ஹரிகதாம்ருதசாரம் - கன்னட பாவபிரகாசிகை உரையின் மொழிபெயர்ப்பு. 28/03/2020லிருந்து ஒரு நாளைக்கு 2 பத்யங்கள். 8AM & 4PM.

Saturday, February 22, 2020

#16 - கருணா சந்தி

#16 - கருணா சந்தி

ஏனு கருணாநிதி4யோ ஹரி ம
த்தேனு ப4க்தாதீ3னனோ இ
ந்னேனு ஈதன லீலெ இச்சாமாத்ரத3லி ஜக3|
தானெ ஸ்ருஜிசுவ பாலிசுவ நி
ர்வாண மொத3லாதகி2ல லோக
ஸ்தா2னத3லி மத்தவரனிட்டா3னந்த33டிசுவனு ||16

ஹரியு = ஸ்ரீபரமாத்மன்
ஏனு கருணாநிதியோ = எப்படிப்பட்ட கருணாமயியோ
மத்தேனு பக்தாதீனனோ = இன்னும் எப்படிப்பட்ட பக்தர்களின் வசமானவனோ
இன்னேனு ஈதன லீலெ = இப்படிப்பட்டவனின் லீலைகளை என்னவென்று சொல்லுவேன்
இச்சாமாத்ரதலி = தன் விருப்பத்தின்படி
ஜகவ = உலகத்தை
தானே ஸ்ருஜிசுவ = தானே உருவாக்குவான்
பாலிஸுவ = காப்பாற்றுகிறான்
நிர்வாண = வைகுண்ட முதலானவைகளை
லோகஸ்தானகளலி = ஆகிய இடங்களில் வைத்து, 
ஆனந்த படிசுவனு = அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவான்

பொருள்:
ஸ்ரீஹரிக்கு சமமான இன்னொரு கருணாமயி இல்லை. அதேபோல பக்தர்களின் வசமாகும் தேவர்கள் வேறு யாரும் இல்லை. இத்தகையவனின் லீலைகளை விவரிக்கும் சாத்தியம் இல்லை. ஸ்ரீஹரி அவன் தன் மனதில் நினைத்தவுடனேயே, தன் விருப்பப்படி, ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய, மோக்‌ஷாதிகள் ஜீவராசிகளுக்குக் கிடைக்கின்றன. 

சிறப்புப் பொருள்:

பக்தாதீனன் என்றால் பக்தர்களின் இஷ்டார்த்தங்களை நிறைவேற்றுபவன் என்று பொருள். மத்வாசார்யர் பதரிகாசிரமத்தில் நாராயணரூபியை தரிசனம் செய்தபோது - ‘அமராமரானுக நராசுராதிர்கா ! ஸ்ருஜிஸி ப்ரபாலயஸி ஹம்ஸி சந்ததம் ஸ்வகதிம் ப்ரயாபயஸி சைஷலீலயா’ என்று ஸ்தோத்திரம் செய்தார். இதன் பொருள்: ஸ்வாமி நீங்கள் அமராமரானுக நராசுராதிர்கா, அமரானுக = உபதேவதைகள். நர = மனுஷ்யர்கள், அசுராதிர்க = அசுரர்களே முதலானவர்களை, லீலயா = விளையாட்டாக, ஸ்ருஜிஸி = படைத்து, ப்ரபாலயஸி = காப்பாற்றி, ஹம்ஸி = அழித்து, ஸ்வகதிம் = ஜீவனின் யோக்யதைக்கேற்ப அதாவது மோட்சம், நித்ய சம்சாரம், அந்தந்தமஸ் ஆகியவற்றை, ப்ரயாபயஸி = கொடுக்கிறாயே’ என்று மத்வவிஜயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தையே தாசராயர் இங்கு சொல்கிறார்.

***

Friday, February 21, 2020

#15 - கருணா சந்தி

#15 - கருணா சந்தி

ஸ்மரிசுவவ ரப1ராத4கள தா
ஸ்மரிஸ சகலேஷ்ட பிரதா3யக
மரளி தனக3ர்ப்பிசலு கொட்டுத3னந்த மடி3 மாடி3 |
1ரிபரியலிந்து3ணிஸி சுக2 சா
3ரதி3 லோலாடிசுவ மங்கல
சரித சின்மயகா3த்ர லோக1பவித்ர சுசரித்ர ||15

ஸ்மரிசுவவ = தன்னை நினைப்பவர்களின்
அபராதகள = தவறுகளை
தா ஸ்மரிஸ = லட்சியம் செய்வதில்லை
சகலேஷ்ட பிரதாயக = அவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுபவன் (பகவத் ப்ரீதிக்காக அவர்கள் செய்யும் கர்மங்களை)
மரளி = மறுபடியும்
தனகர்ப்பிஸலு = அதை அவர்கள் அர்ப்பித்தால்
அத = அதனை
அனந்த மடி மாடி = அனந்த குணங்களை பல மடங்கு ஆக்கி
பரிபரியலி = பலவிதங்களாக
உண்டு = பக்தர்களில் இருந்து, தான் அவற்றை உண்டு
உணிஸி = பக்தர்களை உண்ண வைத்து
மங்களசரித = மங்களகரமான மகிமைகளைக் கொண்டவன்
சின்மயகாத்ர = சிதானந்த ஸ்வரூபனான
லோகபவித்ர = லோக பவித்ரனான
சுசரித்ர = மிகச்சிறந்த சரித்திரத்தைக் கொண்ட ஸ்ரீபரமாத்மன்
சுகசாகரதி = சுகம் என்னும் கடலில்
லோலாடிசுவ = மிதக்குமாறு செய்வான்.

பொருள்:

தன்னை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் பக்தர்கள் என்ன அபராதம் செய்தாலும் அதை பரமாத்மன் நினைவுக்குக் கொண்டு வருவதில்லை (மறந்துவிடுகிறான்). பிரதிபலனாக அவர்களின் மனோபீஷ்டங்களை நிறைவேற்றுகிறான். மங்களகரமான சரித்திரங்களைக் கொண்டவனும், சிதானந்த ஸ்வரூபனும், லோக பவித்ரனும், உத்தம மகிமைகளைக் கொண்டவனுமான ஸ்ரீஹரி, தன் பக்தர்கள் செய்யும் பூஜாதி கர்மங்களை, அந்த பரமாத்மனுக்கே கிருஷ்ணார்ப்பணம் என்பவர்களுக்கு, அதனை பல மடங்காக்கி, அதன் பலன்களை, அவர்களில் இருந்து தான் உண்டு, அவர்களையும் உண்ண வைத்து, அவர்களை சுக சமுத்திரத்தில் நீந்தி கரைசேருமாறு செய்கிறான். 

