ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Friday, February 14, 2020

#8 - கருணா சந்தி

#8 - கருணா சந்தி

ஜக3வனெல்லவ நிர்மிசுவ நா
ந்மொகனொளகெ3 தானித்து3 சலஹுவ
33னகேஷனொளித்து சம்ஹரிசுவனு லோகக3|
ஸ்வக3தபே43 விவர்ஜிதனு ச
ர்வக3 தானந்தெ3ய்கதே3ஹனு
3கெ33கெ3ய நாமத3லி கரெசுவ ப4குதரனு பொரெவ ||8

(ஸ்ரீஹரி) ஜகவனெல்லவ = உலகங்கள் அனைத்தையும்
நான்மொகனொளகெ = நான்முக பிரம்மனில் உள்ளே, இருந்துகொண்டு
நிர்மிஸுவ = படைப்பான்
ஸலஹுவ = தான் காப்பாற்றுவான்
ககன கேஷனொளித்து = ருத்ரதேவரில் இருந்து
லோககள = அனைத்து உலகங்களையும்
சம்ஹரிஸுவனு = அழிப்பான்
ஸ்வகதபேதவிவர்ஜிதனு = தன் ரூபங்களில் பரஸ்பரம் வேறுபாடுகள் இல்லாதவன்
சர்வக = அனைத்து இடங்களிலும் இருப்பவன்
சதானந்தைக தேஹனு = அனைத்து காலங்களிலும் ஆனந்த ஸ்வரூபம் உள்ளவன்
பகெபகெய நாமதலி = அனைத்து எழுத்துக்களாலும் அழைக்கப்படுபவன். பிரம்ம, ருத்ர, இந்திரன் முதலான பெயர்களும்

அவனையே குறிக்கின்றன. மத்ஸ்ய, கூர்ம, ராம, கிருஷ்ண என பல பெயர்களால்
கரெசுவ = அழைக்கப்படுகிறான்
பக்தரனு = தன் பக்தர்களை
பொரெவ = காப்பாற்றுகிறான்

ஸ்ரீபரமாத்மன், பிரம்மதேவருக்குள் இருந்து அனைத்து உலகங்களையும் படைக்கிறான். தானே விஷ்ணு ரூபத்தினால் அனைவரையும் காக்கிறான். ருத்ர தேவருக்குள் இருந்து அனைத்தையும் அழிக்கிறான். தன் அவதார, மூல, பிம்ப, க்ரியா ரூபங்களுக்குள்ளும், தன் தேகத்தில் இருக்கும் உறுப்புகளுக்குள்ளும் எவ்வித வேறுபாடுகளும் இல்லாதவன். அனைத்து இடங்களிலும் நிலைத்திருப்பவன். சச்சிதானந்த ஸ்வரூபன். பற்பல பெயர்களால் அழைக்கப்படுபவன். தன் பக்தர்களை பல விதங்களில் காப்பாற்றுபவன். 

பிரம்மணிஸ்தோ ஸ்ருஜத்விஷ்ணு: ஸ்தித்வா ருத்ரேத்வ பக்‌ஷயத் |
ப்ருதக் ஸ்தித்வா ஜகத்பாதி தத்பிரம்மாத்யயோ ஹரி: ||

ஸ்ரீபரமாத்மன் பிரம்மதேவரின் தேகத்தில் இருந்து படைக்கிறான். ருத்ரதேவரில் நின்று அழிக்கிறான். தான் தனியாக நின்று அனைத்தையும் காக்கிறான். இப்படி விஷ்ணுவே, பிரம்ம, ருத்ரன் என்று அழைத்துக்கொண்டு ஸ்ருஷ்ட்யாதிகளை செய்கிறான் என்று பிரம்மாண்ட புராணத்தின் வாக்கியம் சொல்கிறது. மேலும், 

விஷ்ணுரேவ ஹரிஸ்ஸாக்தாத் தாவுபௌன ஹரி: ஸ்ம்ருதௌ |
ஆவிஷ்டரூபௌ விக்ஞேஸௌ ப்ரம்மருத்ராபிதாயகௌ ||

என்னும் விஷ்ணு ரகசியத்தின் ஆதாரத்தினால் தெரிய வரும் விஷயம் என்னவெனில்: பிரம்மருத்ரரே விஷ்ணு என்று அறியக்கூடாது. விஷ்ணு நாமகனான பரமாத்மனே பிரம்ம, ருத்ரர்களில் ஒரு விசேஷ அம்சத்துடன் இருந்து, பிரம்ம, ருத்ரர் என்று அழைத்துக் கொள்கிறான் என்று நினைக்கவேண்டும். 

ஸ்வகதபேத விவர்ஜித - மகாபாரத தாத்பர்ய நிர்ணயத்தில் 

நிர்தோஷ பூர்ண குணவிக்ரக ஆத்மதந்த்ரோ நிஸ்சேதனாத்மக ஷரீர குணைஸ்சஹீன |
ஆனந்தமாத்ர கரபாத முகோதராதி; சர்வத்ர ச ஸ்வகதபேத விவர்ஜிதாத்மா ||

என்று சொல்லியிருக்கிறார். இதன் பொருள்:

ஸ்ரீஹரி, தோஷங்கள் அற்ற அனேக குணங்களை பூரணமாக உள்ள ஸ்வரூபன். ஸ்வதந்த்ரன். சேதனாத்மக சரீரம் இல்லாதவன். வெறும் ஆனந்தத்தையே கொடுக்கக்கூடிய கை, பாதம், முகம், வயிறு ஆகியவற்றைக் கொண்டவன். அனைத்து இடங்களிலும் இருக்கக்கூடிய ரூபங்களில் பேதங்கள் இல்லாதவன். தன் அங்கங்களில், நம்மைப் போல கண்களாலேயே பார்க்க வேண்டும், காதுகளாலேயே கேட்க வேண்டும் என்னும் தர்மங்கள் அவனுக்கு இல்லை. நாம் கை, கால்களினால் செய்யக்கூடிய வேலைகளை, பரமாத்மன் தன் ஒரு முடியினாலும், நகத்தினாலும் கூட செய்யத்தக்கவன். ஆகையால் ‘ரோமஸ்ச பூர்ண: நகஸ்சபூர்ண:’ ஆகிய வாக்கியங்களால் பரமாத்மனை வேதங்கள் புகழ்கின்றன. 

சர்வக - அனைத்து இடங்களிலும் நிலைத்திருப்பவன். ’அந்தர்பஹிஸ்ச தத்சர்வம் வியாப்த நாராயணாஸ்தித:’ என்னும் வேத வாக்கியத்தின்படி, உள்ளே, வெளியே, அனைத்து இடங்களிலும் என பரமாத்மன் வியாபித்திருக்கிறான். ‘ஸதானந்தைக தேஹனு’ அனைத்து காலங்களிலும் ஆனந்தத்தை மட்டுமே அனுபவிக்கும் சரீரத்தை உள்ளவன் என்று பொருள். இதற்கு ஆதாரம், பாகவத 11ம் ஸ்கந்தத்தின் தாத்பர்யத்தில் :

அனத்ருத்வம் ஹரேர் து:கானத்ருத்வா துச்யதே ஸதா | 
விஷயான்விதாபி பூர்ணத்வாத்ஸ்வரூபானந்த போகின: |
ஸுகமத்தேவஹி ஸதா ஸர்வத்ராபிதம் விபு: ||
என்று சொல்லியிருக்கிறார். 

மற்றும்:

த்வா ஸு பர்ணா சயுஜா சகாயா சமானம் வ்ருக்‌ஷம் பரிஷஸ்வஜாதே |
தயோரன்ய: பிப்பலம் ஸ்வாத்வத்வனஷ்னன்னயோ அபிஷாகதீதி ||

என்னும் ஸ்ருதியில், ஒரு மரத்தில் இரு பறவைகள் இரு கூடுகளை கட்டிக்கொண்டு வசித்துவந்தன. அதில் ஒரு பறவை அந்த மரத்தில் இருந்த சுவையான பழங்களை சாப்பிட்டுவந்தது. ஆனாலும் அது பலவீனமாக இருந்தது. மற்றொரு பறவை அந்த பழங்களை தின்னாவிட்டாலும், அது திடகாத்திரமாக இருந்தது. இந்த வாக்கியத்தில், ஜீவ, பரமாத்மனின் சிறப்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதில் ஜீவன், உலகம் என்னும் மரத்தில் இருக்கும் தேகம் என்று கூட்டில், பாவ புண்ணியங்களின் பலன்களான, சுக துக்கங்களை அனுபவித்து வாழ்கிறான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 

பரமாத்மன் பலன்களை உண்பதில்லை. அதாவது, அவனுக்கு சுக துக்கங்கள் இரண்டும் கிடையாது என்பது பொருள். ஸ்ரீமதாசார்யர் உதாரணத்துடன் சொல்லும் விஷயம் என்னவெனில்: பரமாத்மன் ‘அனத்தா’ அதாவது உண்பவனல்ல. துக்கத்தை அனுபவிப்பதில்லை ஆதலால் ‘அனத்தா’ என்று அவருக்குப் பெயர். ‘அத்தா’ என்னும் பெயரும் உண்டு. விஷய போகங்கள் இல்லை என்றாலும், ஸ்வரூபானந்தத்தை தினந்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கும் ஸ்வாமி, அனைத்து ஜீவர்களில் இருக்கும் சுகங்களை மட்டும் தினந்தோறும் அனுபவித்து வருகிறான். ‘ஸ்வாத்வத்தி’ என்னும் பதத்தினால் ஜீவன்கூட சுவையான பழங்களை மட்டுமே உண்கிறான் என்று வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவெனில்: சுவையில்லாத பதார்த்தங்களை சுவையுள்ளவையாக சிந்தித்து ஜீவன் உண்கிறான். ஆகையால், ஆனந்த ஸ்வரூபமான தேகத்தினால் கூடியிருக்கிறான் என்று அறியவேண்டும். இதுவே மேற்சொன்ன பாகவத ஸ்லோக அர்த்தம். இதையே தாசராயர் - சதானந்தைக தேஹனு என்று பாடியிருக்கிறார். 

பக்தரனு பொரெவ - அனைத்து விதங்களிலும் பக்தர்களைக் காக்கிறான். அல்லது ‘பகெபகெய நாமதலி கரெசுவ பகுதரனு’ என்று ஒரே வாக்கியமாக இதை சொல்லலாம். ராம, கிருஷ்ண, வேதவியாஸ, விட்டல, ஸ்ரீனிவாஸ, நாரசிம்ம ஆகிய பற்பல பெயர்களால் பரமாத்மனை அழைத்தவாறு, பஜனை செய்துகொண்டிருக்கும் தன் பக்தர்களை ‘பொரெவ’ அனைத்து காலங்களிலும் காப்பாற்றுவான் என்று பொருள். 

***


Thursday, February 13, 2020

#7 - கருணா சந்தி

#7 - கருணா சந்தி

பரமசத்1 புருஷார்த்த2 ரூபனு
ஹரியு லோக1க்கெ1 யெந்து பரமா
3ரதி3 சது3பாசனெய கை3வரிகித்தப1னு தன்ன |
மரெது3 தர்மார்த்தக3ள காமிஸு
வரிகெ3 நகு31தி ஷீக்ரதிந்தலி
சுரபத1னய சுயோத4னரிகித்தந்தெ கொடு3திப்ப ||7

ஹரியு = ஸ்ரீபரமாத்மன்.
லோககெ = உலகத்திற்கு.
பரம சத்புருஷார்த்த ரூபனு = அத்யந்த சுகங்களான மோக்‌ஷாதி புருஷார்த்தங்களைக் கொடுக்கக்கூடிய ஸ்வதந்த்ர ஸ்வரூபத்தைக் கொண்டவன், என்று
பரமாதரதி = மிகுந்த பக்தியுடன்
ஸதுபாசனெய = எந்தவொரு பலன்களையும் எதிர்பார்க்காமல் வெறும் பகவத்ப்ரீதிக்காகவே உபாசனைகளை
கைவரிகெ = செய்பவர்களுக்கு
தன்ன = தன்னை எப்போதும் பார்க்கக்கூடியதான உலகத்தை, அதாவது முக்தியை
இத்தபனு = கொடுக்கிறான்.
தன்ன = தன்னை
மரெது = மறந்து
தர்மார்த்தகள = தர்ம = யாகாதி தர்மங்களினால் ஆகும். அர்த்தகள = பலரூபமான சுகங்களை மட்டும்
காமிஸுவவரிகெ = விரும்புபவர்களுக்கு
அதி ஷீக்ரதிந்தலி = மிக விரைவாக
சுரபதனய சுயோதனனிகெ = சுரபதனய = இந்திரனின் மகனான அர்ஜுனனுக்கும். சுயோதனனிகெ = துரியோதனனுக்கும்
இத்தந்தெ = கொடுத்ததைப் போல
கொடுதிப்ப = கொடுப்பான்.

