிஹத மஹைஸ்வர்யாதகிள குணகணாம்போதி = அப்ரதிஹத மஹைஸ்வர்யாதி = ஒப்புமை இல்லாத பெருஞ்செல்வங்கள். அகிள = அனைத்து. சத்குணகள = நற்குணங்கள். அம்புதி = கடல் போன்றவனான ஸ்ரீபரமாத்மன்
ப்ரதிதிவஸ = தினந்தோறும்
தன்னங்க்ரி சேவாரத மஹாத்மரு = தன்னங்க்ரி = தன் பாதங்களின். சேவா = சேவையில். ரத = ஈடுபட்டுள்ள. மஹாத்மரு = மஹனீயர்கள்.
மாடுதிஹ = செய்துகொண்டிருக்கும்.
சம்ஸ்துதிகெ = ஸ்தோத்திரத்திற்கு வசமாகும்
காருண்யக்கெ = (இவனது) கருணையை
ஏனெம்பெ = என்னவென்று வர்ணிப்பேன்?

பொருள்: 
எந்த பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்து அவனது தரிசனத்தைப் பெறுவதற்கு, ஸ்ரீலட்சுமிதேவியருக்கும் சாத்தியம் இல்லையோ, யார் எப்போதும் நாசம் இல்லாமல் ஒரே மாதிரியான கருணைக்கடலாக இருக்கிறானோ, அத்தகைய மகானுபாவன், தன் பாதங்களை வணங்குபவர்களான மகாத்மர்கள் செய்யும் ஸ்தோத்திரத்திற்கு வசமாகிறான். இத்தகைய மகானுபாவனின் கருணையை நான் என்னவென்று வர்ணிப்பேன்?

சிறப்புப் பொருள்:
தன் பாதங்களை வணங்குபவரகளின் ஸ்தோத்திரங்களுக்கு பரமாத்மன் வசமாகிறான் என்று தாசராயர் சொல்கிறார். இதற்கு என்ன ஆதாரம் என்றால். தாசர் தன்னுடைய அனுபவத்தினால், பெரியவர்களின் வாக்கின் ஆதாரத்தினாலும் அப்படி சொல்லியிருக்கிறார். சொந்த அனுபவம் என்றால், விஜயதாசர், பாகண்ணதாசர் இருவரும், ஜகன்னாததாசர் உடம்பு சரியில்லாதிருந்தபோது, அவரை அழைத்துக் கொண்டு திருப்பதி க்‌ஷேத்திரத்திற்கு சென்றனர். அங்கு, மிகவும் சோர்வுற்றிருந்த தாசரை விட்டுவிட்டு, பாகண்ணதாசர் ஆகியோர் பகவந்தனின் தரிசனத்தைப் பெறுவதற்கு கோயிலுக்குச் சென்றனர். அங்கிருந்த ஹரிதாசர்கள் அனைவரும், பஜனைப் பாடல்களைப் பாடியவாறு, நர்த்தன சேவையிலும் ஈடுபட்டு, அங்கு படுத்திருந்த ஜகன்னாததாசரை மறந்தனர். ஜகன்னாததாசரோ பசியில் துடித்தவாறு, சிலர் இங்கு பாடியவாறு இருக்க, பலர் வேங்கடனின் தரிசனத்திற்காகச் சென்று, தன்னை மறந்தனரே, தம் நிலைமை இப்படியாகிவிட்டதே என்று துயரப்பட்டவாறு, ஸ்ரீபரமாத்மனை இடைவிடாமல் தியானம் செய்து, ஸ்தோத்திரம் செய்யலானார். 

அப்போது பரமாத்மன், பாகண்ணதாசராக வேடம் தரித்து, திவ்யமான பக்‌ஷ்ய போஜ்யங்களுடன் அன்னத்தைக் கொண்டு வந்து தாசரிடம் தந்தான். அதை உண்டவுடன், இவருக்கு இருந்த சோர்வு நீங்கி, மிக்க மகிழ்ச்சியுடன் பரமாத்மனை துதிக்கத் துவங்கினார். அங்கு வெகு நேரத்திற்குப் பிறகு பாகண்ணதாசருக்கு ஜகன்னாததாசரின் நினைவு வந்தது. உடனே அவர் ‘ஆஹா. நோய்வாய்ப்பட்ட நம் சிஷ்யனை அப்படியே மறந்துவிட்டேனே. பசியினால் எவ்வளவு கஷ்டப்படுகிறானோ’ என்று கவலைப்பட்டவாறு வேகவேகமாக வீட்டுக்கு வந்து பார்த்தால், அங்கு மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும் சிஷ்யனைக் கண்டு ‘நான் உம்மை மறந்து பஜனையில் இருந்துவிட்டேன். பசியினால் நீ என்ன செய்கிறாரோ என்று கவலைப்பட்டு ஓடோடி வந்தேன். இதென்ன, இன்று நீ எதையும் சாப்பிடாமல் இருந்தாலும், இவ்வளவு தெம்பாக, மகிழ்ச்சியாக இருக்கிறாயே? எழுந்து அமரும் சக்தி உனக்கு எப்படி வந்தது?’ என்றார். 

அதற்கு ஜகன்னாததாசர் வியப்புடன், ‘இதென்ன இப்படி சொல்கிறீர்கள்? இப்போதுதானே நீங்கள் எனக்கு சுவையான உணவைக் கொண்டு வந்து கொடுத்தீர்கள்? அத்தகைய சுவையான உணவை நான் என்றும் உண்டதேயில்லை. அதன் மகிமையாலேயே எனக்கு எழுந்து அமரும் சக்தி வந்திருக்கிறது’ என்றார். இதைக் கேட்ட பாகண்ணதாசர், ’ஸ்ரீனிவாசனே வந்து உனக்கு உணவு கொடுத்திருக்கிறான். நான் உன்னை மறந்தேவிட்டேன். உன் பக்தியை மெச்சி பரமாத்மனே அருளியிருக்கிறான்’ என்று சொல்லி, இருவரும் பரமாத்மனின் ஸ்தோத்திரங்களை செய்தனர், என்பதை ஜகன்னாததாசரின் வாழ்க்கைச் சரிதத்தில் பார்க்கிறோம். இது தாசராயருக்கு ஏற்பட்ட ஸ்வானுபவம் (சொந்த அனுபவம்) ஆகும். 