சிறப்புப் பொருள்:
’ஸ்மரிசுவர அபராதகள தா ஸ்மரிஸ’ - தன் பக்தர்கள் சில நேரங்களில் அசுர ஆவேசத்தினால் தவறுகளை செய்வர். ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணன் யாகம் செய்துகொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு பிராமணன், தனக்குப் பிறக்கும் குழந்தைகள் அனைவரும் பிறந்தவுடன் இறந்து விடுகின்றனர். அப்படி இறந்த தன் குழந்தைகளை மறுபடி உயிர்ப்பித்துக் கொடுக்குமாறு கேட்கிறார். ஸ்ரீகிருஷ்ணன் யாகம் செய்துகொண்டிருந்ததால், எதுவும் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தான். அப்போது அங்கிருந்த அர்ஜுனன் எழுந்து, அக்குழந்தைகளை தான் காப்பாற்றுவதாகக் கூறினான். 

அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் ‘பெரிய பூதம் வந்திருக்கிறது. அது அக்குழந்தையை கவர்ந்து கொள்ளும். ஆகவே அக்குழந்தையைக் காப்பாற்றுவது உன்னால் முடியாதது. யாகம் முடிந்தபிறகு நாம் இருவரும் போய் அந்த வேலையைச் செய்வோம்’ என்றான். ஆனால் அதைக் கேட்காத அர்ஜுனன், அந்த பிராமணரிடம் சென்று, தான் அக்குழந்தைகளை காப்பாற்றுவதாகவும், அப்படி செய்யமுடியவில்லையெனில், தான் அக்னிப் பிரவேசம் செய்வதாகவும் சபதம் செய்தான். நம்பிக்கையற்ற அந்த பிராமணருக்கு, நம்பிக்கை ஊட்டி, அங்கு சென்று முயன்றாலும், அவனால் அக்குழந்தைகளை மீட்க முடியவில்லை. ஆகையால் தன் சபதத்திற்கேற்ப, அக்னிப் பிரவேசத்திற்கு தயாரானான். 

அப்போது ஸ்ரீகிருஷ்ணன் வந்து, அனந்தாசனத்தில் இருந்த அக்குழந்தைகளைக் கொண்டு வந்து பிராமணரிடம் கொடுத்து, அர்ஜுனனையும் சமாதானப்படுத்தினான். இப்படியாக, அர்ஜுனன் ஸ்ரீகிருஷ்ணனை புறக்கணித்தாலும், அவன் அர்ஜுனனின் தவறினை கவனத்தில் கொள்ளாமல், அவன் அக்னிப் பிரவேசம் செய்யும் காலத்தில் அங்கு வந்து அதனைத் தடுத்து, அவனைக் காப்பாற்றினான். 

பூதனி, சிசுபாலன் ஆகியோரில் முறையே ஊர்வசி, ஜய ஆகியோர் இருந்தாலும், அசுர ஆவேசத்தினால் அவர்கள் செய்த தவறுகளை மன்னித்து, அவர்களுக்கு திவ்ய கதியையே கொடுத்தான். இத்தகைய உதாரணங்கள் பல உண்டு. கிரந்தம் அதிகமாகிவிடும் என்பதால் அனைத்தையும் இங்கு விளக்கவில்லை. இத்தகைய கதைகளைக் கேட்டு, பக்தர்களே இந்த விஷயத்தை ஊகிக்க முடியும். ஆகையால் தாசராயர் ‘ஸ்மரிசுவர அபராதகள தா ஸ்மரிச’ என்றிருக்கிறார். 

’மரளி தனகர்ப்பிஸலு கொட்டுதனந்த மடிமாடி’ பக்தர்கள் செய்த அபராதங்களை பரமாத்மனுக்கு அர்ப்பிக்க, அதனை பன்மடங்காக்கி, சுகங்களைக் கொடுக்கிறான் என்பதை மக்களுக்கு தெரிவிப்பதற்காக, குசேலன் கொடுத்த ஒரு பிடி அவலைப் பெற்றுக்கொண்டு, அவனுக்கு இஹத்தில் பெருஞ்செல்வத்தைக் கொடுத்து, பரலோகத்தில் முக்தியைக் கொடுத்தான். இதைப் போல, நாம் செய்யும் கர்மங்களை பரமாத்மனுக்கு ஒப்படைத்தால், அவன் அதை ஏற்றுக்கொண்டு, அவற்றை பன்மடங்காக்கி, அதன் பலன்களைத் திருப்பித் தருவான் என்பது கருத்து. 

இதற்கு ஆதாரமாக மத்வாசார்யரின் வாக்கியம் ஒன்று இருக்கிறது. துவாதச ஸ்தோத்திரத்தில் : ‘அக்‌ஷயம் கர்மயஸ்மின் பலே ஸ்வர்ப்பிதம் ப்ரக்‌ஷயம் யாந்தி துக்கானியன் நாமத:’ - ‘எந்த பரமாத்மனிடம் நாம் செய்யும் கர்மங்களை சமர்ப்பிப்பதால், அந்த பலன் அக்‌ஷயமாகிறதோ, யாரின் நாமோச்சாரணை செய்தால் மட்டும் துக்கங்கள் அனைத்தும் நாசமாகிறதோ, அத்தகைய பரமாத்மனை பக்தியுடன் அடைவோமாக’ என்கிறார். இதே அபிப்பிராயத்தை தாசராயர் இங்கு சொல்லியிருக்கிறார். 

பரியபரியலுண்டுனிஸி - பரமாத்மன் ஜீவர்களை ஸ்ருஷ்டித்து, காப்பாற்றியவாறு, ஜீவர்களில் இருந்து, ஸ்தோத்ராதிகளைப் பெற்றுக்கொண்டு, விஷய சுகங்களை தான் உண்டு, அவர்களுக்கும் கொடுக்கிறான் என்று பொருள். பாகவத 1ம் ஸ்கந்தத்தில் ‘பூதேஷு ஜாந்தர்ஹித ஆத்ம தந்த்ர: பாட்வர்கிகம் ஜிப்ரதி ஷட்குணேஷ:’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த ஸ்லோகம் மேற்சொன்ன அர்த்தத்தையே கொடுக்கிறது. ஆனால் பரமாத்மன் ஸ்வதந்த்ரனாகையால், தேகங்களில் இருந்தாலும், துக்கங்களை விட்டு, சுகங்களை மட்டுமே ஸ்வீகரிக்கிறான். 