ஸ்ரீபரமாத்மன் ஸ்வதந்த்ரன். ரமா பிரம்மாதி சராசரர்கள் நிறைந்த உலகத்திற்கு அதிபதி. அனைத்து சேதனர்களுக்கும் தர்ம, அர்த்த, காம, மோக்‌ஷ என்னும் நான்கு புருஷார்த்தங்களைக் கொடுப்பவன். அனைத்து பிராணிகளும் அவனின் அதீனமே என்று அறிந்து, உபாசனை செய்பவர்களுக்கு மோட்சத்தைக் கொடுத்து அருள்கிறான். பரமாத்மனை மறந்து, வெறும் தர்மங்களை செய்து, அதற்கான பலன்களை விரும்புபவர்களுக்கு, அர்ஜுன துர்யோதனர்களுக்கு கொடுத்ததைப் போல, அவர்களுக்கேற்ற பலன்களை மிகவும் விரைவாகக் கொடுக்கிறான். 

சிறப்புப் பொருள்:

ததர்த்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர |
கர்மண்யேவாதிகாரஸ்தே மாபலேஷு கதாசன ||
மாகர்ம பல ஹேதுர்பூ மாதே சங்கோஸ்த்வ கர்மணி ||

என்னும் கீதா வாக்கியத்தைப் போல, பலன்களை விரும்புவதை விட்டு, கர்மங்களை செய். ஹே அர்ஜுனா! செயல்களை செய்வதற்கு மட்டுமே உனக்கு அதிகாரமே தவிர, பலன்களைப் பெறும் சுதந்திரம் இல்லை. (பலன்களைக் கொடுக்கும் அதிகாரம் பரமாத்மனுடையது மட்டுமே என்று பொருள்). ஆகையால், கர்மத்தின் பலனுக்கு நீயே அதிகாரி என்று நினைக்காதே. அப்படியெனில், கர்மங்களையே செய்யவேண்டியதில்லை என்று விடக்கூடாது - என்று ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு உபதேசிக்கிறான். இது போல, பலன்களை விரும்பாமல் கர்மங்களை செய்வதற்கு, நைஷ்கர்ம்ய என்று பெயர். இத்தகைய நிஷ்காம கர்மானுஷ்டானங்களிலிருந்தே முக்தி ஆகிறது என்பது கீதா வாக்கியத்தின் பொருள். 

ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகளின் கீதாவிவ்ருத்தி என்னும் வியாக்யானத்தில் இதன் அர்த்தத்தை, அபிப்பிராயத்தை, உபாசனா கிரமத்தை நன்கு விளக்கமாக சொல்லியிருக்கிறார். இடம் அதிகமாகிவிடும் என்பதால் அவற்றை இங்கு எழுதுவதற்கு சாத்தியமில்லை. 

பாகவத முதலாம் ஸ்கந்தத்தில் ‘நைஷ்கர்ம்யமப்யச்யுத பாவ வர்ஜிதம் நஷோபதே ஞானமலம் நிரஞ்சனம்’ நிஷ்காம கர்மானுஷ்டானங்களையே செய்துகொண்டிருந்தாலும், அதிலிருந்து கிடைத்த ஞானம் தெளிவான ஞானமாக இருந்தாலும், பரமாத்மனில் திடமான பக்தி இல்லையெனில், அந்த தெளிவான ஞானமும், நிஷ்காம கர்மமும் முக்திக்கு வழியாகாது என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையால், பக்தியில்லாமல் செய்யப்படும் செயல்கள் தக்க பலன்களைக் கொடுக்காது. பரமாத்மனை பரம பக்தியினால் உபாசனை செய்வதாலேயே முக்தி ஆகிறது என்பதை ‘பரம சத்புருஷார்த்த ரூபனு ஹரியு’ என்னும் வாக்கியத்தால் குறிப்பிடுகிறார். 

இதற்கான ஒரு அர்த்தம் மேலே சொல்லப்பட்டிருக்கிறது. இன்னொரு அர்த்தமும் இதற்கு உள்ளது. பரமசத்புருஷ = பரம பகவத் பக்தர்களுக்கு, அர்த்தரூபனு = செல்வம் கொடுப்பவன். அதாவது, பக்தர்கள் தாம் குசேலனைப் போல ஏழையாக இருந்தாலும், பரமாத்மனே நமக்கு செல்வம், அவனைவிட வேறு செல்வத்தை நாம் விரும்புவதில்லை என்பர். பாகவத 4ம் ஸ்கந்தத்தில் ‘ஹரிரதனாத்ம தனப்ரியோரஸக்ஞ:’ தன் பக்தர்களின் யோக்யதையை அறிந்த பரமாத்மன், அவர்கள் பரம ஏழையாக இருந்தாலும், தன்னையே செல்வம் என்று நினைப்பவர்கள் யாரோ - அதாவது, செல்வத்தின் மேல் அவர்களுக்கு இருக்கும் அன்பைவிட அதிகமான அன்பு தன்னிடம் வைத்து, செல்வத்தை கல், மண் ஆகியவற்றைப் போல நினைப்பார்கள் என்று அர்த்தம். பரமாத்மன் அத்தகையவர்களில் அன்பு செலுத்துவான். இதனால், பரமாத்மனை ‘அதனாத்ம தனப்ரிய’ என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறார்கள். 

அதே அர்த்தத்தையே தாசராயர் ‘ஸத்புருஷார்த்தரூப’ என்று சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் பரமாத்மன் ஸ்வதந்த்ரன். ஜீவன் அஸ்வதந்த்ரன். பரமாத்மன் துக்கங்கள் அற்றவன். ஜீவன், ஜனன மரணாதி பற்பல துக்கங்களைக் கொண்டவன் என்று இதைப் போன்ற பல்வேறு வேறுபாடுகள் பரமாத்மன் மற்றும் ஜீவர்களிடையே இருக்கிறது என்றும், ரமாபிரம்மாதிகள் அனைவரும் பரமாத்மனின் அதினத்திலேயே இருக்கின்றனர் என்பதை அறிந்து, உபாசனை செய்வதே ஸதுபாசனை. இத்தகைய ஸதுபாசனையை செய்பவரகளுக்கு இஹபரங்களில் பரமாத்மன் தன் தரிசனத்தை கொடுக்கிறான். 

முந்தைய பத்யத்தில் சொன்ன ‘தனுவ தண்டிஸி தினதினதி சாதனவ மாள்பரிகித்தபனு ஸ்வர்க்காதி போககள’ என்னும் வாக்கியத்திலும் ‘பரம சத்புருஷார்த்த ரூபனு ஹரி’ என்று உபாசனை செய்பவர்களுக்கு தன் தரிசனத்தை எப்போதும் கொடுக்கிறான் என்னும் அர்த்தத்தினாலும் அறியவேண்டிய அர்த்தம் என்னவெனில் : தேகத்தை தண்டித்து தவம் செய்வது, நித்யமான பலன்களுக்கு அல்ல. ஏனெனில், எந்த நோக்கத்திற்காக அவன் தவம் செய்கிறானோ, அந்த வரத்தைப் பெற்ற உடனேயே அந்த தேக தண்டனையை / தவத்தை நிறுத்தி, தன் விஷய போகங்களில் ஈடுபட்டுவிடுகிறான். அப்படியில்லாமல், எந்நேரமும் மனதை பரமாத்மனிடமே வைத்து, தான் ஸ்னானம் செய்வது பகவத்சேவா, எழுவது, அமர்வது, பேசுவது என அனைத்தும் பகவத் சேவை என்றே சிந்தித்து, எப்போதும் அவனை நினைத்திருப்பவர்களுக்கு நித்யமான பலன் கிடைக்கிறது. 

ஏதத்ஸம்ஸூசிதம் ப்ரம்மன் தாபத்ரய சிகித்ஸிதம் |
யதீஷ்வரே பகவதி கர்மப்ரம்மணி பாவிதம் ||
ஆமயொயஞ்ச பூதானாம் ஜாயதே யேன சுவ்ரத |
ததேவஹ்யாமயத்வர்யம் தத்புனாதி சிகித்ஸிதம் |
ஏவம் ந்ருணாம் க்ரியா யோகா: சர்வே சம்ஸ்ம்ருதி ஹேதவ: |
த ஏவாத்ம வினாஷாய கல்பந்தே கல்பிதா: பரே ||

பாகவத முதலாம் ஸ்கந்தத்தில் நாரதர் ஸ்ரீவேதவியாசரைக் குறித்து சொல்வது: ஹே பிராமணோத்தமரே! என் அனுபவத்தினால் எனக்குத் தெரிந்த விஷயம் என்னவெனில், நாம் செய்யும் அனைத்து கர்மங்களையும் பகவத் சேவையென்று நினைப்பதே நம் கஷ்டங்களுக்கான மருந்து. மனிதனைக் கொல்லக்கூடிய விஷங்களை நன்றாக சுத்தம் செய்து, மாத்திரைகளாக்கி, பெரிய நோய்களுக்கு அவற்றையே மருந்தாக மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். அதுபோலவே, தேக சுகத்திற்காக நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் நரகத்திற்கே சாதனமாகின்றன. அதே செயல்களை, பகவத்சேவை என்று நினைத்து செய்தால், சுத்தம் செய்த விஷ மருந்துகளைப் போல, பவரோகத்தை பரிகரித்து முக்தியைக் கொடுக்கவல்லதாகும். 

அது எப்படியெனில், நாம் ஸ்னானம் செய்யும்போது, தேகத்தை சுத்தம் செய்வதற்காக குளிக்கிறோம் என்று நினைக்காமல், தேகமானது பரமாத்மன் வசிக்கும் ஒரு ரதம் என்றும், அந்த ரதத்தை சுத்தம் செய்வதற்காக குளிக்கிறோம் என்று நினைத்தால், அதுவே முக்திக்கு சாதனையாகும். போலவே, தேகத்தை அலங்கரிப்பது, மக்கள் நம்மை புகழ்வதற்கு என்று நினைத்தால், அது நரக-சாதனை. பகவந்தன் அமரும் ரதமாகையால், பரமாத்மனை மகிழ்விப்பதற்காக ரதத்தை அலங்கரிக்கிறேன் என்று நினைத்தால் அது முக்தி-சாதனை. பக்‌ஷ்ய-போஜனங்களை தனக்காக செய்தால், அது நரக-சாதனை. அதே பக்‌ஷ்யாதிகளை, பரமாத்மனின் நிவேதனைக்காக என்று எண்ணி செய்தால், பரமாத்மன் மகிழ்ச்சியடைந்து அது முக்திக்கு சாதனையாகிறது. 

இப்படி, தான் செய்யும் ஒவ்வொரு செயல்களும் சுகத்திற்காக என்று நினைத்தால், அது நரகத்திற்கே சாதனையாகும். அதையே பகவத் ப்ரீத்யர்த்தமாக செய்தால், அது முக்திக்கு சாதனையாகிறது. இதுவே நாரதரின் வாக்கியத்திற்கு அர்த்தமாகும். இதற்கு உதாரணம், த்ருவன் மற்றும் பிரகலாதனுக்குமிடையே இருக்கும் வேறுபாடுதான். 

த்ருவன் ஐந்து மாதங்கள் தன் தேகத்தை தண்டித்து மிகவும் கஷ்டமான தவத்தினை செய்தான். பரமாத்மன், அவனுக்கு பிரத்யட்சம் ஆகி, 36,000 ஆண்டுகள் வரை பூமியை ஆள்வதற்கும், அதற்குப்பிறகு த்ருவ லோகத்தின் அதிபதியாகவும் நியமித்து வரமளித்தான். த்ருவஸ்தானமானது, ஸ்வர்க்க லோகத்தைவிட கீழான இடமாகும். 5 மாதங்கள் தவத்திற்குப் பிறகு பரமாத்மன் தரிசனம் அளித்து, என்ன வரம் கொடுத்தாரோ அதுவே அதற்குப் பலன். மறுபடி அவனுக்கு பகவத் தரிசனம் இல்லை. ஆனால், பிரகலாதன் இத்தகைய தேக தண்டனையினால் தவம் எதுவும் செய்யவில்லை. 