கனகதாசர் உடுப்பி கிருஷ்ணனின் தரிசனத்திற்கு சென்றபோது, அவர் நான்காம் வர்ணத்தவர் என்று கூறி அவரை கோயிலுக்குள் அனுமதி மறுத்துவிட்டனர். அவர் கோயிலின் பின்புறத்தில் அமர்ந்து, பகவந்தனை புகழ்ந்து பாட, கோயிலின் மேற்குச் சுவர் உடைந்து ஸ்ரீகிருஷ்ணன் அவருக்கு தரிசனம் அளித்தான். இன்றும் அதே வழியில் ‘கனகன கிண்டி’ என்னும் சன்னலில் இருந்தே, நாமும் கிருஷ்ணனின் தரிசனத்தைப் பெறுகிறோம். இத்தகைய பல சம்பவங்கள் விட்டல பக்தர்களின் வாழ்வில் வந்திருப்பதை அறிகிறோம். 

ஆகையால் தாசராயர், தமது சொந்த அனுபவத்தினாலேயே ‘தன்னங்க்ரி சேவாரதரு மாடுதிஹ சம்ஸ்துதிகெ வஷனாகுவனு’ என்று சொல்லியிருப்பார். இதற்கு உதாரணமாக ‘ஸ்ருதிதேவ’ மற்றும் ‘பஹளாஸ்வராஜ’ என்னும் புராண கதைகளை சொல்லலாம். ஒருவேளை மக்களுக்கு புராண கதைகள் அசுவாரசியமாக இருந்தால், அக்பர் சக்ரவர்த்தியின் காலத்தில் நடந்த உதாரணங்களை மனதில் வைத்தே தாசராயர் இந்த வரிகளை இயற்றியிருப்பார். ‘இவன காருண்யகேனெம்பெ’ என்று மேலே சொன்னவற்றை வைத்து, பரமாத்மனின் கருணையை வியந்து போற்றியிருக்கிறார். 

***

Saturday, February 8, 2020

#2 - கருணா சந்தி

#2 - கருணா சந்தி

மளெய நீரோணியலி ப1ரியலு
3ளசரூரொளகி3த்த3 ஜனரா
ஜலவு ஹெத்தொ3ரெகூ3டே3 மஜ்ஜன பான கை33பரு |
கலுஷ வசனகளாதொ3டெ3யு பா3
ம்பொ3ளெய பெ1த்தன பா13மஹிமா
ஜலதி பொக்குதரிந்த3 மாண்த3பரெ மஹிசுரரு ||2

மளெயநீரு, ஓணியல்லி = தெருவின் ஓரத்தில், சாக்கடைகளில் மழைநீர்
பரியலு =  ஓடிக்கொண்டிருப்பதை, ஊரில் இருக்கும் மக்கள்
பளஸலு = பயன்படுத்த மாட்டார்கள்
ஆ ஜலவு = அதே நீரானது
ஹெத்தொரெகூடெ = பெரிய ஆற்றில் போய் சேர்ந்தால்
மஜ்ஜனபான கெய்தபரு = குளித்து, குடிப்பதற்கு பயன்படுத்துவர். அதுபோலவே,
இவு = இந்த கிரந்தத்தில் இருக்கும் என் வசனங்கள்
கலுஷவசனகளாதரு = பேசுமொழியில் எழுதப்பட்டிருந்தாலும்
பாந்தொளெயபெத்தன = கங்கையைப் பெற்ற ஸ்ரீபரமாத்மனின் பாத மகிமைகளைப் போல
பொக்கதரிந்த = பாத மகிமை என்னும் கடலைப் பற்றி சொல்லியிருப்பதால்
மஹிசுரரு = பிராமணர்கள்
மாள்தபரெ = ஏற்றுக்கொள்ளாமல் இருப்பார்களோ? (அதாவது ஏற்றுக்கொள்வர் என்று பொருள்)..

பொருள்:
மழை பெய்யும்போது, அந்த நீரானது, சந்து தெருக்களின் ஓரத்தில் ஓடும்போது, அதை யாரும் பயன்படுத்துவதில்லை. அதே தண்ணீரானது, பெரிய ஆற்றினில் போய் சேரும்போது, எப்படி அதில் ஸ்னானாதிகளை செய்கின்றனரோ, அதுபோலவே, என் கிரந்தங்களில் என்ன தோஷங்கள் இருந்தாலும் இது சம்ஸ்கிருத மொழியாக இல்லாதிருந்தாலும், ஸ்ரீபரமாத்மனின் பாத சரித்திரத்தைப் பற்றி பேசுவதினால், அதாவது, இதில் பகவந்தனின் மகிமைகளே சொல்லியிருப்பதால், பிராமணர்கள் இதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கமாட்டார்கள். 

சிறப்புப் பொருள்:
ஸ்ரீமத் டீகாசார்யர் (ஜயதீர்த்தர்) சொல்வது இது.

கங்கா சங்கேன நைர்மல்யம் ரத்யாத்பிர்லப்யதேயதா |
வாசோவிஷுத்திஸித்யர்த்தம் சங்கம்யந்தே குரோர்கிர: ||

அதாவது, தெரு ஓரத்தில் ஓடும் மழை நீரானது, கங்கையை சேர்ந்தவுடன் எப்படி புனிதமாக கருதப்படுகிறதோ, அதைப் போலவே நம் வாக்கு புனிதமடைவதற்கு, டீகா ரூபமான இந்த வாக்கியங்களை, குருகளின் மூல கிரந்தத்தில் சேர்க்கிறோம். - என்று பிரம்மசூத்ர பாஷ்யத்தின் டீகா கிரந்தமான தத்வபிரகாசிகையில் சொல்லியிருக்கிறார். அதே கருத்தினையே தாசராயர் இந்த பத்யத்தில் குறிப்பிட்டிருக்கிறார். 