புங்க்தே பூதேஷு தத்குணார்த்த - என்று குணங்களை அதாவது சுபங்களை, சுகங்களை மட்டுமே ஸ்வீகரிக்கிறான் என்னும் பொருள் தெளிவாகிறது. ‘சுகசாகரதி லோலாடிசுவ’ இஹத்திலும் தன் பக்தர்களுக்கு தன் அபரோக்‌ஷத்தைக் காட்டி, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவான். பாகவத 1ம் ஸ்கந்தத்தில் நாரதரின் வாக்கியம் - ‘ஆனந்த சம்ப்லவேலினோ நாபஷ்யமுபயம்முனே’. ’அந்த பகவந்தனைப் பார்த்த மாத்திரத்திலேயே நான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிவிட்டேன். எனக்கு இஹபரம் என்பதே தெரியவில்லை’ என்று நாரதர் வியாசரைப் பார்த்து சொல்கிறார். ஆகையால், பக்தர்களுக்கு இஹத்திலேயே இத்தகைய ஆனந்தத்தைக் கொடுக்கிறான் என்றபிறகு முக்தியில் ஆனந்தத்தைக் கொடுப்பதைப் பற்றி கேட்கவேண்டுமா? அதையும் கொடுப்பான் என்பதே கருத்து. லோகபவித்ர, சுசரித்ர ஆகியவை ‘பிரத்யக்‌ஷம்யாந்தி து:க்கானியன் நாமத:’ - நாமஸ்மரணையால் மட்டுமே துக்கங்களை நாசம் செய்வேன் என்ற துவாதச ஸ்தோத்திரத்தின் வாக்கியத்தையே தாசராயர் இங்கு குறிப்பிட்டிருக்கிறார். 

***

Thursday, February 20, 2020

#14 - கருணா சந்தி

#14 - கருணா சந்தி

பா3லக1ன க1லபா4ஷெ ஜனனியு
கே1ளி சுக2படு3வந்தெ லகுமி
லோல ப4குத1ரு மாடு3திஹ ம்ஸ்துதிகெ3 ஹிக்3கு3வனு |
தாள தன்னவரல்லி மாடு3
ஹேளனவ ஹெத்தை3ய்வ விது3ரன
ஆலயதி3 பாலுண்டு3 கு3ருபன மானவனெ கொண்ட3 ||14

ஜனனியு = தாயானவள்
பாலகன = குழந்தையின்
கலபாஷெ = மழலைப் பேச்சினை
கேளி = கேட்டு
லகுமி லோல = லட்சுமிபதியான பரமாத்மன்
பகுதரு மாடுதிஹ = பக்தர்கள் செய்யும்
சம்ஸ்துதிகெ = சொல்லும் ஸ்தோத்திரங்களுக்கு / செய்யும் பூஜைகளுக்கு
ஹிக்குவனு = மகிழ்வான்
சுகபடுவந்தெ = மகிழ்ச்சி அடைவதைப் போல
தன்னவரல்லி = தன் பக்தர்களில்
ஹேளனவ = அவமானங்களை / திட்டுதல்களை
தாள = சகித்துக்கொள்ள
ஹெத்தெய்வ = தேவோத்தமன்
விதுரன ஆலயதி = விதுரனின் வீட்டில்
பாலுண்டு = உணவு உண்டு
குருபன = குருகுலபதியான துரியோதனனின் (அல்லது) திருதராஷ்டிரனின்
மானவெ = மானத்தை
கொண்ட = கொண்டான் (வாங்கினான்).

பொருள்:
தன் குழந்தையின் மழலைப் பேச்சினைக் கேட்டு தாயானவள் மகிழ்ச்சியடைவதைப் போல, லட்சுமிவல்லபவன் தன் பக்தர்கள் செய்யும் மிகச்சிறிய ஸ்துதிகளைக் கேட்டு மகிழ்கிறான். தன் பக்தர்களை யாராவது அவமானம் செய்தால், அதைக்கண்டு சகிக்க மாட்டான். ஆகையால், பாண்டவர்களுக்கு அவமானம் செய்த துரியோதனனின் (திருதராஷ்டிரனின்) வீட்டில் உண்ணாமல், விதுரனின் வீட்டில் உணவை உண்டு துரியோதனனுக்கு அவமானம் செய்தான். 

சிறப்புப் பொருள்:
’லகுமிலோல’ என்னும் சொல், பரமாத்மனின் உன்னத பதவியைக் குறிக்கிறது. எவரின் மகிமைகளை ரமாபிரம்மாதிகள் முழுமையாக அறிந்து ஸ்தோத்திரம் செய்ய முடியாததாக இருக்கிறதோ, அத்தகைய மகிமைகளைக் கொண்டவன் என்னும் அர்த்தத்தைக் கொடுக்கிறது இந்த சொல். இத்தகைய மகிமைகளைக் கொண்டிருந்தாலும், சாமான்யரான பக்தர்கள் செய்யும் அல்ப ஸ்தோத்திரங்களாலேயே மகிழ்ச்சியடைகிறான் ஸ்ரீபரமாத்மன். சிறு குழந்தைகள் பேசும் மழலைப் பேச்சுகளுக்கு, தாயானவள் மிகவும் சந்தோஷப்படுகிறாள். தாய்க்கு குழந்தையிடம் இருக்கும் பிரியமே அதற்குக் காரணம். அதேபோல, பரமாத்மனுக்கு பக்தர்களிடம் இருக்கும் பிரியத்தை இந்த உவமை விளக்குகிறது. ஹிரண்யகசிபுவின் சம்ஹாரத்திற்குப் பிறகு, பிரம்மதேவர் கேட்டுக் கொண்டதைப் போல, பிரகலாதன் நரசிம்ம ரூபி பரமாத்மனிடம் வந்து ஸ்தோத்திரம் செய்துகொண்டிருந்தபோது, பரமாத்மன் மிகவும் மகிழ்ச்சியுடன் அதைக் கேட்டு, இவ்வாறு கூறினார்.

பிரஹ்லாத பத்ர பத்ரந்தெ ப்ரீதோஹந்தேsஸுரோத்தம |
ய ஏதத்கீர்த்தயேன்மஹ்யம் த்வயா கீதமிதம் நர: ||
த்வாஞ்சமாஞ்ச ஸ்மரன்காலே கர்மபந்தாத்விமுச்யதே ||

’ஹே மங்களஸ்வரூபனான, தைத்யர்களில் ஸ்ரேஷ்டனான பிரகலாதனே, நீ செய்த ஸ்தோத்திரத்திற்கு நான் மிகவும் மகிழ்ந்தேன். நீ செய்த இந்த ஸ்தோத்திரத்தை யார் படிக்கின்றரோ, யார் என்னையும், உன்னையும் காலையில் நினைக்கின்றரோ, அத்தகையவர்களை கர்ம பந்தனங்களிலிருந்து நான் விடுவிக்கிறேன்’ என்று பரமாத்மன் கூறினார். 