ஆஸீன: ப்ரயடன்னஸ்னன் ஷயான ப்ரபிபன் ப்ருவன் | 
நாம ஸந்தத ஏதானி கோவிந்த பரிரம்பித: ||

அமர்ந்திருக்கும்போதும், சஞ்சரிக்கும்போதும், படுத்திருக்கும்போதும், குடிக்கும்போதும், பேசும்போதும் என எப்போதும் கோவிந்தனிடம் மனதை வைத்து, மெய்மறந்து, தான் என்ன நிலையில் இருக்கிறோம் என்று தனக்கே தெரியாமல் இருந்தான். அவனுக்கு இஹத்தில் (பூமியில்) ஒரு மன்வந்தர காலத்திற்கு ஆயுளையும், அரசாட்சியையும் கொடுத்து, அதன்பிறகு, முக்தியைக் கொடுத்தான். இந்த உலகத்தில் ஒரு மன்வந்தர காலம் ஆயுளைக் கொடுத்தாலும், த்ருவனைப் போல அவனுக்கு பகவத் தரிசனம் இல்லாமல் இல்லை (அதாவது எப்போதும் இருந்தது). வாமன ரூபியான பரமாத்மனை எப்போதும் பார்த்திருந்தான். இந்த விஷயத்தில் த்ருவ, பிரகாலத இருவர் மட்டுமே இந்த உதாரணத்திற்கு பொருந்துகின்றனர் என்று நினைக்கக்கூடாது. 

த்ருவனைப் போலவே தேகத்தை தண்டித்து, பிரம்மதேவரை, ருத்ரதேவரை, விஷ்ணுவைக் குறித்து தவம் புரிந்த ராவணன், ஹிரண்யகசிபு முதலான பலர் வரங்களைப் பெற்ற கதைகளைக் கேட்டால் இந்த விஷயம் புலப்படுகிறது. மேலும், சுதபஸ் என்பவன் தேவமானத்தினால் 12,000 ஆண்டுகள் தவம் செய்து, ப்ருத்னிகர்ப்ப என்னும் புத்ரனைப் பெற்றார். அந்த மகன் பரமாத்மனின் அவதாரமே ஆகும். ஆனாலும், அவரை பஜிக்கவில்லை. இந்த தம்பதிகளே அடுத்த பிறவியில் கஸ்யப - அதிதிகளாகப் பிறந்து கடினமான பயோ-விரதத்தை செய்து வாமனரூபியான பரமாத்மனை மகனாகப் பெற்றனர். அப்போதும் அவரை அவதாரமாகப் பார்க்காமல், புத்ர பாசத்தில் இருந்துவிட்டதால், அவர்களே மறுபடி வசுதேவ தேவகியாகப் பிறந்தனர். அந்தப் பிறவியிலும் பரமாத்மனிடம் த்ருடமான பக்தி வந்தபிறகே, அவர்களுக்கு முக்தி கிடைத்தது. 

விஸ்வாமித்திரர் கடுந்தவம் புரிந்து பிரம்மரிஷி ஆனார். இத்தகைய உதாரணங்கள் பல இருக்கின்றன. நாரதர், அம்பரீஷ, பிரகலாதன் ஆகியோர் வெறும் பக்தியினாலேயே, அதாவது கடுந்தவம் முதலான தேகத்தை தண்டிக்கக்கூடிய செயல்களை செய்யாமலேயே பரமாத்மனின் தரிசனத்தைப் பெற்ற கதைகளைக் கேட்டால், இதன் அர்த்தம் மேலும் தெளிவாகப் புரிகிறது. பரிக்‌ஷித் ராஜன் வெறும் ஸ்ரவண, மனனத்தினாலேயே முக்தியை அடையவில்லையா? இவற்றையெல்லாம் உத்தேசித்தே தாசராயர், தேகத்தை தண்டித்து சாதனை செய்பவர்களுக்கு ஸ்வர்க்காதி போகங்களையும், ஹரியை சத்புருஷார்த்தன் என்று பஜிப்பவர்களுக்கு தன்னையே கொடுக்கிறான் என்றும் கூறுகிறார்.

இப்படியாக, பரமாத்மன், முக்தியைக் கொடுப்பவன் என்பதை மறந்து ‘தர்மார்த்தகளனு காமிஸுவவரிகெ’ - அதாவது, யாக தானாதி தர்மங்களை செய்பவர்களுக்கு வரும் பலன் என்ன? ஐஸ்வர்யாதி சுக, செல்வங்கள் கிடைக்குமா? அதை மட்டுமே வேண்டுபவர்களுக்கு, சிரித்தவாறு (அதாவது, குபேரனிடம் சென்று ஏழை ஒருவன் ஒரு வேளை உணவிற்கு காசு கேட்பதைப் போல, முக்தியைக் கொடுக்கக்கூடிய தன்னிடம், இப்படி தற்காலிகமான பலன்களைக் கேட்கிறானே என்று சிரித்தவாறு), மிக விரைவாக துரியோதனனுக்கு பலன்களைக் கொடுத்ததைப் போல கொடுப்பான். 

தர்மாத்தங்களைக் கேட்காமல், உன் அருளே எனக்கு வேண்டும் என்று கேட்பவர்களுக்கு, இந்திரனின் மகனான அர்ஜுனனுக்கு கொடுப்பதைப் போல கொடுப்பான் என்கிறார் தாசராயர். ‘சுரபதனய சுயோதனரிகித்தந்தெ கொடுதிப்ப’ என்கிறார். பாரதத்தில் உத்யோக பர்வத்தில் வரும் ஒரு சம்பவத்தை இது நமக்கு தெரிவிக்கிறது. அது என்னவெனில்:

பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞான வாசத்தை முடித்து, விராடராஜனின் பட்டணத்தில் அபிமன்யுவின் திருமணத்தை முடித்துக்கொண்டு, உபப்லாவ்ய பட்டணத்தில் வசித்திருந்தபோது, தம் பாகமான நிலத்தை துரியோதனன் கொடுக்கப்போவதில்லை என்றும், தமக்கும் துரியோதனாதிகளுக்கும் போர் உண்டாகப்போவது நிச்சயம் என்று அறிந்தபிறகு, அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணனை போருக்கு உதவுமாறு அழைப்பதற்காக துவாரகைக்குப் புறப்பட்டான். இதை தன் ஒற்றர்கள் மூலம் அறிந்த துரியோதனன், அர்ஜுனனுக்கு முன்னர் தானே ஸ்ரீகிருஷ்ணனைக் கண்டு அவன் உதவியைப் பெறவேண்டும் என்று நினைத்து, உடனடியாக துவாரகைக்குப் புறப்பட்டான். இந்த இருவரும் ஒரே சமயத்தில் புறப்பட்டாலும், தந்திரனனான துரியோதனன் தானே முதலில் அங்கு போய் சேரவேண்டும் என்று தன் ரதத்தை மிகவும் விரைவாக செலுத்தி துவாரகைக்கு வந்து சேர்ந்தான். இவர்கள் இருவரும் ஒரே நோக்கத்துடன் தன்னைக் காண வருகிறார்கள் என்பதை அறிந்த ஸ்ரீகிருஷ்ணன், அவர்களின் யோக்யதைக்கேற்ப பலன்களைக் கொடுப்பதற்காக, தன் மெத்தை மேல் படுத்து தூங்குவதாக காட்டிக்கொண்டான். 

முதலில் அங்கு வந்த துரியோதனன், ஸ்ரீகிருஷ்ணன் படுத்திருப்பதைக் கண்டு, தான் ராஜாதிராஜன் என்னும் கர்வத்தினால் ஸ்ரீகிருஷ்ணனின் தலைமாட்டில் இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தான். சிறிது நேரத்தில் அங்கு வந்த அர்ஜுனன், ஸ்ரீகிருஷ்ணன் படுத்திருப்பதைக் கண்டு, பக்தி மரியாதையுடன் அவன் கால்மாட்டில் நின்றுகொண்டான். இதிலிருந்து அர்ஜுன துரியோதனர்களின் யோக்யதை (தகுதி) தெரிகிறதல்லவா?. ஸ்ரீகிருஷ்ணனும் தன் தூக்கத்திலிருந்து விழிப்பதைப் போல விழித்து, தன் எதிரே நின்றிருந்த அர்ஜுனனைக் கண்டு, ‘அர்ஜுனா! எப்போது வந்தாய்?’ என்று கேட்டான். உடனடியாக துரியோதனன், ‘கிருஷ்ணா! நானும் வந்திருக்கிறேன். நாந்தான் முதலில் வந்தேன்’ என்றான். கிருஷ்ணன் ‘ஓஹோ. மிகவும் சந்தோஷம். ஆனால், நீ முதலில் வந்தாய் என்று சொல்ல வேண்டியதில்லை. நீ அமர்ந்த ஆசனத்திலிருந்தே அது தெரிகிறது. அர்ஜுனன் முதலில் வந்திருந்தால், இருந்த ஒரு ஆசனத்தில் அவன் அமர, நீ நின்றிருக்க வேண்டியிருக்கும். இதிலிருந்தே நீ முதலில் வந்திருக்கிறாய் என்று எனக்கு புரிகிறது. உங்கள் இருவரின் கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவதே என் கடமை. ஆனாலும், நான் முதலில் பார்த்தது அர்ஜுனனையே. ஆகவே, அவன் கோரிக்கையை முதலில் கேட்டுவிட்டு பிறகு உன்னிடம் வருகிறேன், துரியோதனா. சரி அர்ஜுனா, நீ இங்கு வந்த நோக்கம் என்னவென்று சொல்’. என்றான். 

அர்ஜுனன் : எங்களுக்கும் கௌரவர்களுக்கும் நடக்கப்போகும் போரில் நீ எங்களுக்கு உதவவேண்டும் என்று கேட்கவே வந்தேன். 

கிருஷ்ணன் : துரியோதனா, நீ வந்த நோக்கம் என்ன?

துரியோதனன் : நானும் அதைக் கேட்கவே வந்தேன். 

கிருஷ்ணன் : ஒரே விஷயத்தில் நீங்கள் இருவரும் என்னை சிக்க வைத்திருக்கிறீர்கள். ஆனாலும் பிரச்னையில்லை. உங்கள் இருவருக்குமே உதவுகிறேன் என்று முதலிலேயே சொல்லியிருக்கிறேன் அப்படியே செய்வேன். அர்ஜுனா! நிராயுதபாணியாக நான் ஒருவனே ஒரு பக்கத்தில் நிற்பேன். கோபிகா ஸ்த்ரீயர்களிடம் பிறந்த என் மக்களான 10 லட்சம் பேர் ஆயுதங்களை ஏந்தி ஒரு பக்கத்தில் நின்று போரிடுவர். இதில் நீ எதை விரும்புகிறாய்?

அர்ஜுனன் : நிராயுதபாணியான நீயே எனக்கு வேண்டும். 

துரியோதனன் : எனக்கு வேண்டியது சைன்யங்களே. அதனால் நான் மகிழ்ச்சியடைவேன். (மனதில்) நிராயுதபாணியான கிருஷ்ணனால் எனக்கு என்ன உதவி கிடைத்துவிடப் போகிறது. அர்ஜுனன் ஏமாந்துவிட்டான் என்று எண்ணி, சைன்யங்களுடன் அங்கிருந்து புறப்பட்டான். ஸ்ரீகிருஷ்ணனின் உதவியால் பாண்டவர்கள் அந்தப் போரினில் வென்றனர். அர்ஜுன துரியோதனர்களின் பக்தி பாவத்தை உலகிற்குத் தெரியப்படுத்தவே ஸ்ரீகிருஷ்ணன் இந்த நாடகத்தை நடத்தினான். இதே அர்த்தத்தையே தாசராயர் ‘சுரபதனய சுயோதனனகித்தந்தெ கொடுதிப்பனு’ என்றிருக்கிறார். 