மழை நீரானது தெருவோரங்களில் ஓடும்போது, மக்கள் அதனை பயன்படுத்தாமல் இருந்தாலும், அதே நீரானது ஒரு பெரிய ஆற்றினை அடைந்ததும் அதை எப்படி பயன்படுத்தத் துவங்குகின்றனரோ, அதைப்போலவே இந்த கிரந்தமானது பேசுமொழியான கன்னடத்தில் இருந்தாலும், அப்ராக்ருதமான பகவந்தனின் மகிமைகளையே பேசுவதால், இதனை ப்ராக்ருதம் என்று உதாசீனம் செய்யாமல் ஏற்றுக்கொள்வர் என்னும் நம்பிக்கையில் இதை இயற்றியிருக்கிறேன் என்கிறார் தாசராயர். 

சிலர் சம்ஸ்கிருத கிரந்தங்களே சிறந்தவை என்றும், பேசுமொழியில் இருக்கும் கிரந்தங்களை படிக்கக்கூடாது என்றும் சொல்வர். ஆனால் இந்த அபிப்பிராயம் உள்ளவர்கள், புராணங்களில் அங்கங்கு சொல்லப்பட்டிருக்கும் சம்ஸ்கிருத சொற்களை சரியாகப் புரிந்துகொள்ளாமல், வெறும் மொழியின் ஆசையில் அதை புரிந்துகொண்டு, அநியாயமாக பெரியவர்களின் துரோகத்தை சம்பாதித்துக் கொள்கின்றனர். உலகத்தில் சம்ஸ்கிருதமே சிறந்த மொழி என்றும், அதற்கே மகிமைகள் உள்ளன என்றும் அறிந்து, சம்ஸ்கிருதம் அறிந்தவர்களே முக்திக்கு செல்வர் என்றும் சொல்வர். கன்னட மொழி ஒதுக்கப்பட்ட மொழியாக இருந்திருந்தால், ஸ்ரீபாதராஜர், ஸ்ரீவியாசராஜர், ஸ்ரீவாதிராஜர்களே ஆகட்டும் கன்னடத்தில் பதங்களை செய்திருப்பதால், அவர்கள் அனைவரும் நரகத்திகுச் செல்வர் என்று சொல்வது போலாயிற்று. சம்ஸ்கிருதம் வராத உத்தமரான தாசராயர்கள் அனைவருக்கும் தமஸ்ஸே கிடைக்கவேண்டுமாயிற்று. ஆகையால், சம்ஸ்கிருத சொற்களுக்கு, தவறான விளக்கங்களை புரிந்துகொள்பவர்களைப் பார்த்து வருத்தப்பட வேண்டியதாகிறது. 

பாகவத 11ம் ஸ்கந்தத்தின் தாத்பர்யத்தில் ‘கர்தபயானம சம்ஸ்க்ருத வாணி இத்யாதே:’ என்று பொருளின் புனிதம், புனிதத்தன்மை இல்லாமை ஆகியவற்றை சொல்லும்போது சம்ஸ்கிருதம் இல்லாத வாக்கியத்தை கழுதையின் வாகனத்திற்கு சமமாக சொல்லியிருக்கின்றனர். ஆனால், பண்டிதர்கள், சுதாதி கிரந்தங்களுக்கும், புராணங்களுக்கும் அர்த்தம் சொல்வதானால், அதை இந்த பேசுமொழியிலேயே சொல்லவேண்டியதாக இருக்கிறது. வீட்டில் குடும்பத்தினருடன் பேசும்போது பேசுமொழியிலேயே பேசவேண்டியதாக இருக்கிறது. இதையெல்லாம் கழுதையின் மேல் அமர்ந்தாற்போல என்று சொல்லமுடியுமா? இதையெல்லாம் யோசிக்காமல் மனதிற்கு தோன்றினாற்போல பேசினால், அனர்த்தமே ஆகும். பெரியவர்களின் துரோகமும் கூடவே வரும். ஆகவே, சம்ஸ்கிருத சொற்களுக்கு பேசுமொழியில் அர்த்தங்களை சொல்லியே ஆகவேண்டும். 

மேலும் 11ம் ஸ்கந்தத்தில், ‘புராணை: ப்ராக்ருதைரபி’ ப்ராக்ருதத்தினாலும் பரமாத்மனை ஸ்தோத்திரம் செய்யவேண்டும். இதுமட்டுமல்லாமல் 

நயத்வஷஸ்சித்ரபதம் ஹரேர்யதோ ஜகத்பவித்ரம் ந க்ருணீத் கர்ஹிசித | 
தத்வாயஸம் தீர்த்தமுஷந்தி மானஸானயத்ர ஹம்ஸான்ய வன்மிகன்ஷயா ||
சவாக்விஸர்கோஜன தாக விப்லவோ யஸ்மின்ப்ருதி ஸ்லோகமபத் பவத்யபி |
நாமன்யனந்தஸ்ய யஷோங்கிதானியஸ் புண்யந்தி காயந்தி க்ருணந்தி ஸாதவ: ||

என்னும் பாகவத வசனத்திற்கேற்ப, எந்தவொரு கிரந்தமும், எந்த மொழியில் இருந்தாலும், கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் , அதில் பகவத் மகிமை இல்லாதிருந்தால், அந்த கிரந்தத்தை, காக்கைகள் குடிக்கும் நீர்நிலையில் மானச சரோவரத்தில் நீர் குடிப்பவைகளான அன்னப்பறவைகள் நீர் குடிக்க எப்படி விருப்பப்படாதோ, அதுபோலவே, பெரியவர்களான ‘ஹம்ஸ’ என்றால் சன்யாசிகளான சனகாதிகள் முதலானவர்கள் விரும்பமாட்டார்கள். அதனை அவர்கள் வயிற்றுப்பிழைப்பிற்காக பயன்படுத்தப்படுவது என்று நினைப்பார்கள். மாறாக, ஒவ்வொரு ஸ்லோகத்திலும் எதுகை மோனை ஆகியவை இல்லாதிருந்தாலும், அதில் பகவத் மகிமைகள் சொல்லப்பட்டிருந்தால், சன்யாசிகள் அந்த கிரந்தத்தை படித்துக் கேட்பதில் மகிழ்ச்சியடைவார்கள். இப்படியாக, பகவத் மகிமைகள் உள்ள கிரந்தத்தின் மகிமைகளை சொல்லியிருக்கிறார்கள். 