இப்படியே கஜேந்திரன் செய்த அனைத்து ஸ்தோத்திரங்களையும் கேட்டு மகிழ்ச்சியடைந்தான் பரமாத்மன். சித்ரகேது ராஜா, த்ருவ, அதிதி ஆகியோர் பரமாத்மனை துதித்தபோது, அவன் அவர்கள் முன் நின்று அவற்றைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து அவர்களுக்கு வரங்களைக் கொடுத்தான் என்பதை பக்தர்களின் சரித்திரங்களிலிருந்து படிக்கிறோம். அதனாலேயே ‘பக்தரு மாடுதிஹ சம்ஸ்துதிகெ ஹிக்குவனு’ என்று தாசராயர் கூறுகிறார். 

‘தாள தன்னவரல்லி மாடுவ ஹேளனவ’ ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்களின் தூதனாக துரியோதனனிடம் வந்தபோது, துரியோதனன் உணவை தயார் செய்து, ஸ்ரீகிருஷ்ணனை உணவு உண்ண அழைத்தபோது, ஸ்ரீகிருஷ்ணன், ’நான் உன் வீட்டில் உணவு உண்பதில்லை’ என்றான். அதற்கான காரணம் கேட்டபோது - ‘த்விஷதன்னம் நபோக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்’. த்வேஷிகளின் வீட்டில் உணவு உண்ணக்கூடாது. த்வேஷிகளை தன் வீட்டிற்கு அழைக்கவும்கூடாது என்னும் நீதி சாஸ்திரம் உண்டு. ஆகையால், உன் வீட்டில் நான் உணவு உண்ண மாட்டேன் - என்றான். அதற்கு துரியோதனன் - ‘எனக்கும் உனக்கும் விரோதம் இல்லை. அப்படியிருக்கையில், என் வீட்டில் சாப்பிடாமல் இருக்க என்ன காரணம்?’ என்று கேட்க, ஸ்ரீகிருஷ்ணன் ‘பாண்டர்வா த்விஷஸே ராஜ்ய மம ப்ராணாஹி பாண்டவா:’ - ‘நீ பாண்டவர்களிடம் த்வேஷத்தை காட்டுகிறாய். பாண்டவர்கள் என் உயிருக்கு நிகரானவர்கள். ஆகையால், எனக்கும் நீ த்வேஷியே. ‘யர்ஸ்தா த்வேஷி சமாம் த்வேஷியஸ்தானனு சமாமனு’ யார் அவர்களிடம் த்வேஷம் காட்டுவார்களோ, அவர்கள் எனக்கு த்வேஷிகளே. யார் அவர்களிடம் நட்பு பாராட்டுகிறார்களோ, அவர்கள் என்னிடமும் நட்பு பாராட்டுவார்கள் என்று தெரிந்துகொள்’ என்றான். ஆகையால் ‘தாள தன்னவரல்லி மாடுவ ஹேளனவ’ என்கிறார் தாசராயர். 

விதுரன மனெயலி பாலுண்டு - இந்த வாக்கியத்தால் விதுரனின் வீட்டில் பால் மட்டும் குடித்தான் என்று தாசராயர் சொல்வது போல இருக்கிறது. அப்படி நினைத்தால், அது பாரதத்தின் வாக்கியத்திற்கு விரோதமாகும். பாரதத்தின் உத்யோக பர்வத்தில் :

தத:க்‌ஷணத்தான்னபானானி ஷுசீனி குணவந்திச |
உபாஹரதனேகானி கேஷவாய மஹாத்மனே |
தைஸ்தர்பயித்வா ப்ரதமம் பிராம்மணான்மதுசூதன: |
ததோனுயாயிபி: சார்த்தம் மருத்பிரிவவாஸவ: |
விதுரான்னானி புபுஜே ஷுசீனி குணவந்திச||

இதன் பொருள்:

ஸ்ரீகிருஷ்ணனுக்காக தயார் செய்த, ருசிகரமான, அற்புதமான உணவுகளை விதுரன் ஸ்ரீகிருஷ்ணனுக்கு படைத்தான். ஸ்ரீகிருஷ்ணன் முதலில் பிராமணர்களுக்கு உணவளித்து, பின் அந்த ருசிகரமான உணவினை ஸ்ரீகிருஷ்ணன் உண்டான். அப்படியெனில், தாசராயர் சொன்னதற்கு என்ன அர்த்தம்? என்றால், தாசராயர் சொன்ன ‘பாலு’ என்னும் சொல்லுக்கு சுவையான அல்லது தூய்மையான என்று அர்த்தம் கொள்ளவேண்டும். சுவையான என்று பொருள். தாசராயர் ‘உண்டனு’ என்று சொன்னதால், அது உணவை உண்டான் என்றே குறிக்கும். இல்லையேல் பால் ‘குடிதனு’ என்று அவர் சொல்லியிருக்க வேண்டும். உண்டனு என்பது பொதுவாக உணவை உண்பதற்கே பயன்படுத்தப்படுகிறதே தவிர, பால் உண்டனு என்று நாம் சொல்வதில்லை. இதிலிருந்து பாரத வாக்கியங்களுக்கும் நிர்ணய வாக்கியத்திற்கும் வேறுபாடு வருவதில்லை. இப்படியாக விதுரனின் வீட்டில் உணவை உண்டு, திருதராஷ்டிரனின் அல்லது துரியோதனின் மானத்தை அழித்தான் (வாங்கினான்) என்றதால், அவர்களை நிராகரித்து விதுரனின் வீட்டுக்கு வந்தது அவர்களுக்கு அவமானமானது என்று சொல்வதாக அறியலாம். 

***


Wednesday, February 19, 2020

#13 = கருணா சந்தி

#13 - கருணா சந்தி

ஜனனியனு கா1ணதி3ஹ பா3லக
நெனெனெனெது3 ஹலபு3திரெ கத்தலெ
மனொயொளட3கி3த்த3வன நோடு3த நகு3த ஹருஷத3லி |
தனயனம்பி3கி33ப்பி ரம்பிஸி
கனனிகெய களெவந்தெ மதுசூ
4னனு தன்னவரித்தெடெ3கெ33ந்தொ33கி லஹுவனு ||13

ஜனனியனு = தாயை
காணதிஹ = காணாமல்
ஹலபுதிரெ = அழும்போது
கத்தலெ மனெயொளகெ அடகித்து = இருட்டு அறையில் ஒளிந்திருந்து
அவன = அந்தக் குழந்தையை
நோடுத நகுத ஹருஷதலி = மகிழ்ச்சியுடன்
தனயனம் = அந்த குழந்தையை
பிகிதப்பி = கட்டிக்கொண்டி
ரம்பிஸி = சமாதானம் செய்து
கனலிகெய = தன்னை பற்றிய பயத்தை
களெவந்தெ = களைவதை போல
மதுஸூதனனு = மது நாமக தைத்யனைக் கொன்ற பரமாத்மன்
தன்னவரு = தன் பக்தர்கள்
இத்தெடெகெ = இருக்கும் இடத்திற்கு
பந்து சலஹுவனு = வந்து காப்பாற்றுவான். 