***


Wednesday, February 12, 2020

#6 - கருணா சந்தி

#6 - கருணா சந்தி

மனதொ3ளகெ3 தானித்து3 மனவெ
ந்தெ3னிஸிகொம்பனு மனத வ்ருத்திக3
ளனுசரிஸி போ433ளனீவனு த்ரிவித4 சேத1னக்கெ |
மனவனித்தரெ த1ன்னனீவனு
1னுவ த3ண்டிஸி தி3னதினதி3 சா
4னவ மாள்பரிகித்தபனு ஸ்வர்க்காதி3 போ433||6

மனதொளகெ = மனதின் உள்ளே
தானு = ஸ்ரீபரமாத்மன்
இப்ப = இருக்கிறான் (ஆகையால்)
மனவெந்து = மனம் என்று
எனிஸிகொம்பனு = அழைத்துக் கொள்கிறான்
த்ரிவித சேதனக்கெ = சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்று வித ஜீவராசிகளுக்கு
மனத வ்ருத்திகளனுஸரிஸி = அவரவர்களின் யோக்யதைக்கேற்ப இருக்கும் மனோவ்ருத்தியை அனுசரித்து
போகங்கள = சுக, துக்க, சுகதுக்க என்னும் மூன்று வித அனுபவங்களையும்
ஈவனு = கொடுக்கிறான்
மனவனு = மனதினை
இத்தரெ = கொடுத்தால் (பரமாத்மனிடம் மனதை வைத்தால்)
தன்னனு = தன் ரூபத்தையே
ஈவனு = கொடுக்கிறான் (காட்டுகிறான்)
தனுவ = சரீரத்தை
தண்டிஸி = சாந்திராயணாதி விரதங்களினால் தண்டித்து
தினதினதி = தினந்தோறும்
சாதனவ மாள்பரிகெ = சாதனையை செய்பவர்களுக்கு
ஸ்வர்க்காதி போககள = ஸ்வர்க்காதி போகங்களை 
இத்தபனு = கொடுக்கிறான். 

பொருள்:
ஸ்ரீபரமாத்மன், அனைவரின் மனங்களிலும் இருந்து, மனம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறான். சாத்விக, ராஜஸ, தாமஸ என்னும் மூன்றுவித ஜீவராசிகளுக்கு அவரவர்களின் தகுதிக்கேற்ப மனதைக் கொடுத்து, கர்மங்களை செய்வித்து, பலன்களைக் கொடுக்கிறான். மனதினை ஒருமுகப்படுத்தி பரமாத்மனில் நிலைநிறுத்தி பஜிப்பவர்களுக்கு தன் ரூபத்தை காட்டுகிறான். உடலை வருத்தி, விரதங்களை செய்பவர்களுக்கு ஸ்வர்க்கத்தை மட்டுமே கொடுக்கிறான். ஆகையால் மனதினை பரமாத்மனில் வைத்து பஜிப்பவர்களுக்கு மட்டும், பகவந்தனின் பரமானுக்கிரகம் ஆகிறது என்பதே இந்த பத்யத்தின் பொருள். 

’மனதொளகெ தானித்து மனவெந்தெனிஸி கொம்பனு’ பாகவத 3ம் ஸ்கந்தத்தில் ‘மனோமயம் தேவமயம் விகார்யம்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. மனோமயம் என்றால் மனதில் நிறைந்திருப்பவன் என்று பொருள். அதாவது, மனதினுள் இருந்து, அதே பெயரில் அழைக்கப்படுபவன். அதே ஸ்லோகத்தின் பாகவத தாத்பர்யத்தில் 

மனஸ்திதோ ஹரிர்நித்யம் சர்வதேவேஷு சம்ஸ்தித: | 
தேவ ப்ரதானர்கா லோர்கா கரோத்யனுகத: சதேதிவாராஹே ||

ஸ்ரீஹரி மனதில் இருந்து மனோநியாமகனாகி, அனைத்து தேவதைகளிலும் இருந்து, தேவதைகளை முன்னிறுத்தி அனைத்து மக்களின் மூலமாக காரியங்களை செய்ய வைக்கிறான். இதற்கு ஆதாரமாக வராக புராணத்து வாக்கியம் ஒன்று இருக்கிறது. 

தத்தத்வஸ்துஷு ஸர்வேஷு தத்ததாகாரத: ஸ்தித: |
தத்தத்ஷப்தைஸ்ச பகவானோச்யதே நிஜஷக்தித: ||

ஸ்ரீபரமாத்மன் ஒவ்வொரு பொருட்களிலும் இருந்து அதன் வடிவத்தைப் பெற்று, அந்தந்த பெயரில் அழைக்கப்படுகிறான். அதாவது குடத்தில் குடமாக இருக்கிறான். படத்தில் படமாக இருந்து அப்படியே அழைக்கப்படுகிறான். ‘ஸர்வநாமா சர்வகர்மா’ என்னும் ஸ்ருதி வாக்கியத்தை அனுசரித்து, அனைத்து பெயர்களும் பரமாத்மனுடையதே ஆகியிருக்கின்றன. மனங்களில் மனோ நியாமகனாக இருப்பதால், அவனுக்கு மனம் என்று பெயர் வந்தது. 

வர்ணஸ்தோ வர்ண நாமாஸௌஸ்வரஸ்த: ஸ்வர: நாமக |
மனஸ்தஸ்சமனோ நாமா தன்னாமா சக்‌ஷுராதிக: ||
(பாகவதம் 11ம் ஸ்கந்தம்)

இந்த ஆதாரத்தின்படி மேற்சொன்ன அர்த்தம் நிரூபணமாகிறது. இதற்கு பரமாத்மனின் பரம சாமர்த்தியமே காரணம். ‘மனத மன: ததாதீதி மனத:’ அதாவது, மூன்றுவித ஜீவர்களின் கர்மங்களை அனுசரித்து மனதைக் கொடுப்பவனாகையால், மனத - மனதைக் கொடுக்கும் பரமாத்மன் என்று பொருள். சாத்விக, ராஜஸ, தாமச ஜீவிகளுக்கு அவரவரகளின் யோக்யதைக்கேற்ப, மனதைக் கொடுத்து, அதற்கேற்ப பலன்களைக் கொடுப்பவன். இதிலிருந்து அனைவரின் மனதிற்கும் காரணம் பரமாத்மனே என்பது சித்தமாகிறது. இதிலிருந்து அனைத்து இந்திரியங்களின் செயல்களும் பரமாத்மனாலேயே ஆகின்றன என்றும் சொல்லவேண்டும். அப்படியெனில், தத்வாபிமானி தேவதைகளின் வேலை என்ன? 

தத்வாபிமானி தேவதைகள் இந்திரியங்களை வழிநடத்துகின்றன என்று பல ஆதாரங்கள் சொல்கின்றன. ஆகையாலேயே, நாம் தினமும் காலையில் எழுந்தவுடன் 

நமோஸ்து தாத்விகாதேவா: விஷ்ணு பக்தி பராயணா: |
தர்ம மார்க்கெ ப்ரேரயந்து பவந்த: சர்வ ஏவஹி: ||

’ஹே விஷ்ணு பக்தர்களான தத்வாபிமானி தேவதைகளே! உங்களை வணங்குகிறேன். நீங்கள் அனைவரும் என் இந்திரியங்களை அதர்ம வழியில் செல்லவிடாமல், தர்மத்தின் வழியிலேயே நிறுத்துங்கள்’ என்று பிரார்த்திக்க வேண்டும் என்று ஸ்ம்ருதி வாக்கியம் இருக்கிறது மற்றும் 

ஆத்மனோ பஜனே வ்ருத்திமுத்தாப்ய பலதாஸுரா: |
உத்தமானாம் ஜனானாந்து நிக்ருஷ்டானாம் நிபர்யய: ||
(பாகவத 11ம் ஸ்கந்தம்)

உத்தம ஜீவர்களின் நலனுக்காக தேவதைகள் பரமாத்மனை சர்வோத்தமன் என்று அறிந்து பஜனை செய்வதுடன், தாரதம்யத்தின் வழி தம்மை வணங்குமாறும் வேண்டி, கர்மங்களை செய்வித்து, பலன்களைக் கொடுக்கின்றனர். அயோக்யர்களுக்கு இதற்கு எதிர்ப்பதமாக, அதாவது, பரமாத்மனிடமும் தம்மிடமும் த்வேஷ புத்தியை உண்டாக்கி, அதற்குத் தக்க பலன்களையே கொடுக்கின்றனர் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதிலிருந்து, தத்வாபிமானி தேவதைகளுக்கு நற்காரியங்களில் புத்தியை செலுத்தக்கூடிய ஸ்வாதந்த்ர்யம் இருக்கிறது என்பதை அறியலாம். 

இப்படியிருக்கையில், தாசராயரின் வியாக்யானமும், அதற்கு அவர் கொடுத்திருக்கும் ஆதாரங்களையும் பார்த்தால், மேற்சொன்னதற்கு எதிர்ப்பதமாக இருப்பதைக் காணலாம். இதற்கு என்ன பரிகாரம் எனில்:

மனதிற்கும், பிற இந்திரியங்களுக்கும், தத்வாபிமானி தேவதைகளே வழி நடத்துபவர்களாக இருந்தாலும், அந்த தத்வாபிமானி தேவதைகளிலும், இந்திரியங்களிலும், அந்தந்த ரூபங்களில் இருந்து பரமாத்மனே முக்கிய ப்ரேரகனாக (வழி நடத்துபவனாக) இருக்கிறான். ஸ்ரீபரமாத்மன் தத்வாபிமானி தேவதைகளில் இருந்து வழி நடத்துவதால், தத்வாபிமானி தேவதைகளே ப்ரேரகர்கள் என்று பெயர் பெற்றனர். 

ஒரு அரசாட்சியில், அதிகாரிகளின் மேற்பார்வையில் மக்கள் எப்படி செயல்களை செய்கின்றனரோ, அது அரசனின் ஆணையில்லாமல் நடக்காது. அப்படியே, தத்வாபிமானி தேவதைகளுக்கு ஸ்வதந்த்ரமாக வழி நடத்தும் திறன் இல்லையாகையால், பரமாத்மனே ஸ்வதந்த்ர ப்ரேரகன் என்று அறியவேண்டும். த்ரிவித ஜீவர்கள் அவரவர்களின் தகுதிக்கேற்ப வழி நடத்தப்படுகின்றனர். பக்தர்களில் உத்தமர், மத்யமர், அதமர் என்று மூன்று விதங்கள் உண்டு. உத்தம பக்தர் என்றால்: 

பூர்ணத்வாதாத்மஷப்தோக்த: கஸ்சித்ஸர்வ நரோத்தம |
ஸோபி நாராயணோ நான்ய: ஸ ச சர்வேஷு சம்ஸ்தித: ||
தத்வஷா இதரேஸர்வே ஸ்ரீ பிரம்மேஷ புரஸ்ஸரா: |
ஸஏவது ஸ்வபக்தேஷு ஸ்தித்வானுக்ரஹ காரக: ||
அஞ்ஞேஷ்வ ஞானயந்தாச த்விபத்ஸு த்வேஷகாரக: |
அதஸ்தத் ப்ரேரணா தேவ ப்ரேமாத்யாம மஜக்ஞரே ||
இதி பஷ்யதியோ புத்த்யாஸது பாகவதோத்தம: ||
(பாகவத 11ம் ஸ்கந்தம்)

இதன் பொருள்:
பரமாத்மன் பூர்ணன் ஆகையால், அவனுக்கு ஆத்மன் என்று பெயர். அவன் அனைத்து பிராணிகளைவிட உத்தமன். அவனே ஸ்ரீமன் நாராயணன். அவன் அனைத்து பிராணிகளிலும் நிலைத்திருக்கிறான். ரமா பிரம்மாதிகள் அனைவரும் அவன் வசமே இருக்கின்றனர். அவனே தன் பக்தர்களுக்கு அருள் புரிபவன். அஞ்ஞானிகளுக்கு அஞ்ஞானத்தைக் கொடுப்பவன். த்வேஷிகளில் த்வேஷத்தை உண்டுபண்ணுபவன் அவனே. மேலும் அவனது வழி நடத்துவதன் பேரிலேயே, ஒருவருக்கு அவன் மேல் அபிமானம் வருகிறது என்று யார் அறிந்திருக்கிறார்களோ அவனே பாகவதோத்தமன்.