இப்படியிருக்கையில், சம்ஸ்கிருத மொழி ப்ராக்ருத மொழி என்றால் என்ன அர்த்தம்? சம்ஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தாலும் காதம்பரி காவியங்கள் ஆகியன பகவத் மகிமைகளைப் பற்றி பேசாததால், ப்ராக்ருத கிரந்தங்கள் என்றும்; கன்னடத்தில் எழுதப்பட்ட கிரந்தமானது அப்ராக்ருதனான பரமாத்மனின் மகிமைகளைப் பற்றி பேசினால் அவை சம்ஸ்கிருத கிரந்தங்களே என்பது ஸ்ரீமதாசார்யரின் வாக்கு என்று நினைக்கவேண்டும். 

மேலும் அ-காராதி 51 எழுத்துக்களே கன்னடத்திலும் இருப்பதால், அஜாதி பரமாத்மனின் ரூபங்களே இந்த எழுத்துக்களுக்கும் ப்ரதிபாத்யனாக இருக்கிறான் என்றும், இத்தகைய சிறந்த கிரந்தத்தை கன்னட மொழி என்று உதாசீனம் செய்பவர்கள், ஹரிகுருகளின் துரோகத்திற்கு ஆளாகிறார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. 

இதைப்போலவே, பழங்கால மகாராஷ்டிரத்து கவி/பக்தர்களான துக்காராம், துளசிதாஸ், நாமதேவ, ஞானதேவ் என்று மிகச்சிறந்த பக்தர்கள் என்று புகழ்பெற்றிருக்கும் பலர் தத்தம் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பர். அவர்களைப் போலவே, நம் தாசராயரும் இதை கலுஷவசன என்று எண்ணாமல், பகவத் மகிமை என்னும் கடலில் நுழைந்திருப்பதால், அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கதே என்று நினைக்கவேண்டும் என்கிறார். இவ்வளவு விளக்கங்களை சொல்லியும், மக்களுக்கு இதன்மேல் மரியாதை உண்டாகவில்லை எனில், அது குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல என்று எண்ணவேண்டும். பரமாத்மன் ஒவ்வொருவரின் தகுதிக்கேற்ப அவரவர் மூலமாக சாதனைகளை செய்விக்கிறான். இதற்கு மேல் சொல்வதற்கு என்ன இருக்கிறது?.

***


Friday, February 7, 2020

#1 - கருணா சந்தி

#1 - கருணா சந்தி

சந்தியின் நோக்கம்:

முதலாம் சந்தியில் மங்களாசரணம் செய்தவாறு மத்வ சித்தாந்தத்தின்படி, முக்திக்கு முக்கிய சாதனைகளான பஞ்சபேத, தாரதம்யங்களை அறிந்து, ஹரி சர்வோத்தமத்வம் என்பதை அறிந்து உபாசனை செய்யவேண்டும் என்னும் விஷயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தியில், பரமாத்மன், அவதார மற்றும் மூல ரூபங்களால், பக்தர்களில் எவ்வளவு கருணையைக் காட்டுகிறார் என்பதை தெரிவிக்கிறார். இந்த விஷயங்களை பாரத பாகவதாதி கிரந்தங்களில் இதிகாச ரூபங்களாக மிகவும் விளக்கமாக சொல்லப்பட்டவையே ஆகும். அவை அனைத்தும் மிகவும் விளக்கமான கிரந்தங்களாகையால், ஒவ்வொரு சம்பவங்களையும் படித்து, பரமாத்மனின் கருணை நம் மேல் எவ்வளவு அதிகம் இருக்கிறது என்பதை அறிவதற்கு நம் இந்தப் பிறவி போதாது. ஆகையால், உலகத்திற்கு நன்மை செய்யவேண்டும் என்பதாலேயே தாசராயர், பாரத, பாகவதாதிகளில் பக்தர்கள் பரமாத்மனிடமிருந்து பெற்றிருக்கும் கருணையை, அதன் சிறப்பு அம்சங்களை மட்டும் எடுத்து, தாசராயர் கருணா சந்தி என்னும் இந்த சந்தியை இயற்றியிருக்கிறார். இந்த சந்தியின் முதலாம் ஸ்லோகத்தில், இந்த சந்தியின் நோக்கத்தை, கதா ஸ்ரவணத்தின் நற்பலன்களை விளக்கியிருக்கிறார். 

ஸ்ரவண மனனானந்த3வீவுது3
4வஜனித து3க்க23ள க1ளெவுது
விவித4 போ43வ னிஹபரங்களலித்து சலஹுவுது3 |
பு4வனபாவன நெனிப லகுமி
4வன மங்க3 1தெ2ய பரமோ
த்ஸவதி3 கி1விகொ3ட்டாலிபுது3 பூ4சுரரு தி3னதி3னதி3 ||1

ஸ்ரவண = பகவத்கதையைக் கேட்பது
மனகெ = மனதிற்கு
ஆனந்தவ = மகிழ்ச்சியை
ஈவுது = கொடுப்பது
பவஜனித துக்ககள = பவ = சம்சார சம்பந்தத்தை. ஜனித = அதிலிருந்து வரும். துக்ககள = பிறப்பு இறப்பு சுழற்சியை
களெவுது = பரிகரிக்கும்
இஹபரங்களலி = இந்த பூலோகத்திலும் பரலோகத்திலும் கூட
விவித போகங்கள = பற்பல விதமான சுகங்களை
இத்து = கொடுத்து
சலஹுவுது = காப்பாற்றும்
புவனபாவனனெனிப = உலகத்தில் பவித்ரமானவன் என்றிருக்கும்
லகுமிதவன = லட்சுமிபதியின்
மங்கள கதெய = பரம மங்களமான கதையை
பரமோத்ஸவதி = மிகுந்த மகிழ்ச்சியுடன் (மரியாதையுடன்)
கிவிகொட்டு = ஸ்ரவண இந்திரியத்தை வேறு எந்த விஷயத்திலும் ஈடுபடுத்தாமல், ஒருமனத்துடன் இதற்கு காது கொடுத்து
பூஸுரரு = பிராமணர்கள்
தினதினதி = தினந்தோறும்
ஆலிபுது = கேட்கவேண்டும்.