பொருள்:
தான் இல்லாவிட்டால் தன் குழந்தை என்ன செய்கிறது என்பதைக் காண, தாயானவள் அக்குழந்தையை வெளியில் விட்டு, தான் மறைவாக உள்ளே ஒரு இருட்டு அறையில் ஒளிந்து பார்த்திருக்க, தாயைக் காணாத அக்குழந்தை அவளை நினைத்தவாறு அழுவதைக் கண்டு, மகிழ்ச்சியுடன் ஓடிவந்து அக்குழந்தையைத் தூக்கி கட்டியணைத்து, அதன் பயத்தைப் போக்கி சமாதானம் செய்வதைப் போல, ஸ்ரீபரமாத்மனும் தன் பக்தர்கள் தன்னைக் காணாமல் தவிப்பதைப் பார்த்து, அதாவது பஜிப்பதைப் பார்த்து மகிழ்ச்சியுடன் அவர் அருகில் வந்து அவர்களை காப்பாற்றுகிறான். 

சிறப்புப் பொருள்:
பொதுவாக வீடுகளில், சிறு குழந்தைகளை அதன் தாயானவள் கீழே படுக்கவைத்துவிட்டு, அவர்களின் கண்களில் தான் படாமல் நிற்பதும், அல்லது இருட்டு மூலையில் மறைந்தவாறு தான் மட்டும் குழந்தையைப் பார்க்குமாறும், அக்குழந்தை தன்னை பார்க்காதவாறும் நின்றுகொண்டு பார்ப்பதும், அதனால் குழந்தை தான் படுத்திருந்த இடத்திலேயே திரும்பி, சுற்றுமுற்றும் பார்த்து, தாயைக் காணாமல் அழத் தொடங்குவதைப் பார்க்கும் தாய்க்கு மகிழ்ச்சிகரமான விஷயமாகும். அப்படி குழந்தை அழத் தொடங்கும்போது, அந்தத் தாய் ஓடிவந்து அதை சமாதானம் செய்து கொஞ்சுவது என இவை அனைத்தும், குழந்தையைப் பெற்றவர்களுக்கு அனுபவத்தில் வந்ததாகும். இதைப் போலவே பரமாத்மனும் தன் பக்தர்களை பரிட்சை செய்து, அதன்பிறகு அவர்களை காப்பாற்றுகிறான். 

இதற்கு வியாக்யானம் செய்த ஒருவர் - இருட்டு அறையில் குழந்தை அழுதுகொண்டிருந்தால், தாயானவள் ஓடி வந்து கொஞ்சி சமாதானம் செய்கிறாள் - என்றார். இந்த விளக்கமானது, உவமை, உவமானங்களுக்கு பொருந்துவதில்லை. ஏனெனில், இருட்டு அறையில் இருப்பவன், வெளிச்சத்தில் இருப்பவர்களை பிரச்னையின்றி காணமுடியும். அதே வெளிச்சத்திலிருந்து இருட்டு அறைக்குள் இருப்பவரை காணமுடியாது. ஆகவே, குழந்தை இருட்டில் படுத்திருந்தால், வெளிச்சத்தில் இருக்கும் தன் தாயை தாராளமாக பார்த்திருக்கும். வெளிச்சத்தில் இருந்த தாய், இருட்டறையில் படுத்திருக்கும் குழந்தையை பார்க்கமுடியாது. அதுமட்டுமல்லாமல், இருட்டு அறையில் குழந்தையை தன்னந்தனியாக எந்தவொரு தாயும் விட்டுவருவதில்லை. அப்படி இருந்தால், குழந்தை பயப்படும் என்பது அந்த தாய்க்கு தெரியும். சிறு குழந்தை, இருட்டு அறையில் தனியாக படுத்திருப்பது என்பது உலகத்தில் நடக்காத ஒன்றாகும். ஆகையால், இருட்டு அறையில் படுத்திருந்த குழந்தை என்று அர்த்தம் செய்துகொள்வதற்கு பதில், இருட்டு அறையில் மறைந்திருந்த தாய் / ‘அவன்’ என்று பரமாத்மனை சொல்வதே சரி என்று படுகிறது. 

இதே உவமான உவமைகள் பக்தர்களின் விஷயத்தில் எப்படி பொருந்துகிறது என்றால்: ஜீவனிடம் இருக்கும் அஞ்ஞானம் என்னும் இருட்டில் பரமாத்மன் மறைந்திருக்கிறான். அதாவது மனிதன் தனது அஞ்ஞானத்தினால் ஜீவனுக்கும் தேகத்திற்கும் இருக்கும் வேறுபாட்டினை அறியாமல், ஜீவனே தேகம் என்று நினைத்து, கர்வம் பொறாமைகளால், வெளிச்சமாகத் தெரியும் தற்காலிக சுகங்களில் மூழ்கி, அஞ்ஞானம் என்னும் தன் இருட்டில் அடங்கியிருக்கும் பரமாத்மனை காண்பதில்லை. பரமாத்மனோ, இவனின் அஞ்ஞானம் என்னும் இருட்டில் மறைந்து நின்று, எப்போது சத்-சங்கத்தால் மனிதனின் சித்தத்தில் ஞானம் என்னும் சூரியன் உதிக்கிறதோ, எப்போது இந்த மனிதன் தன்னை இடைவிடாமல் துதிக்கிறானோ, அப்போது தான் அபரோக்‌ஷத்தில் தரிசனம் அளிக்கிறான். அல்லது பக்தர்கள் தங்களுக்கு கஷ்டம் வந்தபோது ஸ்ரீபரமாத்மனை வணங்கினாலும், ஸ்வ-கர்த்ருத்வ அபிமானத்தில் எவ்வளவு காலம் வரைக்கும் முயற்சி செய்து வருகின்றனரோ, அதுவரைக்கும் பரமாத்மன் அவர்களது அஞ்ஞானம் என்னும் இருட்டில் அவர்கள் கண்ணில் விழாமல் மறைந்திருக்கிறான். பிறகு எப்போது அந்த பக்தர், ஸ்வ-கர்த்ருத்வ என்னும் பாவத்தை விட்டு, நீயே கதி என்று முழுமையான சரணாகதர் ஆகின்றனரோ அப்போது மகிழ்ச்சியுடன் சிரித்தவாறு பக்தரிடம் வந்து, திரௌபதி முதலானவர்களை ஆபத்து காலத்தில் எப்படி காப்பாற்றினாரோ, அப்படியே காப்பாற்றுவார். 