பாற்கடலில் வசிப்பவனான பரமாத்மன் சர்வோத்தமன் என்று அறிந்து அவனில் அன்பு வைத்து, அவன் பக்தர்களிடம் நட்பு பாராட்டுவர். பரமாத்மனின் ஸ்வரூபத்தை அறியாத மக்களிடம் - கருணை, பகவத் விஷயங்களில் ஸ்ரத்தை என இவை அனைத்தும் இருந்தாலும், உலகம் அனைத்தும் பகவத் அதீனம் என்பதை அறியாமல் இருப்பவன் மத்யம பக்தன். அதம பக்தன் என்றால்: பிரதிமைகளில் மட்டுமே பகவந்தன் இருக்கிறான் என்று அறிந்து, பிற அனைத்து இடங்களிலும் அவனே இருக்கிறான் என்பதை அறியாமலும், அவனின் பக்தர்களில் தாரதம்யத்தை அறியாமல் இருப்பதும், தானே சிறந்த பக்தன் என்று அவன் பக்தர்களை புறக்கணித்தலும், அல்லது, பரமாத்மனின் முக்கிய பக்தர்களை நினைக்காமல் அவர்களை எதிர்ப்பதும், பிரம்மாதிகளை மனிதர்களைவிட கொஞ்சம் உயர்ந்தவர்களாக இருக்கலாம் என்று அறிதலும், விஷ்ணுகூட நம்மைவிட கொஞ்சம் உத்தமராக இருக்கலாம் என்று அறிதலும் உள்ளவனே அதம பக்தன். 

இவரது பக்திக்கு உத்தமரான தேவதைகளின் விருப்பப்படி நரகவாசம் கிடைக்கிறது. மத்யம பக்தர் நரகத்திற்குப் போவதில்லை. ஸ்வரக்க பலன்களையே பெறுகின்றனர். சில காலம் கழித்து, மனிதனாகப் பிறந்து சுகத்தை அனுபவிக்கிறான். யார் பாகவதோத்தமனோ அவனே உத்தமமான முக்தியைப் பெறுகிறான். உத்தம பாகவதர் அனைவரும் சாத்விகராகவே இருப்பர். மத்யம பக்தரே ராஜசர். அதம பக்தர்களை தாமச ராஜஸர் என்று அறியலாம். அது ஏனென்றால்: பிரம்மாதி தேவதைகளை புறக்கணிப்பதால். அது மிகவும் பாவமான செயலாகும். இத்தகையவர்கள் ஒருவேளை பரமாத்மனிடம் பக்தி செய்தாலும், அந்த பக்தியை பரமாத்மனே அழித்துவிடுவான். இப்படியாக பரமாத்மனிடமே த்வேஷத்தைக் கொண்டு, இறுதியாக தமஸ்ஸிற்குப் போகும் நிலை வந்துவிடும். ஆகையால், தேவதைகளை தாரதம்யத்திற்கேற்ப அறிந்து பூஜிக்கவேண்டும். 

தாமசர்கள்? அவரே தமோயோக்யர் என்று பெயர் பெற்றவர்கள். அவர்களின் லட்சணம் எவை? பரமாத்மனுக்கும் தமக்கும் பேதம் இல்லையென்றும், தாமே அவன் என்றும் உபாசனை செய்வர். இவர்களின் நட்பைக்கூட விரும்பக்கூடாது. இவர்களின் நண்பர்களும் தமஸ்ஸிற்கே போவார்கள். பாகவத ஐந்தாம் ஸ்கந்தத்தில் ‘தமோத்வாரம் யோஷிதாம் ஸங்கி ஸங்கம்’ - அதாவது, ‘ஸ்த்ரி’களின் சேர்பவர்களின் நட்பே தமஸ்ஸிற்குக் காரணம் என்று அர்த்தம். மேலும் 11ம் ஸ்கந்தத்தில் ‘ஸ்த்ரி சங்க சங்கினாம் சங்க த்வாக்ச தூரத ஆத்மர்வா’ - பெண்களுடன் சேர்பவர்களின் நட்பைக் கொண்டவர்களை விலக்கவேண்டும். இதனால் சாமான்யரான கிருஹஸ்தர்களின் நட்பையே விடவேண்டுமா என்ற சந்தேகம் வரலாம். அல்லது, பிற பெண்களுடன் சேர்பவர்களின் நட்பை விடவேண்டும் என்று மட்டும் அர்த்தம் செய்யலாம். ஆனால், அதுகூட தவறான அர்த்தத்தையே தருகிறது. ஏனெனில், சாமான்யர்களான பர-ஸ்த்ரி-சங்கத்தினால் சில காலம் நரகவாசம் ஆகுமே தவிர, தமஸ் வருவதில்லை. இப்படியிருக்கையில், ஸ்த்ரி சங்கம் வைத்திருப்பவர்களின் நட்பை தமஸ்ஸிற்கான காரணம் என்று சொன்னால், அது சித்தாந்தத்திற்கு எதிராகிறது. 

இதற்கு ஸ்ரீமதாசார்யர், தாத்பர்யத்தில் விளக்கம் அளித்திருக்கிறார். 11ம் ஸ்கந்தத்தின் ‘ஸ்த்ரி சங்க சங்கினாம்’ என்னும் ஸ்லோகத்தின் தாத்பர்யத்தில் ‘சேஷவேத்யன்யதா புத்தி: ஸ்யைவ ஸ்த்ரி பரிகீர்த்திதா’ - பரமாத்மனிடம் பக்தி இல்லாமை. அதாவது, உண்மையான விஷயங்களான, பரமாத்மன் ஸ்வதந்த்ரன், நான் அஸ்வதந்த்ரன். அனாதி காலத்திலிருந்து பரமாத்மனுக்கும் ஜீவனுக்கும் பேதம் இருக்கிறது ஆகியவற்றிற்கு எதிராக, நானே பரமாத்மன் என்று அ-பேத சிந்தனை செய்யும் புத்திக்கு ‘ஸ்த்ரீ’ என்று பெயர். இந்த புத்தி யாருக்கு இருக்கிறதோ, அவனே ‘ஸ்த்ரீ’ சங்கம் அடைந்தவன். அவனது நட்பு தமஸ்ஸிற்கு வழியாகும். இப்படி, ஸ்த்ரி சங்கத்தின் நட்பிற்கு தமஸ் என்று சொன்னபிறகு, ஸ்த்ரி சங்கத்திற்கு தமஸ் என்று தனியாக சொல்லவேண்டுமா? பர-ஸ்த்ரி சங்கத்திற்கு தமஸ் இல்லை என்றபோதிலும், 'ஸ்த்ரி’ சொல்லுக்கு புத்தி என்று ஒரு அர்த்தமும் இருக்கிறது என்று மத்வாசார்யர் சொல்லியிருக்கிறார். ஆசார்யர், பர-ஸ்த்ரி சங்கத்திற்கு நரகம்தான் பலனே தவிர, தமஸ் ஆவதில்லை என்று எந்த ஆதாரத்தின் பேரில் சொல்லியிருக்கிறார் என்றால், ஆசார்யர், தர்ம தத்வங்களில் இருக்கும் ஆதாரங்களை உதாரணம் தருகிறார். அது என்னவெனில்:

பரதாரத்ருஷிப்ரோக்தா க்‌ஷுத்ரபாதக சங்ஞிதா |
உபபாதகம் தட்கதிஸ்சவர்ண பாஹ்யேஷு பாதகம் ||
மஹாபாதக சஞ்ஞந்து பித்ராதேர்தார தக்‌ஷணம்|
தாரத்ருஷ்டி: ஸ்வோத்தமானாம் மானுஷாணாம் ஸ்வபாவத: ||
ஸமஹா பாதகம்ப்ரோக்‌ஷம் தத்கதி: சுமஹத்தர: |
ரிஷிதாரேஷு மனஸோ கதிரேவததோதிகா ||
தேவதாராபி காமானாம் சங்கி சங்கஸ்ததோதிக: |
கிமுவிஷ்ணோஸ்ததோ யோஷித்ஸங்கஸ்யவ்யத்யயஸ்திதே: ||
ந சமம் பாதகம்க்வாபி நஹிஸ்வ ஸ்த்ர்யபிகாமின: |
அவஞ்ஞதா மாதவாதேஸ்த ஸ்மாத்தந்தூரத ஸ்த்யஜேத் ||
மானஷோஷுது து:கித்வம் க்‌ஷுத்ரபாதக ஜங்கலம் |
உபபாதக தஸ்சாபி நரகம் யுகமாத்ரகம் |
சதுர்யுகாவஸானந்து பாதகஸ்ய பலம் ஸ்ம்ருதம் ||
மஹாபாதக ஜன்யஞ்ச கல்பாவதி ஸமீரிதம் |
சுமஹாபாத காஸ்சாபியாவத்பிரம்ம லயோபவேத் ||
தத்பராணாம் பாதகானாம் பலமந்தம் தம: ஸ்ம்ருதம் |
அதோதோது:க்க மதுலம் விஷ்ணு தாராபிமர்ஷனம் |
வராதபிஹி தாராணாம் தக்‌ஷணம் கோப காரணம் |
தஸ்மாத்தேய: ஸதாவந்த்யா அக்னிவன்னாபி காமத ||

இந்த வாக்கியங்களினால் நரக பலன் கிடைக்கக்கூடிய பாவங்கள் எவை? தமஸ் கிடைக்கக்கூடிய மகாபாவங்கள் எவை என்பதை விவரிக்கிறார். 

பர-ஸ்த்ரியரை சங்கம் செய்யவேண்டும் என்னும் சிந்தனையுடன் பார்க்கும் செயல் ‘க்‌ஷுத்ரபாதகம்’ என்று அழைக்கப்படுகிறது. அந்த சங்கத்தை செய்த பாவம் உபபாதகம். நான்கு வர்ணத்தவர்களை தவிர மற்ற, ம்லேச்ச, சாண்டால ஆகிய ஸ்த்ரிகளை சங்கமித்தால் அது பாதகம் என்று அழைக்கப்படுகிறது. தந்தை போன்றவர்கள் சங்கமித்த பெண்களை தான் சங்கமித்தால் அதற்கு மஹாபாதகம் என்று பெயர். தன்னைவிட உத்தமரானவரின் மனைவியை விரும்பி பார்ப்பது மஹாபாதகம் எனப்படுகிறது. அவர்களை சங்கமிப்பது அதைவிட கொடிய பாவம் ஆகும். அதைவிட ரிஷி மனைவிகளிடம் மனம் வைப்பது பெரிய பாவம் ஆகும். அதைவிட பெரிய பாவம், தேவதா ஸ்த்ரியர்களை விரும்புவது மற்றும் அவர்களிடம் நட்பு பாராட்டுவது. இதைவிட, பரமாத்மனின் மனைவியான லட்சுமிபதி தானே ஆவேன் என்பவனின் நட்பு அனைத்தையும்விட கொடிய பாவமாகும். இதற்கு சமமான பாவம் உலகத்தில் இல்லவேயில்லை. அதற்காகவே, ’ஸ்த்ரி’ என்பதற்கு தவறான ஞானம் என்று அர்த்தம் செய்தார். அப்படியில்லையெனில், சொந்த ஸ்த்ரியை சங்கமம் செய்தால்கூட தமஸ் கிடைக்கிறது என்று சொல்லவேண்டும் என்று, பல ஆதாரங்களின்படி விவரித்திருக்கிறார். மேலும் இந்த பாவங்களின் பலன்களை தாரதம்யத்தின்படி விளக்குகிறார். 

க்‌ஷுத்ர பாதகத்தின் பலன், மனிதப்பிறவியில் சில காலம் துக்கங்களை அனுபவிப்பதாகும். மேலும் பல ஆண்டுகளுக்கு நரகவாசம் அனுபவிப்பதாகும். உபபாதகத்திற்கு ஒரு யுகம் வரைக்கும் நரகவாசமே பலன். பாதகத்திற்கு நான்கு யுகங்கள் வரைக்கும் நரகவாசம். மஹாபாதகத்திற்கு பிரம்மதேவரின் ஒரு தின கல்பத்தின் வரைக்கும் நரகவாசம் என்று அறியவேண்டும். சுமஹாபாதகத்தின் பலன் ஒரு பிரம்மகல்பத்தின் வரைக்கும் நரகம். இதையும்விட அதிகமான பாதகங்களுக்கே மறுபடி திரும்பமுடியாத அந்தந்தமஸ் ஆகும். ஆகையால், இவற்றைவிட குறைந்த தவறுகளுக்கு தமஸ் இல்லை என்று நிரூபணம் ஆகிறது. மேலும் ஐந்தாம் ஸ்கந்தத்தில் ‘தமோ த்வாரம் யோஷிதாம் சங்கி சங்கம்’ - ஸ்த்ரி சங்கத்திற்கு தமஸ் சாதனையென்று சொல்லியிருப்பதால், ஸ்த்ரி என்றால் தவறான புத்தி என்று அறியவேண்டும். 