பொருள்:
பரமாத்மனின் கதைகளைக் கேட்கும்போது பேரானந்தம் ஆகிறது. நவகாதம்பரிகளை (நவீன நாவல்களை) படிக்கும்போதுகூட மகிழ்ச்சியே ஆகிறது. அதனால் என்ன என்று கேட்டால், அதில் கர்ணானந்தம் (கேட்கும் மகிழ்ச்சி) மட்டுமே ஆகும். இதில் சம்சாரத்திலிருந்து விடுதலையும் ஆகிறது. இதுமட்டுமல்லாமல், அனைத்து துக்கங்களையும் பரிகரித்து பரலோகத்திலும் பற்பல விதமான போகங்களைக் கொடுத்து சுகத்தையும் கொடுக்கிறது. ஆகையால், இத்தகைய லோகபாவனனான, ஸ்ரீரமாபதியின் மங்கள கதையை மிகுந்த மகிழ்ச்சியுடன் பக்தர்கள் அனைவரும் கேட்கவேண்டும். 

சிறப்புப் பொருள்:
இந்த பதத்தை, சந்தி சூசனை (சந்தியின் நோக்கத்தை சொல்லும் பதம்) என்று சொல்வதால், இந்த சந்தியில் சொல்லப்போகும் விஷயத்தின் சாரத்தை இதில் அடக்கியிருக்கிறார் தாசராயர் என்று சொல்லவேண்டும். அது என்ன? பகவத் கதையைக் கேட்பதால், துக்கங்கள் பரிகாரமாவதுடன், இஹபரங்களில் பரம சுகங்கள் உண்டாகின்றன. முக்கியமாக, பகவத்பக்தர்கள் பரமாத்மனின் கதைகளைக் கேட்டு உண்மையான ஞானத்தினால் அவனை ஆராதித்தால், அவன் அவர்களுக்கு பரமானுக்கிரகம் செய்து இஹபரங்களில் சுகங்களைக் கொடுக்கிறான் என்னும் விஷயத்தையே சொல்லியிருக்கிறார். ஆகையால், இந்த பதத்திற்கு சந்தி சூசனை என்று சொல்வது நியாயமே என்று அறியவேண்டும். 

மேலும் இந்த சந்தியில் பாரதாதி கிரந்தங்களில் சொல்லப்பட்டிருக்கும் கதைகளையே சொல்லியிருக்கிறார். பாரதம் முழுக்கவும் படித்தால் நமக்கு என்ன பலன் கிடைக்குமோ அதுவே கிடைக்கும் என்கிறார். அது எப்படி என்று யோசிப்போம்.

முதன்முதலில், பாண்டவர்கள் வனத்தில் பிறந்து, குந்திதேவியுடன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது, ஸ்ரீபரமாத்மனே கதி என்று நினைத்து வணங்கியபோது, வியாசரூபியான பரமாத்மனே அவர்களுக்கு தரிசனம் தந்து, அவர்களை ஹஸ்தினாபுரத்திற்கு அழைத்து வந்து அருளினார். பிறகு, காண்டவ வனத்தின் தகனம் சமயத்திலும், திரௌபதி வஸ்திர அபஹரண சமயத்திலும், வனவாசத்திலும், அஞ்ஞான வாசத்திலும், போர் காலத்திலும் பக்தவஷ்யனன ஸ்ரீபரமாத்மன், ஸ்ரீகிருஷ்ண ரூபத்தினால் பாண்டவர்களுக்கு நண்பனாக இருந்து, தூதனாக இருந்து, உறவினனாக இருந்து, சாரதியாக இருந்து அவர்களை காப்பாற்றிய கதைகளின் முக்கிய சாராம்சம் என்ன? பரமாத்மன் தன் பக்தர்களை எந்த காலத்திலும் எல்லா விதங்களிலும் காப்பாற்றுவான் என்பதுதானே? பாகவதத்தைப் பாருங்கள்.

த்ருவ, பிரகலாதன், அம்பரீஷ, முசுகுந்த ஆகியோரின் கதைகளிலும், ஸ்ரீபரமாத்மனின் மத்ஸ்ய, கூர்ம, ராம, கிருஷ்ணாதி அவதார சரித்திரங்களிலும் நமக்குத் தெரியும் செய்தி என்ன? ஸ்ரீபரமாத்மன் கருணைக்கடல், பக்தர்களை மேம்படுத்துபவன் என்றுதானே தெரிகிறது? இவை அனைத்தையும் யோசித்து தாசராயர், பாரத, புராணங்கள் அனைத்தும் 4 லட்சம் கிரந்தங்கள். இவை அனைத்தையும் படித்தால் என்ன பலன் கிடைக்குமோ, அதை தாசராயர் இந்த கருணா சந்தியிலேயே அடக்கியிருக்கிறார். 

த்ருவாதி சரித்திரங்களைக் கேட்டு அவற்றிலிருந்து தெரியவேண்டிய முக்கிய கருத்துக்களை புரிந்துகொள்ளாவிடில், சாதாரண காதம்பரிகளைக் கேட்டு மகிழ்ச்சியடைவதைப் போலவே ஆகுமே தவிர, அதிலிருந்து நற்பலன் என்ன கிடைக்கும்? ஆகையால், நற்கதைகளின் சாராம்சத்தை புரிந்து கொள்ளவேண்டும். த்ருவனின் சரிதையைக் கேட்டால் நமக்கு புரியவேண்டிய கருத்து என்ன? ஆஹா. ஐந்து வயதுக் குழந்தை, தாய் தந்தைகளை விட்டு வனத்திற்குச் சென்று, பரமாத்மனைக் குறித்து தவம் செய்து, வெறும் 4 மாதம் அவன் செய்த தவத்தில் மெச்சி, பரமாத்மன் காட்சியளித்து, இங்கு 36,000 ஆண்டுகள் அரச பதவியையும், பரத்தில் த்ருவலோகாதிபத்யத்தையும் கொடுத்தான். இதிலிருந்து நாம் அறியவேண்டிய கருத்து என்ன? பகவந்தனை பக்தியுடன் யார் வணங்கினாலும், கருணா சமுத்திரனான ஸ்ரீஹரி, அவரை காப்பாற்றுவான். இந்த கருணா ரசத்தையே இந்த சந்தியில் சொல்லியிருப்பதால், இந்த சந்திக்கு ‘கருணா சந்தி’ என்றே பெயர் வைத்தார் தாசராயர். 