இந்த விஷயத்தில் இன்னொரு இதிகாச சம்பவமும் உள்ளது. அது என்னவெனில்: பைடபா நகரத்தில் கூர்மதாஸ என்னும் பிராமணர் ஒருவர் இருந்தார். பிறக்கும்போதே அவனுக்கு கை, கால்கள் இருக்கவில்லை. பரம பகவத்பக்தனாக இருந்தான். எங்காவது ஹரிதாசர்கள் பஜனை செய்துவந்தால், எப்படியாவது பாடுபட்டு இவன் அங்கு போய், மிகவும் மகிழ்ச்சியுடன் அந்தப் பாடல்களை கேட்டு, அவர்களுடன் பாடி, காலத்தை கழித்து வந்தான். இப்படியிருக்கையில், ஹரிதாசர் ஒருவர் பண்டரிபுரத்து மகிமைகளைப் பற்றி சொல்லிக்கொண்டிருக்க, அதனைக் கேட்ட கூர்மன் தானும் பண்டரிபுரத்திற்குச் செல்லவேண்டும் என்று ஆசைப்பட்டான். இதைக் கேட்ட அங்கிருந்த மக்கள், உனக்கோ கால்களே இல்லையே, நீ எப்படி அங்கு போவது சாத்தியம்? என்று கேட்டனர். அப்படியும், மனம் தளராத கூர்மதாஸ், எப்படியோ தவழ்ந்தவாறு விட்டலனை தியானித்தவாறு பாதி தூரம் வந்துவிட்டான். மிகவும் பசி, தாகம், சோர்வு ஆகியவை ஆனதால், அதற்கு மேல் ஒரு அடியும் நகரமுடியாமல், ‘ஹே பாண்டுரங்கா. உன் இஷ்டம் போலவே செய்’ என்று சொல்லியவாறு தன் ஸ்வாதந்த்ர்யத்தை மறந்து, அங்கேயே அமர்ந்துவிட்டான். 

அப்போது விட்டலன் ஒரு செல்வந்தரைப் போல வேடமிட்டு இவனிடம் வந்து உணவினையும், இருக்க இடத்தையும் கொடுத்து இவ்வாறு கூறினார். நீ பண்டரிபுரம் போகும் வரை உனக்கு உணவு, இடம் கொடுப்பது என் கடமை. நீ இப்படியே போய்க்கொண்டிரு. தினமும் உன்னிடம் வந்து உனக்கு நான் உணவு அளிக்கிறேன்’ என்று சொல்லி, அங்கிருந்து மறைந்தான் விட்டலன். அதைப்போலவே கூர்மதாசனும் தினமும் பயணத்தில் முன்னேறிக் கொண்டிருக்க, பரமாத்மனும் செல்வந்தரின் ரூபத்தில் வந்து அவனுக்கு உதவிகளைச் செய்து வந்தான்.

‘ஐயா, பார்த்தீரா? பரமாத்மனுக்கு தன் பக்தர் மேல் எவ்வளவு கருணை?’ என்று கூர்மதாஸ புகழ்ந்தான். பண்டரிபுரத்திற்குச் செல்ல கூர்மதாஸ்க்கு இன்னும் 6 நாட்கள் தேவைப்பட்டன. அதற்குள், ஆஷாட சுத்த ஏகாதசி (பண்டரிபுரத்தில் உற்சவங்கள் நடக்கும் நாள்) வந்துவிட்டது. பண்டரிபுரத்தில் மக்கள் வெள்ளம். இதை அறிந்த கூர்மதாஸ், ’இவ்வளவு நாட்கள் நான் தவழ்ந்து வந்துவிட்டேன், இனி நான் வாழ்வது கடினம். இங்கேயே என் தேகத்தை விடுகிறேன். என்னை உன் பாதாரவிந்தங்களில் சேர்த்துக்கொள்’ என்று புலம்பினான். இதைக் கேட்ட விட்டலன் கருணையுடன் தன் நான்கு கரங்களுடன், பீதாம்பரதாரியாகி, அவனுக்கு தரிசனம் அளித்தார். தினந்தோறும் செல்வந்தரின் ரூபத்தில் தரிசனம் அளித்தும் இவனுக்கு அது புரியவில்லை. பண்டரிபுரத்தில் எந்த ரூபத்தில் காட்சி அளிக்கிறாரோ, அதே ரூபத்தில் அன்று கூர்மதாஸின் விருப்பப்படி பரமாத்மன் தரிசனம் அளித்தான். அதே வகையில், அன்றிலிருந்து இன்று வரை அங்கும் பண்டரிபுரத்தைப் போலவே அனைத்து உற்சவங்களும் நடைபெறுகின்றன. இப்படி செய்வதால்தான் பரமாத்மனுக்கு பக்தவத்ஸலன் என்று பெயர். இத்தகைய கதைகள் பற்பல உண்டு. உதாரணத்திற்காக ஒரேயொரு கதையை இங்கு சொல்லியிருக்கிறோம். 


இவை அனைத்தையும் அறிந்ததாலேயே தாசராயர் ‘ஜனனியனு காணதிஹ பாலகனு’ என்ற பதத்தினை பயன்படுத்தியிருக்கிறார்.

***


Tuesday, February 18, 2020

#12 - கருணா சந்தி

#12 - கருணா சந்தி

4னவ சம்ரக்‌ஷிசுவ ப2ணி தா
நுணதே3 மத்தொ1ப்ப3ரிகெ3 கொட33னு
தி3னதி3 நோடு3த சுகிசுவந்ததி3 லகுமிவல்லப4னு |
ப்ரணதரனு காய்தி3ஹனு நிஷ்கா1
மனதி3 நித்யானந்த3மய து3
ர்ஜனர சேவேயனொல்லன ப்ரதிமல்ல ஜக3க்கெல்ல ||12