பாவங்கள் அதிகரிக்க, அதற்கேற்ப துக்கங்களும் அதிகரிக்கும். நானே பரமாத்மன் என்று சொன்னால், லட்சுமிக்கு நானே கணவன் என்று சொன்னது போல ஆகிறதல்லவா? உலகத்தில் ‘உன் மனைவி’ என்று சொன்னால் எவ்வளவு கோபம் வருமோ, ‘உன்னை கொல்வேன்’ என்று சொன்னால்கூட அவ்வளவு வருவதில்லை. ஆகையால், இது அனைத்தையும்விட அதிகமான பாவம். ஆகையாலேயே, இத்தகையவரின் நட்பும்கூட தமஸ்ஸிற்கு வழி என்று அறியவேண்டும். இதுவே பாகவத தாத்பர்யத்தின் ஸ்லோக அர்த்தம். 

இப்படியாக பரமாத்மன், ஜீவனின் யோக்யதையை, செயல்களை அறிந்து, அவன் மனதினை வழிநடத்தி, அவனில் இருந்து, செயல்களை செய்து, செய்வித்து, மூன்றுவித ஜீவர்களுக்கு அவரவர்களின் செயல்களுக்கேற்ப பலன்களைக் கொடுக்கிறான். ஜீவன் எப்படி அனாதியோ, அவனது கர்மங்களும் அனாதியே. எப்படி மாம்பழத்தில் இனிப்பும், வேப்பங்காயில் கசப்பும் தாமாகவே இருக்கின்றதோ, அப்படியே, சாத்விகர், ராஜஸர், தாமஸர் என்னும் த்ரிவித ஜீவர்களும் அனாதியானவர்கள். ஆகையால், அவரவர்களின் தகுதிக்கேற்ப அவர்கள் செய்யும் பக்தி, த்வேஷங்களுக்கு, முக்தி, தமஸ் ஆகியவற்றைக் கொடுக்கக்கூடிய குலத்திலேயே அவர்களை பிறக்கவைத்து அதற்கேற்பவே மனதினையும் கொடுத்து, செயல்களை செய்வித்து, முக்தியையோ, மிஸ்ர-லோகத்தையோ, தமஸ்ஸினையோ கொடுக்கிறார். 

செயல்களுக்கேற்ப பலன்களைக் கொடுப்பதால், பரமாத்மனுக்கு வைஷம்ய, நைர்குண்ய ஆகிய தோஷங்கள் சேர்வதில்லை என்று அறியவேண்டும். ‘மனவனித்தரெ தன்னவீவனு’. பாகவத 10ம் ஸ்கந்தத்தில், கோபிகா ஸ்த்ரியர், ஸ்ரீகிருஷ்ணனின் அங்க சங்கத்தினால் திருப்தியடைய, பரமாத்மன் அவர்களுடைய கர்வத்தை அடக்க, அவர்களின் கண்களிலிருந்து மறைந்தான். 

அப்போது கோபியர்கள் வனத்தில் எங்கு தேடினாலும் ஸ்ரீகிருஷ்ணன் கிடைக்கவில்லை. பிறகு அவர்கள் தத்தம் செயல்களை விட்டுவிட்டு, பரமாத்மனின் பாதாரவிந்தங்களிலேயே மனதை வைத்து, அந்த கிருஷ்ணனின் விஷயங்களைப் பற்றியே பேசியவாறு, அது சம்பந்தமான செயல்களையே செய்தவாறு, தம் உயிர்களை அவனிடம் ஒப்படைத்து, அவனின் குணங்களையே பாடியவாறு, வீடுகளைத் துறந்து, பைத்தியங்களைப் போல, தம் தேகங்களையே மறந்து பரமாத்மனை துதிக்க, பரமாத்மன் பிரத்யட்சமானான். எனில், அவர்களுக்கு தன்னையே கொடுத்தான். இஹத்தில், ஆலிங்கனங்களை செய்து அவர்களுக்கு தன்னையே கொடுத்தான். பரத்தில், தன் உலகத்தையே அவர்களுக்குக் கொடுத்தான். இதே கோபியர்களுக்கு, பரமாத்மன் தன்னை உபாசனை செய்யும் கிரமத்தை உபதேசிக்கிறான். 

யதா அதனோலப்ததனே வினஷ்டே தச்சிந்தயான்யன்னிப்ருதன்னவேத |
ஏவம் மதார்த்தார்பித லோகவேத ஸ்வானாம்ஹி வ்யோமய்யனு வ்யத்தயோ பலா: ||

ஹே கோபிகா ஸ்த்ரியர்களே. எப்படி ஒரு ஏழைக்கு செல்வம் கிடைத்து அது தொலைந்தும் போனால், அவன் எந்தவொரு வேலையும் செய்யாமல், அதைப் பற்றியே சிந்தித்து அமர்ந்திருப்பானோ, அதைப்போல அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்த உங்கள் மனது வேறைதையும் பற்றி சிந்திக்காது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். ஆகையாலேயே தாசராயரும் ‘மனவனித்தரெ தன்னனீவனு’ என்று சொல்லியிருக்கிறார். 

தனுவ தண்டிஸி தினதினதி சாதனவ மாள்பரிகித்தபனு ஸ்வர்க்கதி லோககள:

நற்பலன்களுக்காக மக்கள் உபவாசம், சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கும் விரத நியமங்கள், யாக தானங்களை தங்கள் உடலை வருத்தி சாதனைகளை செய்தால், அவர்களுக்கு ஸ்வர்க்காதி லோகங்களைக் கொடுக்கிறான். அவர்களின் யோக்யதையும் அவ்வளவே. அவர்களின் மனது பரமாத்மனின் த்ருட பக்தியினால் நிற்பதில்லை. இதற்கு ஒரு உதாரணம் கொடுக்கலாம். பாகவத 10ம் ஸ்கந்தம். ஸ்ரீகிருஷ்ணன் தன் சக இடையர்களுடன் ஒரு நாள் மாடுகளை மேய்த்தவாறு, கோகுலத்தை விட்டு பல தூரம் வந்துவிட்டிருந்தான். அனைவரும் சரியான பசி. ‘கிருஷ்ணா! கிருஷ்ணா! எங்களுக்கு பசி அதிகரித்துக் கொண்டே போகிறது. எங்களுக்கு சாப்பிடுவதற்கு ஏதாவது ஏற்பாடு செய்’ என்றனர். ‘ஹே கோபாலகர்களே. இங்கு கொஞ்சம் தூரத்தில் சில பிராமணர்கள் ஒரு யாகத்தை செய்கின்றனர். அவர்களிடம் போய், நான் இங்கு வந்திருக்கிறேன் என்று சொல்லி, அன்னம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றான். 

க்‌ஷுத்ரா ஷாபூரி கர்மாண: பாலிஷா வ்ருத்தமானின: |
தத்பிரம்மபரமம் ஸாக்‌ஷாத் பகவந்த மதோக்‌ஷஜம் ||
மனுஷ்யா புத்யாதுஷ்ப்ரக்ஞா மர்த்யாத்மனோ நஜக்ஞரே ||

அப்படியே அந்த சிறுவர்களும் போய் உணவைக் கேட்க, அல்பமான ஆசையுள்ளவர்களாகவும், மிகவும் கஷ்டமான செயல்களை செய்பவர்களாகவும், சிறுபுத்தி உள்ளவர்களாகவும், தாமே பெரியவர்கள் என்னும் சிந்தனையில் அந்த பிராமணர்கள் இருந்ததினாலும், அந்த பரபிரம்ம ஸ்வரூபனான ஸ்ரீகிருஷ்ணனை சாதாரண மனிதன் என்று எண்ணி, அவர்களுக்கு உணவைக் கொடுக்க மறுத்தனர். வருத்தத்துடன் திரும்பி வந்த சிறுவர்கள், ஸ்ரீகிருஷ்ணனிடம் அந்தக் கதையைக் கூற, ஸ்ரீகிருஷ்ணனோ ‘நன்று. நீங்கள் மறுபடி அங்கு போய், அந்த பிராமணர்களின் மனைவிகளிடம் நான் வந்திருப்பதாகச் சொல்லி, உணவைக் கேளுங்கள்’ என்றான். அப்படியே அந்த சிறுவர்களும் அந்த பிராமணர்களின் மனைவிகளிடம் உணவைக் கேட்டனர். 

ஸ்ருத்வாச்யுத முபாயாந்தம் நித்யம் தத்தர்ஷனோத்ஸுகா: |
தத்கர்த்தக்‌ஷிப்த மனஸோ பபூவுர்ஜாத ஸம்ப்ரமா: ||
சதுர்வீதம் பஹுகுண மன்னமாதாய பாஜனை: |
அபிஸஸ்ரு: ப்ரியம் சர்வா: சமுத்ரமிவனிம்மகா: ||
நிஷித்யமானா: பதிபிர்ப்ராத்ருபிர் பந்து பிஸ்ஸுதை: |
பகவத்யுத்தம ஸ்லோகே தீர்க்க ஸ்ருதப்யுதாஷயா: ||

ஸ்ரீகிருஷ்ணன் அவர்களுக்குப் பக்கத்திலேயே வந்திருக்கிறான் என்ற செய்தியைக் கேட்ட அந்த பிராமணர்களின் மனைவிகள், தினந்தோறும் அவனைக் காணவேண்டுமென்றே பூஜைகளை செய்து வந்த காரணத்தால், உடனே அவனைக் காணப் புறப்பட்டனர். தினந்தோறும் அவனின் மகிமைகளைக் கேட்டுக்கேட்டு, மனம் முழுவதும் பரமாத்மனிடமே நிலைத்திருந்தது. உடனடியாக பக்‌ஷ்ய, போஜ்யங்களை எடுத்துக்கொண்டு, பெரிய ஆறுகள் கடலைச் சேரும் வேகத்தில் புறப்பட்டேவிட்டனர். அவர்களின் கணவர்கள் எவ்வளவு தடுத்தாலும், அவற்றைக் கேட்காமல், புண்யகீர்த்தியான பரமாத்மனின் மகிமைகளை பல நாட்களாகக் கேட்டு, அவன் மேல் வைத்திருக்கும் பூரண நம்பிக்கையினால், கிருஷ்ணன் இருக்குமிடத்திற்கு வந்தனர். ஸ்ரீபரமாத்மன், அவர்களை வரவேற்று அவர்கள் கொடுத்த உணவினை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அருள் புரிந்து, ஞானோபதேசத்தைக் கொடுத்து அனுக்கிரத்தான். 

இந்தப் பெண்கள் பரமாத்மனைக் கண்டு திரும்பி வந்திருப்பதைப் பார்த்த அந்த கணவர்கள், மிகுந்த கவலையுடன் ‘அடடா. இந்தப் பெண்களுக்கு பரமாத்மனிடம் இருக்கும் பக்திகூட நமக்கு இல்லையே. இவர்களுக்கு, பிராமணர்களின் தகுதியான உபநயனம், சம்ஸ்காரங்கள், குருகுலவாசம், தவம், மீமாம்ஸாதி சாஸ்திர ஞானம் இவை எதுவுமே இல்லையென்றாலும், பரமாத்மனிடம் திடமாக பக்தி மட்டும் இருக்கிறது. நாம் அவை அனைத்தையும் பெற்றிருந்தாலும், நமக்கு இத்தகைய பக்தி இல்லையே. நம் பிறப்பிற்கும், கல்விக்கும், செயலுக்கும் சம்பந்தமே இல்லையே. ஸ்ரீபரமாத்மன், நமக்கு தன் மகிமைகளை நினைவுபடுத்தி, நமக்கு அருள்வதற்காகவே இந்த உணவைக் கேட்டிருக்கிறான். இல்லையேல், பூர்ணகாமனான பரமாத்மனுக்கு நம் உணவுதான் வேண்டியிருந்ததா?’ என்றெல்லாம் சிந்தித்து தாமும் தன்யராகவேண்டும் என்று நினைத்தனர். 

ஆகையால், வெறும் தேக தண்டனை செய்து, காம்ய விரதாதிகளை செய்வதனால் கிடைக்கும் பலன், தற்காலிகமான ஸ்வர்க்கமே என்று இதிலிருந்து அறியவேண்டும். ஆனால், நித்யகர்மங்களான சந்தியாவந்தனம், ஏகாதசி முதலான விரதங்கள் ஆகியவற்றை விடவேண்டும் என்று பொருள் அல்ல. 