இந்த சந்தியை கேட்டாலும்கூட மிகச்சிறந்த பலன் கிடைக்கும் என்பதை குறிப்பதற்காக, முதல் பத்யத்தில் ஸ்ரவணத்தின் பலனை சொல்கிறார். ஸ்ரவணத்தினால் இந்த கலியுகத்தில் கிடக்கும் பலன்களானது, வேறு எதை செய்தாலும் கிடைக்காது என்பது தாசராயரின் அபிப்பிராயம். ஆனால், இந்த அபிப்பிராயம், வியாசகூடத்தவரின் கருத்துக்கு எதிர்மறையானது என்று சொல்லக்கூடாது. வியாச வாக்கியமும் இதையே சொல்கிறது. பாகவத 12ம் ஸ்கந்தத்தில் 

யஷ: ஸ்ரீயாமேவ பரிஸ்ரம: பரோவர்ணாஸ்ரமாசாரதப: ஸ்ருதாதிஷு | 
அவிஸ்ம்ருதி: ஸ்ரீதரபாதபத்ம யோகானுவர்ணானுவாத ஸ்ரவணாதிபிர்ஹரே: ||
அவிஸ்ம்ருதி: கிருஷ்ணபதாரவிந்தயோ: க்‌ஷிணோத்யபத்ராணி ஷமந்தனோதிச: |
ஸத்வஸ்ய ஷுத்திம்பரமாஞ்ச பக்திம் ஞானஞ்ச விஞான விராகயுக்தம் ||

என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால்:

மனிதர்கள் வர்ணாசிரம தர்மங்களை பின்பற்றுவதாலும், தவத்தினாலும், த்ருவன் முதலானவர்களின் சரித்திரங்களை அடக்கிய பாகவதங்களின் சாராம்சங்களை அறியாமல், வெறும் ஸ்ரவணாதிகளை செய்வதால் வரும் பலன் என்னவென்றால்: உலகத்தில் இவர் பெரியவர். தன் ஸ்னான, ஜப, தப, ஆகியவற்றை செய்துகொண்டு இருக்கிறார் என்னும் நற்பெயரும், தான் தானத்தை இவருக்கே கொடுக்கவேண்டும் என்று கிருஹ தானம், பூமி தானம், கோ-தானம் ஆகியவை இவர்களுக்குக் கிடைப்பதே இதற்கான பலன். அதாவது, வர்ணாசிரம தர்மங்களை பின்பற்றுவதால், புகழும் செல்வமும் கிடைக்கும் என்பது அர்த்தம். 

ஸ்ரவணம் செய்யும்போது, அதன் கருத்துக்களையும் அறிந்து, மகாத்ம்ய ஞானத்துடன், பகவந்தனின் ஸ்மரணையையும் செய்தது போலாயிற்று. இந்த செயல், இந்த உலகத்தில் வரும் கஷ்டங்கள் அனைத்தையும் போக்கி, பர லோகத்தில் சுகங்களைக் கொடுத்து, ஞான பக்தி வைராக்கியங்களை அதிகரித்து, முக்திக்கு வழிகாட்டுகிறது என்பதே அந்த பாகவத ஸ்லோகத்தின் தாத்பர்யம் ஆகும். இதையே தாசராயர், மிக ஆணித்தரமாக இந்த முதல் பத்யத்தில் சொல்கிறார். 

பாகவதம் சொல்கிறவர்கள் அதில் வரும் ஒவ்வொரு கதையையும் சொல்லி முடித்தவுடன், அதன் பலனையும் சொல்பவராக இருக்கவேண்டும். ஆனால், பலர் அப்படி சொல்வதில்லை. ஒருவேளை அப்படி அவர் அந்த பலன்களை சொன்னாலும், அங்கு அமர்ந்து கேட்பவர்கள் அனைவரும் அதை புரிந்துகொண்டனர் என்று சொல்வதற்கில்லை. ஒரு சிலரே அந்த பலன்களை புரிந்து கொள்வர். பலர் புராணம் முடிந்தவுடன், வீட்டுக்குப் புறப்பட்டுப் போவதிலேயே குறியாக இருப்பர். நாம் தினம் பார்க்கும் காட்சி இதுவே. ஆகவே, தாசராயர், இவை அனைத்தையும் அறிந்து, சிந்தித்து, அந்த நற்பலன்களையெல்லாம் எடுத்து இந்த கிரந்தத்தில் இயற்றியிருக்கிறார். 

இத்தகைய மிகப்பெரிய உபகாரத்தை செய்து, மக்களை மேம்படுத்திய மகானுபாவரான நம் தாசராயரை எவ்வளவு கொண்டாடினாலும் அது போதாது. முதல் பத்யத்தில், சந்தி சூசனையைக் கொடுத்து, சிரவணத்தின் மகிமைகளை புரியவைத்து, இந்த கிரந்தத்தை தாம் பேசுமொழியில் செய்திருப்பதால், மகாத்மர்கள் இதை உதாசீனம் செய்யக்கூடாது என்று சொல்லி, அவசியமாக இந்த கிரந்தம் பார்க்கத்தக்கது (படிக்கத்தக்கது) என்று இதன் மகிமைகளை தெரியப்படுத்தியிருக்கிறார். 

***

Thursday, February 6, 2020

#13 - மங்களாசரண சந்தி

#13 - மங்களாசரண சந்தி

1ரிமளவு சுமனகளொளக3னல
நரணியொளகி3ப்பந்தெ தா3மோ
3ரனு பிரம்மாதி3கள மனத3லி தோரி தோரத3லெ |
இருதிஹ ஜகன்னாதவிட்டலன
கருண படெ3வ முமுக்‌ஷு ஜீவரு
பரமபா43வதரனு கொண்டாடுவுது ப்ரதிதி3னவு ||13