தனவ = நிலத்தில் புதைந்திருக்கும் செல்வத்தை
சம்ரக்‌ஷிசுவ = காத்துக்கொண்டு, காவலுக்கு இருக்கும்
பணி = பாம்பு
தானுணதெ = தானும் உண்ணாமல்
மத்தொப்பரிகெ கொடதெ = வேறு யாருக்கும்கூட கொடுக்காமல்
அனுதினதி = தினந்தோறும் பார்த்தவாறு
சுகிசுவந்ததி = சுகப்படுவதைப் போல
லகுமிவல்லபனு = லட்சுமிபதியான ஸ்ரீபரமாத்மன்
ப்ரணதரன = தன்னை வணங்குபவர்களை
நிஷ்காமனதி = அவரிடமிருந்து பிரதிபலன்களை எதிர்பாக்காமல்
காதிஹனு = காத்துக்கொண்டிருக்கிறான்
நித்யானந்தமய = நித்யானந்த ஸ்வரூபமான ஸ்ரீபரமாத்மன்
ஜகக்கெல்ல = இந்த அனைத்து உலகங்களுக்கும்
அப்ரதிமல்ல = யாரும் தனக்கு சமம் இல்லாதவன்
துர்ஜனர = தமோயோக்யர் செய்யும்
சேவெய = சேவையை
ஒல்ல = ஏற்றுக்கொள்கிறான்

பொருள்:
நிலத்தில் புதைந்திருக்கும் செல்வத்தை பாதுகாத்து வரும் பாம்பானது, அதில் இருக்கும் ஒரு காசையும், தானும் பயன்படுத்தாமல், யாரையும் பயன்படுத்த விடாமல் எப்படி பாதுகாத்து வருகிறதோ, அதைப்போலவே, ஒப்புமை இல்லாத, அனைவரையும் விட உத்தமமான (யாரும் அவனுக்கு சமம் இல்லாத), எப்போதும் நித்யானந்த ஸ்வரூபமான ஸ்ரீபரமாத்மன், பக்தர்களிடமிருந்து எந்தவொரு பிரதிபலன்களையும் விரும்பாமல், தன்னை வணங்குபவர்களை காத்துக்கொண்டு, அவர்களுக்கு எந்தவொரு ஆபத்துகளும் வராமல் காப்பாற்றுவான். தமோயோக்யர் செய்யும் சேவைகளைக்கூட ஏற்றுக்கொள்கிறான். 

சிறப்புப் பொருள்:
செல்வம் நிறைந்த புதையலை பாம்பு காத்துக்கொண்டிருக்கும் என்பது பரவலான நம்பிக்கை. அந்த பாம்பிற்கு, அந்தப் புதையலால் எந்தவொரு பயனும் இல்லை. அந்த புதையலை வைத்தவனுக்கும், அதை கண்டுபிடித்து எடுப்பவனுக்கும், அந்த பாம்பு உதவுவதும் இல்லை (எடுக்க விடுவதில்லை). அப்படியிருந்தும், எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல், எப்படி அந்த பாம்பு அந்த புதையலை பாதுகாத்து வருகிறதோ, அப்படியே, பரமாத்மனும் தன் பக்தர்களை காத்து வருகிறான். அந்த பக்தரிடமிருந்து பரமாத்மனுக்கு எந்தவொரு பிரதிபலனும் இல்லை. அவரின் பக்திக்கு மெச்சி, அவர்களை காக்கிறான். ’தேவஸ்யைஷ: ஸ்வபாடோயமாத்ம காயஸ்ய காஸ்வ்ருஹா’ பரமாத்மனுக்கு இது ஸ்வபாவ குணமே தவிர, பூர்ணகாமனான ஸ்வாமிக்கு வேறொருவரால் ஆகவேண்டிய வேலைதான் என்ன? (ஒன்றும் இல்லை) என்று ஸ்ருதி சொல்கிறது. 

அப்படியெனில், பரமாத்மன் பக்தர்களிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்ளாமல், அனைவரையும் தானே ஏன் அருளக்கூடாது? என்று கேள்வி வரலாம். உதாரணத்திற்கு: குசேலன் அவலைக் கொடுத்தான். இப்படியே யார் பரமாத்மனை பஜிக்க வேண்டுமென்றாலும், பத்ர, புஷ்ப, பல, தூபதீபாதிகளால் பூஜிக்கின்றனர். 

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோமே பக்த்யா ப்ரயச்சதி |
ததஹம் பக்த்யுபஹ்ருதமஷ்னாமி ப்ரயதாத்மன: ||

இலைகளால், பூக்களால், நீரினால் யார் பக்தியுடன் என்னை வணங்கினால் (அவற்றை எனக்குக் கொடுத்தால்) அதை நான் அன்புடன் ஏற்றுக்கொள்கிறேன் என்று பரமாத்மனே சொல்லியிருக்கிறான். இப்படியிருக்கையில், பக்தர், ஏதாவது ஒன்றை கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு அருளுவான் என்று தெரிகிறது. 

பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது, அவர்களிடம் ஒரு அக்‌ஷயபாத்திரம் இருந்தது. அதன் சிறப்பு என்னவெனில், திரௌபதி, சமையல் செய்வதற்கு முன் அதில் என்ன வைத்தாலும், அது அனைத்தும் அக்‌ஷயமாக வளர்ந்து வந்தன. திரௌபதியும், உண்டு முடித்துவிட்டு, அந்த பாத்திரத்தைக் கழுவிவிட்டால், மறுபடி அதே நாளில் அந்த அக்‌ஷயபாத்திரம் உதவிக்கு வருவதில்லை. இந்த விஷயத்தை அறிந்திருந்த துரியோதனன், பரம கோபசாலிகளான துர்வாசரை அழைத்து, அவரை உபசரித்து, மகிழ்வித்து, பிறகு அவரை பாண்டவர்களிடம் அனுப்பி அவர்களுக்கு அவர் மூலமாக சாபம் வாங்கித்தர வேண்டுமென்று நினைத்தான். அவரிடம் ‘நீங்கள் வனத்திலிருக்கும் பாண்டவர்களிடம் செல்லுங்கள். திரௌபதியின் போஜனத்திற்குப் பிறகு, சென்று அன்னத்தை யாசியுங்கள்’ என்றான். 

அதன்படியே துர்வாசரும், திரௌபதியின் போஜனத்திற்குப் பிறகு, பாண்டவர்களிடம் வந்து, அன்னத்தை யாசிக்க, தர்மராஜனும், கொடுக்கிறேன் என்றான். திரௌபதியோ, பாத்திரத்தில் அன்னம் இல்லை, கொடுக்கவில்லையெனில், துர்வாசர் சாபம் கொடுப்பார், என்ன செய்வது என்று கவலைப்பட்டு, ஸ்ரீகிருஷ்ணனை நினைக்க, ஸ்ரீகிருஷ்ணனும் அங்கு வந்தான். ‘எனக்கு பயங்கர பசியாக இருக்கிறது. நான் சாப்பிட உட்கார்வதற்குள் நீ என்னை அழைத்துவிட்டாய். நானும் அப்படியே வந்துவிட்டேன். எனக்கு சாப்பாடு போடு’ என்றான். திரௌபதியோ ‘என்ன ஸ்வாமி, என்னை சங்கடத்தில் ஆழ்த்துகிறாயே? இப்போதே துர்வாசருக்கு அன்னம் அளிக்கமுடியாத கவலையில் உன்னை அழைத்தேன். நீயே அன்னத்தைக் கேட்டால் நான் என்ன செய்வேன்?’ என்றாள். 