நகர்மணா மனாரம்பான் ம்யைஷ்யர்ம்யம் புருஷோஷ்னுதே |
நசஸன்யஸனா தேவஸித்திம் ஸமதிகச்சதி ||
நியதம் குருகர்மத்வம் கர்மஜ்யாயோஹ்ய கர்மண: |
ததர்த்தம் கர்மகௌந்தேய முக்தஸங்க: ஸமாசர ||
(பகவத் கீதை)

அனைத்து கர்மங்களையும் விடுவதே நைஷ்காம்யம் என்றில்லை. காம்யகர்மங்களை விடுவதாலேயே புருஷர்கள் சத்கதியை அடைவதில்லை. வர்ணாசிரமத்திற்கேற்ப நித்யகர்மங்களை செய். ‘தஸ்மாதஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர’ அதாவது, கர்மத்தின் பலனை எதிர்பார்க்காமல், ஸ்ரீவிஷ்ணு ப்ரீதிக்காக கர்மத்தை செய் என்று பொருள். இதுவே கீதா ஸ்லோகத்தின் சாமான்ய பொருள் ஆனாலும், இதற்கு ஸ்ரீராகவேந்திர ஸ்வாமிகள் தனது வியாக்யானத்தில் இவ்வாறு விளக்கம் அளித்திருக்கிறார். 

’நசேதிஸன்யஸனாத் காம்யகர்மா கரணாதேவ | தன்மாத்ராதிதி யாவத் | அனேன நிவ்ருத்த கர்மகரண முபலக்‌ஷ்யைதே | நிவ்ருத்த கர்மகரண மாத்ரத்ஸித்தி மோக்‌ஷம் புருஷோ ந ஸமதிகச்சதி | நப்ராப்னோதி | கிந்து தேனாந்த: கரண ஷுத்தி விஷய வைராக்யஸ்ரவண மனனத்யான ஞானத்வாரைவ | நசஸன்யஸனாதேவ |’

காம்ய கர்மங்களை விடுவதால் மட்டும் முக்தி கிடைக்காது. அதாவது, விதிக்கப்பட்ட கர்மானுசரணங்களை செய்தே ஆகவேண்டும் என்று குறிப்பிடுகிறார். ஆனாலும், இத்தகைய கர்மானுஷ்டானங்களை செய்வதால் மட்டுமே புருஷர்கள் முக்தியை அடைவதில்லை. பின் வேறு எதனால் முக்தி என்றால், அந்த:கரண சுத்தியினாலும், விஷய சுகங்களில் வைராக்கியங்களாலும், பரமாத்மனின் கதைகளைக் கேட்டு, அதை மனனம் செய்வதாலும், மெய்மறந்து தியானம் செய்வதாலும், அதிலிருந்து கிடைக்கும் ஞானத்தினால் மட்டுமே முக்தி கிடைக்கிறது என்கிறார். 

ஆகவே, முக்கியமான நித்யகர்மங்களை செய்தவாறு, பரமாத்மனின் மகிமைகளை பிறர் பாடும்போது தானும் கேட்டவாறு, கேட்டவற்றின் உண்மையான அர்த்தத்தினை புரிந்துகொண்டு, மனதில் தியானம் செய்துகொண்டிருப்பதாலேயே, முக்தி கிடைக்கிறது என்பதே தாசராயரின் அபிப்பிராயம் என்று அறியவேண்டும். இதே அபிப்பிராயத்தையே ஸ்ரீஜகன்னாததாசர் தன் இன்னொரு பத்யத்தில் ‘ஸ்வோசித கர்மங்களா சரிசுதபலு’ என்றிருக்கிறார். இவற்றிலிருந்து தெரிய வந்த விஷயங்கள் என்னவெனில் : அகத்தூய்மை, விஷய வைராக்யம், ஸ்ரவணம், மனனம், த்யானாதிகள் இல்லாமல் வெறும் தேகத்தை தண்டித்து செய்யும் விரதங்களால் ஆவதில்லை. இந்த விரத நியமங்களின் பலன், வெறும் ஸ்வர்க்கமே தவிர, அவை முக்திக்கு சாதனம் ஆவதில்லை. 

***



Tuesday, February 11, 2020

#5 - கருணா சந்தி


#5 - கருணா சந்தி

மலகி3 பரமாத3ரதி3 பாட3லு
குளிது1 கேளுவ குளிது1 பாட3லு
நிலுவ நிந்தரெ நலிவ நலித3ரெ ஒலிவெ நிமகெ3ம்ப3 |
சுலப4னோ ஹரி தன்னவரனர
4ளிகெ3 பிட்டக3லனோ ரமாத4வன
ஒலிசலரியதெ3 பாமரரு ப3ளலுவரு ப4வதொ3ளகெ3 ||5

மலகி = படுத்தவாறு
பரமாதரதி = பக்தியுடனான மரியாதையுடன்
பாடலு = பகவன் மகிமைகளைக் குறித்து பாடல்களைப் பாட
குளிது கேளுவ = ஸ்ரீபரமாத்மன் அமர்ந்துகொண்டு அதைக் கேட்பான்
குளிது பாடலு = அமர்ந்து பாடினால்
நிலுவ = ஸ்ரீஹரி நின்றவாறு கேட்பான்
நிந்தரெ = நாம் நின்றவாறு பாடினால்
நலிவ = நடனமாடியவாறு கேட்பான்
நலிதரெ = நாம் நடனமாடியவாறு பாடினால்
ஒலிவெ நிமகெம்ப = நான் உங்களுக்கு தரிசனம் அளிப்பேன் என்று சொல்லி, சிலருக்கு அபரோக்‌ஷத்தையும், சிலருக்கு பிரத்யக்‌ஷமாகவும் என, அவரவர்களின் தகுதிக்கேற்ப தரிசனம் அளிக்கிறான். 
(ஆகையால்) சுலபனோ ஹரி = ஹே பக்தர்களே, ஸ்ரீஹரி மிகவும் சுலபமானவன் என்று, இரு கைகளையும் மேலே தூக்கி தீர்மானமாக சொல்கிறார். 
தன்னவரன = தன் பக்தர்களை
அரகளிகெ = அரை நாழிகை காலமானாலும் 
பிட்டகலனு = விட்டு நீங்குவதில்லை
பாமரரு = சாமான்ய மனிதர்கள்
ரமாதவன = லட்சுமிபதியை
ஒலிஸலரியதெ = அவனது தரிசனத்தைப் பெறும் விதத்தை அறியாமல்
பவதொளகெ = சம்சாரத்தில்
பளலுவரு = கஷ்டப்படுகின்றனர். 

பொருள்:
நாம் படுத்தவாறு, பரமாத்மனை பக்தியுடன் புகழ்ந்து பாடினால், அவன் நம்மேல் வைத்திருக்கும் அன்பினால், நம்மருகே அமர்ந்து அதைக் கேட்பான். அதுபோலவே, நாம் அமர்ந்து பாடினால், அவன் நின்று கேட்பான். நாம் நின்று பாடினால், பரமாத்மன் நர்த்தனம் ஆடியவாறே கேட்பான். நாம் நர்த்தனம் ஆடியவாறே பாடினால், அவன் பிரத்யட்சம் ஆகிறான். இதுபோல, தன் பக்தர்களின் தகுதிக்கேற்ப அபரோக்‌ஷத்தில் தரிசனம் அளிக்கிறான். சிலர் அவதார ரூபங்களையே பிரத்யட்சமாகக் காண்கின்றனர். ஆகையால், ஸ்ரீஹரி பரம சுலபன் என்று கோஷத்துடன் சொல்கிறார் தாசராயர். ஆகவே, ‘சுலபனோ ஹரி’ என்று மிகத் தீர்மானமாக சொல்கிறார். இல்லையேல், அவன் சுலபன் என்று சாதாரணமாகவே சொல்லியிருக்கலாம். ஆனால், இவற்றையெல்லாம் (பரமாத்மனின் தரிசனத்தைப் பெறும் வழியினை) அறியாமல், மக்கள் இன்னும் சம்சாரத்தில் உழல்கின்றனர். 

சிறப்புப் பொருள்:
பரமாத்மனை வழிபடுவதற்கு நேரம், காலம், இடம் ஆகியவை பொருட்டல்ல. எந்த இடத்திலும், காலத்திலும், எந்த நிலையிலும் பரமாத்மனை வழிபடலாம் என்பதற்கே ‘மலகி பரமாதரதி’ என்றிருக்கிறார். பாகவத ஏழாம் ஸ்கந்தத்தில், பிரகலாதனின் கதையில், அவன் எந்த நிலையில் இருந்தான் என்பதை ‘ஆஸீன: பர்யடன்னர்ஷ்னஷயான: ப்ரபிர்ப | நானு ஸந்தத விதானிகோஒவிந்த பரிரம்பித:’. ’அவன் அமர்ந்திருந்தபோதும், திரிந்தபோதும், சாப்பிடும்போதும், படுத்திருந்தபோதும், குடிக்கும்போதும்கூட, பரமாத்மனிடம் மிகவும் பக்தியுடன் தியானித்தவாறு இருந்தால், அவன் நிலையே அவனுக்கு மறந்துவிடும்’ என்பதே இதன் அர்த்தம். 

இப்படியாக ஏகாந்த பக்தர்கள் அவனை பஜிப்பதற்கு, நேரம், காலம், இடம், நிலை, ஆகியவை காரணம் ஆவதில்லை என்னும் அபிப்பிராயத்தையே தாசராயர் இந்த பத்யத்தில் சொல்லியிருக்கிறார். இது மட்டுமல்லாமல், இங்கு, படுத்துப் பாடுவதற்கும், அமர்ந்து பாடுவதற்கும், நின்று பாடுவதற்கும், நடனமாடி பாடுவதற்கும், தாரதம்யத்தை சொல்லியிருக்கிறார். இதற்கு ஆதாரமாக ப்ருஹன் நாரதிய புராணத்தில் இப்படி சொல்லியிருக்கின்றனர்:

ய: ஸ்வபிதாது ஷயனேஹரிஞ்சிந்தயதே வர: |
ஸஹரி: கீர்த்தனந்தஸ்ய சந்திர்ஷ்ட ஸ்ருணுதேஸ்தவம் ||
யஸ்திர்ஷ்ட கீர்த்தயேத்தேவம் பக்தாயுக்தோனரோத்தம: |
ஸ்வயமுத்தாயதேவேஷோ பக்தஸ்ய ஸ்ருணுதேஸ்தவம் |
யஸ்ஸமுத்தாய மதிர்யா ஜகதாதாரமீஷ்வரம் |
கீர்த்தயேத் விவிதைர்கீதை மஹாபக்தி ஸமன்வித: ||
ஸஹரி: ஷ்ருணுதே ஸ்தோத்திரம் ந்ருத்யமானோதி ஹர்ஷித: |
ய:புர்மா ந்ருத்யமானர்ஸ்ஸ விலஜ்ஜோகியதேயதி ||
ஸஹரி: பரமப்ரீதோ ப்ரத்யக்‌ஷோ பவதித்ருவம் ||

இதன் அர்த்தத்தயே ‘மலகி பரமாதரதி’ என்னும் பதத்தில் தெளிவாக, சுருக்கமாக அடக்கியிருக்கிறார் தாசராயர். இதன் முக்கிய கருத்து என்னவென்றால்: நல்ல வலிமையுடன் இருக்கும் செல்வந்தனான ஒருவன், தன் மனதை இறைவனிடம் செலுத்தாமல், எவ்வளவு ஸ்தோத்திரம் செய்தாலும், அவனுக்கு ஸ்ரீஹரியின் அருள் கிடைக்காது. பகவத் தியானத்தை செய்யும்போதும், பாடும்போதும், மெய்மறந்து, தன்னிலை தனக்கே மறந்து போகுமாறு, அமர்ந்தோ படுத்தோ பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தால் அவனுக்கு ஸ்ரீஹரியின் அருள் கிடைக்கிறது. பரமாத்மனிடம் மனதை நிலைநிறுத்துவதே முக்கியம். 