தாம = வயிறு
தாமோதரன் = யசோதையால் கயிற்றால் கட்டப்பட்ட வயிற்றை உடையவன்
பிரம்மாதிகள = பிரம்மதேவரே முதலான அனைத்து தேவதைகளின்
மனதலி = மனதில்
சுமனதொளகெ = புஷ்பத்தில்
பரிமளவு = வாசனையானது வருவதைப் போல
தோரி = காட்டி
அரணியொளகெ = நெருப்பு மறைந்திருப்பதைப் போல
தோரதலெ = கண்ணுக்குத் தெரியாமல்
இருதிஹவு = இருக்கின்றது. 
இந்தஹ ஜகன்னாதவிட்டலன = ஜகன்னாததாசரின் பிம்பரூபியான ஜகன்னாதவிட்டலனான பரமாத்மனின்
கருணபடெவ = கருணையைப் பெறவேண்டும் என்னும் விருப்பமுள்ள
முமுக்‌ஷுஜீவரு = மோட்சத்திற்கு யோக்யரான ஜீவர்கள் அனைவரும்
ப்ரதிதினவு = தினந்தோறும்
பரமபாகவதரன = பிரம்ம வாயு ஆகியோரில் துவங்கி மனுஷ்யோத்தமர் வரை, தாரதம்யத்தின்படி, இந்த சந்தியில் சொல்லப்பட்டிருக்கும் பரம பகவத் பக்தர்களை
கொண்டாடுவுது = நமஸ்காராதிகளை செய்து ஸ்தோத்திரங்களால் கொண்டாட வேண்டும். 

பொருள்:

மல்லிகை போன்ற புஷ்பங்கள் மலர்ந்தவுடன், அதன் வாசனையானது எப்படி அனைத்திடங்களிலும் பரவி, அனைவருக்கும் அது சென்று சேர்கிறதோ, அப்படி பிரம்ம வாயுகளுக்கு, அபரோக்‌ஷத்தில் பரமாத்மன் எப்போதும் காட்சியளித்துக் கொண்டேயிருக்கிறான். யாகசாலையில் அக்னியை வளர்ப்பதற்கு ஒரு அரச காஷ்டத்தை வைத்திருப்பர். அதை இன்னொரு காஷ்டத்துடன் உரசினால் நெருப்பு வரும். எனில் காஷ்டத்தில் இருக்கும் நெருப்பு நம் கண்ணிற்குத் தெரிவதில்லை. அப்படியே, ருத்ராதி தேவதைகளில் பரமாத்மன் இருந்தாலும், எப்போதும் நம் கண்ணுக்குத் தெரியாமல், தியானம் செய்யும்போது மட்டும் அபரோக்‌ஷத்தில் தன்னை காண்பித்துக் கொள்வான். ஆகையால், முக்தியோக்யர்கள் அனைவரும், தாரதம்யத்தின்படி பரம பகவத்பக்தர்களான பிரம்மாதி அனைத்து தேவதைகளுக்கும், தம்மைவிட உத்தமர்களான மனுஷ்யோத்தமர் வரை அனைவருக்கும் நமஸ்காரங்களை செலுத்தி அவர்களின் அருளைப் பெற்றால், பகவத் பிரசாதம் கிடைக்கும் என்று அறியவேண்டும். 

***


Wednesday, February 5, 2020

#12 - மங்களாசரண சந்தி

#12 - மங்களாசரண சந்தி

பாக1ஷாசன முக்ய சகல தி
வௌகசரிக3பினமிபெ ருஷிகளி
கேகசித்ததி பித்ருகளிகெ கந்த4ர்வ க்‌ஷிதிபரிகெ3 |
ஆ க1மலனாபா4தி யதிக3
நீக1கானமிசுவேனு பிடதெ3
மா களத்ரன தாசவர்க3க்கெ நமிபெனனவரத ||12

பாகஷாஸன முக்ய சகல திவௌகஸரிகெ = தேவேந்திரன் முதலான அனைத்து தேவதைகளுக்கு
ஏக சித்ததி = ஒரு மனத்துடன் புத்தியை அவர்களிடமே வைத்து
அபினமிபெ = சாஷ்டாங்க நமஸ்காரத்தை செய்து
ருஷிகளிகெ = விஸ்வாமித்ர, மரீச்யாதி ரிஷிகளுக்கு
பித்ருகளிகெ = பித்ரு கணங்களுக்கும்
கந்தர்வ = தேவ கந்தர்வ, மனுஷ்ய கந்தர்வர்களுக்கு
க்‌ஷிதிபரிகெ = ப்ரியம்வ்ரத முதலான அரசர்களுக்கு
ஆ கமலனாபாதி யதிகள = (ஸ்ரீமன் மத்வாசார்யரின் சிஷ்யரான) பத்மனாப தீர்த்தரே முதலான யதிகளுக்கு
ஆனீககெ = குழுவிற்கு
ஆனமிசுவெனு = நன்றாக வணங்குவேன்
பிடதெ = யாரையும் விடாமல்
ரமாகளத்ரன = ஸ்ரீலட்சுமிதேவியையே மனைவியாகக் கொண்ட ஸ்ரீபரமாத்மனின்
தாச வர்கக்கெ = தாச சமூகத்திற்கு
அனவரத = என்றைக்கும்
நமிபெ = வணங்குவேன்

இந்திராதி அனைத்து தேவதைகளுக்கும் நமஸ்காரம் செய்வேன். ரிஷிகளுக்கும், பித்ருகளுக்கும், கந்தர்வர்களுக்கும், அரசர்களுக்கும், பத்பனாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர் முதலான யதிஸ்ரேஷ்டர்களுக்கும், ஹரிதாசர்களான புரந்தர, விஜய முதலான தாச வர்க்கத்தவர்களுக்கும் ஒருமுகப்படுத்திய மனதுடன் வணக்கம் செலுத்துவேன். என்று தாரதம்யத்தின்படி ஸ்வோத்தமர் அனைவருக்கும், இந்த பத்யத்தில் நமஸ்காரங்களை செய்திருக்கிறார் ஸ்ரீதாசராயர். 

சிறப்புப் பொருள்:
’நாராயணம் நமஸ்க்ருத்ய’ என்னும் ஸ்லோகத்தில் சொல்லியபடி, தாரதம்யத்தின்படி ஸ்ரீமன் நாராயணனிலிருந்து ருத்ரர் வரை வணக்கங்களை சொல்லி, பிறகான இந்திராதி தேவதைகளை சொல்லி மனுஷ்யோத்தமர்களின் வரை இதில் நமஸ்காரங்களை சொல்கிறார். 