கிருஷ்ணனும் ‘திரௌபதி, கவலை வேண்டாம். அந்த பாத்திரத்தைக் கொண்டு வா’ என்றான். திரௌபதியும் அந்த பாத்திரத்தைக் கொண்டு வந்து காட்ட, ஸ்ரீகிருஷ்ணனும் அந்த பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த ஒரு கீரைத் துண்டினை எடுத்துத் தின்றான். அங்கு ஸ்னானத்திற்காக சென்றிருந்த துர்வாச ரிஷிகளுக்கு வயிறு திடீரென்று நிரம்பிவிட்டது போல் ஆயிற்று. சாப்பிட வரவேண்டும் என்று அழைக்க வந்துகொண்டிருந்த பீமசேனரைப் பார்த்த உடனேயே, பயந்து தன் சிஷ்யர்களுடன் ஓடிப்போனார் என்று பாரத கதை சொல்கிறது. இப்படி திரௌபதி பத்ரத்தைக் கொடுத்து தன்யன் ஆனாள். 

கஜேந்திரன் முதலையால் பிடிக்கப்பட்டு கஷ்டப்படும்போது பரமாத்மனை வேண்ட, பரமாத்மனும் பிரத்யட்சம் ஆனபோது, ஒரு புஷ்பத்தை அவருக்கு சமர்ப்பித்தான். சபரி ராமனுக்கு பழங்களைக் கொடுத்து தன்யன் ஆனாள். த்ருவன் வெறும் நீரினால் ஷோடஷோபசார பூஜையை செய்தான். பரமாத்மன் அவனுக்கும் அருளினான். ஆகையாலேயே, பரமாத்மன், ’பத்ரம் புஷ்பம் பலம் தோயம்’ என்றிருந்தான். 

இப்படியிருக்கையில், பக்தர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காமல் பரமாத்மன் அவர்களுக்கு உதவுவான் என்று பாம்பின் உதாரணத்தையும் கொடுத்து தாசராயர் விளக்கியது எப்படி என்றால்: பாகவத 7ம் ஸ்கந்தத்தில் பிரகலாதனின் கதையில், 

நைவாத்மன: ப்ரபுரயம் நிஜலாப பூர்ணோ யானம் ஜனாடவிதுஷ: கருணோ வ்ருணீதெ |
யத்யஜ்ஜனோ பகவதே விததீத யானம் தச்சாத்மனே ப்ரதிமுகஸ்ய யதா முகஸ்ரீ || 
(ஸ்லோகம் 3-9-11)

ஸ்ரீபரமாத்மன் ஆனவர், தன் பக்தர்கள் ஞானிகளோ அல்லது அஞ்ஞானிகளோ எப்படி இருந்தாலும், அவர்கள் செய்யும் பூஜாதிகளை ஏற்றுக்கொண்டு, அதன் அங்கமாக அவர்கள் சமர்ப்பிக்கும் பதார்த்தங்களை தன்னுடைய சுகத்திற்காக ஏற்றுக்கொள்வதில்லை. பின் அவற்றை ஏன் ஏற்றுக்கொள்கிறான் என்றால், பூஜையை செய்பவரின் நலனுக்காகவே அவன் அவற்றை ஏற்றுக்கொள்கிறான். பூர்ணகாமனான பரமாத்மனுக்கு இவர்கள் கொடுக்கும் பதார்த்தங்களால் ஆகக்கூடிய பலன்தான் என்ன? எப்படி நாம் அலங்காரங்களை செய்துகொண்டு, கண்ணாடி முன் நின்றால், கண்ணாடியில் தெரியும் உருவமும் அலங்கரித்துக் கொண்டிருப்பதைப் போல தெரிகிறதோ அப்படியே, பிம்பரூபியான பரமாத்மனை பூஜிக்க, பிரதிபிம்பனான ஜீவனுக்கு சுகம் உண்டாகிறது. 

மகாராஜாவைப் பார்க்க செல்லும் மக்கள், புஷ்ப பழங்களை எடுத்துச் சென்றால், அதை ராஜன் ஏற்றுக்கொள்வது தன்னிடம் அவை இல்லை என்பதற்காக இல்லை. மக்களின் அன்பிற்காகவே. அதைப் போலவே, பக்தர்களை அருள்வதற்காக அவர்களின் சேவையை ஏற்றுக்கொள்கிறான். அவனுக்கு இதனால் எந்தவொரு பலன்களும் இல்லை. அதனாலேயே தாசராயர், பரமாத்மன் நிஷ்காமத்தினால் பக்தர்களுக்கு அருள்கிறான் என்றார். 

துர்ஜனர சேவெயனொல்ல. 

அபக்தோதாஹ்ருதம் நைவ பலதாத்ருபவிஷ்யதி |
பூர்யப்யபக்தோபஹ்ருதம் நமேதோஷாய கல்பதே ||

இப்படிப்பட்ட வாக்கியங்களால், பக்தர்கள் செய்யும் பூஜையை பரமாத்மன் ஏற்றுக்கொள்கிறான் என்பது தெளிவாகிறது. மேலும் கீதா வாக்கியம் சொல்வது:

தானஹம் த்விஷத: க்ரூரான் சம்சாரேஷு நராதர்மா |
க்‌ஷிபாம்யஜ ஸ்ரமசுரானா சுரீஷ்வேவ யோனிஷு ||
அசுரீரி யோனிமாபன்ன மூடா ஜன்மனி ஜன்மனி |
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோயாந்த்ய தயாங்கதிம் ||


என்மேல் ஒருமுறை த்வேஷம் செய்தாலும், அவரை நிரந்தர அசுர லோகத்தில் தள்ளுவேன். இப்படி பல பிறவிகளில் தொடர்ந்து தைத்ய குலத்தில் பிறந்து, என்மேல் த்வேஷத்தையே செய்து, என்னை வந்து அடையாமலேயே இறுதியில் கோரமான தமஸ்ஸிற்கு சென்றுவிடுவர் என்று ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்கிறான். இதிலிருந்து தமோயோக்யரின் பூஜையை பரமாத்மன் ஸ்வீகரிப்பதில்லை என்பது தெளிவாகிறது. ஆகையாலேயே தாசராயர் ‘துர்ஜனர சேவயனொல்ல’ என்று சொல்லியிருக்கிறார். 

***