ஒரு வேளை, நோய்களாலோ, வேறு பிரச்னைகளாலோ, அமரவோ, நிற்கவோ சாத்தியம் இல்லாவிடில், இருக்கும் நிலையிலேயே அவனைக் குறித்து பஜித்தால், அவனுக்கு பகவத் அருள் கிடைக்கிறது. இதற்கு உதாரணம் பீஷ்மாசார்யர். அம்புப் படுக்கையில் படுத்திருந்தபோது அவனைக் குறித்து ஸ்தோத்திரம் செய்ய, பரமாத்மன் ஸ்ரீகிருஷ்ணன் அங்கு அமர்ந்து அதனைக் கேட்டான். புண்டலீகன் அமர்ந்து துதிப்பதை, ஸ்ரீஹரி நின்று கேட்டான். பிரகலாதன் நின்று துதிக்க நரசிம்ம ரூபத்தினால் நடனமாடியவாறே வந்து அதனைக் கேட்டான். நாரதர் நடனமாடியவாறே பாடியதால், அவருக்கு ஸ்ரீஹரி தரிசனம் அளித்தார் என்னும் உதாரணங்களை சில உபன்யாசகர்கள் இந்த பத்யத்தை விளக்கும்போது சொல்கின்றனர். 

பீஷ்மாசார்யர் முதலானவர்களை உதாரணமாகக் கொடுப்பதன் சாதக பாதக அம்சங்கள் என்னவென்றால்: ’மலகி பரமாதரதி’ என்னும் வாக்கியத்தாலும், இதற்கு ஆதாரமான பிரம்ம நாரதிய புராண வாக்கியத்திலும், தெரியவரும் விஷயம் இதுவே. படுத்துப் பாடினால், படுத்திருப்பவரின் கண்களுக்குத் தெரிந்தவாறு அமர்ந்தோ, நின்றோ கேட்கிறானா? அல்லது கண்மறைவாக (தரிசனம் அளிக்காமல்), மறைந்திருந்து நின்று கேட்கிறானா? என்றால், எதிரிலேயே நிற்கிறான் என்று சொல்வது போலவே ஆயிற்றல்லவா?

’நலிதரெ ஒலிவெ நிமகெம்ப’ என்பதன் பொருள் என்ன? நர்த்தனம் ஆடியவாறு பாடினால், அவனுக்கு தரிசனம் அளிப்பேன் என்று சொல்கிறான் அல்லவா? இதில் நமக்கு சந்தேகம் இருந்தால் ‘ய:புர்மா ந்ருத்யமானர்ஸ்ஸ விலஜ்ஜோகியதேயதி ||
ஸஹரி: பரமப்ரீதோ ப்ரத்யக்‌ஷோ பவதித்ருவம் ||’ என்னும் வாக்கியத்தில், யாரொருவன் வெட்கப்படாமல், நாட்டியமாடியவாறு பாடுகிறானோ, அவனிடம் மிகவும் ப்ரியத்துடன் நிச்சயமாக காட்சியளிப்பேன் என்று சொல்கிறான். இதிலிருந்து தெரியவேண்டியது என்ன? 

படுத்திருப்பருக்கும், அமர்ந்திருப்பவருக்கும், பரமாத்மன் அமர்ந்து, நின்று பிரத்யட்சம் ஆகிறான் என்பதே. ஆனால் ‘நலிதரெ ஒலிவெ’ என்று சொல்வது எதற்காக? மேலும் பீஷ்மாசார்யர், புண்டலீகன், பிரகலாதன்,, நாரதர் முதலான அனைவருக்கும் கிருஷ்ணன், விட்டலன், நரசிம்ம, நாராயணர்கள் பிரத்யட்சமாக காட்சியளித்திருக்கின்றனர். அப்படியிருக்கையில் இந்த தாரதம்யத்திலிருந்து நமக்கு அறியவரும் செய்தி என்ன? பீஷ்மாசார்யர் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும்போது, எழுந்துகொள்ளவும், அமரவும் சாத்தியம் இல்லாதபோது, அவர் படுத்த நிலையிலேயே அவருக்கு காட்சியளித்தான். 

புண்டலீகன் தன் பெற்றோரின் சேவையில் இருந்தபோது, எழுந்துகொள்ளவும் சாத்தியமில்லாமல், அந்த நிலையிலேயே பரமாத்மனை தியானிக்க, விட்டல ரூபத்தில் அவனுக்கு தரிசனம் அளித்தான். பிரகலாதனுக்கு நின்று பாடுவதற்கு சாத்தியம் இருந்ததால், அவனுக்கு நரசிம்ம ரூபத்தில் வந்து காட்சியளித்தார். நாரதர் எப்போதும் நாட்டியமாடியவாறே இருந்ததால், அவர் எந்தெந்த ரூபத்தை பார்க்கவேண்டும் என்று விருப்பப்படுகிறாரோ, அந்த ரூபத்தினாலேயே அவருக்கு தரிசனம் அளித்தான். இப்படி இவர்கள் அனைவருக்கும் பிரத்யட்சம் ஆகியிருப்பதால், இந்த பதமானது இவர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது என்று நமக்கு தோன்றுகிறது. ஆனால் உண்மை அப்படியா?

அபரோக்‌ஷத்தை விரும்புபவர்களான பகவத் பக்தர்கள், அபரோக்‌ஷத்தைப் பெறும் முன்னர், பரமபக்தியுடன் - படுத்திருக்கும்போதோ, அமர்ந்தோ, நின்றோ - இடைவிடாமல் பகவத் மகிமைகளை பாடிக்கொண்டிருந்தால், அவர்களின் கண்ணுக்குத் தெரியாமல், ஸ்ரீபரமாத்மன்,, படுத்துப் பாடினால் அமர்ந்தும், அமர்ந்து பாடினால் நின்றும், நின்று பாடினால் நர்த்தனம் ஆடியும், இறுதியில் மிதமிஞ்சிய பக்தியினால் மெய்மறந்து ஆடிப்பாடினால், அப்போது அவர்களுக்கு அபரோக்‌ஷத்திலும், ப்ரத்யட்சத்திலும், தரிசனம் அளிக்கிறான். இப்படியாக புரந்தரதாசர், விஜயதாசர், ஜகன்னாததாசர், நாமதேவ, ஞானதேவ ஆகியவர்களின் சரிதைகளில், அவரவர்களுக்கு வெவ்வேறு நிலைகளில் பிரத்யட்சம் ஆகியிருக்கிறான் என்று தெரியவருகிறது. 

‘மலகி பரமாதரதி’ ஆகிய பதங்களுக்கு சில வியாக்யானகாரர்கள் அவை மயக்க, சமாதி நிலை என்று விளக்கியிருக்கிறார்கள். தாசராயரும் அதே சிந்தனையில் இருந்திருந்தால் ‘சுலபனோ ஹரி’ என்று சொல்லியிருப்பது எதிர்ப்பதம் ஆகும். போலவே 

‘கலேர்தோஷ நிதேராஜன்னஸ்திஹ்யேகோ மஹான் குண: |
கீர்த்தனாதேவ க்ருஷ்ணஸ்யமுக்தபந்த: பரம்வ்ரஜேத் ||

கலியுகத்தில் தோஷங்கள் நிறைந்திருந்தாலும் அதில் மிகப்பெரிதான நற்குணம் ஒன்று உண்டு. அது என்னவெனில்: பரமாத்மனை கீர்த்தனை செய்தால், முக்தராக பரமாத்மனிடமே சேரமுடியும். இந்த பாகவத வாக்கியமும் இதற்கு எதிர் என்றே தோன்றுகிறது. மேலும் ஆறாம் ஸ்கந்தத்தில், மனிதர்கள் மனம், வாக்கு, உடலினால் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் செய்யவில்லையெனில், நரகம் நிச்சயம் என்கின்றனர். 

ப்ராயஸ்சித்தானி ஜீர்ணானி நாராயணபராங்முகை: | 
நவைபுனந்திராசேந்த்ர சுராகும்பாமிவாபகா: ||

நாராயணனைப் பார்க்காதவர்கள், பிராயச்சிதம் செய்துகொண்டாலும், சாராயம் நிரம்பிய மண் குடத்தை எப்படி பெரிய ஆறுகளும் சுத்தம் செய்ய முடியாதோ, அதுபோலவே, அந்த பிராயச்சித்தமும் அவர்களை பவித்ரம் ஆக்குவதில்லை. 

நனிஷ்க்ருதைருதித்யை ப்ரம்மவாதிபிஸ்ததா விஷுத்தத்யத்யவானுவ்ரதாதிபி: |
யதாஹரேர் நாமரூபை ருதாஹ்ருதைஸ்த துத்தமஸ்லோக குணோபலம்பகம் ||

உத்தம ஸ்லோகனான ஸ்ரீபரமாத்மனின் ஆனந்தாதி குணங்களால் கூடியிருக்கும் பெயர்களை மிகுந்த பக்தியுடன் நினைப்பவர்கள், பாதத்தினால் முக்தர் ஆவர். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள விரத நியமாதி பிராயச்சித்தங்கள் எவற்றிற்கும் இத்தகைய சக்தி இல்லை -- என்பது பாகவத வாக்கியம். ஆறாம் ஸ்கந்தம், மூன்றாம் அத்தியாயத்தின் முன்னுரையில் விஜயத்வஜ ஆசார்யரின் வாக்கியம் இப்படியாக இருக்கிறது. 

’பக்திபூர்வகம் நாம சங்கீர்த்தனம் முக்திஸாதன மித்யெததஸ்மின்னத்யாயே அபிதீயதே’ - பக்திபூர்வகமான பகவன்னாம சங்கீர்த்தனையே முக்தி சாதனம் என்பதை இந்த அத்தியாயத்தில் சொல்கிறார், என்கிறார். இத்தகைய பல புராணங்களின் ஆதாரங்களில் ‘மலகி பாடலு குளிது கேளுவ’ என்னும் உண்மையான வியாக்யானமே தாசராயரின் சிந்தனை என்று அறிகிறோம். ‘ஹரியு சுலபனு’ என்று தாசராயர் சொல்கிறார். இந்த வாக்கியத்தாலும், நம்மால் செய்யமுடியாத சாதனை நிலையிலான தியானங்கள் தேவையில்லை என்று உறுதியளிக்கிறார். 

அனன்ய சேதாஸ்ஸததம் யோமான்ஸ்மரதி நித்யஷ: |
தஸ்யாஹம் சுலப: பார்த்தனித்யயுக்தஸ்ய யோகின: || (கீதை 8-14).

ஹே அர்ஜுனா! யார் அவன் மனதை சிதறடிக்காமல், ஒருமுகப்படுத்தி, தினந்தோறும் என்னை நினைக்கிறானோ, அவனே என்னை அடைவதற்குத் தேவையான முழுமையான வழிகளை அறிந்திருக்கிறான். அவனுக்கு நான் சுலபமாக கிடைக்கிறேன் - என்று ஸ்ரீகிருஷ்ணன் சொல்கிறான். ‘யோகி’ என்னும் சொல்லுக்கு, ஞானோபாயத்தை அறிந்தவன் என்னும் அர்த்தத்தை சொல்கிறார். ஆகையாலேயே ‘ஒலிஸலரியதெ பாமரரு பளலுவரு பவதொளகெ’ என்று சொல்கிறார். இதனால், கீதையில் சொல்லப்பட்ட ‘நித்யயுக்தஸ்ய யோகின:’ என்றால், ‘முழுமையான வழிமுறைகளை அறிந்தவனுக்கு நான் சுலபன்’ என்று ஸ்ரீகிருஷ்ணனின் வாக்கியத்திற்கும், தாசராயரின் வாக்கியத்திற்கும் சரியாக ஒத்துப்போகிறது என்று அறியவேண்டும். 

‘தன்னவரனரகளிகெ பிட்டகலனு’ என்னும் தாசராயரின் வாக்கியத்திற்கு, பிம்பரூபத்தினால் எப்போதும் கூடவே இருக்கிறான் என்னும் அர்த்தம் கொண்டால், பக்தர்களிலும், அ-பக்தர்களிலும்கூட பிம்பரூபத்தினால் கண்டிப்பாக இருக்கிறான் என்று பொருள் வருவதால் ‘தன்னவரன’ என்னும் சொல் தேவையற்றதாகிறது. பக்தர்களை காப்பதற்காக கிருஷ்ணாதி ரூபங்களினால், அர்ஜுனாதி பக்தர்களை காப்பாற்றுவதைப் போலவே, தன் ஏகாந்த பக்தர்களைக் காப்பாற்றுவதற்காக, அவர்களின் கண்ணுக்குத் தெரியாமல், எப்போதும் அவர்களின் அருகிலேயே இருந்து, அவர்களை காப்பாற்றுவான் என்னும் அர்த்தம் தெளிவாக புரிகிறது. இதற்கு ஸ்ரீவாதிராஜர், துளசிதாசர், புரந்தரதாசர் ஆகியோரின் சரிதங்களே சாட்சியாக இருக்கின்றன. 

***