‘பாகஷாஸன முக்ய சகல திவௌகசரிகெ’ என்னும் வாக்கியத்தினால் பாகஷாசன என்றால் இந்திரன். இந்திரன் முதலான தேவதைகள் என்றால் - இந்திர காமன், அனிருத்த, ரதி, மனுகுரு, தக்‌ஷ, ஷசி, ப்ரவஹ, யம, ஷதரூபா, சந்திர, சூர்ய, வருணன் வரைக்குமான அனைத்து தேவதைகளுக்கும் வணக்கங்களை செலுத்துகிறார் என்று பொருள். 

ரிஷிகளிகெ என்று சொல்வதால் - நாரதர், ப்ருகு, அக்னி, ப்ரஸூதி, விஷ்வாமித்ர, மரீசி ஆகிய பிரம்மதேவரின் மகன்களும், புஷ்கரன் என்னும் கர்மஜதேவதையும், அஜானஜ என்னும் தேவதைகளும் என அனைவரையும் எடுத்துக் கொள்ளவேண்டும். 

அஜானஜர் என்றால் தேவகுலத்தில் பிறந்து, தத்வங்களுக்கு அபிமானியாகாமல், சோமபானத்திற்கு தகுதி பெறாமல் இருக்கும் தேவதைகள். தும்புரு முதலான முக்கிய கந்தர்வர்கள் 100 பேர், நாரதர் முதலான உசத்யர் வரைக்கும், மேலே தாரதம்யத்தில் சொல்லப்பட்டிருக்கும் ரிஷிகளை விட்டு வேறு ரிஷிகள் இவர்கள் அனைவரும் அஜானஜர் என்று அழைக்கப்படுகிறார்கள். ரிஷி என்றால் இவர்கள் அனைவருமே ஆவர். 

பித்ருகளிகெ என்றால் பித்ரு கணங்களில் சில கணங்கள் உத்தம கணங்கள் என்று சொல்லப்படுகின்றன. (இந்த தாரதம்யத்தின் மேலதிக தகவல்கள் ‘ப்ருஹத் தாரதம்ய சந்தி’யில் வருகிறது). அந்த பித்ருகளை விட்டு மிச்ச பித்ரு கணங்களை இங்கு எடுத்துக் கொள்ளவேண்டும். கந்தர்வ என்னும் சொல்லால் அஜானஜரில் சேர்ந்த தும்புரு முதலான முக்கிய கந்தர்வர்களை விட்டு மிச்ச கந்தர்வர்கள் அனைவரையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். க்‌ஷிதிபர் என்றால் ப்ரியம்வ்ரதாதி உத்தமாதிகாரிகளைத் தவிர மிச்ச அரசர்களை, மனுஷ்யோத்தமர்கள் வரை எடுத்துக் கொள்ளவேண்டும். இதுவரை சொல்லியவர்கள் அனைவருக்கும் வணக்கங்களை சொல்லி, குரு பரம்பரையை வணங்குகிறார் தாசராயர். 

‘ஆ கமலனாபாதி யதிகள நீககா நமிஸுவெனு’ என்று ஸ்ரீமதாசார்யரின் நேரடி சிஷ்யர்களான பத்பனாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், மாதவ தீர்த்தர், அக்‌ஷோப்ய தீர்த்தர் என்ற நான்கு யதிகளையும், இவரின் பரம்பரையில் வரும் டீகாராயர் (ஜயதீர்த்தர்), ஸ்ரீபாதராஜர், வியாசராஜர், வாதிராஜர், ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் ஆகிய யதிகளை வணங்குகிறார் என்று அறியவேண்டும். தமக்கு வியாசகூடத்தினவர் மேல் அபிமானம் இருக்கிறது என்பதையும், வியாசகூடத்தவரகளுக்கும், தாசகூடத்தவர்களுக்கும் வேறுபாடு இல்லை என்பதையும், தற்போது பேதங்களை சொல்பவர்கள் அஞ்ஞானிகள் என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டுமாறு, வியாசகூடத்தவர்களுக்கு முதலில் நமஸ்காரங்களை சொல்லி பிறகு தாசவர்க்கத்தவர்களுக்கு நமஸ்காரங்களை செய்கிறார். 

‘பிடதெ ரமாகளத்ரன தாசவர்கக்கெ நமிபெ நனவரத’ என்று ‘ரமாகளத்ரன’ என்று பரமாத்மன் கிருஹஸ்தாஸ்ரமியாக, ஜகத்குடும்பியாக சொல்லியாயிற்று. பகவத் தாசர்களில் பரமாத்மனுக்கு அதிக ப்ரீதி இருக்கிறது என்பதை ‘ரமாகளத்ரன’ என்று சொல்லி விளக்கியாயிற்று. ‘நாஹம்வஸாமி வைகுண்டே நயோகி ஹ்ருதயே ரவௌ | மத்பக்தா யத்ரகாயந்தி தத்ரதிஷ்டாமி நாரத’. ’ஹே நாரத ! நான் வைகுண்டத்திலோ அல்லது இதயங்களில் மட்டுமே இருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். என் பக்தர்கள் எங்கெங்கெல்லாம் பாடிக்கொண்டிருக்கிறார்களோ, அங்கு நான் எப்போதும் நிலைத்திருக்கிறேன்’ என்று பரமாத்மன் சொல்லியிருக்கிறார். இந்த பகவத் வாக்கியமானது, பரமாத்மனுக்கு தாசர்களில் இருக்கும் அன்பினை எடுத்துக் காட்டுகிறது. தாசவர்கக்கெ என்னும் சொல்லினால், புரந்தரதாசர், விஜயதாசர், பாகண்ணதாசர் என்று ஜகன்னாததாசரைவிட உத்தமர்களான தாசவர்கத்தினவருக்கு நமஸ்காரங்களை சொல்கிறார் தாசராயர். 

இப்படி முதல் சந்தியின் நோக்கத்தினை சொல்லும்போதே பார்த்த, முக்திக்கு முக்கிய காரணங்களான பஞ்சபேத, தாரதம்ய, 24 தத்வங்களை சொல்லி, தற்போது சந்தியை முடித்தவாறு, மங்கள ஸ்தோத்திரமாக தம் அந்தர்யாமியான பிம்பரூபி ஸ்ரீஜகன்னாதவிட்டல நாமக ஸ்ரீபரமாத்மனை வணங்குகிறார்.

***